இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் இருபத்தேழாம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 5,1-7
திருப்பாடல்: திருப்பாடல் 80
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 4,6-9
நற்செய்தி: மத்தேயு 21,33-43


திராட்சைச் செடி:

தெற்கு சிரியா மற்றும் வடக்கு இஸ்ராயேல் பகுதிகளில் திராட்சை பயிற்ச்செய்கை செப்புக்காலத்திலிருந்து நடந்திருப்பதாக தொல்பொருளியல் வரலாறுகள் காட்டுகின்றன. அதாவது இது கி.மு. 4000-3500 ஆண்டுகளுக்கு முன்னரே நடந்திருக்கிறது. மத்திய தரை பிரதேசத்தின் கிழக்கு பகுதிகளின் நில அமைவும், மண்ணும், காலநிலையும், திராட்சை பயிர்ச்செய்கைக்கு சாதகமாக இருந்திருக்கின்றன. மத்தியதரைக் கடல் பிரதேசத்தின் மேற்பகுதியில் இரண்டு வகையான திராட்சைகள் வளர்ச்சியில் இருந்திருக்கின்றன, அவை: விட்டிஸ் சில்வெஸ்ரிஸ் (Vitis silvestris), இது ஒருவகை காட்டு திராட்சை செடியைக் குறிக்கும். இத்தாலி மற்றும் தெற்கு ஐரோப்பாவிலே இந்த திராட்சை அதிகமாக வளர்கிறது. விட்டிஸ் வினிபெரா (Vitis vinifera), இது ஒரு தோட்டங்களிலே வளர்கின்ற திராட்சை. இவை கற்காலத்திலிருந்து (கி.மு 8000-3500) மனித பயிர்ச் செய்கையில் இருந்திருக்கிறது. காட்டு கொடிமுந்திரி இஸ்ராயேல் பகுதியில் இருந்தற்கான தொல்பொருளியல் தரவுகள் இதுவரைக்கும் கிடைக்கவில்லை.

நோவாதான் முதன் முதலில் திராட்சை பயிர்செய்கை செய்தவராக விவிலியத்தில் காட்டப்படுகிறார் (காண்க தொ.நூல் 9,20). வீட்டுத் திராட்சை பயிர் செய்யப்பட்டதற்கான சான்றுகள் இஸ்ராயேல் நாட்டில் ஆரம்ப வெண்கல காலத்திலே இருந்திருக்கின்றன. விவிலியத்தைவிட ஏனைய தரவுகளும், இந்த பிரதேசங்களில் அதிகமான திராட்சைகள் வளர்ந்திருந்ததை காட்டுகின்றன. வெண்கல காலத்தில் பிற்பகுதியில் திராட்சை பயிர்ச்செய்கை கானான் பிரதேசத்தின் மிக முக்கியமான பயிர்ச்செய்கையாக உருவெடுத்தது. எகிப்திய பாரவோனான மூன்றாம் துத்மோஸ் திராட்சை பயிர்ச் செய்கையை கானானிலிருந்து எகிப்திற்கு கொண்டு சென்றார். சாலமோன் மன்னர் திராட்சை இரசத்தை, ஒலிவ எண்ணெய், பார்லி, மற்றும் கோதுமையோடு சேர்த்து வணிகம் செய்திருக்கிறார். இவற்றைக் கொடுத்துத்தான் அவர் லெபனானிய தேக்கு மரங்களை பெற்றுக்கொண்டார் என விவிலியம் காட்டுகிறது (காண்க 2குறி 2,8-10).

திராட்சைத் தோட்டக்கலை, பாறைகள் மற்றும் கடினமாக கற்கள் நிறைந்த பாலஸ்தீன நாட்டில் சவால் நிறைந்த ஒன்றாகவே இருந்திருக்கிறது. இதனால் அதிகமான வேளைகளில் மக்கள் திராட்சை பயிர்செய்கையில் மிகவும் சிக்கனமாகவே இருந்திருக்கிறார்கள். சிவப்பு திராட்டை அதிகமான மக்களால் விரும்பப்பட்ட திராட்சை இனமாக இருந்தது. இதனை விட வெள்ளைத் திராட்சை மற்றும் சிவப்பு திராட்சை என்ற வகைகளும் இருந்திருக்கின்றன. சாதாரணமாக திராட்சை தோட்டத்தைச் சுற்றி கற்களாலும், பற்றைகளாலும் வேலிகள் அமைக்கப்பட்டன, அத்தோடு தோட்டத்தின் நடுவில் ஒரு காவற் கோபுரமும் அமைக்கப்பட்டது. இவற்றின் உதவியுடன் இந்த தோட்டங்கள் பாதுகாக்கப்பட்டன அல்லது அவற்றின் எல்லைகள் அடையாளப்படுத்தப்பட்டன. மற்றவருடைய தோட்டங்களில் திராட்சையை உண்ணலாம் ஆனால் அவற்றை எடுத்துச் செல்லக்ககூடாது என்ற ஒரு பழைய சட்டமும் இருந்திருக்கிறது (இணை 23,24). தோட்டங்களுக்கு இடையில் நெருக்கமான பாதைகளும் இருந்திருக்கின்றன.

விளைச்சலை அதிகரிக்கவும், பெறுமதியைக் கூட்டவும், கொடிகளை நறுக்குதல் மிக முக்கியமான வேலையாக கருதப்பட்டது (எசாயா 18,5.). ஓய்வு ஆண்டில் (சபத் ஆண்டு) நிலம் பயிரிடப்படாமல் ஓய்வாக விடப்பட்டது. இந்த காலத்தில் திராட்சை தோட்டங்களும் ஓய்வாகவே விடப்பட்டன (காண்க லேவி 25,4-5). இயற்கை சூழலை பாதுகாக்கவேண்டும் என்று அதிகமான விழிப்புணர்வுகள் இருக்கும் இந்த காலத்தைப்போல, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை ஓய்வாக வைத்திருக்க வேண்டும் என்று கட்டளைகள் இருப்பது ஆச்சரியாமான மகிழ்வைத் தருகிறது.

அனேகமாக கோடைகாலத்தின் இறுதிக்காலத்திலும், இலையுதிர் காலத்தின் தொடக்கத்திலும் திராட்சை அறுவடை நடைபெற்றது (எசாயா 16,9-10). நான்கு வருடங்களுக்கு ஒருமுறை திராட்சை கொடிகள் வெட்டியெடுக்கப்பட்டன. நான்காம் வருட அறுவடை ஆண்டவருக்கு காணிக்கையாக ஒப்படைக்கப்பட்டது. இராணுவ சேவைகளில் இருப்பவர்கள் ஐந்தாவது ஆண்டு, அறுவடை நடத்தால் அந்த ஆண்டில் தன் திராட்சை தோட்டத்தின் பலனை அனுபவிக்கும் பொருட்டு, சேவையிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டார்கள் (காண்க இணை 20,6). திராட்சை தோட்டத்தில் அறுவடையின் போது விடப்பட்டவையை சேகரிப்பது, ஏழைகள், கைம்பெண்கள், அனாதைகளுக்கு மகிழ்வான காலமாக பார்க்கப்பட்டது (லேவி. 19,10: இணை 24,21). பழங்களாக திராட்சை உண்ணப்பட்டாலும், அதிகமானவை ஆலைகளுக்கு கொண்டுவரப்பட்டு, இரசமாக பிழியப்பட்டன. முதல் ஏற்பாட்டுக் காலத்திலும், புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் அதிகமான திராட்சை ஆலைகள் இருந்திருந்தன என்பதை தற்கால அகழ்வுகள் காட்டுகின்றன.

விவசாயத்தையும் தாண்டி, திராட்சை செடியும் அதன் அறுவடையும் இஸ்ராயேலருடைய கலாச்சாரத்தின் அடையாளமாக இருக்கின்றன. பயனுள்ள திராட்சைத் தோட்டம் கடவுளுடைய உண்மையான நன்மைத்தனத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது. இஸ்ராயேலர்கள் கானானை கைப்பற்றிய போது, அங்கிருந்த திராட்சை தோட்டங்களையும் கைப்பற்றியிருக்கலாம் (காண்க எண். 13,23-24: இ.ச. 6,11). கடவுளுடைய சட்டங்களை மக்கள் நிறைவேற்றினால் ஆண்டவர் திராட்சை தோட்டங்களை ஆசிர்வதிப்பார், அத்தோடு விளைச்சலும் அதிகமாக கிடைக்கும் என்பன நம்பிக்கை (காண்க இ.ச. 8,6-10). இயேசுவும் சீடத்துவத்தைப் பற்றி விவரிக்க திராட்சை செடியையும், கொடியையும், அவை எப்படி புதுப்பிக்கப்படுகின்றன என்பவை பற்றியும் படிப்பிக்கிறார் (யோவான் 15,1-17). ஆண்டவருடைய கட்டளைகளை கடைப்பிடிப்பவருக்கு நல் பலனளிக்கும் திராட்சை செடியைப்போல மனைவி கிடைப்பார் என திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார் (காண்க தி.பா 128,1-3).

நாடுகளை கடவுள் தீர்ப்பிடும் செயலுக்கு அடையாளமாகவும் திராட்சை செடிகள் பார்க்கப்படுகின்றன. எசாயா திராட்சை செடியைக் கொண்டு பாடல் ஒன்றையே அமைத்திருக்கிறார் (காண்க எசா 5,1-7). திராட்சை செடியைப்போல கடவுளை நம்பாதவர்கள் எதிரிகளால் சூறையாடப்படுவர் என்று யோவேல் இறைவாக்கினர் எச்சரிக்கிறார் (1,6-12). எரேமியா இறைவாக்கினரும் இஸ்ராயேலின் தண்டனையை திராட்சை செடியுடன் ஒப்பிடுகிறார் (காண்க 48,32-33). திராட்சை பலன்களை ஒத்து வாழ்வது விவிலியத்தில் துறவற வாழ்வுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. நசிரேயர்கள் திராட்சை இரசத்தை தவிர்த்தனர் (காண்க எண் 6,1-4). இராகாப்பியர் என்ற ஒரு மக்கள் கூட்டமும் திராட்சை இரசம் குடிப்பதை தவிர்த்தனர் (காண்க எரேமியா 35). இவர்களை எரேமியா ஒரு உதாரணமாக பாவிக்கிறார். குருக்களும் தங்களுடைய வழிபாட்டு நேரத்தில் திராட்சை இரசம் அருந்துவதை தவிர்க்க கேட்கப்பட்டார்கள் (காண்க லேவி 10,8). அக்காலத்திலும் திராட்சை இரசம் ஒரு மதுவகை பானமாகவே பார்க்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

இவ்வாறு, திராட்சைக் கொடி இஸ்ராயேல் மக்களையும், அதனை நட்டவராக கடவுளும் பார்க்கப்பட்டிருக்கிறார். இயேசு திராட்சை கொடியாக தன் சீடர்களையும், அதன் உரிமையாளர்களாக கடவுளையும் காட்டுகிறார். பிற்காலத்தில் இயேசுவின் இரத்தத்தை குறிக்கவும் திராட்சை இரசம் பாவிக்கப்பட்டது. இன்றும் திருப்பலியில் திராட்சை இரசமே பாவிக்கப்படுகிறது என்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.

முதல் வாசகம்
எசாயா 5,1-7

திராட்சைத் தோட்டம்பற்றிய கவிதை

1என் நண்பரைக்குறித்துக் கவி பாடுவேன்; என் அன்பரின் திராட்சைத் தோட்டத்தைப்பற்றிக் காதல் பாட்டொன்று பாடுவேன்; செழுமை மிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. 2அவர் அதை நன்றாகக், கொத்திக்கிளறிக் கற்களைக் களைந்தெடுத்தார்; நல்ல இனத் திராட்சைச் செடிகளை அதில் நட்டுவைத்தார்; அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்; திராட்சைப் பழம் பிழிய ஆலை ஒன்றை அமைத்தார்; நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென எதிர்பார்த்து காத்திருந்தார்; மாறாக, காட்டு பழங்களையே அது தந்தது. 3இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்; எருசலேமில் குடியிருப்போரே, யூதாவில் வாழும் மனிதரே, எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள். 4என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ? நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்க, காட்டுப் பழங்களை அது தந்ததென்ன? 5என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யப் போவதை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன், கேளுங்கள்; 'நானே அதன் வேலியைப் பிடுங்கி எறிவேன்; அது தீக்கிரையாகும்; அதன் சுற்றுச் சுவரைத் தகர்த்தெறிவேன்; அது மிதியுண்டு போகும். 6நான் அதைப் பாழாக்கி விடுவேன்; அதன் கிளைகள் நறுக்கப்படுவதில்லை; களையை அகற்ற மண் கொத்தப்படுவதுமில்லை; நெருஞ்சியும், முட்புதர்களுமே அதில் முளைக்கும்; அதன்மீது மழை பொழியாதிருக்க மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்.' 7படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்; ஆனால் விளைந்ததோ இரத்தப்பழி; நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்; ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.


எசாயா புத்தகத்தின் ஐந்தாவது அதிகாரம் திராட்சை தோட்டம் என்ற கருப்பொருளில் பாடல் ஒன்றை முன்வைத்து, அழகான சிந்தனை ஒன்றைக் காட்டுகிறது. இந்த பகுதியை 'உதவாத திராட்சை' என்ற தலைப்பில் ஆசிரியர்கள் காண்கின்றார்கள்.

வ.1: இந்த பகுதியின் பாடல் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. சிலர் இதனை எசாயா என்கின்றனர், சிலர் இஸ்ராயேல் இனம் என்கிறனர் இன்னும் சிலர் இந்த பாடுபவரை கடவுள் என்றும் காண்கின்றனர். ஆனால் இங்கே பாடுகிறவர் எசாயா, என்பதே சரியாக இருக்கும் என்பது ஒரு பலமான வாதம்.

இவர் தான், தன் அன்பரைக் குறித்து இனிமையான பாடல் ஒன்று பாடுவதாகச் சொல்கிறார் (שִׁירַת דּוֹדִי ஷிராத் தோதி- அன்பரின் பாடல்). இந்த பாடல் திராட்சைத் தோட்டத்தைப் பற்றிய பாடல் என்று அடுத்தவரி காட்டுகிறது. செழுமையான குன்று நிலத்தில் தன் அன்பருக்கு திராட்சைத் தோட்டம் ஒன்று இருந்ததாக எசாயா பாடுகிறார். இங்கே செழுமையான குன்றினைக் குறிக்க קֶרֶן (கெரென்) என்ற சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது. சாதாரணமாக குன்றைக்குறிக்க இந்த சொல் பாவிக்கப்படுவதில்லை. ஒருவேளை எதுகை மோனை தேவைக்காக இந்த சொல் பாவிக்கப்பட்டிருக்கலாம்.

வ.2: சாதாரணமாக ஒரு திராட்சைத் தோட்ட விவசாயி என்ன செய்வார் என்பது இங்கே காட்டப்படுகிறது. முதலில் அவர் நிலத்தை நன்றாக கொத்திக் கிளரி கற்களை பிரித்தெடுப்பார் (וַֽיְעַזְּקֵהוּ וַֽיְסַקְּלֵהוּ வாய்'அடஸ்ஸெகெஹு வாய்சாக்கெலெஹு). கற்கள் நிறைந்த இஸ்ராயேல் நிலங்களில் இது சாதாரண வேலைதான். 'கொத்திக் கிளறுவதை' சில மொழிபெயர்ப்புக்கள் 'வேலி அடைத்தார்' என்றும் மொழிபெயர்க்கின்றன.

பின்னர் அவர் நல்ல திராட்சை செடிகளை நட்டுவைக்கிறார் (וַיִּטָּעֵהוּ שֹׂרֵק வாய்யிதா'எஹு செரெக்). இங்கே திராட்சை செடிக்கு பாவிக்கப்பட்டிருக்கும் சொல், நல்ல இன திராட்சை செடிகளைக் குறிக்கிறது. இந்த தோட்டக்காரர், பின்னர் ஒரு வாயிற் கோபுரத்தை அதன் நடுவிலே அமைக்கிறார் (וַיִּבֶן מִגְדָּל בְּתוֹכוֹ வாய்யிவென் மிக்தால் பெதொகோ). வாயிற் கோபுரங்கள் கற்களினால் சற்று உயராமான கோபுரமாக அமைக்கப்பட்டது, இதிலிருந்து ஆபத்துக்களை இலகுவாக நோக்க முடிந்தது.

அதிகமான திராட்சை ஆலைகள் தோட்டத்திலே கட்டப்பட்டன. இந்த விவசாயியும் அதனைத்தான் செய்கிறார். இது அந்த நாட்களில் கற்களினாலே வெட்டப்பட்டது (יֶקֶב חָצֵב בּוֹ யாகெவ் ஹாட்செவ் போ). எல்லாவற்றையும் நிறைவேற்றிய தோட்ட முதலாளி நல்ல திராட்சை கனிகளை எதிர்பார்க்க, கிடைத்ததோ காட்டுக் கனிகள் என்கிறார் ஆசிரியர். இந்த காட்டு திராட்சையை குறிக்க (בְּאֻשִֽׁים பெ'ஊஷிம்) என்ற சொல் பாவிக்கப்பட்டு;ள்ளது. இது மிகவும் சிறியதாகவும், உவர்ப்பானதாகவும் இருந்திருக்க வேண்டும்.

வ.3: ஆசிரியர் தன் நண்பருக்காக பேசுகிறார். தன் நண்பர் எருசலேமில் குடியிருப்போரிடம் நீதி கேட்கிறார். ஏன் எருசலேமில் இருப்பவரிடம் இந்த கேள்வியைக் கேட்கிறார் என்பது தெரியவில்லை, ஒரு வேளை அவர்களுக்குத்தான் இந்த பாடல் இயற்றப்பட்டது என்பதால் அவர்கள் மனச்சாட்சியை தொடவே இப்படி அமைக்கப்பட்டிருக்கலாம். எருசலேமில் இருப்பவர்களுக்கு (יוֹשֵׁב יְרוּשָׁלַם யோஷெவ் யெரூஷாலாயிம்), யுதேயாவினர் (אִישׁ יְהוּדָה 'இஷ் யெஹுதாஹ்) என்ற ஒத்த கருத்துச் சொல்லும் பாவிக்கப்பட்டிருப்பதால் அனைத்து மக்களும் உள்ளவாங்கப்பட்டிருப்பர் என்பது புலப்படுகிறது.

நீதி வழங்கச் சொல்லிக் கேட்பதிலிருந்து நீதி மறுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. கடவுளுக்கு யாரும் நீதி வழங்க முடியாது, ஆனால் இங்கே ஆண்டவருடைய அன்பிற்கு நீதி கேட்கப்படுகிறது.

வ.4: தன்னுடைய பொறுப்புக்களில் எதுவும் தவறுண்டோ? என்று ஆசிரியர் வினவுகிறார். இன்னும் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி, தேவையான அனைத்தும் செய்யப்பட்டு விட்டது என்பதைக் காட்டுகிறது (וְלֹא עָשִׂיתִי בּוֹ வெலோ' 'அசிதி போ- என்ன நான் செய்யவில்லை).

ஏமாற்றத்தின் கேள்வி கேட்கப்படுகிறது. இந்த கேள்வியினுள் ஏமாற்றம் தெரிகிறது. ஆண்டவர் தான் நல்ல திராட்சைக் கனிகளுக்காக காந்திருந்ததாகச் சொல்கிறார் (מַדּוּעַ קִוֵּיתִי לַעֲשׂוֹת עֲנָבִים மதூ'அ கிவ்வெதி ல'அதோத் 'அநாவிம்- ஏன் நான் நற்கனி பெற காத்திருக்க..). இருப்பினும் அது உவர்ப்பான காட்டுக் கனியைத் தருகிறது என்று நீதி கேட்கிறார் கடவுள் (וַיַּעַשׂ בְּאֻשִׁים வாய்யா'ஸ் பெ'ஊஷிம்).

வ.5: இப்போது பாடல் ஆசிரியர் அனேகமாக கடவுள், தன்னுடைய தீர்ப்பைக் கூறுகிறார். நம்பிக்கைக்கு எதிராக இந்த திராட்சைச் செடி செயற்பட்டதால் அதற்கான விளைவு சொல்லப்படுகிறது. இதனை கடவுள் இஸ்ராயேல் மக்களுக்கும், யூதேய வாழ் மக்களுக்கும் சொல்வதாக வரிப்படுத்தப்பட்டுள்ளது. நான் உங்களுக்கு தெரியப்படுத்துவேன் (אוֹדִיעָה־נָּא 'ஓதி'ஆஹ்-நா'), என்று எபிரேயத்தில் உள்ளது.

தான் அதன் வேலியை பிடுங்கி எறிவார் எனச் சொல்லப்பட்டுள்ளது. வேலி பிடுங்கப்பட்டால் திராட்சைத் தோட்டம் பாதுகாப்பை இழந்துவிடும். ஆபத்து எந்த பக்கத்திலிருந்தும் வரலாம். அத்தோடு அது தீக்கரையாகும். இந்த தண்டனை சற்று கொடுமையாக இருக்கிறது. இந்த முறை ஆபத்து வெளியிலிருந்தல்ல மாறாக உரிமையாளராலேயே கொடுக்கப்படுகிறது. தீக்கிரையாகும் என்பதை 'அது மேய்சல் நிலமாகும், அல்லது மேயப்படும்' என்றும் மொழி பெயர்க்கலாம் (וְהָיָ֣ה לְבָעֵ֔ר வெஹாய்யாஹ் லெவா'எர்). மீண்டுமொருமுறை வேலி தகர்க்கப்படும் என்று சொல்லப்படுகிறது, இதனால் மிதிபடக்கூடிய ஆபத்து உருவாகிறது.

வ.6: ஆறாவது வரி, இந்த திராட்சை செடி சந்திக்கவிருக்கின்ற ஆபத்துக்களை இன்னுமாக விவரிக்கின்றது. கடவுள் இதனை குப்பையாக மாற்றுவிடுவதாக எச்சரிக்கிறார் (בָתָה வாதாஹ்). திராட்சை செடி குப்பையாக மாற்றப்பட்டால், அதனால் பயன்னொன்றும் கிடைக்காது என்றாகிவிடும். அத்தோடு இந்த திராட்சை செடியின் கிளைகள் நறுக்கப்படாமல் விடப்படப்போகிறது. கிளைகள் நறுக்காமல் விடப்படுவது, செடியின் வளர்ச்சியையும், கனி கொடுத்தலையும் வெகுவாக பாதிக்கும். அத்தோடு களையை அகற்ற மண் கொத்தப்படாமலும் விடப்படப்போகிறது. மண்கொத்தப்படாமல் விடுவது வேர் ஓட்டத்தையும் நீர் இறங்கலையும் தடைசெய்யும்.

தோட்ட உரிமையாளரின் கவனிப்பு கிடைக்காமல் போவதாலும், வேலிகள் உடைபடுவதாலும் இனி இந்த தோட்டத்தில் களைகள் இலகுவாக முளைக்கப்போகின்றன. இந்த களைகளை நெருஞ்சி மற்றும் முட்புதர்கள் என்று தமிழ் விவிலியம் அழைக்கிறது (שָׁמִיר וָשָׁיִת ஷாமிர் வாஷாயித்). இறுதியான தண்டனை இன்னும் கொடுமையாக இருக்கப்போகிறது. அதாவது மழை பெய்யாமல் இருக்க மேகங்களுக்கும் கட்டளை கொடுக்கப்படுமாம் என்கிறார் கடவுள்.

வ.7: இவ்வளவு நேரமும் அடையாள முறையில் விவரிக்கப்பட்டவை, இப்போது விளங்கப்படுத்தப்டுகிறது. திராட்சைக் செடி இஸ்ராயேல் வீட்டார் என சொல்லப்படுகிறது (כֶ֜רֶם יְהוָ֤ה צְבָאוֹת֙ בֵּ֣ית יִשְׂרָאֵ֔ל கெரெம் அதோனாய் ட்செவா'ஓத் பேத் யிஷ்ரா'எல்). இங்கே கடவுள் படைகளின் ஆண்டவர் என பாரம்பரிய பெயரில் அழைக்கப்படுகிறார். அத்தோடு திராட்சை தோட்டம் கடவுளின் தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

யூதேயாதான் கடவுள் மகிழ்வுடன் நட்ட செடி என்றும் விளங்கப்படுத்தப்படுகிறது. இருப்பினும் கடவுள் ஒன்றை எதிர்பார்க்க இன்னொன்றே அவருக்கு கிடைக்கிறது. அ. அவர் நீதியை எதிர்பார்த்தார் ஆனால் கிடைத்ததோ இரத்த சிந்துதல் וַיְקַ֤ו לְמִשְׁפָּט֙ וְהִנֵּ֣ה מִשְׂפָּ֔ח வாய்காவ் லெமிஷ்பாத் வெஹின்னேஹ் மிஷ்பாஹ் (எதுகை மோனை ஒலிகளை அவதானிக்கவும்)

ஆ. அவர் நேர்மையை எதிர்பார்த்தார் ஆனால் கிடைத்ததோ முறைப்பாடு לִצְדָקָ֖ה וְהִנֵּ֥ה צְעָקָֽה׃ ס லிட்சாதாகாஹ் வெஹின்னெஹ் ட்செ'ஆகாஹ் (எதுகை மோனை ஒலிகளை அவதானிக்கவும்).



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 80

நாட்டின் புதுவாழ்வுக்காக மன்றாடல்

(பாடகர் தலைவர்க்கு: 'சான்றுபகர் லீலிமலர்' என்ற மெட்டு; ஆசாபின் புகழ்ப்பா)

1இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே! கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!
2எப்ராயிம், பென்யமின், மனாசேயின் முன்னிலையில் உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்!
3கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்!
4படைகளின் கடவுளாம் ஆண்டவரே! உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்?
5கண்ணீராம் உணவை அவர்கள் உண்ணச் செய்தீர்; கண்ணீரை அவர்கள் பெருமளவு பருகச் செய்தீர்.
6எங்கள் அண்டை நாட்டாருக்கு எங்களைச் சர்ச்சைப்பொருள் ஆக்கினீர்; எங்கள் எதிரிகள் எம்மை ஏளனம் செய்தார்கள்.
7படைகளின் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.
8எகிப்தினின்று திராட்சைக்செடி ஒன்றைக் கொண்டுவந்தீர்; வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர்.
9அதற்கென நிலத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்; அது ஆழ வேரூன்றி நாட்டை நிரப்பியது. 10அதன் நிழல் மலைகளையும் அதன் கிளைகள் வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின. 11அதன் கொடிகள் கடல்வரையும் அதன் தளிர்கள் பேராறுவரையும் பரவின.✠
12பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச்செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே!
13காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன் வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன.
14படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
15உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்!
16அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்; அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்; உமது முகத்தின் சினமிகு நோக்கினால், அவர்கள் அழிந்துபோவார்களாக!
17உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக!
18இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.
19படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்!


இறைபராமரிப்பிற்க்கான வேண்டுதல் இந்த பாடலின் மையமாக இருக்கிறது. ஆண்டவரின் புன்முறுவலும் அவருடைய கோபமும் ஒப்பிடப்படுகிறது. ஆண்டவருடய இரக்கமும் ஆசீர்வதாமும் மிகவும் சக்திவாய்ந்ததாகவும், அவருடைய வெறுப்பு மிகவும் ஆபத்தானதாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திருப்பாடல் ஒரு குழு புலம்பல் பாடல் என ஆசிரியர்களால் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. எருசலேம் ஆலயத்தின் அழிவு இந்த பாடலின் பின்புலமாக இருந்திருக்கலாம். அதிகமான எபிரேய திருப்பாடல்களின் பண்புகளான திருப்பிக்கூறுதல் மற்றும் ஒத்த கருத்துச் சொற்கள் இங்கே அதிகமாக பாவிக்கப்பட்டுள்ளன.

வ.0: இந்த திருப்பாடலுக்கு ஒரு விசேடமான மெட்டு ஒன்று உள்ளதாக முன்னுரை காட்டுகிறது. இந்த மெட்டை שֹׁשַׁנִּים עֵד֖וּת ஷோஷானிம் 'எதூத் (சான்றுபகர் லில்லி மலர்) என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது. அத்தோடு இந்த பாடல் ஆசாபின் பாடல் எனவும் பெயரிடப்பட்டுள்ளது (לְאָסָף מִזְמֽוֹר லெ'ஆசாப் மிட்ஸ்மோர்).

வ.1: கடவுள் இஸ்ராயேலின் ஆயரெனவும், மக்கள் மந்தைகள் எனவும் காட்டப்படுகிறார்கள். கடவுளை ஆயர் எனக் காட்டுவது மிகவும் பழமையானதும் இஸ்ராயேலுக்கே தனித்துவமானதுமான ஒரு அடையாளம் (רֹעֵ֤ה יִשְׂרָאֵל ரோ'எஹ் யிஷ்ரா'எல்). இஸ்ராயேலர்கள் அதிகமாக மந்தை வளர்ப்பவர்களாக இருந்த படியால் இந்த உருவகம் அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. இயேசுவும் தன்னை நல்ல ஆயன் எனவே காட்டுகிறார் என்பதை இங்கே நினைவிற் கொள்ள வேண்டும் (யோவான் 10,11 Εγώ εἰμι ὁ ποιμὴν ὁ καλός. எகோ எய்மி ஹொ பொய்மேன் ஹொ காலொஸ்).

கடவுள் ஆயனாக இருக்கிறபடியால் நிச்சயமாக மக்கள் மந்தைகளாக இருக்கவேண்டும். இஸ்ராயேலைக் குறிக்க யோசேப்பு என்ற சொல் பாவிக்கப்படுகிறது (יוֹסֵף யோசெப்). வழமையாக இந்த சொல் வட நாடான இஸ்ராயேலைக் குறிப்பதாக அமைகிறது. இந்த பாடலின் ஆசரியர் இந்த சொல்லை பாவிப்பதன் வாயிலாக, வடநாட்டிற்கும் தென்நாட்டிற்கும் இடையிலான உறவு மறக்கப்படாது என்பதை காட்டுகிறார் என எடுக்கலாம்.

அத்தோடு கடவுளை கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே என்று விழிக்கிறார். கெருபின்கள் כְּרוּבִים ஒருவகையான இறக்கைகள் உள்ள வானதூதர்கள் என நம்பப்படுகிறார்கள். அவர்கள் மனித மற்றும் விலங்குகளின் தன்மைகளை உடையவர்கள் என்றும் முதல் ஏற்பாட்டில் காட்டப்படுகிறார்கள் (எருது, கழுகு, சிங்கம்: எசேக்கியேல் 1,10: 10,14.21: 41,18).

வ.2: இந்த வரி வடநாடான இஸ்ராயேலை அவர்களின் பிரத்தியோக பெயர்களின் விழிக்கிறது (אֶפְרַיִם ׀ וּבִנְיָמִ֤ן וּמְנַשֶּׁה எப்ராயிம், பெஞ்சமின் மனாசே). எப்ராயிமும் மானாசேயும் யோசேப்பின் புதல்வர்கள். இவை வடநாடான இஸ்ராயேலின் மறுபெயர்கள். பெஞ்சமின் தென்நாட்டின் ஒரு கோத்திரம். பெஞ்சமினும் யூதாவும் சேர்ந்துதான் தென்நாடான யூதேயா உருவாகியது. இந்த வரியில் ஆசிரியர் வடநாட்டையும் தென்நாட்டையும் இணைத்து ஒரே தலைப்பில் விழிக்கிறார்.

இவர்கள் முன்னால் விழித்தெழச் சொல்கிறார் (עוֹרְרָה אֶת־גְּבֽוּרָתֶךָ 'ஓர்ராஹ் 'எத்-கெவூராதெகா). இதனை ஆற்றலை கிளர்ந்தெழச் செய்யும் என்றும் மொழிபெயர்க்கலாம். இப்படிச் செய்து, தங்களை மீட்க வாரும் என்று அழைக்கிறார்.

வ.3: தம்மை தங்களது முன்னைய நிலைக்கு கொண்டுவரச் சொல்கிறார். இதன் மூலம் தற்போதைய நிலை ஆபத்தான நிலையாக இருப்பது தெரிகிறது. முன்னைய நிலை என்பது இஸ்ராயேல் மற்றும் யூதாவின் அரசாட்சி நாட்களைக் குறிக்கலாம். இதற்கு ஒத்த கருத்து வரியாக, எம்மை மீட்க உம்முடைய திருமுக ஒளியைக் காட்டியருளும் என்ற வரியும் பாவிக்கப்பட்டுள்ளது. ஆண்டவருடைய திருமுக ஒளி (הָאֵ֥ר פָּ֝נֶ֗יךָ) இந்த இடத்தில் அவருடைய கரிசனை அல்லது அவரது இரக்கத்தைக் குறிக்கும்.

வ.4: ஆண்டவருடைய இன்னொரு முக்கியமான பெயர் பாவிக்கப்பட்டுள்ளது. கடவுளை, படைகளின் ஆண்டவர் என விழிப்பதும் இஸ்ராயேலரின் மிக முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று. ஆண்டவரை சுற்றி எண்ணிலடங்கா வானதூதர் படையணிகள் இருப்பதாக நம்பப்படுவதால் அவர் படைகளின் ஆண்டவர் என அழைக்கப்படுகிறார் (יְהוָה אֱלֹהִים צְבָאוֹת அதோநாய் 'எலோகிம் ட்செவா'ஓத்).

எத்தனை காலம் சினம் கொள்வீர் என்று கடவுளை கேள்வி கேட்பதன் வாயிலாக, இன்னும் ஆண்டவரின் சினம் தணியவில்லை என்ற செய்தியை ஆசிரியர் சொல்கிறார்.

வ.5: கண்ணீர், துன்பத்தின் வெளிப்பாடாக கண்களில் இருந்து வருகிறது (דִּמְעָה திம்'அஹ் - கண்ணீர்). கண்ணீரை உணவிற்கு ஒப்பிடுவதன் வாயிலாக இஸ்ராயேலர் அதிகமான துன்பத்தையே நாளாந்த உணவாகக் கொண்டுள்ளார் என்பது புலப்படுகிறது. இது உணவாக மட்டுமல்ல, பெருமளவாகவும் பெருகுகின்றது. இந்த வரியில் ஆண்டவர்தாம் இதனை கொடு;ப்பவர் என்ற அர்த்தத்திலும் சொல்லப்படுகிறது. இதனை புலம்பல் சூழ்நிலையிலே பார்க்கவேண்டும். துன்பத்திற்கு யார் காரணம் என்பதிலும் விவிலியம் தெளிவான விடையைத் தருவதில்லை.

வ.6: இந்த வசனத்திலும் கடவுள்தான் காரணியாக பார்க்கப்படுகிறார். கடவுள் இஸ்ராயேலரை அண்டை நாட்டினருக்கு கையளித்ததாக சொல்லப்படுகிறார். இஸ்ராயேலர் அண்டை நாட்டினருக்கு சர்ச்சைப் பொருளாக மாறியிருக்கின்றனர் என்கிறார் (מָדוֹן மாதோன்). இந்த எபிரேய வார்த்தை எபிரேயர்கள் அண்டை நாட்டினரால் விரும்பப்படாதவராக இருக்கிறார் என்பது புலப்படுகிறது.

எதிரிகளின் ஏளனம் என்பது மிக வருத்தத்தைத் தரவல்லது, இதனை வீரர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இஸ்ராயேலருடைய வீரத்திற்கு இது ஒரு முக்கியமான சவால். ஏளனத்தை குறிக்க 'அவர்கள் எங்களை நகைக்கிறார்கள்' (יִלְעֲגוּ־לָֽמוֹ யில்'அகூ- லாமோ) என்று எபிரேயம் வார்த்தைப் படுத்துகிறது.

வ.7: மூன்றாவது வரி மீண்டுமாக திருப்பிக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பாடல் பல்லவி வடிவில் பாடப்பட்ட பாடலாக இருக்கும் என்பது தெரிகிறது. ஆண்டவர் இந்த வரியிலும் படைகளின் ஆண்டவராக சொல்லப்படுகிறது (אֱלֹהִים צְבָאוֹת).

வ.8: இஸ்ராயேலரை திராட்சை செடிக்கு ஒப்பிடுவது விவிலியத்தில் அங்காங்கே காணப்படுகிறது. இந்த வரியில் அது மிக அழகாக கையாளப்பட்டுள்ளது. இஸ்ராயேலர் திராட்சை செடியாகவும், அதுவும் அவர்கள் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது (גֶּפֶן מִמִּצְרַ֣יִם கெபென் மிம்மிட்ஸ்ராயிம்). திராட்சை செடி, ஐரோப்பாவிலிருந்து அல்லது மத்திய தரைக்கடல் பிரதேசங்களிலிருந்தான் எகிப்திற்கு சென்றிருக்க வேண்டும். இங்கே இஸ்ராயேலுக்கு இந்த உருவகம் பாவிக்கப்டுவதால், இவர்கள் எகிப்திலிருந்து வந்தவர்கள் ஆகிறார்கள். இந்த திராட்சைசெடி, வேற்றினத்தாரை விரட்டிவிட்டு நாட்டப்படுகிறது என்கிறார் ஆசிரியர். இதிலிருந்து கானான் நாட்டில் வேற்றினத்தார், இஸ்ராயேலருக்கு முன்பே வாழ்ந்தார்கள் என்பதும், அந்த உண்மை இஸ்ராயேலருக்கு தெரியும் என்பதும் புலப்படுகிறது.

வ.9: இந்த திராட்சை செடிக்கு கடவுள் நிலத்தைக் பண்படுத்தி கொடுக்க அது ஆழ வேரூன்றியது என்பது இந்த வரியில் சொல்லப்படுகிறது. இந்த வரி மூலமாக இஸ்ராயேலின் பழைய ஸ்திரமான அரசியல் மற்றும் பொருளாதார நிலை நினைவுகூறப்படுகிறது எனலாம். வேர் (שֹׁרֶשׁ ஷோரெஷ்), வளர்ச்சி மற்றும் விரிவாக்கலின் மிக முக்கியமான அடையாளம். இது இங்கே இஸ்ராயேலரின் முன்னால் பலத்தையும் விரிவாக்கலையும் குறிக்கிறது.

வ.10: காடுகள் மற்றும் தாவரவியல் அமைப்பை உதாரணமாக எடுத்து, முன்நாட்களில் இஸ்ராயேலரின் வளர்ச்சி எப்படியிருந்தது என்பது காட்டப்படுகிறது. இந்த திராட்சை செடியின் நிழல் மலைகளை மூடுகிறதாக உருவகிக்கிறார். மலைகள் மிக பிரமாண்டமானவை. அவற்றின் நிழல்தான் வழமையாக நிலத்தை மூடும். இங்கே மலைகளையே திராட்சை செடியின் நிழல் மூடுகிறது என்பதன் வாயிலாக, திராட்சை செடி மலையைவிட பிரமாண்டமாக வளர்ந்தது என்பது சொல்லப்படுகிறது. இதிலிருந்து இந்த ஆசிரியரின் கவித்திறமை நன்கு புலப்படுகிறது. כָּסּ֣וּ הָרִים צִלָּהּ காசூ ஹாரிம் ட்சில்லாஹ்- அதன் நிழல் மலைகளை மூடுகிறது.

கேதுரு மரங்கள் (אֶרֶז 'எரெட்ஸ்) அதன் பலத்திற்காக அறியப்படுகிறது. இந்த மரங்கள் வட இஸ்ராயேல் மற்றும் லெபனானில் அதிகமாக வளர்ந்தன. இஸ்ராயேலில் இது மிகவும் விலையுயர்ந்த நிலையிலேயே பெறப்பட்டது. திராட்சை செடியின் கிளைகள் கேதுருவுடன் ஒப்பிடப்பட முடியாதது. இருந்தும் அதனையும் ஒப்பிடுகிறது, இந்த ஆசிரியரின் கற்பனை வளம்.

வ.11: இஸ்ராயேல் இனம் எங்கெல்லாம் இருந்தது என்பதை இந்த வரிகாட்டுகிறது. கிளைகள் என்பது இஸ்ராயேலின் நில அளவை அல்லது இஸ்ராயேலின் அரசியல் ஆதிக்கத்தைக் குறிக்கலாம் (קְצִירֶהָ கெட்சிரெஹா- அதன் கிளைகள்). இந்த வரியில் வருகின்ற கடல் என்னும் சொல் (יָם யாம்), மத்தியதரைக் கடலைக் குறிக்கும். இது இஸ்ராயேலின் மேற்கு எல்லை. ஆறு (נָהָ֗ר நாஹார்) என்பது யுப்பிரதீஸ் மற்றும் தைகிரிஸ் நதிகளைக் குறிக்கும். இது இஸ்ராயேலின் கிழக்கு எல்லை.

வ.12: இஸ்ராயேலின் வளர்ச்சியை கற்பனை வளத்துடன் விவரித்த ஆசிரியர், அதன் தற்போதைய நிலையை கேள்வியாக கேட்கிறார். இப்படியான இஸ்ராயேல் இப்பபோது மதில்கள் இன்றி, அதாவது எல்லைகள் இன்றி இருப்பதாகவும், அன்னியரின் ஆதிக்கத்தில் இருப்பதாகவும் காட்டப்படுகிறது (גָּדֵר காதெர்- சுவர்). திராட்சை செடியின் பழங்கள் என்பது இஸ்ராயேல் இளம் சந்ததியைக் குறிக்கலாம்

வ.13: காட்டுப் பன்றிகளும், வயல் வெளி மிருகங்களும் அந்நியர்களுக்கு ஒப்பிடப்படுகின்றன. இந்த வரியிலுள்ள சில வார்த்தைகள் விவிலியத்தில் இந்த இடத்தில் மட்டுமே தோன்றுகின்றன. இஸ்ராயேலருக்கு பன்றிகள் விரும்பப்படாத விலங்கு, ஆனால் இங்கே காட்டுப்பன்றிகள் என்ற வார்த்தையே பாவிக்கப்படுவதால் அது அசுத்தமான விலங்கை குறிக்கிறதா என்பது புலப்படவில்லை (חֲזִיר ஹட்சிர்- பன்றி). வயல் வெளி மிருகங்கள் என்பதற்கு, வயல் வெளி பூச்சிகள் அல்லது ஊர்வன என்ற சொல்லே பாவிக்கப்பட்டுள்ளது, இந்த சொல் அரமேயிக்க, அக்காடிய அல்லது அராபிய சொல்லாக இருக்கலாம் என்றும் வாதிடப்படுகிறது (זִיז ட்சிட்ஸ்- ஊர்வன). திருப்பாடல்கள் வார்த்தைகள் எந்தளவிற்கு பழமையானவை என்பதற்கு இந்த சொல் நல்ல உதாரணம்.

வ.14: வேண்டுதல் முன்வைக்கப்படுகிறது. படைகளின் கடவுள் என்ற வார்த்தை மூன்றாவது முறையாக பாவிக்கப்படுகிறது (אֱלֹהִים צְבָאוֹת֮). ஆண்டவர் விண்ணுலகில் வாழ்கிறவர் என்பதும் இங்கே நினைவுகூறப்படுகிறது. இதனால்தான் விண்ணுலகில் இருந்து பார்க்கச் சொல்கிறார் ஆசிரியர். இந்த பார்வை என்பது, ஆண்டவருடைய இரக்கத்தை குறிக்கிறது என்பதும் காட்டப்படுகிறது.

வ.15: இஸ்ராயேல் இனம், கடவுளின் வலக்கை நட்ட திராட்சை செடி எனவும், அவர் வளர்த்த மகவு எனவும் இனிமையாக சொல்லப்படுகிறது (יְמִינֶךָ யெமிநெகா- உமது வலக்கை: בֵּ֗ן பென்- மகன்). இந்த இரண்டு சொற்களும் இஸ்ராயேலின் பிறப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. இஸ்ராயேல் இனம் கடவுளால் மிகவும் நேசிக்கப்பட்ட இனம் என்பது இங்கே புலப்படுகிறது. வலது கையும், மகனும் என்ற சொற்கள் இதனைத்தான் குறிக்கின்றன.

வ.16: இது வரையும் துன்பத்தை கடவுள்தான் தந்தார் என புலம்பிய ஆசிரியர் இந்த வரியில் அந்த குற்றச்சாட்டை எதிரிகளின் மேல் போடுகிறார். இந்த எதிரிகள் திராட்சை செடியான இஸ்ராயேலுக்கு தீ மூட்டி வெட்டிச் சாய்த்துவிட்டார்கள் என்கிறார். இது எருசலேம் நகரின் அழிவைக் குறிப்பது போல உள்ளது. இதனை வைத்து பார்க்கின்றபோது, இந்த திருப்பாடல் நிச்சயமாக எருசலேம் அழிவிற்கு பின்னர்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். அத்தோடு அவர்களுக்கு சாபமும் கொடுக்கப்படுகிறது. சாபம் கொடுத்தல் இஸ்ராயேல் புலம்பலின் ஒரு அங்கம். இது அழிவிற்கான சாபம் என்பதைவிட, ஒரு வகையான மனவுளைச்சல் தீர்வு என்றே நோக்கப்படவேண்டும்.

வ.17: எதிரிகளுக்கு சாபம் கொடுத்தவர், இஸ்ராயேலருக்கு ஆசீர் கேட்கிறார். இஸ்ராயேலர் இரண்டு வார்த்தைகளால் மெச்சப்படுகிறார்கள். அவர்கள் கடவுளுக்கு வலப்புறத்தில் இருப்பவர்கள், அத்தோடு அவர்கள் கடவுளுக்காகவே உறுதி செய்யப்பட்டவர்கள். இந்த வார்த்தைகள் இஸ்ராயேலரின் தெரிவை முக்கியத்துவம் செய்கிறது.

வ.18: புலம்பல் பாடல்கள் இறுதியில் நம்பிக்கை வரிகளைக் கொண்டிருப்பது வழமை. இந்த பாடலிலும் இந்த நம்பிக்கை வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இனி இவர்கள் பாவம் செய்யமாட்டார்கள் என்று ஆசிரியரால் உறுதிப்படுத்தப்படுகிறார். இதற்கு, இனி இவர்கள் 'அகலமாட்டார்கள்' (נָס֥וֹג מִמֶּךָּ நாசோக் மிம்மேகா) அத்தோடு 'உம் பெயரை தொழுவார்கள்' (בְשִׁמְךָ֥ נִקְרָֽא வெஷிம்கா நிக்ரா') என்ற சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன.

வ.19: நான்காவது தடவையாக கடவுள், படைகளின் ஆண்டவர் என விழிக்கப்டுகிறார். அத்தோடு முன்னைய நிலைக்கு தங்களை கொண்டுவருமாறு கேட்கிறார் ஆசிரியர்.



இரண்டாம் வாசகம்
பிலிப்பியர் 4,6-9

6எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். 7அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும். 8இறுதியாக, சகோதர சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள். 9நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார்.

பிலிப்பியர் திருமுகம் ஓர் அறிமுகம், கடந்தவாரத் தொடர்ச்சி:

பிலிப்பியர் திருமுகத்தின் இறையியல் தனித்துவமானது. அதிகமான திருமுகங்கள் அக்கால ஆரம்ப கால திருச்சபையின் நடைமுறை சிக்கல்களை தவிர்கவே உருவாகின. இந்த திருமுகம், கிறிஸ்தவ சீடத்துவம், சிலுவையின் முக்கியத்துவம், தூய ஆவியாரின் செயற்பாடுகள், மற்றும் கிறிஸ்தவ எதிர்நோக்கு என்ற சிந்தனைகளை முக்கிய கருப்பொருட்களாகக் கொண்டுள்ளன. கடவுளுக்கு ஏற்புடையவராக சட்டங்களை கடைப்பிடித்தால் போதாது, அது கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையில்தான் தங்கியுள்ளது என்பது பிலிப்பியர் திருமுகத்தின் ஒரு செய்தி. அத்தோடு இந்த ஏற்புடைமை முழுக்க முழுக்க கடவுளின் அருளில் தங்கியுள்ளது, மனித செயற்பாடுகள் இதனை தீர்மானிக்க முடியாது.

மகிழ்ச்சி என்ற செய்தி பிலிப்பியர் திருமுகத்தில் அடிக்கடி வருகின்றது. இந்த வார்த்தை இத்திருமுகத்தில் (χαρά காரா- மகிழ்ச்சி), பதினாறு தடவைகளுக்கு மேல் வருகிறது. பவுல் செபத்தில் மகிழ்ச்சி என்ற தலைப்பிலும் எழுதுகிறார் (காண்க 1,4). இதே மகிழ்ச்சியை வேலையிலும், துன்பத்திலும் ஏன் சாவிலுமே அனுபவிக்க முடியும் எனவும் காட்டுகிறார். பிலிப்பியர் திருமுகத்தின் நான்காவது அதிகாரம், அதன் இறுதி அதிகாரமாக, நன்றிகளையும் மற்றும் வாழ்த்துக்களையும் தாங்கி வருகின்றன.

வ.6: எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்கிறார் (μηδὲν μεριμνᾶτε மேதென் மெரிம்நாடே). தான் சிறையிலிருந்து கொண்டு எததைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்வது அவரது ஆழான நம்பிக்கையைக் காட்டுகிறது.

இதற்கு மாறாக நன்றியோடு இறைவேண்டல் (προσευχή புரொசெயுகே), மற்றும் மன்றாட்டு (δέησις தெஏசிஸ்), மற்றும் விண்ணப்பங்களை (αἴτημα அய்டேமா) கடவுளிடம் சமர்ப்பிக்கக் கேட்கிறார். இந்த வரியில் பவுல் செபத்துடன் சம்மந்தப்பட்ட மூன்று வார்த்தைகளை பாவிக்கிறார், இதிலிருந்து பலவகையான செபங்கள் இருந்திருக்கின்றன என்பது புலப்படுகிறது.

வ.7: இந்த வகையான செபமுறைகள் அறிவெல்லாம் கடந்த இறை அமைதியை கொண்டுவந்து, உள்ளத்தையும், மனத்தையும் பாதுகாக்கும் என்கிறார். இதற்கு ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்க வேண்டும். அறிவல்ல மாறாக கிறிஸ்துவின் இணைப்பே ஒருவருக்கு மன அமைதியை தருகிறது என்ற செய்தியும் சொல்லப்படுகிறது.

இதயமும், சிந்தனையும் இரண்டு சொற்களில் வார்த்தைப்படுத்தப்பட்டுள்ளன. கிரேக்க அறிவியலில் இந்த இரண்டும் மனிதரின் உணர்வுகளை தீர்மானிக்கின்ற உறுப்புக்களாக அறியப்பட்டன (καρδίας ὑμῶν καὶ τὰ ⸁νοήματα ὑμῶν கார்தியாஸ் ஹுமோன் காய் டா நொமாடா ஹுமோன்).

வ.8: இந்த வரி மிக முக்கியமானது. பலவிதமான அறிவுரைகளை வழங்கிய பவுல் இறுதியாக இவர்கள் எதனை மனத்தில் இருத்த வேண்டும் என காட்டுகிறார். அவற்றை உண்மையானவை (ἀληθῆ அலேதே), கண்ணியமானவை (σεμνά செம்நா), நேர்மையானவை (δίκαια திக்காய்யா), தூய்மையானவை (ἁγνά ஹக்னா), விரும்பத்தக்கவை (προσφιλῆ புரொஸ்பிலே), பாராட்டுதற்குரியவை (εὔφημα எவுபேமா), நற்பண்புடயவை (ἀρετὴ அரெடே), மற்றும் போற்றுதற்குரியவை (ἔπαινος எபாய்நொஸ்) என்கிறார். இதிலிருந்து கிறிஸ்தவ தெரிவுகள் எவ்வளவு மேன்மையானவை என புரிந்துகொள்ளலாம்.

வ.9: தன்னையே உதாரணமாக எடுக்கிறார் பவுல். தன்னிடம் கற்றுக்கொண்டவை (ἐμάθετε எமாதேடெ), பெற்றுக்கொண்டவை (παρελάβετε பாரெலாபெடெ), மற்றும் கண்டுணர்ந்தவை (ἠκούσατε ஏகூசாடே) போன்றவற்றை கடைப்பிடிக்க கேட்க்கிறார். இதனைச் செய்தால் அமைதியை அருளும் கடவுள் இவர்களோடு இருப்பார் என சொல்லப்படுகிறார். கடவுள்தான் அமைதியை அருளுபவர் என்ற செய்தியும் இங்கே கொடுக்கப்படுகிறது.


நற்செய்தி வாசகம்
மத்தேயு 21,33-43

கொடிய குத்தகைக்காரர் உவமை

(மாற் 12:1 - 12; லூக் 20:9 - 19)

33'மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்: நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக்குழி⁕ வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். 34பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்த போது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். 35தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். 36மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். 37தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். 38அம்மகனைக் கண்ட போது தோட்டத் தொழிலாளர்கள், 'இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 39பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள். 40எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?' என இயேசு கேட்டார். 41அவர்கள் அவரிடம், 'அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்கு சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறுதோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்' என்றார்கள். 42இயேசு அவர்களிடம், ''கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!' என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? 43எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.


மத்தேயு நற்செய்தியின் இருபத்தோராவது அதிகாரம், இயேசு எருசலேமிற்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்ததன் பின்னர் நடைபெற்ற போதனைகளைக் காட்டுகின்றது. முதலில் இயேசு கோவிலை தூய்மையாக்குகிறார், பின்னர் அத்திமரத்தை சபித்து அதன் வழி ஒரு உதாரணத்தைக் காட்டுகிறார் (வவ.12-22). இந்த அடையாளங்கள் யூத தலைமைத்துவத்தை கோபம் கொள்ள வைக்க அவர்கள் இயேசுவின் அதிகாரத்தை கேள்வி கேட்கிறார்கள். இவர்களின் கேள்விக்கு இயேசு இன்னொரு கேள்வியைத்தான் விடையாக கொடுக்கிறார் (காண்க வவ. 23-27). இந்த பின்னணியில் தான் இன்றைய நற்செய்தி வாசகம் வருகிறது. இந்த வாசகத்தோடு சேர்ந்து மூன்று உவமைகள் யூத தலைமை இயேசு மீது கொண்டிருந்த காழ்புணர்ச்சியைக் காட்டுவதாக அமைகின்றன (காண்க மத் 21,23-22,14: இரு புதல்வர் உவமை, கொடிய குத்தகைக்காரர் உவமை, திருமண விருந்து உவமை).

இந்த மூன்று உவமைகளிலும் அழைக்கப்பட்டவர்கள் தங்கள் மாண்பினையும், சந்தர்ப்பத்தையும் இழப்பதையும், இதனால் வேறு மக்கள் அதனை பெற்று, பெருவாழ்வு அடைவதையும் மத்தேயு நோக்கத்தோடு வரியிடுகிறார். இந்த உவமைகளின் வாயிலாக யார் உண்மையில் கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பதை மத்தேயு காட்ட முயற்சிக்கிறார். தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்கள் வாய்ப்பை பயன்படுத்தாத போது கடவுள் அதனை மற்றவர்களுக்கு கொடுக்கிறார் என்ற செய்தி சொல்லப்படுகிறது.

இந்த உவமை இறையறசைப் பற்றியதும், இறைவனின் மாற்று தெரிவு பற்றியதுமான இப்பகுதியின் இரண்டாவது உவமை. இந்த உவமையை கொடிய குத்தகைக்காரர் உவமை என்று தமிழ் விவிலியம் தலைப்பிடுகிறது.

வ.33: ஒரு பணக்கார திராட்சைத் தோட்ட முதலாளி செய்யும் முதலீடுகள் விவரிக்கப்படுகிறது. முதலில் அவர் தோட்டம் போடுகிறார் (ἐφύτευσεν எபுடெயுசென்), வேலி அமைக்கிறார் (φραγμὸν περιέθηκεν பிராக்மொன் பெரிஎதேகென்), பிழிவுக்குழி வெட்டுகிறார் (ὤρυξεν ஓரூட்சென்), காவல் மாடம் கட்டுகிறார் (ᾠκοδόμησεν πύργον ஓகொதொமேசென் புர்கொன்), இறுதியாக தன் தோட்டத்தை குத்தகைக்கு விடுகிறார் (ἐξέδετο αὐτὸν γεωργοῖς எட்செதெடொ அவுடொன் கெஓர்கொய்ஸ்). இவை அனைத்தையும் அவர் தானாக தன்னுடைய சொந்த செலவிலே செய்கிறார். ஆக இங்கே அவர்தான் முதலாளி என்பது தெளிவாகத் தெரிகிறது. இறுதியாக அவர் நெடும் பயணம் ஒன்றும் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் மூலம் அவர் தொலைவில் இருக்கிறார் என்பது புலப்படுகிறது.

வ.34: அறுவடைக் காலத்தில் தனக்குரியவற்றை சேகரிக்க தன் பணியாளர்களை குத்தகைக் காரர்களிடம் அனுப்புகிறார். துனக்குரியவற்றைத்தான் பெற அனுப்புகிறார் என்று மத்தேயு துல்லியமாக சொல்கிறார். இது அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சாதாரண செயற்பாடு.

வ.35: இந்த குத்தகைக்காரர்கள், அந்த முதலாளியின் பணியாளர்களுக்கு என்ன செய்தார்கள் என்பது சொல்லப்படுகிறது. குத்தகைக்காரர்கள் (γεωργός கெயோர்கொஸ்- விவசாயிகள்), நிலமற்றவர்களாக இருந்தவர்கள், அத்தோடு வறிய மக்களாகவும் இருந்தார்கள். இவர்கள் முதலாளிகளின் நன்மைத்தனத்திலே அதிகமாக நம்பியிருந்தவர்கள். இயேசுவின் காலத்தில் இவர்கள் அதிகமாக இருந்திருப்பார்கள். அத்தோடு இந்த உருவகம் யூதர்களுக்கு நன்கு புரிந்திருக்கும்.

இவர்கள் சிலரை நையப்புடைக்கிறார்கள், சிலரை கொலை செய்கிறார்கள் மற்றும் சிலரை கல்லால் எறிகிறார்கள். இது இறைவாக்கினர்களின் வரலாற்றைக் காட்டுகிறது. இதுவும் யூதர்களுக்கு நன்கு புரிந்திருக்கும்.

வ.36: தோட்ட உரிமையாளர் மீண்டும் அதேபோல் பணியாளர்களை அதிகமாக அனுப்புகிறார். அவர்களுக்கும் இந்த விவசாயிகள் அதனையே செய்கிறார்கள். இங்கே இந்த முதலாளியும், தொழிலாளியும் திரும்பச் செய்கிறார்கள். அவர் அனுப்புகிறார், இவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இதுவும் இறைவாக்கினர்களுடைய வருகையைத்தான் காட்டுகிறது.

வ.37: இறுதியாக தன் மகனை அனுப்புகிறார் முதலாளி. இவருடைய நம்பிக்கை, அவர்கள் தம் மகனை மதிப்பார்கள் என்றிருக்கிறது. மத்தேயு இங்கே இயேசுவைத்தான் மகன் என காட்டுவது தெளிவாகத் தெரிகிறது (υἵος ஹுய்யொஸ்- மகன்).

உரோமையருடைய காலத்திலும் சரி, இஸ்ராயேல் சமுகத்திலும் சரி, மகன் மிக முக்கியமானவர், அத்தோடு அவர்தான் அனைத்து உரிமையும் உடையவர். பணியாளர்களைப் போலல்லாது, மகன் மதிக்கப்படவேண்டடியவர்.

வ.38: இந்த வரி அந்த விவசாயிகளின் அசுத்தமான முகத்தைக் காட்டுகிறது. இவர்கள், மகனின் சொத்துக்கு ஆசைப்பட்டு, அவரை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். ஆக இவர்கள் தங்கள் செயலை அறிந்தே செய்கிறார்கள் என்பது புலப்படுகிறது. கொலை செய்வதற்கான திட்டம் முதலில் காட்டப்படுகிறது. இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். ஒருவேளை அவர்கள் மகனை மதித்திருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கலாம்.

வ.39: இரண்டு செயற்பாடுகளை இந்த விவசாயிகள் உரிமை மகனுக்கு செய்கிறார்கள். அவரை வெளியே தள்ளிவிடுகிறார்கள் (ἐξέβαλον எட்ஸ்செபல்லொன்). அவர் தன்னுடைய உரிமையிலிருந்து தள்ளிவிடப்படுகிறார். கொலையும் செய்கிறார்கள் (ἀπέκτειναν அபெக்டெய்நான்). அவருடைய வாழ்வதற்கான உரிமையும் பறிக்கப்படுகிறது. தங்களை நிரந்தரமாக அந்நியப்படுத்துகிறார்கள்.

வ.40: மத்தேயுவின் கேள்வி அனைத்து வாசகர்களுக்கும் பொருந்துகின்றது. 'இப்போது அந்த உரிமையாளர் என்ன செய்வார்? (τί ποιήσει). இதற்கான விடையை அனைத்து வாசகர்களும் நன்கு அறிவர்.

வ.41: விடையை அழகாகச் சொல்கிறார்கள் சீடர்கள். தீயோர் இரக்கமின்றி ஒழிவர், நல்ல தொழிலாளர்களுக்கு அந்த தோட்டம் கொடுக்கப்படும். இந்த செயற்பாட்டின் மூலம், தோட்ட முதலாளி பலவீனமானவர் அல்ல மாறாக அவர் அந்த தீயவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே அவர்களின் தீமையை மன்னித்தார் என்பது புலப்படுகிறது. இவர் மீண்டும் தனக்கு விசுவாசமானவர்களை தேடுகிறார் என்பதும் புரிகிறது.

வ.42: மத்தேயுவின் இயேசு, திருப்பாடல் 118,22-23 வரையான வரிகளை இங்கே கோடிடுகிறார். இந்த வரி எபேசியர் திருமுகத்திலும் பாவிக்கப்பட்டுள்ளது (காண்க எபே 2,20-22). கட்டுவோரால் புறக்கணிக்கப்பட்ட கல், கட்டடத்தின் மூலைக்கல் ஆகிறது. மூலைக்கல் (κεφαλὴν γωνίας கெபாலென் கோனியாஸ் - தலைக் கல்) கட்டத்திற்கு மிக முக்கியமானது. அத்தோடு இது தற்செயலாக நடைபெறவில்லை மாறாக கடவுளால் நடைபெறுகிறது அதேவேளை இது மனித கண்களுக்கு ஆச்சரியமாகவும் உள்ளது. இதனை நீங்கள் வாசிக்கவில்லையா என்று இயேசு கேட்பதன் வாயிலாக, இவர்கள் தெரிந்தும் புரியாமல் இருக்கிறார்கள் என சாடுவது போல உள்ளது.

அதிகமான யூதர்கள் நல்ல விவிலிய அறிவுள்ளவர்கள். இதனால் இவர்களுக்கு மறையறிவு தெரிந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். (இது அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் சாலப் பொருந்தும்.)

வ.43: இந்த வரி தண்டனைத் தீர்ப்பை கடுமையாகக் காட்டுகிறது. அதாவது, தெரிவு செய்யப்பட்டவர்கள் இறையாட்சியை பாவிக்காவிட்டால், அது அவர்களிடமிருந்து எடுக்கப்படும், அத்தோடு உடனடியாக அது பொறுப்பாக செயற்படும் வேறு மக்களுக்கு கொடுக்கப்படும். ஆக கடவுளின் மக்களினமாக மாறுவது ஒருவரின் பிறப்பல்ல மாறாக பொறுப்புணர்ச்சியும் நம்பிக்கையுமே என்பது காட்டப்படுகிறது.

கடவுளின் அமைதி அவரது பலவீனத்தை அல்ல,

மாறாக அவரின் அன்பின் ஆழத்தையே காட்டுகிறது.

கடவுளுக்கு அனைவரும் பிள்ளைகளே,

ஒருவரின் பொறுப்பில்லாத வாழ்வு,

சந்தர்ப்பங்களை மற்றவருக்கு கொடுக்கும்.

அன்பின் ஆண்டவரே

உம் செடியில் இணைந்து கனி கொடுக்கும் கிளையாக என்னை மாற்றும், ஆமென்