இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு

ஆண்டவரின் ஞானம் பெரிது. அவர் ஆற்றல் மிக்கவர், அனைத்தையும் அவர் காண்கின்றார்

சீராக்கின் ஞானம் 15:16-20
முதல் கொரிந்தியர் 2 :6-10
மத்தேயு 5 : 17-37

இன்று பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு. இறைவன் உயர்ந்தவர், ஆற்றல் மிக்கவர், அன்பு கொண்டவர், அனைத்தையும் காண்பவர், அனைத்தையும் படைத்தவர் என்பதை அனைவரும் நம்புகின்ற ஓர் ஆழமான உண்மை. கடந்த சென்ற நாட்கிளில் வார்த்தை வழிபாட்டில் இறைவன் எவ்வாறு உலகைப் படைத்தார் என்றும், ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத மனிதன் உயிருள்ளவன் ஆனான் என்றும் காண்கின்றோம். இறைவன் மனிதனை தம் உருவிலும் சாயலிலும் உண்டாக்குவோம் என்று விரும்பி, அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அனைத்து படைப்புகளையும் அவர்கள் முன் வைத்து நன்மையையும், தீமையையும் தேர்தெடுக்கவும், தெரிவு செய்யவும் முழு உரிமையும் சுதந்திரத்தையும் தந்து மனிதன் இன்பமாக வாழ வேண்டுமென்று நிறைவாக ஆசீக்கின்றார். ஆனால் மனிதன் இறைவனைப் போல் ஆகவேண்டுமென்று விரும்பி இறைவன் தந்த கட்டளைகளிலிருந்து மீறி அவன் விரும்பியச் செயலைச் செய்து இறைவனுடைய அருளையும், அவருடைய அருள் நிறைந்த பிரசன்னத்தையும் இழக்கின்றார். நேற்றும் இன்றும் மனிதன் இறைவனின் அளவிடமுடியாத அன்பிற்கும் இரக்கத்திற்கும் எதிராக தவறு செய்து கொண்டுதான் இருக்கின்றான். இன்று பதிலுரைப்பாடலில் "மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றவர், ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறு பெற்றோர், அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர, முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர்" என்று காண்கின்றோம். இறைவன் நமக்கு கொடுத்துள்ள வாழ்வுதரும் வார்த்தைகளை நமது வாழ்வில் எவ்வாறு கடைபிடிக்கின்றோம்?. இறைவனின் கட்டளைகளுக்கு முதலிடம் தருகின்றோமா? அல்லது நவீன உலகச் செல்வங்களுக்கும், பொருட்களுக்கும் முதலிடம் தருகின்றோமா? பணத்திற்கும், பதவிக்கும், தனது பெயருக்கும், புகழுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோமா? நமது குலம், நமது ஜாதி, நமது இனம், நமது மொழி, நமது கொள்கை, நமது மதம், நமது அரசியல் கட்சி, எனறு எத்தனை பாகுபாடுகள் மனித குலத்திலே? சிந்திப்போம்? வாழ்வில் முன்னேற்றம், கடின உழைப்பு, பட்டம், பணம், உயர் பதவி, செல்வம் தேவைதான் ஆனால் அவற்றை அடையும் வழிமுறைகள் சரியானதா? நல்ல விழுமியங்களையும், குறிகோள்களையும் பின்பற்றி இவை அனைத்திலும் வெற்றி பெறுகின்றோமா? அல்லது குறுக்கு வழிகளை கையாளுகின்றோமா? இன்று பணம் கொடுத்தால் எல்லாம் நடக்கும் என்ற சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தாய் நாட்டில் பெற்றுக் கொண்ட கிறிஸ்துவ விழுமியங்களை கடைபிடிக்கின்றோமா? காலம் தாழ்த்த வேண்டாம் மனம் மாற்றம் பெறுவோம். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கின்றேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன். அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள் என்கின்றார் வாழ்வுக்கு வழிகாட்டும் இறைவன். அவருடைய குரலுக்கும், வாழ்வுக்கு வழிகாட்டும் இயேசுவின் கட்டளைகளுக்கு செவிமடுப்போம்.

மேலை நாட்டில் வாழும் நமக்கு இறைவழிபாடுகள் அனைத்தும் வெறும் சடங்காகவும், கடமையாகவும் இருக்க்கூடாது. அதன் உண்மையான மறைபொருளை அறிந்திருக்க வேண்டும். நமது திருப்பலி திருவிழாக்களுக்காக எடுக்கப்படும் தீர்மானங்கள், வழிபாட்டு வழிமுறைகள் அனைத்தும் இறைஅனுபத்தைப் பெற்றுத் தரக்கூடியதாக அமையவேண்டும். நமது பணித்தளங்களில், பங்குகளில் எடுக்கப்படும் முடிவுகள் தீர்மானங்கள் இறைசமுகத்தை இணைக்கும் பாலமாக அமையவேண்டும். பல நேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் உலக காரியங்களை ஒத்துதானே இருக்கின்றது. நாம் அனைவரும் எங்கே செல்கின்றோம். நமது நோக்கம் என்ன? சிலநாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் திருப்பலிக்குச் செல்லக்கூட நமக்கு போதிய நேரமில்லை? இறைவன் கொடுத்திருக்கும் கட்டளைகளை கடைபிடிக்க நேரமில்லை? இறைவார்த்தையை வாசிப்பதற்கு நேரமில்லை? குடும்ப செபத்திற்கு நேரமில்லை? வாட்ஸ்அப், முகப்புத்தகம், இணையதளம், தொடர் நாடகம் போன்றவற்றிற்கு செலவழிக்கும் நேரம்தான் எவ்வளவு? சிந்திப்போம். உலகம் முடியும் வரை நான் உங்களோடு இருப்பேன் என்று கூறிய இறைமகன் இயேசு நம்மோடு என்றும் வாசம் செய்கின்றார் என்பதை மறக்ககூடாது. சீராக்ஞானம் நூல் வழியாக இறைவன் கூறுகின்றார் உங்கள் முன்பு நீரையும் நெருப்பையும் வைக்கின்றேன், வாழ்வையும், சாவையும் வைக்கின்றேன், அவர்கள் விரும்புவதை அவர்களுக்கு கொடுப்பேன் என்று வாக்கு கொடுக்கின்றார். தொழில் நுட்பமும், நுலைவு கலாச்சாரமும் வெகுவிரைவாக வளர்ந்து வருகின்ற இக்காலக்கட்டத்தில் நாம் அனைவரும் முதலிடம் கொடுப்பது எதற்கு என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும். நாம் செல்லுகின்ற பாதை வாழ்வு அளிக்கும் பாதையா அல்லது அழிவுக்கு ஈட்டுச் செல்லும் பாதையா? கிறிஸ்துவின் பெயரை சுமந்து செல்லும் நீங்களும் நானும் அவருடை வாழ்வு தரும் வார்த்தையின் வழியாகவும், ஒவ்வொரு திருப்பலியிலும் உயிரோடு பிரசன்னமாகும் இன்மானுவேலானாகிய இயேசுவை சுவைத்து உணரவேண்டும். இறைவன் தூய ஆவியானவர் வழியாக நம்மில் செயலாற்றுவதை உணரவேண்டும். இறைவார்த்தையின் வழியாக இறைவன் நம்மிடம் பேசுகின்றதை உணரவேண்டும். தூய ஆவியானவரின் வழிநடத்தலுக்கு செவிமடுத்தோம் என்றால் நமக்கு தீமைஎது, நன்மை எது என்பதை தெரிவு செய்ய அவர் துணைபுரிவார் என்பது நிச்சயம். இன்றைய சமூக வாழ்க்கையில் கொலை, கொள்ளை, வன்முறைகள், ஏமாற்றுதல், பாலியல் வன்முறைகள், பொய்சாட்சிகள், உறவில், நட்பில் நம்பிக்கையின்மை, மனித நேயத்திற்கு எதிரான கொடுமைகள், சமூக தீயசக்திகள், மனிதனே மனிதனை அழித்து வாழும் சமூதாயம், பதவிக்காக குற்றங்கள்,வன்முறைகள், கொலைகள் புரியும் மனித உள்ளம். இறைவனின் ஞானம் இருக்கின்ற உள்ளத்தில் தீமைக்கு இடமே இல்லை. " உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழுஉண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார், தாம் கேட்பதையே பேசுவார், வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார் " என்ற இறைமகன் இயேசுவின் வார்த்தையை நம்புவோம். அவருடைய ஞானத்தையும், ஆவியாரின் வரங்களையும் மனிதகுலத்தின் மீதும் நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் நிறைவாகப் பொழிய வேண்டுமென்றும், படைப்பின் தொடக்கத்தில் நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது போல் இன்று இருள் சூழ்ந்து கிடக்கும் உலகின்மேல் ஒளியின் ஆண்டவராகிய தூய ஆவியானவரால் மண்ணுலகையும் மனிதகுலத்தையும் புதுப்பிக்க வேண்டுமென்று தாழ்மையுடன் மன்றாடுவோம்.

ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். மத்தேயு 6:33