இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தோராவது வாரம்

முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 11,22-12,2
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 145
இரண்டாம் வாசகம்: 2தெசலோனிக்கர் 1,11-2,2
நற்செய்தி: லூக்கா 19,1-10


'இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! (லூக்கா 19,9)

முதல் வாசகம்
சாலமோனின் ஞானம் 11,22-12,2

22தராசில் மிக நுண்ணிய எடை வேறுபாடு காட்டும் தூசிபோலவும் நிலத்தின் மீது விழும் காலைப்பனியின் ஒரு சிறு துளி போலவும் உலகம் முழுவதும் உம் கண்முன் உள்ளது. 23நீர் எல்லாம் வல்லவராய் இருப்பதால் எல்லார்மீதும் இரங்குகின்றீர்; மனிதர்கள் தங்களுடைய பாவங்களைவிட்டு மனந்திரும்பும் பொருட்டே நீர் அவற்றைப் பார்த்ததும் பாராமல் இருக்கின்றீர். 24படைப்புகள் அனைத்தின்மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்! 25உமது திருவுளமின்றி எதுதான் நீடித்திருக்க முடியும்? அல்லது, உம்மால் உண்டாக்கப்படாதிருந்தால் எதுதான் காப்பாற்றப்படக்கூடும்? 26ஆண்டவரே, உயிர்கள்மீது அன்புகூர்கின்றவரே, நீர் எல்லாவற்றையும் வாழவிடுகின்றீர்; ஏனெனில் அவை யாவும் உம்முடையன. 1உம்முடைய அழியா ஆவி எல்லாவற்றிலும் உள்ளது. 2ஆகையால் தவறு செய்பவர்களைச் சிறிது சிறிதாய்ச் திருத்துகின்றீர்; அவர்கள் எவற்றால் பாவம் செய்கிறார்களோ அவற்றை நினைவுபடுத்தி அவர்களை எச்சரிக்கின்றீர்; ஆண்டவரே, அவர்கள் தீமையிலிருந்து விடுபடவும் உம்மேல் நம்பிக்கை கொள்ளவுமே இவ்வாறு செய்கின்றீர்.

சாலமோனின் ஞானம் இணைத்திருமுறை நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நூல் செப்துவாஜிந்தில் ஒரு நூலாக காணப்பட்டது, இதனை ஆரம்ப கால யூதர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இந்த நூல் தன் மூல மொழியாக கிரேக்கத்தை கொண்டிருப்பதனால் இதனை தற்கால யூதர்களும், பிரிந்த சகோதர கிறிஸ்தவர்களும் தங்களின் விவிலியங்களில் ஏற்றுக்கொள்வதில்லை. அரசர் சாலமோனின் பெயர் நேரடியாக இந்த புத்தகத்திலே குறிப்பிடப்படாவிட்டாலும், அவரின் மகிமையைக் காரணம் கண்டு, இந்த புத்தகம் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் ஒன்பதாவது அதிகாரத்திற்கும் 1அரசர் 3,6-9 இற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திருச்சபைத் தந்தை தூய அகுஸ்தினுடைய விருப்பமான புத்தகம் இதுவாக இருந்திருக்கிறது. இதன் காலத்தை கணிப்பது கடினமாக இருந்தாலும், தற்போது இந்த புத்தகம் கி.மு முதலாம் நூற்றாண்டை சார்ந்தது என பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். இதன் ஆசிரியர் நிச்சயமாக ஒரு பக்திமிக்க யூதர். இவர் எகிப்து அலெக்சாந்திரியாவில் வாழ்ந்தவர், எபிரேய இலக்கியங்கள், கலாச்சாரம் அத்தோடு கிரேக்க இலக்கியங்கள், மற்றும் கிரேக்க மெய்யியலை நன்கு அறிந்தவராக இருந்திருக்க வேண்டும்.

மெய்யறிவு (ஞானம்) σοφία சோபியா, என்பதுதான் இந்த புத்தகத்தின் மையப் பொருள். அதேவேளை மற்றைய ஞான நூல்களாக யோபு, நீதிமொழிகள், சபை உரையாளர், சீராக், திருப்பாடல், மற்றும் இனிமைமிகு பாடல் போன்றவற்றிலும் பார்க்க இந்த நூல் தனித்துவமாக இருக்கிறது. இதன் இலக்கிய வகையாக புத்திமதி அல்லது அறிவுரை நூற்கள் என சிலர் இதனை வகைப்படுத்துகின்றனர், இந்த வகை கிரேக்க இலக்கியத்தில் மிகவும் முக்கியமான ஒரு வகை இலக்கியம். சிலர் இதனை அரிஸ்டோட்டிலின் இலக்கிய அலகுகளின் வகையிலும் சேர்க்கப் பார்க்கின்றனர். எது எவ்வாறெனினும் இது முழுக்க முழுக்க கிரேக்க இலக்கியம் என்ற வாதத்தை ஏற்க முடியாது என நினைக்கிறேன். முக்கியமாக இந்த புத்தகத்தை மூன்று பகுதிகளாக பிரிக்கின்றனர்

அ. மெய்யறிவின் அழியாத்தன்மை (நித்தியம்), அதிகாரங்கள் 1-6
ஆ. மெய்யறிவை பற்றிய விளக்கம், அதிகாரங்கள் 7-9
இ. வரலாற்றில் மெய்யறிவின் செயற்பாடுகள், அதிகாரங்கள் 10-19
வ.22: ஆண்டவரின் கண்முன் உலகத்தின் நிலையை விளக்குகிறார் ஆசிரியர்.

அ. உலகம் நுண்ணிய தூசி போன்றது - தூசி அற்பமான பொருளுக்கான ஒரு முதல் ஏற்பாட்டு அடையாளம். கடவுள் இந்த தூசியிலிருந்துதான் மனிதனை படைத்திருக்கிறார். இந்த தூசி நிலையாமையைக் காட்டும், அத்தோடு அனைவருக்கும் தெரிந்த ஒரு அடையாளம். ஆ. நிலத்தில் விழும் காலைப் பனி - மத்திய கிழக்கு மற்றும் பாலை வன பகுதிகளில் சில காலங்களில் நிலத்தில் விழும் இந்த பனித்துளிகள், சூரியனின் வருகையால் அப்படியே காய்ந்து போகும். நிலையாமையை குறிக்கும் இன்னொரு முக்கியமான அடையாளத்தை இங்கே ஆசிரியர் காட்சிப்படுத்துகிறார்.

வ.23: இந்த மெய்யறிவு நூல் ஒரு முக்கியமான வாதத்தை முன்வைக்கிறது. கடவுள் மனந்திரும்புவதற்காக பாவிகளின் குற்றங்களை பார்த்தும் பாரமல் விடுகிறார், என்ற ஒரு வாதம் இங்கே ஆராயப்படுகிறது. ஏன் கடவுள் இப்படி செய்கிறார், இது அநீதி போல தோன்றினாலும், அவர் பாவி மனமாறுவதற்கான ஒரு வாய்ப்பை தேடுகிறார் என்பது புலப்படுகிறது அத்தோடு அதுவே கடவுளின் நீதியாகவும் காணப்படுகிறது. இதனையே புதிய ஏற்பாட்டில் இயேசுவும் பாவத்தை வெறுத்து பாவியை நேசித்த சந்தர்பங்கள், எமக்கு நினைவூட்டுகின்றன.

வ.24: கடவுள் எதனையும் வெறுப்பதில்லை. கிரேக்க வரி இந்த வசனத்தின் முதல் பகுதியை இவ்வாறு வாசிக்கிறது, ἀγαπᾷς γὰρ τὰ ὄντα πάντα 'அன்பு செய்கின்றீர், இருக்கின்ற ஒவ்வொன்றையும்' இதிலிருந்து கடவுளுக்கு பிடிக்காத ஒன்று, அவர் படைத்ததில் இல்லை என்ற ஓர் அழகான வாதம் முன்வைக்கப்படுகிறது. அதற்கான காரணத்தையும் ஆசிரியர் முன்வைக்கிறார். கடவுள்தான் அனைத்தையும் படைத்தார், அவர் படைத்த அனைத்தும் நல்லது, பிடிக்கவில்லை என்றால் அவர் படைத்திருக்க மாட்டார். ஆக படைத்த எதையும் நீங்கள் தீட்டு, கீழ்தரமானது என நினைக்காதீர்கள் என்று நமக்கு ஆசிரியர் புகட்டுகிறார்.

வ.25: நீடித்தல் அல்லது காப்பாற்றப்படுதல் என்ற இந்த இரண்டு செயற்பாடுகளும், கடவுளிலேயே முழுமையாக தங்கியிருக்கிறது என்கிறார் ஆசிரியர். இந்த உலகில் எதுவும் கடவுளின் திட்டமின்றி நிலைக்காது அல்லது எந்த ஆபத்திலிருந்தும் மீட்க்கப்படாது என்பது ஒரு மெய்யறிவுச் சிந்தனை. கிரேக்கர்களுடைய காலத்தில் இஸ்ராயேலர் அல்லது யூதர்கள் பல கலாபனைகளைச் சந்தித்தனர், சிலர் கிரேக்க மயமாக்களுக்குள் தங்களை ஈடுபத்தியும் கொண்டனர், இந்த ஆபத்தான நிலையில், நம்பிக்கை தரவேண்டியது விவிலிய ஆசிரியர்களின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. இந்த நோக்கத்தை இந்த வரியில் காணலாம்.

வ.26: உயிர்கள் யாருடையவை? அவை கடவுளுடையவை என்கிறார் ஆசிரியர். கிரேக்க மொழியில் உயிர்கள் என்பதைவிட, 'அனைத்தையும்' என்றே உள்ளது. ஆக இங்கே உயிருள்ளவை மற்றும் உயிரற்றவை அனைத்தையும் கடவுளின் பராமரிப்பில் வைக்கிறார் ஆசிரியர். கடவுளுக்கு ஆசிரியர் அழகான கிரேக்க பெயர் ஒன்றை வைக்கிறார். கடவுள் இங்கே உயிர்கள்மீது அன்புகூர்கின்றவரே!, என்று அழைக்கப்படுகிறார் (φιλόψυχε பிலொப்புகே). இந்தச் சொல் உயிரை, ஆன்மாவை அல்லது மூச்சு விடுகிறதை மீட்கிறவர் என்ற அர்த்தத்தையும் கொடுக்கும்.

வ.1: ஆண்டவருடைய ஆவியை பற்றி முதல் ஏற்பாட்டில் சுட்டிக்காட்டுகின்ற இடங்களில் இதுவும் ஒன்று. இங்கே ஆண்டவரின் ஆவி இன்னொரு ஆளாக, அது அனைத்திலும் இருப்பதாக காட்டப்படுகிறது (πνεῦμά ἐστιν ἐν πᾶσιν அனைத்திலும் உம் ஆவி).

வ.2: மீண்டுமாக தவறு செய்பவர்கள் எவ்வாறு திருத்தப்படுகிறார்கள் என்பதை ஆசிரியர் விளக்குகிறார்.

அ. அவர்கள் சிறிது சிறிதாக திருத்தப்படுவர் (κατ᾿ ὀλίγον)
ஆ. அவர்களின் பாவத்தாலேயே எச்சரிக்கப்படுவர்
இ. இதனால் அந்த பாவத்திலிருந்து விடுபடுவர்
ஈ. கடவுள் மேல் நம்பிக்கை கொள்வர்
இந்த படிமுறைகள் நமது ஒப்புரவு திருவருட் சாதனத்தை நினைவூட்டுகின்றன.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 145

1என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். 2நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். 8ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 9ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். 10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். 13உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. 14தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார்.

திருப்பாடல் 145 அகர வரிசையில் எழுதப்பட்ட ஒரு புகழ்ச்சிப் பாடல். புகழ்சிப்பாடலாக இருக்கின்ற அதே வேளை, அரச புகழ்சிப்பாடலுக்குரிய பல முக்கியமான வார்த்தைகளையும் இப்பாடல் கொண்டுள்ளது. அகர வரிசையில் பாடல்களையும் மெய்யறிவு அறிவுரைகளையும் அமைப்பது எபிரேய இலக்கியத்தில் மிகவும் பிரசித்தமானது. தமிழ் இலக்கியத்திலுள்ள ஒளவையார் பாடல்களான ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்றவை இப்படியான இலக்கிய படைப்புக்களாகும்.

ஆத்திசூடி

அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
... (தொடர்ந்து வரும்)
அஃகம் சுருக்கேல்
கொன்றை வேந்தன்
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இல்லறம் அல்லது நல்லறம் அன்று
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
... (தொடர்ந்து வரும்)
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு
திருப்பாடல் 145

(எபிரேயத்தின் முதல் எழுத்தான א அலெப்) אֲרוֹמִמְךָ֣ אֱלוֹהַ֣י
(எபிரேயத்தின் இரண்டாம் எழுத்தான ב பேத்)בְּכָל־י֥וֹם אֲבָרֲכֶ֑ךָּ
(எபிரேயத்தின் மூன்றாம் எழுத்தான ג கிமெல்)
גָּ֘ד֤וֹל יְהוָ֣ה (எபிரேயத்தின் நான்காம் எழுத்தான ד தலெத்)דּ֣וֹר ל֭֭דוֹר
(தொடர்ந்து வரும்)...
(எபிரேயத்தின் இறுதி (இருபத்திரண்டாவது) எழுத்தான ת தெத்) תְּהִלַּ֥ת יְהוָ֗ה
இப்படியான அகரவரிசை பாடல்கள், மனப்பாடம் செய்வதற்கு வசதியாக இருக்கும் படி அமைக்கப்பட்டிருக்கலாம், அல்லது முழுமையை காட்டவும் இப்படியான அமைப்புக்கள் பாவிக்கப்பட்டிருக்கலாம். இப்படியான திருப்பாடல்களில் 119வது திருப்பாடலையே அதி முக்கியமானதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர், அந்த 119வது திருப்பாடல், 176 வரிகளைக்கொண்டுள்ளது. ஒவ்வொரு இருபத்திரண்டு எழுத்துக்களும் எட்டுதடவைகளாக அதே எழுத்தில் அமைந்திருக்கும் (22ஓ8ஸ்ரீ176).

இன்றைய 145 வது திருப்பாடலில் நுன் (נ,ן) என்ற எழுத்து இடம் பெறவில்லை (பதின்மூன்றாவது வரிக்கு பின்). இதற்கான காரணம் தெரியவில்லை, ஒருவேளை வேண்டுமென்றே, அவதானத்தை ஈர்பதற்காக இப்படி செய்யப்பட்டிருக்கலாம்.

வவ.1-2: இவை இந்த பாடலின் வரவேற்பு வரிகள். கடவுள் அரசராக நினைவூட்டப்பெறுகிறார். இஸ்ராயேலருக்கு கடவுள்தான் அரசர் என்ற வாதத்தையும் இங்கே ஆசிரியர் முன்வைக்கிறார். இது ஒரு முக்கியமான இறையியல் வாதம். இந்த கடவுள்-அரசரின் நாமம் எப்பொழுதும் புகழப்படவேண்டும் என்பதும் இவரின் படிப்பினை.

வவ.8-9: ஆண்டவரின் அழகிய பண்புகள் சில கோடிடப்படுகின்றன. அ. ஆண்டவர் இரக்கமும் கனிவும் உள்ளவர் (חַנּוּן וְרַחוּם יְהוָה), ஆண்டவரின் இந்த உன்னத பண்புகள் அவரை கடவுள்-அரசராக காட்டுகிறது.

ஆ. அவர் எளிதில் சினம் கொள்ளார். எளிதில் சினம் கொள்பவர்கள் மனிதர்கள், அவர்கள் தங்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத பொழுது மற்றவரில் சினம் கொள்கின்றனர். ஆனால் கடவுள் மிக நல்லவராக இருக்கிற படியால் அவர் எளிதில் சினம் கொள்ளாதிருக்கிறார்.

இ. அவர் பேரன்பு கொண்டவர். இந்த பேரன்பு (חֶסֶד) ஹெசெட் என்று அழைக்கப்படுகிறது. இதனை தமிழில் இரக்கம்கலந்த அன்பு என்றும் மொழி பெயர்க்கலாம். இது இக்கால இரக்கத்தின் ஆண்டில் மிகவும் அறியப்பட்ட சொல்லாகும். அத்தோடு இந்த பண்பு முதல் ஏற்பாட்டில் கடவுளுக்கு மட்டுமே முழுiயாக பாவிக்கப்படுகிறது.

ஈ. அவர் அனைவருக்கும் நன்மை செய்கிறார். இங்கே இஸ்ராயேல் ஆசிரியர் ஒரு முக்கியமான வாதத்தை முன்வைக்கிறார். அக்காலத்தில் இனத்துக்கென்றொரு கடவுள்கள் இருந்தனர். ஆனால் இஸ்ராயேலின் கடவுள்தான் உன்மை ஆண்டவர், அவர் அனைவருக்கும் நன்மை செய்பவர். இதனால் அவர் இனங்களைத் தாண்டிய உண்மைக் கடவுளாகிறார்.

உ. அவர் அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுகிறார். இரக்கம் கடவுளின் முக்கியமான இன்னொரு பண்பு. இது அவரின் அன்போடு கலந்தது. ஆண்டவரின் இரக்கத்தினை அனைவரும் பெறுகின்றனர், ஏனெனில் அனைத்தையும் அவரே உண்டாக்கினார்.

வவ.10-11: இந்த வரிகளில் ஆண்டவரின் அன்பர்கள் (חָסִיד ஹசிட்) யாரென விளக்கப்பட்டு;ள்ளது. அவர்கள் கடவுளால் உருவாக்கப்பட்டவர்கள், அவர்கள் கடவுளை என்றும் போற்றுபவர்கள். அவர்கள் கடவுளின் மாட்சியை அறிவிக்கிறார்கள், ஆக அது அவர்களுக்கு நன்கு தெரிந்த அனுபவமாக இருக்கிறது.

இப்படியாக கடவுளின் அன்பர்கள் என்பவர்கள், கடவுளின் அரச மாட்சியை அறிந்தவர்களாகவும், அவரின் வல்லமையை உணர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

வவ.13-14: ஆண்டவரின் அரச பண்புகள் உணர்த்தப்படுகின்றன.
அ. அவர் அரசு எக்காலத்திற்கும் உரியது.
ஆ. அவர் தம் வாக்கில் உண்மையானவர்.
இ. அவர் தம் செயல்களில் தூய்மையானவர்.
ஈ. அவர் பலவீனமானவர்களை பாதுகாக்கின்றார்.
இப்படியாக கடவுள்தான் உண்மையான அரசர் என்று யாருக்கோ மறைமுகமாக எச்சரிக்கை விடுகிறார். இஸ்ராயேலின் அரசர்கள் இப்படியான பண்புகளில், பலவேளைகளில் தவறினார்கள். அதனை குறித்து ஆச்சரியப்படாத விவிலிய ஆசிரியர்கள், கடவுள்தான் உண்மையாக இஸ்ராயேலின் அரசர் மற்றெல்லாரும் அவர் பணியாளர்களே அல்லது சாதரன மனிதர்களே என்கின்றனர்.



இரண்டாம் வாசகம்
2தெசலோனிக்கர் 1,11-2,2

11இதற்காகத்தான் நாங்கள் உங்களுக்காக என்றும் இறைவனிடம் வேண்டுகிறோம். நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு உங்களைத் தகுதியுள்ளவராக்குவாராக! உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும், நம்பிக்கையால் தூண்டப்படும் ஒவ்வொரு செயலையும் தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக! 12இவ்வாறு நம் கடவுளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப, உங்களால் நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும் அவரால் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக! 1சகோதர சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வருகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப்பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது 2ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம்.

இந்த கடிதம் பவுலால் எழுதப்பட்டு தெசலோனிக்க திருச்சபைக்கு அனுப்பப்பட்டது என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கைக்கு சார்பாகவும் எதிராகவும் பல வாதங்கள் இன்று வரை இருக்கின்றன. ஆனால் இக்கடிதத்தில் உள்ள உள்ளகச் சான்றுகள் பல இதனை பவுல் எழுதியிருக்கமாட்டார் எனவும், அவரின் பெயரில் அவர் சீடர் ஒருவர், இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்த பல சிக்கல்களுக்கு பவுல் எப்படி பதில் தந்திருப்பார் என்பது போல, இக் கடிதம் அமைக்கப்பட்டுள்ளதாக வாதாடுகின்றனர். முதலாம் தெசலோனிக்கர் மடலை பல வழிகளில் ஒத்திருந்தாலும், பல விடயங்களில் இது வித்தியாசமாக இருக்கிறது. முக்கியமாக தனி உறவு வார்த்தைகளின் மறைவு, அந்தரத் தொனி, பரூசியாவை (இரண்டாம் வருகை) பற்றிப் பேசுகின்ற போது சிலுவை மற்றும் உயிர்ப்பைப் பற்றிய வார்த்தைகள் இல்iலாமை, போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

கி.பி இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தை இக் கடிதத்தின் காலமாக சிலர் கணிக்கின்றனர். இங்கே பவுல் தன்கையால் எழுதினார் என்ற வார்த்தைகள் (காண்க ✽2தெச 3,17) வித்தியாசமாக உள்ளது. இந்த காலத்தில் கிறிஸ்தவர்கள் எதிர் நோக்கிய பயங்கரமான கலாபனைகளையும், சித்தரவதைகளையும் தாண்டி அவர்கள் தங்கள் விசுவாசத்தில் பயணம் செய்ய, ஆசிரியர் பவுலின் பெயரை பாவித்திருக்கலாம். இப்படியான முறைமை அன்றைய நாட்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகவே இருந்தது. (நல்ல வேளை இவருக்கு நம்முடைய 'மொட்டை கடிதத்தைப்' பற்றிய அறிவு இல்லாமல் இருந்தது). இன்றைய நான்கு வரிகள், இரண்டு பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. முதலாவது, தீர்ப்பு நாளைப் பற்றிய பகுதியிலிருந்தும், இரண்டாவது பகுதி ஆண்டவரின் வருகைக்கான அடையாளங்கள் என்ற பகுதியிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன.

(✽இவ்வாழ்த்தைப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன். நான் எழுதும் திருமுகம் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம். இதுவே நான் எழுதும் முறை).

வ.11: இந்த வரிக்கு முன் தீர்ப்பு நாளைப்பற்றி விளக்கிய ஆசிரியர், கலாபனைகளில் கிறிஸ்தவர்கள் சாட்சியமாக நிற்க வேண்டும் என உற்சாகப்படுத்துகிறார். இயேசு ஆண்டவர் வருகின்ற போது அவர் நிச்சயமாக நம்பிக்கையில்லாதவர்களையும், கிறிஸ்தவர்களை துன்புறுத்துகிறவர்களையும் தண்டிப்பார் எனவும் காட்டுகிறார். பின்னர் இதற்காகத்தான் தான் இப்போதும் வாசகர்களுக்காக வேண்டுவதாக எழுதுகிறார். இந்த கடிதத்தை எழுதுகிற ஆசிரியர் தெசலோனிக்க கிறிஸ்தவர்களின் துன்பங்களை நன்கு அறிந்தவர் என்பது இந்த வரிகளின் மூலம் நன்கு புலப்படுகிறது. அத்தோடு இந்த கிறிஸ்தவர்களின் நல்லெண்ணங்களையும் (ἀγαθωσύνη), நம்பிக்கை செயல்களையும் (ἔργον πίστεως) கடவுள் நன்கு அறிந்துள்ளார் என்று கூறி அவர்கள் எப்போதுமே கடவுளின் பார்வையில்தான் இருக்கிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.

வ.12: இந்த வசனத்தில் ஆரம்ப கால திருச்சபை இயேசுவிற்கு கொடுத்த பெயரொன்று புலப்படுகிறது. இயேசுவை கடவுளும் ஆண்டவரும் என விழிப்பது இங்கே நோக்கப்படவேண்டும், (θεοῦ ἡμῶν καὶ κυρίου Ἰησοῦ Χριστοῦ. எங்கள் கடவுளும் ஆண்டவருமாக இயேசு கிறிஸ்து). இந்த வசனம் கிறிஸ்தியலின் வளர்ச்சிக்கு ஊட்டம் கொடுத்திருக்க வேண்டும். இயேசுவை கடவுளாக பார்ப்பது பிற்கால நம்பிக்கை என்ற பேதகம் (தப்பறை) நான்காம் நூற்றாண்டிலே திருச்சபையை உலுக்கியது, ஆனால் இயேசுவை கடவுளாக அறிக்கையிட்ட இந்த முதலாம் இரண்டாம் நூற்றாண்டு விசுவாச வார்த்தைகள், நம்முடைய விசுவாசத்திற்கு நல்ல ஆதாரங்கள் ஆகின்றன. அத்தோடு இங்கே ஒருவரின் விசுவாசம், இயேசுவிற்கும் அவரை விசுவசிக்கும் அந்த நபருக்கும், நன்மை செய்கிறது என்கின்ற, ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் ஒரு நன்மைத்தனத்தை காட்டுகிறார்.

வவ.1-2: ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகை (παρουσία பரூசியா) பற்றிய நம்பிக்கை ஆரம்ப கால திருச்சபையின் மிக முக்கியமான நம்பிக்கையில் ஒன்றாக இருந்தது. இயேசு தன்னுடைய விண்ணேற்பிற்கு முன்னர் பல வேளைகளில் அவருடைய இரண்டாம் வருகையைப் பற்றி பல தரவுகளை தந்திருந்தார். இயேசுவோடு இருந்த முதலாவது பரம்பரையான திருத்தூதர்களின் இறப்புவரை இந்த நம்பிக்கை கேள்விகளை சந்திக்கவில்லை. திருத்தூதர்களின் மறைவும், ஆரம்பகால திருச்சபையின் சிக்கல்கள் மற்றும் கலாபனைகள் இந்த இரண்டாம் வருகையைப் பற்றிய பல கேள்விகளை உருவாக்கியது.

உரோமைய சீசர்கள், மற்றும் கிரேக்க அரசர்கள் தங்கள் வேற்று நாட்டு மாகாணங்களை சந்திக்க வருவதை அல்லது தங்களை அவர்களுக்கு வெளிப்படுத்துவதையும், கிரேக்க-உரோமர்கள் பரூசியா என்று நம்பினார்கள். முதல் ஏற்பாட்டில் கடவுளின் நாளையும் பற்றிய பல சிந்தனைகள் இஸ்ராயேல் மக்களிடையே நம்பிக்கையில் இருந்திருக்கிறது. இந்த சிந்தனைகளின் தாக்கத்தை கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான பரூசியாவில், இயேசுவின் இரண்டாம் வருகையில் காணலாம்.

இந்த இரண்டு வரிகளில் ஆசிரியர், தன் வாசகர்கள் இப்படியான பரூசியாவைப் பற்றிய போதனையில் அவதானமாக இருக்கும் படி அறிவுறுத்துவதைக் காணலாம். திருத்தூதர்களின் இறப்பின் பின்னர், ஆண்டவரின் இரண்டாம் வருகை பற்றிய தெளிவு யாருக்கும் கிடையாது அது கடவுளுக்கு மட்டுமே உரியது என்பதை திருச்சபைத் தலைவர்கள் உணர்ந்து கொண்டனர். ஆனால் சில வேளைகளில் இந்த முக்கியமான படிப்பினையை சிலர் தவறாக பயன்படுத்தி தங்களை பிரபல்யப் படுத்த முயன்றனர். இவர்கள் மட்டிலேதான், தன் வாசகர்களை கவனமாக இருக்கக் கேட்கிறார் ஆசிரியர்.


நற்செய்தி வாசகம்
லூக்கா 19,1-10

1இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். 2அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். 3இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். 4அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். 5இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், 'சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்' என்றார். 6அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். 7இதைக் கண்ட யாவரும், 'பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்' என்று முணுமுணுத்தனர். 8சக்கேயு எழுந்து நின்று, 'ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்' என்று அவரிடம் கூறினார். 9இயேசு அவரை நோக்கி, 'இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! 10இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்' என்று சொன்னார்.

லூக்கா நற்செய்தியின் பிரபல்யத்திற்கு சக்கேயுவின கதையும் மிக முக்கியமாகிறது. லூக்கா நற்செய்தியை கைவிடப்பட்டோரின் நற்செய்தி (ஆறாம் வேற்றுமை) என்பதைவிட கைவிடப்பட்டோருக்கான நற்செய்தி (நான்காம் வேற்றுமை) என அழைப்பதே பொருந்தும் என நினைக்கிறேன். பணம் எவ்வளவிருந்தாலும், ஓருவரின் வெறுமையை கடவுளால்தான் நிரப்ப முடியும் என்பதை இந்த மாண்பு மிகு வைத்தியர் லூக்கா அழகாக படம் பிடிக்கிறார்.

சக்கேயு (Ζακχαῖος ட்சக்காய்யோஸ்):
இவர் லூக்கா நற்செய்தியில் மட்டுமே வெளி உலகிற்கு அடையாளம் காட்டப்படுகிறார். இவரைச் சுற்றி பல இறையியல் கோட்பாடுகளை லூக்கா அமைக்கிறார். லூக்காவின் கருத்துப்படி இவர் ஒரு தலைமை சுங்கவரி அறவிடும் ஆயக்காரர் (ἀρχιτελώνης ஆர்கிடெலோனெஸ்). இவர் உரோமையருக்காக தன் மக்களிடம் வரி அறவிட்ட ஆயக்காரர்களின் ஒரு முகாமையாளராக இருந்திருக்கலாம். இவர் சாதாரண ஆயக்காரரைபோல் அல்லாது, மிக முக்கியமான வரிகளான, சுங்க வரி, தனி நபர் வரி, மற்றும் பொருள் சேவை வரி போன்றவற்றை மக்களிடமிருந்து உரோமையருக்காக அறவிட்டிருக்கலாம். இவர்களுடைய வேலையின் நிமித்தமும், அவர்கள் பல வேளைகளில் தம் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்ததினாலும் யூதர்கள் இவர்களை பலமாக வெறுத்தார்கள். தங்கள் நாட்டில் அந்நியர் இருப்பதையே வெறுத்த யூதர்கள் அவர்களுக்கு வரி செலுத்துவதையும் அறவே வெறுத்தார்கள். ஆனால் அவர்கள் இராணுவ ரீதியாக பலவீனமாக இருந்த படியாலும், தங்கள் வீட்டு அரசியலை உரோமையரைக் கொண்டு செய்த படியினாலும், இவர்களால் உரோமையரை நேரடியாக எதிர்க்க முடியாமல், அவர்களுக்கு வேலை செய்யும் இந்த அதிகாரிகளை வெறுத்தனர். இவர்களுடன் சகவாசம் வைப்பதையே பாவமாகவும், காட்டிக்கொடுப்பாகவும் கருதினர். சுருங்கச் சொல்லின் சக்கேயு, யூதர்களின் பார்வையில் படு பாவி.

வ.1: இயேசுவின் பார்வையில் எரிகோ தப்பவில்லை என்பதை லூக்கா காட்டுகிறார். எரிகோ ஒரு புறவின நகர். இந்த நகரின் சுவரைத்தான் யோசுவா போர் செய்யாமலே தகர்த்தார் (பார்க்க யோசுவா 6). யோசுவா இந்த நகருக்குத்தான் தன் ஓற்றர்களை அனுப்பினார். இந்த நகரில் இருந்த இராகாபு என்ற பெண் இவ் ஒற்றர்களை காப்பாறினார் (பார்க்க யோசுவா 1-2). இந்த நகரில் இருந்தவர்களை தீட்டானவர்கள் என்று இஸ்ராயேலர் கருதினர், ஆனால் இயேசுவின் பரம்பரை அட்டவணையில், இந்த ஊரைச் சார்ந்த இதே பெண்மணி இராகாபு முக்கியமான இடத்தில் இருப்பதை அவதானமாக தியானிக்க வேண்டும் (✽காண்க மத் 1,5).

(✽சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு, போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது ஓபேதின் மகன் ஈசாய்.)

வ.2: சக்கேயு யார் என்று லூக்கா குறிப்பிடுகிறார். இவர் வரிதண்டுவோரின் தலைவராகவும், அத்தோடு பெரிய செல்வராகவும் இருக்கிறார். இவருடைய செல்வம் தவறான வழியில் அறவிடப்பட்டதாக லூக்கா குறிப்பிடவில்லை. ஒருவேளை இவர் நேர்மையான வழியில்கூட உரோமையரின் அடிமைச் சட்டத்திற்கு உட்பட்டு, தன் செல்வத்தை சேர்த்திருக்கலாம். வரிதண்டுபவர் என்ற அடையாளமே இவரை பாவிகளின் கூட்டத்தில் சேர்கிறது. அத்தோடு இயேசுவின் பார்வையில் செல்வர்கள் தொலைவில் இல்லை என்பதையும், இயேசு செல்வர்களுக்கு எதிரானவர் இல்லை என்பதையும் இங்கணம் காணலாம். முதல் ஏற்பாட்டில் செல்வம் கடவுளின் கொடையாக இருப்பதை இங்கே நினைவுகூர வேண்டும். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்ற குலமுதுவர்கள் பலர் செல்வர்களாகவே இருந்தனர்.

வ.3: சக்கேயுவின் உடல் அடையாளம் காட்டப்டுகிறது. இயேசுவைச் சுற்றி மக்கள் திரள் எப்போதுமே இருந்திருக்கிறது என்ற உண்மையும் இங்கே புலப்படுகிறது. முதலிலே இயேசுவை பார்க்க விருமபியவர் இவர்தான் அல்லது இயேசுவை சந்திக்க முயற்சி எடுத்தவர் இவர்தான் என்பதை லூக்கா காட்டுகிறார். சில வேளைகளில் உடல் அமைப்புக்கள் மனிதர் விரும்புவதை செய்ய அனுமதிப்பதில்லை என்ற ஒரு இருப்பியல் வாதத்தையும் இங்கே காணலாம்.

வ.4: சக்கேயுவிற்கு இயேசுவின் பாதை நன்கு தெரிந்திருந்தது. ஒரு வேளை இயேசு பல முறை இந்த வழியில் பயணம் செய்திருக்கலாம். சக்கேயு காட்டு அத்திமரத்தில் (συκομορέα சுகோமோரெயா சிக்காமோர், இலத்தீனில் Ficus sycomorus) ஏறுகிறார். குள்ளமானவர் உயரமான இடத்தை அடைகிறார். உயரம் எப்போதும் கடவுளுக்கு அருகில் இருக்கிறது என்ற நம்பிக்கையும் அக்கால மக்களிடத்திலிருந்தது. சக்கேயு மக்களுக்கு முன்பே ஓடிப்போகிறார், இதிலிருந்து அவரின் உற்சாகம் நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. அத்திமரங்கள் ஓக் மரங்களைப் போல் உயரமாக இருந்தன. அவற்றின் கிளைகள் ஐம்பது அடிகளுக்கு மேல்கூட வளரக் கூடடியவை. பாலஸ்தீனாவில் காணப்பட்ட மிகவும் சாதாரண மரங்கள் என்று கூட இவற்றைச் சொல்லாம், நம்மூர் பனை, வேம்பைப் போல். சிக்காமோரின் பழங்கள் மற்றும் பலகையும் மிகவும் பெறுமதியானது.

வ.5: சக்கேயு எதிர்பார்த்தது போல இயேசுவும் அவ்வழியேதான் வருகிறார். அத்தோடு நிற்காமல் இயேசு அண்ணாந்து பார்கிறார். வழமையாக கடவுள் உயரத்திலிருந்து மனிதர்களை குனிந்து பார்ப்பார். ஆனால் இந்த கடவுள் கீழேயிருந்து, மேல் உள்ள ஒரு புறக்கணிக்கப்பட்டவரை அண்ணாந்து பார்க்கிறார். லூக்காவின் கடவுள் வித்தியாசமானவர்.

இயேசுவின் வார்த்தைகளான 'சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும' என்ற வார்ததைகள் கிறிஸ்தவ பாரம்பரியத்தில் மிகவும் முக்கியமானது. இந்தவரிகளில் மட்டுமே பல நூறு பாடல்கள் உள்ளன. தமிழிலும் பல பாடல்கள் இந்த வரியை மையமாகக் கொண்டுள்ளன. வழமையாக மனிதர்கள் கடவுளின் இல்லத்திற்கு செல்வார்கள், இங்கே கடவுள் மனிதரின் இல்லத்தை பார்க்க விளைகிறார். சக்கேயு ஆண்டவரை பார்க்க மட்டும்தான் முயன்றார், ஆனால் ஆண்டவரோ அவர் வீட்டில் தங்கவே முடிவெடுக்கிறார். இஸ்ராயேல் கலாச்சாரத்தில் வீட்டில் தங்குபவர் நண்பர் அல்லது சகோதரர். அவர் அவ்வீட்டில் நிச்சயம் உணவருந்துவார். சக்கேயு என்னும் இந்த நபர் இப்போது கடவுளின் நண்பராக அல்லது சகோதரராக மாறுகிறார்.

வ.6-7:
அனைவரின் முணுமுணுப்பிற்கு எதிராக, சக்கேயு மகிழ்ச்சியோடு இயேசுவை வரவேற்கிறார். யார் இங்கு இயேசுவை வரவேற்கிறார்கள் என்பதே லூக்காவின் சிந்தனை. அவரோடு நடந்தவர்களைவிட, அவரோடு இருக்காத சக்கேயு இந்த போட்டியில் வெற்றி பெருகிறார்.

அனைவரின் முணுமுணுப்பு என்பது இங்கே பலரைக் குறிக்கிறது. முக்கியமாக இயேசுவோடு அவர் என்ன செய்கிறார் என்று விடுப்பு பார்க்க வந்து, அவரை அன்புசெய்யாதவர்களை குறிக்கலாம், அல்லது அவரோடு இருந்த சீடர்களைக் கூட குறிக்கலாம். ஏனெனில் ஒரு உன்னதமான போதகர் உரோமையருக்கு வரி தண்டும் ஆயக்காரரின் வீட்டில் தங்குவது அக்காலத்தில் நிச்சயமாக ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆனால் இந்த ஆச்சரியம் தவறானது என்பதை லூக்கா காட்டுகிறார்.

வ.8: சக்கேயுவின் பாவ பரிகாரம் வார்த்தைப்படுத்தப்படுகிறது.
அ. சக்கேயு எழுந்து நிற்கிறார், அதாவது தன்னுடைய திட்டத்தில் உறுதியாக இருக்கிறார்.
ஆ. உடமைகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்க முன்வருகிறார். இதிலிருந்து இவர்
சொத்துக்கெல்லாம் சொத்தாகிய இயேசுவை சுவீகரிக்க முயல்கிறார் என்று நம்பலாம்.
பணக்காரராகாவும், ஆயக்காரராகவும் இவருக்கு எப்படி, எங்கு எதை பெற வேண்டும் என்பது நன்கு தெரிந்திருக்கும்.

இ. பொய் குற்றமும், பிறர் உடமையை கவர்தலும்: இந்த இரண்டும் பத்துக் கட்டளைகளுக்கு எதிரான மிக முக்கியமான பாவங்கள். இவை நிவர்த்தி செய்யப்படவேண்டியவை. ஆனால் அவற்றை, சட்டங்களையும் தாண்டி நான்கு மடங்காக கொடுக்க சக்கேயு முன்வருவது, அவருடைய உண்மையான மனமாற்றத்தைக் காட்டுகிறது. அத்தோடு சக்கேயு போன்றவர்கள் மற்றவர்களின் செர்த்துக்களை சுரண்டியிருப்பார்கள் என்ற வாதத்தையும் உண்மைப் படுத்துகிறது.

வ.9: இந்த வரிதான் இந்த கதையின் முக்கியமான செய்தி.

அ. ஆண்டவரின் வருகையும், சக்கேயுவின் மனமாற்றமும் மீட்பைக் கொணர்கிறது. σωτηρία சேடேரியா, மீட்பு என்பது இயேசுவின் முக்கியமான பணி. இயேசு என்ற சொல்லிற்கும் மீட்பவர் என்பதுதான் பொருள் (Ἰησοῦς இயேசூஸ், יְהוֹשׁוּעַ ஜெஹோசுவாஹ் - மீட்பவர்). இயேசுவின் மீட்டுப் பணிக்கு சக்கேயு தன் வீட்டை உட்புகுத்தகிறார். யார் ஆபிரகாமின் மக்கள் என்பது யூதர்கள் மட்டில் ஒரு அடையாளமான கேள்வியாக இருந்தது. இந்த ஆபிரகாமின் மக்கட் கூட்டத்தினுள் யாரை சேர்க்க வேண்டும் என்பதை இங்கே இயேசுவே தெரிவுசெய்கிறார். லூக்காவின் பார்வையில் கடவுளின் அருளிருந்தால் யாரும் ஆபிரகாமின் மக்களாகலாம். υἱὸς Ἀβραάμ ஆபிரகாமின் மகன் என்பவர், இஸ்ராயேலின் அனைத்து வரசபிரசாதங்களையும் பெறுபவர், அதனை இங்கு சக்கேயு பெறுகிறார்.

யார் பாவி என்பதை விட, யார் பாவத்தை அறிக்கையிடுகிறார் என்பதே கேள்வியாகிறது. ஆண்டவரின் பார்வையும், சக்கேயுவின் பார்வையும் ஒன்றானதால் சக்கேயு வீட்டிற்குள் இயேசு வந்தார். ஆண்டவரோடு நடந்தாலும்கூட, அவரை வீட்டிற்குள் அழைக்க நாம் தவறலாம். அன்பு ஆண்டவரே எங்கள் வீட்டினுள்ளும் வந்து எங்களோடு தங்கும். எம் பாவங்களை விட்டுவிட உதவிசெய்யும். ஆமென்