இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டிடன் பொதுக்காலம் நான்காம் வாரம்

முதல் வாசகம்: செப்பானியா 2,3: 3,12-13 பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 145,6-10 இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 1,26-31 நற்செய்தி: மத்தேயு 5,1-12


முதல் வாசகம்
செப்பானியா 2,3: 3,12-13

3நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்; நேர்மையை நாடுங்கள்; மனத்தாழ்மையைத் தேடுங்கள்; ஆண்டவரது சினத்தின் நாளில் ஒரு வேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும். 12ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்; அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள். 13இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்; வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்.'

செப்பானியா புத்தகத்தின் முக்கியமான செய்தியாக நீதித் தீர்ப்பை பல ஆய்வாளர்கள் காண்கின்றனர். செப்பானியா, பபிலோனியா இடப்பெயர்வின் முன் இறைவாக்குரைத்திருக்க வேண்டும். நீதித் தீர்ப்பை பற்றிக் கூறினாலும், செப்பானியா நம்பிக்கையின் செய்தியை தருகிறார், அதிலும் முக்கியமாக யூதாவின் எஞ்சிய வறியவர்கள், ஆண்டவரின் நம்பிக்கையாக மாறுவர் என்பது அக்காலத்தில் மிகவும் நோக்கப்பட வேண்டிய இறைவாக்காக இருந்திருக்கிறது. இரக்கமற்ற தன்மை, கர்வம் மற்றும் இறுமாப்பு போன்ற மனித பாவங்களை செப்பானியா சாபங்களாக சாடுகின்றார். கடவுளின் இறுதி நாளைப் பற்றி பேசுகின்ற இந்த இறைவாக்கு நூலுக்கு ஆமோஸ், எசாயா, மற்றும் மீக்கா புத்தகங்களுடன் தொடர்பிருந்திருக்க வேண்டும். யோசியா அரசன் செப்பானியாவின் இறைவாக்கினாலே தூண்டப்பட்டார் என்ற ஒரு நம்பிக்கையும் இருந்திருக்கிறது.

வ.3: செப்பானியா புத்தகத்தில் வெறும் மூன்று அதிகாரங்களே உள்ளன, அதில் இரண்டாவது அதிகாரம் மனந்திரும்ப அழைப்பு விடுகிறது. இந்த இரண்டாவது அதிகாரம் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கின்ற அதேவேளை, ஏழைகளை பொறுத்த மட்டில் மிக மெதுவான வாhத்ததைகளை பிரயோகிக்கின்றது.

நாட்டில் இருக்கும் எளியோருக்கு (כָּל־עַנְוֵי הָ), அழகான வரைவிலக்கனம் கொடுக்கிறார் செப்பானியா. அவர்களை ஆண்டவரின் கட்டளைகளை கடைப்பிடிப்போர் என்கிறார். எபிரேய விவிலியம் இவர்களை, கடவுளுடைய நெறிமுறைகளை செய்கிறவர்கள் (מִשְׁפָּטוֹ פָּעָלוּ), என்று வர்ணிக்கிறது. இவர்களுக்கு பல முக்கியமான கட்டளைகளைக் கொடுக்கிறார்.

அ. ஆண்டவரைத் தேடுங்கள் (בַּקְּשׁוּ אֶת־יְהוָה֙):
ஆ. நேர்மையை நாடுங்கள் (בַּקְּשׁוּ־צֶ֙דֶק֙):
இ. மனத்தாழ்மையை தேடுங்கள் (בַּקְּשׁוּ עֲנָוָה):
ஒருவேளை இந்த கட்டளைகளை எளியோரைத் தவிர வேறு எவரும் பின்பற்ற மாட்டார்கள் என இந்த இறைவாக்கினர் நினைக்கிறார் போல. அத்தோடு ஆண்டவரின் சினத்தின் நாளில் இவர்களுக்கு ஒருவேளை புகலிடம் கிடைக்கலாம் என்ற சிறிய நம்பிக்கையையும் இவர் வெளிப்படுத்துகிறார். ஆண்டவருடைய சினத்தின் நாள் என்பது (בְּיוֹם אַף־יְהוָה), செப்பானியா புத்தகத்தின் மிக முக்கியமான செய்திகளில் ஒன்று.

வ.12: இந்த வசனம் மூன்றாவது அதிகாரத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம், முதல் இரண்டு அதிகாரங்களைப் போலல்லாது நம்பிக்கையை கருப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆண்டவரின் தண்டனை தவிர்கப்பட முடியாதது, ஆனால் ஆண்டவர் முழு யூதேயாவையும் அழிக்க மாட்டார், அத்தோடு அவர் தாவீதின் குலத்தை முழுவதுமாக மறக்கவும் மாட்டார். ஆனால் இந்த நம்பிக்கையை தரப்போகிறவர்கள் பெறியவர்களோ, அல்லது பலமானவர்களோ அல்ல மாறாக அவர்கள் ஏழை எளியவர்களே என்பது, செப்பானியாவின் அழகான இறையியல்.

ஆண்டவர் நிச்சயமாக ஏழை எளியவர்களை விட்டுவைப்பார், அத்தோடு இந்த ஏழை எளியவர்கள் கடவுளின் பெயரில் நம்பிக்கை வைப்பார்கள் என நம்பிக்கை தெரிவிக்கிறார். இந்த வரி, வசதி படைத்தவர்கள்மேல் செப்பானியாவின் கோபத்தை தெளிவு படுத்துகிறது.

வ.13: இந்த வரியும், இந்த எழை எளியவர்களின் பண்பையே பேசுகிறது. இந்த ஏழை எளியவர்களை எஞ்சியவர்கள் என்கிறார் இறைவாக்கினர். இந்த எஞ்சியவர்கள் என்பவர்கள், கடவுளின் நீதித் தீர்ப்பால் கிடைக்கும் தண்டனையிலிருந்து தப்புவோரைக் குறிக்கும் (שְׁאֵרִית יִשְׂרָאֵל). அவர்கள் கொடுமை செய்யமாட்டார்கள் அத்தோடு வஞ்சகமாகவும் பேசார்கள் என்கிறார். இதிலிருந்து வசதி படைத்தவர்களின் அழிவிற்கு அவர்களின் கொடுமையும், வஞ்சகப் பேச்சும்தான் காரணம் என்பது புலப்படுகிறது. அச்சுறுத்துவார் இன்றி, மந்தைகள் அமைதியில் இளைப்பாறுதல் என்பது ஒரு அழகான உவமானம். கடவுளின் மக்களை மந்தைகளுக்கு ஒப்பிடுதல், மிகவும் இலகுவான ஒரு விவிலிய அடையாளம். எபிரேய விவிலியத்தில், 'அவர்கள்; அச்சமின்றி மேய்சலில் ஈடுபடுவார்கள் அத்தோடு இளைப்பாறுவார்கள்' (כִּי־הֵמָּה יִרְעוּ וְרָבְצוּ וְאֵין מַחֲרִיד׃) என்றே உள்ளது. மந்தை என்ற சொல் தெளிவிற்காக தமிழ், மற்றும் ஏனைய மொழிபெயர்பு விவிலியங்களில் பாவிக்கப்பட்டுள்ளது.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 146

1அல்லேலூயா! என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு;
2நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன்.
3ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்; உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம்.
4அவர்களின் ஆவி பிரியும்போது தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்; அந்நாளில் அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம்.
5யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.
6அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே!
7ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்.
8ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
9ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.
10சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா!


திருப்பாடல்கள் 146-150 வரையானவை 'முடிவில்லா அல்லேலூயா பாடல்கள்' என திருப்பாடல் புத்தகத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பாடல்களில் தனிப்பட்ட தேவையோ, அல்லது வேண்டுதல்களோ அல்லது வரலாற்று பின்புலங்களோ இருப்பதுபோல தெரியவில்லை. இவை கடவுளை புகழ்வதை மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டுள்ளன. ஆனால் தனி மனித புகழ்சியாக தொடங்கும் இந்த பாடல்கள், குழுப் புகழ்ச்சியாக மாறி, பின்னர் பூலோகம் மற்றும் பரலோகம் கடவுளை புகழ்வது போல நிறைவுறுகின்றன. அத்தோடு, அனைத்தும் இறுதி மூச்சுவரை கடவுளை புகழவேண்டும் என்ற ஆசிரியரின் ஆழமான வார்த்தைகளை இந்த பாடல்கள் நினைவூட்டுகின்றன (காண்க 150,6).

திருப்பாடல் 146, ஒரு தனி மனித அல்லேலூயா புகழ்சிப்பாடல் போல் தொடங்கி பின்னர் குழுப்பாடலாக மாறி, இறுதியில் மீண்டும் தனி மனித புகழ்சியாகவே மாறுகிறது. பல திருப்பாடல்களைப் போல இந்த திருப்பாடலும் ஆழகான திருப்பிக் கூறும் எபிரேய கவிநடையைக் கொண்டுள்ளது. கடவுள் என்றுமே புகழப்பட வேண்டியவர் என்பதே இந்த பாடலினதும் மையக் கருத்தாகும்.

வ.1: ஆசிரியர் தன் நெஞ்சத்திற்கு கட்டளை கொடுப்பது போல பாடுகிறார். அல்லேலூயா என்ற சொல் (הַלְלוּ־יָהּ ஹல்லூ-யாஹ்) கடவுளைப் புகழுங்கள் என்ற எபிரேய சொல்லின் தமிழ் வடிவம். இது பன்மை வடிவமாக இருந்தாலும், தனி மனிதருக்கும் இந்த சொல் பாவிக்கப்படுகிறது. நெஞ்சே என்கின்ற சொல் (נֶפֶשׁ நெபெஷ்), ஒருவரின் சுயத்தை அல்லது ஆன்மாவைக் குறிக்கும்.

வ.2: எபிரேய திருப்பிக்கூறல் அழகாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அ1. நான் உயிரோடு உள்ளவரை - ஆ1. ஆண்டவரை போற்றிடுவேன்.
அ2. என் வாழ்நாள் எல்லாம் - ஆ2. கடவுளை புகழ்ந்து பாடுவேன்.
இந்த வரிகள் இப்படியான புகழ்சிப்பாடல்களின் மையக் கருத்ததை வெளிப்படையாகவே காட்டுகின்றன. மனித பிறப்பின் காரணமும், இலக்கும் கடவுளை புகழ்தலே என்ற முதல் ஏற்பாட்டின் மிக முக்கியமான இறையியல் ஒன்றை நமக்கு நினைவூட்டுகின்றன.

வ.3: ஆட்சியாள்களை மிகவும் நக்கலாக கிண்டலடிக்கிறார் ஆசிரியர். அவர்களை நம்பவேண்டாம் என்றும், அவர்கள் சாதாரன மானிடர்களே என்பதையும் மற்றவர்களுக்கு தெளிவூட்டுகிறார். ஆட்சியாளர்களை (נְדִיבִ֑ים בְּבֶן அரச மக்களில்), தெய்வீக பிறப்புக்களாக இஸ்ராயேலின் அயலவர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கை படிப்படியாக இஸ்ராயேல் வழிபாட்டிலும் வளர தொடங்கிய ஆபத்தை ஆசிரியர் சாடுவதனைப் போல இந்த வரி உள்ளது. இப்படியான தலைவர்கள் ஒரு விசுவாசியை காப்பாற்ற முடியாதவர்கள், ஏனெனில் அவர்களும் சாதாரண மனிதர்களே என்பது இவர் வாதம்.

வ.4: இந்த வரி, ஏன் மனித தலைவர்கள் நம்ப முடியாதவர்கள் என்பதை விளக்குகிறது. மனிதர்கள் பிரியக்கூடிய ஆவியால் உருவானவர்கள், அவர்களின் ஆவி (רוּחַ றுவாஹ்) பிரியும்போது அவர்கள் மண்ணுக்கு திரும்புவார்கள் என்கிறார். இது அவர்கள் மண்ணினால் உருவானவர்கள் என்ற தொடக்க நூல் நம்பிக்கையை நினைவூட்டுகிறது. மேலும், அவர்களின் இறப்போடு அவர் (ஆட்சியாள்களின்) எண்ணங்களும் மறையும் என்று, மிக ஆழமான மெய்யறிவையும் வாசகர்களுக்கு முன்வைக்கிறார்.

வ.5: மேற்குறிப்பிட்ட ஆட்சியாளர்களைப் போலல்லாது, யாக்கோபின் கடவுள் உயர்ந்தவர் என்ற சிந்தனையை முன்வைக்கிறார். 'யாக்கோபின் இறைவன்' (אֵל יַעֲקֹב) என்பது, முதல் ஏற்பாட்டில் கடவுளுக்கு கொடுக்கப்பட்ட அழகான பெயர்களில்; ஒன்று. இது யாக்கோபுக்கும்- கடவுளுக்கும்- இஸ்ராயேலருக்கும் இடையிலான நம்பிக்கையின் உறவைக் குறிக்கிறது. பேறு பெற்றோர் என்போர், இஸ்ராயேல் மக்களுக்கு மிக முக்கியமானவர்கள். நம்முடைய தூயவர்களை இது நினைவூட்டுகிறது. இந்த பேறுபெற்றவர்களுக்கு ஒரு வரைவிலக்கணமாக அவர்கள் கடவுளாகிய ஆண்டவரை நம்பியிருப்போர் என்கிறார்.

நம்பிக்கை, பேறுபெற்றோரின் உன்னதமான பண்பு என்பது புதிய ஏற்பாட்டின் மிக முக்கியமான படிப்பினை. இந்த படிப்பினை முதல் ஏற்பாட்டிலும் காணப்படுகிறதை இந்த வரியில் காணலாம் (✼ஒப்பிடுக: லூக் 7,50), அல்லது இந்த படிப்பினையின் தொடர்சியாகவே புதிய ஏற்பாடு இருக்கிறது எனவும் கருதலாம்.

(✼இயேசு அப்பெண்ணை நோக்கி, 'உமது நம்பிக்கை உம்மை மீட்டது அமைதியுடன் செல்க' என்றார்.)

வ.6: இந்த கடவுள் யார் என்று விளக்க முயல்கிறார் ஆசிரியர். இந்த கடவுள் புராணக் கதைகளிலுள்ள பெயர் தெரியாத கடவுள் அல்ல, மாறாக இவர் விண் (שָׁמַיִם ஷமாயிம்), மண் (אָרֶץ அரெட்ஸ்), கடல் (יָּם யாம்) மற்றும் அவற்றில் உள்ள யாவற்றையும் படைத்தவர். இந்த மூன்று பொளதீக சக்திகளும் அக்கால மக்களுக்கு பல ஆச்சரியங்களையும், கேள்விகளையும் கொடுத்தன. இவற்றை படைத்தவர்களாக பலரை பாரசீக, பபிலோனிய, கிரேக்க கதைகள் முன்மொழிந்தன. இஸ்ராயேல் ஆசிரியர், இவற்றை உருவாக்கியவர், பெயர் தெரியாக் கடவுள் அல்ல மாறாக அவர் யாக்கோபின் கடவுள், அத்தோடு இந்த கடவுள்தான் எனறென்றும் நம்பிக்கையை காப்பாற்றுகிறவர் என்கிறார்.

வ.7: ஆண்டவரின் முப்பரிமாண மீட்புச் செயல்கள் பாராட்டப்படுகின்றன.

அ. ஒடுக்கப்பட்டோருக்கு நீதி (עֹשֶׂ֤ה מִשְׁפָּ֨ט ׀ לָעֲשׁוּקִ֗ים):

ஒடுக்கப்பட்டோருக்கு நீதி செய்தல் இக்காலத்தில் மட்டுமல்ல, அக்காலத்திலும் மிக முக்கியமான சமூக பணியாக பார்கப்பட்டது. எளியவர்கள் பலவாறு ஒடுக்கப்பட்டார்கள். நீதியில்லாத கட்டமைப்பு இவர்களுக்கு ஆபத்தானதாகவே அமைந்தது. இதனால் இவர்கள் தலைவர்களின் இரக்கத்தையே அதிகமாக நம்பினார்கள், இருப்பினும் பல அரசியல் தலைவர்கள் இந்த கடமைகளை தவறியவர்களே. இவர்களைப் போல் இல்லாது இஸ்ராயேலின் கடவுள் ஒடுக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவார் என்கிறார் ஆசிரியர்.

ஆ. பசித்தோருக்கு உணவு (נֹתֵ֣ן לֶ֭חֶם לָרְעֵבִ֑ים): உணவு மனிதரின் அடிப்படைத்தேவைகளில் மிக முக்கியமானது. உணவினால்தான் பல புரட்சிகளும், போர்களும் வரலாற்றில் உருவாகின்றன. பசியால் வாடுதல், வறுமை என்கிற சாத்தானின் கோர முகம். இந்த வறுமையிலிருந்து தலைவர்கள் அல்ல, மாறாக கடவுள்தான் தம் மக்களை காக்கிறவர் என்கிறார் ஆசிரியர்.

இ. சிறைப்பட்டோருக்கு விடுதலை (מַתִּיר אֲסוּרִים׃): அதிகமான குற்றவாளிகள் சிறையில் இல்லை வெளியில்தான் இருக்கிறார்கள், பல நல்லவர்கள் சிறையில் வாடுகிறார்கள் என்பது மனித உரிமை வாதிகளின் வாதம். விவிலிய கால உலகில் பல காரணங்களுக்காக அப்பாவிகள் சிறையில் வாடினார்கள். இவர்களின் விடுதலை மனித தலைவர்கள் சுய விருப்பத்திலேயே தங்கியிருந்தது.

இப்படியில்லாமல், கடவுள் சிறைப்பட்டோரை உண்மையாக விடுவிப்பவர் என்கிறார் ஆசிரியர். இந்த மூன்று சமூகப் பணிகள் புதிய ஏற்பாட்டில் இயேசுவிற்கு பல விதத்தில் ஒப்பிடப்படுகிறது, இயேசுவும் தன்னுடைய பணிகள் இவைதான் என, பல இடங்களில் காட்டியுள்ளார். ஆக இந்த பணிகள் இறைவனின் பணிகள் என்பது புலனாகிறது.

வ.8-9: இந்த வரிகளில், இன்னும் மேலதிகமான தனிமனித நல்வாழ்வின் நலன்கiளை ஆண்டவர் செய்வதாக ஆசிரியர் பாடுகிறார்.

அ. பார்வையற்றவரின் கண்களை திறத்தல் - பாhவையற்றவர் வாழ்ந்தும் இறந்தவராக கருதப்பட்டவர். அத்தோடு பார்வையற்ற தன்மை கடவுளின் தண்டனையாகவும் கருதப்பட்டது. பார்வைபெறுவது என்பது ஒருவர் மீண்டும் உயிர் பெறுதலுக்கு சமனாக பார்க்கப்பட்டது.

ஆ. தாழ்த்தப்பட்டோருக்கு உயர்ச்சி - பலவிதமான தாழ்ச்சிகளை விவிலிய கால உலகம் காட்டுகிறது. முக்கியமாக பெண்கள், கைம்பெண்கள், ஏழைகள், நோயாளிகள், புறவினத்தவர், பெண்கள், சிறுவர்கள் மற்றும் பலர் இந்த வகைக்குள் அடங்குவர். இவர்கள் சந்தித்த தாழ்ச்சி அவர்களை மிகவும் பலவீனப்படுத்தியது. அத்தோடு இவர்களை இரண்டாம்தர குடிமக்களாக்கியது. இவர்களும் மதிக்கப்படாத மனிதர்களாவே பார்க்கப்பட்டார்கள்.

இ. நீதிமான்களுக்கு அன்பு - நீதிமான்கள் கடவுளுடைய சட்டங்களை கடைப்பிடிப்பவர்கள் என்று முதல் ஏற்பாடு அழகாக காட்டுகிறது (✼காண்க தி.பா 1,2). நீதிமான்களை கடவுள் அன்பு செய்கிறார் என்பது முதல் ஏற்பாடு காட்டுகின்ற ஓரு முக்கியமான படிப்பினை. இதன் வாயிலாக ஒருவர் கடவுளின் அன்பை பெற நீதிமானாக வாழ வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்படுகிறது.

(✼2ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்;).

ஈ. அயல் நாட்டினர்க்கு பாதுகாப்பு - அயல் நாட்டினரை இஸ்ராயேல் மக்கள் உட்பட பலர் தரக்குறைவானவராகவே கருதினர். இஸ்ராயேல் மக்களின் சகோதரத்துவம் தங்கள் மக்களை மட்டுமே உள்வாங்கியது. ஆனால் இந்த திருப்பாடலின் வரி இஸ்ராயேலின் உண்மை ஆன்மீகத்தை காட்டுகிறது. அதாவது அயல் நாட்டவரும் இஸ்ராயேல் கடவுளின் பிள்ளைகள் என்பது இங்கே புலப்படுகிறது.

உ. அனாதைப் பிள்ளைகளையும், கைம் பெண்களையும் ஆதரிக்கிறார் - இந்த இரண்டு வகையான குழுக்கள் பல சக்திகளால் சுரண்டப்பட்டவர்கள். இஸ்ராயேல் சமுகத்தின் அடி தட்டு மக்கள் என்று கூட இவர்களைச் சொல்லலாம். இயற்கை அழிவுகள், மற்றும் மனித செயற்பாட்டு அழிவுகளால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் இவர்களே. இவர்களை காத்தல், அரசன் மற்றும் அரசியல் தலைவர்களின் முக்கியமான கடமையாக கருதப்பட்டது. ஆனால் அதிகமான சந்தர்பங்களில் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களாகவே தொடர்ந்து இருந்தனர். ஆனால் கடவுளின் பார்வையில் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களில்லை, அவர்கள் அவர் பாதுகாப்பிற்கு உரியவர்கள் என்பது ஆசிரியரின் வாதம்.

ஊ. பொல்லாரை கவிழ்கிறார் - மேற்குறிப்பிட்ட வாதங்கள் கடவுளின் ஆக்க செயற்பாட்டை காட்டுகின்ற அதேவேளை, இது கடவுளின் தண்டனையைக் காட்டுகிறது. கடவுள் இரக்கமுடையவர் இருப்பினும் கடவுளின் இன்னொரு முகம் நீதி மற்றும் நீதித்தீர்ப்பு. கடவுளின் இரக்கத்தால் பொல்லாருக்கு வாய்ப்பு கிடையாது, மாறாக அவர்கள் தங்கள் பொல்லாப்பிலிருந்து அழிவது திண்ணமே என்கிறார் ஆசிரியர்.

வ.10: இந்த இறுதியான வசனம், சீயோனுக்கு புகழ் பாடுவது போல் உள்ளது. கடவுளின் ஆட்சி காலத்தில் மட்டுபடுத்தப்பட்ட அரசியல் ஆட்சியல்ல அத்N;தாடு சீயோன் என்பது ஒரு சாதாரண அரசியல் தலைவரின் ஆட்சிப் பீடம் அல்ல, மாறாக அது காலத்தை கடந்த கடவுளின் வீடு உள்ள இடம் என்பதை காட்டுகிறார் ஆசிரியர்.

அல்லேலூயா என்ற சொல்லுடன் தொடங்கிய இந்த அழகான திருப்பாடல் அதே சொல்லுடன் முடிவடைவது இந்த வகை திருப்பாடல்களின் தனித்துவம்.



இரண்டாம் வாசகம்
1கொரிந்தியர் 1,26-31

26எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைபேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்? 27ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். 28உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்து விட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். 29எவரும் கடவுள் முன் பெருமைபாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார். 30அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார். 31எனவே மறைநூலில்எழுதியுள்ளவாறு, 'பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.

கடந்த வாரம் திருச்சபையிலுள்ள பிளவுகளுக்கு எதிராக பவுலுடைய படிப்பினையிலிருந்து ஒரு பகுதியை வாசித்தோம். இந்த வாரம் இந்த பிளவுகளுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் கடவுளின் ஞானமான இயேசுவையே தங்கள் மேல்வரிச் சட்டமாக கொள்ளவேண்டும் என்ற அழகான படிப்பினையிலிருந்து இந்த பகுதி எடுக்கப்படுகிறது. இந்த பகுதியில் (வவ 18-31), முதலில் பவுல் கிறிஸ்துவின் சிலுவையின் தனித்துவத்தை காட்டுகிறார். இந்த சிலுவை யூதர்களின் பார்வையில் தீட்டுப்பட்டவர்களுக்கான தண்டனை, ஆனால் இதுதான் கிறிஸ்தவர்களுக்கு வல்லமை என்னும் பவுலுடைய இந்த சிந்தனை மிகவும் ஆழமானது. அத்தோடு இந்த பகுதியில் பவுல் உலக ஞானத்தை கடுமையாக சாடுகிறார். இந்த உலக ஞானம் (σοφία சோபியா), கிரேக்கர்கள் மத்தியில் பவுலுடைய காலத்தில் மிக முக்கியமானதாக விரும்பப்பட்டது. இந்த ஞானத்தின் மேலுள்ள காதல்கூட, கொரிந்து திருச்சபையில் பிளவிற்கு காரணமாகியது. இதனால்தான் பவுல் இந்த ஞானத்தை இயேசுவின் ஞானத்திற்கு முன்னால் அழியக்கூடியது என்கிறார் பவுல். அதேவேளை பவுல் அறிவித்த நற்செய்தியை சிலர் மடமை (μωρία மோரியா) என தாக்கியிருக்கலாம், இதனை பவுல் எசாயா ✼29,14ல் வரும் இறைவார்த்தையை பாவித்து கண்டிக்கிறார். இறுதியாக பவுல் உண்மையான ஞானம் கிறிஸ்துவின் சிலுவையே என்று இவர்களுடைய வாதங்களுக்கு ஆணியடிக்கிறார். வ.25: 'ஏனெனில் மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது'. இந்த வரிதான் இந்த முழு பகுதியினதும் மையக் கருத்தாக இருக்கிறது.

(✼14ஆதலால், இதோ நான் இந்த மக்களுக்காக மீண்டும் வியத்தகு செயல் புரிவேன். அது விந்தைக்கு மேல் விந்தையாக இருக்கும். அவர்களுடைய ஞானிகளின் ஞானம் அழிந்துபோம்; அவர்களுடைய அறிஞர்களின் அறிவு மறைந்துபோம்.)

வ.26: பவுல் ஒரு முக்கியமான கேள்வியை தன் கொரிந்திய கிறிஸ்தவர்களுக்கு முன்வைக்கிறார். தங்களுடைய முன்னைய நிலையை நினைத்துப்பார்க்கச் சொல்கிறார். அதாவது ஆரம்ப கால கிறிஸ்தவர்கள், முக்கியமாக யூதரல்லாத கிறிஸ்தவர்கள் சாதாரண மக்கள் கூட்டத்திலிருந்து வந்தவர்கள். அவர்கள் உயர் குடி என தங்களை கருதியவர்கள் அல்லது பணக்கார வர்க்கத்திலிருந்து வரவில்லை, சாதாரண மக்களையே கடவுள் அழைத்திருக்கிறார். இந்த சாதாரணம்தான் கடவுள் முன்னிலையில் உயர்ந்ததாக இருந்திருக்கிறது. இப்படியிருக்க இவர்கள் மனிதரின் உயர் தன்மையை முன்னிலைப்படுத்துவது எத்துணை நியாயம் என்பது பவுலுடைய நியாயமான கேள்வி.

வ.27: ஞானத்தையும், வலிமையையும் முடிவுசெய்ய வேண்டியவர் கடவுள் ஒருவரே. அவர் உலக ஞானத்தை வெட்கப்படுத்த, உலக மடமையை தன் ஞானமாக்கினார். வலியோரை வெட்கப்படுத்த உலகம் பலவீனம் என கருதுவதை தெரிவுசெய்தார். இதுதான் கடவுளின் அழகு அல்லது இதனை மனிதரின் அறியாமை என்றும் சொல்லலாம். பணக்காரர்கள் சிலர் ஒன்றுகூடி தங்கள் வசதிகளை காரணம் காட்டி தம்மை உயர் குடிமக்களாகவும் மற்றவர்களை தாழ்ந்தவர்களாக கருதுவதும், பின்னர் அதனை ஞானம் என்பதும் கடவுள் பார்வையில் நகைப்புக்குரியது. அதேவேளை சாதாரண மக்கள் தங்கள் உண்மையான மாண்பை மறந்து, உலக பிரிவினையையும், ஞானத்தையும் தேடி அலைந்து மீண்டும் அடிமைகளாக வாழ முயல்வதும், கடவுள் பார்வையில் மிகவும் வேதனைக்குரியது. இதனைத்தான் பவுல் காட்ட முயல்கிறார்.

வ.28: கடவுளின் தெரிவு (ἐκλέγομαι) என்பது பவுலின் இறையியலில் இன்னொரு முக்கியமான விடயம். கடவுளின் தெரிவிற்கு, யாரும் யாப்பு செய்யவோ அல்லது கருத்துக்கள் முன்வைக்கவோ முடியாது. உலகம் சிலவற்றை பொருட்டாக கருதுகிறது, அது பல வேளைகளில் பிழையாகவே இருக்கிறது. உலகத்தின் தெரிவு, சந்தேகத்தையும், அநியாயத்தையும், சமத்துவமின்மையையும், பிழையான வர்க்க பிரிவுகளையும் கொண்டிருப்பதால் அதன் விளைவுகளும் பிழையாகவே இருக்கும். இந்த உலகு தாழ்ந்தது என கருதுவது, அதிகமான வேளைகளில் உன்னதமானதாக இருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம் இயேசு. ஆனால் கடவுளின் தெரிவு இந்த உலகத்தால் வெறுக்கப்பட்ட அத்தோடு கடவுளின் பார்வையில் பெரியதாக இருக்கிறது.

வ.29: கடவுள் முன் யார் பெருமை பாராட்ட முடியும்? இது பவுலுடைய நேர்த்தியான சிந்தனை. புண்ணுக்கு வலியா மருத்துக்கு வலியா என்ற பழம் தமிழ் பழிமொழி நினைவிற்கு வருகிறது. சிலர் கடவுள் முன் தங்களது, இனம், மதம், கோத்திரம், பால், இடம், மொழி, அறிவு மற்றும் பொருள், இவற்றை வைத்து தங்களை தாங்களே பெருமைப் படுத்தினர். இது முற்றிலும் மடமை, ஏனெனில் கடவுள் முன் அனைவரும் சமமே அத்தோடு அனைவரும் தூசியே.

வ.30: எப்படி வசதிபடைத்தோர் கடவுள் முன் பெருமை பாராட்ட முடியாதோ அதேபோல் சாதாரண மக்களும் கடவுள் முன் பெருமை பாராட்ட முடியாது. எவரும் பெருமை பாராட்ட வேண்டும் என்றால் அது கிறிஸ்து ஒருவர் பொருட்டே ஆகும். கடவுளின் ஞானம்தான் இப்படியான எளியவர்களுக்கு கிறிஸ்து என்னும் அரும்கொடையை கொடுத்துள்ளது, அத்தோடு இந்த கிறிஸ்துதான் இவர்களை ஏற்புடையவராக்கியுள்ளார், தூயவராக்கியுள்ள்hர் மற்றும் மீட்டுள்ளார். ஏற்புடைமை என்னும் சிந்தனை பவுலுடைய இறையியலில் மிக முக்கியமானது (δικαιοσύνη). முதல் ஏற்பாட்டில் பலவிதங்களில் இஸ்ராயேல் மக்கள் கடவுளுக்கு ஏற்புடையவராகினர். இங்கே இந்த ஏற்புடைமை இலவசமாக இயேசுவில், கடவுளின் தெரிவால் உருவாகிறது என்பது தூய பவுலுடைய அசைக்க முடியாத இறையியல்.

வ.31: எவராவது பெருமை பாராட்ட வேண்டும் என்றால் அவர் இப்படி பெருமை பாராட்ட வேண்டும் என்று ஒரு மறைநூலை வாசகத்தை கோடிடுகிறார். இதனை அவர் எரேமியா 9,24இல் இருந்து எடுத்து சில மாற்றங்களை செய்திருக்க வேண்டும் (காண்க ✼எரேமியா 9,24).

(✼24பெருமை பாராட்ட விரும்புபவர், 'நானே ஆண்டவர்' என்பதை அறிந்து புரிந்து கொள்வதிலும், பேரன்போடும் நீதியோடும் நேர்மையோடும் உலகில் நான் செயலாற்றுகிறேன் என்பதிலும் பெருமை பாராட்டுவாராக! ஏனெனில் இவற்றில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்கிறார் ஆண்டவர்.)


நற்செய்தி வாசகம்
மத்தேயு 5,1-12

1இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். 2அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: பேறுபெற்றோர் 3'ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. 4துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். 5கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். 6நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர். 7இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். 8தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். 9அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். 10நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. 11என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! 12மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.

மத்தேயு நற்செய்தியின் தனித்துவத்திற்கு இந்த மலைப் பொழிவு ஒரு சான்று. கிறிஸ்தவம் அல்லது கத்தோலிக்கத்தை கடந்து அனைத்து மக்களாலும், இறைதேடல் செய்பவர்களாலும் அதிகமாக இந்த பகுதி வாசித்து வாழப்படுகிறது. மத்தேயு பல இடங்களில் இயேசுவை புதிய மோசேயாகவும், உண்மை மீட்பராகவும் காட்ட விழைவதை நாம் அவதானிக்கலாம். மோசே பல படிப்பினைகளை மலையுச்சியிலிருந்தே கொடுத்தார். அதேபோல் கடவுளின் இடமாக மலை கருதப்பட்டது. இந்த மலையுச்சியில் இயேசு ஏறி போதிப்பது அவரை கடவுளாக காட்ட முயலும் நல்ல அடையாளம் என, பல மத்தேயு ஆய்வாளர்கள் காண்கின்றனர்.

இந்த பகுதிக்கு சற்று முன்தான் இயேசு தன் முதல் சீடர்களை அழைத்திருந்தார், பின்னர் திரளான மக்களுக்கு சில பணிகளும் புரிந்திருந்தார். பின்னர் தன் சீடர்களை அழைத்து மலையுச்சியில் இந்த மலைபொழிவு நடத்தப்படுகிறது. மத்தேயுவின் மலைப்பொழிவு மைய செய்தியில் லூக்கா 6,20-23ஐ ஒத்திருக்கிறது. ஆனாலும் மத்தேயுவின் பகுதி நீளமானதாகவும், சற்று மொழிநடையில் கவர்ச்சியாகவும் இருக்கிறது. மத்தேயுவும் லூக்காவும் பொதுவான ஒரு மூலத்தை பாவித்திருக்கிறார்கள் என்ற ஒரு கருதுகோளை இது நியாயப்படுத்துகிறது. இந்த பகுதியில், சீடத்துவம், மற்றும் விண்ணரசு சார்ந்த வாழ்வு போன்ற படிப்பினைகளை சுற்றி வருவதைக் காணலாம். சீடர்களை அழைத்த இயேசு, சீடத்துவத்தின் நியாயமான எதிர்பார்ப்புக்களையும், அது தரும் வரப்பிரசாதங்களையும் எடுத்துரைக்கிறார். மோசே மலையுச்சியிலிருந்து பத்துக்கட்டளைகளை மக்களுக்கு கொடுத்தார், அந்த நிகழ்வை இந்த மலைப்பொழிவு நினைவூட்டும்.

வ.1: இந்த வரி, இந்த படிப்பினைகளில் இயேசு சீடர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதைக் காட்டுகிறது. இயேசு ஒரு அரசர் போல் அவர் அரியணையான மலையில் அமர்கிறார். அவர் சீடர்கள் அமைச்சர்கள் போல் அவர் அருகில் வந்து அமர்கின்றனர். பின்னர் இயேசு பேசுகிறார். விவிலியத்தில் இருத்தல் (καθίζω காதிட்சோ- அமர், இரு, உட்கார்), என்பது அதிகாரத்தை குறிக்கும் ஒரு உடல் நிலை. சீடர்கள் இயேசுவிடம் வருவது அவர்களின் பணிவையும் விசுவாசத்தையும் காட்டுகிறது.

வ.2: இந்த வரியை 'அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை' என்று தமிழ் விவிலியம் மொழிபெயர்க்கிறது. கிரேக்க விவிலியத்தில், 'அவர் தன்வாயை திறந்துகொண்டு கற்பித்து சொல்லிக்கொண்டிருந்தது' என்று உள்ளது. இவை இந்த வரியின் காலம்சாராத தன்மையைக் காட்டுகிறது. அத்தோடு பின்வருபவை விசேடமாக சீடர்களுக்குரியது என்பதையும் காட்டுகிறது.

பேறுபெற்றோர் என்னும் தமிழ் மொழிபெயர்ப்பின் கிரேக்க மூலம் μακάριος மக்கரியொஸ் ஆகும். இந்த மக்கரியொசின் அர்த்தம், பேறுபெற்றோர் என்பதையும் தாண்டியது. இதன் அர்த்தங்களாக நற்பேறுபெற்றவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், மகிழ்சியாக இருப்பவர்கள், இன்னும் பல தரப்படுகின்றன. எபிரேயம் இந்த சொல்லை אַשְׁרֵי அஷ்ரே என்றழைக்கிறது. இதன் அர்த்தமும் மேற்சொன்ன அர்த்தத்ங்களையே குறிக்கிறது. இப்படியாக பேறுபெற்றோர் என்ற எட்டு வரிகளை இந்த மலைபொழிவில் சந்திக்கிறோம். இந்த வரிகளை வாசிக்கும் போது, ஆரம்ப கால திருச்சபை முக்கியமாக மத்தேயுவின் வாசகர்கள் சந்தித்த சவால்களை நினைவில் கொண்டாரல், இன்னும் இதன் அர்த்தம் விளங்க உதவியாக அமையும்.

வ.3: ஏழையரின் உள்ளத்தோர் - விண்ணரசுக்குரியவர்கள்: இந்த வரி ஏழைகளை அல்ல மாறாக ஏழைய உள்ளத்தோரையே எழுவாயாகக் கொண்டு;ள்ளது (οἱ πτωχοὶ τῷ πνεύματι). இந்த ஏழைய உள்ளத்தோரை, ஆன்மாவில் எளியவர்கள் என்றும் மொழி பெயர்க்கலாம். இவர்கள் கடவுளை மட்டுமே தங்களது தஞ்சமாக கொண்டார்கள். இவர்களை திருப்பாடல் ஆசிரியரும் பேறுபெற்றவர்களாக காட்டுவார் (ஒப்பிடுக தி.பா 14,6: 22,24: 25,16: 34,6: 40,17: 69,29). ஏழ்மை அல்லது எளிமை என்பது வேறு, வறுமை என்பது வேறு. விவிலியம் யாரையும் வலிந்து வறுமையை தேடச்சொல்லவில்லை, மாறாக உதவிகள் இல்லாமல் ஏழைகளாக வாடுகிறவர்கள் கடவுளால் கைவிட்பட்டவர்கள் இல்லை என்றே சொல்கிறது.

வ.4: துயருவோர் - ஆறுதல் பெறுவர்:

துன்பம் கடவுளின் தண்டனையாக கருதப்பட்டது, அதாவது பாவிகளுக்கு கடவுளின் தண்டனை கிடைக்கிறது. ஆக துயருவோர் பாவிகள் என்றாகிறது. இதனைத்தான் இயேசு ஆண்டவர் சரியாக விளக்குகிறார். பலர் தங்கள் செய்யாதவற்றிற்காக துன்புறுகிறார்கள். சிலர் தங்களுடைய சுயநலத்திற்காக பலரை துன்பப்படுத்துகிறார்கள். துன்புறுகிறவர்களுக்கு கடவுள்தான் ஆறுதல் என்பது முதல் ஏற்பாட்டின் செய்தி, இதனைத்தான் இயேசு இங்கே மீள நினைவுபடுத்துகிறார். துயருவோர் என்பவரை கிரேக்கம் புலம்புவோர் என்றே காட்டுகிறது (οἱ πενθοῦντες).

வ.5: கனிவுடையோர் - நாட்டை உரிமையாக்குவோர்:

இயேசுவின் காலத்தில் பாலஸ்தீன நாடு வெளிநாட்டுக்காரர்களான உரோமையருக்கும் நரிகளான ஏரோதுக்கும் உரிமையாகிக் கொண்டிருந்தது. இவர்களிடமிருந்து நாட்டைக் காக்க இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர், வன்முறையில் ஈடுபட்டனர். அது தோல்வியிலேயே முடிந்தது. இதற்கு எதிராக கனிவு (οἱ πραεῖς) என்னும் ஆயுதம் நாட்டை தரும் என்று வித்தியாசமாக கடவுள் பாணியில் உரைக்கிறார் அன்பு ஆண்டவர். கனிவை, கிரேக்க விவிலியம் தாழ்ச்சியுடையவர்கள் அல்லது இனிமையானவர்கள் என்று காட்டுகிறார்.

வ.6: நீதி நிலைநாட்ட வேட்கைகொண்டோர் - நிறைவு பெறுவர்:

விவிலியம் நிறைவிற்கும், இன்பத்திற்கும் வித்தியாசம் காட்டுகிறது. நீதியில்லாமல் அநீதிக்கு தூபம் காட்டுவோர் துன்பத்தை தவிர்ப்பர். இதனைத்தான் பலர் செய்து உரோமைய இன்பத்தை இயேசுவின் காலத்தில் பெற்றனர். அவர்கள் நிறைவு பெறவில்லை என்பது இயேசு ஆண்டவரின் செய்தி. நீதி நிலைநாட்டுவது என்பது கடவுளின் பணியில் பங்கெடுப்பதாகவும், இதனால்தான் இவர்கள் பேறுபெற்றவர்கள் என்றாகின்றனர். நீதிக்கான வேட்கையை கிரேக்க விவிலியம், நீதிக்கான பசியாகவும், தாகமாகவும் காட்டுகிறது (οἱ πεινῶντες καὶ διψῶντες τὴν δικαιοσύνην).

வ.7: இரக்கமுடையோர் - இரக்கம் பெறுவர்:

யார் கடவுளின் இரக்கத்தை பெறுபவர் என்பது யூதர்களின் முக்கியமான கேள்விகளில் ஒன்றாக இருந்தது. கடவுள் தேர்ந்து கொண்ட மக்கள் இரக்கம் பெறுவர் என்று சிலர் வாதிட்டனர். ஆனால் இரக்கம் காட்டும் எவரும் கடவுளின் இரக்கத்தை பெறுவர், அவர் யாராக இருந்தாலும், தங்களுடைய இரக்க குணத்தால், கடவுளின் பிள்ளைகளாக மாறுகின்றனர். இரக்கம் (οἱ ἐλεήμονες) என்பது மத்தேயு நற்செய்தியில் விண்ணரசின் குணாதிசியங்கள் முக்கியமான ஒன்று.

வ.8: தூய்மையான உள்ளத்தோர் - கடவுளைக் காண்பர்:

பலி ஒப்புக்கொடுப்பபோர், எருசலேம் தேவாலயத்தை தரிசிப்போர், கட்டளைகளை அப்படியே கடைப்பிடிப்போர், கடவுளைக் காண்பர் என்பது நம்பிக்கையாக இருந்தது. வெளி அடையாளங்கள் முக்கியத்துவம் பெற்ற அந்த நாட்களில், இயேசு அக உளநிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். தூய்மையான உள்ளம் என்பது ஒருவருடைய தூய்மையான வாழ்வைக் குறிக்கும். தூய்மையான இதயங்களை கொண்டோர் என இந்த வரியை கிரேக்க விவிலியம் காட்டுகிறது (οἱ καθαροὶ τῇ καρδίᾳ).

வ.9: அமைதி ஏற்படுத்துவோர் - கடவுளின் மக்கள்:

கடவுளின் மக்கள் என்போர் விருத்தசேதனம் செய்வதாலோ அல்லது பலிகளை ஒப்புக்கொடுப்பதாலே உருவாவது அல்ல, மாறாக அமைதி ஏற்படுத்துவதாலே என்று ஒர் ஆழமான இறையியலை ஆண்டவர் காட்டுகிறார். இயேசுவின் காலத்திலும், ஆரம்ப கால திருச்சபையின் காலத்திலும் அமைதி, மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாக இருந்தது. அமைதியில்லாமல் அனைத்து செல்வங்களையும் கொண்ட உலகு உண்மையில் வறுமையான உலகு அல்லது, சாத்தானின் உலகு. இங்கே அமைதி (εἰρηνοποιός) என்று கிரேக்க விவிலியம் சொல்வது வெறும் அரசியல் அமைதி மட்டுமல்ல. இது ஆண்டவர் தரும் அமைதி.

வ.10: நீதியின் பொருட்டு துன்புறுவோர் - விண்ணரசு அவர்களது:

கனிவுடையோர் உலக நாட்டை பெறுகின்ற வேளை, நீதியின் பொருட்டு துன்புறுவோர் விண்ணகத்தையே உரிமையாக்குகின்றனர். இயேசுவின் போதனையின் மிக முக்கியமான இலக்கு விண்ணரசு. இதனை அடைய நீதி அவசியமாகிறது என்று மத்தேயு சொல்வதிலிருந்து, நீதி எவ்வளவு தெய்வீகமானது என்பது புலப்படுகிறது.

வ.11-12: இந்த வசனம் பல துன்பங்களை வரிசைப்படுத்துகிறது. இயேசுவின் பொருட்டு இகழப்படுதல் (ὀνειδίσωσιν), மற்றும் இல்லாத பொல்லாது சொல்லப்படுதல் (πονηρός), என்பவை ஒருவரை இயேசுவிற்கு சொந்தமாக்கிறது. இவர்களை மகிழ்ந்து பேருவகை கொள்ளக் கேட்கிறார் இயேசு. சாதாரணமாக இந்த துன்பங்கள் ஒருவருக்கு மனவுளைச்சலையே கொடுக்கும். ஆனால் இவை ஒருவருக்கு இயேசுவின் பொருட்டு மகிழ்வையும் (χαίρω), பேருவகையையும் (ἀγαλλιάω) கொடுக்கிறது. விண்ணுலகின் கைமாறு என்பது நிலைவாழ்வை குறிக்கலாம். அத்தோடு இவர்களின் துன்பம் முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்களின் துன்பத்தோடு ஒப்பிடப்படுகிறது. ஆக இயேசுவின் பொருட்டு துன்புறுவோர் இறைவாக்கினர் நிலையை அடைகின்றனர் என்பது மத்தேயுவின் செய்தி.

கிறிஸ்தவம் ஒரு கலாச்சாரம், அது வெறும் மதம் அல்ல.
சீடத்துவம் ஒரு இனிமையான பயணம், முடிவல்ல.
இயேசுவை பின்பற்றுவோர், போர் வீரர் மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும்.
துன்பம் இல்லாமல், தியாகம் இல்லாமல், காட்டிக்கொடுப்பு இல்லாமல்,

இறையரசு இல்லை.
அவர்களே பேறுபெற்றோர்.
ஆண்டவரே உம்மிலே எம் கண்களை பதிய வைக்க உதவி செய்யும்,
எம்; வெறுமையை உம் அருளால் நிரப்பும். ஆமென்