இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






தவக்காலம் முதலாம் ஞாயிறு (அ)

முதலாம் வாசகம்: தொடக்க நூல் 2,7-9: 3,1-7
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 51
இரண்டாம் வாசகம்: உரோமையர் 5,12-19
நற்செய்தி: மத்தேயு 4,1-11


முதல் வாசகம்
தொடக்க நூல் 2,7-9: 3,1-7

7அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். 8ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். 9ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார். 1ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், 'கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?' என்று கேட்டது. 2பெண் பாம்பிடம், 'தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். 3ஆனால் 'தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்' என்று கடவுள் சொன்னார்,' என்றாள். 4பாம்பு பெண்ணிடம், 'நீங்கள் சாகவே மாட்டீர்கள்; 5ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்' என்றது. 6அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். 7அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன் அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.

மனிதனின் தொடக்கத்தைப் பற்றிய அறிவும் ஊகங்களும், மதங்கள் மற்றும் பாரம்பரியங்களுக்கிடையில் வித்தியாசமானவையாகவும், வியக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. மனிதர் யார்? அவர்கள் எதிலிருந்து உருவானவர்கள்? அவர்கள் உருவானார்களா, அல்லது உருவாக்கப்பட்டார்களா? மனிதர்கள் சாதாரண விலங்குகளா? அல்லது அவர்கள் கூர்படைந்த சிந்திக்கும் விலங்குகளா? மனிதர்கள் ஆன்மாவை உடையவர்கள் என்பதன் பொருள் என்ன? மனிதர்கள் ஆறு அறிவுகளை உடையவர்கள் என்பதன் அர்த்தம் என்ன? மனிதர், கடவுளின் சாயல் என்பதன் அறிவு என்ன? இப்படியாக மனிதர்களைப் பற்றிய கேள்விகளும் அதற்கான விடைகளும் நீண்டுகொண்டே போகின்றன. மனித இனம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது மனிதரைப் பற்றிய கேள்விகளும் அத்தோடு அவற்றின் விடைகளும். இஸ்ராயேலை சுற்றி வாழ்ந்த கானானியர், பிலிஸ்தியர், எகிப்தியர், மொசொபெத்தோமியர், பாரசீகர், இந்தியர், மற்றும் கிரேக்கர் பலவிதமான அறிவை தங்கள் மக்களுக்கு புகட்டினர். இதில் சில மனித மாண்புகளுக்கு எதிராகவும் இருந்தன. பபிலோனிய ஏனுமா ஏலிஷ் (Enuma elish) மற்றும் உகாரித்திய பால் புராணம் (Ugaritic Baal epic) போன்றவை, மனிதர் பிளவுகள் அல்லது தெய்வங்களுக்கிடையிலான சண்டையிலிருந்து உருவானவர்கள் என்பதை காட்டின. இந்த அறிவு விவிலிய ஆசிரியர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. அத்தோடு இது இஸ்ராயேல் பிள்ளைகளுக்கும், பலருக்கு அக்காலத்தில் தெரிந்திருக்கலாம். இப்படியிருக்க, இஸ்ராயேலின் விசுவாசம் தனித்துவமானது, மனிதர்கள் தெய்வங்களின் சண்டையால் உருவானவர்கள் அல்லர், மாறாக அவர்கள் கடவுளின் அன்பினாலும், சிந்தனையாலும், மற்றும் அவரின் சொந்த திட்டத்தினாலும் உருவானவர்கள். இயற்கையாக அவர்கள் நல்லவர்கள், இருப்பினும் அவர்கள் அலகையினால் சோதிக்கப்பட்டு பின்னர் தங்கள் தெய்வீக நிலையை இழந்தார்கள் என்று விவிலிய ஆசிரியர்கள் இஸ்ராயேலின் தனித்துவமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். அத்தோடு இஸ்ராயேல் மக்களிடையேயும் கூட வித்தியாசமான அறிவுகள், மனிதரின் படைப்பைப் பற்றி இருந்திருக்கிறது என்பதற்கு தொடக்கநூலின் முதல் இரண்டு அதிகாரங்களும் நல்ல உதாரணங்கள். விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களில் நான்கு பாரம்பரியங்கள் (யாவே, குரு, எலோகிம் மற்றும் இணைச்சட்ட பாரம்பரியங்கள்) காணப்படுகின்றன இவற்றைப் பற்றிய புரிதல்கள் விரிவடைந்துகொண்டே வருகின்றன. தற்காலத்தில் இவற்றைப் பற்றிய சந்தேகங்களும் எழுகின்றன. இந்த பாரம்பரியங்கள் விவிலிய நம்பிக்கையை ஒவ்வொரு கோணத்தில் தத்தமது தேவைகளுக்கேற்ப விளக்க முயற்சிக்கின்றன. இந்த வகையில் மனிதனின் படைப்பை குரு பாரம்பரியமும், யாவே பாரம்பரியமும் வித்தியாசமாக காட்சிப்படுத்துகின்றன என அறிஞர்கள் நம்புகின்றனர். தொடக்க நூலின் முதல் அதிகாரம், குரு பாரம்பரியத்தில், கடவுள் மனிதரை தம் உருவில் ஆணாகவும், பெண்ணாகவும் படைத்ததாக காட்டுகிறது (❖காண்க தொ.நூல் 1,27). இரண்டாவது அதிகாரம், யாவே பாரம்பரியத்தில், கடவுள் மனிதரை தம் கரங்களாலே, அதுவும் மண்ணிலிருந்து படைத்ததாக காட்டுகின்றது. இந்த வித்தியாசத்திலிருந்து, ஆரம்ப கால இஸ்ராயேல் நம்பிக்கையில் மனிதரைப்பற்றிய பல படைப்புக் கதைகள் புழக்கத்திலிருந்திருக்கின்றன என ஊகிக்கலாம். இருப்பினும் விவிலிய ஆசிரியர் இந்த கதைகளை உபயோகித்து பல ஆழமான உண்மைகளை பகிர முயல்கிறார் என்பதை மறக்கக் கூடாது. இங்கே இவரின் முயற்சி விஞ்ஞான அறிவை தருவதல்ல, மாறாக விசுவாச உண்மையை தருவதே என்பதையும் மனதிலிருத்;த வேண்டும். இதனைவிட கிரேக்க காலத்தில் உருவாகி, விவிலியத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத பல கிரேக்க யூத புத்தகங்கள், மனிதரின் படைப்பை இன்னும் அதிகமாக கிரேக்க சிந்தனைகளில் விளக்க முயற்ச்சித்தன, இதற்கு உதாரணமாக ஏனோக்கு புத்தகத்தைக் எடுக்கலாம்.

(❖27கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.)

வ.7: இந்த வரி இஸ்ராயேலின் மனித படைப்பு பற்றிய ஒரு பாரம்பரியத்தை படம்பிடிக்கிறது. இந்த வரியில், ஆசிரியர் மனிதர் எவ்வாறு உருவானார் என்பதையும், அவர் எப்படி உயிரைப் பெற்றார் என்பதையும் விளக்குகிறார். மனிதரை கடவுள் நிலத்தின் மண்ணால் உருவாக்குகிறார், இந்த சொற்றொடரை எபிரேய விவிலியம் 'கடவுள் மனிதருக்கு நிலத்தின் தூசியிலிருந்து உருகொடுத்தார்' என்று வாசிக்கின்றது (וַיִּיצֶר֩ יְהוָ֨ה אֱלֹהִ֜ים אֶת־הָֽאָדָ֗ם עָפָר֙ מִן־הָ֣אֲדָמָ֔ה). உருவாக்கினார் அல்லது உருகொடுத்தார் என்பதற்கு பாவிக்கப்பட்டுள்ள வினைச் சொல், குயவன் சட்டி பானைகளை உருவாக்கும் வினையை ஒத்திருக்கிறது (יָצַר யட்சார்). இங்கே மனிதரின் மூலப் பொருளாக மண்ணின் தூசி (עָפָר֙ מִן־הָ֣אֲדָמָ֔ה) விளக்கப்படுகிறது. தூசி என்னும் சொல்லை காரணத்தோடே ஆசிரியர் பாவிக்கிறார், ஒருவேளை இது மனிதனை ஒரு சிற்பமாக காட்டுவதற்கான முயற்சியாக இருக்கலாம் அல்லது மனிதர் தூசிக்கு சமமான அற்ப்பப் பொருள் என காட்டும் ஒரு இறையியல் முயற்சியாகக் கூட இருக்கலாம். இன்றைய விஞ்ஞான அறிவு, மனிதர் கூர்படைந்து உருவானார்கள் என நம்புகின்றது, இருப்பினும் மனிதனின் உடலில், நிலத்திலுள்ள அதிகமான பொளதீக மூலக்கூறுகள் இருக்கின்றன என்பதையும் நிரூபிக்கின்றது. இது ஒரு ஆச்சரியமான உண்மை.

மனிதரின் படைப்பில் இரண்டாவது முக்கியமான செய்தி அவர்களின் உயிர்மூச்சு பற்றிய செய்தி. இந்த உயிர் மூச்சை கடவுள் அவர்களின் நாசியில் ஊதினார் என சொல்கிறார் இந்த ஆசிரியர், இதனால் மனிதர் உயிரை அல்லது ஆன்மாவை பெற்றார் எனவும் சொல்கிறது (בְּאַפָּיו נִשְׁמַת חַיִּ֑ים וַֽיְהִי הָֽאָדָ֖ם לְנֶפֶשׁ חַיָּה׃). மனிதரின் சடப்பொருள் மண்ணாக இருந்தாலும் மனிதரின் உயிர் கடவுளுடையது என்பது மிகவும் அழகான இறையியில். இந்த உயிரை கடவுள் தாமே தன்னுடைய மூச்சிலிருந்து கொடுப்பதாக ஆசிரியர் காட்டுகிறார். இந்த ஆசிரியர் யாவே பாரம்பரியத்தை சார்ந்தவராதலால், இந்த படைப்புக் காட்சிகளை ஒரு திரைப்படம் போல மனித அமைப்புக்களில் வடிக்கிறார்.

வ.8: கடவுள் மனிதரை கிழக்கிலிருந்த ஏதேன் தோட்டத்தில் குடி அமர்த்துகிறார். ஏதேன் தோட்டம் (גַּן־בְעֵדֶן), இதனைப் பற்றி பல கதைகளும் புராணக்கதைகளில் உலகிலுள்ள அனைத்து மதங்களிலும் பாவனையில் உள்ளன. விவிலிய ஆசிரியர் இதனை கிழக்கிலிருப்பதாக கூறுகிறார் (מִקֶּדֶם). இந்த ஏதேன் என்பது, ஒரு இடம் என்பதைவிட, து ஒரு உணர்வாக இருப்பதாகவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏதேன் என்னும் சொல் எபிரேயத்தில் மகிழ்வைக் குறிக்கிறது (עֵדֶן). உண்மையில் இது எங்கிருந்தது, இதன் அர்த்தம் என்ன, ஏன் இதனை கிழக்கில் நிறுவுகிறார் ஆசிரியர் என்பவற்றை, இறையியல் சிந்தனைகளில் பார்பதே பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன். விவிலியத்தில் 19 தடவைகளாக இந்த ஏதேன் என்னும் சொல் பாவனையில் வருகிறது. பாரம்பரிய கதைகள் இந்த ஏதேன் தோட்டத்தை, கடவுளின் தோட்டமாகவும், அதனை ஆர்மேனியா, பபிலோனியா, மற்றும் கிழக்கு மொசோபத்தோமியா போன்ற இடங்களுடன் இணைக்கப் பார்க்கின்றன. ஒரு அரேமேயிக்க சொல் ஏதேனை (עדּן), சம வெளி என்றும் குறிப்பிடுகிறது. அத்தோடு ஏதேனோடு காட்டப்பட்டுள்ள நான்கு முக்கியமான ஆறுகளும், வித்தியாசமான இட அமைப்பைக் கொண்டுள்ளன. இவ்வாறு ஏதேன் என்னும் இந்த இடத்தை பற்றிய பல கதைகள் விவிலிய ஆசிரியருக்கு நன்கு தெரிந்திருந்தன, அத்தோடு இந்த இடத்தை அவர் கடவுளின் தோட்டமாகவும், அந்த தோட்டம் மகிழ்வின் தோட்டமாகவும் இருந்ததையே காட்ட விளைகிறார் என்பதை நினைவில் கொள்வோம்.

வ.9: ஏதேன் தோட்டத்தில் என்னவெல்லாம் இருந்தது என்பது இங்கே காட்டப்படுகிறது. பலவிதமான மரங்கள் ஏதேன் தோட்டத்தில் நிறுத்தப்படுகிறன. முதலாவது வகையான காண்பதற்க்கு இனிமையான மரங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. இந்த இனிமை மரத்தின் அழகை வர்ணிக்கின்றது (כָּל־עֵץ נֶחְמָד לְמַרְאֶה). இரண்டாவது வகை மரங்கள், உண்பதற்கு பொருத்தமான மரங்கள், அதாவது அதன் கனிகள் உண்ணக்கூடியவை (טוֹב לְמַאֲכָל). இறுதியாக முக்கியமான இன்னொரு மரம் அங்கே நிறுவப்படுகிறது. அது, நன்மை தீமையை அறியக்கூடிய மரமும், வாழ்வின் மரமும் ஆகும். இவை இரண்டு வகையான மரங்கள் போல தோன்றுகின்றன. வாழ்வின் மரம் (עֵץ הַֽחַיִּים֙) என்பது, வாழ்வைத் தரக்கூடிய கனியுடைய மரம் என்ற பொருளைத் தரலாம் (ஆறாம் வேற்றுமை உருபு). நன்மை தீமையை அறியும் மரம் (וְעֵץ הַדַּעַת טוֹב וָרָע), இது முதல் ஏற்பாட்டில் அதிகமாக தேடப்பட்ட அல்லது வியாபிக்கப்பட்ட மிக முக்கியமான வார்த்தைகளாக இருக்கின்றன. இந்த மரம், அல்லது அதன் கனிகள் மனிதரை தங்களுடைய மனித சாயலில் இருந்து தெய்வீக சாயலுக்கு உயர்த்தக்கூடிய மரமாக விவிலிய ஆசிரியரால் பார்கப்படுகிறது. மனிதர் தன் சுதந்திரத்தை எந்தளவிற்கு பாதுகாக்கின்றார் என்பதை அளவிடக்கூடியதாகவும் இது அமைகிறது. விவிலிய தொல்பொருளியல் ஆய்வுகளில் இருந்து, கானானிய மக்களின் தெய்வக்கூட்டத்தில் மர வழிபாடு அல்லது மரத்தோடு சம்மந்தப்பட்ட ஒருவகையான வழிபாடு அக்காலத்தில் இருந்திருந்ததை காட்டுகிறன. அசேராக் கம்பங்கள் இந்த மர வழிபாட்டின் ஒரு அங்கம் என்பதை சிலர் ஏற்றுக்கொள்கின்றனர் (❖காண்க நீதி 3,7). இதிலிருந்து இந்த நன்மை தீமை அறியக்கூடிய மரம் என்பது சாதாரண மரத்தையும் தாண்டிய ஒருவகை அடையாளம் என்பது விளங்குகி;ன்றது.

(❖7ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை இஸ்ரயேலர் செய்தனர். தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து, பாகாலுக்கும் அசேராக்களுக்கும் ஊழியம் செய்தனர்.)

வ.1: பாம்பு (נָּחָשׁ֙ நாஹாஷ்) கடவுள் உருவாக்கிய மிருகங்களில் எல்லாம், பாம்பு சூழ்ச்சியானதாக காட்டப்படுகிறது. இந்த பகுதியில் பாம்பு ஒரு சாதாரண விலங்காகவே காட்டப்படுகிறது. அதிகமான இறையியலாளர்கள் பாம்பை சாத்தானின் அடையாளமாக காண்கின்றனர். இதற்கு அக்காலத்தில் இருந்து பாம்பு வழிபாடு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம். பாம்பு அதன் பலவீனத்தின் காரணமாக மிகவும், சூழ்ச்சியானதாகவும், நச்சுத் தன்மை வாய்ந்ததாகவும் காணப்படுகிறது. இது அதன் இயற்கையான ஒரு 'தக்கன பிழைக்கும்' வாழ்வியல் நியதி. பாம்பின் அமைப்பும், அதன் குணாதிசயங்களும், பாம்பை தீய சக்தியாக காட்டுகின்றன. இந்த நம்பிக்கைகள் இஸ்ராயேல் மக்களுக்கு மட்டுமல்ல, இன்னும் பல மதங்களிலும் காணக்கிடைக்கிறது.

இந்த வசனத்தின் இரண்டாவது பகுதி, பாம்பை ஒரு பேசும் மிருகமாக காட்டுகின்றது. பாம்பு மற்றும் அனைத்து உயிரினங்களும் ஆரம்ப காலத்தில் பேசும் மிருகங்களாக இருந்ததாகவும், மனிதனுடைய பாவத்தின் காரணமாக அவைகள் தங்களது பேசும் திறனை இழந்ததாகவும் ஒரு பழைய நம்பிக்கை இருந்திருக்கிறது. கானானியர் மத்தியில் பிரபலமான பாம்பு வழிபாடு, இஸ்ராயேல் வழிபாடுகளில் ஆதிக்கம் செலுத்தாதிருக்கவே, தொடக்க நூல் ஆசிரியர், சாதாரண விலங்கினமான பாம்பை, சாத்தானின் அடையாளமாக உருவகிக்கிறார் என்றும் சிலர் வாதிடுகின்றனர். பாம்பு இங்கே சூழ்ச்சி நிறைந்த மிருகமாக காட்டப்படுகிறது. பாம்பின் கேள்வி பெண்ணை ஏளனப்படுத்துவதைப் போல உள்ளது.

வ.2-3: தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை தொடவோ உண்ணவோ கூடாது என்றா ஆண்டவரின் கட்டளையை பெண் நினைவூட்டுகிறார் (וּמִפְּרִי הָעֵץ֮ אֲשֶׁ֣ר בְּתוֹךְ־הַגָּן֒). இங்கே தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனி என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அது அப்பிள் என்றோ வாழ்வின் மரம் என்றோ குறிப்பிடப்படவில்லை. இங்கே மரம் மற்றும் கனி, போன்றவை அடையாளங்களாக குறிக்கப்பட்டுள்ளன. இதனை உண்மையான பொருட்களாக எடுப்பது அவ்வளவு ஆரோக்கியமாக இருக்காது. கீழ்ப்படிவுஆதிப் பெற்றோரிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

வ.4: மரத்தின் கனி சாவைத் தரும் என்கின்றபோது, சாத்தான், அது சாவைத்தராது என்கின்றான். இங்கே இரண்டு விதமான உறுதிகளை ஆசிரியர் காட்டுகிறார். மரம் மற்றும் கனி சாவின் அடையாளமாக இருக்கிறபோது, பாம்பு (சாத்தான்) அதனை மறுக்கிறது. பாம்பு 'நீங்கள் சாகவே சாக மாட்டீர்கள்' என்று அழுத்திச் சொல்கிறது (לֹֽא־מוֹת תְּמֻתֽוּן).

வ.5: சாவிற்கு பதிலாக இன்னொரு வரப்பிரசாதம் கிடைக்கும் என்றும் சொல்கிறது. அதனைப் பற்றி கடவுளுக்கு நன்கு தெரியும் என்றும் சொல்கிறது. அதாவது அந்தக் கனியை உண்ணும் நாளில், கண்ணகள் திறக்கப்படும் (נִפְקְח֖וּ עֵֽינֵיכֶ֑ם), கடவுளைப் போல நன்மை தீமையை அறியும் பலம் கிடைக்கும் (וִהְיִיתֶם֙ כֵּֽאלֹהִ֔ים יֹדְעֵי ט֥וֹב וָרָע). நன்மை தீமை அறியும் ஆற்றல் என்பது, கடவுளின் அதிகாரத்தை மிஞ்சிய ஒருவகையான சுதந்திரத்தை தரும் என்பதாகும்.

வ.6: தொடக்க நூலில் இந்த வசனம் மிக முக்கியமானது. இந்த வசனம் மனித குலத்தின் முதல் பாவத்தை பதிவு செய்கிறது. முதலில் அந்த பெண், அந்த குறிப்பிடப்பட்ட கனி உண்பதற்கு நலமாக இருப்பதாக காண்கிறார், ஏனெனில் அது கண்களுக்கு இனிமையாக இருக்கிறது. ஒருவரை ஞானியாக்கக் கூடியதாகவும் இருந்தது. கண்களுக்கு இனிமையானவை அனைத்தும் நன்மையானதல்ல அத்தோடு ஞானம் கடவுளிடமிருந்து வரவேண்டும் என்றும் ஆசிரியர் காட்டுகிறார். பின்னர் அந்தப் பெண், அந்த மரத்தின் கனியை எடுத்து உண்டார், அத்தோடு தன் கணவனுக்கும் கொடுத்தார். கணவனை பாவத்தில் விழசெய்வதற்கான முயற்சியாக இது இருந்திருக்காது என நினைக்கின்றேன். இங்கே தன்னுடைய செயலை தன் கணவனுடன் பகிர்ந்து கொள்கிறார். அவரும் தன் மனைவியின் செயலுக்கு துணை போகிறார். பெண் பாம்பை கேள்வி கேட்கவில்லை, ஆண் தன் பெண்ணின் செயலையும் வினவவில்லை. ஒருவருடைய செயலுக்கு மற்றவர் துணை போகின்றனர்.

வ.7: பாவத்தின் விளைவு காட்டப்படுகிறது. இவர்களின் கண்கள் திறக்கப்பட்டன என ஆசிரியர் ஒரு அடையாள செய்தியைக் குறிக்கிறார். அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதைக் உணர்கின்றனர். இந்த வசனத்திலிருந்து இவர்கள் இவ்வளவு நேரமும், ஆடையின்றி இருந்தும் அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை என்பது புலப்படுகிறது. இது இவர்களுக்கு அசிங்கமாக இருக்க அதனை மறைக்க அத்தியிலைகளை பாவித்து கச்சை செய்கின்றனர். ஏற்கனவே பாம்பு சொன்ன மெய்யறிவு, இங்கே இவர்களுக்கு தங்கள் உடம்பின் வெறுமையை அசிங்கமாகவும் ஏளனமாகவும் காட்டுகிறது. இந்த அறிவைத்தான் பாம்பு மெய்யறிவு என்று பொய் சொன்னது.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 51

1கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்;
3ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது.
4உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர்.
5இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள்.
6இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.
7ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்.
8மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்; நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக!
9என் பாவங்களைப் பாராதபடி உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும்.
10கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.
11உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.
12உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
13அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.
14கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.
15என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.
16ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை.
18சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!
19அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர்; மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில் பலியாகச் செலுத்தப்படும்.


திருப்பாடல் 51, தனிமனித புலம்பல் பாடல் என இன்று அதிகமான திருப்பாடல்கள் ஆய்வாளர்களினால் ஏற்றுக்ககொள்ளப்படுகின்றது. இதன் முகவுரை, தாவீது இந்தப் பாடலை அவர் உரியாவின் மனைவியுடன் பாவம் செய்ததனை நாத்தான் இறைவாக்கினர் சுட்டிக்காட்டிய போது, அவர் உண்மையாகவே மனமாறினார், அந்த வேளையில் பாடிய பாடல் என காட்டுகிறது (בְּבוֹא־אֵלָיו נָתָ֣ן הַנָּבִ֑יא כַּֽאֲשֶׁר־בָּ֝֗א אֶל־בַּת־שָֽׁבַע׃). (ஒப்பிடுக 2சாமுவேல் 12,1-13). இருப்பினும் இந்த பாடல் சாமுவேல் புத்தகத்திலோ அல்லது குறிப்பேடு புத்தகத்திலோ குறிக்கப்படவில்லை. ஒருவரின் பாவம் மனமாற்றத்தாலே கழுவப்படுகிறது, மனமாற்றமில்லா வெறும் பலிகள் ஒருவரின் பாவத்தை கழுவாது அத்தோடு கடவுள் தன்னுடைய தண்டனைத் தீர்ப்பில் நேர்மையானவர் போன்ற பல ஆழமான சிந்தனைகளை இந்தப் பாடல் முன்வைக்கின்றது. கடவுளுடைய பார்வையின் முன்னால் அனைவரும் சமன், அவர்கள் அரசராக இருந்தாலும்கூட அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். மனமாற்றம் ஒன்றே ஒருவரை பாதுகாக்கும் என்பதும் இந்த ஆசிரியரின் நம்பிக்கை. இந்த திருப்பாடலின் அதிகமான வரிகளும் எபிரேய கவிநடையான திருப்பிக் கூறுதல் நடையை பிரதிபலிக்கின்றன.

வவ.1-2: இந்த வரிகள் திருப்பாடல் 51ஐ அரசர் தாவீதுடன் சம்மந்தப்படுத்துகின்றன. இதன் காரணமாக தமிழ் விவிலியத்தின் வரிகளின் எண்ணிக்கைக்கும், எபிரேய விவிலியத்தின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் வருகிறது. தமிழ் மற்றும் தேசிய மொழிகள் 19 வரிகளைக் காட்டுகின்ற அதேவேளை, எபிரேய விவிலியம் 21வரிகளைக் காட்டுகின்றது. இந்த இரண்டு வரிகளும் பின்நாளில் சேர்க்கப்பட்டவை என்ற ஒரு வாதமும் இருக்கின்றது.

வ.3: ஆசிரியர் தன்னுடைய குற்றங்களை மன்னிக்குமாறு கடவுளை கேட்கிறார், இதற்கு ஆதாரமாக கடவுளின் பேரன்பையும் (חֶסֶד), அளவற்ற இரக்கத்தையும் (רַחֲמִים) கோடிடுகிறார். கடவுளுடைய இரக்கம் என்பது பாவிகளின் குற்றங்களை துடைத்தலாகும் என்று பாடுகிறார். இந்த முதலாவது வரியே, ஆசிரியர் தன் பாவத்தின் கனாகனத்தை உணர்ந்திருப்பதைக் காட்டுகிறது.

வ.4: சாதரணமாக புலம்பல் பாடல்கள் வேண்டுதலை ஒரு பகுதியாகக் கொண்டிருக்கும். இந்த பாடலில் இந்த வேண்டுதல்கள் ஆரம்பத்திலேயே வருகின்றன. பாவம் (חַטָּאת) என்பதைப் பற்றி பல புரிதல்கள் விவிலியத்தில் இருக்கின்றன. அதனை இந்த பாடல் ஆசிரியர் உடலின் அழுக்குடன் ஒப்பிட்டு அதனை கடவுள் கழுவ வேண்டும் என்று மன்றாடுகின்றார். இந்த முதல் இரண்டு வரிகளில் மூன்று வகையான பாவத்தினை ஆசிரியர் காட்டுகிறார் (குற்றம், தீவினை, பாவம்), இவை ஏற்கனவே லேவியர் சட்டங்களில் நன்கு தெரிந்தவை (காண்க வி.ப 34,7).

(❖7ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்; ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல் தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்' என அறிவித்தார்.)

வ.5: பாவ மன்னிப்பிற்கு முதலில் தேவையானது சுய அறிவு என்பதை ஆசிரியர் அழகாக காட்டுகிறார். தனக்கு தன்னுடைய பாவம் நன்கு தெரிவதாகவும், அந்த பாவம் தொடர்ச்சியாக தன் முன்னால் இருப்பதாகவும் கூறுகின்றார்.

வ.6: இந்த வரியில் தன்னுடைய பாவம் யாருக்கு எதிரானது என்பதைக் காட்ட முயல்கிறார். முதலில் தன் பாவம் கடவுளுக்கு எதிரானது என்பதை அறிக்கையிடுகிறார். பாவம் சமூக மயமானது, ஒருவர் தன் அயலவருக்கு எதிராக செய்யும் பாவங்கள் உண்மையாக கடவுளுக்கு எதிரானவை என்பதை இஸ்ராயேலர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். இந்த பாடலின் ஆசிரியர் தாவீது என்று நாம் கருதினால், தான் உரியாவிற்கும் அவர் மனைவிக்கும் செய்த பாவம் உண்மையிலேயே கடவுளுக்கும், அவர் மாட்சிக்கும் எதிரான பாவம் என்பதை ஏற்றுக்கொள்கிறார். ஆண்டவர் தன் தீர்ப்பினால் நீதியை வெளிப்படுத்தினார் என்கிறார். நாத்தான் தாவீதை கடுமையாக கண்டித்தார் அத்தோடு இந்த பாவத்திற்கான தண்டனை கடுமையாக இருக்கும் என்று எச்சரித்தார் (காண்க 2சாமு 12,7-13). இந்த தண்டனை உடனடியாக பெத்செபாவின் முதலாவது மகனின் மரணத்துடன் தொடங்கி பின்னர், தாவீதின் சொந்த மக்களே அவர் மனைவியருடன் விபச்சாரம் செய்யும் அளவிற்கு நீண்டது. இந்த தண்டனையைத்தான் தாவீது நீதியான தண்டனை என்கிறார்.

வ.7: பாவியாக தன்னுடைய பாவத்திற்கு மன்னிப்பு கேட்கும் தாவீது, பாவம் எங்கு தொடங்குகின்றது என்பதற்கு விளக்கமும் கொடுக்கிறார். தான் பாவத்திலே பிறந்ததாக சொல்கிறார் (חוֹלָ֑לְתִּי). பாலியல் உறவு தறவான இச்சையினால் உருவாகிறது என்று அதிகமான கலாச்சாரங்கள் முற்காலத்தில் நம்பின. தூய அகுஸ்தினார் கூட, சென்ப பாவம் உடலியல் உறவினால் சந்ததிக்கு சந்ததி கடத்தப்படுகிறது என நம்பினார். தமிழ் இலக்கியங்கள் இதற்கு மாறாக, பல காலத்திற்கு முன்பே பாலியல் உறவு தூய்மையானது என்பதைக் காட்டிவிட்டன. இந்த பாடலில் தாவீது தன் தாய் பாவி என்று சொல்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது. இருப்பினும் அவர் தன்னை மட்டும்தான் பாவி என்று சொல்வதைப் போலத்தான் வார்த்தைகள் அமைந்திருக்கின்றன (בְחֵ֗טְא יֶֽחֱמַ֥תְנִי אִמִּֽי- பாவத்தில் என் தாய் என்னை கருத்தரித்தாள் ).

வ.8: இனிவருகின்ற வரிகளில் கடவுள் செய்யவேண்டியதைக் காட்டுகின்ற அதேவேளை, பாவ மன்னிப்பால் தான் செய்ய இருக்கின்ற பரிகாரங்களையும் வரிசைப் படுத்துகின்றார். கடவுள் விரும்புவது உள்ளத்து உண்மை (אֱמֶת), அத்தோடு மறைவாக ஞானத்தை அறிய செய்கின்றார் எனவும் பாடுகிறார். இங்கனம் உள்ளத்து உண்மையும் ஞானமும் ஒன்றோடொன்று சம்மந்தமாகின்றது.

வ.9: ஈசோப்பு என்னும் ஒருவகை சிறிய தாவரம் எரிபலிகனின் மீது தண்ணீர் தெளிக்க பயன்பட்டது. இது ஒரு வகை பலிசெலுத்தும் சடங்கு முறை (காண்க 1அரசர் 4,33: வி.ப 12,22). திருப்பாடல் ஆசிரியர் இந்த வெளிச்சடங்கு முறையை உள்ளாந்த மனமாற்ற சடங்கு முறைக்கு ஒப்பிட்டு பார்க்கின்றார். பலிப்பொருட்கள் தூய்மையாக்கப் படுவதைப் போல, தானும் தூய்மையாக வேண்டும் என்பது இவர் விருப்பம். இதனால் இவர் உறைபனியிலும் வெண்மையாவார் என நம்புகிறார். இஸ்ராயேல் குளிர் காலங்களில் சிலவேளைகளில் உறைபனியை கண்டது. அத்தோடு வடக்கில் ஏர்மோன் மலையுச்சிகள் வெண்மையாக காட்சியளித்தன, இதனால் வெண்மை தூய்மை மற்றும் கடவுளின் நிறமாக பார்க்கப்பட்டது.

வ.10: மகிழ்வையும் (שָׂשׂוֹן), சந்தோசத்தையும் (שִׂמְחָ֑ה) கேட்க வேண்டும் என விரும்புகிறார். இங்கே உருவக அணிகள் பாவிக்கப்பட்டுள்ளன. பாவ மன்னிப்பினால் ஒருவருக்கு மகிழ்ச்சியும் சந்தேசமும் வருகின்றது, இதனைத்தான் ஆசிரியர் கடவுளிடமிருந்து எதிர்பார்க்கிறார். பலமாக தாக்கப்படும் போது எலும்புகள் உடைகின்றன. இந்த தாக்குதல்கள் மனிதராலோ அல்லது மிருகங்களாலோ ஏற்படலாம். எலும்புகளில்தான் மனித உணர்வுகள் அடங்குகின்றன என்பது எபிரேய சிந்தனையாகவும் இருக்கிறது (עֶצֶם எட்செம் - எலும்பு, சுயம்). ஆக தன்னுடைய பாவத்தின் நிலையை எலும்புகள் உடைக்கப்படுதலுக்கு ஒப்பிடுகிறார் தாவீது.

வ.11: தன் பாவங்கள் கொடூரமாக இருப்பதனால் அதனை கடவுள் பார்க்கக்கூடாது என விரும்புகிறார். அத்தோடு அந்த பாவக் கறைகள் துடைக்கப்படவேண்டும் எனவும் விரும்புகிறார். முகத்தை மூடிக்கொள்ளல் என்பது பாவத்திற்காக தீர்ப்பு வழங்க வேண்டாம் என்பதைக் குறிக்கிறது. பாவத்தை துடைத்தல் என்பதுவும் ஒரு சடங்கு போல காட்டப்படுகிறது.

வ.12-13: பாவத்தை கழுவி துடைக்கும் ஆண்டவர் மேலும் என்ன செய்யவேண்டும் என்பதைக் கேட்கிறார். புதிய இதயத்ததை உருவாக்கக் கேட்கிறார் (לֵב טָהוֹר בְּרָא־לִי). அத்தோடு புதியதும் உறுதியானதுமாக ஆவியை தன்னுள்ளே வைக்கவும் கேட்கிறார். தாவீது இங்கே கடவுளின் ஆவியை நினைவூட்டி மன்றாடுகிறார். சவுல் கடவுளுக்கெதிராக பாவம் செய்த போது தன் ஆவியை இழந்தார், அந்நாளில் இருந்து சவுல் தோற்கத் தொடங்கினார் (❖காண்க 1சாமுவேல் 16,14). ஒருவேளை இப்படியான நிகழ்வு தனக்கும் ஏற்பட்டு விடுமோ என்று தாவீது அஞ்சியிருக்கலாம்.

(❖14ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது.)

வ.14: தன் பாவத்தின் காரணமாக மீட்பின் மகிழ்ச்சி அவரிடமிருந்து சென்றுவிட்டதாகவும், அதனை மீண்டும் தரும் படியாகவும் கேட்கிறார். அத்தோடு முன்போல் இனியொரு போதும் பாவம் செய்யாதபடி தன்னார்வமாக கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் பக்குவத்தையும் கேட்கிறார்.

வ.15: இங்கே தாவீது தன்னுடைய பணிகளை மீண்டுமாக நினைவூட்டுகிறார். ஒரு அரசர் குற்றம் செய்தவர்களையும், பாவிகளையும் திருத்தவேண்டிய கட்டயாத்தில் இருக்கிறார். ஆனால் அரசரே பாவம் செய்து கடவுளின் ஆவியை இழந்தால் அவரால் இந்த காரியங்களைச் செய்ய இயலாது போகும். இதனை நினைவில் கொண்டு, அரசர் தன் பணியை செய்ய முதலில் ஆண்டவர் அவரை மன்னிக்கவேண்டியுள்ளது.

வ.16: கடவுளை தன் மீட்பின் கடவுளாக விழித்து, இரத்த பழியினின்று தன்னை மீட்குமாறு வேண்டுகிறார் (מִדָּמִ֨ים). இரத்தப்பழி இங்கே ஒருவேளை உரியாவின் மரணத்தைக் குறிக்கலாம். தாவீதின் தூண்டுதலாலேயே யோவாபு உரியாமை அந்நியரின் கையாளே சாவடித்தார் (ஒப்பிடுக 2சாமு 11,17). இந்தப் பாவம் யோவாபை அல்ல தாவீதையே சாரும். இதனை தாவீது நினைத்திருக்கலாம். இதன் காரணமாக தான் நீதியற்றவனாக இருப்பதாகவும், கடவுளின் மன்னிப்பு அந்த நீதியை மீண்டும் கொண்டு வரும் என காட்டுகின்றார்.

வ.17: இந்த வரி ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவர்கள் தங்கள் புகழ்மாலை புத்தகத்திலே சொல்லுகின்ற ஆரம்ப வரி. 'ஆண்டவரே என் இதழ்களை திறந்தருளும், அப்போது என் நா உம்மை புகழ்தேற்றும்'. தன்னுடைய பாவத்தின் பொருட்டு பாடகராக தாவீது தன் இதழ்களை திறக்க முடியாமல் உள்ளார், இதனால் அவரால் கடவுளுடைய புகழையும் பாடமுடியாமல் உள்ளது. எனவே தன் பாவத்தை மன்னிக்க கேட்கிறார்.

வ.18-19: இந்த வரி மிக முக்கியமான வரி. எரிபலியினாலும் எந்தப் பலியினாலும் இஸ்ராயேலின் கடவுள் திருப்திப்படுத்தப்பட முடியாதவர். அவர், நீதியின் தேவன். நீதியொன்றே அவரை திருப்திப்படுத்த முடியும். இந்த வரிகளின் மூலமாக தாவீது பலிகளுடைய அல்லது எரிபலிகளுடைய முக்கியதுவத்தை இல்லாமலாக்குகிறார் என்று நினைக்க முடியாது மாறாக, அவர் அந்த பலிகளைவிட உன்மையான மனமாற்றமே மேலானது என்கிறார். நொறுங்கிய உள்ளமும் (ר֪וּחַ נִשְׁבָּ֫רָ֥ה நொறுங்கிய ஆவி), குற்றமுணர்ந்த இதயம் (לֵב־נִשְׁבָּ֥ר உடைந்த இதயம்), இதனை கடவுள் நல்ல பலியாக ஏற்றுக்கொள்கிறார் என்பது தாவீதின் நம்பிக்கை.

வ.20: இந்த வரி தாவிதின் ஆசிரியத்துவத்தை சந்தேகிக்க வைக்கிறது. தாவீது இந்த பாடலின் ஆசிரியர் என்றால், ஏன் எருசலேமின் மதில்கள் உடைந்திருக்கின்றன? தாவீதின் காலத்தில் எருசலேமின் மதில்கள் உறுதியாக இருந்தன. சில ஆய்வாளர்கள் இந்த மதில்ளை மக்களின் விசுவாசத்திற்கு ஒப்பிடுகின்றனர். ஆக இங்கே தாவீது கடவுளிடம் கட்டச்சொல்லி கேட்பது கல் மதில்களை அல்ல மாறாக மக்களின் உள்ளங்களை என்று வாதிடுகின்றனர். சீயோனும் எருசலேமும் இங்கு ஒத்த கருத்துச் சொற்களாக மக்களையும் இடங்களையும் குறிக்கின்றன.

வ.21: மனமாற்றத்தின் வாயிலாக, மற்றைய மிருக பலிகள் கடவுளால் விரும்பப்படும் என்பதை இந்த இறுதியான வரி பாடிநிற்கின்றது.



இரண்டாம் வாசகம்
உரோமையர் 5,12-19

12ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. 13திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை. 14ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று; இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார். 15ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது. 16இந்த அருள்கொடையின் விளைவு வேறு, அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு. எவ்வாறெனில், ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை. பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ அருள்கொடையாக வந்த விடுதலை. 17மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி செலுத்தினதென்றால் அருள்பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்து கொண்டவர்கள் வாழ்வுபெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? 18ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. 19ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள். 20குற்றம் செய்ய வாய்ப்புப் பெருகும்படி சட்டம் இடையில் நுழைந்தது ஆனால் பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது. 21இவ்வாறு, சாவின் வழியாய்ப் பாவம் ஆட்சி செலுத்தியதுபோல், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது அந்த அருள்தான் மனிதர்களைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கி, நிலைவாழ்வு பெற வழிவகுக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், பவுல் ஆதாமையும் கிறிஸ்துவையும் ஒப்பிட்டு அவர்களின் ஒற்றுமை வேற்றுமைகளை பரித்துக்காட்டுகிறார். பவுல் முதல் ஏற்பாட்டில் நல்லதொரு விற்பன்னர் அத்தோடு அவருக்கு பல விவிலிய ஆய்வு வழிமுறைகள் நன்கு தெரிந்திருந்தது என்பதையும் இது காட்டுகிறது. ஆதாம் இஸ்ராயேல் மக்களுக்கு மிக முக்கியமான ஒரு முதல் ஏற்பாட்டு நபர். அவரோடு வரவிருக்கின்ற மெசியா தொடர்பு பட்டிருக்கிறார் என்பதும் இஸ்ராயேலர்களின் நம்பிக்கை. இதனை யூதராக பவுல் நன்கறிந்திருக்கிறார். அதனையே இங்கு அவர் உரோமைய திருச்சபைக்கு விளக்குகிறார். ஆதாம்-இயேசு, குற்றம், பாவம் - கீழ்படிவு, அருள் மற்றும் கடவுளுக்கு ஏற்புடையவராதல் போன்ற கருத்துக்கள் இந்த பகுதியில் மீண்டும் மீண்டும் வருகின்றன. பாவத்தின் சம்பளம் மரணம் (❖உரோ 6,23) என்கின்ற பவுலுடைய முக்கியமான சிந்தனை இந்த அதிகாரத்தில் வளர்வதைக் காணலாம்.

(❖23பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு.)

வ.12: ஒரு மனிதனால் இந்த உலகத்திற்கு பாவம் (ἁμαρτία ஹமார்தியா), அதனால் அனைவருக்கும் மரணம் (θάνατος தனாடோஸ்), வந்தது என்பது பவுலுடைய வாதம். இந்த வரியில் யார் இந்த ஒரு மனிதர் என்பதை அவர் நேரடியாக விளக்கவில்லை, மாறாக இந்த பகுதியின் சூழலியலிலிருந்து அது ஆதாம் என்பது புலப்படுகிறது. அத்தோடு அனைவரும் பாவம் செய்தவர்கள் என்பதன் வாயிலாக முழு பாவத்தின் பொறுப்பையும் ஆதாமின் தலையில் போடாதவாறு கவனமாக இருக்கிறார் பவுல். அனைவரும் பாவம் செய்ததன் வாயிலாகத்தான் சாவு அனைவரையும் கௌவிக்கொண்டது என்கிறார்.

வ.13: திருச்சட்டம் (νόμος நொமொஸ்) என்பது இஸ்ராயேல் மக்களுக்கு மிகவும் முக்கியமான அடையாளம். இந்த திருச்சட்த்தின் வாயிலாக அவர்கள் கடவுளின் பிள்ளைகளாகின்றனர் என்ற வாதத்தை முன்வைத்தனர். ஆனால் திருச்சட்டம் ஆபிரகாம் அல்லது மோசே வாயிலாகத்தான் இஸ்ராயேல் மக்களுக்கு தரப்பட்டது. இதனை வைத்துக்கொண்டு பாவம் என்பது திருச்சட்டம் வந்ததன் பின்னால்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. திருச்சட்டத்திற்கு முன்பே பாவம் இருந்தது, அத்தோடு அது தெரியாமலிருந்தது (οὐκ ⸀ἐλλογεῖται) என்பது பவுலடியாருடைய வாதம்.

வ.14: ஆதாமிற்கும் அவருக்கு பின் வந்த மோசே போன்ற முக்கியமானவர்களையும் வாதத்திற்குள் கொண்டு வருகிறார் பவுல். ஆதாம் கீழ்படியாமையால் பாவம் செய்தார், ஆனால் அவரைப்போல் மோசே மற்றும் மற்றவர்கள் பாவம் செய்யவில்லை இருந்தாலும் அவர்களும் இறந்தனர். பாவம் ஆதாம் முதல் அனைவர் மேலும் ஆட்சிசெலுத்தியது (ἐβασίλευσεν ὁ θάνατος ἀπὸ Ἀδὰμ μέχρι Μωϋσέως). இந்த ஆதாம் வரவிருந்த கிறிஸ்துவின் முன்னடையாளம்.

வ.15: ஆதாம் பற்றியும் பாவத்தை பற்றியும் விவாதித்த பவுல் இந்த வரியில் அருளைப் பற்றி விவாதிக்கிறார். ஒருவடைய பாவத்தால் பலரும் இறந்தனர், அதனைவிட ஒருவருடைய அருட்கொhடையால் அனைவரும் அருளடைந்தனர். இந்த ஒருவர் இயேசு கிறிஸ்து. இந்த இயேசுக் கிறிஸ்துவை பவுல் கடவுளுடைய ஒரே மனிதர் என்கிறார் (ἑνὸς ἀνθρώπου Ἰησοῦ Χριστοῦ). கடவுளுடைய உண்மையான மனிதர் யார் என்ற கேள்விக்கு அவர்தான் இயேசு என்று விடையளிக்கிறார் பவுல். இயேசு கடவுளின் மனிதர் என்பது அக்காலத்தில் வழக்கிலிருந்த இயேசுவிற்கான ஓர் அடைமொழி என்ற ஊகிக்கலாம்.

வ.16: அருட்கொடையையும் பாவத்தையும் ஒப்பிட்டு விளக்கினாலும், இவையிரண்டும் வேறானவை என்பதில் பவுல் கவனமாக இருக்கிறார். ஒருவருடைய பாவத்தால் சாவு வந்து அனைவரையும் ஆட்கொண்டது அதேவேளை ஒருவருடைய அருளால் அனைவரையும் அருள் உள்வாங்குகின்றது. இந்த அருள்கொடையின் பலன் விடுதலை என்கிறார் பவுல். இந்த விடுதலை என்ற தமிழ்ச்சொல்லுக்கு நீதித்தீர்ப்பு δικαίωμα என்று சொல்லிடுகிறது மூல பாடம் கிரேக்கம்.

வ.17: இயேசு என்னும் ஒருவரால் எப்படி அனைவரும் அருள் பெறமுடியும் என்பது யூதர்கள் மற்றும் கிரேக்க உரோமையர்களின் கேள்வியாக இருந்தது. இதற்கு பவுல் பாவம் மற்றும் மரணத்திலிருந்து விடையளிக்கிறார். ஒருவரின் குற்றம் சாவை தருகின்றது என்போமானால், அதேபோல ஏன் ஒருவரின் வழியாக அருள்பெருக்கையும், கடவுளுக்கு ஏற்புடையவராதலையும் ஏன் பெற்றுக்கொள்ள முடியாது என்கிறார் பவுல்.

வ.18: இந்த வரி மேலுள்ள வாதங்களுக்கு முடிவுரை எழுதுகின்றது. அதாவது ஒருவருடைய குற்றம் பலருக்கு தண்டனைத் தீர்ப்பை வழங்கியது (κατάκριμα), அதேபோல ஒருவருடைய நீதியான வாழ்வு பலருக்கு நீதியான வாழ்வை பெற்றுக்கொடுத்துள்ளது (δικαίωσιν ζωῆς).

வ.19: இந்த வரியில் பவுல் கீழ்படிதலைப்பற்றி பேசுகிறார் (ὑπακοή உபாகொயே). கீழ்ப்படிவு என்பது கடவுளுடைய சட்டங்களை கடைப்படிப்பதாகும். இதனை கடைப்பிடிக்காமல் பலர் பாவிகளாயினர், அதேபோல் ஒருவருடைய கீழ்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவராயினர். முதலாவதிற்கு காரணமானவர் ஆதாம், இரண்டாவதிற்கு காரணமானவர் இயேசு.

வ.20: இந்த வரியில் பவுல் சட்டத்தை உட்புகுத்துகின்றார். சட்டத்தை கிட்டதட்ட சாடுகிறார். இந்த சட்டத்தின் வாயிலாகத்தான் மனிதர் பாவத்திற்கான வாய்ப்பை பெற்றனர் என்பது போல சொல்கிறார். இருப்பினும் எங்கெல்லாம் பாவம் பெருகியதோ அங்கெல்லாம் அருள் இன்னும் அதிகமான பொங்கியது என்கிறார் பவுல் (οὗ δὲ ἐπλεόνασεν ἡ ἁμαρτία, ὑπερεπερίσσευσεν ἡ χάρις.). இந்த வரி மிகவும் முக்கியமான வரி. இதன் வாயிலாக கடவுளின் அருளையும் அதன் ஆட்சியையும் பாவம் என்கின்ற கறை கட்டுப்படுத்த முடியாது என்று வாதிடுகிறார்.

வ.21: இறுதியாக சாவின் வழியாக பாவம் ஆட்சி செலுத்தியது போல, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக அருள் ஆட்சி செலுத்துகிறது என்கிறார். இந்த வரியில் காரியத்தை முதன்மையாக்கி, காரணத்தை பின்னெடுத்து விளக்குகிறார். இது ஒரு கிரேக்க தத்துவவியல் நடை. இந்த அருள்தான் χάρις காரிஸ் மனிதர்களை கடவுளுக்கு ஏற்புடையவராக்குவதாகவும் (δικαιοσύνη திகாய்யொசுனே), பின்னர் நிலைவாழ்வு தருவதாகவும் (ζωὴν αἰώνιον) சொல்கிறார். பவுலுடைய இந்த பகுதி ஒரு வகை கிரேக மெய்யியல் விவாத அமைப்பை ஒத்திருந்தாலும், சில இடங்களில் பவுல் அந்த நடையை தனக்கு ஏற்றால் போல் மாற்றுவதை அவதானிக்கலாம்.


நற்செய்தி வாசகம்
மத்தேயு 4,1-11

1அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். 2அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார். 3சோதிக்கிறவன் அவரை அணுகி, 'நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்' என்றான். 4அவர் மறுமொழியாக,''மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்'என மறைநூலில் எழுதியுள்ளதே' என்றார். 5பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, 6'நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; 'கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்' என்று மறைநூலில் எழுதியுள்ளது' என்று அலகை அவரிடம் சொன்னது. 7இயேசு அதனிடம், ''உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்' எனவும் எழுதியுள்ளதே' என்று சொன்னார். 8மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, 9அவரிடம், 'நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்' என்றது. 10அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, 'அகன்று போ, சாத்தானே,'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது' என்றார். 11பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

இயேசு ஆண்டவர் சோதிக்கப்டுகின்ற காட்சி மூன்று சமநோக்கு நற்செய்திகளிலும் வித்தியாசமாக காட்டப்படுகிறது. இருப்பினும் அவர் அலகையினால், பாலை நிலத்தில் தனிமையக சோதிக்கப்பட்டார் என்ற உண்மை புலப்படுகிறது. அலகை இயேசுவை மூன்றுமுறை சோதிக்கிறது, ஒவ்வொரு முறையும் வித்தியாசமான பார்வையில் கேள்விக்கணைகளை தொடுக்கிறது. மத்தேயுவின் பார்வை வித்தியாசமானது என்பதை, அலகை தாறுமாறாக முதல் ஏற்பாட்டு வரிகளை கோடிடுவதிலிருந்து கண்டுகொள்ளலாம். மத்தேயு அதிகமான முதல் ஏற்பாட்டு இறைவார்த்தையை பாவிப்பார், இங்கே மத்தேயுவில் வருகின்ற அலகையும் மத்N;தயுவின் நடையை பின்பற்றுகிறது. சமநோக்கு நற்செய்திகளின் ஒப்பீட்டு இலக்கங்களில் இந்த பகுதி 20வது இலக்கத்தை பெறுகிறது. மாற்கு இந்த பகுதியை இரண்டே வரிகளில் விவளக்குகிறார் (காண்க மாற்கு 1,12-13). இருப்பினும் மாற்கு இந்த பகுதியின் சாரம்சத்தை கொடுக்கிறார், இந்த சாரம்சத்தையும் அத்தோடு வேறு பாரம்பரியங்களையும் மத்தேயுவும் லூக்காவும் பொதுவான ஒரு மூலத்திலிருந்து பெற்றிருக்கிறார்கள். அதனை இருவரும் தங்கள் நடைகளில் காட்டுகின்றனர். ஏற்றுக்கொள்ளப்படாத யூத இலக்கியங்களில் சில, ஆதாம் அலகையால் சோதிக்கப்பட்டு பின்னர் அதன் சூழ்சிகளுக்குள் வீழ்ந்து மெசியா வரும் வரை அவதியுற்றார் என்கின்றன. தொடக்க நூல், ஆதாம்-ஏவாள் அலகையால் வஞ்சிக்கப்பட்டு ஏதேன் தோட்டத்தை இழந்தார்கள் என்கிறது.

வ.1: இந்தப் பகுதிக்கு சற்று முன்னர் தான் இயேசு திருமுழுக்கு பெற்றுக்கொண்டார், அத்தோடு அவர் கடவுளின் அன்பார்ந்த மைந்தர் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். உடனடியாக அவர் பாலைநிலத்திற்கு அழைத்துச்செல்லப்படுகிறார். மத்தேயுவும் லூக்காவும் இந்த இடத்திலும் ஒற்றுமையாக, இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காக (πειρασθῆναι ὑπὸ τοῦ διαβόλου), தூய ஆவியினால் (ὑπὸ τοῦ πνεύματος), பாலை நிலத்திற்கு (εἰς τὴν ἔρημον) அழைத்துச் செல்லப்பட்டார் என்கின்றனர். மத்தேயு, தூய ஆவி என்று சொல்லாமல் ஆவி, என்றே சொல்கிறார், இது சூழலியலில் தூய ஆவியாகத்தான் இருக்கவேண்டும். ஏன் இயேசு தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அதுவும் அலகையினால் சோதிக்கப்பட வேண்டும் என்பது நம்முடைய முக்கியமான கேள்வி. இதற்கு பலர் பல விளக்கங்களை முன்வைக்கின்றனர். பாலை நில அனுபவம், இஸ்ராயேல் மக்களுடைய விடுதலைப் பயணத்தை நினைவூட்டுகிறது. அத்தோடு ஆதாமைப்போல் அல்லது இஸ்ராயேல் மக்களைப்போல், இயேசு எந்த அலகையின் சோதனையாலும் விழக்கூடியவரல்லர் என்ற உண்மை இங்கே வெளிப்படுத்தப்படுகிறது.

வ.2: நாற்பது நாட்கள் இரவும் பகலும் (ἡμέρας τεσσεράκοντα ⸂καὶ νύκτας τεσσεράκοντα) நோன்புற்றார் பின்னர் அவர் பசியுற்றார். இந்த நாற்பது நாட்கள் முதல் ஏற்பாட்டில் பல கதைகளை நமக்கு நினைவூட்டுகின்றன.

அ. கடவுள் நாற்பது நாட்களில் வெள்ளப்பெருக்ககை அனுப்பினார் (காண்க தொ.நூல் 7,4)

ஆ. மோசே சீனாய் மலையில் நாற்பது நாட்கள் தங்கியிருந்தார் (காண்க வி.ப 24,18)

இ. யோசுவாவின் ஒற்றர்கள் நாட்பது நாட்கள் கானானை உளவு பார்த்தார்கள் (காண்க எண் 13,25)

ஈ. மோசே நாற்பது நாட்கள் இஸ்ராயேலருடைய பாவத்திற்காக செபித்தார் (காண்க இ.ச 9,25).

உ. எலியா நாற்பது நாட்கள் பயணம் செய்து ஒரேபை அடைந்தார் (காண்க 1அரசர் 19,8).

ஊ. கடவுள் யூதா வீட்டாரின் குற்றத்திற்காக நாற்பது நாட்களை எசேக்கியேலுக்கு கொடுக்கிறார் (காண்க எசே 4,6).

எ. யோனா நாற்பது நாட்கள் நினிவேயின் மனமாற்றத்திற்காக பிரசங்கித்தார் (காண்க யோனா 3,4)

ஏ. இயேசு உயிர்ப்பின் பின் நாற்பது நாட்கள் தொடர்ச்சியாக தோன்றினார் (காண்க தி.ப 1,3).

ஐ. இஸ்ராயேலர் நாற்பது ஆண்டுகள் பாலைவனத்தில் அலைந்தனர், மன்னாவையும் உண்டனர் (காண்க வி.ப 16,35)

இப்படியான நாற்பது ஒரு அடையாளமாக அல்லது நிறைவின் அடையாளமாக இயேசுவிற்கு காட்டப்படுகிறது. இயேசு பசியுற்றார் என்பதன் வாயிலாக அவர் உண்மையாகவே மனிதராக பல துன்பங்களைப் பட்டார் அல்லது மனிதர்களின் கஸ்டங்களை உணர்ந்துகொண்டார் என்பது புலப்படுகிறது.

வ. 3: சோதிக்கிறவன் என்ற அலகைக்கு பெயரிடுகிறார் மத்தேயு (ὁ πειράζων சோதிக்கிறவன்). இதிலிருந்து சோதனைகளுக்கு சொந்தக்காரன் அலகை, கடவுள் இல்லை என்ற வாதததையும் முன்வைக்கலாம். அலகையின் முதலாவது சோதானை இயேசுவின் இறைதன்மைக்கு சவால் விடுகிறது. அத்தோடு அவரின் பசியை பாவித்து கற்களை அப்பமாக்க கேட்கிறது. ஒருவேளை அலகை இயேசுவிற்கு மன்னா அனுபவத்தை நினைவூட்டியிருக்கலாம்.

வ. 4: இயேசு அலகைக்கு இறைவார்த்தையைக் கொண்டு பதிலளிக்கிறார். அத்தோடு இயேசுவிற்கு முதல் ஏற்பாட்டில் நல்ல அறிவு இருக்கிறது என்பதும் இங்கே தெளிவாகிறது. இயேசு இங்கே ❖இணைச்சட்டம் 8,3 ஐ உதாரணம் காட்டுகிறார். மனிதருடைய ஒரே தேவை உணவல்ல மாறாக, அதற்கும் மேலாக இறைவார்த்தை என்பதை அலகைக்கு அல்ல வாசகர்களுக்கு காட்டுகிறார். இறைவார்த்தை அழியாத பலத்தை கொடுக்கவல்லது என்பது இதிலிருந்து புலப்படுகிறது.

(❖இ.ச 8,33அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.)

வவ. 5-6: யோர்தான் பாலைநிலத்திலிருந்த இயேசு ஆண்டவரை அலகை எருசலேம் தேவாலயத்தின் உச்சிக்கு கூட்டிச் செல்கிறது. அலகையும் இயேசுவும் காலத்தையும், இடங்களையும் கடந்தவர்கள் என்பதால் இது சாத்தியமாகிறது. எருசலேம் தேவாலயத்தின் உச்சியில் அலகையை நிறுத்துவதன் மூலமாக மத்தேயு யூதர்களையும், அவர்கள் கிறிஸ்தவர்களை ஆலயத்திலிருந்து துரத்திவிட்டதையும் நினைத்து நகைக்கிறார் என எடுக்கலாம். இங்கே ஆலயத்தின் உச்சிக்கு அலகையினால் வர முடிகிறது. இந்த உச்சி கிழக்கிலிருந்த ஆலயத்தின் முகப்பு அது ஏறக்குறைய 450 அடி உயரத்திலிருந்தது. இந்த முறையும் அலகை இயேசுவின்இறைதன்மையை சோதிக்கிறது. அலகைக்கும் இறைவார்த்தை நன்கு தெரிந்திருக்கிறது. இந்த முறை அலகை திருப்பாடல் 91,11-12ஐ கோடிடுகிறது. கடவுளின் விசேட கவனிப்பிற்கு இயேசு சொந்தக்காரர் என்பதை அலகை நன்கு அறிந்திருக்கிறது. தெரிந்திருந்தும் ஏன் அவரை சோதிக்கிறது என்பது புரியவில்லை.

(❖திருப்பாடல் 91,11-12: 11நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். 12உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்.)

வ.7: அலகையின் கேள்விக்கு இயேசு ❖இ.ச 6,16 இலிருந்து விடைதருகிறார். நல்ல யூதர் எவரும் தன் கடவுளை சோதிக்க மாட்டார், இவ்வாறு இங்கே இயேசுவை நல்ல யூதராக காட்டுகிறார் மத்தேயு. இந்த காட்டல் கிறிஸ்தவர்களுக்கு எதிரான யூதர்களின் குற்றச்சாட்டுக்களை பொய்பிக்க முயற்ச்சி செய்கிறது.

(❖இ.ச 6,16: மாசாவில் நீங்கள் சோதித்தது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்.).

வ.8-9: எருசலேமிலிருந்து ஆண்டவரை அலகை மிக உயர்ந்த மலையுச்சிக்கு கூட்டிச் செல்வதாக மத்தேயு காட்டுகிறார். இது எந்த இடம் என்று தெளிவாக இல்லை. ஒருவேளை இது கார்மேல், ஒரேபு, சீனாய் அல்லது ஏர்மோன் மலையுச்சிகளாக இருந்திருக்கலாம். இந்த மலையுச்சியிலிருந்து அலகையினால் உலக அரசுகளையும் (τὰς βασιλείας τοῦ κόσμου), அதன் மாட்சிகளையும் (τὴν δόξαν αὐτῶν) காட்ட முடிகிறது. அத்தோடு இந்த முறை அலகை இயேசுவின் அதிகாரத்திற்கு சவால் விடுகிறது. தன்னை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கச் சொல்கிறது. இதனைத்தான் கீழைத்தேய ஞானியர் இயேசு குழந்தையாக இருந்தபோது செய்தனர் (❖காண்க 2,11). நெடுஞ்சாண்கிடையாக வணங்குதல் கடவுளுக்கு மட்டுமே (தனக்கு மட்டுமே) உரியது என்பதை இயேசு நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். இதனால் கோபம் கொள்கிறார். ஆரம்ப கால திருச்சபையில் பல கிறிஸ்தவர்கள் சீசருக்கு இந்த வணக்கத்தை தெரிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள், இந்த வரலாறும் இதன் பின்புலமாக இருக்கலாம். அத்தோடு அலகை, உலக அரசுகளையும் அதன் மாட்சியையும் கடவுளுக்கு தருவதாக சொல்கிறது. இதிலிருந்து யார் உலக அரசுகளையும், அதன் மாட்சிகளையும் கட்டுபடுத்துகிறார் என்ற கேள்வி எழுகிறது. இன்று உலகில் நடப்பவற்றைப் பார்த்தால் சில வேளைகளில் அலகைதான் ஆட்சி செய்கிறான் போலத் தோன்றுகிறது.

(❖11வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.)

வ.10: அலகையின் இந்த கேள்விக்கு இயேசு காட்டமாக பதில் சொல்லி இறைவார்த்தையை மீண்டுமாக கோடிடுகிறார் (❖காண்க இ.ச 6,13). இந்த முறை இயேசுவின் பதில் பயங்கரமாக இருக்கிறது. அத்தோடு இயேசு சாத்தானை அகன்று போகும்படி சொல்கிறார். இனியும் சாத்தானுக்கு இங்கே வேலையில்லை என்பது போல தோன்றுகிறது.

(❖13உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நட! அவருக்குப் பணிந்து அவர் பெயராலே ஆணையிடு!)

வ.11: இந்த இறுதியான வசனம் மத்தேயுவிலும் மாற்குவிலும் மட்டுமே காணக்கிடைக்கிறது. வானதூதர்கள் (ἄγγελοι) வந்து ஆண்டவருக்கு பணிவிடை செய்கிறார்கள். இது இயேசுவின் தெய்வீகத்தை காட்டும் அதேவேளை இடுக்கண் வேளையில் கடவுள் இயேசுவோடு இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது.

பாவம் என்பது நம்முடைய அடையாளத்தை இழத்தலாகும்,
பாவம் நம் சாயலை குலைத்து, கடவுளிடமிருந்து தூர போகச் செய்கிறது.
சோதனை கடவுளிடமிருந்து வருகிறது என்பது கேள்விக்குறியே!
சோதனைகள் பாவத்திற்கு இட்டுச் செல்கிறது என்பதும் சந்தேகமே.
இயேசு சோதனைக்கே சோதனை கொடுத்தார்.
அன்பு ஆண்டவரே, சோதனைகளில் உம்மை மட்டுமே பற்றிக்கொள்ள வரம் தாரும்.
நிலமற்று அனாதைகாள சொந்த ஈழத்திலே அலகையினால் அவதியுறும் மக்களுக்கு சமர்ப்பணம்.