இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









திருவருகைக்காலம் முதல் ஞாயிறு

விழிப்பாயிருங்கள்

எசாயா 2:1-5
உரோமையர் 13:11-14
மத்தேயு 24:37-44

திருவருகைக்காலம் முதல் வாரம். இறைஇரக்கத்தின் வாயில் நுழைந்து அவருடைய இரக்கம், அன்பு, கருணை அனைத்தையும் அனுபவித்த நமக்கு மீண்டும் ஒரு அருள்நிறைந்த காலத்தை திருஅவை நம்முன் வைக்கின்றது. இன்றைய இறைவாசகங்கள் இறைவன் அவருடைய இரண்டாம் வருகைக்காக விழிப்பாயும், ஆயத்தமாயும் இருக்க வேண்டுமென்று நம்மை அழைக்கின்றது. இன்று மனிதன் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும், விஞ்ஞானத்திலும், வளர்ந்து வருகின்ற காலத்தில் பயணிக்கின்றோம். புதிய கண்டுபிடிப்புகள், புதிய சமூக ஊடகங்கள் போன்ற பல்வேறு வசதிகள் வழியாக மனிதன் பல நன்மைகளைக் பெறுகின்றான் ஆனால் நம்மில் யாருக்கும் ஆண்டவருடைய நாள் எப்பொழுது வரும் என்று தெரியாது. இறைமகன் இயேசு நற்செய்தியில் உறுதியாக கூறுவது இவ்வாறு "அந்த நாளையும் வேளையையும்பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது "என்று. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாடி மகிழ்வதற்கு நமது தாய் திருஅவை மனமாற்றத்தின் காலமாக நான்கு வாரங்களை, மிக அற்புதமாக இறைவாசகங்களின் வழியாக இறைமகன் இயேசுவை நம் உள்ளத்தில் எவ்வாறு வரவேற்க என்றும், எப்பொழுதும் விழிப்போடு ஆயத்தமாக இருக்க வேண்டுமென்று அழைப்புவிடுக்கின்றது.

திருத்தூதர் பவுல் இரண்டாம் வாசகத்தில் கூறுகின்றார், மீட்பு அண்மையில் உள்ளது, இரவு முடியப்போகிறது, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக என்று வலியுறுத்துகின்றார். இன்று மனித உள்ளங்கள் இருளின் செயல்களில் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெறுகின்றது. அவற்றில் மனிதன் தோல்வி அடைவது நிச்சயம். எனவேதான் தூய பவுல் களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம் காமவெறி, சண்டைச்சச்சரவு போன்றவற்றை தவிர்க்கவும், தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இறைமகன் இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். இறைவனின் சொந்த உருவில் படைத்த நாம் பல நேரங்களில் நன்மை எது, தீமை எது என்று தீர்மாணிக்க முடியாமல் தவிக்கின்றோம். ஆனால் இறைவன் நமக்கு நிறைவான ஞானத்தையும், அறிவையும் தந்துள்ளார். பலவேலைகளில் நமது உள்ளமானது சுயநலத்திற்காகவும், இன்பத்திற்காகவும் பாவத்தில் விழுந்து மன அமைதி இல்லாமல் தவிக்கின்றோம். இன்று எத்தனையோ மனித உள்ளங்கள், குடும்பங்கள், சமுதாயங்கள் இருளின் செயல்களுக்கு அடிமையாகி இருப்பதை அறிகின்றோம். குழப்பங்கள், அமைதியின்மை, துன்பங்கள், துயரங்கள், துக்கம், பகைமை, பழிவாங்குதல், போன்ற இருளின் செயல்களை மனமாற்றத்தின் காலமாகிய இவ்வேளையில் நமது உள்ளத்திலிருந்து களைந்துவிட்டு, கரடு முரனா பள்ளங்களை நற்பண்புகளாலும், நற்செயல்களாலும் நிரப்புவோம். எனவே என்னுடைய சொந்த வாழ்க்கைப் பயணத்தில் மேலே கூறப்பட்ட தீச்செயல்கள் ஏதெனும் நமது உள்ளத்தில் படிந்திருந்தால் அவற்றை தவிர்க்க முயற்சி எடுப்போம். இயேசுவின் ஒளியின் நற்குணங்களை அணிகலன்களாக அணிந்து கொள்வோம். வார்த்தையான இறைவன் நமக்கு கொடுத்துள்ள உயிருள்ள வார்த்தைகளை மனதில் ஏற்று அதன்படி வாழ்ந்து ஆண்டவரின் வருகைக்கு ஆயத்தமாய் இருப்போம்.

இயேசுவின் பிறப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு நமது ஆன்மாவை தயார் செய்வோம். நேற்று நம்முடன் வாழ்ந்தவர்கள் இன்று நம்முடன் இருப்பதில்லை. நமது வாழ்வு ஒரு யாத்திரை போன்றது. மனித யாத்திரையானது இம்மண்ணில் ஒருநாள் முடியக் கூடியது. நம்மோடு எதுவும் இருக்கப்போவதில்லை. கடந்து சென்ற ஆண்டிலும், இந்த ஆண்டும் தீவிரவாதம், வன்முறைகள், நிலநடுக்கம், இயற்கை சீற்றம், பல்வேறான விபத்துக்கள் நிகழ்ந்தது. ஆனால் அவற்றை எதிர் கொண்ட மக்களுக்கு அவற்றைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. சதாரண வாழ்வுதானே வாழ்ந்தார்கள். இவைகள் நமக்கு சிறந்த ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. ஆண்டவரின் வருகை நாம் நினையாத நேரத்தில் வரும் என்பது நிச்சயம். வாழ்க்கையைப் பயணத்தில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நாம் அனைவரும் சிறிது நேரம் ஓட்டத்தை நிறுத்திவிட்டு நம்மை நாம் ஆய்வு செய்வோம். நமது குறிக்கோள், நிறை, குறைகள், நற்பண்புகள், கடமைகள், பணிகள் அனைத்திலும் நேர்மையோடும், திறமையோடும் அதில் செயல்பட்டோமா என்று சிந்திப்போம். இறைவனோடு உள்ள தொடர்பு, அருகில் உள்ளவர்களோடு தொடர்பு எவ்வாறு உள்ளது. அன்று பாலைவனத்தில் ஆண்டவரின் வழியை செம்மைப்படுத்த குரல் ஒலித்தது. அக்குரலுக்கு மக்கள் செவிமடுத்து மனம் மாற்றம் பெற்றனர் ஆனால் இன்று பாலைவனமாகிய அவசர உலகில் இறைவனின் குரல் பல கோணங்களில் அனுதினம் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது. விழிப்போடு அக்குரலுக்கு செவி மடுத்து அவருடைய வருகையை தூய்மை நிறைந்த உள்ளத்துடன் அவரை வரவேற்க எதிர் கொள்வோம்.

ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள் அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள். மத்தேயு:3,3b