இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பெதுக்காலம் நான்காம் ஞாயிறு

ஆண்டவரைத் தேடுங்கள்

செப்பனியா 2:3,3:12-13
முதல் கொரிந்தியர் 1:26 - 31
மத்தேயு 5:1-12

இன்று பொதுக்காலம் நான்காம் ஞாயிறு. இறைவனின் வார்த்தை உயிருள்ளது, உண்மையை மட்டும் எடுத்துரைக்கும் ஆயுதம் ஒருபோதும் மாறாத மறையாத வாழ்வின் விழுமியங்களாகும். இன்று திருப்பலியில் வாசிக்கபடும் மூன்று வாசகங்களிலும் ஏராளமான வாழ்வு தரும் ஞானத்தின் கொடைகளும், வழிமுறைகளும், அறிவுறைகளும் உள்ளது என்பதை விளக்குகின்றது. ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம் என்று நீதிமொழிகள் நூல் முதல் அதிகாரம் 7ஆம் வசனத்தில் காண்கின்றோம். சாலமோன் அரசர் ஞானத்தின் கொடையைத் தாரும் என்று மன்றாடுகின்றார். இறைவனின் கொடைகளைப் பெறுவதற்கு தாழ்மையும் எளிமையும் நிறைந்த உள்ளம் அவசியம். தாழ்நிலையில் இருப்போரை அவர் என்றும் உயர்த்துகின்றார் என்று அன்னைமரியாளின் நன்றிப் பாடலில் காண்கின்றோம். இறைவன் எப்போதும் ஏழை எளியோர்களின் சார்ப்பில் செயலாற்றினார் என்பதை வேதாகமத்தில் காண்கின்றோம். இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டில் அடிமையாக பல துண்பங்களில் துவண்டபொழுது இறைவன் அவர்களின் அழுகுரலுக்கு செவிகொடுத்து மோசேயை தலைவராக அனுப்பி அவர்களை பார்வோன் மன்னனிடமிருந்து விடுவிக்கின்றார். அவர்கள் எளியோர்களாக வாழ்ந்தார்கள் எனவே இறைவன் அவர்களின் உண்மையான நிலையை அறிந்து அங்கு செயல்படுகின்றார். இறைவாக்கினர் செப்பனியா நாட்டின் எளியோரே ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே என்று அழைத்து அவர்கள் வாழவேண்டிய வழிமுறைகளை அவர்கள்முன் எடுத்துரைக்கின்றார். இறைவனைத் தேடுதல், நேர்மையை நாடுதல், மனத்தாழ்மையைத் தேடுதல் என்னும் மறையுரைகளைப் பின்பற்ற இன்று நம்மை இறைவன் அழைக்கின்றார். மேலும் இறைவனின் கட்டளைகளை ஏற்று அதன்படி தாழ்மையோடு வாழ்பவர்களை விட்டுவைப்பேன் என்று வாக்குறுதி அளிக்கின்றார். மேலும் இறைவன் ஏழையர்களின் நடுவில் வாழ்வதுடன், அவரிடம் நம்பிக்கை கொள்ளும் எளியோர்கள் அவருடைய பாதுகாப்பில் இளைப்பாறுவார்கள் என்றும் கூறுகின்றார். அன்று இறைவன் மோசேயின் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு சீனாய் மலையில் பத்து கட்டளையைத் தந்ததபோல் இன்று நமக்கு இறைமகன் இயேசு கிறிஸ்து வழியாக மலைப் பொழிவு என்ற உண்மைகளை வார்த்தையின் வழியாக கொடுத்துள்ளார். அவற்றை முழுமையாகப் கடைப்பிடித்தோம் என்றால் நமது வாழ்வில் துக்கம் இல்லை, கவலையில்லை மகிழ்ச்சி நிறைந்த வாழ்வுமட்டுமே நிலவும்.

ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர் - துயருறுவோர் பேறு பேற்றோர் - கனிவுடையோர் பேறு பெற்றோர்- நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர் - இரக்கமுடையோர் பேறுபெற்றோர்- தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்- அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்- நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர் - என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப்பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்கள் என்று காண்கின்றோம். இறைமகன் இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்த இந்த ஞானத்தின் விழுமியங்களை கடைபிடித்து அவற்றை வாழ்க்கையின் குறிக்கோளாக ஏற்று வாழும்போது கிடைக்கும் நற்பலன்கள் ஏராளம். விண்ணரசு அவர்களுக்கு உரியது - அவர்கள் ஆறுதல் பெறுவர் - அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாகிக் கொள்வர் - பேறுபெற்றோர் - அவர்கள் இரக்கம் பெறுவர் - அவர்கள் கடவுளைக் காண்பர் - அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்- விண்ணரசு அவர்களுக்குரியது - மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் - ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமக்குத் இறைமகன் இயேசு பொழிந்த வாழ்வு தரும் வார்த்தைகள்.

வாழ்வுதரும் இவ்வார்த்தையின்படி இவ்வுலகில் வாழ்ந்து பேறுபெற்றவர்கள் ஏராளம் ஏராளம். இறைமகன் இயேசு கிறிஸ்து கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். அவர் செல்வராக இருந்தும் மனிதகுலத்திற்காக ஏழையானார். உனக்கும் எனக்கும் வாழ்வு கொடுப்பதற்காக ஏழையானார். ஏழ்மையில் மாட்டு தொழுவத்தில் பிறந்து, ஏழ்மையான தச்சுவேலை செய்யும் யோசேப்புக்கு வளர்ப்பு மகனாக பிறந்து, சிலுவையில் ஏழ்மையின் கோலத்தில் இறந்து, மூன்றாம் நாள் உயிர்பெற்று விண்ணரசில் இறைவனின் வலப்பக்கம் அமர்ந்து, உயிரோடு நம்மோடு இன்றும் வாழ்கின்றார். ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் என்று எலிசபெத் அன்னைமரியாளை வாழத்தியபோது அவர் இறைவனைப் புகழ்ந்து பாடுகின்ற வசனங்களைப் கவணிப்போம் ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார், தாழ்நியைில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார் என்று இறைவனைப் புகழ்ந்து பாடுகிறார். இறைவனின் விருப்பத்தை ஏற்று உலக மீட்பரை மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுத்து, தீவனத் தொட்டியில் கிடத்தினார். கானாவின் திருமணத்தின் போது இரசம் தீர்ந்து போனதை அறிந்து அவர்களுக்காக தன் மகனிடம் பரிந்துபேசி அவர்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றார். சிலுவையின் அடியில் அமைதியாக இருந்து அனைத்தையும் ஏற்றுக் கொண்ட அன்பு அன்னை. இன்றும் அன்னைமரியாள் நமக்காக பரிந்து பேசிக்கொண்டுதான் இருக்கின்றார். எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரலில் கூறுவது 'பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர், உம் வயிற்றில் வளரும் குழுந்தையும் ஆசி பெற்றதே என்று அன்னைமரியாவைப் போற்றுகின்றார். இன்று உலகமே அவரை வாழ்த்திப் போற்றுகின்றது.

புனிதர் நிலைக்கு உயர்த்தப் பெற்ற அன்னை தெரேசா ஏழை எளியவர்கள், ஆனாதைகள், கைவிடப் பட்டோர்கள் மத்தியில் வாழ்ந்து அவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் தந்தும், புதியவாழ்வைக் கொடுத்து இன்று பேறுபெறற்றவராக புனிதர்களின் ஒருவராக விளங்குகின்றார். நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இன்று இரக்கத்தின், ஏழையர்களின் தந்தையாக வாழ்கின்றார். இவர்கள் அனைவரும் இயேசுவின் பத்துக்கட்டளைகளாகிய மலைப் பொழிவின் உண்மைகளை வாழ்வின் விழுமியங்களாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்தவர்கள். அவர்களைப்போல் நாமும் இன்று இயேசுவின் வாழ்வு தரும் வார்த்தைளின்படி வாழ்வதற்கு அவருடைய ஞானத்தின் அருள் கொடைகளை நம்மேல் நிறைவாகப் பொழிய வேண்டுமென்று இன்றைய திருப்பலியில் மன்றாடுவோம்.

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார். பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார். சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். (திருப்பாடல் 146:7)