இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் பன்னிரெண்டாம் றஞாயிறு

நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்

செக்கரியா 12:10-11
கலாத்தியர் 3:26-29
லூக்கா 9:18-24

இன்று பொதுக்காலம் பன்னிரெண்டாம் ஞாயிறு. இறைவனின் இரக்கத்தையும் அன்பையும் வார்த்தையின் வழியாக பகிர்ந்து கொள்ள நம்மை அழைக்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறைமகன் இயேசு தன்னுடைய அன்புச் சீடர்களிடம் தன்னை யார் என மக்கள் சொல்லுகின்றார்கள் என்று கேட்ட அதே கேள்வியை இன்று நம்மிடம் கேட்கின்றார்? இன்று இந்த கேள்விக்கு என்னால் என்ன பதில் சொல்ல முடியும்? இறைமகன் இயேசு யார்? திருமுழுக்கு பெற்றுள்ள நாம் அனைவரும் இயேசுவின்மீது கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையின் வழியாக நாம் இறைவனின் மக்கள் என்ற உரிமையைப் பெற்றுள்ளோம். கிறிஸ்துவின் அன்பு மக்களாக, கிறிஸ்துவர்களாக ஆண்டு ஆண்டு காலமாக பயணம் செய்யும் நமக்கு இறைமகன் இயேசுகிறிஸ்து யார்? அவரைப்பற்றி என்னால் என்ன கூற முடியும்? இறைமகன் இயேசு கிறிஸ்துவை முழுமையாக விசுவசித்து நம்பி எனது வாழ்க்கையில் பயணிக்கின்றேனா? இறைமகன் இயேசு ஆண்டவராகிய மெசியா மனிதனாக பிறந்து, அற்புதங்கள், புதுமைகள், பாவிகளிடம் அதிக நட்பு கொண்டு, அவர்களுக்கென்று சமுதாயத்தில் இறையாட்சி என்னும் அன்பை விதைத்து புது வாழ்வைத் தந்தவர். பாவிகளாகிய நமக்கு மீட்பு அளிக்க, சிலுவை மரணத்தை ஏற்று வாழ்வு தந்த இறைமகன். இன்று உலக நாடுகளில் நடைபெறும் சமயப்போர்களினால் எத்தனையோ மக்கள் இறைமகன் இயேசுவிடம் கொண்ட விசுவாசத்திற்காக துன்பங்கள் கொடுமைகள் ஏற்று தங்களுடைய வாழ்வை துணிவுடன் அர்ப்பணிப்பதை தெலைக்காட்சியின் வழியாக காணிகின்றோம். இறைமகன் இயேசுவின் அன்பை முழுமையாக சுவைத்திருந்தால் அவரை நாம் யார் என்று கண்டுகொள்ள முடியம்.

அன்று சீடர்கள் கூறிய பதிலானது - சிலர் திருமுழுக்கு யோவான் - வேறு சிலர் எலியா - மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் என்று கூறுகின்றார்கள். ஆனால் இறைமகன் இயேசு தனது சீடர்களிடம் "நீங்கள் நான் எனச் சொல்கிறீர்கள்? என்று கேட்கின்றார். அதற்கு திருத்தூதர் போதுரு மறுமொழியாக 'நீர் கடவுளின் மெசியா? என்று உரைக்கின்றார். இறந்த லாசரை உயிரப்பிக்கும் முன்பு அவருடைய சகோதரி மார்த்தா மிக அழகாக சொல்லுகிறார் " ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகின்றேன் என்று. திருத்தூதர் பேதுரு, மார்தாவைப் போல் என்னால் இயேசு யார் என்று உள்ளத்தின் ஆழத்திலிருந்து கூறமுடியுமா?

இயேசுவிடம் திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும் இறைமகன் இயேசுகிறிஸ்துவை அணிந்துள்ளோம் என்று திருத்தூதர் பவுல் கூறகின்றார். திவ்ய நற்கருணையில் நமக்காக என்றும் வாழும் இறைமகன் இயேசுவையும், அன்றாட நிறைவேற்றப்படும் திருப்பலியில் தன்னையே கொடையாக கொடுக்கும் இறைமகன் இயேசுவை எப்படிபட்ட கண்ணோட்டத்தில் அவரை அணுகிச் செல்கின்றோம். திருப்பலி, திருவருட்சாதனங்கள் பெருவிழாக்களில் அவரே பிரசன்னமாகுவதை உணர்ந்திருக்கின்றோமா அல்லது அவற்றை வெறும் சடங்காக எண்ணி அதில் பங்குபெறகின்றோமா, இறைமகன் இயேசுவின் அருள் பிரசனன்னம் நிறைந்த அருள் அடையாளங்கள் என்பதை உணர்ந்து வழிபாடுகளில் பங்கேற்போம். உலகில் வாழும் தலைவர்களையும், திரைஉலகத்தில் உள்ளோர்களையும், மற்றும் உலக சாதனைகளில் வெற்றி பெற்றவர்களையும் முன்னோடிகளாக வைத்து அவரைப்போல் வாழவும், அவர்களைப்போல் தன்னை மாற்றிக்கொள்ள இன்று மனிதன் விரும்புகின்றான். ஆனால் இயேசுவைப்போல், அவருடைய வார்த்தைகளை கடைபிடித்து வாழ்வது மிக மிகக் கடினம். ஆனால் ஆவியானவரின் முழு ஆற்றலால் அவருடைய பண்புகளால் நம்மால் வளரவும் வாழவும் முடியும். இன்றைய நற்செய்தியில் இயேசு மிகத் தெளிவாக கூறுவது "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னைத் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் என்று. எனவே இறைவனோடு செப உறவில் தினமும் உரையாடி அவருடைய அருள்கொடைகளை நிறைவாகப் பெற்று, இயேசுவின் உடனிருப்பை செபத்தின் வழியாகவும், இறைவார்த்தையின் வழியாகவும் ஆழமாக அனுபவிப்போம்.

இறைமகன் இயேசு எனக்கு நம்பிக்கையின் நண்பனாக இருக்கலாம்.
இறைமகன் இயேசு எனக்கு இருளில் என்னோடுசெல்லும் ஔியாக இருக்கலாம்.
இறைமகன் இயேசு எனக்கு வழி காட்டும் நல்ல ஆயனாக இருக்கலாம்
இறைமகன் இயேசு எனக்கு வாழ்வு தரும் ஊற்றாக இருக்கலாம்.
இறைமகன் இயேசு எனக்கு வாழ்வு தரும் உணவாக இருக்கலாம்.
இறைமகன் இயேசு என்னை மன்னிக்கும் நண்பராக இருக்கலாம்.
இமைகன் இயேசு எனக்கு வாழ்வு தரும் வார்த்தையாக இருக்கலாம்.

நமது ஆண்டவர் எத்துனை இனியவர் என்று சுவைத்துப் பார்ப்போம். இவரே என் அன்பார்ந்த மகன் இவருக்கு செவிசாய்ப்போம் என்ற தந்தையின் குரலுக்கு செவி மடுத்து இயேசுவைப் போல் நல்ல குணங்களைப் பெற்று, அவரில் வாழ்வோம், வளர்வோம்.