இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு (முதலாம் ஆண்டு அ)

முதல் வாசகம், எசாயா: 7,10-14
பதிலுரைப் பாடல், திருப்பாடல்: 24
இரண்டாம் வாசகம், உரோமையர்: 1,1-7
நற்செய்தி, மத்தேயு: 1,18-24


இம்மானுவேல் இறைவாக்கு: (עִמָּנוּ אֵל Εμμανουηλ Emmanuhel)
இம்மானுவேல்-குழந்தை பிறப்பின் அடையாளம் கடவுளின் பிரசன்னத்தைக் குறிக்கிறது. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு என்று பொருள் (עִמָּנוּ אֵל இம்மானு ஏல்- நம்மோடு கடவுள்). விவிலியத்தில் இந்தச் சொல் மூன்று தடவை வருகிறது (எசாயா 7,14: 8,8: மத்தேயு 1,23). சிரியாவும் இஸ்ராயேலும் யூதாவிற்கு எதிராக போர் செய்ய முயன்ற காலத்திலேயே இந்த இறைவாக்கு உரைக்கப்பட்டது. சிரியாவும் (ஆராம்) இஸ்ராயேலும் அசிரியாவிற்கு எதிராக போர் செய்ய முயன்றன, யூதாவையும் தங்களுடன் சேருமாறு கேட்டன, ஆனால் இதற்கு மறுத்த யூதாவின் அரசன் ஆகாஸ் அசிரியாவிடமே தஞ்சம் அடைந்தான். இதனை எதிர்த்த இறைவாக்கினர் எசாயா அவனை கடவுளிடம் தஞ்சமடையக் கேட்கிறார். இதற்காக கடவுளிடம் ஒரு அடையாளத்ததையும் தருமாறு கேட்கிறார். ஆனால் ஆகாசு மறுத்துவிடுகிறான். இதற்கான பல காரணங்களை ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். ஆகாசு ஏற்கனவே அசிரியரின் சொல்லைக் கேட்டோ அல்லது அவர்களை திருப்பதிப்படுத்தவோ தன்னுடைய மூத்த மகனை நெருப்பில் பலியிட்டுவிட்டான், இதனால்தான் கடவுளிடம் அடையாளம் கேட்க தயங்கினான் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வாதம். இப்பொழுது கடவுள் எசாயா வழியாக ஆகாசுக்கு இரண்டு பக்க வாக்குறுதியைக் கொடுக்கிறார். அது ஒரு பக்கம் ஆசீர், இன்னொரு பக்கம் தண்டனை. ஒரு இளம் பெண் கருத்தரிப்பார், அவர் ஒரு மகனை பெறுவார் அத்தோடு அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடப்படும். இந்த குழந்தை தன் அறிவு வயதை அடையுமுன்பே இஸ்ராயேலும், சிரியாவும் தண்டனைகளைப் பெறும் என்பது எசாயாவின் இறைவாக்கு. இருப்பினும் ஆகாசுடைய நம்பிக்கையின்மையால் அவன் அசிரியாவினாலேயே அடக்கப்படுவான் என்பது இந்த இறைவாக்கின் இன்னொரு பக்கம் (எசாயா 7,17: 8,1-10).

இம்மானுவேல் குழந்தையைப்பற்றிய இறைவாக்கு பலவாறு வாதாடப்படுகிறது. மத்தேயுவிற்கும் கிறிஸ்தவர்களுக்கும் இது இயேசு ஆண்டவர். யூதர்கள் இவரை ஆகாசின் வாரிசான எசேக்கியா மன்னராக பார்க்கின்றனர். இன்னும் சிலர் இவரை எசாயாவின் ஒரு மகன் என்றும் பார்க்கின்றனர். எசாயா சொல்கின்ற இளம் பெண்ணை (עַלְמָה அல்மாஹ்- இளம் யுவதி) கத்தோலிக்கரும் சில கிறிஸ்தவர்களும் கன்னிப் பெண்ணாக பார்க்கின்றனர், ஆக அவர் மரியாவாகிறார். திருமணம் முடிக்கிற இளம்பெண்கள் கன்னியாக இருக்கவேண்டும் என்பது அக்கால வழக்கம். அத்தோடு எசாயா இறைவாக்கில் வருகின்ற இந்த கன்னிப்பெண் எசாயாவிற்கும் ஆகாசுக்கும் ஏற்கனவே அறிமுகமானவர் போல தென்படுகிறது. இந்த இறைவாக்கின் முக்கியமான செய்தியாக கடவுளின் பிரசன்னத்தையும் அவர் உடன்இருப்பையும் குறிப்பிடலாம்.

மத்தேயு இந்த இறைவாக்கை சிறிய மாற்றத்தோடு பாவிக்கிறார். மத்தேயு இங்கே குறிப்பிடும் இறைவார்த்தை செப்துவாஜின்து விவிலியத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இதனால் அல்மாஹ் பார்தெனொசாக மாறுகிறார் (παρθένος பார்தெனொஸ் கன்னிப்பெண்). மத்தேயுவிற்கு இந்த ஆண்மகவு தாவீதின் வழிமரபான இயேசுக் கிறிஸ்து (நமக்கும்) (ஒப்பிடுக மத் 1,1-17). இதனை மையப்படுத்தியே மத்தேயுவின் முன்னையவரிகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. மத்தேயுவின் பரம்பரை அட்டவணை இயேசுவை தாவீதின் வாரிசு என அழகாகக் காட்டுகிறது. யோசேப்பிற்கு வானதூதரின் செய்தி இயேசுவை கடவுளின் மகனாகக் காட்டுகிறது. மத்தேயு இயேசுவை இம்மானுவேல் எனக் குறிப்பிடுவது, இயேசுவை எப்போதும் மக்களோடு இருக்கும் கடவுளாக காட்டும் ஓர் இனிமையான முயற்ச்சி. 1,23ல் மத்தேயு சொல்வதை பின்னர் ஆழமாக 28,20 திருப்பிக் கூறுகிறார் (✻காண்க மத் 28,20).

(✻நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்' என்று கூறினார்.)

(உசாத்துணை: R. E. Brown, The Birth of the Messiah, rev. ed. (New York, 1993); C. Seitz, Isaiah 1-39. Interpretation (Louisville, 1993).)

முதல் வாசகம்
எசாயா: 7,10-14

10ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: 11'உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்' என்றார். 12அதற்கு ஆகாசு, 'நான் கேட்கமாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்' என்றார். 13அதற்கு எசாயா: 'தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? 14ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்.

வ.10: இந்த வரி, ஏற்கனவே ஆகாசு மன்னனுக்கு இறைவாக்கு உரைக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது. ஆகாஸ் (אָחָז) என்ற யூதேயா மன்னன் கி.மு 8ம் நூற்றாண்டில் வாழ்ந்தார். இவருடைய எபிரேய முழுப்பெயராக அகாசியாஹ் அல்லது ஜெஹோஆஹாஸ் என்று வரும் என மொழியியலாளர்கள் காண்கின்றனர். விவிலியத்திற்கு வெளியே அசிரிய பேரரசன் மூன்றாம் திக்லத் பிலயேசர் இவரை குறிப்பிட்டுள்ளார் (ஒப்பிடுக ANET, 282–84). இருபது வயதில் அசரான இவர் பதினாறு வருடங்கள் யூதேயாவை ஆண்டுள்ளார். அரசர்கள் புத்தக ஆசிரியர் ஆகாசை ஒரு மாசுள்ள அரசராகவே காட்டுகிறார். அத்தோடு இவரை ஆசிரியர், இஸ்ராயேல் (வடநாட்டு) அரசர்களோடு ஒப்பிடுகிறார். இவருடைய வாரிசான எசேக்கியா நல்ல அரசராக இவருக்கெதிராக ஒப்பிடப்படுகிறார். இணைச்சட்ட ஆசிரியர்களைப்போலவே குறிப்பேடுகளின் ஆசிரியரும் ஆகாசை தீய அரசராகவே காட்டுகிறார். இவருடைய காலத்தில்தான் சிரியா-எப்பிராயிம் போர் யூதேயாவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டது. ஆகாஸ் அசிரியருடன் கூட்டுச்சேர்ந்து அவர்களின் கடவுள்களையும், தமஸ்கு தெய்வங்களையும் வழிபட்டு கடவுளிடமிருந்து தூரச் சென்றார் என விவிலியம் காட்டுகிறது.

வ.11: இங்கே எசாயாவின் வார்த்தைகள் கடவுளுடைய சொந்த வார்த்தைகளைப்போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அக்கால இறைவாக்கின் ஒரு வடிவம். இதனை முதலாம் ஆளில் (தன்மை) பேசுதல் என எடுக்கலாம். எசாயா ஆகாசை வெறுத்தாலும், கடவுளை, ஆகாசின் கடவுளாகவே காட்டுகிறார் (יְהוָה אֱלֹהֶיךָ கடவுளாகிய உன்ஆண்டவர்). இவ்வாறு ஆகாசை மனந்திருப்ப முயன்றிருக்கலாம். இங்கே ஆகாசுக்கு அடையாளத்திற்கான இடமாக முழு உலகமும் முன்வைக்கப்படுகிறது (விண்ணகமும் மண்ணககும் உள்ளடக்கப்படுகிறது).

வ.12: ஆகாஸ் ஒரு நல்ல யூதனாக தன்னை முன்னிருத்துகிறார். கடவுளை சோதிப்பது ஒரு பாவமாக இஸ்ராயேல் மக்களிடையே பார்க்கப்படுகிறது (காண்க ✻இ.ச 6,16: ✻✻மத் 4,7). மேலோட்டமாக நோக்கில் ஆகாசின் சிந்தனை சரியாகத்தான் தோன்றும். ஆனால் இங்கே ஆகாசுக்கு கடவுளை சோதிக்குமாறு வாய்ப்பு ஒன்று கொடுக்கப்படுகிறது. இருந்தும் அதனை அவர் ஏற்காதற்கான காரணம், அவர் அந்த வாய்ப்பிற்கு தகுதியில்லாதவாராக இருக்கலாம்.

(✻மாசாவில் நீங்கள் சோதித்தது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்.)

(✻✻யேசு அதனிடம், 'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்' எனவும் எழுதியுள்ளதே' என்று சொன்னார்).

வ.13: எசாயாவின் கோபம் வெளிப்படுகிறது. தாவீதின் குடும்பத்தார் என்று முழு யூதேயாவின் ஆட்சியாளர்களும் விழிக்கப்படுவதால், தற்போதைய அரசன் மட்டுமல்ல தற்கால நிலைக்கு ஒவ்வொரு தாவீதின் வாரிசும் பொறுப்பாளி என்கிறார். இவர்கள் மீது இரண்டு நிலைகளில் குற்றம் சாட்டுகிறார். அவர்கள் மனிதரினதும் கடவுளினதும் பொறுமையை சோதிக்கிறார்கள் என்கிறார். ஏற்கனவே தாவீதின் குடும்பத்தார் கடவுளுடன் உடன்படிக்கை செய்திருந்தும் அவர்கள் கடவுளை சோதிப்பது கடவுளின் பார்வையில் தீயதாக பார்க்கப்படுகிறது. அத்தோடு அவர்கள் கடவுளை சலிப்படைய (לָאָה) செய்துவிட்டார்கள் என்கிறார். இது ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு இந்த குற்றச்சாட்டையே பாலைநிலத்தில் இஸ்ராயேல் மக்கள் மோசேயின் காலத்தில் சந்தித்தார்கள்.

வ.14: கடவுள் மனிதரின் விருப்பத்தால் மட்டுபடுத்தப்படுபவர் அல்லர் எனக் காட்டுகிறார் எசாயா. இங்கே அடையாளம் என்பது ஆகாசுக்கு தண்டனையாகவும் மக்களுக்கு நம்பிக்கையாகவும் வருகிறது. வழமையாக உடன்படிக்கையின் போதும்கூட ஆண்டவர்தான் முதலில் முயற்;சி செய்கிறார் இங்கும் அவரே முதலில் முயற்சி செய்கிறார். கடவுள் தரும் அடையாளமாக கருத்தரித்துள்ள இளம் பெண் ஆண் மகவைப் பெறுவார் என்கிறார். இளம்பெண் என்பதற்கு எபிரேய விவிலியம் הָעַלְמָה ஹாஅல்மாஹ் என்ற சொல்லை பயண்படுத்துகிறது. அல்மாஹ் என்றால் திருமணமுடிக்க தகுதியான இளம்பெண்ணைக் குறிக்கும். அரசர்கள் இளம்பெண்களை மணமுடிக்கும்போது அவர்கள் கன்னியாக இருப்பதை அக்காலத்தில் கவனத்தில் கொண்டார்கள். இளம்பெண் என்பதற்கு செப்துவாஜிந்து (கிரேக்க முதல் ஏற்பாடு) παρθένος பார்தெனொஸ் என்ற சொல்லை பயன்படுத்துகிறது. இது இளம் பெண்ணையல்ல கன்னிப் பெண்ணையே குறிக்கிறது. கன்னிப்பெண்ணுக்கு בְּתוּלָה பெதுலாஹ் என்ற சொல் இருக்கின்றபோது ஏன் இளம்பெண்னை (עַלְמָה) கன்னிப் பெண்ணாக கிரேக்கம் (παρθένος)மொழிபெயர்கிறது? கிரேக்க மொழிபெயர்பு (செப்துவாஜின்ட்) மத்தேயுவின் காலத்திற்கு முன் செய்யப்பட்டது என்பதை நினைவுகூற வேண்டும்.

இந்த கன்னிப் பெண்ணின் மகன் இம்மானுவேல் என அழைக்கப்படுகிறார். இம்மானுவேல் என்ற சொல்லே, இங்கு இறைவாக்காக ஆகாசுக்கு கொடுக்கப்படுகிறது. இதன் பொருளாக 'கடவுள் நம்மோடு' என்று வருகிறது (עִמָּנוּ אֵֽל இம்மானு ஏல்- நம்மோடு கடவுள்).



பதிலுரைப் பாடல்
திருப்பாடல்: 24

1மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள்மீது அதை நிலை நாட்டினவரும் அவரே.
3ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?
4கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்; வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர்,
5இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
6அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே.
7வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
8மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர்.
9வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
10மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்.


ஆண்டவரின் திருப்போழை ஆலயம் இல்லாமையாலும் அந்நியரின் படையெடுப்பாலும் பல காலங்களில் எருசலேமைவிட்டு வெளியில் இருந்தது. சில வேளைகளில் அது அந்நியராலும் கைப்பற்றப்பட்டு அவர்களின் இடங்களில் இருந்தது. இப்படியான நிகழ்வு சவுல் மற்றும் தாவீது ஆட்சிக்கு வரும் முன்பும் நடந்தது. பிலிஸ்தியர் ஒரு முறை இந்த பேழையை கைப்பற்றி அவர்களின் முக்கிய நகரான அஸ்தோதில் வைத்தனர். அக்காலத்தில் மற்றவரின் கடவுள்களை அல்லது திருப்பண்டங்களை கைப்பற்றுவது ஆசீர்வாதம் என்ற நம்பிக்கையும் இருந்தது (ஒப்பிடுக 1சாமு 5,1-2). கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஆண்டவரின் உடண்படிக்கை பேழை எருசலேமிற்கு வெளியில் இருந்துததாக விவிலியம் கூறுகிறது. தாவீது தன்னுடைய காலத்தில் அதனை எருசலேமிற்குள் கொண்டுவர முயற்சி செய்தார் (காண்க 2சாமு 6). இந்த முயற்சியின் போது பல பாடல்கள் பாடப்பட்டன அப்படியான பாடல்களில் ஒன்றுதான் இதுவென்று சில பாரம்பரிய திருப்பாடல் ஆசிரியர்கள் கருதுகின்றனர். அத்தோடு அதற்கும் மேலாக இந்த திருப்பாடல் இறையியலில் ஆழமான கருத்துக்களை கொண்டு நேர்தியாக அமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

அ. ஆண்டவரின் திருச்சந்நிதி நுழைவதற்கான தகுதி: வவ. 3-5
ஆ. நம்மத்தியில் வருவதற்கான கடவுளின் தகுதி: வவ. 7-10
இ. நாம் தூய்மையின் வழியாக மட்டுமே கடவுளின் அருகில் செல்லலாம்: வ.4
ஈ. ஆண்டவர் உடைய இறைமை, மகிமை, வல்லமை, மற்றும் மீட்பு: வவ 7-9
வ.1: இந்த பாடல் தாவீதுக்குரிய பாடல் என்று தொடங்குகிறது (לְדָוִד מִ֫זְמוֹר) இருப்பினும் இதனை மட்டுமே கொண்டு, இந்தப் பாடலை தாவீதுதான் எழுதினார் என்று கருதவேண்டிய தேவையில்லை. இந்த திருப்பாடலின் பல வரிகள் திருப்பிக்கூறல் கவி நடையில் அமைந்துள்ளன, அதற்கு இந்த முதலாம் வரியே நல்ல உதாரணம்.

அ1. மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள யாவும் (הָאָרֶץ וּמְלוֹאָהּ),

ஆ1. ஆண்டவருடையவை (לַיהוָה)

அ2. நிலவுலகும் அதில் வாழ்வன (תֵּבֵל וְיֹשְׁבֵי),

ஆ2. அவருக்கே சொந்தம் (בָהּ)

வ.2: உலகம் கடலின் நடுவே அடித்தளமிட்டு அமைக்கப்பட்டுள்ளது என்பது ஆரம்ப கால எபிரேய புவியியல் நம்பிக்கை. ஆறுகள் உலகின் நடுவே ஓடி பின்னர் கடலில் கலக்கின்றன என்றும் அவர்கள் நம்பினார்கள். ஆனால் இவற்றை நிறுவியவரும் வடிவமைத்தவரும் கடவுளே என்பதே ஆசிரியரின் மூலச்செய்தி.

வ.3: ஆண்டவருடைய மலை என்பது இங்கே எருசலேமைக் குறிக்கலாம். ஆண்டவருடைய மலையில் ஏறுவதும் அவருடைய திருத்தலத்தில் நிற்பதும் ஒத்த கருத்தாக பார்க்கப்படுகிறது. ஆசிரியர் இதனை கேள்வியாக கேட்கிறார். எருசலேமிற்கு புனித யாத்திரையாக செல்வது அக்காலத்தில் எபிரேயர்களுக்கு வருடாந்த மற்றும் முக்கியமான சமய நிகழ்வாக இருந்திருக்கிறது என்பதனைக் இங்கே ஊகிக்கலாம்.

வ.4: மூன்றாவது வசனத்தில் கேட்ட கேள்விகளுக்கு ஆசிரியர் பதிலளிக்கிறார். ஆண்டவரின் மலையில் ஏறக்கூடியவரும், அவரின் திருத்தலத்தில் நிற்கக்கூடியவரும் இவரே:

அ. கறைபடாத கைகளை உடையவர் (தீட்டான செயல் செய்யாதவர்)
ஆ. மாசற்ற மனமுடையவர் (அசுத்தமான சிந்தனை இல்லாதவர்)
இ. பொய்த் தெய்வங்களுக்கு மனம் கொடாதவர் (ஆண்டவரை மட்டுமே வழிபடுபவர்)
ஈ. வஞ்சக நெஞ்சோடு ஆணையிடாதவர் (சுத்தமான உள்ளத்தோடு ஆசி கூறுபவர்)
வ.5-6: இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதையும் ஆசிரியர் விவரிக்கிறார்.

அ. இவர்கள் ஆசி பெறுவார்கள் - ஆண்டவரிடம் ஆசி பெறுதலே இஸ்ராயேலரின் வாழ்வின் நோக்கமாக கருதப்பட்டது.

ஆ. தம் மீட்பராம் கடவுள் இவர்களை நேர்மையாளர் என்பார் - நேர்மையாளர் என பெயரெடுப்பதுவே சட்டங்களை நேர்த்தியாக கடைப்பிடிப்பவரின் சான்றாக கருதப்பட்டது.

இ. இவர்கள் மட்டுமல்ல மாறாக இவர்களின் தலைமுறையும் கடவுளை நாடி தேடும் என்கிறார் ஆசிரியர். கடவுளை தேடுதல் என்பது இவர்கள் வேற்று தெய்வங்களின் பின்னால் போகாதவர்கள் என்பதைக் குறிக்கிறது. வேற்று தெய்வங்களின் பின்னால் மக்களின் பார்வை, பல விதமான ஆபத்துக்களை தோற்விக்க காரணமாக இருப்பதை உணர்ந்த ஆசிரியர், அப்படி செய்யாதவர்கள் தலைமுறை தலைமுறையாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்கிறார்.

ஈ. இவர்கள் யாக்கோபின் கடவுளின் முகத்தை தேடுவார்கள் என அதே கருத்து ஒத்த சொற்களில் மீள கூறப்படுகிறது. யாக்கோபின் கடவுள் என்பது கடவுளுடைய முக்கியமான பாரம்பரிய பெயர்களில் ஒன்று. 'யாக்கோபே உனது முகத்தை தேடுவார்கள்' என்றே எபிரேய பாடத்தில் உள்ளது (פָנֶיךָ יַעֲקֹב). இதன் கருத்து ஒன்றானதே.

வ.7: இந்த வரி மிகவும் பழமையானதும் பல கருத்துக்களை உடையதுமாகும். இதற்கு மெசியாவின் சாயமும் கொடுக்கப்படுகிறது. எருசலேமில் இப்போதும் மூடப்பட்டிருக்கும் ஒரு வாயில் மெசியாவின் வாயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த வாயிலின் ஊடாக இறுதிநாளில் மெசியா வருவார் அப்போது இந்த கதவுகளுக்கு முன்னால் உள்ள கல்லறைகள் திறக்கப்படும் என்பது பிற்கால யூதர்களின் நம்பிக்கையாக இருந்தது. இந்த நம்பிக்கையின் வேர் சிந்தனையாக இந்த வரிகளைக் காணலாம். இந்த வாயில்கள் ஆட்களாக உருவகிக்கப்பட்டு ஆண்டவரை வரவேற்று உயர்ந்து நிற்க்குமாறு கேட்க்படுகின்றன.

வ.8: இந்த வருகின்ற ஆண்டவர் யார், என்ற கேள்வி கேட்கப்பட்டு அதற்கான விடையும் தரப்படுகிறது. ஆண்டவர் மன்னராக வர்ணிக்கப்படுகிறார் (מֶלֶךְ மெலெக்- அரசர்). இவர் வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர். மனிதர்கள் போர் செய்தாலும் அதனை நிர்ணயிப்பவரும், போர்களில் வெற்றிதருபவர்களும் தெய்வங்களாக அக்காலத்தில் கருதப்பட்டன. இந்த சிந்தனையை இஸ்ராயேலர்களும் அறிந்திருந்தார்கள் என்பதை இங்கே காணலாம். போரில் வெற்றிதருபவர் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே என்கிறார் ஆசிரியர்.

வ.9: இந்த வரி ஏழாவது வரியை அப்படியே மீண்டும் பாடுகிறது. இதன் மூலம் இது ஒரு பாடல், முக்கியமாக ஏதோ ஒரு சடங்கிற்க்காக அமைக்கப்பட்டது என்பது புலப்படுகிறது. பலர் இந்த சடங்கை எருசலோம் நோக்கிய திருப்பயணம் என கருதுகின்றனர்.

வ.10: கடவுளை படைகளின் ஆண்டவர் (יְהוָה צְבָאוֹת அதோனாய் ட்செபாவோத்) என்பதும் ஒரு கடவுளுக்கான புராதனப் பெயர். கடவுளுக்கு பணிவிடை செய்ய பல லட்சம் தூதர்கள் இருப்பதாகவும் அவர்கள் கடவுளின் படைகளாக இருப்பதாகவும் நம்பப்பட்டது. இதனால் கடவுள் மகிமை மிக்க அரசராகவும் கருதப்பட்டார். இவை அனைத்தையும் மனித வார்த்தைகளில் கடவுளை அறியப்படுத்த முயன்ற முயற்சிகளாகவே பாhக்கவேண்டும். இந்த உலிகிலே எந்த மன்னரும் மாட்சியுடையவர் கிடையாது, அவர் கடவுள் மட்டுமே என்பதும் இன்னொரு முக்கியமான செய்தி.



இரண்டாம் வாசகம்
உரோமையர்: 1,1-7

1,7கடவுளின் அன்பைப் பெற்று இறைமக்களாக அழைக்கப்பட்டுள்ள உரோமை நகர மக்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனாக அழைப்புப் பெற்றவனும் கடவுளின் நற்செய்திப் பணிக்கென ஒதுக்கி வைக்கப்பட்டவனுமாகிய பவுல் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! 2நற்செய்தியைத் தருவதாகக் கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக ஏற்கெனவே திருமறை நூலில் வாக்களித்திருந்தார். 3இந்த நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்; 4தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. 5பிற இனத்தார் அனைவரும் இவர்மீது நம்பிக்கை கொண்டு இவருக்குக் கீழ்ப்படியுமாறு இவர் பெயர் விளங்க இவர் வழியாகவே நாங்கள் திருத்தூதுப்பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக்கொண்டோம். 6பிற இனத்தவராகிய நீங்களும் இயேசுகிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருக்க அழைப்புப் பெற்றிருக்கிறீர்கள்.

உரோமையிலே இருந்த திருச்சபையை பவுல் நேரடியாக உருவாக்கவில்லை அது பலருடைய முயற்சியால் உருவான திருச்சபை என்பதை இன்று பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். பவுலுடைய கடிதங்களிலே, இறையியலை பொறுத்தமட்டில் உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகம் தனித்துவமானது என்பதை பலர் ஏற்றுக்கொள்வர். அகஸ்டின், லூத்தர், கல்வின், விஸ்லி மற்றும் பல கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர்களின் சிந்தனைகளை இந்த மடல் பலவழிகளில் தீர்மானித்திருக்கிறது. எது எவ்வாறெனினும் உரோமையர் திருமுகம் ஒரு வரலாற்று தேவைக்காக ஒரு குறிப்பிட்ட திருச்சபைக்கு எழுதப்பட்டது என்பதை மற்க்கக்கூடாது. பவுல் உரோமைக்கு செல்லுதலை தன்னுடைய பணியில் ஒரு இலக்காக கொண்டார். உரோமைக்கு சென்று பின்னர் அதனூடாக இஸ்பானியாவிற்கு செல்லவும் திட்டமிட்டார். அத்தோடு தன்னுடைய மூன்றாவது திருத்தூதுப்பணியின் இறுதியில் இந்த திருமுகத்தை எழுதினார் என நம்பப்படுகிறது. பவுல் ஏன் மத்தியதரை கிறிஸ்தவ திருச்சபைகளை விடுத்து இஸ்பானியாவை தேர்ந்தெடுத்தார் என்பதற்கு பல காரணங்களை தற்போதைய ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். அதில், இஸ்பானியாவை பவுல் உலகின் கடையெல்லையாக் கருதினார் என்ற ஒரு வாதமும் முக்கியமானதாக இருக்கிறது.

யார் உரோமை திருச்சபையின் நிறுவுனர் என்பதற்கு சரியான விடை கிடைக்கப்பெறவில்லை. சிலர் அவர் தூய பேதுரு என்கின்றனர். சிலர் பெந்தகோஸ்து நிகழ்வின் பின்னர் அங்கிருந்து வந்தவர்களில் சிலர் இங்கே இந்த திருச்சபையை நிறுவினர் என்கின்றனர். உரோமையில் இருந்த அனைத்து யூதர்களும் இந்த கிறிஸ்வர்களாக இருக்கவில்லை. உரோமையில் மிகப்பழமையான ஒரு யூத செப்க்கூடம் தைபர் நகருக்கு அருகில் இன்றும் இருக்கிறது. உரோமையில் யூதருக்கும் யூத கிறிஸ்தவர்களுக்கும் வாய்த்தர்கம் ஏற்பட்டு சில கலவரங்களும் ஏற்பட யூதர்கள் அனைவரையும் ஒரு உரோமைய சீசர், கிளாவுதியூஸ் விரட்டிவிட்டார் என்ற ஒரு வரலாறும் உரோமைய மக்கள் வரலாற்றில் பதியப்பட்டிருக்கிறது (விவிலியத்தில் தி.பணி 18,2). இந்த தண்டனையின் பின்னர் யூதரல்லாத கிறிஸ்தவர்கள் உரோமைய திருச்சபையை வலுப்படுத்தியிருக்கலாம். பின்னர் சில காலத்தில் யூதர்கள் உரோமைக்கு திரும்பினார்கள், இருப்பினும் உரோமைய திருச்சபையில் யூதரல்லாத கிறிஸ்தவர்களே பெரும்பான்மையாக இருந்தனர், இப்படியான திருச்சபைக்கே இந்த மடல் வரையப்பட்டிருக்கிறது.

வ.1: அக்கால கடித மரபின் விழுமியங்களை இந்த மடலும் பின்பற்றுகிறது.

அ. எழுதுனர்: கிறிஸ்து இயேசுவின் பணியாளர் பவுல், இவர் கடவுளுடைய நற்செய்திக்காக தெரிந்துகொள்ளப்பட்டவர்.

ஆ. எழுதப்படுவது: கடவுளால் அன்புசெய்யப்ட்ட அனைத்து உரோமைய புனிதர்களுக்கும். இந்த வசனம் கிரேக்க விவிலியத்தில் ஏழாவது வசனத்திலே உள்ளது. (வ.7). சில தேவைகளுக்காக இது தமிழ் விவிலியத்தில் முதலாவது வசனத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வசனத்தில் பவுல் தான் யார் என்பதை அழகாக சொல்லிவிட்டார். அவர் தன்னை கிறஸ்து இயேசுவின் பணியாளர் என்கிறார், இது பவுலுக்கு மிகவும் பிடித்த ஓர் அடைமொழி (Παῦλος δοῦλος ⸉Χριστοῦ Ἰησοῦ). இயேசுவால் நேரடியாக திருத்தூதராக தெரியப்படாவிட்டாலும் அவரும் விசேட திருத்தூதரே என்று முன்கூட்டியே உரோமைய கிறிஸ்தவர்களுக்கு சொல்லிவைக்கிறார். நற்செய்திபணி இயேசுவுடைய பணி மட்டுமல்ல அது கடவுளுடைய பணி என்றும் சொல்கிறார். நற்செய்தியை கடவுளோடு இணைப்பது ஆரம்ப கால இறையியல் (εὐαγγέλιον θεοῦ).

வ.2: இந்த நற்செய்தியை அறிமுகப்படுத்துகிறார். அது ஏற்கனவே இறைவாக்கினர்களால் திருமறை நூல்களில் பதியப்பட்டுள்ளது என்கிறார். விவிலியம் இங்கே திருமறை நூல்கள்; என்று காட்டப்படுகிறது. விவிலியத்தின் ஆரம்ப கால பெயர் இது (γραφαῖς ἁγίαις தூய்மையான எழுத்துக்கள்). இந்த வசனத்தில் நற்செய்தியும் திருமறை நூல்களும் அழகாக இரண்டு உருப்படிகளாக பிரித்துக்காட்டப்பட்டுள்ளன.

வவ.3-4: இந்த வசனங்களில் நற்செய்தி யாரைப்பற்றி பறைசாற்றுகிறது என்பது விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. இயேசு கடவுளின் மகன் என்பது நினைவூட்டப்படுகிறது. அத்தோடு மனிதர் என்ற முறையில் அவர் தாவீதின் வழிமரவு எனப்படுகிறார். அவர் கடவுளின் வல்லமையில் இறைமகனாக ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். அத்தோடு அவரின் உயிர்பின் மூலம் அவர் மீண்டும் இறைமகன் என்பதை நிரூபித்துள்ளார். அந்த நபர் இயேசுவாகிய கிறிஸ்து அவர்தான் நம் ஆண்டவர் என்கிறார் பவுல்.

வ.5: இந்த ஐந்தாவது வரி உரோமையர் திருமுகத்திலே மிகவும் ஆராயப்பட்ட ஒரு வரியாகும். இந்த இயேசு வழியாகவே, நம்பிக்கையின் கீழ்படிவிற்கு அருளையும் திருத்தூதுத்துவத்தையும் பெற்றுள்ளோம். அது அனைத்து நாட்டினர்மட்டிலும் இயேசுவின பெயரில் செய்யப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையின் கிழ்படிவை ὑπακοὴν πίστεως பலவாறு மொழிபெயர்க்கலாம். இங்கே நம்பிக்கை ஆறாம் வேற்றுமையிலும் கிழ்படிவு இரண்டாம் வேற்றுமையிலும் வருகிறபடியால் இந்த சொற்கள் பல அர்த்தத்தைத் தரலாம்.

அ. நம்பிக்கைக்கான கீழ்ப்படிவு
ஆ. நம்பிக்கை பிறப்பிக்கின்ற கீழ்படிவு
இ. நம்புகின்ற கீழ்ப்படிவு
ஈ. கீழ்ப்படிவு அதாவது நம்பிக்கை
கிரேக்க மொழியில் ஆறாம் வேற்றுமை (genitive caseling) பல அர்தங்களைக் கொடுக்கவல்லது. இதன் காரணமாக இந்த சொற் பதங்கள் பல அர்த்தங்களைக் கொடுக்கின்றன. தமிழ் விவிலியத்தில் இந்த வரி, இவற்றில் ஒரு முக்கியமான அர்தத்தை மையமாகக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
வ.6: பவுல் தன்னைப்போல் பிறவினத்தவரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அனைவரும் உள்வாங்குகிறார்.

வ.7: இந்த ஏழாவது வரி தமிழ் விவிலியத்தில் தெளிவிற்காக முதலாவது வரியோடு சேர்க்கப்ட்டுள்ளது. இந்த வரியில், யார் இந்த அனைவரும் என்பதை பவுல் விளக்குகிறார். உரோமையில் உள்ள அனைவரையும் கடவுளின் அன்பைப்பெற்றவர்கள் என்கிறார் பவுல் (ἀγαπητοῖς θεοῦ). அத்தோடு அவர்களை அழைக்கப்பட்ட தூயவர்கள் என்கிறார் (புனிதர்கள்). திருச்சபையின் அங்கத்தவர்கள் அனைவரையும் புனிதர்கள் என்று பவுல் விழிப்பது மிகவும் முக்கியமான இறையியல் சிந்தனை. அத்தோடு இவர்களுக்கு தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிமிருந்தும் அருளும் சமாதானமும் வாழ்த்தப்பெறுகின்றன. (இது ஒரு கடித வாழ்த்து முறை). இதன் வழியாக இந்த கடிதம் ஒரு தேவைக்காக அக்கால கடித எழுது முறையில் எழுதப்பட்ட ஒரு மடல் என்பது புலப்படுகிறது, அல்லது கடித வடிவை தழுவி, கடிதமாக எழுதப்பட்ட இறையியல் படிப்பினை எனவும் எடுக்கலாம்.


நற்செய்தி வாசகம்
மத்தேயு: 1,18-24

18இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றிஇ 'யோசேப்பே தாவீதின் மகனே உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார்.✠ 22-23'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள். 24யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். 25மரியா தம் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார்.

மத்தேயு எதனை மையமாக வைத்து தன்னுடைய நற்செய்தியை பிரிக்கிறார் அல்லது முன்னெடுத்துச் செல்கிறார் என்பது மிகவும் ஆச்சரியமூட்டுவதாகவே இருக்கிறது. பலர் பல விதமான பிரிவுகளை முன்வைக்கின்றனர் அவையனைத்தும் ஊகங்களாகவே இருக்கின்றன. தற்காலத்தில் மத்தேயு ஆய்வாளர்கள், கதாபாத்திரத்தை மையமாகக்கொண்டு இந்த நற்செய்தியை ஆறு பகுதிகளாக பிரிக்கின்றனர்.

அ. மெசியாவின் வருகை: 1,1 - 4,16
ஆ. மெசியாவின் இஸ்ராயேலுக்கான பணி 4,17 - 11,1
இ. மெசியா தன் பணியில் சந்தித்த சவால்களும் இடையூறுகளும் 11,2 - 16,20
ஈ. எருசலேமை நோக்கிய மெசியாவின் பயணம் 16,21 - 20,34
உ. மெசியாவின் இறுதி சிலுவை மரணம் 21,1 - 27,66
ஊ. மெசியாவின் உயிர்ப்பும் நற்செய்தி பரப்புவதற்கான கட்டளையும் 28,1-20.
(இதுவும் சிலருடைய விசேடமான பயனுள்ள கருத்துக்களே என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்).

இன்றைய நற்செய்திக்கு முன்பகுதியில் மத்தேயு இயேசுவைப் பற்றி எழுதிய பரம்பரை அட்டவணை, மத்தேயுவின் நோக்கத்தை நமக்கு தெளிவாக காட்டுகிறது (காண்க மத் 1,1-17). மத்தேயு இங்கே இயேசுவை ஆபிரகாமின் மகனாகவும் (அனைவரின் கடவுள்) தாவீதின் மகனாகவும் (இஸ்ராயேலின் மெசியா) காட்டுகிறார். இந்த பரம்பரை அட்டவணை பல நுட்பங்களையும் விநோதங்களையும், மற்றும் நாவல் பண்புகளையும் உள்ளடக்கியுள்ளது. இதனை மிக ஆறுதலாகவும் அவதானமாகவும் வாசிக்க வேண்டும். அங்கே எண்ணிக்கையும் எண்களும் முக்கிய இடம் பிடிக்கின்றன.

வ. 18: இயேசுவின் பிறப்பு மறைபொருளை ஒரே வரியில் அறிமுகப்படுத்துகிறார் மத்தேயு. இப்படித்தான் இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது என்று கூறி பிழையான வதந்திகளை நிறுத்தவோ அல்லது இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சிகளை அறியாதவர்களுக்கு அதனை அறிவிப்பதையோ மத்தேயு நோக்கமாகக் கொண்டிருக்கலாம். இயேசு மரியாவையும் யோசேப்பையும் இரண்;டாம் தடவையாக அறிக்கையிடுகிறார். மரியா யோசேப்பிற்கு மண ஒப்பந்தமானவர் என்று மத்தேயு கூறுவதன் வாயிலாக இவர்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதை காட்டுகிறார். மண ஒப்பந்தம் (μνηστεύω மெனேஸ்டெஉஓ) என்பது கிட்டத்தட்ட தமிழ் திருமண நிச்சயதார்த்தத்தைக் குறிக்கும். இது திருமணத்திற்கு முன் செய்யப்படுகின்ற ஒரு சடங்கு, இதன் பின்னர் மணமகள் தன் பெற்றோரின் வீட்டில் இருந்தாலும் அவர் மண ஒப்பந்தம் செய்யப்பட்டவரின் பெண்ணாகவே கருதப்படுவார். இந்த வேளையில் இவர் வேறு ஆணுடன் உறவுவைத்தால் அதுவும் திருமணத்திற்கு எதிரான பாவமாகவே கருதப்படும்.

மரியா திருமணமாவதற்கு முன் கருவுற்றிருந்ததாகவும் அதற்கான காரணம் தூய ஆவியார் என்பதையும் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். திருமணம் என்பது கிரேக்க விவிலியத்தில் கூடிவருதல் (συνέρχομαι) என்பதைக் குறிக்கிறது. லூக்கா நற்செய்தி வாசகர்களுக்கு இந்த தூய ஆவியாரின் செயற்பாடுகள் நன்கு தெரிந்திருக்கும், அந்த நற்செய்தியில் இந்த பகுதி இன்னும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்த பகுதிகளை தன் வாசகர்கள் நன்கு அறிந்திருந்த காரணத்தால் மத்தேயு அதனை சுருக்கமாகச் சொல்கிறார் போல.

வ.19: மத்தேயு யோசேப்பிற்கு கொடுக்கும் வரைவிலக்கணம்: Ἰωσὴφ δὲ ὁ ἀνὴρ αὐτῆς δίκαιος யோசேப்பு அவர் ஒரு நேர்மையான மனிதர். மத்தேயு ஒரு யூத கிறிஸ்தவர் என்றால் அவருக்கு நேர்மையாளருக்கான வரைவிலக்கனம் நன்கு தெரியும். கடவுளின் சட்டங்ளை கடைப்பிடிப்பவர்தான் முதல் ஏற்பாட்டில் நேர்மையாளராக கருதப்படுவார். விவிலியத்தில் முதலில் நோவா ஒரு நீதிமானாக அறிமுகப்படுத்தப்படுகிறார் (✻காண்க தொ.நூல் 6,9). வெளிப்பார்வையில் கடவுளின் சட்டத்தை மீறுகிறவர் போல காணப்படுகிற யோசேப்பு நீதிமானாக கருதப்படுபது, மத்தேயுவின் சட்டம் பற்றிய உண்மையான அறிவைக் காட்டுகிறது. (✻✻ஒப்பிடுக வி.ப. 20,14). யோசேப்பு மனித பார்வையில் சட்டத்தை வார்த்தைக்கு மட்டும் கடைப்பிடிப்பவரானால் அவர் மரியாவிற்கு தண்டனை தர முயற்சி எடுத்திருப்பார் (✻✻✻லேவி 20,10). அவருக்கு மரியாவின் கர்ப்பத்திற்கான காரணம் தெரியாதிருந்தும், தண்டனை தர முயற்சிக்காமல், இன்னொரு படி மேலே சென்று ஒரு பெண்ணை இகழ்ச்சிக்கு உட்படுத்த விரும்பாதவாரக இருக்கிறார். இவர் ஒரு உண்மையான யூதன். இந்த ஒரு வரிமட்டுமே போதும் அவர் இயேசுவின் வளனாரகாவும், நீதிமானாகவும் இருக்க. அவர், அதேவேளை மரியா பாவியாக இருந்தால் அவருடன் வாழவும் விரும்பவில்லை, இது அவருக்கு நீதியானதே. எனவே மரியாவை மறைவாக விலக்கிவிட தீர்மானிக்கிறார். இதற்கான வழிமுறைகள் மோசேயின் சட்டங்களில் இருந்தன.

(✻நோவானின் வழி மரபினர் இவர்களே: தம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார்).
(✻✻விபசாரம் செய்யாதே).
(✻✻✻அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்பட வேண்டும்.)
வ.20: யோசேப்பின் எல்லா கேள்விகளுக்கும் பதில் கடவுளின் தூதர் மூலம் வருகிறது. மரியாவின் கருவிற்கு காரணம் தூய ஆவியார் என்பது அறிவுறுத்தப்படுகிறது. கடவுளின் தூதருக்கு மத்தேயு பெயர் கொடுக்கவில்லை. அத்தோடு யோசேப்பின் கலக்கம் நியாயமான கலக்கமே என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மத்தேயு இரண்டு முறை (வ.18 மற்றும் வ.20) தூய ஆவியாரை மையப்படுத்துவதன் மூலம் (πνεύματος ἁγίου), இயேசுவின் பிறப்பு தூய ஆவியாரின் செயலால்தான் நடைபெறுகிறது என்பதை ஆழப்படுத்த முயல்கிறார்,

வ.21: மரியாவிடம் பிறக்கப்போகிறவரைப் பற்றியும் யோசேப்பிற்கு சுருக்கமாக சொல்லப்படுகிறது. மரியாவிற்கு பிறக்கப்போகிறவர் ஒரு மகன். அவருக்கு இயேசு என்று பெயரிடுமாறு யோசேப்பிற்கு சொல்லப்படுகிறது. லூக்கா நற்செய்தியில் இந்த கட்டளை மரியாவிற்கு கொடுக்கப்பட்டது (✻காண்க லூக் 1,31). பெயரைப் பொறுத்த மட்டில் இரண்டு நற்செய்தியாளர்களும் ஒருமித்து இருக்கிறார்கள். இயேசு என்னும் பெயருக்கும் அர்த்தம் கொடுக்கப்படுகிறது. இயேசு என்றால் தம் மக்களை பாவங்களிலிருந்து மீட்கிறவர், என்கிறார் வானதூதர்.

இயேசு (Ἰησοῦς ஏசூஸ்): இந்த உலக வரலாற்றையே புரட்டிப்போட்ட பெயர். இவருடைய பிறப்பாலே உலகத்தின் காலங்கள் முன் பின் என பிரிக்கப்பட்டன. மத்தேயுவிற்கு இவர் மீட்பரும் மெசியாவும். லூக்காவிற்கு இவர் பிரபஞ்ஞசத்தின் கடவுள், மாற்குவிற்கு இவர் இறைமகன், யோவானுக்கு இவர்தான் முதல் ஏற்பாட்டின் கடவுளாகிய ஆண்டவர். இயேசு என்ற பெயரை ஒவ்வொரு நற்செய்தியாளர்களும் அப்படியே பாவிக்கின்றனர். இயேசு என்பதற்கு 'கடவுள் மீட்கிறார்' என்று பொருள். கடவுள் இவருக்கு உதவியாக இருக்கிறார் என்ற பொருளும் இயேசு என்ற பெயருக்கு உண்டு. இந்த பெயரின் எபிரேய வடிவமாக יְשׁוּעָה ஜெஷஉவாஹ் என்று வரும். இதன் அரமயிக்க வடிவமாக יֵשׁוּעַ ஜேஷஉவா என்று வரும். ஆனால் அர்த்தம் அனைத்து மொழியிலும் ஒன்றாகவே இருக்கிறது.

(✻இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.)
வவ.22-23: மத்தேயு இங்கே எசாயாவின் இறைவாக்கை கோடிடுகிறார் ஆனால் மத்தேயுவின் வார்த்தைகள் செப்துவாஜின்து விவிலியத்தையே ஒத்திருக்கிறது.

மத்தேயு: ἰδοὺ ἡ παρθένος ἐν γαστρὶ ἕξει καὶ τέξεται υἱόν καὶ καλέσουσιν τὸ ὄνομα αὐτοῦ Ἐμμανουήλ (கன்னி)

செப்துவாஜின்து: ἡ παρθένος ἐν γαστρὶ ἕξει καὶ τέξεται υἱόν καὶ καλέσεις τὸ ὄνομα αὐτοῦ Εμμανουηλ· . (கன்னி)

הִנֵּ֣ה הָעַלְמָ֗ה הָרָה֙ וְיֹלֶ֣דֶת בֵּ֔ן וְקָרָ֥את שְׁמ֖וֹ עִמָּ֥נוּ אֵֽל׃ : எபிரேய விவிலியம் (இளம்பெண்) மத்தேயுவிற்கு இது இறைவாக்கின் நிறைவு, அவர் கன்னியின் மகன், அவர் இம்மானுவேலன் அதாவது அவர் 'கடவுள் நம்மோடு'.

வ. 24: இந்த வரியின் மூலம் யோசேப்பு கனவில்தான் காட்சி காண்கிறார் என்பது புலப்படுகிறது. லூக்காவில் மரியா உண்மையாகவே வானதூதரைக் காண்கிறார். அக்காலத்தில் கனவு ஒரு முக்கியமான கடவுளின் வெளிப்படுத்தல் ஊடகமாகக் கருதப்பட்டது (ὕπνος ஹஉப்னொஸ்- கனவு).

வ.25: இந்த வரியை பலர் தங்களுக்கு தேவையான முறையில் திரித்துக் கூறுகின்றனர். ஆனால் இதன் கிரேக்க பாடம், இயேசுவையே மையப்படுத்துகிறது. அதாவது யோசேப்பிற்கு இயேசுவின் கருத்தரிப்பில் தொடர்பில்லை என்பதே இங்கே எழுவாய்ப் பொருள். மரியாவுடன் யோசேப்பு தொடர்பு வைத்திருந்தால் பிறந்தவர் யோசேப்பின் சொந்த மகனாகவே கருதப்பட்டிருப்பார். அப்படியன்று அவர் கடவுளின் மகன் எனக்காட்டவே, மத்தேயு மரியா யோசேப்பின் உறவை மையப்படுத்துகிறார்.

ஆண்டவர் நம்மோடு இருந்தார், இருக்கிறார், இனியும் இருப்பார். ஆனால் நாம் கடவுளோடு இருப்பது அவ்வளவு சுலபமல்ல. மற்றய பொருட்கள் மற்றும் ஆட்களுடனான உறவு, கடவுளோடு இருப்பதற்கு தடையாகலாம், உதவியாகவும் அமையாலாம்.

அன்பு ஆண்டவரே உம்மோடு இருக்க உதவிசெய்யும். ஆமென்.