இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் பதினைந்தாம் ஞாயிறு (அ)

முதல் வாசகம்: எசாயா 55,10-11
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 65
இரண்டாம் வாசகம்: உரோமையர் 8,18-23
நற்செய்தி: மத்தேயு 13,1-23


முதல் வாசகம்
எசாயா 55,10-11

10மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன் அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. 11அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.

எசாயா புத்தகத்தின் மூன்றாவது பிரிவிற்குள் இந்த அதிகாரம் உள்வாங்கப்பட்டுள்ளது. இதன் சூழமைவாக பபிலோனியாவிலிருந்து நாடுதிரும்பிய காலப்பகுதியை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த பகுதியில் வருகின்ற ஆண்டவரின் பேரிரக்கம் என்ற பகுதி, யூதேய நாடு திரும்பிய அகதிகளுக்கு நிச்சயமாக மிக இதமாக இருந்திருக்கும். புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களையே வியக்க வைக்கும் அளவிற்கு இந்த அதிகாரத்தின் வரிகள் மிக அழகாகவும், ஆண்டவருடைய இரக்கத்தின் இனிமையை காட்டுவதாகவும் அமைந்துள்ளது. பலவிதமான துன்பங்களை அனுபவித்தவர்களுக்கு இந்த மூன்றாம் எசாயாவின் வார்த்தைகள் நம்பிக்கை தருவதாக அமைந்தாலும், சிலருக்கு இது சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்திருக்கலாம். இதனைத்தான் இந்த இரண்டு வரிகளும் சரிசெய்கின்றன.

வ.10: மழையும் பனியும் (הַגֶּשֶׁם וְהַשֶּׁלֶג ஹகெஷெம் வெஹஷெலெக்), நிச்சயமாக செமித்தியர்களுக்கு கடவுளுடைய அடையாளங்கள். (இந்த வெப்ப நாட்களில் வடக்கு கிழக்கில் வாழ்கின்றவர்களுக்கும் இது புரியலாம்). பாலைவன மக்களுக்கு நீரும் பனியும் அதிசயங்கள் அதேவேளை இதனை கட்டுப்படுத்துகிறவர் பலமான இறைவன். எசாயா நீரையும் பனியையும் வானத்திலிருந்து இறங்கிவருகின்றனவாக கருதுகின்றார். விழுகின்றன என்பதை விட ஆசிரியர் இதனை இறங்கிவருகின்றன என்றே காண்கிறார். அத்தோடு அவை வானகத்திற்கு மீண்டும் ஏறுவதில்லை (לֹא יָשׁוּב லோ' யாஷுவ்- அவை திரும்பா) எனவும் சொல்கிறார். இவருக்கு புவியீர்ப்பு விசை தெரிந்திருக்க வாய்ப்பில்லை இருந்தாலும், ஆண்டவரின் அதிசயங்களை நன்றாக தியானிக்க தெரிந்திருக்கிறது.

இப்படி திரும்பிச் செல்லாத மழையும் பனியும் என்ன செய்கிறது என்பதை விவசாயத்தின் அனுபவம் வாயிலாக காட்டுகிறார். அவை நிலத்தை நனைக்கின்றன (הִרְוָה אֶת־הָאָרֶץ ஹிர்வாஹ் 'எத்-ஹா'அரெட்ஸ்- நிலத்திற்கு நீர் ஊற்றுகின்றன), முளை அரும்பி வளரச் செய்கின்றன (וְהוֹלִידָהּ וְהִצְמִיחָהּ வெஹோலிதாஹ் வெஹிட்ஸ்மிஹாஹ்- அதனை பெற்றெடுக்கின்றது மற்றும் வளர்க்கின்றது). இச் செயற்பாடுகள் இன்னும் இரண்டு எதிர்விளைவுகளை உருவாக்குகின்றன, அதனையும் அழகாக படமாக்குகிறார் ஆசிரியர், அதாவது அவை விதைப்பவனுக்கு விதையையும், உண்பவனுக்கு உணவையும் கொடுக்கின்றன. இங்கே பாவிக்கப்பட்டுள்ள தமிழ்ச் சொற்கள் அழகாக எதுகை மற்றும் ஒத்த சொற்களால் நெய்யப்பட்டுள்ளன. எபிரேயத்திலும் இவ்வாறே, மூல மொழியாக உள்ளது.

இந்த மழை மற்றும் பனியின் செயற்பாடுகள், இயற்கையாக நடைபெறுபவை ஆனால் அவை அமைதியாக மறைமுகமாக நடைபெறுகின்றன. மழையினதும் பனியினதும் தாக்கத்தை வெளிப்படையாக அவதானிக்க முடியாது, ஆனால் அவை மறைமுக தாக்கத்தை செலுத்துகின்றன. இந்த தாக்கம் பூமியின் வெளியமைப்பையே மாற்றவல்லது.

வ.11: இந்த வரியில், முதல் வரியில் பாவிக்கப்பட்ட உதாரணத்தை வைத்து இறைவார்த்தைக்கு அதனை ஒப்பிடுகிறார். 'இப்படியே இருக்கும் என் வார்த்தை' (כֵּ֣ן יִֽהְיֶ֤ה דְבָרִי֙ கென் யிஹ்யேஹ் தெவாரி) என்று இந்த வரி தொடங்குகின்றது.

வார்த்தை என்பது வெறும் சொல் என்பதை விட, கட்டளை, விருப்பம், சட்டங்கள், நியமங்கள், உறுதிமொழிகள் என்று பல அர்த்தத்தைக் கொடுக்கவல்லது (דָּבַר தாவார்). இந்த வார்த்தையின் நோக்கம் என்னவென்றும் கடவுள் தெளிவுபடுத்துகிறார். அதாவது இந்த வார்த்தை கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும், வெற்றியளிக்க வேண்டும். அத்தோடு அது வெறுமையாக திரும்பி வரக்கூடாது. வெறுமையாக திரும்பி வந்தால் இந்த வார்த்தை அதன் தனித்துவத்தை இழக்கிறது (לֹא־יָשׁוּב אֵלַ֖י רֵיקָם லோ'-யாஷூவ் 'எலி ரெகாம்). ஒருவருடைய வார்த்தை, முக்கியமாக அரசர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களுடைய வார்த்தைகள் அந்த ஆட்களையே குறிக்கின்றன. இந்த வார்த்தைகள் அந்த முக்கியமான ஆட்களைப்போலவே மதிக்கப்படவேண்டும். இந்த வார்த்தைகள் மதிக்கப்பட்டால் அந்த நபர்கள் மற்றும் அவர்களின் அதிகாரங்கள் மதிக்கப்படுவதற்கு சமன், அதேபோல அவை நிராகரிக்கப்பட்டால், அது அந்த முக்கிய நபர்களின் அதிகாரங்களை கேள்விக்குறியாக்கிறன. இதனைத்தான் கடவுள் எசாயா வழியாக தன் விசுவாசிகளுக்கு நினைவூட்டுகிறார்.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 65

நன்றிப் புகழ்ப்பா
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பாடல்)
1கடவுளே, சீயோனில் உம்மைப் புகழ்ந்து பாடுவது ஏற்புடையது! உமக்குப் பொருத்தனைகள் செலுத்துவதும் சால்புடையது!
2மன்றாட்டுக்களைக் கேட்கின்றவரே! மானிடர் யாவரும் உம்மிடம் வருவர்.
3எங்கள் பாவங்களின் பளுவை எங்களால் தாங்கமுடியவில்லை ஆனால் நீர் எங்கள் குற்றப் பழிகளைப் போக்குகின்றீர்.
4நீர் தேர்ந்தெடுத்து உம்மருகில் வைத்துக்கொள்ளும் மனிதர் பேறு பெற்றோர்; உம் கோவிலின் முற்றங்களில் அவர்கள் உறைந்திடுவர்; உமது இல்லத்தில், உமது திருமிகு கோவிலில் கிடைக்கும் நன்மைகளால் நாங்கள் நிறைவு பெறுவோம்.
5அஞ்சத்தகு செயல்களை நீர் புரிகின்றீர்; எங்கள் மீட்பின் கடவுளே! உமது நீதியின் பொருட்டு எங்கள் மன்றாட்டுக்கு மறுமொழி பகர்கின்றீர்; உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அனைவருக்கும் தொலையிலுள்ள தீவுகளில் உள்ளோருக்கும் நம்பிக்கை நீரே!
6வல்லமையை இடைக்கச்சையாகக் கொண்ட நீர் உமது ஆற்றலால் மலைகளை உறுதிப்படுத்துகின்றீர்.
7கடல்களின் இரைச்சலையும் அவற்றின் அலைகளின் ஓசையையும் மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றீர்!
8உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் உம் அருஞ் செயல்களைக் கண்டு அஞ்சுவர்; கிழக்கு முதல் மேற்குவரை உள்ளோரைக் களிகூரச் செய்கின்றீர்!
9மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர்.
10அதன் படைசாலகளில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர்.
11ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன.
12பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன் குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன.
13புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன் பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன. அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை!


திருப்பாடல் 65 ஒரு சமூக புகழ்ச்சிப்பாடல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது திருப்பாடல் புத்தகத்தின் இரண்டாவது புத்தகத்தினுள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலும், பல பாடல்களைப் போல தாவீதிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. பாடகர் தலைவர் இதன் ஆசிரியராக இருக்கவேண்டிய தேவையில்லை. இந்த பாடகர் தலைவர் ஆலயத்திலோ அல்லது அரண்மனையிலோ பாட்டுக்களை ஒழுங்கமைப்பவராக இருந்திருக்கலாம்.

வ.1: சீயோனில் கடவுளை புகழ்ந்து பாடுவதும், பொருத்தனைகள் செய்வதும் ஒத்த கருத்துச் சொற்களாக பார்க்கப்படுகின்றன. இந்த வரியில் புகழ்ந்து பாடுதல் என்பதற்கு துமுயாஹ் (דֻֽמִיָּה ) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தமாக அமைதி, மௌனமாக, காத்திந்து புகழ்தல் என்ற அர்த்தத்தையும் காணலாம். பொருத்தனைகள் என்பது அமைதிக்கான நேர்த்திகள் என்று அர்த்தப்படும் (יְשֻׁלַּם־נֶדֶר யெஷுலாம்-ரெதெர்). இந்த பொருத்தனைகள் பாவங்களுக்கு பரிகாரமாகவும், சட்டங்களை மீறியதற்கு ஒப்பீடாகவும் எருசலேம் தேவாலயத்தில் நிறைவேற்றப்பட்டன.

வ.2: ஆண்டவருக்கு அழகான பெயரை வைக்கிறார் ஆசிரியர். ஆண்டவரை, 'மன்றாட்டுக்களை கேட்கின்றவர்' என அழைக்கிறார் (שֹׁמֵעַ תְּפִלָּה ஷோமெ'அ தெபில்லாஹ்). இந்த வார்த்தைக்கு பின்னால் ஆசிரியரின் ஆழமான விசுவாசமும், ஆண்டவருடனான உறவும் தென்படுகிறது. மானிடர் யாவரும் உம்மிடம் வருவர் என்பதற்கு, அனைத்து சதைகளும் உம்மிடம் வருகின்றன (כָּל־בָּשָׂר יָבֹאוּ கோல்-பாஷார் யாபோ'வு) என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது. சதைகள் என்பதை மனிதர்களுக்கு மட்டும் கட்டுப்படுத்த முடியாது, சில இடங்களில் இது அனைத்து உயிர்களையும் குறிக்கும். உயிர்கள் கடவுளிடம் வருவதற்கான காரணம், அவர் அவற்றின் தேவைகளை அறிகிறார் என்பதாகும்.

வ.3: தம் பாவங்களின் பழுவை தம்மால் சுமக்க முடியவில்லை என்கிறார். எப்படியான பாவங்கள் என்று ஆசிரியர் சொல்லவில்லை. எங்கள் பாவங்களின் பழுவை என்பதை எபிரேய விவிலியம் 'என் பாவத்தின் கணக்குகள் என்னை மேற்கொள்கிறது' என்றே காட்டுகிறது (דִּבְרֵי עֲוֹנֹת גָּבְרוּ מֶנִּי திவ்ரே 'அயோநோத் கெவ்ரு மென்னி). இருப்பினும் கடவுள் இவர்களின் பாவத்தை இல்லாமல் ஆக்குகிறார் என்று புகழ்கிறார். பாவத்தை இல்லாமல் ஆக்குகிறார் என்பதற்கு 'மறைக்கிறார்' என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது (תְכַפְּר தெகபெர்).

வ.4: பேறுபெற்றவர்கள் யார் என்பதற்கு புதிய விளக்கம் ஒன்றைக் கொடுக்கிறார் ஆசிரியர், அவர்கள் கடவுளால் தெரிவு செய்யப்பட்டு அவருக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளவர்கள் என்கிறார். இப்படி கடவுளுக்கு அருகில் இருப்பதென்றால் என்ன? என்பதற்கும் இந்த அடியின் இரண்டாவது பிரிவு விளக்கம் கொடுக்கிறது. அவர்கள் கோவிலின் முற்றங்களில் (חָצֵר ஹாட்சேர்) உறைகிறவர்கள்.

இறுதியாக 'அவர்கள்' என்ற மூன்றாம் ஆள் பன்மையை 'நாங்கள்' என்ற முதலாம் ஆள் பன்மையாக மாற்றுகிறார். இதன் வாயிலாக இந்த மேல் வரிகளில் சொல்லப்பட்டவர்கள் தாங்கள்தான் என்பதை விளக்குகிறார். இப்படியாக இவர்கள் ஆண்டவரின் கோவில் தரும் 'நன்மைகளால்' (בְּטוּב பெதோவ்) நிறைவுபெறுகிறார்கள்.

வ.5: ஆண்டவர் அச்சம் தரும் செயல்களை செய்கிறவர்: அதாவது இங்கே ஆண்டவருடைய நீதியான செயற்பாடுகள் விளக்கப்படுகின்றது (נוֹרָאוֹת நோரா'ஓத்). ஆண்டவருக்கு இன்னொரு அழகான பெயரும் கொடுக்கப்பட்டு, அவர் நீதியால் பதிலளிக்கும், மீட்பின் கடவுளாக பார்க்கப்படுகிறர் (אֱלֹהֵי יִשְׁעֵנוּ 'எலோஹி யிஷ்'அனு). இப்படியாக வரியின் பகுதி மிகவும் அழகான வாhத்தைகளால் உருவாக்கப்பட்டு கடவுளுக்கும் மக்களுக்குமான உறவு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ராயேலின் கடவுள் இஸ்ராயேலருக்கு மட்டும்தான் என்ற நிலைமாறி, அவர் தொலைநாட்டினர்க்கும், மற்றும் தீவு நாட்டினர்க்கும் நம்பிக்கையின் கடவுளாக அறியப்படுகிறார். தொலைநாட்டினர் மற்றும் தீவு நாட்டினர் என்ற சொற்கள் ஒத்தகருத்துச் சொற்களாக பாவிக்கப்பட்டிருக்கின்றன. தொலை நாட்டினர் என்பதற்கு எபிரேயம் כָּל־קַצְוֵי־אֶ֝רֶץ கோல் காட்ஸ்வே-'எரெட்ஸ் என்ற சொற்களைப் பாவிக்கினறது. இது 'நிலத்தின் அனைத்து எல்லைகளுக்கும்' என்று அர்த்தத்தைக் கொடுக்கும். திருப்பாடல் ஆசிரியருக்கு இந்த வரைவிலக்கணம் மேற்கு மற்றும் கிழக்கு எல்லை நாடுகளைக் குறித்திருக்கலாம். தீவு நாட்டினர் என்பதற்கு எபிரேயம் יָם רְחֹקִים׃ யாம் ரெஹோகிம் என்ற சொல்லை பாவிக்கிறது, இதற்கு கடலின் தொலைதூர இடங்கள் என்ற அர்த்தம் வருகிறது. இதன் மூலம் ஆசரியர் கிரேக்க தீவுகளை அல்லது அரேபிய தீவுகளைக் குறிக்கிறார் எனலாம். ஏன் கடல்கள் என்று சொல்லாமல், கடலின் தொலைதூர இடங்கள் என்று சொல்கிறார் என்பது தெளிவில்லை. பிற்கால எழுத்துப்பிழையாகக்கூட இருக்கலாம்.

வ.6: இடைக் கச்சை (אֵזוֹר 'எட்ஸ்சோர்) என்பது ஓரு தலைவரின் அதிகாரத்தைக் குறிக்கும். அரசர்கள் தங்கள் இடைக் கச்சையின் அழகு வடிவத்தில் மிகுந்த கரிசனை காட்டினார்கள். ஆண்டவருடைய இடைக் கச்சை, சாதராண மனித தலைவர்களுடைய ஆடைமட்டுமல்ல மாறாக அது அவருக்கு வல்லமையாக இருக்கிறது. ஆண்டவர் உண்மையான வல்லமையைக் கொண்டிருப்பதனால் அவர்தான் மலைகளைக்கூட உறுதிப்படுத்துகிறவர் என்கிறார் ஆசிரியர்.

அக்கால மக்களுக்கு, நில நடுக்கங்கள் மற்றும் பூகம்பங்கள் போன்றவை வித்தியாசமான அறிவைக் கொடுத்திருக்கும். இதிலிருந்து இந்த மலைகள்கூட அசையக்கூடியவை என்ற முடிவிற்கு வந்திருப்பார்கள். கடவுள் மலையில் உச்சியின் இருக்கிறார் என்பதும் அக்கால நம்பிக்கையாக இருந்திருக்கிறது. இதனால் இந்த மலைகளையும் உறுதிப்படுத்துகிறவராக அவர் காட்டப்படுகிறார் (הָרִים ஹாரிம்- மலைகள்).

வ.7: மலைகளின் மேல் அதிகாரம் கொண்டவர் என்று மட்டுமல்லாமல் கடல்களின் மீதும் கடவுளுக்கு அதிகாரம் உள்ளதை நினைவூட்டுகிறார் ஆசிரியர். சாதாரணமாக கடல், தீய சக்திகளை அடக்கிவைத்திருக்கும் இடமாக கருதப்பட்டது. முதல் ஏற்பாட்டில் அதிகமான இடங்களிலும் புதிய ஏற்பாட்டில் சில இடங்களிலும் இந்த சிந்தனை வருவதை அவதானிக்கலாம். கடவுள் கடல்களின் இரைச்சலையும், அதன் அலைகளின் இரைச்சலையும் (שְׁאוֹן ימִּים שְׁאוֹן גַּלֵּיהֶם ஷெ'ஓன் யாம்மிம் ஷெ'ஓன் கல்லெஹெம்) அடக்குகிறார். அடுத்த பகுதியில் இந்த இரைச்சல்களுடன் மக்களின் அமளிகளை ஒப்பிடுகிறார் ஆசிரியர். இவர்கள் இஸ்ராயேலருக்கு சவாலாக இருந்த பெரிய நாடுகளைக் குறிக்கலாம். இப்படியாக இந்த நாட்டினருடைய செயற்பாடுகள் இரைச்சலுக்கு ஒப்பிடப்படுகிறது, அதனை அடக்குபவராக கடவுள் காட்டப்படுகிறார்.

வ.8: கடவுளின் செயலுக்கு அஞ்சுதலும், அவருடைய செயற்பாடுகளைக் கண்டு களிகூருதலும் ஒன்றாக நோக்கப்படுகிறது. உலகின் கடையெல்லையில் உள்ளவர்கள் கடவுளின் செயலைக் கண்டு அஞ்சுதல் என்பது அவர்கள் இஸ்ராயேலின் கடவுளை உண்மைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளுதலைக் குறிக்கிறது. கிழக்கு முதல் மேற்குவரை வாழ்வோரைக் குறிக்க, காலை முதல் மாலை (בקֶר וָעֶרֶב வோகேர் வா'எரெவ்) என்ற சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன. இது சூரியனின் உதயத்தையும் அதன் மறைவையும் குறிக்கின்ற இடங்களைக் குறிக்கிறது. இப்படியாக ஆசிரியர் உலகத்தின் அனைத்து இடங்களையும், முக்கியமாக இஸ்ராயேலருக்கு தெரியாத இடங்களையும் உள்ளடக்கி அவர்களுக்கும் நம் கடவுள்தான் தஞ்சம் என காட்ட முயற்ச்சிக்கிறார்.

வ.9: மலை, கடலைப் பற்றிப் பேசியவர், ஆறுகளைப் பற்றிப் பேச முயல்கிறார். நீர் வளம் மிக முக்கியமானது என்பதை இன்று அனைவரும் அறிந்துகொள்கின்றனர். ஆனால் இந்த உண்மையை இஸ்ராயேலரும், மத்திய கிழக்கு நாடுகளின் மக்களும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர். இதனால்தான் பல வேளைகளில் நீர் இறை பிரசன்னமாக இவர்களின் இலக்கியங்களில் பார்க்கப்படுகிறது. இந்த வரியில் மண்ணுலகை பேண கடவுள் நீர் வளத்தை பேணுகிறார் என சொல்கிறார். இந்த வரியையின் முதல் பிரிவை எபிரேய விவிலியம் இப்படிக் காட்டுகிறது פָּקַדְתָּ הָאָרֶץ ׀ וַתְּשֹׁקְקֶהָ רַבַּת תַּעְשְׁרֶנָּה பாகத்தா ஹா'ஆரெட்ஸ் ׀ வத்ஷோக்கெஹா ரப்பாத் த'ஷெரென்னாஹ் - நிலத்தை நீர் தரிசித்தீர் ׀ அதனை நீரால் நிரம்பச் செய்தீர், அதனை மிகுதியாகவே வளப்படுத்தினீர். கடவுளின் ஆறு என்று சொல்லப்படுவது பெரிய ஆறு ஒன்றைக் குறிக்கலாம் (פֶּלֶג אֱלֹהִים பெலெக் எலோஹிம்). இந்த ஆறு எங்கிருக்கிறது என்று தெரியவில்லை ஆனால் மிகவும் வளமானதாகவும் தானியங்களை விளைவிப்பதாகவும் காட்டப்படுகிறது.

வ.10: இந்த வரி விவசாய நிலஅமைப்பைக் காட்டுகிறது. வரப்பின் உயரம் கூட்டப்பட்டதால், தண்ணீர் அதிகமாக நிற்கிறது. பின்னர் நிலத்தை மழையால் கடவுள் நனைப்பதாகவும் சொல்கிறார். இதனால் நல்ல விளைச்சல் கிடைக்கவிருக்கிறது. இங்கே பாவிக்கப்படுகின்ற சொற்கள் வேளான்மையுடன் சம்மந்தப்பட்ட சொற்கள், இதன் வாயிலாக இந்த ஆசிரியருக்கு விவசாயம் பற்றிய நல்ல அறிவு இருந்திருக்கிறது என்பது புலப்படுகிறது. இந்த பாடல் நம்முடைய ஒளவை பாட்டியாரின் 'வரப்புயர' என்ற பாடடை நினைவிற்கு கொண்டுவரலாம்.

வ.11: ஆண்டவருடைய ஆசீர் ஆண்டு முழுவதும் ஆசீக்கப்படுகிறது. ஆண்டவர் ஆண்டு முழுவதும் தன்னுடைய நன்மைத் தனங்களால் நிறப்புகிறார் என்பது, ஆண்டவருடைய ஆசீர்வாதத்தை இவர் ஆண்டு முழுவதும் பெற்றிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. ஆண்டவருடைய பாதைகள் (מַעְגָּל ம'கால்) கூட கொழிக்கின்றன எனக் காட்டப்பட்டுள்ளது.

வ.12: ஆசிரியரின் கற்பனைகளை இந்த வரி அழகாக் காட்டுகிறது. பாலைவனத்தில் சோலைகள் இருப்பது இயற்கை ஆனால் அவை அரிதாகவே காணப்படும். ஆசிரியர் இந்த பாலைவன சோலைகள் நிறைந்திருப்பதாகக் காட்டுகிறார். பாலைவனத்தில் குன்றுகளும் அதிகமாக சில மத்திய கிழக்கு பிரதேசங்களில் காணப்படும். இந்த குன்றுகள் மகிழ்ச்சியை இடைக் கச்சையாக கட்டியிருக்கின்றன என கற்பனை செய்கிறார்.

வ.13: மேய்ச்சல் நிலங்கள் குறைவாக இருக்கின்ற படியால் மந்தைகள் மேய்ச்சல் நிலங்களில் அதிகமாக மேய்வது வழக்கம். இந்த நிகழ்வை வித்தியாசமாக பார்த்து, மந்தைகளை மேய்சல் நிலத்தின் ஆடைகளாக காண்கிறார். இதற்கு ஒத்த நிகழ்வாக பள்ளத்தாக்குகள் தானியங்களால் நிறைந்திருக்கின்றன என்றும் காண்கிறார். இந்த இரண்டும் ஆரவாரம் செய்கின்றனவாம். இந்த ஆசிரியர் நல்ல கற்பனையாளரும் அத்தோடு இயற்கை ஆர்வலராகவும் இருந்திருக்க வேண்டும்.



இரண்டாம் வாசகம்
உரோமையர் 8,18-23

வரப்போகும் மாட்சி

18இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். 19இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. 20ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை. 21அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது. 22இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். 23படைப்பு மட்டும் அல்ல முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.


உரோமையர் திருமுகம் எட்டாவது அதிகாரத்தில் பவுல் தூய ஆவி அருளும் வாழ்வைப் பற்றி விவாதிக்கின்றார். கடந்த வார வாசகத்தல், தூய ஆவி ஒருவரில் குடிகொண்டால் அவருக்கு நடக்கபோகும் மாற்றங்களைப் பற்றி பார்த்தோம். இன்றைய பகுதி தூய ஆவியில் வாழ்வதனால் வரப்போகும் மாட்சி என்ற தலைப்பில் சிந்திக்கலாம். தொடர் துன்பங்களும், துயரங்களும் சில வேளைகளில் மக்களின் நம்பிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவை, இதனை தெளிவுபடுத்த வேண்டியது திருச்சபை தலைவர்களுடைய கடமையாக இருக்கிறது. உரோமைய திருச்சபையில் இந்த நிலையை நன்கு அறிந்திருந்த பவுல், அதற்கு எதிர்கால நிலையைக் காட்டி துன்பங்களை தாங்கிக் கொள்ள வல்லமை பெறவேண்டும் என விளக்குகிறார்

வ.18: இக்காலத்தில் கிறிஸ்தவர்கள் படும் துன்பம் (παθήματα τοῦ νῦν καιροῦ பதேமாடா தூ நுன் கைரூ- இந்த காலத்தின் துன்பம்), மற்றும் எதிர்காலத்தில் அவர்கள் சந்திக்கவிருக்கும் மாட்சி (μέλλουσαν δόξαν மெல்லூசான் தொக்ட்சான்- எதிர்கால மாட்சியை) இரண்டையும் ஒப்பிடுகிறார். இதிலே வரப்போகும் மாட்சியை உயர்வாக்கி அதனுடம் தற்கால துன்பத்தை ஒப்பிட்டுக்கூட பார்க்முடியாது என்கிறார்.

வ.19: இந்த மாட்சியோடு கடவுளின் மக்கள் வெளிப்பட இருக்கிறார்கள் என்பது இயேசுவின் இரண்டாம் வருகையின் போது அவரோடு உயிர்த்த மக்களும் காட்சி தருவார்கள் என்ற ஆரம்ப கால திருச்சபையின நம்பிக்கையைக் காட்டுகிறது. கடவுளின் மக்கள் என்பதை கிரேக்க மூல விவிலியம் கடவுளின் பிள்ளைகள் எனக் காட்டுகிறது (υἱῶν τοῦ θεοῦ ஹுய்யோன் தூ தியூ- கடவுளின் மகன்கள்). இந்த மாட்சியைக் காண்பதற்கு படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது என்று சொல்லி ஆண்டவருடைய இரண்டாம் வருகைக்கு முழு படைப்பையும் உள்வாங்குகிறார்.

படைப்பிற்கு கிரேக்க விவிலியம் பாவிக்கும் சொல் κτίσις கிடிசிஸ், இது முழுப்படைப்பையும் குறிக்கும், இதற்குள் உயிருள்ளவை மற்றும் உயிரில்லாதவை அனைத்தும் அடங்கும். இப்படியாக இயேசுவை முழு உலகிற்கும் கடவுளாகக் காட்டுகிறார்.

வ.20: ஏன் படைப்பு அனைத்தும் இயேசுவின் வெளிப்பாட்டிற்காக காத்திருக்கின்றன என்பதற்கு இந்த வரி விடையளிக்கிறது. படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது என்பது இதன் விடை. பயனற்ற நிலை என்பதை விளக்க கிரேக்க விவிலியம் ματαιότης மடாய்யொடேஸ் என்ற சொல்லை பயன்படுத்துகிறது. மடாய்யோடேஸ் என்பது நிலையில்லாத, உண்மையில்லாத, மற்றும் பொருந்தாத நிலையைக் குறிக்கிறது. அதேவேளை இந்த நிலைக்கு படைப்பு மட்டும்தான் காரணம் என்று சொல்லி உரோமையரை மனம்நோகச் செய்யாமல், அதனை உட்படுத்தியவர் ஒரு விதத்தில் பொறுப்பு என்கிறார். இப்படியாக படைப்பை இந்த நிலைக்குள் உட்படுத்தியவர் யார் என்ற கேள்வி எழுகிறது. இது கடவுளாக இருக்கலாம்.

இது பிழையாக அர்த்தத்தை கொடுக்கக்கூடாது என்பதற்காக, ஏன் படைப்பு இப்படி உட்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை விளக்குகிறார். அதாவது எதிர்நோக்கை கொடுப்பதற்காகவே இப்படியான நிலைக்குள் படைப்பு தள்ளப்பட்டிருக்கிறது என்கிறார் (ἐλπίς எல்பிஸ்- எதிர்நோக்கு)

வ.21: இந்த எதர்நோக்கின் நிலையைப் பற்றி சொல்கிறார் பவுல், அதாவது படைப்பு அழிவுக்குரிய நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அழிவுக்குரிய நிலை 'அழிவுக்கு அடிமையாயிருக்கும் நிலை' என்று சொல்லப்படுகிறது (τῆς δουλείας τῆς φθορᾶς டேஸ் தூலெய்யாஸ் டேஸ் ப்தொராஸ்), அதாவது படைப்பு படைக்கப்பட்டால் அது அழிவடைய வேண்டும் என்ற நிலை.

இந்த நிலையிலிருந்து படைப்பிற்கு புதிய நிலையொன்று கொடுக்கப்பட்டிருக்கிறது, அதாவது படைப்பு, மாட்சியின் சுதந்திரத்தையும், கடவுளின் பிள்ளைகள் என்ற பெருமைகளையும் பெறுகிறது. மாட்சி கடவுளுக்கு மட்டும் உரிய பண்பாக கருதப்பட்டது, இப்போது முழுப் படைப்பிற்கும் சாத்தியமாகிறது, அத்தோடு யூதர்கள் மட்டும்தான் கடவுளின் பிள்ளைகள் என்ற நிலை மாறி எதிர்நோக்கோடு இருக்கும் அனைத்து படைப்புமே கடவுளின் பிள்ளையாகும் வாய்ப்பினையும் பெறுகிறது (τέκνων τοῦ θεοῦ டெக்னோன் தூ தியூ- கடவுளின் குழந்தைகளாக).

வ.22: பேறு கால வேதனையை பல வேளைகளில் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் உதாரணத்திற்கு எடுக்கிறார்கள். இது ஒரு சாதாரண உதாரணமாக அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும். மருத்துவம் இக்காலத்தை போல மிக வளர்ந்திராத அக்காலத்தில், பேறுகால வேதனை, அனைத்து பெண்களுக்கான சாதாரண துன்பமாக இருந்திருக்க வேண்டும். இந்த பேறுகால வேதனையை குறிக்க கிரேக்க விவிலியம் συστενάζω சுஸ்டெனாட்சோ (சேர்ந்து வேதனைப்படுதல்), என்ற சொல்லை பயன்படுத்துகிறது. பேறுகால வேதனை குழந்தை பிறக்கும் வரை இருக்கும், அதேபோல படைப்பு ஆண்டவரை சந்திக்கும் வரை வேதனையில் இருக்கிறது என்கிறார்.

வ.23: படைப்பு மட்மல்ல மாறாக, முதற்கொடையாக தூய ஆவியைப் பெற்றவர்களும், கடவுள் அவர்களை தம் பிள்ளைகளாக்கும் நாளுக்காக படைப்பைப்போல காத்திருக்கிறார்கள் என்கிறார். இந்த வரியில் படைப்பிற்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையிலாக வித்தியாசத்தை காட்டுகிறார். அதாவது கிறிஸ்தவர்கள், தூய ஆவியை முதற்கொடையாக பெற்றவர்கள் என்ற பெயர் பெறுகிறார்கள்.

கடவுளின் நாள் படைப்பிற்கு விடுதலையைக் கொடுக்கிறது, ஆனால் ஆவியை முதற்கொடையாக பெற்றவர்களுக்கு அது கடவுளின் பிள்ளைகளாக தத்தெடுக்கப்படும் வாய்ப்புக்காக காத்திருக்கிறது (υἱοθεσίαν ἀπεκδεχόμενοι ஹுய்யோதெசியான் அபெக்தெக்கோமெநொய்).

இந்த தத்தெடுக்கப்பட்ட நிலை, உடலை விடுவிக்கும் நாள் என்று மேலும் விளக்குகின்றார் பவுல். உடலில் ஆன்மா சிறைவைக்கப்பட்டிருக்கிறது என்ற கிரேக்க சிந்தனை ஒன்று அக்காலத்தில் இருந்திருக்கிறது. ஆனால் பவுல் உடலை விடுவித்தல் எனறு கூறுவது அதனை சார்ந்தது எனச் சொல்வதற்கல்ல. பவுல் உடலை மீட்டல் என்ற கருத்திலே பேசுகிறார். உரோமையர் திருமுகம் பல இடங்களில் உடல் புனிதமானது என்ற கருத்தையும் ஆழமாக முன்வைக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் (காண்க உரோமையர் 12,1-4).


நற்செய்தி வாசகம்
மத்தேயு 13,1-23

உவமைப் பொழிவு

விதைப்பவர் உவமை

(மாற் 4:1 - 9 லூக் 8:4 - 8)

1அதே நாளில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். 2மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர். 3அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: 'விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். 4அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. 5வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன் 6ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேரில்லாமையால் கருகிப் போயின. 7மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிட்டன. 8ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. 9கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்' என்றார்.

உவமைகளின் நோக்கம்

(மாற் 4:10 - 12; லூக் 8:9 - 10)

10சீடர்கள் அவரருகே வந்து, 'ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?' என்று கேட்டார்கள். 11அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: 'விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. 12உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். 13அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். 14இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: 'நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. 15இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.' 16உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. 17நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

விதைப்பவர் உவமையின் விளக்கம்

(மாற் 4:13 - 20; லூக் 8:12 - 15)

18'எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: 19வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்லுவான். 20பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். 21ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள். 22முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள். 23நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.'


மத்தேயு நற்செய்தியின் பதின்மூன்றாவது அதிகாரம் 'உவமைப் பொழிவு' எனக் காட்டப்படுகிறது. ஆண்டவருடைய காலத்தைப் போலவே, ஆரம்ப கால திருச்சபையும் பல இடங்களில முறையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை, சில இடங்களில் அதன் போதனைகளும் கேள்விக்குட்படுத்தப்பட்டன. இந்த அனுபவங்களின் தாக்கங்களை இந்த உவமையின் பின்புலமாகக் காணலாம். இந்த அதிகாரம் அவதானமாக அமைக்கப்பட்டுள்ளது. முதலில் விதைப்பவர் உவமை சொல்லப்பட்டிருக்கிறது (வவ.3-9), பின்னர் இந்த உவமையின் நோக்கம் சொல்லப்பட்டிருக்கிறது (வவ-17), இறுதியாக உவமையின் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது (வவ18-23). இதனைப்போலவே, இந்த அதிகாரத்தின் பிற்பகுதியும் பல விதமான உவமைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படியாக எட்டு விதமான உவமைகளையும் அதன் விளக்கத்தையும் இந்த அதிகாரம் கொண்டுள்ளது.

உவமைகளை (παραβολή பரபொலே) சாதாரணமாக, விளக்கக் கதைகள் என்று சொன்னாலும், கிரேகக் உலகம் இதற்கு மேலதிக அர்த்தங்களைக் கொடுத்திருக்கிறது. இவற்றை இரகசிய பேச்சுக்கள் என்றும் கிரேக்க உலகம் காட்டுகிறது. கேலிச் சித்திரங்களைப் (கார்டூண்களைப்) போல உவமைகள் அவதானமாக நோக்கப்பட்டு விளக்கப்படவேண்டும். இதன் காரணமாகத்தான் உவமைகள் சிலருக்கு மனமாற்றத்தைக் கொடுக்க சிலர் எவ்விதமான அசைவுகளும் இன்றி இயேசுவை விட்டு வெளிச் செல்கின்றனர். இயேசுவும் தனிமையில் மீண்டுமாக தன் சீடர்களுக்கு உவமையை விளக்குவதும் இதன் காரணமாகத்தான் என எடுக்கலாம். இந்த அதிகாரத்தில் உள்ள உவமைகள் அனைத்தும் இறையரசைப் பற்றியே பேசுகின்றன. இறையரசு மத்தேயு நற்செய்தியின் முக்கியமான இறையியல் சிந்தனைகளில் ஒன்று. இயேசு விண்ணக அரசை பற்றி விளக்குகின்ற அதேவேளை மக்கள் சிலர் நேராகவும் சிலர் மறையாகவும் பதிலளிப்பது, ஆரம்ப கால திருச்சபையில் இருந்த சிந்தனைகளை படம் பிடி;க்கிறது.

விதைப்பவர் உவமை (வவ.1-9) வ.1: இந்த வரி, இயேசு இதற்கு முன் தன் உறவினர் அல்லது சீடர் ஒருவரின் வீட்டில் இருந்திருக்க வேண்டும் என்ற உணர்வைத் தருகிறது. வீட்டிலிருந்தவர், வெளியே சென்று கடற்கரையில் அமர்கிறார். இந்த கடல், கலிலேயக் கடலாக இருந்திருக்க வேண்டும் (θάλασσα தலாஸ்ஸா- கடல், ஏரி)

வ.2: இயேசுவைக் கண்டவுடன் மக்கள் பெருந்திரளாய் வருகின்றனர். ஆக ஏரிக்கரையில் மக்கள் கூட்டமாக இருந்திருக்க வேண்டும், அல்லது இயேசு ஏரிக்கரையில் இருக்கிறார் என்று அறிந்து வந்திருக்கவேண்டும். இங்கே பெரும்திரள் என்று சொல்லப்படுவது சாதாரண மக்கள் கூட்டத்தை, இதில் இயேசுவை ஏற்றுக்கொண்டவர்களும், ஏற்றுக்கொள்ளாதவர்களும் இருந்தனர் (ὄχλοι πολλοί ஒக்லொய் பொல்லோய்- பல மக்கள் கூட்டங்கள்). இயேசு தன்னை புறம்பாகக் காட்டவும் அல்லது அனைவருக்கும் விளங்கும் படி பேசவும் வேண்டி படகு ஒன்றில் ஏறியிருக்கலாம். மத்தேயு இந்த காட்சியை அமைக்கும் விதத்தில், இயேசுவை மெசியாவாககும், புதிய மோசேயாகவும் காட்ட முயல்கிறார் என்றும் சிலர் வாதிடுகின்றனர். இயேசு படகில் ஏறுவது அவரது அதிகாரத்தையும், கடல் மேல் அவர் இருப்பது அவரது தெய்வீகத்தையும் காட்டுவது போல உள்ளது.

வ.3: இயேசு உவமைகள் வாயிலாக பலவற்றை பேசினார் என்று, முன்னுரையிலே பல உவமைகள் இனி வரவிருக்கிறது என்பதைக் காட்டுகிறார் மத்தேயு. உவமை என்பது கிரேக்க உலகத்தில் மிக பிரசித்தி பெற்றிருந்த ஒரு கற்பித்தல் முறை (παραβολή பரபொலே). இந்த வரியிலிருந்து ஆண்டவர் உவமை வாயிலாக அனைவருடனும் பேசினார் என்பது புலப்படுகிறது. அதேவேளை சாதாரண மக்களும் உவமைகளைப் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது.

இயேசு விதைப்பவர் ஒருவரை உவமைக்கு எடுக்கிறார் (ὁ σπείρων ஹொ ஸ்பெய்ரோன்- விதைக்கிறவர்). விதைக்கிறவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு நன்கு பரீட்சயமானவர்கள், இலையுதிர் காலத்தின் இறுதிக்காலத்தில் அதிகமாக இவர்கள் விதைத்தலைச் செய்வார்கள். இங்கே விதைக்கிறவர் இறையரசை விதைக்கிறவர்க்கு அடையாளப்படுத்தப் படுகிறார்.

வ.4: விதைக்கிறவர் விதைக்கும்போது சில விதைகள் வழியோரம் விழுகின்றன. பாதை (ὁδός ஹொதோஸ்) இங்கு பொருத்தமில்லா இடத்தை குறிக்கிறது. இந்த விழுதலுக்கு விதைப்பவர் காரணமாக காட்டப்படவில்லை. இவற்றை வந்து தின்னும் பறவைகள் (πετεινόν பெடெய்நொன்) அடையாளமாக இருக்கலாம். தீய சக்திகளையும் இவை குறிக்கலாம்.

வ.5: சில விதைகள் மண் இல்லாத பாறைப் பகுதிகளில் விழுகின்றன. பாறை என்பது பாலஸ்தீன நிலத்தில் சுண்ணாம்புக் கற்களை குறிக்கும். இங்கே நீரில்லாமல் கடுமையான வரட்சிசையும், வெப்பத்தையும் சந்திக்க வேண்டி வரும். இந்த விதைகள் மண் இல்லாமையால் விரைவில் முளைத்தன என்கிறார். இது காலத்திற்கு முந்திய வளர்ச்சி. பின்னர் மடிகின்றன.

வ.6: கதிரவனின் எழுச்சி இங்கே வெப்பத்தைக் காட்டுகிறது. வெப்பம் விரும்பப்படாததாக காட்டப்பட்டாலும், சூரியன் மிக முக்கிய படைப்பாகவே விவிலியத்தில் காட்டப்படுகிறது. இந்த தாவரத்தின் அழிவிற்கு காரணம், சூரியன் அல்ல மாறாக இந்த தாவரங்கள் வேர் இல்லாமல் இருந்ததே எனக் காட்டுகிறார்.

வ.7: முட்செடிகளின் நடுவில் விழுந்த விதைகள், முட்செடிகளாலே நெருக்கப்படுகின்றன (ἄκανθα அகான்தா). இந்த முட்செடிகள் ஒரு வகையான களைகள், இவை ஆறு அடிகள் வரை வளரக்கூடியவை, இதனால் இவை பயிர்களுக்கு மிக ஆபத்தானதாக அமைகின்றன. நம்முடைய பாதினியத்தைப் போல.

வ.8: சில விதைகள் மட்டுமே நல்ல நிலத்தில் விழுந்தன என்கிறார் ஆசிரியர். இந்த நல்ல விதைகளில் சில நூறு மடங்கும், சில அறுபது மடங்கும், சில முப்பது மடங்கும் பயன் தருகின்றன. மத்தேயுவின் கருத்துப்படி அனைத்து நல்ல விதைகளும் நூறு மடங்கு பயன்தரும்படி எதிர்பார்க்கப்படவில்லை. நல்ல நிலத்தில் விழுந்த படியால், தகுதிக்கு ஏற்றபடி அவை பயன்தந்து ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. நூறு, அறுபது மற்றும் முப்பது போன்று இலக்கங்கள் நல்ல அறுவடை இலக்கங்கள்.

வ.9: இந்த வரி கொஞ்சம் காட்டமாக இருக்கிறது. கேட்கச்செவியுள்ளோர் கேட்கட்டும் என்பது, அனைவருக்கும் செவிகள் உள்ளன ஆனால் கேட்கும் திறமை அனைவருக்கும் இல்லை என்பது புலப்படுகிறது. இந்த கட்டளை வாக்கியத்தை இயேசு அதிகமான இடங்களில் பாவிக்கிறார். இது கொஞ்சம் கடுமையாகவே கிரேக்க மூல மொழியில் இருக்கிறது. (ὁ ἔχων ὦτα ἀκουέτω. ஹெ எஹோன் ஓடா அகூஎடோ- காதுகள் கொண்டவர் கேட்கட்டும். ).

உவமைகளின் நோக்கம் (வவ.10-16)

வ.10: சீடர்களின் கேள்வி நமக்கு வேறு கேள்வியை தொடுக்கிறது. ஏன் இயேசு மக்களுடன் உவமை வாயிலாக பேசக்கூடாது? ஒருவேளை இந்த சாதாரண மக்களுக்கு உவமைகள் புரியாமல் இருக்குமா? அல்லது உவமைகள் என்பது படித்தவர்களுக்கு மட்டுமே உரியது என்று இவர்கள் கருதியிருக்கலாமோ?

வ.11: இயேசு இங்கே சீடர்களுக்கும் சாதாரண கூட்டத்திற்கும் வித்தியாசம் காட்டுகிறார். உவமைகளை விண்ணக அரசின் மறைபொருள்கள் என்கிறார் (τὰ μυστήρια τῆς βασιλείας τῶν οὐρανῶν டா முஸ்டேரியா டேஸ் பசிலெய்யாஸ் டோன் ஹூராநோன்). இந்த மறைபொருளை ஏன் இயேசு அனைவருக்கும் விளங்கப்படுத்தவில்லை என்பது சொல்லப்படவில்லை. ஒருவேளை இதனை ஆர்வமுடன் கேட்பவர்கள் அதாவது காதுகளை திறந்து வைத்திருப்பவர்கள் மட்டும்தான் விளங்கப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்று சொல்கிறார் போல.

வ.12: உள்ளவர்களுக்கு கொடுப்பதும், இல்லாதவர்களிடமிருந்து எடுப்பதும் என்ற வரியை கவனமாக வாசிக்க வேண்டும். அதாவது இங்கே இயேசுவும் அவர் செய்தியும் எழுவாய்ப் பொருட்காளகப் பார்க்கப்படவேண்டும். உள்ளவர்கள் என்போர், இயேசுவையும் அவர் அரசையும் ஏற்றுக்கொள்வோர், அவர்களுக்கு அரசில் பங்கு கொடுக்கப்படுகிறது. இயேசுவையும், அவர் அரசையும் ஏற்றுக்கொள்ளாதவருக்கு இந்த இலவச வாய்ப்பும் எடுக்கப்படுகிறது. அவர்கள் இல்லாதவர்கள் என மத்தேயுவால் காட்டப்படுகிறார்கள்.

வ.13: இயேசு ஏன் தான் கூட்டத்தோடு உவமைகள் வாயிலாக பேசுகிறார் என்பதை விளக்குகிறார். அதாவது இந்த கூட்டம் காதிருந்தும் கேட்கவில்லை, கண்கள் கொண்டும் பார்க்கவில்லை. இதனால்தான் உவமைகளை இயேசு கையாள்கிறார் என்கிறார் மத்தேயு.

வ.14-15: இந்த வரியை எசாயவின் இறைவாக்கோடு மத்தேயு ஒப்பிடுகிறார். இந்த பகுதி எசாயா புத்தகத்தின் 6,9-10 என்ற பகுதியிலிருந்து எடுக்கப்படுகின்றது.

'9அப்பொழுது அவர், 'நீ இந்த மக்களை அணுகி, 'நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாதீர்கள்; உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணராதிருங்கள்' என்று சொல். 10அவர்கள் கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறிக் குணமாகாமலும் இருக்கும்படி இந்த மக்களின் இதயத்தைக் கொழுப்படையச் செய்; காதுகளை மந்தமாகச் செய்; கண்களை மூடச்செய்' என்றார்'.

இந்தப் பகுதி எசாயாவின் அழைப்பு பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. மத்தேயு இந்த வரியை சற்று மாறுதலுடனேயே ஒப்பிடுகிறார். மத்தேயுவும் எசாயாவும் சொல்லுகின்ற முக்கிய குற்றச்சாட்டுகளாக:

அ. இவர்கள் கேட்கிறார்கள் ஆனால் கருத்தில் கொள்வதில்லை: இது மரியாதையில்லாத செவிமடுத்தலைக் குறிக்கிறது.

ஆ. காண்கிறார்கள் ஆனால் உணர்வதில்லை: இது அவதானமற்று பார்வையை குறிக்கிறது.

இ. இவர்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது, காது மந்தமாகிவிட்டது. கண்கள் மூட்பட்டுவிட்டன: இதனால் காணாமலும், கேளாமலும், உணராமலும் இறுதியாக மனமாறாமலும் இருக்கிறார்கள். இதன் அடிப்படையில் இறுதி முடிவான குணமாக்கலை கடவுள் எடுக்காமல் இருக்கிறார். புலன்கள் நேர்த்தியாக வேலை செய்யாவிடில் அதனால் பிறியோசனங்கள் இல்லை என்பது இப்படியாக புலப்படுகிறது.

இந்த வரிகளின் மூலமாக எசாயா கண்ட தெய்வீக காட்சிக்கும், இயேசுவின் வார்த்தைக்கும் தொடர்பு உண்டாக்கி, இயேசுதான் அந்த முதல் ஏற்பாட்டு கடவுள் என்பதை தனது சாயலில் காட்டுகிறார்.

வ.16: இந்த வரி சீடர்களை முன்னிலைப் படுத்துகிறது. சீடர்கள் என்பவர்கள் சாதாரண மக்கட் கூட்டம் அல்ல, அவர்களின் கண்கள் பார்க்கின்றன, காதுகள் கேட்கின்றன. இவர்களை இயேசு 'ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்' என்கிறார் (μακάριοι மகாரியோய்). இது புதிய ஏற்பாட்டில் மிக முக்கியமான வாழ்த்து, இந்த வாழ்த்திற்கும் பழைய ஏற்பாட்டிற்கும் சொல்லப்படும் 'பேறுபெற்றோர்' என்ற வாழ்த்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளது (בָּרוּךְ பாரூக்- ஆசிர் பெற்றவர்: אַשְׁרֵי 'அஷ்ரே- பேறுபெற்றவர்).

வ.17: இந்த வரி ஆரம்ப காலத்தில் மிக முக்கியமான வரியாக கருதப்பட்டது. முதல் ஏற்பாட்டு காலத்து இறைவாக்கினர்கள், நேர்மையாளர்களைவிட இயேசுவின் காலத்து சாதாரண சீடர்கள் எப்படி முக்கியத்துவம் பெற்றார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்த முதல் ஏற்பாட்டு பெரியவர்கள் மெசியாவைக் காணவில்லை, ஆனால் புதிய ஏற்பாட்டு சிறியவர்கள் மெசியாவைக் கண்டதால் பேறு பெற்றவர்கள் ஆகிறார்கள். இருப்பினும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள பெரியவர்கள் மெசியாவை காணவும் கேட்கவும் ஆவல் கொண்டவர்கள் என்று சொல்லி அவர்களின் மதிப்பு குறையாமல் இருக்க மத்தேயு பார்த்துக் கொள்கிறார்.

விதைப்பவர் உவமையின் விளக்கம் (வவ.18-23)

வ.18: தன் சீடர்களின் பெறுமதியை அவர்களுக்கு காட்டிய இயேசு நேரடியாக உவமையின் விளக்கத்திற்கு வருகிறார். இயேசு சீடர்களை பாராட்டிய வார்த்தைகள், துன்பப்பட்ட ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு நிச்சயமாக நம்பிக்கையும் சக்தியும் கொடுத்திருக்கும். அவர்களும் தங்களை ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் கூட்டத்திற்குள் இணைத்திருப்பர்.

வ.19: வழியோரம் விழுந்த விதைகள், இறைவார்த்தையைக் கேட்டும் புரியாதவர்கள், அவர்களின் உள்ளத்து விதைகளை தீயோன் கைப்பற்றுகிறான். சாத்தானைக் குறிக்க மத்தேயு ὁ πονηρὸς ஹொ பொர்நேரொஸ் (தீயோன்) என்ற சொல்லை பாவிக்கிறார். லூக்கா மற்றும் மாற்கு, 'சாத்தான்'(σατανᾶς சடானாஸ்) என்ற சொல்லை பாவிப்பார்கள். இந்த சாத்தானின் செயற்பாடு வெளியில் இல்லாமல் இதயத்தில் நடைபெறுகிறது என மத்தேயு காட்டுகிறார்.

வவ.20-21: பாறை பகுதியில் விழுந்த விதைகள், இறைவார்த்தையை மகிழ்ச்சியோடு கேட்கிறவர்கள் ஆனால் வேரற்றவர்களைக் குறிக்கிறது. துன்பம் துயரம் வர இவர்கள் தடுமாற்றம் அடைகிறார்கள். இந்த வரி ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் கலாபனை வரலாற்றைக் காட்டுகிறது. ஆரம்ப கால பல கிறிஸ்தவர்கள் உரோமைய மற்றும் யூத கலாபனை காரணமாக இயேசுவை மறுதலித்தார்கள். அவர்கள் அவநம்பிக்கை கொண்டார்கள் என்றில்லாமல், துன்பத்தின் காரணமாக இப்படிச் செய்தார்கள். இதற்கு காரணம் இவர்களுக்கு ஆழமான விசுவாசமில்லை என்பதை மத்தேயு காட்டுகிறார்.

வ.22: முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகள், உலகியல் போட்டிகளுக்குள் இறைவார்த்தையை தொலைத்தவர்களைக் குறிக்கிறது. முட்செடிகளைப் போல உலக சவால்கள் உயரமாக வளருகின்றன. இவை இறைவார்த்தையின் தாக்கத்தை மட்டுப்படுத்துகின்றன. இந்த முட்செடிகள் என மத்தேயு செல்வத்தையும் (ἀπάτη τοῦ πλούτου அபாடே தூ புலூடூ- செல்வம் தரும் மாயை), கவலையையும் (μέριμνα மெரிம்னா- உலக விருப்பங்கள்) காட்டுகிறார். இவை இறைவார்த்தையைக் கட்டுப்படுத்தி நெருக்குவதாகச் சொல்கிறார்.

வ.23: நல்ல நிலத்தில் விழுந்த விதைகள், விசுவாசிகளைக் குறிக்கிறது. இவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவர்கள், அதனை புரிந்துகொண்டவர்கள் அத்தோடு இவர்கள் நூறு மடங்காகவும், அறுபது மடங்காகவும், முப்பது மடங்காகவும் பலன் கொடுக்கிறார்கள். இவர்களின் பலனை சாட்சிய வாழ்வு என்று எடுக்கலாம்.

இயேசுவை பின்பற்றவிடாமல்,
உலகில் பல கவர்ச்சியான பாதைகள் பரந்துகிடக்கின்றன,
இன்பம் தரக்கூடய சக்திகள் அதகிமாகவே இருக்கின்றபடியால்
விசுவாசத்தின் வேர்கள் விரைவில் காய்ந்து போகின்றன,
பல முட் செடிகள் நம் அருகிலேயே ஆழமாக வளர்வதால்,
அவற்றின் நெருக்குவாரம் பலமாக இருக்கின்றது.
இருந்தும் நல்ல நிலத்தை தேடி ஆண்டவரின்
பார்வைகள் தொடர்கின்றன.
அன்பு ஆண்டவரே!
பார்க்கும் கண்களையும்,
கேட்கும் காதுகளையும்,
உணரும் இதயங்களையும் தாரும். ஆமென்.
மி. ஜெகன்குமார் அமதி
வசந்தகம், யாழ்ப்பாணம்.