இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு

கடவுளின் கோவில் தூயது, நீங்களே அக்கோவில்

சீராக் ஞானம் 15:15-20
முதல் கொரிந்தியர் 2 : 06-10
மத்தேயு 05 : 17-37

இன்று பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு. இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் வாழியாக இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது அவரைப்போல் என்றும் தூய்மை நிறைந்தவர்களாக வாழவும், அவருடைய திருச்சட்டங்களை நேர்மையுடன் பின்பற்றவும் அழைக்கின்றார். முதல்வாசகத்தில் இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு மோசேயின் வழியாக கூறும் அறிவுரை "தூயோராய் இருங்கள், ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்"என்று. இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது துமைய்மையான உள்ளமும், தூய்மையான வாழ்வும். மனிதனாகப் பிறந்த நானும் நீங்களும் குறைகளோடும், நிறைகளோடும் வாழ்க்கையில் பயணிப்பவர்கள். அனுதின வாழ்க்கையில் சிறிய குற்றங்களையும், பெரிய குற்றங்களையும் இறைவனுக்கும் பிறருக்கும் எதிராக செய்கின்றவர்கள் என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இறைவன் கூறகின்றார், உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்து கொள், பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்! என்று கூறுகின்றார். இவ்வார்த்தைகளைக் கருத்துடன் வாசிக்கும்போது எளிமையாக உள்ளது ஆனால் நமது வாழ்க்கையில் வேறுபட்ட குணங்களைத் தாங்கிச் செல்லும் மனிதர்களையும், சமூக வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சவால்களையும் சந்திக்கும்போது இறைவன் தந்த விழுமியங்களை பின்பற்றுவது நமக்கு மிகக் கடினமாகத்தானே உள்ளது ஆகையால் அவற்றை முழுமனத்துடன் பின்பற்ற நாம் தவறுகின்றோம். இறைவனின் கட்டளைகளை மறந்து நமது சொந்த சுயநலத்திற்காகவும், ஆசைகளை நிறைவு செய்வதற்காகவும், மேலும் நமது சிந்தனையில் எழுகின்ற எண்ணத்தின்படி அவைகள் நல்லது என்று நினைத்து செயலில் இரங்குகின்றோம். இறைவன் படைத்த அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டுமென்று படைப்பின் தொடக்கத்திலிருந்தே விரும்பினவர். இறைவனைப்போல் தூய்மையாய் இருக்க நம்மால் இன்று முடியுமா? நாம் தூய்மையாய் வாழ்வதற்கு அவர் அருளின் கொடைகளின் வல்லவரை உள்ளத்தில் வாழ அனுமதித்துள்ளார். நம் உள்ளத்தில் வாசம் செய்கின்ற தூய ஆவியானவர் செயல்பட்டால் நம்மால் தூய்மையாக வாழவும் வளரவும் முடியும் என்பது நிச்சயம். உண்மையிலும் ஆவியிலும் உள்ளத் தூய்மையுடன் ஆராதித்து அவரை வழிபட்டால் அவருடைய வழிமுறைகளையும் வாழவேண்டிய ஒழுங்குமுறைகளையும் அவரே நமக்கு கற்றுத் தந்து தூய்மையுடன் வாழ உதவி செய்வார். நமக்கு முன் கிறிஸ்துவ விழிமியங்களைப் பின்பற்றி ஆண்டு ஆண்டுகாலமாக தூய்மையுடன் வாழ்ந்து உன்னத நிலையை அடைந்த புனிதர்கள் எத்தனையோ பேர் நமக்கு வழிகாட்டியாக உள்ளார்கள்தானே. ஏன் அவர்கள் நடந்த பாதையை பின்பற்றக் கூடாது? இறைவனிடம் முழுமையாக நம்மை அர்ப்பணிக்கும்போது ஆவியானவர் நம் உள்ளிலிருந்து செயலாற்றுவதை அனுபவிக்கவும் அதன்படி வாழவும் முடியும். இனிமேல் பயணிக்கப்போகும் நாட்களில் உறுதிமொழி எடுப்போம், இறைவன் வாழும் நமது உள்ளத்தில் இறைவனுக்கு எதிராகப் படர்ந்திருக்கும் அனைத்து பாவத்தின் தீயசக்திகளை அகற்ற முயற்சி செய்து தூய்மை நிறைந்த இறைவனின் கொடைகளால் அனுதினம் நிரம்பிட முயற்சித்து மனம் நொருங்கிய பாவஅறிக்கை செய்து உள்ளத்தை தூய்மையாக்குவோம். திருவெளிப்பாடு நூல் 3: 2-3 இறைவார்த்தையை கவனத்தில் கொள்வோம் "விழிப்பாயிரு, உன்னில் எஞ்சியிருப்பதை உறுதிப்படுத்து. அது இறக்கும் தறுவாயில் உள்ளது. என் கடவுள் திருமுன் உன் செயல்கள் நிறைவற்றவையாய் இருக்கக் கண்டேன். நீ கற்றதையும் கேட்டதையும் நினைவில் கொள், அவற்றைக் கடைப்பிடி, மனம் மாறு, நீ விழிப்பாயிரு. இல்லையேல் நான் திருடனைப்போல வருவேன். நான் எந்த நேரத்தில் உன்னிடம் வருவேன் என்பதை அறியாய். ஆம் இறைவன் காட்டுகின்ற வழிகளில் பயணிக்க ஆவியானவரின் துணையை நாடுவோம். அனுதினம் விழிப்பாய் இருந்து மனம் மாற்றம் பெற்று இறைவனின் வார்த்தையைக் கடைபிடித்து தூய்மையாய் வாழ முயற்சி எடுப்போம்.

இறைமகன் இயேசு தன்னுடைய முதல் மழைப்பொழிவு உரையில் கூறுவது "தூய உள்ளத்தோர் பேறு பெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர் " என்று. இறைவன் நம்முடைய உள்ளத் தூய்மையை விரும்புகின்றார். இறைவன் நம்மை அவரது உருவிலும் சாயலிலும் படைத்ததால் அவரைப் போல் நாமும் இருப்பது முறைதானே ஏனெனில் இருள் உள்ள இடத்தில் ஒளியானவர் வாழ்வது மிகவும் கடினம். உலக தீயசக்திகளிலிருந்து நம்முடைய உள்ளத்தை பாதுகாக்க வேண்டும். இறைவன் படைத்த ஆன்மாவாகிய நமது உள்ளத்தில் தூய ஆவியானவரான இறைவன் உயிருடன் வாழ்கின்றார். ஆகையால்தான் திருத்தூதர் பவலடிகளார் மிக அழகாக கூறுகின்றார் "நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார் ஏனெனில் கடவுளின் கோவில் தூயது, நீங்களே அக்கோவில். எவ்வளவு பேறுபெற்றவர்களாக நாம் திகழ்கின்றோம். பேறுபெற்றவர்களாக வாழ்வதற்கு முதலில் நமது உள்ளக் குகையை சுத்தம் செய்ய வேண்டும். இறைமகன் இயேசு பாஸ்கா விழாவிற்காக எருசலேம் கோவிலுக்குள் சென்றபோது, கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் நாணயம் மாற்றுவோரையும் கண்டபோது என்ன செய்தார். கயிறுகளால் சாட்டை பின்னி அவர்கள் எல்லோரையும் கோவிலிருந்து துரத்தினார். யோவான் நற்செய்தி இரண்டாம் அதிகாரம் 2: 13-17 இறைவசனங்கள் கோவிலைத் தூய்மைப்படுத்துதல் சம்பவத்தை விளக்குகின்றது. இறைவன் வாழும் கோவிலாகிய நமது உள்ளத்திலும் ஆடு,மாடு, புறா நாணயம், சில்லரைக் காசுகள் போன்ற இறைவனுக்கு எதிரான பாவச்செயல்களால் நிறைந்து தூய்மையற்று உள்ளதா கவலைவேண்டாம். நம்மை அன்பு செய்யும் இறைவன் இரக்கமும் பொறுமையும் கொண்டவர். அன்று அவர்களைச் சாட்டையால் விரட்டியதுபோல் இன்ற நம்மை விரட்டமாட்டார் ஆனால் அவர் நமது மனம் மாற்றத்திற்காக காத்திருக்கின்றார். இறைவன் வாழும் நமது உள்ளமாகிய கோவிலை சந்தையாக ஆக்க வேண்டாம். நமது விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நாமும் நிறைவுள்ளவராய் இருப்போம். நமது நற்செயல்களும், நமது உதட்டால் சொல்லப்படும் ஒவ்வொரு வார்த்தைகளும் தூய்மையுள்ளதாக விளங்கட்டும். தீமையை நன்மையால் வெல்லுவோம். ஏனெனில் நன்மை செய்ய நமக்குத் தெரிந்திருந்தும் அதைச் செய்யாவிட்டால் அது பாவம் என்று இறைவார்த்தை கூறுகின்றது. இறைவனின் ஆவியானவர் தங்குவதற்கு தடையாய் இருக்கும் அனைத்து தடைகளையும் கண்டு அவற்றை வேரோடு களைந்து எரிந்து விடுவோம். இறைவன் நமது குற்றங்கள் அனைத்தையும் மன்னிப்பவர். அவரோ நம் குற்றங்களுக்காக காயமடைந்தவர். நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம் என்ற நம்பிக்கையின் வார்த்தையால் நமது மனம் மீண்டும் திடம் கொள்கின்றது. மேலும் நொறுங்கிய நலிந்த நெஞ்சத்தினரோடும் நான் வாழ்கின்றேன். நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கவும் நலிந்த நெஞ்சத்தினரைத் திடப்படுத்தவும் நான் குடியிருக்கின்றேன் என்று இறைவன் இறைவாக்கினர் எசாயா வழியாக எடுத்துரைக்கின்றார். ( எசாயா:57:15) . நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடம் நம்பிக்கை கொள்ளுங்கள் என்ற இறைமகன் இயேசுவின் வார்த்தையை நம்பி இறைவன் வாழும் நமது உள்ளத்தை என்றும் தூய்மையாய் பாதுகாத்துக் கொள்வோம். இறைவன் நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். எனவே இறைவன் முன் நாம் அனைவரும் ஒரே நிலையைக் கொண்டுள்ளோம். தாழ்ந்தவராகவோ உயர்ந்தவராகவோ அவர் நம்மைப் படைக்கவில்லை. எனவே இறைவனின் நற்பண்புகளையும் குணங்களையும் தாங்கிச் செல்லும் மகனாக மகளாக வாழ்வதற்கு முயற்சி எடுப்போம். அருள் நிறைந்த வாழ்வில் பெறும் மகிழ்ச்சி, நிறைவு, மனஅமைதி நிலையானது. உலகம் தரும் அமைதி நொடிப் பொழுதில் நம்மை விட்டு அகன்றுப் போகும். தூயவரை நோக்கி குரல் எழுப்பினால் அவருடைய ஒளிரும் தூய்மை நம்மை நோக்கி இறங்கி வரும் என்பது உண்மை. உண்மையும் நேர்மையும் இல்லாத உலகத்தில் பயணம் செய்யும் நமக்கு இறைவன் அவ்வப்போது வாழ்வுதரும் வார்த்தையின் வழியாக கொடுக்கும் அறிவுரைகளைப் பின்பற்றி தூய உள்ளத்துடன் வாழ்வதற்கு, அவரது சிறகுகளின் நிழலில் பாதுகாக்க வேண்டுமென்று மன்றாடுவோம்.

தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம். அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக் கொள்ளுங்கள். எல்லாவகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள்(1தெசலோனிக்கர் 5:19-21).