இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் பதிநான்காம் ஞாயிறு

"அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவு, புறப்படுங்கள்"

எசாயா 66:10-14
கலாத்தியர் 6:14-18
லூக்கா 10: 1-12,17-20

இன்று பொதுக்காலம் பதிநான்காம் ஞாயிறு. இன்றைய இறைவாசகங்களின் வழியாக இறைவன் நமக்கு கூறுவது அவருடைய ஆறுதல் மொழிகள், இறையாட்சிப் பணிக்காக தன்னை அர்ப்பணிக்கும் உள்ளங்களுக்கு அவர் காட்டுகின்ற வழிமுறைகள், விதிமுறைகள், ஆறுதல் மொழிகள் இறைவனின் பணியை செய்யும்போது அனுபவிக்கின்ற அமைதி, மகிழ்ச்சி, வெற்றி, இடர்கள், அருள் போன்ற ஆழமான மையக்கருத்தினை முன்வைக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் நமக்கு கூறும் ஆறுதல் மொழிகள் "ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன், மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள், மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன் என்று ஆழமான அர்த்தமுள்ள வார்த்தைகளை வாசித்து தியானிக்கும் போது ஒருபுறம் மனஆறுதலும் மற்றொரு புறம் கேள்விக்குறியாகவே உள்ளது.

இன்று உலக நாடுகளில் நடக்கும் தீமையின் சக்திகள் ஏராளம். பயங்கரவாதம், வன்முறைகள், யுத்தங்கள், இறைவன்மேல் நம்பிக்கையின்மை, இறைவிசுவாசம் குறைந்து காணப்படும் சமூகம். செய்திதாள்களிலும், சமூக ஊடகங்களின் வாயிலாக காணப்படும் கொடுமைகள், அநீதிகள், அக்கிரமங்கள், அகதிகள் தங்களுடைய குழந்தைகளையும், தங்களுக்குத் தேவையான உடமைகளும் இல்லாமல் தரைப் பயணமாகவும், கடல்பயணமாகவும் சொந்த நாட்டை விட்டு ஓடிவருகின்ற அவலநிலை, இளம் உள்ளங்கள் குடி, போதைப் பொருட்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும் நிலை, நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்களின் சுயநலம் நிறைந்த நிலை, மேலைநாடுகளில் வாழும் நாம் காணும் உண்மை யாதெனில் தேவாலயங்களை மூடும் நிலை, கிறிஸ்துவ மக்களுக்கு நேரமில்லை திருப்பலியில் பங்கு பெற்று இறையாசீரைப் பெற்றுச்செல்ல, இளம் உள்ளங்களுக்கும் இறைவனைத் தேடுகின்ற ஆன்ம தாகம் இல்லை. தான் மட்டும் வளர்ந்தாள் போதும் என்ற மனநிலை, இறைவார்த்தைக்கு செவி கொடுத்து வாழாத நிலை, இயற்கை அழிவுகள், மனித உள்ளங்கள் அமைதிக்கும் அன்புக்கும் ஏங்கி தவிக்கும் நிலை. குடும்பத்தில் அன்பு நிறைந்து காணவேண்டிய இடத்தில் குழப்பங்களும் பிரிவினைகளையும் நிறைந்து காணும் நிலை, நம்மிடையே பரவிக் கொண்டிருக்கும் இருளின் ஆட்சியை நீங்கி இறையாட்சி மலர வேண்டுமென்றால் இன்று அதிக வேலையாட்கள் தேவைதானே? அன்று இறைமகன் இயேசு இருவர் இருவராக இறைபணியைச் செய்ய அனுப்பிய போது கூறிய வார்த்தை "அறுவடை மிகுதி, வேலையாள்களோ குறைவு அதனால் அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள் என்று சொல்லுவது இன்று மிகப்பொருந்தும். மேலும் இயேசு கூறுவது ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை அனுப்புகின்றேன் என்று. தொழில்நுட்பம் அதிவேகமாக வளரும் இவ்வேளையில், சமூக ஊடங்கள் வழியாக தம்மை அழித்துக் கொண்டிருக்கும் புதிய இளைய சமுதாயத்திற்கு இறைவார்த்தையின் அறிவும் விழுமியங்களும் மிக அவசியம். அவற்றை பெற்றோர்கள் தாமே தங்களுடைய பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும். அதோடு குடும்பமாக இறைசமூகத்தில் ஒன்றுகூடி செபித்து இறைவார்த்தையை வாசிக்கும்போது குடும்பத்தில் அமைதியும் இளம் உள்ளங்களில வார்த்தையானவர் குடிகொண்டு வாழ்வுக்கு இட்டுச்செல்லும் செம்மையான பாதையைக் காட்டி வல்லமையுடன் அவர்களின் வாழ்வில் செயலாட்டுவார்.

திருமுழுக்கின் வழியாக இறையேசுவில் இணைந்துள்ள நாம் அனைவரும் நற்செய்தியை அறிவிக்க முன்வர வேண்டும். உலகம் முடியும் மட்டும் நம்மோடு இருப்பேன் என்று கூறிய அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுவோம். இளம் உள்ளங்கள் இறைப்பணிக்காக தங்களுடைய வாழ்வை அர்ப்பணிக்க தாகம் கொள்ள வேண்டுமென்றும், மேலும் உலகநாடுகளில் இறைப்பணிக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்து பல்வேறு இடையூர்களின் மத்தியில் பணிபுரியும் அருட்பணியாளர்கள், துறவியர்கள், பொதுநிலையினர் அனைவரையும் ஆவியானவரின் அருள்கொடைகளால் நிரப்பவும், அவருடைய துணையுடன் நற்செய்திப் பணியை சிறப்புடன் செய்ய வேண்டுமென்றும் மேலும் அவர்களுடைய வாழ்வில் சந்திக்கின்ற சாவால்களையும் இடர்களையும் மகிழ்வுடன் எதிர்கொண்டு இறைவனுடைய உறவில் ஆழமாக வளர்ந்து இறைவனுக்கு என்றும் சாட்சியாய் வாழ வேண்டுமென்று இறைவனிடம் உருக்கமாக மன்றாடுவோம்.