இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் இருபத்திநான்காம் ஞாயிறு

மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும்

விடுதலை பயண நூல் 32:7-11.13-14
1 திமொத்தேயு 1:12-17
லூக்கா 15:1-32

பொதுக்காலம் இருபத்திநான்காம் ஞாயிறு. இன்றைய இறைவாசகங்கள் மூன்றும், இறைவன் என்றும் மாறாதவர், பாவிகளைத் தேடுபவர், மன்னிப்பவர், என்றும் இரக்கம் உள்ளவர், வாழ்வு தருபவர், யாரையும் தீர்ப்பிடாதவர். காணாமற் போன ஆட்டினை கண்டுபிடிக்கும் வரை தேடிச் செல்பவர். மனம் மாறிய பாவியைக் குறித்து விண்ணுலகில் மகிழ்பவர் என்று இரக்கத்தின் தந்தையாம் நமது இறைவனைப்பற்றி கூறுகின்றது. இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றுரைத்த மூதாதையரின் இறைவன் இஸ்ரயேல் மக்கள் எழுப்பும் அழுகுரலையும், அவர்களின் துயரங்களையும் அறிந்து, அவர்களை எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை இறைவாக்கினர் மோசே வழியாக பார்வோனின் முன் அற்புதங்களும் அடையாளங்களும் நிறைவேற்றி அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, பாலும் தேனும் பொழியும் கானா நாட்டிற்கு அழைத்துச் செல்ல இரக்கம் கொண்டவர். பாலைவனத்தில் அவர்களை வழிநடத்த பகலில் மேகத்தூணாகவும், இரவில் ஒளிகாட்ட நெருப்புத் தூணாகவும் இருந்து வழிநடத்தியவர், ஓரேபில் உள்ள பாறையின் முன்நின்று தண்ணீர் வரச் செய்து அவர்களுடைய தாகத்தை தனித்தவர். பாலைநிலத்தில் மன்னா என்னும் அப்பத்தை வானத்திலிருந்து பொழிந்து மக்களின் பசியைப் போக்கியவர். செங்கடலைக் இரண்டாகப் பிரித்து பாதை அமைத்துக் கொடுத்தவர். ஆயினும் இஸ்ரயேல் மக்கள் இறைவனின் நெறியிலிருந்து விலகி தங்களுக்கென்று ஒரு கன்றுக் குட்டியை வார்த்து அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, அதுதான் உண்மையான இறைவன் அவர்களை அடிமைதனத்திலிருந்து விடுவித்து பாலைவனத்தில் வழிநடத்தியவர் என்று நம்பி அவரை வழிபட்டனர். இறைவன் அவர்களைப்பற்றி நன்கு அறிந்தவராய் இருக்கின்றபடியால் அவர் மேசேயிடம் வணங்காக்கழுத்துள்ள மக்கள் என்று கூறுகின்றார். இஸ்ரயேல் மக்கள் பலமுறை இறைவனுக்கு எதிராக முறுமுறுத்தது போல் இம்முறையும் முறுமுறுத்தனர் ஆனால் மோசே இறைவனிடம் தம் மக்களுக்காக பரிந்துரை செய்யும்போது இறைவனின் தனது கோபத்தை அகற்றுகின்றார். நாம் அனைவரும் பாவம் என்னும் அடிமைத்தனத்தில் அகப்பட்டு தனக்கென்று வழிபட பாவம் என்னும் தெய்வங்களை தேர்ந்தெடுத்துக் கெண்டு அவற்றில் நம்பிக்கை கொண்டு அதனை வழிபட்டு வருகின்றோம். மோசே அன்று இஸ்ரயேல் மக்களுக்கா இறைவனிடம் மன்றாடியது போல் இன்றும் எத்தனையோ தாய் தகப்பன்மார்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கா கண்ணீர் வடித்து இறைவனிடம் செபிக்கின்றார்கள். பாவம் என்னும் சிறிய பெரிய கன்றுக் குட்டிகளை வணங்காமல் இருக்க நமக்காகவும் நமது உறவினர்கள், நண்பர்களுக்காகவும் இறைவனிடம் பரிந்துரை செய்வோம். நாள்முழுவதும் ஆற்றலோடும் வலிமைமிகு கரத்தோடும் கருணையுடன் கண்ணின்மணிபோல் நம்மை வழிநடத்தும் இறைவனுக்கு பிரமாணிக்கமாய் வாழ்வோம்.

இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் தன்னை பாவிகளுள் முதன்மையான பாவி என்று வெளிப்படையாக ஏற்றுக் கொள்கின்றார். அவர் செய்த பாவச் செயல்களை வெளிப்படையாக அறிக்கையிடுகின்றார். நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன். அவர் கடவுளின் அருளால்தான் திருத்தூதர் நிலையில் உள்ளார் என்றும் இறைவன் அவருக்கு இரங்கினார் என்றும் கூறுகின்றார். பாவிகளை மீட்கத்தான் கிறிஸ்து இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்று ஆணித்தரமாக கூறுகின்றார். எனவே நமது பாவச் செயல்களை இறைவனின் பிரசன்னத்தில் உண்மையாக அறிக்கையிட்டு சமர்ப்பிக்கும் போது இறைவனின் அருளால் நிறையப் பெறுகின்றோம். நம்முடைய அன்றாட வாழக்கைப் பயணத்தில் இறைவனுக்கு எதிராகச் செய்யும் பாவச் செயல்களை கைவிட்டு இறைவனின் அருளைப் பெற மனம் மாறுவோம். உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்: நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார் என்று (திருப்பாடல் 34,18) இறைவசனத்தில் காண்கின்றோம். இரக்கத்தின் ஆண்டில் இறைவனின் இரக்கத்தைப் பெற தாமதமாக்க வேண்டாம்.

நற்செய்தி வழங்கும் மூன்று உவமைகளின் வழியாக இறைவன் நமக்கு கூறும் உண்மையானது. ஒருபாவி மனம் மாறும்போது விண்ணுலகிலும், கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என்றும். காணமற் போனதைக் கண்டுபிடித்த போது மகிழ்ச்சி உண்டாகும் என்பதை விளக்குகின்றது. இறைமகன் இயேசுவிடம் நெருங்கி வந்தவர்கள் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் என்று கூறுவதுடன் அவர்களை வரவேற்று உணவருந்தினார் என்றும் காண்கின்றோம். காணாமற் போன ஆட்டினைத் தேடித்தானே நல்ல ஆயன் செல்லுகின்றார். நாம் வாழ்வைப் பெறும்பொருட்டு, அது நிறைவாகப் பெறும் பொருட்டு வந்தவர்தான் நமது ஆண்டவர். திருமுழுக்கு யோவான் எனக்குப் பின் வருபவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் திருமுழுக்கு கொடுப்பார் என்று இயேசுவைப் பற்றி கூறுகின்றார். காணாமற் போன மகனைப் போல் தங்களுடைய தவறுகளை, பாவங்களை இறைவன் முன்பாக அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து ஆன்மாவாகிய நமது உள்ளத்தை ஆவியானவரின் துணைகொண்டு ஆய்வு செய்து அவற்றை இறைவன் கரத்தில் ஒப்புகொடுத்து நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து இறைவன் உறவில் மகிழ்ச்சியுடன் பங்குபெறுவோம். மனம் மாறத் தேவையில்லாதத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழச்சியைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்ற இறைவார்த்தையை நம்பி ஏன் நான் ஒரு மனம் மாறிய பாவியாக மாற்றம் அடைந்து, இருளின் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு இறைவன் வழங்கும் அருளின் வாழ்வை ஏற்று புதிய மனிதனாக மாறக்கூடாது. ஏனெனில் கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை. இறைமகன் இயேசு சொல்வதைக் கேட்க நெருங்கிச் செல்வோம், வாழ்வு பெறுவோம்.