ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)









பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு

அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்

எசாயா 6: 1-8, 1
கொரி 15: 1-11
லூக்கா5: 1-11

இன்றைய வாசகங்களில் இறை அழைத்தல் பற்றி குறிப்பாகச் சொல்லப்படுகிறது. இறை அழைத்தல் எனும் அர்ப்பண வாழ்வு என்பது இலகுவானது அல்ல. அன்பில் மலரும் அந்த அருள் வாழ்வு இறைவனால் துன்பத்தின் வழி தன்னை நெருங்க வைக்கும் ஒரு வரம். மிகுந்த இறை நம்பிக்கையும் பொறுமையும் திறமையும் அதற்குத் தேவையானவை. இறை இரக்க ஆண்டிலே இறை அழைத்தல் மேம்பட இறைவனை இறைஞ்சுவோம்.

இறை சிந்தனை இல்லாத பலர் பிற்காலத்தில் இறைவனுக்காக வாழ்ந்து தியாக சீலர்களாக மாறி உள்ளனர். மோசேஸ் ஆரம்பத்தில் தன்நம்பிக்கை அற்றவராக பயந்தவராக இருந்த போதும் கடவுள் அவரை சிறந்த தலைவராக மாற்றினார். அவரும் தன்னை மாற்றிக் கொண்டார். மீட்புத் திட்டத்தில் மரியாள் தொடக்கத்தில் மிகவும் பயந்த போதும் இதோ ஆண்டவரின் அடிமை எனச் சொல்லி இயேசுவின் பயணத்தில் முக்கிய பணியை ஏற்றுக் கொண்டார். பேதுருவை இயேசு அழைத்த போது அச்சமுற்று பயந்து பொறுப்பை ஏற்கத் தயங்கினார். ஆனால் மனம் மாறி பொறுப்பை ஏற்றதும் தூய ஆவியின் அருளால் பல சோதனைகளைக் கடந்து சாதனைகளைப் படைத்தார். கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக செயல் பட்ட சவுல் பவுல் ஆக மாற்றப்பட்டார். பவுல் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார். மனம் வருந்தினர். இறைவன் அவரை ஒரு சிறந்த நற்செய்தி ஆளராக மாற்றினார்.

நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்றவன். ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை. திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன். உண்மையில் நானாக உழைக்கவில்லை; என்னோடு இருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது எனத் தன் தாழ்ச்சியின் மூலம் பவுல் மாட்சி பெறுகிறார். இறை பணியாளர் நிறைவாக உருவாக, அவர் ஆன்ம வாழ்வு செழிக்க செபிப்போம். செபம் கடவுளுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவு உண்மையென்பதற்கு அடையாளமாயிருக்கிறது. செபம் கடவுளோடு நாம் பேசுகின்ற அனுபவமே. பேச்சு வார்த்தை இருக்கின்ற இடத்தில் தான் உண்மையான ஒற்றுமை வளரும். செபத்தின் மூலம் நம்முடைய தேவைகளை கடவுளிடம் தெரிவிக்க முடிகிறது. நம்மால் முடியாதது அவரால் முடியும். எனவே நாம் செபிக்க வேண்டும்.