இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு

ஆண்டவர் பார்வைியில் நான் மதிப்புப் பெற்றவன்

எசாயா 49: 5-6
1 கொரிந்தியர் 1:1-3
யோவான் 1: 29-34

இன்று பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு. இறைமகன் இயேசு மனிதனாக பிறந்த நாளையும், புத்தாண்டு பிறப்பினையும் மகிழ்ச்சியாக கொண்டினோம். மேலும் இறைவன் எப்பொழுதும் நம்மைப் பலவழிகளில் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் ஆசீர்வதித்துக் கொண்டு தான் இருக்கின்றார். அதற்காக நன்றி கூறுவோம். இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் கூறும் ஆசி மொழிகளைப்பற்றி சிந்திப்போம். நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன், கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார். ஆண்டவர் பார்வையில் நான் மதிப்பு பெற்றவன். என் கடவுளே என் ஆற்றல். உலகம் முழுவதும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன் "என்று மிக அழகாக கூறுகின்றார். இறைவனின் அழைப்பை ஏற்றவர்களுக்கும் அவரது இறையாட்சிப் பணியை செய்பவர்களுக்கும் அவர் வழங்கும் ஆசிமொழிகளும், உறுதி தரும் அருளும் ஆசீரும் ஆற்றலும், அவருடைய வழிநடத்தலும் எப்பொழுதும் அவர்களுடைய வாழ்க்கையில் உண்டு என்ற நம்பிக்கை மிகுந்த வலிமைதரக்கூடிய உறுதிமொழிகள் என்றும் கூறலாம். இறைவாக்கினர் எசாயா கூறுகின்ற ஒவ்வொரு சொல்லும் இஸ்ரயேல் மக்களையும், பிற இனத்தாரையும் வழிநடத்திச் செல்லும் ஒவ்வொரு இறைஊழியர்களைப்பற்றியும் குறிக்கின்றது. இறைவனின் பணிக்காக அழைக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஆண்டவரின் பார்வையில் மதிப்பு பெற்றவர்கள் என்பது தான் உண்மை. துன்பத்தில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்களுக்கு இறைவன் வழங்கும் ஆறுதல் மொழிகளைப்பற்றி ஆழமாக சிந்திப்போம். "யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்ப்படுத்துவேன் " என்று இறைவாக்கினர் எசாயா கூறுகின்றார். பிற இனத்தாருக்கு ஒளியாக மண்ணில் பிறந்த இறைமகன் இயேசு கிறிஸ்துவைப்பற்றி இறைவாக்கினர் முன்கூட்டியே அறிவிக்கின்றார் என்பது ஒருவகையில் உண்மை. செம்மறி ஆட்டைப்போல் மாசு ஏதும் இன்றி சிலுவையில் உலகின் பாவத்தைப் போக்க பலியாகி நிலைவாழ்வைக் கொடுத்தவர். இன்று பிற இனத்தாருக்கு ஒளியின் சாட்சிகளாக விளங்க கிறிஸ்துவர்களாகிய நம்மை அழைக்கின்றார். நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கு, உறுதிபூசுதல் வழியாக கிறிஸ்துவுடன் ஒன்றாக இணைந்து அவரைப்போல் மாற்றம் அடைந்துள்ளோம். எனவே இன்று இறைவனின் பணியைத் திறம்படச் செய்ய முயற்சிப்போம்

இன்றைய இறைவாசகங்களின் வழியாக இறைவன் மூன்று இறைஊழியர்களை நமக்கு எடுத்துக் காட்டாக தருகின்றார். நற்செய்தி வாசகத்தில் இறைமகன் இயேசு கிறிஸ்துவைப் பற்றி இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர் "என்று இறைமகன் இயேசுவைப்பற்றி சான்று பகர்கின்றார். அவரிடம் வாழ்வு இருந்தது அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது, இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை". ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை "என்று திருத்தூதர் யோவான் ஒளியான இறைமகன் இயேசுவைப்பற்றி எடுத்துரைக்கின்றார். மேலும் இயேசுவும் சமாரியப் பெண்ணும் உரையாடும் போது, சமாரியப் பெண் இயேசுவிடம் இவ்வாறு கூறுகின்றார் "நீர் யூதர், நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?என்றார்.ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை" என்ற உரையாடலை யோவான் நற்செய்தியில் காண்கின்றோம். இறைமகன் இயேசுவிடம் சமாரியப் பெண் உரையாடிய பின் அவளும் அவளுடைய ஊர் முழுவதும் இயேசுவிடம் விசுவாசம் கொண்டு அவர்தான் உண்மையான மெசியா என்று நம்புகின்றார்கள். எனவே இறைமகன் இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல அவர் அவைனருக்கும் ஆண்டவர் என்று திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமடலில் கூறவது இங்கே உண்மை என்பதை உறுதியாகின்றது. ஒருவகையில் பிறஇனத்தாராகிய நாம் அனைவரும் இறைவனின் பார்வையில் பேறு பெற்றவர்கள். ஏனெனில் இறைமகன் இயேசுக் கிறிஸ்துவால் முழுமையாக கிறிஸ்துவன் என்ற ஆழமான முத்திரையைப் பெற்றுள்ளோம். எனெவே அவரைப் போல் கனிவான உள்ளமும், தாழ்மை நிறைந்த மனநிலையையும் கொண்டிருக்க வேண்டும் என்பது முக்கியம். திருமுழுக்கு யோவான் இறைவனால் அருள்பொழிவு பெற்ற இறைவாக்கினராக இருந்த போதிலும் அவர் தன்னை உயர்வாக கருதவில்லை ஆகையால்தான் அவரால் இவ்வாறு சொல்ல முடிந்தது "எனக்குப்பின் வரும் இவர் என்னை விட முன்னிடம் பெற்றவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை " என்று தன் நிலையை உணர்கின்றார். இறைமகன் இயேசுவை உயர்வாக எண்ணித் தன்னுடைய சொல்லிலும் செயலிலும் அவருக்காக சாட்சியுடன் வாழ்ந்து, உண்மைக்காக தன் தலையை எரோது அரசனின் மகளுக்கு பரிசாக கொடுக்கின்றார். இயேசு உன்னத இறைவனின் மகனாக இருந்தும். தாழ்ச்சியின் மனநிலையைக் கொண்டு தனது சீடர்களின் காலடிகளைக் கழுவுகின்றார். அதன்பிறகு அவர் சொல்வதை இன்று ஆழமாக சிந்திப்போம். நீங்கள் என்னைப் 'போதகர் ' என்றும் 'ஆண்டவர் ' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே, நான் போதகர்தான், ஆண்டவர்தான், ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் " என்று. தாழ்ச்சியின் மதிப்பீட்டை பாடமாக கற்பிக்கின்றார். இன்றும் கிறிஸ்துவர்களாகிய நம்மிடம் இறைவன் ஒவ்வொரு நிமிடமும் கேட்பது அவரைப்போல் வாழ வேண்டுமென்று. ஒளியான இறைமகன் இயேசுவைப் போல் கனிந்த உள்ளமும், எளிமையும், தாழ்ந்த மனநிலையும், மன்னிக்கும் மனப்பான்மையும், பிறரை உயர்வாக எண்ணக்கூடிய மனநிலை வேண்டும் என்று. இன்று நாம் வாழ்கின்ற இந்த சமுதாயத்தில் நான் பெரியவன், நான் பெரியவள், நாங்கள் உயர்ந்த ஜாதி மக்கள், அவர்கள் கீழ் ஜாதி மக்கள் என்றும் பாகுபாடு காட்டி கூறுபோடும் உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எல்லா மனிதர்களையும் தாழ்வாக எடையிடுவதில் மகிழ்ச்சி கொள்கின்றோம். இறைவன் முன்னிலையில் நாம் அனைவரும் சமம் என்ற மனநிலை நமக்கு இன்னும் வரவில்லை. இப்புதிய ஆண்டில் திருமுழுக்கு யோவானின் மனப்பக்குவத்தை தர வேண்டுமென்று கொடைகளின் இறைவனிடம் மன்றாடுவோம். இறைவா உமது பார்வையில் நாங்கள் ஒவ்வொருவரும் மதிப்புப் பெற்றவர்கள் என்பதை ஆழமாக உணரக்கூடிய மனப் பக்குவத்தை எங்களுக்கு தந்து உம்மைப்போல் வாழ்வதற்கு துணைபுரியும். பிறருக்கு ஆன்ம ஒளியான மகிழ்ச்சியைத் தர முழு உள்ளத்தோடு பணிபுரிய வரம் தாரும்.

நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். மத்தேயு:11:29