இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் இருபத்தாறாம் ஞாயிறு

விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு

ஆமோஸ் 6 1.3-7
1 திமொத்தேயு 6: 11-16
லூக்கா:16:19-31

பொதுக்காலத்தின் இருபத்தாறாம் ஞாயிற்றுக்கிழமையில் பயணம் செய்கின்றோம். இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக இறைவன் இன்பத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்பவர்களை ஐயோ கேடு என்று கடுமையாக சபிக்கின்றார். கடவுளின் மனிதனாகிய நீ, பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடு. விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் நிலை வாழ்வைப் பற்றிக்கொள் என்று திருத்தூதர் பவுல் கூறுகின்றார். எளிமையும், தாழ்மையும், இறைபற்றும், விசுவாசமும் நிறைந்த வாழ்வு வாழ்வதற்கு நம்மை அழைக்கின்றார். "அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காக உழையுங்கள் என்று இயேசு கூறுகின்றார் ".( யோவான்:6:27) இறைவனின் அன்பு மக்களாகிய நம்மிடம் அவர் விரும்புவது பொருள் ஆசையிலிருந்து தப்பி ஓடுங்கள், மன ஊறுதியுடனும் பணிவோடும், நீதிக்காகவும், இறைபற்றுக்காகவும், விசுவாச வாழ்வுக்காகவும் போராட அழைக்கின்றார். இன்று விசுவாச வாழ்விற்காக எப்படி போராடுகின்றோம், இறைபற்றுடன் வாழ்வதற்கு என்ன வழியைத் தேடுகின்றோம். செல்வத்தைத் தேட இரவும் பகலும் ஓடிக் கொண்டே இருக்கின்றோம், உழைக்கின்றோம் ஆனால் நம்மில் பலர் ஞாயிறு திருப்பலிக்குச் செல்லக்கூட நேரம் இல்லாமல் வாழ்கின்றோம். செல்வம் தேவைதான் ஆனால் நமது குடும்பங்கள் இறைஅருள் நிறைந்த குடும்பமாக மாறவேண்டும். விசுவாச வாழ்வில் நிலைக்க வேண்டுமென்றால் ஒவ்வொரு நிமிடமும் இறைவனுடன் குடும்பமாக பயணிக்க வேண்டும். தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன் என்று கூறிய இறைவன் நம்மோடு என்றும் வாழ்கின்றார் என்பதை நம்ப வேண்டும். இறைவனுடைய வார்த்தை நம்முடைய வாழ்க்கை பாதைக்கு விளக்காவும் ஒளியாகவும் இருக்க வேண்டும். இரண்டாம் வாசகத்தில் இன்று இறைவன் தரும் நற்செய்தி நீதி, இறைபற்று, மன உறுதி, பணிவு ஆகிய பண்புகளால் நமது விசுவாச வாழ்வைக் கட்டி எழுப்ப வேண்டுமென்று ஆசீக்கின்றார். அரசருக்கெல்லாம் அரசராக விளங்கும் ஆண்டவராகிய இயேசுவை விசுவசித்து அவரை உளமார நேசிப்போம்.

அன்னை மரியாள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இறைவனின் அழைப்புக்கு இதோ! உமது அடிமை என்று பணிவுடன் பதில் கூறி இறுதிமட்டும், இறைவன் விரும்புகின்றபடி வாழ்ந்து உன்னத நிலையை அடைந்தார். அன்னைமரியாள் தனது வாழ்த்துரைப்பாடலில் "தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார், செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார் "என்று பாடுகிறார். இறைமகன் இயேசு மலைப்பொழிவு மறையுரையில் "ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது ' என்று கூறகிறார். நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர் என்றும், செல்வர் விண்ணரசில் புகுவது கடினம் என நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். மீண்டும் இயேசு கூறுகிறார், செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது என்று நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு, நான் என்ன நன்மை செய்ய வேண்டும் என்று கேட்ட ஒருவரிடம் இயேசு கூறிய பதிலாகும்.(மத்தேயு:19:16-24)

நான் நேற்றைய தினம் நான் வசிக்கும் சிறுகிராமத்தில் காரில் பயணம் செய்தபோது போக்குவரத்து சைகை விளக்கு உள்ள இடத்தில் நின்ற போது, எனக்கு இடது பக்கத்தில் இரண்டு இளைஞர்கள் தங்களது காரில் அதிக சப்தமாக பாடலை கேட்டுக் கொண்டு இருந்தனர். என்னை கண்டதும் உரக்க கத்தினார்கள் ஆனால் அது என்னெவென்று எனக்குப் புரியவில்லை. நான் அவர்களைத் திரும்பி பார்த்தபோது அவர்கள் ஒன்றும் கூறவில்லை. ஆனால் அவர்கள் பிறகு மிகவும் சப்தமாக "பாவிகள்! அல்லா பெரியவர் ' zondaars Allha is groot" என்று நெதர்லாந்து மொழியில் மிகவும் சப்தமாக செல்லிவிட்டு சென்றனர். அந்தவார்த்தைகள் என்மனதின் ஆழத்தில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. பாவிகள் என்ற ஒரு வார்த்தை நான் ஒருபாவி என்ற உண்மையை பணிவோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை எனக்கு விளக்கியது இந்த சம்பவம். அதோடு அவர்கள் அவர்களுடைய இறைவன்மேல் கொண்ட ஆழமான விசுவாசம். என்னுடைய விசுவாசம் ஆழமானதா? அல்லது மணல்மேல் வீடுகட்டியவர் போல் உள்ளதா? என்ளை சிந்திக்க வைத்தது. பாவிகளை நேசிக்க வந்த இறைவன்மீது அதிக பற்றுள்ளவனாக இருக்க வேண்டும், இறைவனுடைய நீதியையும் இரக்கத்தையும் பெற்று விசுவாசத்தில் மன உறுதியுடன் போராடி நிஜம் வாழ்வான நிலை வாழ்வுக்கு என்னை தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னில் தோன்றியது.

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரத்தரம் என்ற பாடலை அடிக்கடி நமது வழிபாடுகளில் பாடுவதுண்டு அதில் வருகின்ற வார்த்தைகள் சிந்திப்போம். செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்- பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம் - நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம். நற்செய்தி உரைப்பது மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாகிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?. ஆம் உலகச் செல்வத்தினால் இறைவனுடைய உறவையும் நிலை வாழ்வையும் விலை கொடுத்து வாங்கமுடியாது என்று செல்வந்தரின் வாழ்க்கையும் ஏழை இலாசரின் வாழ்க்கையும் விளக்குகின்றது. இறைவன் நமக்கு கொடையாக கொடுக்கின்ற செல்வங்களையும் நலன்களையும் பிறருடன் பகிர்ந்து வாழ்ந்து அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ துணைபுரிவோம். இரக்கத்தின் இறைவா உம்மைப்போல் பணிவுடன் வாழ எங்களை ஆசீர்வதியும்.