இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா

ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது

எசாயா 60: 1-6
எபேசியர் 3: 2-3a
மத்தேயு 2: 1-12

இன்று தாய் திருஅவை ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது. இறைவாக்கினர் எசாயா எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித் துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும், காரிருள் மக்களினங்களைக் கவ்வும், ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார், அவரது மாட்சி உன்மீது தோன்றும் என்று முன்கூட்டியே இம்மானுவேலாகிய இறைவனின் மாட்சியைப்பற்றி எடுத்துரைக்கின்றார். முதன் முதலில் ஆண்டவரின் மாட்சி இடையர்கள் மேல் ஒளிர்ந்தது, பின்பு கிழக்கிலிருந்து வந்த ஞானிகளின் பயணத்திற்கு வானில் தோன்றிய விண்மீன் ஒளியாக இருந்து, யூதர்களின் அரசராக பிறந்திருக்கும் ஒளியின் இறைவனைக் கண்டு வணங்க அவர்களுடைய பாதைக்கு மாட்சியாக விளங்கியது. அன்று மாட்சியாக மண்ணில் உதித்த ஆண்டவர் இன்றும் பலருக்கு மாட்சியாக விளங்கிக் கொண்டுதான் இருக்கின்றார் என்றும் வாழும் ஒளியின் இறைவன். ஞானிகள் மூவரும் ஆண்டவரின் மாட்சியைத் தங்களது வாழ்வில் கண்டு அரசருக்கு அரசாராக விளங்கும் அமைதியின் அரசரை நெடுஞ்சாண்கிடையாய் மண்டியிட்டு குழந்தையை வணங்கினார்கள். ஞானிகள் மூவரும் வானில் தோன்றிய விண்மீனை நம்பி, உலக மீட்பரைத் தேடிச் சென்று அவரைக் கண்டு கொண்டார்கள். இறைமகன் மண்ணில் மனிதனாக நம்மிடையே குடிகொண்டபோதும் யூதர்களின் அரசராகப் பிறந்த போதும் யூதர்களால் அவருடைய மாட்சியைக் கண்டுகொள்ள முடியவில்லை. ஏன் ஏரோது அரசனும் ஆண்டவரின் மாட்சியைக் காணமுடியவில்லை. எருசலேம் முழுவதும் கலங்கிற்று என்று மத்தேயு நற்செய்தியில் காண்கின்றோம். இருளானவன் ஒளியைக் கண்டு கலங்குகின்றான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டவர் அவர்கள் மத்தியில் வாழ்ந்த போதும் ஆண்டவருடைய மாட்சியை அவர்களால் உணர முடியவில்லை ஆனால் ஒளியின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மட்டும்தான் அவருடைய மாட்சியைக் கண்டு கொள்ள முடிந்தது. எளியவர்கள், பாவிகள், சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்கள், வரிதண்டுபவர்கள் போன்றவர்கள் அவருடைய அன்பையும் மாட்சியையும் வல்லமையும் உணர முடிந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை என்ற இறைவாக்கு அன்றும் இன்றும் உண்மையாகின்றது. இருளின் பிடியில் வாழ்ந்த ஏரோது கலங்குகின்றான். அவனுடைய கலங்கிய எண்ணம் இருளின் செயல்களைச் செய்யத் தூண்டுகின்றது. தலைமைக் குருக்களையும், மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி யூதர்களின் அரசர் எங்கே பிறப்பார் என்று விசாரிக்கின்றான். மேலும் மூன்று ஞானிகள் மூவரும் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்பதை அறிந்ததும் மிகவும் சீற்றம் கொண்டு இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை படுகொலை செய்கின்றான். எருசலேம் முழுவதும் தாய்மார்களின் அழுகுரல்கள் ஒலித்தது. ஓரு அரசனின் சுயநலத்தால் ஏற்படுகின்ற கொடூரமான தீர்மாணங்கள் இப்படிபட்ட விளைவைக் கொண்டுவருகின்றது.

அன்று ஏரோது அரசன் செய்த படுகொலைகள்போல் இன்றும் உலகின் பல நாடுகளில் நடைபெற்று வருகின்றது என்பதை நாம் அறிகின்றோம். இருளின் செயல்கள் நம் கண்முன் நடந்தும் நாம் எதுவும் எதிர்த்து சொல்ல முடியாமல் அமைதி காக்கின்றோம். சில நேரங்களில் இருளின் செயல்களுக்கு துணை போகின்றோம். இதோ! இருள் பூவுலகை மூடும்: காரிருள் மக்களினங்களைக் கவ்வும் என்று கூறிய இறைவாக்கினர் எசயாவின் வார்த்தை உண்மைதானே? இன்று இருளின் செயல்கள் ஒவ்வொரு நொடிப் பொழுதும் பூவுலகைக் கவ்விக் கொண்டுதானே உள்ளது. நம்முடைய எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறதுதானே? மனிதன் கடவுள் பயமும் , மனித நேயமும் இல்லாமல் இருளின் செயல்களைப் செய்கின்றான். அனுதினம் சமூக ஊடகங்களின் வழியாக காண்பது இருளின் செயல்கள்தானே, கலவரம், வன்முறைகள், பயங்கரவாதம், உலகப் போக்கின்படி, பணம், பதவி, சுயநலம், போட்டிப், பொறாமை, ஏமாற்றல், நம்பிக்கையின்மை, நம்பிக்கைத் துரோகம், பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்த மனிதன், போன்ற தீயசக்திகள் நம் வாழும் சமூதாயத்தில் தலைதூக்கி ஆடுகின்றது. அரண்மனையில் வாழ்பவர்களும், அரசியல்வாதிகளும் நல்ல பாதுகாப்பான இடத்தில் வாழ்கின்றார்கள் ஆனால் பாவம் எதுவும் செய்யாத அப்பாவி மக்களின் அலுகுரலையும் பாரமக்களின் துன்பங்களையும் கண்டும் கேட்டும் அமைதியாக இருக்கின்றோம். சொந்த நாட்டை, சொந்த உடமைகளை இழந்து, சொந்த உறவகளை இழந்து தவிக்கும் மகக்ளின் வாழ்க்கை இன்று கேள்விக் குறியாகத்தானே உள்ளது. இப்படிபட்ட தீயசக்திகளிடமிருந்து விடுபட இறைவன் நம்மை விழிப்போடு இருக்க அழைக்கின்றார். அமைதியின் இறைவனை நோக்கி உள்ளத்தை எழுப்பி, ஒளியின் இறைவா இருளின் தீய சக்திகள் எம் மண்ணில் மறைந்து ஒளியின் ஆட்சி எம் மண்ணில் மீண்டும் மலர வேண்டும் என்று கெஞ்சி மன்றாடுவோம்.

கீழ்திசை ஞானிகள் மூவரும் பல தடைகளை மேற்கொண்டாலும் அவர்கள் மூவரும் தங்களுடைய குறிக்கோளை முன்வைத்து ஒற்றுமையுடன் விண்மீன் காட்டிய வழியில் நடந்து அவர்களுடைய இலக்கை அடைகின்றனர். இன்று நமது இலக்கை நோக்கி பயணம் செய்ய நமக்குத் துணையாக இருப்பவர் நானே ஒளி என்று சொன்ன இறைமகன் இயேசு மட்டும்தான். அவர் காட்டும் பாதையில் பயணிப்போம். அனைவரும் மீட்புப் பெறவேண்டும் என்றுதானே ஒளியான இறைவன் மனித அவதாரம் எடுத்து நம்மிடையே குடி கொண்டது. இன்னும் ஏன் பலர் நம்மில் ஒளியான இறைவனை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றோம். ஒருவகையில் நாம் அனைவரும் பேறுபெற்றவர்கள் என்று கூறலாம். ஏனென்றால் நாம் அனைவரும் பிற இனைத்தைச் சார்ந்வர்கள் என்றாலும் இறைவன் நம்மீது அன்பு கொண்டு நமக்கு அவர் அன்பு மகனை கொடையாக கொடுத்துள்ளார். ஆகையால்தான் நாம் அனைவரும் திருமுழுக்கின் வழியாக இயேசு கிறிஸ்துவுடன் ஒருவராக இணைதிருக்கின்றோம். அவரால்தான் நாம் ஒளியின் மக்களாக வாழ்ந்து வருகின்றோம். உலகின் ஒளி நானே! என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார், வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார் என்று கூறுகின்றார். (யோவான்:8:12). திருத்தூதர் யோவான் தனது திருமுகத்தில் கூறுகின்றார் "கடவுள் ஒளியாய் இருக்கின்றார், அவரிடத்தில் இருள் என்பதே இல்லை 'என்று. இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது நாம் அனைவரும் அவரைப்போல் உலகிற்கு ஒளியாய் இருக்க வேண்டும் என்றும்,, நாம் அனுதினம் செய்கின்ற நற்செயல்கள் அனைத்தும் மற்றவர்களுக்கு வளர்ச்சியைத் தரும் கருவியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார். இன்று நாம் அனைவரும் இறைவனுடைய உயிர்தரும் வார்த்தையைப் பின்பற்றி நடந்தோம் என்றால் நமக்கு என்றும் வெற்றி உண்டு என்பது நிச்சயம். மூன்று ஞானிகள் குழந்தை இயேசுவிற்கு பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாக கொடுத்தனர் ஆனால் நீங்களும் நானும் இன்று எவற்றைக் காணிக்கையாக அவருக்கு கொடுக்கப் போகின்றோம். சிந்திப்போம். நமது தீயக் குணங்களை விட்டுவிட்டு நற்குணங்களை மேற்கொண்டு நற்கனிதரும் மரங்களாக விளங்குவோம். அதுவே அவருக்கு நாம் கொடுக்கும் கொடையாகும். ஆண்டவரின் மாட்சியை நம்மில் காண வேண்டுமென்றால் இருளின் தீயச் செயல்களை நம்மிலிருந்து அகற்ற வேண்டும். இறைவனின் துணையுடன் இனிப் பயணிக்கப்போகும் நாட்களில் எந்த ஒரு இருளின் செயல்களை செய்யாமல் இருக்க முயற்சி எடுப்போம். "பிற இனத்தாரே நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்! ஏனெனில் ஆண்டவர் காட்டும் அன்பு மிகப் பெரியது. அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது".(திருப்பாடல்:117:1-2) ஔியான இறைவா எங்கள் வாழ்வின் இருளை அகற்றி உமது அன்பின் மாட்சி எங்கள் மேல் மீண்டும் ஒளிரட்டும்.

ஆண்டவரே என் ஒளி , அவரே என் மீட்பு, யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம் யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும். திருப்பாடல்:27,1