இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

திருவருகைக்காலம்

ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் அவர்கள் காண்பார்கள்

எசாயா 35:1-6,10
யாக்கோபு 5:7-10
மத்தேயு 11:2-11

திருவருகைக்காலம் மூன்றாம் ஞாயிறு. திருவகைக் காலத்தில் திருவழிபாட்டிற்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள இறைவனுடைய உயிர்தரும் வார்த்தையானது மனித உள்ளத்திற்கு புது வலிமையையும் ஆறுதலையும் கொடுக்கின்றது. இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் வழங்கும் அருள்பொழிவானது அவருடைய உயிர்தரும் வார்த்தைகள் நமது அன்றாட வாழ்விற்கு உண்மையை உணர்த்தும் ஓர் ஆன்மிகப் படைக்கலனாகும். கடந்து சென்ற இரண்டுவாரங்களின் இறைவாசகங்களை தியானித்த போது உள்ளத்தின் ஆழத்தில் நமக்கு அமைதியும், மிகிழ்ச்சியும், ஆறுதலும் பெற்றோம் என்பது உண்மைதானே?. நாம் அனைவரும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு வாழ்வதற்குத்தான் நம்மை அவரது உருவிலும் சாயலிலும் படைத்தார். இறைவனுடன் இணைந்து என்றும் மகிழுங்கள், மீண்டும் மகிழுங்கள் என்று திருத்தூதர்பவுல் பிலிப்பியர்க்கு எழுதிய திருமுகத்தில்கூறுகின்றார். (பிலிப்பியர் 4:4). அன்னை மரியாள் உன்னத இறைவனால் நிலழிட்டபோதும், உன்னத கடவுளின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டபோதும். மகிழ்ச்சியால் உள்ளம் நிறைந்து இவ்வாறு பாடுகின்றார் "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என்மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கிறது" என்று மகிழ்ச்சியுடன் பாடுகின்றார். அன்னைமரியாள் பெற்ற மகிழ்ச்சியை தன்னுடைய உறவினரான எலிசபெத்துடன் பகிர்ந்து கொண்ட போது அவருடைய வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று என்று காண்கின்றோம். இறைவாக்கினர் செப்பனியா தனது மகிழ்ச்சிப்பாடலில் கூறுகின்றார் "மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி, இஸ்ரயேலே! ஆரவாரம் செய், மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி". (செப்பனியா 3:14). இறைமகன் வருகைக்காக நமது பாலை நிலமாகவும், பொட்டல் நிலமாகவும் விளங்கும் ஆன்மாவை ஆயத்தமாக்குவோம். இறைவனின் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்றால் உள்ளத்தில் இருக்கும் கரடு முறடான பாதைளை செம்மையாக்க வேண்டும். வெளி ஆடம்பரங்களை தயாரிக்க தீவிரமாக ஆயத்தம் செய்வது போல் நாமும் நமது ஆன்மாவை தயார் செய்ய வேண்டும். இன்று நீங்களும் நானும் நமது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் தளர்ந்த உள்ளங்களுக்கும், உள்ளத்தில் உறுதியற்றவர்களுக்கும், உதவிடவும், ஆறுதல் கூறி அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவும் முன்வரவேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் வழங்கும் ஆறுதல் தரும் வார்த்தைகளைப்பற்றி தியானிப்போம். ஆண்டவரின் நாளில் பாலை நிலம், பொட்டல் நிலம், அகமகிழ்ந்து லீலிபோல் பூத்துக் குலுங்கும். அவருடைய மாட்சியும் பெருமையும் அவர்கள் காண்பார்கள், தளர்ந்து போன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழுங்கால்களை உறுதிப்படுத்துங்கள், உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள், நீதியின் இறைவனாக வருவார், அநீதியிலிருந்து விடுவிக்கும் இறைவனாக வருவார், பார்வையற்றோர், காது கெளாதோர், காலுனமுற்றோர், தொழுநோயாளர்கள், தீய ஆவிகளினால் துன்பம் ஆட்கொள்ளப்பட்டவர்கள், பாவிகள், வரிதண்டுபவர்கள் அனைவரும் மெசியாவின் அன்பையும் இரக்கத்தையும் உணர்ந்து நலன்களைப் பெறுவார்கள் என்று மகித் தெளிவாக எடுத்துரைக்கின்றார். இறைமகன் இயேசு தனது பணிவாழ்வில் இவற்றை நிறைவு செய்து அவைனரும் நிலை வாழ்வைப் பெறுவதற்கு பாதையை காட்டிச் சென்றார். மேலும் அவருடைய அன்பின் இரக்கத்தை தலைமுறை தலைமுறையாக மனித குலத்திற்கு அளித்து இன்றும் வாழ்வு கொடுத்து வருகின்றார். இன்றும் இறைவன்மேல் நம்பிக்கையும் விசுவாசமும் கொண்ட பலருடைய வாழ்க்கையில் இறைவன் வல்லமையுடன் செயலாற்றிக் கொண்டுதான் இருக்கின்றார். அன்னை மரியாளிடம் ஆண்டவரின் தூதர் கூறிய வார்த்தையை நம்புவோம் "ஏனெனில். கடவுளால், இயலாதது ஒன்றுமில்லை'. இறைவனால் எல்லாம் முடியும் என்ற நம்பிக்கை நம்மில் இருக்க வேண்டும். நமது வாழ்க்கையில் சந்திக்கின்ற அனைத்து சவால்களையும் துணிவுடன் ஏற்றுக் கொண்டு முன்னோக்கி பயணிக்க வேண்டும். கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? எனவே திருத்தூதர் பவுல் கூறுவது போல் அனைத்து நன்மைகளையும் துன்பங்களையும் பொறுமையாக தாங்கிக் கொண்டு ஆண்டவரின் வருகைக்காக காத்திருப்போம்.

திருமுழக்கு யோவான் உண்மையை எடுத்துரைத்து ஆண்டவருடைய நாளுக்கு மக்களை ஆயத்தப்படுத்தினார். ஆனால் ஏரோது அவரை நீதிமான் என்று அறிந்தும் அவரை சிறையில் அடைத்து, அவருடைய மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவருடைய தலையை பரிசாக கொடுகின்றார். இன்றும் உண்மையை எடுத்துரைப்பவர் பலர் கடுமையாக சமுதாயத்தில் தண்டிக்கப்படுகின்றார்கள். அநீதிக்கும், பதவிக்கும், பணத்துக்கும், எதையும் செய்யத் துணியும் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இன்று அநீதிக்கு துணைபோகின்றவர்கள் எத்தனை பேர் நம்முடன் வாழ்கின்றார்கள். இன்று எந்த ஒரு குற்றமும் செய்யாமல் எத்தனை பேர் சிறைச்சாலையில் அடைந்து மனக்கவலையுடன் துன்பங்களை தாங்கிக் கெண்டு தவிக்கின்றார்கள். இன்று எத்தனை அரசியல்வாதிகள் ஏரோது அரசரைப் போல் தங்களுடைய சொந்த மகிழ்ச்சிக்காகவும் சுயநல்திற்காகவும் பலரைக் கொன்று சிறையில் அடைத்தும் வருகின்றார்கள். இன்று சமுதாயத்தில் நற்பண்புகளைக் கொண்டவர்களையும், ஏழை எளியவர்களுக்காக நற்செயல்கள் செய்பவர்களையும் துன்புறுத்துவதைக் கண்டு கொண்டுதானே இருக்கின்றோம். மனித குண்டுகள் வைத்து, சித்திரவதை செய்து அப்பாவி மக்களைக் கொல்லுகின்றார்கள்தானே? இன்று மனிதன் உண்மையை எடுத்துரைக்க பயப்படுகின்றான். அநீதியைக் கண்டும் எதுவும் பேசமுடியாமல் அமைதி காக்கின்றான். சமூக ஊடகங்களில் வழியாக பரவும் அநீதிகளின் செயல்கள் ஏராளம், ஏராளம். செபம் என்னும் ஆயுதத்தை அனைவரும் கையில் எடுப்போம். அனைத்து தீமையின் சக்திகள் அகலவேண்டுமென்று இறைவனை நோக்கி மன்றாடுவோம். திருவருகைக்காலத்தில் முக்கியமாக ஒளியின் இறைவனிடம் மன்றாடுவோம் இருளின் செயல்களை அகற்ற உண்மையான இறைவாக்கினர்கள் நமது மத்தியில் உருவாக வேண்டுமென்றும், மேலும் இருளின் செயல்களைச் செய்ய தங்களையே தயார் செய்யும் அனைவரும் மனம் மாற்றம் பெற வேண்டுமென்றும் செபிப்போம். நற்செய்தியின் விழிமியங்களைக் கேடயமாக ஏற்றுக் கொண்டு உண்மைக்கு குரல் கொடுத்து, நற்கனி கொடுக்கும் மரங்களாக திகழ்வோம்.

ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. லூக்கா 1:47