இவ் மறையுரையை வழங்குபவர்

அருட்சகோதரி.ஜோபி அமல்ராஜ்
Klooster Sancta Maria, 6161 CV Geleen, Netherland

ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

தூய ஆவி ஞாயிறு பெருவிழா

தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்

தி.ப2:1-11
1கொரி12:3-7, 12-13
யோவா20:19-23

தூய ஆவியானவரின் பெருவிழாவைக் கொண்டாடும் இப்புனித நாளுக்காக மூவொரு இறைவனாம் தந்தைக்கும், இறைமகன் இயேசுவிற்கும், தூய ஆவியானவர்க்கும் நன்றி செலுத்துவோம். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருளுவார் என்று இறைமகன் இயேசு கூறிய வாக்குறுதி இன்று அன்னைமரியாளின் துணையுடன் அவர் மகன் தேர்ந்தெடுத்து அன்பு செய்த சீடர்களின் வாழ்வில், உள்ளத்தில் ஆவியானவர் மீண்டும் பிளவுற்ற நாவின் வடிவில் இறங்கி வந்து மனத்திடனை அளித்து, வாழ்வு கொடுக்கும் வாழ்வைப்பற்றியும், இறைமகன் இயேசுவின் உயிர்ப்பைபற்றியும் துணிவுடன் எடுத்துரைக்க வல்லமையையும் ஆற்றலையும் தருகின்றார்.

வேதாகமத்தில் ஆவியானவரின் செயல்பாடுகளை சிறப்பாக மூன்று இடங்களில் செயல்படுவதைப்பற்றி சிந்திப்போம். ஆவியானவர் உலகம் தொடங்கும் முன்பே இருக்கின்றவர் என்பதை தொடக்கநூல்(1:3)ல் "மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்தத்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது என்று. விடுதலைப்பயணம் நூல்(19:16,18) மூன்றாம் நாள் பொழுது புலரும் நேரத்தில் பேரடி முழுங்கியது. மின்னல் வெட்டியது. மலைமேல் மாபெரும் கார்மேகம் வந்து கவிழ்ந்தது. எக்காளப் பேரொலி எழுந்தது. சீனாய் மலை முழுவதும் புகைந்து கொண்டிருந்தது. ஏனெனில் ஆண்டவர் அதன்மீது நெருப்பில் இறங்கி வந்தார். அதன் புகை தீச்சூளையிலிருந்து எழும் புகைபோல் தேன்றியது மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது " என்று காண்கின்றோம். இறைவாக்கினர் மோசே பேசியபோது ஆண்டவர் சீனாய் மலைமேல் இறங்கி வந்தார். நாற்பது ஆண்டுகளாக பாலைவனத்தில் இரவும் பகலும் மேகத்தூணாகவும் நெருப்புத்தூணாகவும் உடனிருந்து பயணம் செய்தவர். இறைவனின் வல்லசெயல்களை உணர்ந்து அனுபவித்தவர்கள்.

இறைவனின் தாய் அன்னைமரியாளின் வாழ்வில் தூய ஆவியானவரின் செயல்பாடுகளானது மிகவும் உன்னதமானது. திருத்தூதர் லூக்கா(1:26-38) இறைவசனங்கள் எடுத்துரைப்பது தூய ஆவியானவரின் அபிசேகத்தின் வழியாக உலக மீட்பரை உலகத்திற்கு கொடையாக கொடுக்க இறைவன் ஜென்மபாவம் இல்லாத கன்னியைத் தேடி நசரேத் நகரத்தில் வாழும் அருள்மிகப் பெற்றவராக திகழும் இளம் பெண்னை தேர்ந்தெடுக்கின்றார். "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழுந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும் " என்று காண்கின்றோம். எனவே ஆவியானவர் அனைத்தையும் புதிய படைப்பாக மாற்றுபவர். அருளும், ஆற்றலும் நிறைந்து செயல்படுபவர். இறைவனின் பணியை துணிவுடன் செய்ய தூண்டுபவர்.

தூய ஆவியானவர் திருமுழுக்கின் வழியாக நம் உள்ளத்தில் குடிகொண்டவர். அவருடைய செயல்பாடுகளை அனுபவிக்க வேண்டுமென்றால் உள்ளத்தில் தூய்மை வேண்டும். இருளும் பாவமும் உள்ள இடத்தில் அவருடைய செயல்பாடுகளை உணர்வது கடினம். தாவீது அரசர் தான் செய்த பாவத்தை உணர்ந்து மனமுறுகி இவ்வாறு வேண்டுகின்றார். என் பாவங்களைப் பாராதபடி உம் முகத்தை மறைத்துக் கொள்ளும், என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும். கடவுளே தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும் என்று. இருள் சூழ்ந்த உலகில் வாழும் பாவிகளாகிய நமக்கு ஆவியானவரின் துணை வேண்டும். எனக்கு பின் வருபவர் வலிமை மிக்கவர். அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் திருமுழுக்குக் கொடுப்பவர் என்று பாலைவனத்தில் முழங்கிய முழக்கம் உண்மையானது. இவ்வார்த்தை இன்று அன்னைமரியாள் உடனிருப்புடன், சீடர்களின் வாழ்வில் நிறைவு பெறுகின்றது. இன்று நமக்கு அதிகளவு அவருடைய வழிநடத்துதல் தேவையானது ஆகையால் தூய ஆவியானவாரின் கொடைகளுக்கும் பாதுகாப்பிற்கும் நன்றி செலுத்துவதுடன் தொடர்ந்து நமது வாழ்வில் அவர் என்றும் துணையிருந்து செயலாற்ற அவருடைய துணை வேண்டுவோம்.