இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் இருபத்தேழாம் ஞாயிறு

எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்

அபகூக்கு 1:2-3,2:2-4
2 திமொத்தேயு 1:6-8,13-14
லூக்கா:17:5-10

பொதுக்காலம் இருபத்தேழாம் ஞாயிறு. இன்றைய நற்செய்தியில் இயேசுவின் திருத்தூதர்கள் அவர்களுடைய நம்பிக்கையை மிகுதியாக்கும்படி கேட்கின்றார்கள். இன்றைய இருளின் காலக்கட்டத்தில் நாம் அனைவரும் இறைவனை நோக்கி எழுப்ப வேண்டிய உன்னத செபம்தான்ஊ 'எங்களுடைய நம்பிக்கையை மிகுதியாக்கும்' ' என்பது. இன்றைய காலக்கட்டத்தில் மனிதன் இறைவன்மீது நம்பிக்கை வைப்பதைவிட பணம், பதவி, மனிதன், நவீனப் பொருட்கள், மது, போதைப் பொருட்கள் மீது நம்பிக்கை கொண்டு அழிவின் பாதையில் பயணிப்பதை காண்கின்றோம். உலகில் நடக்கின்ற மனித நேயத்திற்கு எதிரான செயல்களை காண்கின்ற போது மனித உள்ளத்தில் எழுகின்ற வேண்டுகோள்தான் எங்களுடைய நம்பிக்கையை மிகுதியாக்கும் இறைவா என்ற அழுகுரல். இன்று மேலைநாடுகளில் கிறிஸ்துவ சமூதாயத்தில் நம்பிக்கை, விசுவாசம் குறைந்து கொண்டு போகின்ற நிலையைக் காண்கின்றோம். மனிதன் தன்னுடைய வாழ்வில் அளவிடமுடியாத துன்பம் துயரங்களை எதிர்கொள்ளும் போது நம்பிக்கையை இழந்துவிடுகின்றான். மற்றவர்களிடத்தில் தீயவழிகளை பயன்படுத்தி நம்பிக்கை அடைகின்றான் ஆனால் அது ஒருபோதும் நிலைக்காது. இறைவன்மேல் கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையினாலும் விசுவாசத்தினாலும் கடந்து சென்ற ஆண்டுகளில் சமயத்தின் பெயரில் நடந்த பயங்கரவாதம் என்ற தீச்செயல்களால் எத்தனையோ உள்ளங்கள் கொடூரச்செயல்களை ஏற்றுக் கொண்டு தங்களுடைய வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணித்திருக்கின்றார்கள் என்பதை சமூக ஊடகங்களின் வழியாக கண்டோம். இன்று நமக்கு அப்படிபட்ட ஓர் நிலை ஏற்பட்டால் இறைவன்பால் கொண்டுள்ள நம்முடைய விசுவாசமும் நம்பிக்கையும் நம்முடைய வாழ்வை இறைவனுக்காக அர்ப்பணிக்கத் தயாராக இருப்போமா? சிந்திப்போம்.

நம்பிக்கை இறைவனின் அருள் நிறைந்த கொடையாகும். திருவிலியத்தில் இறைவனால் அழைக்கபட்டவர்களின் வாழ்க்கையில் இறைவனின் அருள் அடையாளங்களைப் பெற்று அவருடைய நேசமுள்ள மக்களாக மாற்றம் அடைந்தது வாழ்வில் அனைத்து ஆசீர்களையும் பெற்றார்கள். ஏபிரேயருக்கு எழுதிய திருமுகத்தில் காண்பது நம்பிக்கை என்பது நாம் எதிர் நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி, கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை, நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்ப வேண்டும்.(எபிரேயர்:11,1,6) விசுவாசதின் தந்தையான ஆபிரகாம் தனது முதிர்ந்த வயதில் இறைவனால் கொடையாக கொடுக்கப்பட்ட ஓரே மகன் ஈசாக்கை மோரியா நிலப்பகுதியில் யாவேயிரே என்ற இடத்தில் பலியிட துணிந்தார். "மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்" என்ற ஆழமான நம்பிக்கை அவரிலே காணப்பட்டது. இறைவன் அவருக்கு தரும் ஆசீகள் தான் விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப்போலவும் உன் வழிமரபைப் பலுகிப்பெருகச் செய்வேன். உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழி மரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர் என்றார். இறைவன் மோசேயை நோக்கி ' கோலை உயர்த்திப் பிடித்தவாறு உன்கையைக் கடல்மேல் நீட்டி அதனை பிரித்துவிடு என்று கூறிய போது அவருடைய வார்த்தையை நம்பினார். மோசே இறைவனிடம் கொண்ட நம்பிக்கையினால்தான் இஸ்ரயேல் மக்களிடம் இவ்வாறு கூறுகிறார். அஞ்சாதீர்கள் ! நிலைகுலையாதீர்கள் இன்று ஆண்டவர்தாமே உங்களுக்குகாக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரைக் இனிமேல் என்றுமே காணப்போவதில்லை. ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார். நீங்கள் அமைதியாய் இருங்கள். நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில், குடும்ப சூழ்நிலையில், சமுதாயத்தில், தனி வாழ்வில் பலவகையான சவால்களை சந்திக்கின்ற வேளையில், அவற்றை ஏற்றுக் கொள்ளும்விதம் எப்படிபட்டதாக உள்ளது என்று சிந்திப்போம். இறைவன் என் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்வார் என்று கூறிய ஆபிரகாமின் நம்பிக்கையைப்போலும். அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள், ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார் என்று கூறிய மோசேயைப் போல் நம்பிக்கை உள்ளவர்களாக வாழ்கின்றோமா?

இறைமகன் இயேசுவின் அற்புதங்களைக் கண்டு பெருந்திரளான மக்கள் நம்பிக்கையோடு அவரைப் பின் தொடர்ந்தார்கள். நம்பியவர்கள் குணம் பெற்றார்கள். அன்னை மரியாள் தூதரின் நற்செய்தியை நம்பி இறைமகனை உலகமீட்பராக உலகிற்கு கொணர்ந்தார். பன்னிரண்டு சீடர்களில் ஒருவர் இயேசு உயிர்த்தெழுந்த போது திருத்தூதர் தாமஸ் இல்லை ஆனால் இயேசு அவர் சமூகத்தில் பிரசன்னமானபோது அவரிடம் கூறுவது ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள். நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர். பேறுபெற்றோர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேறிய அதியங்களும் அற்புதங்களும் இன்றும் நம்புவோர்களின் வாழ்வில் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. நீ நம்பினால் என் மாட்சியைக் காண்பாய் என்று மார்த்தாவிடம் அன்று சொன்ன வல்லமை நிறைந்த இம்மானுவேலாகிய இறைவன் நம்மோடு பயணிக்கின்றார் என்பதை உள்ளத்தின் ஆழத்தில் நம்புவோம். அவருடைய அன்பின் பிரசன்னத்தை உணர்வோம் நம்புவோம். அவர் நம்மை ஒருபோதும் திக்கற்றவர்களாக விடமாட்டார். இறைவன் நமக்குக் கோழையுள்ளத்தனை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தை வழங்கியுள்ளார். நம்புவோம் இறைவனில் மகிழ்ச்சி கொள்வோம். மனிதனை நம்பி தோல்வி பெறுவதைவிட இறைவனை நம்பி வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்.