ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் 34 ஆம் வாரம்

ஆண்டவர் ஆட்சி செய்கிறார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

தானி7:13-14
தி.வெ1:5-8
யோவா18:33-37

இன்று கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடுகிறோம். இயேசு உலகில் வாழ்ந்த காலத்தில் தன்னை அரசனாகக் காட்டவில்லை. மக்கள் அரசனாக்க விரும்பியபோதும் தனிமையை விரும்பி செல்கிறார். பிலாத்துவின் முன்னால் எனது ஆட்சி இவ்வுலக ஆட்சியை போன்றது அல்ல என விடை அளிக்கிறார். ஆனால் அவர் இறந்தபோது இவன் யூதரின் அரசன் என சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டு இருந்தது. இயேசுவின் அரசு உண்மை, நீதி, அன்பு, அமைதி, பகிர்தல் போன்ற பண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. அளவில்லா அன்பு மாட்சியை சார்ந்த அரசு ஒரு போதும் அழியாது. அவரது அரசுக்கு முடிவே இராது. உண்மைக்கு குரல் கொடுப்போர், அமைதிக்கு பாடு படுவோர், பிறர் வாழ தம்மை தியாக தீபம் ஆக்குவோர், பேதம் ஏதுமின்றி மனிதரை மதிப்பவர், ஏழைகளுக்கு இரங்குவோர், அயலவருக்கு உதவுபவர் அனைவரும் இயேசுவின் ஆட்சியில் பங்காளிகள். பசி, பிணி, தனிமை, சிறை, அகதி போன்ற நிலையில் உள்ளவரை மனித நேயத்துடன் அணுகி உதவிடும் போதும் இயேசுவின் அரசை நெருங்கி வருகிறோம். அன்னை தந்தையர் சொல்லித் தந்த நல்ல விழுமியங்களை நம் வாழ்வில் கடைப்பிடித்து இயேசுவின் ஆட்சியில் தொடந்து வாழ்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில் இறை வாக்கினர் தானியல் இயேசு அரசராக மாட்சிமையுடன் வருவதையும், அந்த அரசுக்கு முடிவே இராது என்பதையும் அறுதியிட்டு உறிதியுடன் கூறுகின்றார். இன்றைய இரண்டாவது வாசகத்தில் இயேசுவே முதலில் சாவை வென்று சரித்திரம் படைத்தார் என சொல்லப்படுகிறது. அளவில்லா அன்பினால் இயேசு தம் உயிரையே தந்து நம்மை மீட்டர். நமக்கு விண்ணக வாயிலைத் திறந்தார். ஆட்சி உரிமை உள்ளவர் ஆக்கினார். முதலும் முடிவுமான அவரை வாழ்த்திப் போற்றுவோம்.

இன்றைய நற்செய்தியில் பிலாத்துவின் முன்னால் இயேசு விசாரணை செய்யப்படுகிறார். அவமானப் படுத்தப்பட்டு கேவலப் படுத்தப்பட்ட போதும் இயேசு நிலை குலையாமல் உண்மைக்கு சாட்சி பகர்கிறார். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன். இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர் என்கிறார். நாம் உண்மையாக வாழும் போது அவரது ஆட்சியில் வாழுகிறோம். மற்றவர் துயர் துடைக்க தனியாகவோ அயலவருடன் இணைந்தோ முயலும் போது அவரது ஆட்சியில் பங்கு பற்றலாம். சத்தியம் காத்து முத்திரை பதித்த நித்தியன் வழியில் நடந்து நித்திய வாழ்வுக்கு உரிமை உடையோர் ஆகுவோம்.