இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் முப்பத்தொன்றாம் ஞாயிறு

இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்

சாலமோனின் ஞானம் 11: 22-12:2
2 தெசலோனிக்கர் 1:11-2:2
லூக்கா 19:1-10

பொதுக்காலம் முப்பத்தொன்பதாம் ஞாயிறு. இறைஇரக்கத்தின் ஆண்டில் பயணிக்கின்ற நம்மிடம் இறைவன் கேட்பது 'உமது வீட்டில் நான் தங்க வேண்டும்" என்று. சாலமோனின் ஞானம் நூலில் வாசிக்கப்படும் இறைவாசகம் கூறுவது, தராசில் மிக நுண்ணிய எடை வேறுபாடு காட்டும் தூசிபோலவும் நிலத்தின் மீது விழும் காலைப்பனியின் ஒரு சிறு துளிபோலவும் உலகம் முழுவதும் உன் கண்முன் உள்ளது என்ற வார்த்தை எவ்வளவு உண்மையானது. இறைவனின் அன்பின் பிரசன்னம் சிறு தூசி முதல் எல்லாவற்றிலும் உண்டு என்பதை உணர்த்துகின்றது. நமது இறைவன் மிக வல்லவராயும் பெரியவராயும் இருக்கின்றார் ஆகையால் தான் அவர் நம்முடைய பாவங்களைப் பார்த்தும் பாராமல், எல்லோரையும் அன்பு செய்கின்றார். இறைவனின் அழியா ஆவியானவர் நம்மில் குடி கொண்டுள்ளார். நாம் அனைவரும் அவர் வாழும் ஆலயம். அவர் வாழும் ஆலயம் கண்டிப்பாகத் தூய்மையாக இருக்க வேண்டும். வாழும் இறைவன் நம்மிடையே உள்ளார். பாலைவனத்தில் நாற்பது நாட்களாக உடனிருந்து பயணித்தவர் இன்றும் நம்மோடு பயணிக்கின்றார் என்பதை நம்புவோம். யோசுவா நூல் 3:5 இறைவசனம் கூறுவது : உங்களைத் தூய்மையாக்கி கொள்ளுங்கள். நாளை ஆண்டவர் உங்களிடையே வியத்தகு செயல்கள் புரிவார்" என்று யோசுவா கூறிய வார்த்தையானது உயிருள்ளது என்பதை நம்புவோம். இறைமகன் இயேசு தனது மலைபொழிவு மறைஉரையில் கூறுவது, தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்' என்கின்றார். இறைவனை அனுபவிக்க வேண்டுமென்றால் நமக்கு தூய்மையான உள்ளம் தேவை. தாவீது அரசர் தான் செய்த குற்றங்களை உணர்ந்து மனம் மாறவேண்டும் என்று செபிக்கின்றார். 'கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும், உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும் என்று. இறைவனைக் காண்பதற்கு உள்ளத் தூய்மையும் விருப்பமும் அவசியம். இறைவன் அனைத்தின்மீதும் அன்பும் இரக்கமும் கொண்டுள்ளார். அவர் நம்மை எப்பொழுதும் மன்னிக்கும் இறைவன் ஆகையால் நமது வீடாகிய இதயத்தில் அவரை வரவேற்போம்.

நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் சக்கேயுவும் சந்திக்கின்றார்கள். இழந்துபோனதைத் தேடி மீட்க மானிட மகன் எரிக்கோ நகரத்தின் வழியாக பயணம் செய்கின்றார். சக்கேயு என்னும் பெயருக்கு தூய்மை, கபடமற்ற, வெகுளியான என்ற கருத்தைக் குறிக்கின்றது. தூய்மை என்னும் பெயரைக் கொண்ட சக்கேயு ஒரு செல்வர், வரிதண்டுவோருக்கு தலைவராக இருந்தார். அவர் இயேசு யார் என்று பார்க்க விரும்புகின்றார். அவரைத் தடுப்பது மக்கள் கூட்டம், தனது குட்டையான உருவம், அதிக செல்வம் ஆனால் அவருக்கு மக்கள் கூட்டம், உருவத்தில் குட்டை, அதிகம் செல்வம் என்ற மூன்று தடைகள் இருந்த போதிலும் அவர் இயேசுவைக் காண வேண்டும் என்று முயற்சி எடுக்கின்றார். அவர் இந்த மூன்று தடைகளையும் பொருட்படுத்தாமல் ஓடிப்போய் அத்தி மரத்தில் ஏறிக் கொள்கின்றார். அவருடைய முயற்சியையும் விருப்பத்தையும் அறிந்த இயேசு, சக்கேயுவை அண்ணாந்து பார்க்கின்றார். இயேசுவின் பார்வையும், இறங்கி வாரும், இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும் என்று மொழிந்த சொற்களும், பெறும் மாற்றத்தை கொண்டு வருகின்றது. அவருடன் தங்கப் போகின்றார் என்பதை கேள்விப்பட்டதும் மகிழ்ச்சியோடு அவரை வரவேற்கின்றார். ஆனால் இதைக் கண்ட யாவரும் ' பாவியிடம் தங்கப்பேயிருக்கிறாரே இவர்" என்று முணுமுணுத்த வார்த்தைகளை சக்கேவுக்கும் இயேசுவுக்கும் கேட்டிருக்க வேண்டும். அதனால்தான் சக்கேயு தான் செய்த பாவக் குற்றங்களை நன்றாக உணர்ந்து மனமாறுகின்றார். இறைமகன் இயேசுவின் சந்திப்பு அவரை தூய்மையுள்ள சக்கேயுவாக மாற்றுகின்றது. இறைமகன் இயேசுவை நேர்க்கு நேர் சந்தித்தபோது இரண்டு மாற்றங்கள் அவரில் ஏற்படுகின்றது.

- என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுத்துவிடுகிறேன் - எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று இரண்டு முடிவுகளை எடுக்கின்றார். மனம் மாற்றத்தினால் தன்னிடம் உள்ளவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றார். இயேசுவின் இரக்கப் பார்வையும் அன்பும் அவரை மாற்றுகின்றது. அவருடைய மனம் மாற்றத்திற்கு இயேசு கூறும் பதில்தான் 'இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று" என்று. சக்கேயுவின் மகிழ்ச்சி எல்லையற்றதாக இருந்திருக்கும். மனித உள்ளங்களில் வாழ்வதற்கு விரும்புகின்றவர் தான் நமது இறைமகன் இயேசு. உலகம் முடியும் மட்டும் நான் உங்களோடு இருப்பேன் என்று சொன்னவர் நம்முடைய மனம் மாற்றத்திற்காக காத்துக் கொண்டுள்ளார். நமது உள்ளக் கதவு அருகில் இருந்து தட்டிக் கொண்டிருப்பவருக்கு குரல் கொடுப்போம். சக்கேயுவைப்போல் இறைவனைக் காண விரும்புகின்றோமா? செல்வோம் இறைவனின் சந்நிதிக்கு. இன்று இறைவனைக் காண முடியாமல் மனிதனை அழித்து கொண்டிருக்கும் தீய சக்திகள்தான் எத்தனை? உண்மையான நிலைவாழ்வு தரும் இறைமகன் இயேசுவையும் அவருடைய உயிர் தரும் வார்த்தையையும் அறியாமல் மனிதன் அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் எங்கெல்லாம் ஓடுகின்றான்?

நாம் பெற்ற செல்வம், பட்டம், படிப்பு, பதவி, போன்ற உலக சுகங்கள் இறைவனைக் காண்பதற்கு தடையாக உள்ளதா? சிந்திப்போம். சிறு மாற்றம் தேவைப்பட்டால் சக்கேயுவைப் போல் முயற்சி செய்வோம். இரக்கம் என்னும் அத்தி மரத்தில் ஏறி இறைவனைக் காண விரும்புவோம். வைகறையில் வழித்தெழுந்து நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை மானிடர் தம் உணவுக்காக வருந்தி உழைப்பது வீணே! உறங்கும்போதும் கடவுளின் அன்பர் தேவையானதை அவரிடமிருந்து பெற்றுக் கொள்வர். (திருப்பாடல்:127,2) இன்று உலக இன்பத்தைக் கொடுக்கும் சமூக வலைதளங்கள், போதைப் பொருட்கள், மது பானம் போன்ற தீய சக்திகள் இறைவனைக் காண்பதற்கு தடையாக உள்ளதா? இவைகளுக்கு அடிமையாகாமல் அவற்றை சிறிது சிறதாக இறைவனுகக்காக விட்டுக் கொடுப்போம். இறைவனுடைய சந்நிதியில் கிடைக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் பேறுபெற்றது. ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள், அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறு பெற்றவர். (திருப்பாடல்:34,8) அவன் அப்படித்தான், அவள் அப்படித்தான, மனிதனின் உள்ளத்தின் உண்மையை உணர்வுகளை அறிந்து கொள்ளாமல் பாவியிடம் தங்கப்போயிறாரே என்று தீர்ப்பிடும் கொள்கைகள் இறைவனைக் காண்பதற்கு தடையாக உள்ளதா? தவிர்ப்போம் நமது தீய எண்ணங்களை நமது உள்ளத்திலிருந்து. உங்களுக்கு ஆறுதல் வழங்குபவர் நானேதான்! மடிந்து போகும் மனிதருக்கும் புல்லென மாயும் மானிடருக்கும் நீ அஞ்சுவது ஏன்? எசாயா:51,12 இறைவா உமது இரக்கத்தின் அருளைப் பொழிந்து மனித குலத்தைக் காப்பாற்றும். இறைவா உமது இரக்கத்தின் அருளைப் பொழிந்து உலகம் முழுவதையும் காப்பாற்றும். இறைவா உமது இரக்கத்தின் அருளைப் பொழிந்து எங்களுக்கு நீர் கொடையாக தந்துள்ள ஆன்மாவை தூய்மையாய் பாதுகாத்து காப்பாற்றும். இறைவா எங்கள் அனைவருடைய பாவங்களைப் பார்த்ததும் பாராமல் இரக்கத்தின் அருளைப் பொழிந்து வாழ்நாள் முழுவதும் வழிநடத்துவதற்கு நன்றி செலுத்துகின்றோம். இறைவா நீர் எங்கள்மீது இரக்கம் கொள்வதுபோல் நாங்களும் பிறரிடம் இரக்கம் கொண்டவர்களாக வாழ்வதற்குத் துணைசெய்யும். இறைமகன் இயேசுவே உமது இரக்கத்தின் குணங்களை கொடையாகத் அளித்தருளும் இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். மத்தேயு: 5,7