இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

கிறிஸ்து பிறப்பு

ஒளியான அவர் உலகில் இருந்தார்

எசாயா 52:7-10
எபிரேயர் 1:1-6
யோவான் 1:1-18

வாக்கு என்னும் இறைவனாகிய கிறிஸ்துவின் பிறப்பை இன்று நாம் அனைவரும் கொண்டாடுகின்றோம். ஒளியான இறைவன் உலகில் ஏழ்மையின் கோலத்தில் மாட்டுத்தொழுவத்தில் மனிதனாக பிறந்து எளிமையாக வாழ்ந்து, மனித குலத்திற்கு விடுதலை கொடுக்கும் மீட்பராக பிறந்த நாளினை மகிழ்ச்சியாக கொண்டாடி ஒவ்வொரு உள்ளமும் மகிழ்கின்ற புனிதமான நாள். ஆனால் உலகில் இருளின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இன்று ஒவ்வொரு மனித உள்ளத்தில் ஒளியான இறைவன் மீண்டும் பிறப்பது மிகவும் அவசியம். இன்று உலகில் மனித குலம், தனி மனிதனின் சுயநலத்தினாலும் சூழ்ச்சியினாலும் துன்புறுகின்றது. சமூக ஊடகங்களின் வழியாக நாம் காண்பது மனித நேயத்திற்கு அப்பாற்பட்ட கொடுமைகள், துன்பங்கள், கொலைகள் போன்ற பாவச் செயல்கள் அனைத்தும் இருளின் செயல்கள்தானே? இன்றைய நற்செய்தியில் திருத்தூதர் யோவான் மிகத் தெளிவாக எடுத்துரைப்பது "அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்து கொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை" இன்று உலகம் ஒளியான இறைவனை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. அவருடைய விழுமியங்களில் வளர வாய்புக்கள் பல இருந்தும் அதனை கண்டு கொள்ளாமல் உலகப் போக்கின்படி வாழ்வதற்கு விரும்புகின்றான். எத்தனையோ உள்ளங்கள் ஒளியான இறைவனை முழுமையாக அறியவும் அனுபவிக்கவும் முடியாமல் தவிக்கின்றது. உலகம் சித்தரிக்கும் மாய வலையில் சிக்கி தவிக்கின்ற நிலையை காண்கின்றோம். இறைவன் அன்பும் இரக்கமும் கொண்டவர் அதனால் அவர் இவற்றை எல்லாம் பொறுமையாக பார்த்துக் கொண்டுள்ளார்.

மீட்பு வழங்கிய ஒளியான இறைமகன் இயேசு கிறிஸ்து உலகம் முடியும் மட்டும் நான் உங்களோடு இருப்பேன் என்று வாக்கு கொடுத்தவர் இன்றும் என்றும் உயிருடன் ஒளியாக உலகில், நம் வாழ்விலும் உலாவிக் கொண்டுதான் இருக்கின்றார். ஒளியான இறைவன் உலகில் வாழும்போது ஏன் இருளின் செயல்கள் தலைதூக்க வேண்டும்? பயங்கரவாத்தினால் தன்னுடைய வாழ்வை அர்ப்பணமாக்கும் குழந்தைகள், தாய்மார்கள் தந்தையர்கள், மனித குண்டு வெடிப்பினால் உயிரை இழக்கும் களங்கமற்ற மக்கள். மனிதனின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் தங்களுடைய சொந்த நாட்டையும் சொந்த உடமைகளையும் உறவுகளையும் இழந்து, உண்ண உணவின்றி, அமைதியுடன் உறங்க இடமின்றி தவிக்கும் அகதிகளின் அழுகுரல்கள் அனுதினம் விண்ணை நோக்கி ஒலித்துக் கொண்டுதானே இருக்கின்றது? மூன்று தினங்களுக்கு முன்பு பெர்லின் நகரத்தில் கிறிஸ்துமஸ் சந்தையில் நடைபெற்ற சம்பவம், இறைவன் வாழும் தேவாலயங்களில் இறைவனைத் வழிபடுவதற்கு ஒன்றுகூடியிருக்கும் போது பொதுமக்களின் மத்தியில் நடைபெறும் கவலைக்குரிய பயங்கரவாத தாக்குதல்கள். கிறிஸ்துவர்கள் என்பதனால் சிலுவையில் அறைந்து கொல்லுதல் போன்ற கொடூரச் செயல்கள் அனுதினம் நடக்கின்றதுதானே? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏரோது அரசன், தனக்கு எதிராக அரசர் பிறந்துள்ளார் என்பதை அறிந்து பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண்குழந்தைகளைக் கொண்றதுபோல் இன்று ஒவ்வொரு நாளும் பயங்கரவாதம் என்ற கொடூரமான இருளின் அரசன் எண்ணிலடங்கா மக்களைக் கொன்று குவித்துக் கொண்டுதானே இருக்கின்றான். இருளானவன் மனித குலத்தை இருளின் பாதையில் கொண்டு செல்ல முயல்கின்றான். இந்தச் சூழ்நிலையில் இன்று நம்மால் கிறிஸ்து பிறப்பைக் மகிழ்ச்சியாக கொண்டாட முடியுமா? அநீதிகள், அக்கிரமங்கள், பாவங்கள் வளர்ந்து வரும் அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டிருகின்றோம். நீங்களும் நானும் இறைவாக்கினர் எசாயா கூறும் வார்த்தைக்கு செவிமடுத்து அன்று இறைமகன் இயேசு செய்த இறைபணியைச் செய்ய இன்று எழுந்து ஒளிவீச வேண்டும். நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும், நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும் வேண்டியது நமது முக்கிய கடமையாகும்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் உடன் பிறப்புக்களுடனும், நண்பர்களுடனும், நமக்கு நன்கு தெரிந்தவர்களுடனும் பகிர்ந்து கொள்கின்றோம். அன்பளிப்புக்களை கொடுக்கின்றோம், வீடுகளையும், வீதிகளையும் ஒளிரும் விளக்குகளால் அலங்கரிக்கின்றோம். இவைகள் அனைத்தும் எப்பொழுது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்றால் இறைமகன் இயேசு நமது உள்ளத்தில் பிறந்து நம்மை அவரைப்போல் மாற்ற வேண்டும். எத்தனை உள்ளங்கள் கவலையோடும் கண்ணீரோடும் அமைதிக்காக ஏங்கித் தவிக்கின்றது. அவர்களுக்கு ஆறுதல் தரும் போது இறைவன் அங்கு பிறக்கின்றார். எனவே வார்த்தையான ஒளியின் இறைவன் நம் உள்ளத்தில் பிறந்து, நமது உள்ளத்திலும் வாழ்விலும் இருக்கின்ற இருளினை அகற்றி ஒளியை ஏற்றிடவும் அதன் வழியாக நாம் பிறருக்கு ஒளியை வழங்கும் மகனாக மகளாக மாறுவோம். மேலும் வார்த்தையான இறைவன் அவருடைய வார்த்தையாலும் ஒளியாலும் உலகத்தையும் அவர் அனுதினம் அன்பு செய்கின்ற மக்கள் அவருடைய ஒளியில் என்றும் நடந்துச் செல்ல அமைதியின் அரசரிடம் மன்றாடுவோம். அமைதியின் இறைவா இந்த மாபெறும் நல்ல நாளில் அனைவருக்கும் உமது மகிழ்ச்சியையும் அமைதியையும் சந்தோசத்தையும் கொடுத்தருளும்.

உலகின் ஒளி நானே, என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார், வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார் என்றார். யோவான்:8,12