இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






First Week of Lent 2016

இ.ச 26,4-10;திருப்பாடல் 91;உரோமையர் 10,8-13; லூக்கா 4,1-13


முதல் வாசகம்
இ.ச 26,4-10

4அப்போது, குரு அந்தக் கூடையை உன் கையிலிருந்து எடுத்து, அதை உன் கடவுளாகிய ஆண்டவரது பலிபீடத்தின்முன் வைப்பார். 5நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது: 'நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அன்னியராய் இருந்தார். ஆனால் அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார். 6எகிப்தியர் எங்களை ஒடுக்கினர்; துன்புறுத்தினர்; கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர். 7அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார். 8தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார். 9அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டிவந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார். 10எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன்' என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்.

இணைச்சட்ட நூல், தோராவினுடைய இறுதி நூலாகும். 'இணைச்சட்ட வரலாற்றை' தொடங்கி அதனை யோசுவா, நீதிபதிகள், சாமுவேல், அரசர்கள் நூல்கள் வரை இது கொண்டு செல்கிறது. இந்ந நூல் இஸ்ராயேல் மக்களுடைய நம்பிக்கை வரலாற்றில் மிக முக்கியமானது. இறந்த காலத்தில் நடந்தவற்றை விவரிப்பது போல், உண்மையில் இஸ்ராயேல் பிள்ளைகளுக்கும் நமக்கும், இது எதிர்காலத்தையே போதிக்கிறது. இஸ்ராயேல் மக்கள் தங்களது வரலாற்றில் இருந்து மீண்டும் கற்க வேண்டும், அதற்கு அவர்கள் பாலைவன நாட்களை நினைத்து பார்க்க வேண்டும், மோசேயுடைய சட்டங்களை அமுல்படுத்த வேண்டும். சுருங்கச் சொல்லின் 'கடவுளுக்கு பணி, அதனால் வாழ்' என்பதே இதனுடைய அர்த்தம். மண்ணை மெது மெதுவாக இழந்து கொண்டு, அடையாளங்களை தொலைத்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழருக்கு இந்த நூலின் போதனைகள் மிகவும் முக்கியமானது. இன்றைய வாசகம் 'அறுவடைக் காணிக்கைகள்' எவ்வாறு செலுத்தப்படவேண்டும் என்ற பகுதியில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்த அறுவடைக்கால காணிக்கைகள் அநேகமாக வசந்த கால முடிவில் நடைபெற்றிருக்கலாம்.

வ.4: இங்கே முதல் கனிகள் ஆண்டவர் தரும் நிலத்தில் இருந்து எடுக்கப்படுகின்ற படியால் அவருக்கு கொடுக்கப்பட வேண்டியவை என்கிறது. பலிப்பீடம் ஆண்டவரது பிரசன்னத்தை குறிக்கப் பயன்படலாம்.

வ.5: இனிவருகின்ற வசனங்கள் இஸ்ராயேலுடைய விசுவாசப் பிரமானத்தை உள்ளடக்கியதாக அமைகிறது. 'நிரந்தரக் குடியற்ற அரமேயனான என் தந்தை' (אֲרַמִּי אֹבֵד אָבִ֔י) என்பது இங்கு யாக்கோபை குறிக்கும். அலைந்து திரி என்பதற்கு அழிந்து போ என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. (אָבַד அவாத் -அழி, தொலை). நாடற்று அகதியாய் அலைந்தால், எவ்வளவு செல்வந்தம் இருந்தாலும் அழிந்தே போவார்கள் என்பது வரலாறு தரும் பாடம். நமக்கு சாலப் பொருந்தும். யாக்கோபின் தாய், ரெபேக்கா ஒரு அரமேயாள் என்பதாலும், அவர் இருபது ஆண்டுகளுக்கு மேல் அரமேயாவில் (சிரியா) இருந்ததாலும் இவ்வாறு அழைக்கப்படுகிறார். எகிப்துக்கு சென்றார், சிறுமையாய் இருந்தார், அங்கே பெரிய மக்களினத்தைக் பெற்றார் என்பது இஸ்ராயேல் மக்களுடைய எகிப்திய ஆரம்ப கால வளமான நாட்களை குறிக்கிறன.

வவ. 6-7: இவ்வசனங்கள், எகிப்திலே அவர்கள் எவ்வாறு அடிமைகள் ஆயினர், கடவுள் எவ்வாறு தன் மக்களின் குரலைக் கேட்டார் என விவரிக்கின்றன.

வவ. 8-9: ஆண்டவருடைய வலிய செயல்கள் நினைவு கூறப்படுகின்றன. வலிய கரம், ஓங்கிய புயம், பேராற்றல், அடையாளம், அருஞ்செயல்கள், போன்றவை கடவுளுடைய மகத்துவத்தை நினைவுபடுத்தும் ஒத்த கருத்துச் சொற்கள். ஆசிரியர் இங்கே, ஆண்டவருடைய செயல்கள்தாம் மக்களுக்கு எகிப்திலிருந்து விடுதலை தந்தது என நேர்தியாக நினைவுபடுத்துகிறார். இஸ்ராயேல் பாலும் தேனும் பொழியும் நாடு என்பது, மீண்டும் மீண்டும் விவிலியத்தில் வரும் அழகான விவரணம். (חָלָב וּדְבָשׁ கலாவ் வுதெவாஷ்) பாலும் தேனும் என்று, 54 தடவைகளாக முதல் எற்பாடு, கானான் நாட்டை விவரிக்கிறது. பாலும் தேனும் இயற்கையான விலையுயர்ந்த அக்கால அரிய பொருட்கள்.

வ. 10. ஆண்டவருக்கு முன்னால் வைத்து வணங்குதல் என்பது, ஒருநாளும் கடவுள் செய்தவற்றை மறக்காதே அல்லது தொடர்ந்து சொந்த நாட்டில் குடியிருக்க உன் ஆண்டவரை மறவாதே என்பதை நினைவூட்டுகிறது.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 91

1உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். 2ஆண்டவரை நோக்கி, “நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்” என்று உரைப்பார். 3ஏனெனில், ஆண்டவர் உம்மை வேடரின் கண்ணியினின்றும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார். 4அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும். 5இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும் நீர் அஞ்சமாட்டீர். 6இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர். 7உம் பக்கம் ஆயிரம்போர் வீழ்ந்தாலும், உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது. 8பொல்லார்க்குக் கிடைக்கும் தண்டனையை நீரே பார்ப்பீர்; உம் கண்ணாலேயே நீர் காண்பீர். 9ஆண்டவரை உம் புகலிடமாய்க் கொண்டீர்; உன்னதரை உம் உறைவிடமாக்கிக் கொண்டீர். 10ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. 11நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். 12உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர். 13சிங்கத்தின்மீதும் பாம்பின்மீதும் நீர் நடந்து செல்வீர்; இளஞ்சிங்கத்தின்மீதும் விரியன்பாம்பின்மீதும் நீர் மிதித்துச் செல்வீர். 14‘அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்; அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்; 15அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்; 16நீடிய ஆயுளால் அவர்களுக்கு நிறைவளிப்பேன்; என் மீட்பை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன்.’

'தீங்கு உமக்கு நேரிடாது வாதை உம் கூடாரத்தை நெருங்காது. நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்'. விவிலியத்தில் அதிகமாக பாடப்பட்ட வரிகளில் இதனையும் ஒன்றாகக் கொள்ளவேண்டும். திருப்பாடல்களை நான்கு புத்தகங்களாக பிரிக்கின்றவர்கள் 90-106 வரையான பாடல்களை நான்காம் புத்தகமாகக் வகுக்கின்றனர். இது யாருடையது என்பதில் பல வாத பிரதிவாதங்களைக் காணலாம். இதன் பாடகர், நோயினால் வாடுகின்றவர் போலவும், தாவீது அரசர் போரின் போது பாடுவது போலவும், இடப்பெயர்வின் பின்னர் ஒரு இஸ்ராயேலர் ஆலயத்தில் பாடுவது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருப்பாடல் பல அழகான படிப்பினைகளை மீள மீள ஞாபகப்படுத்துகிறது. கடவுளே எமது கேடயமும் அரனும் என்பதே இப்பாடலின் மையக் கருத்து. இப்பாடலுக்கு 'முரண்தொடர் அணிநயம்' (உhயைளஅரள) அதிகமாக பாவிக்கப்பட்டுள்ளது

அ. கடவுள்தான் அடைக்கலத்தின் ஊற்று: מַחְסִי וּמְצוּדָתִי - என் புகலிடம் என் கோட்டை
ஆ. கடவுளின் செயல்கள்: கண்ணியினின்றும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார், சிறகுகளால் அரவணைப்பார், செல்லும் இடமெல்லாம் காக்குமாறு தன் தூதருக்கு கட்டளையிடுவார், அவர்கள் உம்மை தாங்குவர் (இந்த வார்த்தைகளை சாத்தான் கடவுளுக்கே நற்செய்தியில் நினைவூட்டும்), அவர்களை விடுவிப்பார், அவர்களை பாதுகாப்பார், மன்றாட்டுக்கு பதிலளிப்பார், துன்பத்தில் அவர்களோடு இருப்பார், அவர்களை பெருமைப்படுத்துவார், நீடிய ஆயுளையும் மீட்பையும் அளிப்பார்.
இ. கடவுளை நம்புவோருக்கு நடப்பவை: கடவுளின் இறக்கைகளின்கீழ் புகலிடம் காண்பர், அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும், இரவின் திகிலோ அல்லது கொள்ளை நோயோ பகலின் அம்போ அல்லது வாதையோ அச்சப்படுத்தாது. தம் வீரர் மரணமோ அல்லது பகைவீரர் தாக்குதலோ பயம்தராது, பொல்லாரின் தண்டனையை காண்பர். 'தீங்கு உம்மை அணுகாது வாதை உம் கூடாரத்தை அனுகாது' என்பதும் விவிலியத்தின் மிக அதிகம் அறியப்பட்ட அழகான வரிகள்.
ஈ. கடவுளை நம்புவோர் செய்பவை: சிங்கத்தின் மீதும் பாம்பின் மீதும் நடப்பர் (இந்த மிருகங்கள் மனிதர்களால் அடக்க முடியாதவை என அறியப்பட்டவை), இளஞ்சிங்கத்தையும்; நாகத்தையும் மிதிப்பர்.
உ. கடவுளின் அழகான இரண்டு பெயர்கள்: அதி உன்னதர் (עֶלְיוֹן எல்யோன்), சகலவல்லவர் (שַׁדַּי ஷதாய்)



இரண்டாம் வாசகம்
உரோமையர் 10,8-13

8அதில் சொல்லியிருப்பது இதுவே 'வார்த்தை உனக்கு மிக அருகில் உள்ளது உன் வாயில், உன் இதயத்தில் உள்ளது.' இதுவே நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும் என நாங்கள் பறைசாற்றும் செய்தியாகும். 9ஏனெனில், 'இயேசு ஆண்டவர்' என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். 10இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். 11ஏனெனில், 'அவர் மீது நம்பிக்கை கொண்டோர் வெட்கத்திற்கு உள்ளாக மாட்டார்' என்பது மறை நூல் கூற்று. 12இதில் யூதர் என்றோ கிரேக்கர் என்றோ வேறுபாடில்லை அனைவருக்கும் ஆண்டவர் ஒருவரே. அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நலன்களைப் பொழிகிறார். 13'ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர்' என்று எழுதியுள்ளது அல்லவா?

பவுல் தன்னுடைய மூன்றாவது திருத்தூது பயணத்தின் முடிவில் கொரிந்து நகரில் இருந்து, ஏ.கு, கி.பி. 56ல் இந்த கடிதத்தை உரோமைய கிறிஸ்தவர்களுக்கு எழுதினார் என நம்பப்படுகிறது. பவுல் உரோமைய திருச்சபையை நிறுவவில்லை. கி.பி 49ல் கிளாவுதியுஸ் சீசர் யூதர்களை வெளியேற்றிய போது யூத கிறிஸ்தவர்களும் வெளியேறினர். கி.பி 54ல் இவர்கள் திரும்பியபோது மற்றைய கிறிஸ்தவர்களை உரோமையை திருச்சபையில் சந்திக்கின்றனர். இப்படியான நிலவரத்தை பவுலுடைய இக்கடிதம் சந்திக்கிறது. இன்றைய பகுதி 'மீட்பு எல்லாருக்கும் உரியதும் இலகுவானதும்;' என்ற அமைப்பினுள் உள்ளது. விவிலியம் பல வேளைகளில் தனி நபரை முத்தரப்பு பார்வைக்கிணங்க (வசipயசவவைய) காண்கிறது. அவை: கை-கால்கள், இதயம்-கண்கள், மற்றும் வாய்-காதுகள். லேவியர் புத்தகம் (18,5) கை-கால்கள் பார்வைக்கிணங்க, தோராவை பின்பற்றுபவர் அச்செய்கையால் வாழ்வர் என்கிறது. பவுல் பல இறைவார்த்தைகளை இங்கே பாவனைக்கு அழைப்பதைக் காண்போம். பவுல் இதயம்-கண்கள் முறையை கிறிஸ்தவர்கள் பாவிக்க வேண்டும் என்கிறார். அதாவது சட்டத்தை கடைபிடித்தல் என்பதைவிட நம்பிக்கையை வாழுதல் என்பதாகும்.

வ.8: பவுல் இங்கு இணை.சட். 30,14ஐ காட்டுகிறார். இங்கே அவர் 'வார்த்தை' எனக் குறிப்பதை (הַדָּבָר ஹதாவார், ῥῆμά ரேமா) சட்டமாக (தோராவாக) எடுக்கலாம், ஆனால் அதை அவர் விசுவாசம் என கிறிஸ்தவ விளக்கம் கொடுக்கிறார். அந்த விசுவாசம் கை-கால்களில் இல்லை மாறாக இதயத்தில் இருக்கிறது என்கிறார். அத்தோடு அதுவே அவர் தரும் செய்தியாகும் என்றும் சொல்கிறார். பவுல் லாவகமாக தோராவை இயேசு ஆண்டவருக்கு சமப்படுத்துகிறார்.

வ.9: மீட்புப்பெற இரண்டு செயல்களைச் செய்யச் செல்கிறார்: அ. வாயால் இயேசுவை ஆண்டவர் என அறிக்கையிடுவது, ஆ. இதயத்தால் இயேசுவை கடவுள் இறந்தோரிடமிருந்து உயிர்தெழச்செய்தார் என நம்புவது.

வ.10-11: இதயத்தால் நம்புவோரும் வாயால் அறிக்கை இடுவோருமே மீட்புப்பெறுவர் என்றும், சட்டங்களை அதாவாது இயேசுவை நடைமுறைப்படுத்த சட்டம் தேவையில்லை விசுவாசமே தேவை என்கிறார் இலாவகமாக. இதற்கு சார்பாக எசாயா 28,16ஐ கோடிடுகிறார். (הַמַּאֲמִין לֹא יָחִישׁ நம்புகிறவர் கவலையடைய தேவையில்லை) நம்புகிறவரே ஏற்புடையவர் ஆவர் என்பது இவ்வரிகளின் செய்தி. (δικαιοσύνη திகாய்யோசுனே - ஏற்புடமை)

வவ.12-13: யூதருக்கும் கிரேக்கருக்கும் நம்பிக்கையை பொறுத்தமட்டில் பெரிய வித்தியாசம் இல்லை என்பது உரோமைய திருச்சபைக்கு பவுலுடைய போதனை. கடவுளை கூப்பிடுகிறவர்களை கடவுள் கண்நோக்குகிறார் என்பது பவுலுடைய வாதம் அதற்கு அவர் யோவேல் 2,32ஐ காட்டுகிறார். (כֹּל אֲשֶׁר־יִקְרָא בְּשֵׁם יְהוָה יִמָּלֵט கடவுளின் பெயரால் அழைக்கிற அனைவரும் மீட்படைவர்).

இயேசுவை கடவுளாக அறிக்கையிடுங்கள் என்பது ஆரம்ப கால திருச்சபையின் முக்கியமான படிப்பினைகளில் ஒன்று (κύριον Ἰησοῦν கூரியோன் யியேசூன் - இயேசுவை கடவுளாக). இது ஆரம்ப கால திருச்சபையின் திரு முழுக்கு விசுவாச அறிக்கையாக இருந்திருக்க வேண்டும்.


நற்செய்தி வாசகம்
லூக்கா 4,1-13

1இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 2அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன் பின் அவர் பசியுற்றார். 3அப்பொழுது அலகை அவரிடம் , 'நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்' என்றது. 4அதனிடம் இயேசு மறுமொழியாக, ''மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை' என மறைநூலில் எழுதியுள்ளதே' என்றார். 5பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி, 6அவரிடம், 'இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன் நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். 7நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்' என்றது. 8இயேசு அதனிடம் மறுமொழியாக, ''உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக' என்று மறைநூலில் எழுதியுள்ளது' என்றார். 9பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, 'நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; 10'உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்' என்றும் 11'உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது' என்றது. 12இயேசு அதனிடம் மறுமொழியாக, ''உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்றும் சொல்லியுள்ளதே'' என்றார். 13அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.

இந்த பகுதி இயேசு ஆண்டவர் பொதுப்பணிக்காக தன்னை ஆயத்தப்படுத்தியதன் இறுதி நிகழ்வாகவும், அவருடைய திருமுழுக்கின் பின்னர் நடைபெற்றதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. யோவான் தன்னுடைய முழு பணியையும் யோர்தானுக்கு அருகிலிருந்த பாலைநிலப் பகுதிகளிலே செய்து வந்தார். இயேசு இங்கே யோவானைப் போல பணிசெய்ய வரவில்லை. மாறாக தன்னை ஆயத்தம் செய்யவே வருகிறார். பாலை நிலம் அல்லது வனாந்தரம் என நாம் யாருமற்ற பகுதியை அழைக்கிறோம். இதனை ஈழத்தில் காண்பது மிக அரிது. மத்திய கிழக்கு அரேபிய மற்றும் வட ஆப்பிரிக்க பகுதிகளில் இது சாதாரண புவியியல் நில அமைவு. (ἔρημος ஏரேமொஸ் பாலை நிலம், வனாந்தரம்). விவிலியம் சீனாய் பாலை நிலத்தையும், அங்கே இஸ்ராயேல் மக்கள் 40 வருடம் அலைந்ததையும், வரலாறாகவும் அனுபவமாகவும் பல வேளைகளில் உருவகிக்கிறது. பாலை நிலத்தோடு, உடன்படிக்கை, கடவுளின் அதிசய வழங்கள் மற்றும் நீதித் தீர்ப்பு போன்ற இறையியல் கருத்துக்கள் பிணைக்கப்பட்டுள்ளன. பாலை நிலத்தை கானான் நாட்டிற்கு எதிர் பதமாக கண்டு நோக்க வேண்டும் என நினைக்கிறேன். முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் அதிகமாக தங்களது செய்தியில் இந்த பாலை நில அனுபவத்தை உள்வாங்கினர். புதிய ஏற்பாடும் இதே அனுபவத்தையே தனது அடிப்படையாகக் கொண்டுள்ளது. பாலை நிலத்தின் வளமில்லா தன்மை, அதனை தீய சக்திகளின் உறைவிடமாகவும், கடவுள் வாழாத இடமாகவும் கருதத் தூண்டியது. (ஒப்பிடுக: மத் 4,1-11: மாற் 1,12-13). லூக்கா இந்த பாலைவன சோதனை நிகழ்வூடாக 1) இயேசுவின் இறைத்தன்மையையும், 2) இஸ்ராயேல் நாட்டினுடனான அவரது பாரம்பரிய உறவையும், 3) கடவுளின் சக்திக்கும் சாத்தானின் சக்திக்குமான போராட்டத்தையும், 4) இயேசுவின் பணி இறைவாக்குகளை நிறைவு செய்கிறது என்பதையும், 5) இந்த சோதனை நிகழ்வு சீடர்களுக்கு ஒரு முன்மாதிரிகையை வழங்குவாதாகவும், காட்சிப்படுத்துகிறார்.

வவ.1-2: இங்கு காட்சி அமைப்பு நடைபெறுகிறது. லூக்கா நன்றாக விவரிக்கிறார். யோர்தான் நதியிலிருந்து 'நிறை தூய ஆவியுடன்' வந்த இயேசு இப்போது 'ஆவியால்' அல்லது 'ஆவியில்' பாலை நிலத்துக்கு இழுக்கப்படுகிறார். லூக்கா 'தூய' என்ற பெயரடைச் சொல்லை விட்டு விடுகிறார் அத்தோடு ஆவியாலா? அல்லது ஆவியிலா? என்று நான்காம் வேற்றுமை உருபில் சிந்திக்க தூண்டுகிறார். இது எந்த ஆவி? என்பது எமது கேள்வி. 40 நாட்கள் இஸ்ராயேலருடைய 40 வருட பாலை நில பயண- அனுபவத்தையும், அவர்களது பலவீனத்தையும் குறிக்கலாம். முதல் ஏற்பாடு 90 தடவைகளுக்கு மேலாக இந்த 'நாற்பது நாட்கள்' என்ற சிந்தனையை விவரிக்கிறது. நோவா, யாக்கோபு, மோசே, யோசுவாவின் ஒற்றர்கள், எலியா, யோனா இன்னும் பலர் இந்த சிந்தனையோடு பல செய்திகளை விவிரிக்கின்றனர்.

வவ.3-4: (διάβολος-தியாபொலொஸ், சாத்தான், குற்றம் சுமத்துவது, அலகை, சோதிப்பது) அலகையின் முதலாவது சோதனை. இங்கு இயேசுவின் இறைதன்மையும் மகன்தன்மையும் சோதிக்கப்படுகிறது. உடல் தேவையை முன்வைத்து, மன்னாவை ஆண்டவருக்கு சாத்தான் ஞாபகப்படுத்துகிறது. இயேசு இ.ச 8,3ஐ சாத்தானுக்கு விடையாக தருகிறார். லூக்கா அதனுடைய முழு வரியையும் நமக்கு தரவில்லை (காண்க இ.ச. 8,3). இயேசு, தனக்கு அதிசயம் செய்வதைவிட நிறைய வேலை இருப்பதாக சாத்தானுக்கு சொல்கிறார்.

வவ.5-8: உலகின் அரசுகள், அரசியல் அநியாயங்கள், அவற்றின் மேன்மைகள் அனைத்தும் சாத்தானுடைய வல்லமைக்கு கட்டுப்பட்டவை என்று அழகாக காட்டுகிறார் இந்த மாண்புமிகு வைத்தியர். சாத்தான் இயேசுவை உயர்த்தி என்ற (ἀναγαγὼν) ஒரு பதத்தை பயண்படுத்தி (வ.5) சோதனையின் தன்மையை விளக்குகிறார். இங்கே ஆண்டவரின் அதிகாரம் சோதிக்கப்படுகிறது. 'அதிகாரம் (ἐξουσία எசூசியா)' என்ற சொல்லை அதிகமாக பயன்படுத்துவார் லூக்கா, அது இயேசுவிற்கு மட்டுமே உரியது என்பது அவரின் நம்பிக்கை. பல இடங்களில் இந்த அதிகாரம் இயேசுவை கடவுளாக காட்டும். அலகை இயேசுவை தன்னை வணங்க கேட்கிறது (προσκυνέω தாழ் பணி, வணங்கு, கையை முத்தமிடு, ழுழந்தாள் படியிடு, ஆராதி). இயேசு விடையாக இ.ச 6,13: 10,20களை கொடுக்கிறார். இணைச்சட்ட λατρεύσεις-வழிபாடு என்ற சொல்லை லூக்கா, தன் நற்செய்தியில் προσκυνέω-வணங்கு என்று மாற்றி ஆழப்படுத்துகிறார்.

வவ.9-12: உச்சகட்ட சோதனை எருசலேமில் நடைபெறுகிறது. πτερυγίον-கோயிலின் முகடு, இதனை ஏன் லுக்கா பாவிக்கிறார் என காண்பது கடினம். எருசலேம் கோவிலின் தென்கிழக்கு பகுதியாக இருக்கலாம். எருசலேம் கடவுளின் நகர், அங்கேதான் கடவுள் கொலைசெய்யப்பட்டார் அல்லது உயிர்தியாகம் செய்தார். இப்போது அலகை ஆண்டவருக்கு இறைவார்த்தையை போதிக்கிறது. தி.பா 91,11-12ஐ கோடிடுகின்றது. இன்னொருமுறை இயேசுவின் இறைமகன் தன்மையை சோதிக்கிறது. இத்தப்பாடல் தாவீதுக்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவத்தைக் கொடுத்தது. அலகை இப்போது இறைமகனை தனது தெரிவையே சந்தேகிக்கக் கேட்கிறது. இயேசு மீண்டும் இ.ச 6,16 விடையாகத் தருகிறார். (לֹא תְנַסּ֔וּ אֶת־יְהוָה אֱלֹהֵיכֶ֑ם உங்கள் கடவுளாகிய ஆண்டவரை சோதிக்காதீர்கள்). இந்த செய்தி இயேசுவிற்கல்ல அலகைக்கும் நமக்கும், கடவுளை சோதிப்பவர்களுக்கு லூக்கா சொல்லுவது. சாத்தானுடைய கேள்வி இயேசுவின் தெய்வீகத்தை சோதிப்பதற்கல்ல மாறாக அவரது முயற்சியை உடைப்பதற்கே. பல வேளைகளில் அவருடைய சீடர்களையோ மக்களையோ விட அலகை இயேசு யார் என்பதை நன்கு அறிந்திருந்தது.

வ.13: அலகை சோதனைகளை முடித்துக்கொண்டு திரும்பியது என்பது, அலகையினுடைய செயற்பாடுகள் தொடரும் எனவும் காட்டுகிறது. தகுந்த காலம் என்று என்று லூக்கா கூறுவது ஆண்டவரின் பாடுகள் மரணத்தையா அல்லது ஆண்டவரின் விண்ணேற்றத்தின் பின்னர் வரும் காலத்தையா என்று ஆராய வேண்டும்.

ஆண்டவராகிய இயேசுவே! சோதனைகளில் வீழ்ந்து மயங்கி விழாது, எங்களின் உடல் உள தேவைகளை விட உம்மை அன்பு செய்ய வரம் தாரும்.