இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் இருபத்தி ஐந்தாம் ஞாயிறு

அனைவருக்காகவும் மன்றாடுங்கள்: இறைவனிடம் வேண்டுங்கள்

ஆமோஸ் 8:4-7
1 திமொத்தேயு 2:1-8
லூக்கா 16:1-13

பொதுக்காலம் இருபத்தி ஐந்தாம் ஞாயிறு. இன்று திருப்பலி இறைவாசகங்களின் வழியாக இறைவன் நம் அனைவரிடம் விரும்புவது மிகச் சிறியவற்றில் நேர்மையாகவும், முன்மதியுடன் செயல்படவும், இறைவனுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது என்று நற்செய்தியின் வழியாக எடுத்துரைக்கின்றார். நேர்மையுள்ளவர்களாகவும், முன்மதியுள்ளவர்களாகவும் வாழ்வதற்கு இறைவனுடைய ஞானமும் அருளும் அறிவும், தூய ஆவியானவரின் வழிநடத்தலும் மிகவும் அவசியமானது. இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் செப உறவைப்பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். இறைவனிடம் வேண்டுங்கள், அனைவருக்காகவும் மன்றாடுங்கள், பரிந்து பேசுங்கள், நன்றி செலுத்துங்கள். இறைபற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும் உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள் என்று காண்கின்றோம். இன்று சமூக ஊடகங்களின் வழியாக காண்பது வெறுப்பு, பகைமை, வன்முறைகள், கொலை, பயங்கரவாதம், சிரியா நாட்டில் நடக்கும் யுத்தம்.அகதிகள் உடமைகளையும் உறவுகளையும் இழந்து கண்கலங்கி தவிக்கும் அவலம், குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களை இழந்து தவிக்கும் தனிமை, கடந்த நாட்களில் தண்ணீருக்காக இரண்டு மாநிலத்தில் நடக்கும் வன்முறைகள், போராட்டங்கள். மனிதநேயத்திற்கு எதிராக நடக்கும் அவமானம் நிறைந்த செயல்களை ஊடகங்கள் வழியாகக் கண்டோம். இருளின் செயல்கள் அனைத்தும் அழிவைத்தான் கொண்டுவரும். ஒளியின் செயல்கள் வாழ்வைக் கொண்டுவரும். இறைவன் பாவிகள்மீதும், நேர்மையாளர்கள்மீதும் ஒரே நேரத்தில் மழையைப் பொழிகின்றார். பாவிகளாகிய நாம் அனைவரும் ஏன் மனம் மாற்றம் பெற தயங்குகின்றோம். அன்பே உறைவிடமாக இறைவன் உருவில் படைக்கப்பட்ட நாம் ஏன் அவரைப்போல் வாழமுடியவில்லை, சிந்திப்போம். இன்று சுதந்திரமாக வாழ வேண்டிய மனிதனுடைய வாழ்க்கையே ஒரு கேள்விக் குறியாக உள்ளது. நிலை வாழ்வு மட்டும் தான் நமக்கு நிலையானது. இறைவன் முன்னிலையில் நாம் தனியாக நிற்க வேண்டிய நேரம் வரும் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

இறைவனின் படைப்புக்கள் மனிதனின் சுயநலத்தினால் அழிந்து கொண்டிருக்கும் நிலை. அனு ஆயுதங்களினால் ஏழை எளியவரின் உறைவிடங்களை அழிப்பது. பயங்கரவாத்தால் கள்ளமற்ற மக்களை அழிப்பது, நாட்டுத்தலைவர்கள், அரசியல் வாதிகள், உயர் பதவியில் உள்ளவர்கள் பதவிக்கும், பணத்துக்கும், புகழுக்கும் வாழுகின்ற அவலம். குடும்பத்தில்தான் எத்தனை குழப்பங்கள் கடன் பிரச்சனைகள், அமைதியில்லை, வரதட்சிணை கொடுமைகள், விவாகரத்து கொடுமைகள், பணம் பணம் என்று ஒய்வு இல்லாமல் உழைக்கின்ற மனித உள்ளங்கள். குடும்ப செபம் இல்லாமல், தொலைக் காட்சிகளில் தொடர் சீரியல் காணும் நிலை, ஆடம்பர வாழ்க்கையில் இன்பம் காணும் மனித உள்ளங்கள். இறைவாக்கினர் ஆமொஸ் உரைப்பதுபோல் ஏழை எளியவர்களை அடிமைகளாக நடத்தும் செல்வர்களை இன்றும் நமது சமுதாயத்தில் காண்கின்றோம். இப்படிபட்ட சமூக தீமைகளை நீக்க இறைவன் ஒருவரால் மட்டும்தான் முடியும். இறைவனுக்கும் மனிதருருக்கும் இடையே இணைப்பாளராக இருந்து நமக்காக என்றும் பரிந்து பேசுபவர்தான் இறைமகன் இயேசு கிறிஸ்து. இறைமகன் இயேசு உலகில் மனிதராக வாழ்ந்த போது தந்தையிடம் பலமுறை செப உறவில் உரையாடினார். இறைவனுடைய திட்டத்தை வாழ்வில் அறிய இரவெல்லாம் செபத்தில் செலவழித்தார். சிலுவையில் தொங்கிய போதும் பிறருக்காக பரிந்துரை செய்கின்றார். ஏன் நீங்களும் நானும் இன்று சமூக தீமைகளை அழிப்பதற்கு செபம் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்து இறைவனிடத்தில் அனுதினமும் பரிந்துரை செய்யக் கூடாது.

பிறருக்காக இறைவனிடம் பரிந்துரை செய்ய வேண்டிய செபக் கருத்துகள் தூய்மையான உள்ளத்துடன் கருணையும் இரக்கமும் நிறைந்த இறைவனிடம் குரல் எழுப்புவோம் - உலக அமைதிக்காக சிறப்பாக சிரியா நாட்டில் அமைதி மீண்டும் நிலவ மன்றாடவும் - வன்முறைகள், பயங்கர வாதம் நீங்கவும் - சமுதாயத்தில் நிலவும் சமூக தீமைகள் நீங்கவும் - மனித உள்ளங்கள் அன்பிலும், மன்னிப்பிலும், பகிர்விலும் வளரவும் - இளம் உள்ளங்கள் ஞானத்திலும் விசுவாசத்திலும் வளரவும் - அனைத்து குடும்பங்களிலும் சமாதானம் நிலவ மன்றாடவும் - இறைவார்த்தையின் வழியாக இறைவனின் ஞானத்தையும், தூய ஆவியானவரால் இளம் உள்ளங்கள் அனைவரும் அபிசேகம் பெறவும். - குடி பழக்கத்திற்கும், போதைப் பொருட்களுக்கும் அடிமையாகி தன்னையே அழித்துக் கொண்டிருப்பவர்கள் மனம் மாற்றம் பெறுவும். - நோயுற்றோர், மன அழுத்தம், தனிமை போன்ற தீய சக்திகளை எதிர் கொள்ளும் உள்ளங்களுக்கு ஆறுதல் தரவும். - பணத்தை மையமாக்கி திருமண பந்தத்திலிருந்து விலகி வாழும் தம்பதியர்கள் இணைந்து நல்ல இறைக்குடும்பமாக வாழ்வும்.

இன்று இந்த மறையுரையை வாசிக்கும் நல்ல உள்ளங்கள் இங்கு தரப்பட்டுள்ள எதாவது ஒரு மன்றாட்டுக்காக இடைவிடாது செபிக்கவும். கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும்: தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள், தட்டுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் என்று மொழிந்த மீட்பரிடம் பரிந்துரை செய்வோம். உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்று மொழிந்த இறைஇயேசுவின் உயிருள்ள வார்த்தையை நம்பி உலகம் காட்டும் தீய வழிகளையும், அழிவுக்கு இட்டுச் செல்லும் பாதைகளை விட்டு விலகி வாழ்வுக்கு வழிகாட்டும் பாதையைில் பயணம் செய்து சிறிய காரியங்களில் நேர்மையோடும் முன்மதியோடும் வாழவும், இறைவனுக்கும் செலவத்துக்கும் ஓரே நேரத்தில் பணிவிடை செய்ய முடியாது என்பதை உணர்ந்து வாழ வேண்டும் என்று ஒருவருக்கொருவர் இறைவனிடம் பரிந்துரை செபம் செய்து இனிவரும் நாட்களை பயனுள்ளதாக முன்மதியுடன் செயலாற்ற இறைவனுடன் பயணிப்போம். நாம் எத்தனை பாவிகளாயிருந்தும். நமது தவற்றை மன்னித்து இரக்கம் காட்டி அனுதினமும் ஆசீர்வாதங்களைப் பொழியும் இரக்கத்தின் தந்தையாம் இறைவனுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கூறுவோம். அவர் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன், அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன். அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன். திருப்பாடல் 91,15