இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு

இம்மானுவேல் என்றால் கடவுள் ' நம்முடன் இருக்கிறார் ' என்பது பொருள்

எசாயா 7:10-14
உரோமையர் 1:1-7
மத்தேயு 1:18-24

திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு. இறைமகன் இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதற்கு இன்னும் சிறிது நாட்கள் இருக்கின்றது. அவரின் பிறப்பைக் கொண்டாட ஆயத்தமாக உள்ள நமக்கு இறைவன் நம்மோடு என்றும் இருக்கின்றார் என்ற உண்மையை இன்றைய வாசகங்களின் வழியாக எடுத்துரைக்கின்றார். நாம அனைவரும் வார்த்தையான இறைவன் நம்மோடு என்றும் வாழ்கின்றார் என்பதை நம்புகின்றோம் விசுவசிக்கின்றோம். ஏனென்றால் அவர் கண்ணயர்வதுமில்லை, உறங்குவதும் இல்லை, அவர் நம் வலப்பக்கத்தில் உள்ளார். அவரே நமக்கு நிழல் ஆவார் என்று திருப்பாடல் 121ல் காண்கின்றோம். மேலும் எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர், உமது கையால் என்னைப் பற்றிப்பிடிக்கின்றீர் என்று திருப்பாடல் 139,5 ல், கூறுவது போல் தாவீது அரசர் இறைவனின் பிரசன்னத்தை தனது வாழ்வில் உணர்ந்து இருந்ததால்தான் அவரால் இவ்வாறு செபிக்க முடிந்தது. அமைதி கொண்டு, நானே கடவுள் என உணர்ந்து கொள்ளுங்கள் என்று திருப்பாடல் 46, 10 இறைவசனத்தில் காண்கின்றோம். படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார், யாக்கோப்பின் கடவுளே நமக்கு அரண் என்றும் 11ஆம் வசனத்தில் காண்கின்றோம். இறைவாக்கினர் மோசே இறைவனின் உடனிருப்பை நாற்பது ஆண்டுகள் பாலைவனத்திலும், சீனாய் மலையில் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நினறு கொண்டு, 'ஆண்டவர்' என்ற பெயரை அறிவித்தார். அப்போது அண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், ஆண்டவர்! ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன் சினம் கொள்ளத் தயங்குபவர் பேரன்புமிக்கவர், நம்பிக்கைக் குரியவர், ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர், கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர் " (வி.ப:34:5-7) என்று வாக்கு தருகின்றார். மேலும் ஆண்டவர் அவரிடம் எனது பிரசன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று வாக்கு மாறா இறைவன் அவருக்கு வாக்கு அளிக்கின்றார். மோசேக்குப்பின் ஆண்டவர் யோசுவாவிடம் கூறுகின்றார் 'உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான். மோசேயுடன் நான் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன். உன்னைக் கைநெகிழ மாட்டேன், கைவிடவும் மாட்டேன் என்கின்றார். இறைவன் நம்மை ஒருபோதும் திக்கற்றவர்ளாய் விடமாட்டார். திருவெளிப்பாடு நூலில் மிக அழகாக கூறப்படுகின்றது " இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவரெ அவர்களுடைய கடவுளாய் இருப்பார். (தி.வெ.: 21:3) இம்மானுவேலனாகிய இறைவன் நம்மோடு என்றும் உள்ளார். ஆம் உலகம் முடியும்வரை நான் உங்களோடு இருப்பேன் என்று மொழிந்த மீட்பராம் இயேசு நேற்றும் இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். நம்புவோம் நம் இறைவனை ஆழ்ந்த விசுவாசத்துடன்.

இன்றைய முதல் வாசகத்தில் ஆகாசு நான் ஆண்டவரை சோதிக்க மாட்டேன் என்கின்றார். நற்செய்தி வாசகத்தில் யோசேப்பு நேர்மையாளராய் இருந்தும் கன்னிமரியாள் இறைவனின் ஆவியானவரால் கருவுற்றிருப்பதை நினைத்து சந்தேகப்படுகின்றார். இவர்களுடைய இரண்டு குணங்களும் நம் ஒவ்வொருவரிலும் உண்டு. வாழ்க்கைப் பயணத்தில் பலவகையான சவால்களைச் சந்திக்கின்றபோது மனதில் குழப்பங்களும், கவலையும் கொண்டு மனம் தளர்ந்து போகின்றோம். இறைவன்மீது கொண்ட நம்பிக்கையும் நம்மைவிட்டு அகல சந்தர்ப்பமும் ஏற்படுகின்றது. அடையாளங்களைத் தேடி அங்கும் இங்கும் ஓடுகின்றோம் எதற்காக? நம்மை பெற்ற தந்தை தாய், உடன்பிறப்புக்கள், நண்பர்கள் அனைவரும் நம்மை விட்டு அகன்று போகலாம் ஆனால் நம்மை அன்பின் வழியாக அவருடைய உருவில் படைத்து, நல்லதையே நமக்கு ஆசிக்கின்ற இறைவன் ஒருபோதும் கைவிடமாட்டார். அவர் எப்பொழுதும் நம்பிக்கைகுரியவர் என்றும் நம்மோடு வாழ்கின்றார் என்பதை நாம் ஒருபோதும் மறக்ககூடாது. இறைமகன் இயேசு அவருடைய பணி வாழ்வில் எப்பொழுதும் தந்தையாம் இறைவன் அவருடன் இருக்கின்றார் என்பதை நன்கு உணர்ந்து அதன்படி வாழ்ந்து வெற்றிப் பாதையை நமக்குக் காண்பித்தவர்தான், வாழ்வுக்கு வழிகாட்டுபவருமான நமது மீட்பராகிய இயேசு கிறிஸ்து. அவருடைய நாமத்தை வாயர ஏற்றுப் புகழும்போது அவருடைய பிரசன்னம் நம்மில் இறங்கிவரும் என்பது உண்மை. யோசேப்பு வானதூதரின் வார்த்தையை நம்பினார். அவர் அன்னை மரியாளை ஏற்று, இறைமகன் இயேசுவை உலகிற்கு மீட்பராக கொடுக்க இறைவனின் திட்டத்தில் பங்கு பெற்றார். இன்று நம்பிக்கை விசுவாச வாழ்வு வாழ்வதற்கு இறைவனுடைய வார்த்தை மிகவும் அவசியமாக உள்ளது. இறைவனுடைய வார்த்தைக்கு செவிமடுத்து அதன்படி வாழ்ந்தோம் என்றால் உண்மையான அமைதி நமக்கு கிடைக்கும். நமது அன்றாட வாழ்க்கைச் சுமைகளை சுமக்கும் போதும், துன்பங்களை எதிர்கொள்ளும்போதும், பலவகையான சவால்களை சந்திக்கும்போதும், நமது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்று ஏங்கும் போதும், இறைவனிடம் அடையாளங்களை கேட்கின்றோம். ஏதற்காக நமது மனித உள்ளத்தில் இருக்கின்ற ஆசைகள் நிறைவேறுவதற்காக? நாம் அமர்வதையும் எழுவதையும் , நடப்பதையும் படுத்பதையும், எல்ல நினைவுகளையும் அறிந்த இறைவனை நம்புவோம். அவர் நம்மோடு பயணிப்பவர். இறைவனை நமது வாழ்வின் கற்பாறையாக பிடித்துக்கொண்டு சாட்சிய வாழ்வு வாழ்வதற்கு நம்மை தயார் செய்வோம். இம்மானுவேலாகிய கடவுள் நம்முடன் இருக்கின்றார். எதற்கும் நாம் அஞ்சவேண்டாம். வாருங்கள் நான் உங்களுக்கு இளைபாறுதல் அளிப்பேன்.

இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களடன் இரக்கின்றேன் " என்று கூறினார். மத்தேயு:28,20a