இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






பொதுக்காலத்தின் இருபத்திதோராம் ஞாயிறு

முதல் வாசகம்: எசாயா 66,18-21
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 117
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 12,5-7.11-13
நற்செய்தி: லூக்கா 13,22-30




கடவுளுக்கு வீடு கட்டுவது யார்? கடவுளின் பிள்ளைகளுக்கு பெயர் வைப்பவர் யார்? கடவுளின் மக்களென யாவர் அறியப்படுவர்? கடவுளுக்கு நாடுகளோ, இனமோ, மொழியோ கிடையாது அத்தோடு அவர் யாரை விரும்புகிறாரோ அவர்களை தெரிவு செய்கிறார். இப்படியான சிந்தனைகளை ஆழமாக இன்றைய வாசகங்கள் விவரிக்கின்றன.

முதல் வாசகம்
எசாயா 66,18-21

18அவர்கள் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்; பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள். 19அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்; அவர்கள் தர்சீசு, பூல், வில்வீரர் வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள். இந்நாட்டினர் என் புகழ்பற்றிக் கேள்விப்படாதவர்; என் மாட்சியைக் கண்டிராதவர்; அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள். 20அவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலாகக் கொண்டு சேர்ப்பார்கள்; இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின் மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர். 21மேலும் அவர்களுள் சிலரைக் குருக்களாகவும் லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.



எசாயா புத்தகத்தின் கடைசி பத்து அதிகாரங்களை மூன்றாவது புத்தகத்தின் முக்கியமான பகுதி என்று எடுக்கலாம். இந்தப் பகுதியிலே சீயோனின் மாட்சியும் வெட்கக்கேடும் விவரிக்கப்பட்டுள்ளன. அழிந்து போன எருசலேமை கண்ட மக்களுக்கும், இஸ்ராயேலரின் அதிகாரம் பறிக்கப்பட்டு அந்நியரின் ஆட்சிக்குட்படுத்தப்பட்ட எருசலேமை கண்டு அழுத மக்களுக்கும் இந்த அதிகாரங்கள் நம்பிக்கையையும் வித்தியாசமான பார்வைகளையும் நிச்சயமாக கொடுத்திருக்கும். எசாயா புத்தகத்தின் இறுதி அதிகாரமான அறுபத்தாறாம்; அதிகாரம் மிக முக்கியமானது. இந்த பகுதியிலேதான் இஸ்ராயேலின் எதிரிகளுக்கான தண்டனை விவரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இஸ்ராயேலுக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகளும் இங்கே தரப்படுகிறது (ஒப்பிடுக வவ.12-17). ஆனால் 18 வது வசனத்திலிருந்து பிறவினத்தாருக்கும் இஸ்ராயேலின் எதிரிகளுக்குமான வித்தியாசம் அழகாக பிரித்துக்காட்டப்படுகிறது. ஆக இஸ்ராயேல் அல்லாதவர்கள் இஸ்ராயேலின் எதிரிகளாக இருக்க வேண்டிய தேவையுமில்லை அத்தோடு அவர்கள் ஆண்டவரின் மக்கள் கூட்டத்திற்கு வெளியில் இருக்கவேண்டிய தேவையுமில்லை என்பதை ஆசிரியர் காட்டுகிறார். இந்த பகுதி ஆண்டவருடைய வருகையின் போது புதிய வானகமும் புதிய வையகமும் படைக்கப்படும், அத்தோடு சீயோனின் சொந்த பிள்ளைகளில்லாதவர்கள், கடவுளின் பிள்ளைகளாகும் உரிமையைப் பெற்று சகல அந்தஸ்துகளையும் பெறுவதைக் காட்டுகிறது.

வ.18: ஆண்டவர் பிறவினத்தாரின் எண்ணங்களையும் செயல்களையும் அறிந்திருக்கிறார் என்பதிலிருந்து வரலாற்றில் இந்த பிறவினத்தவரின் செயற்பாடுகள் ஆண்டவரின் கட்டுப்பாட்டிலே இருக்கிறது என்பதனையும் விளங்கிக்கொள்ளலாம். இங்கே ஆண்டவரின் இரண்டு செயற்பாடுகள் மையப்படுத்தப்படுகிறது.

அ. ஆண்டவர் அனைவரையும் கூட்டிச் சேர்ப்பார்

ஆ. அனைவரும் ஆண்டவரின் மாட்சியைக் கண்டுகொள்வார்கள்.

ஆண்டவரின் மாட்சியைக் கண்டுகொள்வது என்பது இஸ்ராயேல் மக்களுக்குரிய உரிமையாகக் கருதப்பட்டது. இந்த உரிமை இங்கே மற்றவருடன் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. கடவுளின் மாட்சி என்பது அவருடைய பலத்தை குறிக்கிறது இதனைத்தான் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் கிறிஸ்துவின் மாட்சி என்று கிறிஸ்துவின் பலத்தை குறிக்கின்றனர். இந்த மாட்சியை கண்டு கொள்ளுதல் அவரிடம் ஒருவர் கொள்ளும் நம்பிக்கையையும் அடையாளப்படுத்துகிறது.

வ.19: இஸ்ராயேல் அல்லாதவர்கள் முழு அங்கத்துவத்தை பெற்றுக்கொள்வது மட்டுமன்றி அவர்கள் மறைபரப்பு பணிகளையும் செய்கிறார்கள். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தர்சீசு, பூல், லூது, தூபால், யாவான் மற்றும் தொலைவு தீவு நாடுகள் என்பன தற்போதைய கிரேக்கம் மற்றும் அதனை அண்டிய நாடுகளை குறிக்கின்றன. இவ்வளவு காலமும் கடவுளின் மாட்சியை எடுத்துரைக்கும் பணி கடவுளின் மக்களாகிய இஸ்ராயேலரின் உரிமையாக கருதப்பட்டது இனி அது கடவுள் விரும்பும் எந்த மக்களினத்தினதும் உரிமையாகிறது. அத்தோடு இந்த தெரிவு செய்யப்பட்ட மக்களினம், அனைத்து மக்களினத்திற்கும் கடவுளை அறிவிக்கிறது.

வ.20: இந்த வசனம் இஸ்ராயேல் மக்களின் அகதி வாழ்க்கையை காட்டுகிறது. புலம் பெயர்ந்த இஸ்ராயேல் மக்களின் எதிர்காலம் ஒரு முக்கியமான கேள்வியாக இருந்தது. இந்த புலம் பெயர்ந்தவர்கள் கைவிடப்படமாட்டார்கள், மாறாக அவர்கள் மீட்டுக்கொண்டு வரப்படுவார்கள் ஆனால் அதனை செய்யப்போகிறவர்கள் புறவின மக்கள் என்னும் இந்த சிந்தனை மிகவும் வீசேடமானது. அகதிகளாகவும் ஏதிலிகாளவும் அடிமைகளாகவும் எருசலேமைவிட்டு விரட்டப்பட்ட இஸ்ராயேல் இனம் தங்களுடைய புறவின நண்பர்களால், குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் மேல் ஏற்றப்பட்டு, ஆண்டவருக்கு படையல்களாக கொடுக்கப்படுவது போல் எருசலேமிற்கு கொண்டுவரப்படுவார்கள் என்பதன் வாயிலாக இஸ்ராயேலின் அகதி வாழ்க்கை முடிவிற்கு வரும் என்கிறார் ஆசிரியர். வரலாற்றில் பல தடவைகள் இந்த இறைவாக்கு நிறைவேறியிருக்கிறது. பபிலோனியரின் வீழ்ச்சிக்குப் பின்னர், பாரசீகர் தங்கள் தேவைக்காக இஸ்ராயேலரை எருசலேம் திரும்ப அனுமதியளித்தனர். கிரேக்கரின் வீழ்ச்சிக்குப் பின்னர் உரோமையரும் இதனைத்தான் செய்தனர். நாசிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதிகமான நாடுகள், இஸ்ராயேலர் சொந்த நாடு திரும்புவதை ஊக்குவித்தனர். இந்த இறைவாக்கு, அகதிகளாக வாழ்ந்து தாயகம் திரும்ப வழிதேடும் ஈழ மக்களை கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார் என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

வ.21: புறவினத்தவர் இஸ்ராயேலரை கடவுளுடன் எருசலேமில் இணைப்பது மட்டுமன்றி, இஸ்ராயேல் மக்கள் தங்களின் குருத்துவ வாழ்வை மீண்டும் பெற்றுக்கொள்வர் என்பதுமாகும், அதாவது அவர்களின் பழைய உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டு, மோசே வாயிலாக கடவுள் வாக்களித்த குருத்துவ சுவிகாரக் பணி மீண்டும் கொடுக்கப்படுகிறது. இந்த வசனம் மிகவும் முக்கியமானது. குருத்துவம் அக்காலத்தில் கடவுளோடு ஒரு மக்களினம் கொள்ளும் உறவைக் காட்டியது, அது அந்நாட்டின் வளமான, அமைதியான சூழ்நிலையை குறிக்கிறது. குருத்துவம் மீண்டும் ஏற்படுத்தப்படுதல் என்பது இப்படியான சுமுகமான உறவு மீண்டும் ஏற்படுத்தப்படுகிறது என்பதை வலியுறுத்துகிறது. ஆக இனி இஸ்ராயேல் மக்கள், புலம் பெயர்ந்த அகதிகள் அல்ல மாறாக அவர்கள் தெரிவு செய்யப்பட்ட குருத்துவ மக்களினம்.

புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் பிற்காலத்தில் கிறிஸ்தவர்களின் சீடத்துவத்தை முன்னிலைப்படுத்த இப்படியான உருவகங்களை கையாள்வதைக் காணலாம் (ஒப்பிடுக் 1பேதுரு 2,9⭐︎).

(⭐︎ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி).



பதிலுரைப் பாடல்
திருப்பாடல்:117

1பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்!
2ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப்பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா!


திருப்பாடல்கள் புத்தகத்திலுள்ள மிகவும் சிறிய பாடல் இதுவாக இருந்தாலும், புகழ்சிப் பாடலுக்குரிய பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சாதாரணமாக புகழ்சிப்hடல்கள் முதலில் மக்களை, கடவுளுக்கு புகழ்பாட அழைக்க வேண்டும், பின்னர் அந்த அழைப்பிறக்கான காரணத்தை விளக்க வேண்டும். இந்த இரண்டையும் இந்த சிறிய இரண்டு வரிகளில் காணலாம்.

வ.1: முதலாவது வாசகத்தைப் போலவே இந்த பாடலும் பிறவினத்தவர்கு கடவுளைப்போற்றும் உரிiமையையும், கடமையையும் கொடுக்கிறது. பிற இனத்தாரே என்பது எபிரேய மூல மொழியில், மக்களினங்களே அல்லது மக்கள் கூட்டமே என்றுதான் உள்ளது.

பிறவினத்தாரை எபிரேயம் גּוֹיִ֑ם கோயிம் என்றழைக்கிறது. இதற்கு மக்களினம், நாடுகள், இஸ்ராயேலர் அல்லாதவர்கள் என்ற பல பொருள் உள்ளது. விசேடமாக, சில வேளைகளில் விவிலியத்தில் இது இஸ்ராயேலரையும் குறிக்கிறது. இந்த முதலாவது வரி எபிரேய கவிநடையின் மிக முக்கிய வடிவமான 'இணைச் செயற்பாட்டிலே' (ஒத்தகருத்துடன் திருப்பிக் கூறுதல்) அமைக்கப்பட்டுள்ளது.

הַֽלְלוּ אֶת־יְ֭הוָה כָּל־גּוֹיִם ஹல்லூ எட் அதோனாய் கோல் கோயிம்

(அனைத்து நாடுகளே கடவுளைப் புகழுங்கள்):

שַׁבְּחוּהוּ כָּל־הָאֻמִּֽים׃ ஷப்பேஹூஹூ கோல் ஹஉம்மிம்

(அனைத்து மக்களினங்களே அவரைப் போற்றுங்கள்!)

இந்த வரியிலிருந்து கடவுளின் மக்களாக இருப்பதற்கு எந்த இன அடையாளங்களும் தேவையில்லை என்பதனை விளங்கிக்கொள்ள முடியும். அத்தோடு கடவுள்தான் அனைத்து மக்களின் இறைவன் என்பதும் புலப்படுகிறது.

வ.2. இந்த இரண்டாவதும் இறுதியானதுமான வசனம், ஏன் அனைத்து மக்களும் கடவுளைப் புகழ வேண்டும் என்ற அழைப்பை விளக்குகின்றது. ஆசிரியர் அதற்கு இரண்டு முக்கியமான காரணங்களை முன்வைக்கிறார்.

அ. כִּי גָבַר עָלֵינוּ ׀ חַסְדּוֹ - ஏனெனில் அவரின் இரக்க-அன்பு எங்கள் மேல் பலமாயுள்ளது.

ஆ. וֶֽאֱמֶת־יְהוָ֥ה לְעוֹלָ֗ם - அத்தோடு கடவுளின் உண்மைத்தன்மை என்றென்றும் உள்ளது.

הַֽלְלוּ־יָהּ - ஹலேலூ யாஹ் -

(ஆகவே) அனைவரும் அவரைப் புகழுங்கள்.

இந்த இரக்கம் கலந்த அன்பும், உண்மைத்தன்மையும் கடவுள் தன்னைப்பற்றி மோசேக்கு வெளிப்படுத்திய முக்கியமான பண்புகள் (காண்க வி.ப 34,6⭐︎)

(⭐︎அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில், 'ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்;, சினம் கொள்ளத் தயங்குபவர், பேரன்பு மிக்கவர், நம்பிக்கைக்குரியவர்...')

இப்படியாக இந்த திருப்பாடல் சிறியதாக இருந்தாலும் முக்கியமான நற்செய்தியை இஸ்ராயேல் மக்களுக்கும் அனைத்து மக்களினங்களுக்கும் பறைசாற்றுகிறது. அத்தோடு இந்தப்பாடல் இக்கால சந்ததியினரையும் தாண்டி இனிவரவிருக்கும் மக்களினங்கள் அனைத்தையும் அரவணைப்பதாகவும் உள்ளது. நிலங்களாலும், இனத்தாலும், மொழியாலும், மதத்தாலும் மனிதத்தை இழந்துள்ள இந்த நோய்வாய்பட்டுள்ள உலகிற்கு இந்தப்பாடல் நல்ல தொரு ஒற்றுமை மருந்து.



இரண்டாம் வாசகம்
எபிரேயர் 12,5-7.11-13

5தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்; 'பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்து போகாதே.' 6'தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.' 7திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ? 11இவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர். 12எனவே, 'தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.' 13'நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்.' அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்.

கடந்த வாரத்தின் தொடர்ச்சியாகவே இந்த வாரமும் 'பொறுமைக்கான அழைப்பு' என்ற பகுதியிலிருந்து வாசகம் எடுக்கப்பட்டு;ள்ளது. ஏன் கடவுளின் மக்கள் வெறுப்புக்களையும், காட்டிக்கொடுப்புக்களையும், துன்பங்களையும் சந்திக்கவேண்டியுள்ளது என்ற கேள்விகளுக்கு விடையாக இது அமைவதனைக் காணலாம். எபிரேயர் நூல், அதிகமான புதிய ஏற்பாட்டு நூல்களைப்போல துன்புற்ற கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை தருவதாகவும், அவர்களது விசுவாசத்தை காப்பதாகவும் அமைந்ததை இங்கே நினைவுகூர வேண்டும்.

வவ. 5-6: இந்த வசனங்களை ஆசிரியர் நீதிமொழிகள் 3,11-12⭐︎ இருந்து மேற்கோள் காட்டுகின்றார்.

(⭐︎11பிள்ளாய்! ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாமென்று தள்ளி விடாதே அவர் கண்டிக்கும்போது அதைத் தொல்லையாக நினையாதே. 12தந்தை தன் அருமை மகனை கண்டிப்பதுபோல், ஆண்டவர் தாம் யாரிடம் அன்புகொண்டிருக்கின்றாரோ அவர்களைக் கண்டிக்கின்றார்.)

இப்படியாக இந்த வரிகள், இஸ்ராயேலுடைய கடவுளின் பிள்ளைகள் என்ற அடையாளத்தை கிறிஸ்தவர்கள் பெற்றுள்ளார்கள் என்பதனை வலுயுறுத்துகின்றன. அத்தோடு கிறிஸ்தவர்களின் துன்பங்கள் சாதாரணமானதல்ல மாறாக தேவையானதொன்று என்றும் வாதாடுகின்றன. இந்த வரிகளில் சில முக்கியமான வாதங்களை ஆசிரியர் முன்வைக்க விரும்புகிறார்.

அ. கடவுள் பிள்ளைகளிடம் பேசுவது போல கிறிஸ்தவர்களிடமும் பேசுகிறார் என்பதை இவாகள் மறந்துவிட்டார்கள் என்கிறார்.

ஆ. கடவுளின் கண்டிப்பை வேண்டாம் என்று கிறிஸ்தவர்கள் தள்ளிவிடக்கூடாது.

இ. கிறிஸ்தவர்கள் மனந்தளர்ந்து போகக்கூடாது.

ஈ. ஒரு அன்பான தந்தையைப்போல், கடவுளுக்கும் தம் அன்பு மக்களை திருத்தும் அனைத்து உரிமையும் உள்ளது.

வ. 7: துன்பங்களைக் தாங்கிக் கொண்டு பொறுமையோடு விசுவாசத்தில் இருத்தல் என்பது முக்கியமான பிரச்சனையாக முதல் நூற்றாண்டுகளில் இருந்ததை இந்த வரியில் கண்டுகொள்ளலாம். முதல் ஏற்பாட்டில் கடவுளிடம் இருந்து பிரிந்து சென்றதனால் இஸ்ராயேல் மக்கள் கண்டிப்புடன் திருத்தப்பட்டார்கள், ஆனால் புதிய ஏற்பாட்டில் கடவுளுடன் இருப்பதனால் வெறுப்புக்குள்ளாகிறார்கள், இதனால் மனச்சோர்வு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த வெறுப்புக்களை முதல் ஏற்பாட்டு கண்டிப்புடன் ஒப்புவமை வாயிலாக ஒப்பிடுகிறார் ஆசிரியர். இவை இரண்டும் இரண்டு விதமானவை. கிறிஸ்தவர்கள் எப்படியான துன்பங்களை அனுபவித்தனர் என்பதனை இங்கு காணமுடியாது ஆனால் அவற்றை வரலாற்று சுவடுகளிலிருந்து கண்டுகொள்ள முடியும். இக்காலத்தில் அவர்கள் உடலியல் ரீதியான துன்பத்தையா அல்லது உளவியல் ரீதியான துன்பத்தையா அனுபவித்தார்கள் என்பதனை காண்பது கடினம். இரண்டு வகையான துன்பங்களாகவும் இருந்திருக்கலாம்.

இன்றைய நவீன 'சுதந்திர உலகில்' இப்படியான துன்பங்களின் ஆன்மீகம் கேலிக்குறியாகவே பார்கப்படும். இன்றைய தந்தையர்க்கு தம் பிள்ளைகளை திருத்த நேரமோ, அன்போ, தைரியமோ சுதந்திரமோ மிக குறைவாகவே உள்ளது. இன்றைய பிள்ளைகளும் தம் தந்தையர்களுக்கு அந்த பொறுப்பை கொடுக்க நேரம் மிக குறைவாகவே உள்ளது. இன்று பிள்ளைகளை எப்படியாயினும் திருப்திப்படுத்தும் தந்தையர்களும், தந்தையர்களை ஏமாற்றும் பிள்ளைகளுமே அதிகமாக உள்ளனர், அதனை அவர்கள் மெய்யறிவு அல்லது கெட்டித்தனம் என நினைப்பதை என்னவென்று சொல்வது.

வ. 11: துன்பம் ஒரு மறைபொருள் என்பதனை இங்கே காணலாம.; துன்பததை யாரும் இலகுவாக விரும்பமாட்டார்கள் அல்லது ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த நியதி இன்று மட்டுமல்ல அக்கால திருச்சபையிலும் இருந்ததை ஆசிரியர் பதிவு செய்கிறார். ஆனால் இங்கே ஆசிரியர் எதிர்கால சிந்தனையில் கூறுவது வருங்கால வாழ்வில் என்பதைவிட இக்கால வாழ்வியலையும் குறிக்கிறது என்பதனையும் நோக்க வேண்டும். தற்கால துன்பம் இரண்டு விதமான கனிகளைத் தருவதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

அ. அமைதியான வாழ்வு: (εἰρηνικός எய்ரேனிகோஸ்) ஆசிரியர் இந்த எய்ரோனிக்கோஸ் வாழ்வை மறுவுலகிற்கு மட்டுப் படுத்துகிறார் என்று சொல்ல முடியாது என நினைக்கறேன். அமைதியான வாழ்வு இவ்வுலகையும் சார்ந்ததாக இருக்கவேண்டும். ஏனெனில் கிறிஸ்து அதனையே இவ்வுலகிலும் தரவந்தார். இந்த நம்பிக்கை திருத்தூதர்களின் முக்கியமான வாதங்களில் ஒன்றாக இருந்தது. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சீடத்துவம் மற்றவர்களுக்கு சவாலாக இருந்த படியால் கிறிஸ்தவர்களின் உலக அமைதியை பறித்தது. இது இன்று உலகில் காணப்படும் மயக்கமான அமைதி போன்றதல்ல.

ஆ. நீதியான வாழ்வு: (δικαιοσύνη திகாய்யோசுனே) ஆசிரியர் இந்த திகாய்யோசுனே வாழ்வை விரைவில் சீடர்கள் அனுபவிப்பார்கள் என்று நம்பிக்கை தருகிறார்.

வவ. 12-13: இந்த வரிகள் எசாயா 35,3-4 இல் இருந்து எடுக்கப்பட்டுள்ளன (3தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள். 4உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்). எசாயா புத்தகத்தின் அழகான பகுதிகளில் மிக ஒன்றான 'தூய வழி' 35,1-10 இங்கே கோடிடப்படுவது மிகவும் ஆழமான அர்த்தத்தை ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு கொடுத்திருக்கும். புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் தங்களது தேவைக்கேற்றபடி முதல் ஏற்பாட்டு வரிகளை அடையாளப் படுத்தி தேவையானவற்றை பாவிக்கும் இந்த முறையை கடைப்பிடித்ததனை இங்கனம் கண்டு கொள்ளலாம். அத்தோடு இங்கே எசாயாவைப்போல ஆசிரியர் முன்வைக்கும் உறுதிப்படுத்தல்கள் நம்பிக்கை சார்ந்த உறுதிப்படுத்தலாகவே இருந்திருக்க வேண்டும். இங்கே பாவிக்கப்படும் கரங்கள், கால்கள் மற்றும் கால் மூட்டுக்கள் என்பன அடையாள உருவகமாகவே இருந்திருக்க வேண்டும்.


நற்செய்தி வாசகம்
லூக்கா 13,22-30

22இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித்துக்கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். 23அப்பொழுது ஒருவர் அவரிடம், 'ஆண்டவரே, மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும்தானா?' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: 24'இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். 25'வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்' என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது' எனப் பதில் கூறுவார். 26அப்பொழுது நீங்கள், 'நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே' என்று சொல்வீர்கள். 27ஆனாலும் அவர், 'நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள்' என உங்களிடம் சொல்வார். 28ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது அழுது அங்கலாய்ப்பீர்கள். 29இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். 30ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.'

இந்தப் பகுதியும் எருசலேம் நோக்கிய பயணத்தின் போது வழங்கப்பட்ட நீண்ட உரைகளின் தொகுப்பிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது. அதிலே முக்கியமாக பதின்மூன்றாம் அதிகாரத்தின் பிற்பகுதி, கடவுளின் மீட்புத் தன்மையைப் பற்றி படிப்பினைகளை முன்வைக்கிறது.

வ.22: லூக்கா, இயேசு எருசலேமை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார் என்று ஒரு வினையெச்சத்தை பாவிப்பது இது ஒரு நீண்ட பயணம் என்ற ஒரு அடையாள அர்த்தத்தைக் கொடுக்கிறது (διαπορεύομαι - ஊடாக பயணம்செய்). எருசலேமை நோக்கிய ஆண்டவரின் பயணம் முதல் ஏற்பாட்டில் இறைவாக்கினர்களின் எருசலேம் நோக்கிய பயணத்தை நினைவூட்டுகிறது.

இயேசுவின் பயணம் எருசலேமை நோக்கியதாக இருந்தாலும் அவர் ஊர்களில் கற்பிப்பதனை கைவிடவில்லை என்பதனையும் இங்கே நோக்க வேண்டும்.

வ.23: இங்கே லூக்கா அறிமுகப்படுத்துகின்ற இந்த 'ஒருவர்' யார் என்று தெரியவில்லை. ஒருவேளை இவர் சீடாக்ளில் ஒருவராகவும் இருந்திருக்கலாம் அல்லது முக்கியமில்லாத ஒரு பாத்திரமாககூட இவர் இருந்திருக்கலாம். ஆனால் இவரின் கேள்வி இஸ்ராயேலரின் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றது. மீட்பு பெறுகிறவர் யார்? அதனை தீர்மானிக்கிறவர்கள் யார்? மீட்பை இனமோ, பிறப்போ, மொழியோ, மதமோ, நாடோ தீர்மானிக்க முடியாது அதனை கடவுளும், மீட்பை பெறுகிற மனிதருமே தீர்மானிக்க வேண்டும். கடவுளின் பக்கத்தில் அவர் ஏற்கனவே தீர்மானித்து விட்டார். இனி மனிதர்தான் தமக்கு தாமே தீர்மானிக்க வேண்டும். பழைய யூத சிந்தனையான, பாவிகள், யூதரல்லாதவர்கள், கைவிடப்பட்டவர்கள் மீட்படையார் என்ற வாதத்தை லூக்கா உடைக்கிறார்.

வ.24: ஒடுக்கமான வாயில் என்பது ஒர் அடையாளச் சொல் (στενῆς θύρας ஸ்டேநேஸ் தூராஸ்). அக்காலத்தில் வீடுகளில் இருந்த ஒடுக்கமான வாயில் விருந்தாளிகளுக்கும் அழைக்கப்பட்டோருக்கும் மட்டுமே திறந்து விடப்பட்டது. இது ஒடுக்கமாக இருந்த படியால் பாதுகாப்பானதாகவும், விசேடமானதாகவும் இருந்தது. விசேட விருந்துகளுக்காக திறக்கப்படும் இந்த வாயில், விருந்து தொடங்கியதும் மூடப்பட்டது. இறையரசும் இப்படிப்பட்டதே அனைவருக்காகவும் திறந்திருந்தாலும், தகுதியற்ற சீடர்களுக்கு இது மூடப்படும், அவர்கள் யாராக இருந்தாலும்.

வ.25: வீட்டு முதலாளி இங்கே கடவுளை அடையாளப் படுத்துகிறார். அழைக்கப்பட்டவர்கள் என்ற ஒரே நோக்கத்திற்காக இவ்விடத்திற்குள் நுழையலாம் என்றில்லை. முயற்சி செய்கிறவர்கள் மட்டுமே நுழைவார்கள். இந்த முயற்சிக்கு அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். அதிலே எந்த விதமான வேற்றுமைகளும் பாராட்டப்டவில்லை. தானியங்கி நுழைவு இறையரசில் கிடையாது என்பதனை லூக்கா விளக்குகிறார். விருத்தசேதனம் செய்த யூதர்கள் எவ்வாறு நேரடியாக கடவுளை அடையமுடியாதோ அதே போல திருமுழுக்கை சடங்காக பெற்றதனை மட்டும் காரணமாக காட்டி விண்ணரசை அடைய முடியாது என்ற ஆழமான சிந்தனை இங்கே பொதிந்துள்ளது. இரண்டாம் வாசகத்தைப் போலவே இதுவும் கிறிஸ்தவர்களின் துன்பத்திற்கு அர்த்தம் கொடுக்க முயல்கிறது என எடுக்கலாம்.

வ.26: உணவு உண்ணல், கொடுத்தல் மற்றும் செவிமடுத்தல் என்பன குருவுடன் ஒரு சீடர்க்கான நல்லுறவைக் காட்டுகின்றன. செமித்திய சமுதாயத்தில் இது சகோதரத்துவத்தையும் காட்டுகிறது. ஆனால் இந்த சீடத்துவமோ அல்லது சகோதரத்துவமோ, முயற்சியும் பின்பற்றலும் இல்லாவிட்டால் பொய்த்துவிடும் என்கிறார் லூக்கா.

வ.27: இந்த உறவு பொய்ப்பது மட்டுமல்ல அத்தோடு மேற்குறிப்பிடப்பட்டுள்ள சீடத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் இழக்கக்கூடிய ஆபத்தினையும் ஏற்படுத்தும் என பயமுறுத்துகிறார் லூக்கா. இங்கே இயேசு இரண்டு விதமான அடையாளங்களை இப்படியானவர்களுக்கு முன்வைக்கிறார்.

அ. அவர்களின் இடம் இயேசுவிற்கு தெரியாது - அதாவது அவர்களின் பூர்வீக அடையாளங்களால் இனி பயனில்லை.

ஆ. அவர்கள் இனி தீங்கு செய்பவர்களாக காணப்படுகிறார்கள் - அதாவது சீடர்களாகவும், சகோதரர்களாகவும் இருந்தவர்கள், முயற்சியின்மையினால் தீயவர்களாகிறார்கள். அத்தோடு கடவுளுக்கு அருகிலிருக்கும் இடத்தையும் இழக்கிறார்கள்.

வ.28: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு மற்றும் இறைவாக்கினர்களை உதாரணம் காட்டி பல வேளைகளில் பிழைகளும், சோம்பல் தனங்களும், இயேசுவை ஏற்காத தன்மையும் நியாயப்படுத்தப்பட்டது. இந்த முற்குறிப்பிட்பட்டவர்களின் இன உறவோ அல்லது நில உறவோ அவர்களை ஏற்புடையவராக்காது, மாறாக ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கைதான் மிகவும் முக்கியமானது என்கிறார் இயேசு. அத்தோடு முன்னோர்கள் கடவுளுக்கு அருகில் இருப்பதையும் அவர்களின் வழிமரபினர்க்கு அது மறுக்கப்படுவதும் மிக பயங்கரமான துன்பத்தைக் கொடுக்கும். யூதர்கள் எப்படி தங்கள் முன்னோர்களை சாட்டாக காட்ட முடியாதோ அதே போல கிறிஸ்தவர்களும் தங்கள் புனிதர்களை சாட்டாக காட்ட முடியாது.

ஈழத் தமிழர்களும் நமது கடந்த கால வீர மக்களைப் பற்றி பேசிப் பேசி அனுதாபங்களை தேடுவதை விட்டுவிட்டு, அவர்களின் நல்வாழ்வை பின்பற்றுவதே நன்மைதரும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

வ.29-30: இறையாட்சி என்பது உலக வரைபடங்களுக்கு உட்பட்ட ஒர் இன மக்களுக்குரியதல்ல மாறாக அது அனைவருக்குமுரியது என்பதை இவ்வரிகள் காட்டுகின்றன. நான்கு திசைகள் இங்கே முழு உலகையும் உள்ளடக்க பாவிக்கப்பட்டுள்ளன. முதன்மையானவர் என்பவர் இங்கே யூத மக்களையோ அல்லது முதல் கிறிஸ்தவர்களையோ குறிக்கலாம்.

இயேசுவிற்கு முதன்மையோ கடைசியோ கிடையாது.
அவர்க்கு அனைவரும் சமனானவர்களே.
வெளி அடையாளங்கள் அல்ல
மாறாக முயற்சியும் நம்பிக்கையுமே ஒருவரை இயேசுவின் சீடராக்குகிறது.
கிறிஸ்து, கிறிஸ்தவத்தை விட பெரியவர்,
ஒருவேளை பொய் கிறிஸ்தவர்களை விட
நல்ல, நேர்மையான கிறிஸ்துவை அறியாதவர்கள், அவர் சீடராகலாம்.
அன்பு ஆண்டவரே!
உம்மை அடையாளங்களில் மட்டுமல்ல இந்த வாழ்விலும் வாழ வரம் தாரும். ஆமென்.