ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்

நெகேமியா 8,2-4.5-6.8-10
1கொரி 12:12-30
லூக் 1:1-4,14-21

இன்றைய வாசகங்களில் ஒற்றுமை பற்றி குறிப்பாகச் சொல்லப்படுகிறது. உடல் உறுப்புகளை வைத்து புனித பவுல் அடிகள் ஒற்றுமை பற்றி அழகாக எடுத்துச் சொல்கிறார். உடல் உறுப்புக்கள் அனைத்தும் முக்கியமானவை. ஒன்றில் காயப்பட்டால் உடல் எங்கும் வலிக்கும். அனைத்தும் ஒன்று பட்டு இயங்கினால் மட்டுமே பயன் இருக்கும். எம் மக்களுக்கு மிகவும் தேவையான கருத்து இங்கே சொல்லப்பட்டு உள்ளது. ஒரே குடையின் கீழ் இயேசுவின் பெயரில் ஒன்று பட்டு இயங்காமல் இருப்பவர் சிந்திக்க வேண்டியது. சிலர் திருப்பலியில் அல்லது பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கு கொள்ளாது வெளியில் இருந்து கொண்டு பிழை பிடிப்பர். நாம் ஒன்று பட்டு செயல் படுவதை இயேசு விரும்புகிறார். ஒன்று பட்டு செபிப்பதை இயேசு நேசிக்கிறார். நம்மில் உள்ள பல தரப்பட்ட திறமைகள் இறைவன் தந்தவை என்பதை எண்ணி அவருக்கு நன்றி சொல்லி அதை மற்றவருடன் இணைந்து பலன் உள்ளது ஆக்குவோம்.

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் பணிவாழ்வின் தொடக்கத்தை நாம் வாசிக்கிறோம். இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது: ``ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.'' அதை வாசித்து முடிந்த பின் நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று'' என்றார். இயேசுவின் பணி வாழ்வு திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது. அவரை பல தடைகள் குறுக்கிட்ட போதும் பணியை தொடர்ந்து முன்னெடுத்தார். அன்பான இறைவா எமது பணி வாழ்வில் வரும் சோதனைகளில் தளர்ந்து போகாது உம்மில் உள்ள உறுதியான நம்பிக்கையில், உமது வழியில் சாதனையாக்க, அருள் புரிய செபிப்போம்.