இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் இருபத்தெட்டாம் ஞாயிறு

எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது

2 அரசர்கள் 5:4-17
2 திமொத்தேயு 2:8-13
லூக்கா 17:11-19

இன்று பொதுக்காலம் இருபத்தெட்டாம் ஞாயிறு. இன்று திருப்பலியில் கேட்கப்படும் நற்செய்தியில் பத்து தொழுநோயாளர்களுக்கு இறைமகன் இயேசு குணமளிக்கின்றார் ஆனால் அவர்களுள் ஒருவர்மட்டும் திரும்பி வந்து நன்றி செலுத்துவதை திருத்தூதர் லூக்கா எடுத்துரைக்கின்றார். ஒன்பது வசனங்களையும் படிக்கும் போது பலவகையான நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றது. பத்து தொழுநோயாளர்கள் ஒற்றுமையாக இயேசுவிடம் எழுப்பிய இரக்கத்தின் அழுகுரல். இறைமகனின் அன்பும் கருணையும் இரக்கமும் கொண்ட இதயத்தை அவர்களுடைய அழுகுரல் தொடுகின்றது. உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார் என்று கூறிய இயேசுவின் வார்த்தை அவர்களுடைய வாழ்க்கையில் நிறைவேறுகின்றது. ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாய் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கின்றேன் என உறுதியாக உங்களுகுச் சொல்கிறேன் என்று கூறிய இயேசுவின் வார்த்தையும் அவர்களுடைய வாழ்க்கையில் நிறைவேறுகின்றது. இறைவனின் பிரசன்னத்தில் இருளின் வாழ்வு அழிந்து ஒளியின் வாழ்வும் அருளின் குணமும் நிறைவேறகின்றது. நானே உன்னை குணமாக்கும் இறைவன் என்றவரை அவர்கள் சந்திக்கின்றார்கள். கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள் என்றுரைத்த இயேசுவின் வார்த்தையானது பத்து தொழுநோயாளர்களின் உள்ளதின் ஆழத்தில் விசுவாசத்தின் நம்பிக்கையின் அழுகையின் குரலாக எழுகின்றது. ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும் என்ற வேண்டுதல்

பத்து தொழுநோயாளர்கள் குணம்பெறும் சம்பவத்தில். முதலாவதாக இறைமகனிடம் இரக்கத்திற்காக குழுமமாக வேண்டுதல் செய்ய முயற்சி எடுத்தது. அவர்கள் இயேசுவின் வல்ல செயல்களையும், குணமளிக்கும் ஆற்றலையும், பெருந்திரளான மக்கள் அவரைப் பின் தொடர்கின்ற புகழையும் அறிந்திருக்கலாம். அவர் நம்மை குணமாக்க முடியும் என்று நம்பி தூரத்தில் நின்று கொண்டே கூப்பிடுகின்றார்கள். தொழுநோயாளர்கள் என்பதால் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாய் இருந்தபோதிலும் சமாரியப் பகுதிகள் வழியாக இயேசு வருகிறார் என்பதை அறிந்தவுடன் அவருடைய இரக்கப் பார்வை அவர்கள் மேல் இரங்கிவர வேண்டுமென்று தூரத்தில் நின்று ஏக்கத்தோடும், கலங்கிய கண்களுடனும், பதற்றமுடனும், சமுதாயம் என்ன சொல்லுமோ என்ற பயத்துடனும் இயேசு நம்மை குணப்படுத்துவார் என்ற நம்பிக்கையுடன் நின்ற ஒதுக்கப்பட்ட சிறு சமுதாயத்திற்கு அவர் கூறிய பதில் நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள் என்று கூறுகின்றார். அவர்கள் குருவைக் காணப் போகும் வழியிலே குணம் பெறுகின்றார்கள். இந்த சமபவம் நமக்கு சிறந்த ஒரு பாடத்தைக் கற்பிக்கின்றது எனலாம். பத்து தொழுநோயாளர்களில் ஒருவராக நான் பாவம் என்னும் தொழுநோய் சுமையைச் சுமந்து கொண்டு வாழ்கின்ற நேரத்தில், இறைவனின் மன்னிப்பும் இரக்கமும் தேடி வாழ்க்கை கட்டத்தின் ஓரத்தில் தனிமையாக இறைவனை நோக்கி எழுப்பும் மனமாற்றத்தின் கண்ணீராக அமையட்டுமே, இரக்கம் நிறைந்த இறைவா என்மீது மனம் இரங்கும் என்ற ஓர் ஆழமான விருப்பமாக இருக்கட்டுமே. இன்று நாம் பலவகையானப் பாவம் என்னும் தொழுநோயால் துவண்டு துடித்துக் கொண்டிருக்கின்றோம். நன்மை எது, தீமை எது என்று தேர்ந்தெடுக்க முடியாத உலகத்தில் பயணிக்கின்றோம். எத்தனையோ உள்ளங்கள் இறைவனின் அருளை இழந்து தவிக்கின்றது, இறைவன் என்னை மன்னிப்பாரா? இறைவன் எனது பாவ வழியிலிருந்து என்னை விடுவிப்பாரா? என்ற பல்வேறுபட்ட எண்ணங்கள் ஓடலாம். பலவகையான குற்றத்தினால் நமது உள்ளம் கலக்கமுற்று பாவச்சுமையுடன் பலநாட்களைக் கடந்து சென்றாலும் வருத்தப்படத் தேவையில்லை. இறைவன் நம்முடைய மனம் மாற்றத்திற்காக என்றுமே காத்துக்கொண்டிருப்பவர். நானே உன்னை குணமாக்கும் இறைவன் என்று கூறியவரிடம் சென்று தொழுநோய் என்னும் நமது பாவச் சுமையை இறக்கி வைப்போம். "அவரோ நம் குற்றங்களுக்காக காயமடைந்தவர் நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார். அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். ஆடுகளைப் போல் நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம் நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம், ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார் "(எசாயா:53:5-6) அவர்தான் இறைமகன் இயேசு கிறிஸ்து. அளவிட முடியாத அன்பும், இரக்கமும் கொண்டவர்தான் நமது இறைவன். அவருடைய இரக்கத்தின் அருள்மழை நம்மீது பொழிய வேண்டுமென்றால், நமது பாவங்களை இறைவனிடம் முழுமையாக சமர்ப்பித்து ஒப்புரவு என்னும் அருட்சாதனத்தின் வழியாக குருவிடம் அறிக்கையிட வேண்டும். மனம் மாற்றம் பெற்று இறைவனில் ஒப்புரவாகி குணம்பெற்ற ஒரு சமாரியரைப் போல் சுகம் பெற்று இறைவனைப் போற்றி புகழ்ந்து நன்றி செலுத்த அவருடைய பிரசன்னத்தில் சரணடைவோம்.

தாவீது அரசர் தான் செய்த குற்றத்திற்காக இறைவனிடம் மன்றாடிய அதே திருப்பாடல் 51ல் உள்ள இறைவார்த்தைகளை பக்தியுடன் தியானித்து, இறைவா ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும் நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும் உறைபனியிலும் வெண்மையாவேன் என்ற இறைவனின் வார்த்தையின் மீது நம்பிக்கை கொண்டு முழுமையாக நம்மை குணப்படுத்த வல்லமைமிக்க இறைவனை நோக்கி ஐயா தாவீதின் மகனே என்மீது இரங்கும் என்று மன்றாடுவோம். இறைவன் நமது அன்றாட வாழ்க்கைப் பயணத்தில் நமக்குப் பொழிகின்ற அருள் வாழ்விற்கும், பொருளாதார வளத்திற்கும், மனம் உடல் நலத்திற்காகவும் நன்றி கூறுவோம். குடும்ப சுமையால், வேளை களைப்பால், நோய் சுமையால், பொருளாதார சுமையால், கடன் சுமையால், பாவச் சுமையால், மனம் தளர்ந்து போனவர்களாகிய நமக்கு அவர் வழங்கும் வாழ்வு தரும் வார்த்தை என்னெவென்றால் ' மலைகள் நிலைசாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது கொண்ட பேரன்போ நிலை சாயாது. என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர். (எசாயா:54,10) அவருடைய உறுதிதரும் வார்த்தையை நம்பி வாழ்வில் இறைவனின் வலக்கரத்தைப்பற்றி மனம் மாற்றம் பெற்ற மகனாக மகளாக முன்னோக்கிச் செல்வோம்.