இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் முப்பதாம் ஞாயிறு

"தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்"

சீராக் 35:12-14,16-18
2 திமொத்தேயு 4:6-8,16-18
லூக்கா 18:9-14

பொதுக்காலம் முப்பதாம் ஞாயிறு. இன்றைய வாசகங்கள் இறைவன் நேர்மையுள்ளவர், நீதியுடன் செயலாற்றுபவர், எல்லோர் மேலும் ஒரே உள்ளத்துடன் அன்பும் இரக்கமும் கொள்பவர், ஒருபொதும் ஒருதலைச் சார்பாக செயலாற்றுபவர் அல்ல என்று சீராக் நூலின் வழியாக இறைவன் நமக்குத் தரும் உயிருள்ள வாக்குகளாகும். எளியவர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும், புறக்கணிக்கப்பட்டோருக்கும் நேற்றும் இன்றும் என்றும் துணையாய் இருப்பவர்தான் நம்முடைய இரக்கத்தின் இறைவன். தந்தையின் திரு முகத்தைத் தாங்கி, உலக மீட்பராக, வாக்கு மனு உருவாகி நம்மிலே குடிகொண்டவரான இறைமகன் இயேசு மண்ணில் இறையாட்சிப் பணியைச் நிறைவேற்றிய பொழுது, சமுதாயத்தில் எளியவராகவும், பாவிகளாகவும், புறக்கணிக்பட்டவராகவும் வாழ்ந்தவர்களின் அழுகுரலைக் கேட்டு வாழ்வு கொடுத்தார். இயேசுவைத் தேடித் திரளான மக்கள் வந்தார்கள். அவர்கள் அனைவரும் எத்தனையோ வகையானத் துன்பங்களைத் சுமந்தவர்களாக அவர் அருகில் வந்து தாழ்மையுடன் அவருடைய உதவியைத் தேடியபொழுது அவர்களுக்கு ஆறுதலும் விடுதலையும் கிடைத்து புதுவாழ்வைத் தொடங்குவதற்கு ஒரு புதிய பாதையைத் அமைத்து தந்தார். இன்று எத்தனையோ மனித உள்ளங்கள் இறைவனின் அன்பையும் இரக்கத்தையும் சுவைக்க முடியாமல் தவிப்பதை காண்கின்றோம். எளியவருக்கும் புறக்கணிக்கப்பட்வர்களுக்கும் குரல் கொடுப்பவர்தான் நமது இறைவன்.

இரக்கத்தின் ஆண்டில் பயணிக்கும் நாம் வரிதண்டுபவரைப்போல் தொலையில் நின்று இறைவனின் இரக்கத்திற்காக மனம் கசிந்து மன்றாடுவோம். நற்செய்தி வாசகத்தில் இரண்டு வேறுபட்ட மனிதர்களைச் சந்திக்கின்றோம். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். இறைவனின் பிரசன்னத்தில் இரண்டுபேறும் வித்தியாசமான வேண்டுதல்களை எழுப்புகின்றார்கள். பரிசேயர் அவர் செய்த நற்காரியங்களைச் கூறுவதுடன், வரிதண்டுபவரைப்போல் இல்லாததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றார். வரிதண்டுபவரோ தாழ்மையுடன் பாவி என்ற நிலையை உணர்ந்து செபிக்கின்றார். இறைவனிடம் செபிக்கும் போது எப்படிபட்ட மன நிலையை நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதை இவர்கள் நமக்கு கற்பிக்கின்றார்கள். நான் பரிசேயரைப் போல் செபத்தில் இறைவனுடன் உரையாடுவதாக இருந்தால் அவற்றை முழுவதும் கைவிட்டு இன்று முதல் இப்படிப்பட்ட மன்றாட்டுக்களை நான் செபிக்கமாட்டேன் என்று உறுதி செய்வதுடன் நமது உள்ளத்திலும் எண்ணத்திலும் இருந்து அவற்றை அகற்றிவிட ஆவியானவரின் துணையை நாடுவோம்.

வரிதண்டுவோரின் உண்மை நிறைந்த செபத்தினை நாம் ஏன் கடைபிடிக்க கூடாது. இறைவன் நாம் அமர்வதையும் எழுவதையும், நினைவுகளையும், நடப்பதையும் அறிந்தவர். இறைவனுக்கும் உறவுகளுக்கும் எதிராக நாம் செய்கின்ற பாவங்களை அவர் கண்ணோக்காமல் ஆசீர்வாதங்களுக்கு மேல் ஆசீர்வாதங்களைப் கொடையாக தந்து வழிநடத்தும் இறைவனுக்கும். அவருடைய இரக்கத்திற்கும் கருணைக்கும் எவ்வளவு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். திருத்தூதர் லூக்கா நற்செய்தியில் அதிகாரம் 12, இறைவசனம் இரண்டு கூறுவது " "வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை, அறியப்படாதவாறு மறைந்திருப்பது ஒன்றும் இல்லை" என்று கூறுகின்றார். எனவே இறைவனை ஒருபோதும் நம்மால் ஏமாற்ற முடியாது. இறைவன்முன் நாம் அனைவரும் புல்லைப் போன்றவர்கள் என்பதை உணரவேண்டும். அன்றாட வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கின்ற சவால்களினால் அறிந்தும் அறியாத செய்கின்ற பாவங்களுக்காக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்போம். இறைவா நான் ஒரு பாவி என் மீது இரங்கியருளும் என்று மனம் கசிந்து உள்ளத்தின் ஆழத்திலிருந்து கண்ணீர் சிந்துவோம். இன்று நம் அனைவருக்கும் இறைவனின் அருள் நிறைந்த இரக்கம் அதிகம் தேவை. இரக்கத்தின் இறைவன் வழங்கும் உயிருள்ள வார்த்தையை நம்பி அவரிடம் செல்வோம். "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு:11,28) "உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார், நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்" (திருப்பாடல்:34,18). "கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே, கடவுளே! நொறுங்கிய குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை" (திருப்பாடல்:51,17). என்று மொழிந்த இறைவனை நாடிச் சொல்வோம்.

இறைவனுடைய இரக்கமும் கருணையும் ஆறாய் நம்மில் பொழிய வேண்டுமென்றால் உண்மையான பாவ அறிக்கை செய்ய வேண்டும். இரக்கத்தின் ஆண்டு முடியப்போகும் இவ்வேளையில் ஓர் தீர்மானம் எடுப்போம் நம்முடைய பாவங்களை ஒப்புரவு அருட்சாதனத்தின் வழியாக குருவிடம் அறிக்கையிட்டு இறைவனுடன் ஒப்புரவாகுவோம். இறைவனுடைய வார்த்தையும், திருச்சபையின் விதிமுறைகளும் நம்மை பாவத்தில் விழாமல் இருக்க உதவும் ஒப்பற்ற கேடயமாகும். இறைவனின் விருப்பத்தின்படி நமது வாழ்க்கையை பயணித்து, தாழ்மையுடன் இறைவன் முன்பு அனைத்து விண்ணப்பங்களையும் எளிய உள்ளத்துடன் சமர்ப்பிக்கும்போது நமது விண்ணப்பம் கேட்கப்படும். விவிலியத்தில் இறைவன் தான் தேர்ந்தெடுத்த மக்களின் வேண்டுதலுக்கு அவருடைய இரக்கத்தையும் அன்பையும் நேர்மையையும் உருவங்களின் உவமைகளின் வழியாக வெளிப்படுத்தி உதவுகின்றார். நேர்மையும் நீதியும் அன்பும் கருணையும் நிறைந்த இறைவனுக்கு நாம் என்றும் பிரமாணிக்கமாய் வாழ்வோம். தூய்மை நிறைந்த உள்ளத்துடன் செப உறவில் பயணிப்போம். இரக்கத்தின் ஆண்டில் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய முயற்சி செய்வோம். தாழ்மையோடு இறைவன்முன் நிற்கும்போது நமது அழுகுரல் அவரது உள்ளத்தின் முகிலைத் தொடும் என்பது உண்மை. என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும், என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். (திருப்பாடல்:19,14)