இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherlandஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தவக்காலத்தின் ஜந்தாம் ஞாயிறு

முடிவில்லா அன்பு

எரே31:31-34 எபி5:7-9 யோவா12:20-33

இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன:; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள் என்கிறார் ஆணடவர். இனிமேல் எவரும் ஆண்டவரை அறிந்துகொள்ளும் எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்து கொள்வர் என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன். அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூரமாட்டேன். எரேமியா:31:33-34

உனக்கு நான் முடிவில்லா அன்பு காட்டியுள்ளேன,; எனவே பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன் என்றுரைத்த அன்பு இறைவா நீர் எங்கள்மேல் கொண்டுள்ள அளவிடமுடியாத அன்பிற்காக நன்றி கூறுகின்றோம். பாவிகளாகிய எங்களை அன்போடும் கருணையோடும் நினைவில் கொண்டிருப்பதற்காகவும், எங்களை தீர்ப்பிடாமல் ஆசீர்வாதங்களுக்கு மேல் ஆசீர்வாதத்தைப் பொழிவதற்காக உள்ளம் நிறைந்த நன்றி ஐயா! பாவிகளாகிய எங்களை உமது திரு இரத்ததால் கழுவி சுத்தமாக்கும். உயிர்ப்பின் விழாவைக் தூய்மையான உள்ளத்தோடு கொண்டாட எங்கள் ஆன்மாவை தயார் செய்யத் துணைபுரியும்.

இன்று தவக்காலம் 5 ஆம் ஞாயிறு. மனமாற்றத்தின் காலத்தில் பயணம் செய்யும் நமக்கு இறைவன் மீண்டும் மீண்டும் சொல்லுவது, அவர் பிரமாணிக்கமானவர் அவர் நமது விசுவாத்தின் தந்தையர்களிடம் செய்த உடன்படிக்கையையும் விதிமுறைகளையும் நிறைவேற்றுபவர் நேற்றும் என்றும் மாறாதவர். பெற்றத் தாய் தன் பிள்ளையை மறந்தாலும் நான் உன்னை மறவேன் என்று கூறும் அன்புள்ளத் தந்தை. இறைவாக்கினர் எரேமியா எழுதிய நூல் 31 ஆம் அதிகாரத்தை கவணத்துடன் வாசித்து தியானித்தால் இறைவன் நம்மீது கொண்டுள்ள ஆழமான அன்பைபற்றி அறிந்து கொள்ளலாம். தந்தையாகிய நமது இறைவன் இறைவாக்கினர் எரேமியா வழியாக உரைப்பது 'இஸ்ரலேயின் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும் நான் கடவுளாய் இருப்பேன், அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்" என்று இரண்டுமுறை இறைவன் கூறுவதை இந்த அதிகாரத்தில் காணலாம். (காண்க வசனம்:1,33,) எப்ராயிம் என் அருமை மகன் உன்னை நான் இன்னும் நினைவில் கொண்டிருக்கின்றேன், உனக்காக என் இதயம் ஏங்கித் தவிக்கின்றது, திண்ணமாய் உனக்கு நான் இரக்கம் காட்டுவேன்" என்று மிக அருமையாக எடுத்துரைக்கின்றார். திருவெளிப்பாடு நூலில் அதிகாரம் 21, இறைவசனம் 3ல் காண்பது ' பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார், அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார்" என்றும், திருத்தூதர் யோவான் நற்செய்தி முதல் அதிகாரம் இறைவசனம் 14ல் காண்பது 'வாக்கு மனிதர் ஆனார், நம்மிடையே குடிகொண்டார்" என்று. மேலும் அதே செய்தியைத்தான் ஆண்டவரின வானதூதர் கன்னிமரியாவை ஏற்றக்கொள்ளத் தயங்கிய யோசேப்பிடம் கூறியது. இறைவாக்கினர் எசாயா வழியாக ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார். 'கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர"; என்று. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள் என்று கூறுவதைக் காண்கின்றோம். இறைவனின் வழிமுறைகளும் செயல்பாடுகளும் மிகவும் வேறுபட்டவை. இறைவன் தான் அன்பு செய்த இஸ்ரயேல் மக்களின் வழியாக செய்த உடன்படிக்கையை தன்மகன் இயேசு கிறிஸ்துவின் வழியாக நிறைவேற்றுகின்றார். மேலும் இறைவன் முதல் வாசகத்தில் கூறுவது அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன். அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூரமாட்டேன் என்று வாக்களிக்கின்றார். உன் குற்றங்களைக் கார்மேகம் போலும் உன் பாவங்களைப் பனிப்படலம் போலும் அகற்றிவிட்டேன் என்னிடம் திரும்பி வா நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன். நமது இறைவன் தன் அன்பு மகன் இயேசு கிறிஸ்து வழியாக நம்மை மீட்டுள்ளார். சிலுவையில் சிந்திய ஒவ்வொரு இரத்தத்துளிகள் அனைத்தும் நமது மீட்புக்காகவும், அவர் அன்பு செய்யும் அனைவரையும் அவருடைய பிள்ளைகளாகுவதற்கான உரிமையைக் பெறுவதற்காக. இறைமகன் இயேசு சிலுவைச் சாவை ஏற்று நம்மை பாவத்திலிருந்தும் குற்றங்களிலிருந்தும் விடுதலையளித்து இறைவனோடு ஒன்றித்து வாழ வழிவகுத்துத் தந்தவர். தனது அன்புச் சீடர்களிடம் உலகம் முடியும் மட்டும் நம்மோடு இருப்பேன் என்று கூறியவர். இன்றும் என்றும் நம்மோடு உயிரோடு வாழ்கின்றவர் என்பதை நம்புவோம். அன்றாட வாழ்க்கையை கடந்து செல்லும்போது இறைவனோடு பயணிக்கின்றோமா? அல்லது அவரைவிட்டுவிட்டு இருளான வாழ்க்கையில் பயணிக்கின்றோமா? சிந்திப்போம். இன்றைய இரண்டாம் வாசகம், எபிரேயர் எழுதிய திருமுகத்தில் இறைமகன் இயேசு எப்படிபட்ட சாவை எதிர்கொள்ள வேண்டும், அவருடைய மனநிலையை மிக அருமையாக எழுதியிருப்பதைக் காணலாம். பாவம் எதுவும் அறியாதவர், குற்றம் புரியாதவர். உண்மையும் நன்மையும் நிறைந்த மனிதராக நம்மைப்போல் வாழ்ந்தவர். துன்பம், துயரம், மனக்கலக்கம், வேதனைகளை சுமந்து தாங்கி வாழ்ந்தவர். இறைவன்மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டதால் அவரிடம் மனம் குமிறி அழுகின்றார். தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி மன்றாடி வேண்டினார் என்று இறைவார்த்தை கூறுகின்றது. கெத்சமனித் தோட்டத்தில் அவருடைய சீடர்களிடம் கூறுகின்றார் "எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னொடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்" என்று கேட்ட சீடர்கள் அவரைவிட்டு ஓடிவிட்டனர். இறைமகன் இயேசு தன் தந்தையிடம் முகங்குப்புற விழுந்து, என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னைவிட்டு அகலட்டும். ஆனாலும் என்விருப்பப்படியே நிகழட்டும்"என்று வேண்டி இறைவனின் திட்டத்திற்கு கீழ்படிந்து சிலுவையை சுமந்து மனுக்குலத்தை மீட்பதற்காக கல்வாரியை நோக்கி பயணம் செய்கின்றார். எதற்காக இறைமகனுக்கு இந்த நிலை உனக்காகவும் எனக்காகவும் வாழ்வு தருவதற்காக நம்புவோம் வாழ்வோம் அவரைப்போல்.

இன்றும் இறைமகன் இயேசு மனித உருவில் துன்பப்படுவதை காண்கின்றோம். உலகில் இருளின் ஆட்சி பரவிக்கொண்டு வருவதை உணர்கின்றோம், காண்கின்றோம். இன்று எத்தனையோ மனித உள்ளங்கள் தங்களுடைய விசுவாசத்திற்காக துன்புறுவதையும், தியாகம் செய்வதையும், உயிரையே பலியாக கொடுக்கின்றனர். மனமாற்றத்தின் காலமாகிய தவக்காலத்தில் சிறு சிறு தியாகங்களைச் செய்து அடுத்திருப்வர்களுக்கு ஆசீர்வாதமாக வாழ்வோம்.

இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசு கூறுவதுபோல் கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால் தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என்ற உண்மைக்கேற்ப தனது வாழ்வை பிறருக்காக கொடுத்து தன்னையே இழந்து பிறருக்கு மாட்சியாய் விளங்குவோம்.

எங்களுக்கா சிலுவையில் இறந்து மறுவாழ்வைத் தந்த இயேசுவே! உமக்கு எதிராக நாங்கள் செய்கின்ற குற்றங்களை மன்னித்தருளும், ஈசோப்பினால் எங்களைக் கழுவியருளும், எங்கள் பாவங்களைப் பாராதேயும், தூயதோர் உள்ளத்தை உருவாக்கி, உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியால் புது படைப்பாக மாற்றியருளும். நீர் உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் இருப்பவர், நைந்த நெஞ்சத்தாரை காப்பாற்றுகின்றவர் என்பதை விசுவசித்து உம் இரக்கத்தை நாடி நிற்கின்றோம்.

சிந்திப்போம்
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன் உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். (திருப்பாடல்கள்:23,4)
கடவுளுக்குகேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே, கடவுளே! நொறுங்கிய குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. (திருப்பாடல்கள்:51:17)
ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர், பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாவர் வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர். (திருப்படல்கள்:24:3-4)