இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






தவக்காலம் நான்காம் வாரம்

முதல் வாசகம்: 1சாமுவேல் 16,1.4.6-7.10-23
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 23
இரண்டாம் வாசகம்: எபேசியர் 5,8-14
நற்செய்தி: யோவான் 9,1-41


முதல் வாசகம்
1சாமுவேல் 16,1.4.6-7.10-23

1ஆண்டவர் சாமுவேலை நோக்கி, 'இஸ்ரயேலின் அரசராகச் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறக்கணித்ததை நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கம் கொண்டுடாடுவாய்? உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில் அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்' என்றார். 4ஆண்டவர் கட்டளையிட்டவாறு சாமுவேல் செய்த பின் பெத்லகேமுக்குச் சென்றார். அப்பொழுது அவ்வூரின் பெரியோர்கள் அஞ்சி நடுங்கி அவரை எதிர் கொண்டு வந்து, உங்கள் வருகையின் நோக்கம் சமாதானம் தானே' என்று கேட்டனர். 6அவர்கள் வந்தபோது அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும் 'என்று எண்ணினார். 7ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நான் அவனைப் புறங்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்' என்றார். 10இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைசச் சாமுவேல் முன்பாகக் கடந்துபோகச்செய்தார். இவர்களையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவிலை' என்றார் சாமுவேல். 11தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து 'உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?' என்று கேட்க, 'இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருகிறான்' என்று பதிலளித்தார் ஈசாய். அதற்கு சாமுவேல் அவரிடம், 'ஆளனுப்பி அவனை அழைத்து வா ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்' என்றார். 12ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றமுடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம், 'தேர்ந்துகொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!' என்றார். 13உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப் பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்கு புறப்பட்டுச் சென்றார். 14ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது. 15அப்பபொழுது சவுலின் பணியாளர்கள் அவரிடம், ஐயா, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம்மைக் கலக்கமுறச் செய்கிறதே! 16உம் முன் நிற்கும் உம் பணியாளர்களாகிய நாங்கள் யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை அழைத்து வர எங்களுக்குக் கட்டளையிடும்! ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம் மீது இறங்கும் பொழுது அவன் யாழ் மீட்டுவான்! நீரும் நலமடைவீர் என்றனர். 17எனவே சவுல் தம் பணியாளரிடம் யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை கண்டுபிடித்து என்னிடம் அழைத்து வாருங்கள்' என்றார். 18பணியாளர்களில் ஒருவன் இதோ பெத்லகேமைச் சார்ந்த ஈசாயின் மகனைப் பார்த்தேன்; அவன் யாழ் மீட்டுவதில் வல்லவன்; வீரமுள்ளவன்; போர்த்திறன் பெற்றவன்; பேச்சுத் திறன் உடையவன்; அழகானவன்; மேலும் ஆண்டவர் அவனோடு இருக்கிறார்' என்றான். 19அதைக் கேட்ட சவுல் ஈசாயிடம் தம் தூதர்களை அனுப்பி 'ஆட்டு மந்தையை மேய்க்கும் உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்பும் என்று தெரிவித்தார். 20அதைக் கேட்ட ஈசாய் கொஞ்சம் அப்பத்தையும் ஒரு தோற்பை நிறைய திராட்சை இரசத்தையும் ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கழுதை ஒன்றின் மேல் ஏற்றி தம் மகன் தாவீது மூலம் சவுலுக்கு அனுப்பினார். 21தாவீது சவுலிடம் வந்தவுடன் அரசவைப் பணியில் சேர்ந்து விட்டார். சவுல் அவர் மீது மிகவும் அன்பு கொண்டு அவரை தம் படைக்கலன்கொண்டு தாக்குவோனாக நியமித்தார். 22தாவீது என் அவையிலேயே இருக்கட்டும்; ஏனெனில் என் கண்களில் அவனுக்கு தயவு கிடைத்துள்ளது' எனறு சவுல் ஈசாயிடம் சொல்லியனுப்பினார். 23அதன் பின் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மீது இறங்கிய போதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார். தீய ஆவியும் அவரை விட்டு அகலும்; சவுலும் ஆறுதலடைந்து நலமடைவார்.

சவுல் இஸ்ராயேலின் முதலாவது அரசர், அவரை கடவுள் தாமே பெயர் சொல்லி அழைத்தார். கிஷ்ஷின் மகனான இவர் பென்ஞமின் குலத்தை சார்ந்தவர் (காண்க 1சாமு 9). இவருடைய ஆரம்ப நாட்கள் மிகவும் நேர்முகமாகவே இருந்தது. தன்னுடைய தந்தையின் தொலைந்த கழுதைகளை தேடிய இவர், கடவுளின் இறைவாக்கினர் சாமுவேலினால் கண்டுபிடிக்கப்படுகிறார். இவருடைய அபிசேகத்தின் பின்னர் இவர் தூய ஆவியைப் பெற்று பரவசப்பேச்சும் பேசுகிறார். பிலிஸ்தியரின் அடிமைத்தனத்தை போக்க சவுல் அதிகமாக பாடுபட்டதாக விவிலியம் காட்டுகிறது. சவுலுடைய பிற்காலம் நேர்முகமாக அமையவில்லை, அவர் கடவுளின் பேச்சை கேட்காதவராகவும், தான் விரும்பியபடி நடப்பவராகவும் காட்டப்படுகிறார், இதனால் அவர் கடவுளால் கைவிடப்பட்டவராகிறார். சாமுவேலும் சவுலை விட்டு அகன்றுவிடுகிறார். சவுலுடைய வீழ்ச்சி தாவீதினுடைய எழுச்சியோடு ஒப்பிடப்படுகிறது. சாமுவேல் புத்தகங்களும், குறிப்பேடு புத்தகங்களும் சவுலுடையதும் தாவீதினுடையதும் வரலாற்றை வித்தியாசமாக கோணங்களில் ஒப்பிடுகின்றன. குறிப்பேடு புத்தகம் தாவீதின் மாட்சியை சற்று நேர்முகமாக காட்டுவது போல உள்ளது. பெஞ்சமின் குலத்தாருக்கும் யூதா குலத்தாருக்கும் இடையில் மறைமுகமாக போட்டி பூசல்கள் நிலவியிருப்பதை இந்த சவுல் தாவீது போன்ற பாத்திரங்கள் காட்டுகின்றன என்பது சில விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. இன்றைய வாசகம் தாவீதின் அழைத்தலை விவரிக்கின்றது.

வ.1: இந்த வசனத்தில் சாமுவேல் மற்றும் சவுலுக்கிடையிலிருந்த நட்பு புலப்படுகிறது. கடவுள்தான் சவுலைத் தெரிவு செய்யதார், இப்போது அவரே சவுலை விலக்கிவிடுகிறார். இது சாமுவேலை துன்பமடைய வைக்கிறது என்கிறார் ஆசிரியர். சாமுவேலின் கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டுபோகச் சொல்கிறார் கடவுள். இந்த கொம்பு (קֶרֶן), மாடு அல்லது ஆட்டினுடையதாக இருந்தது, இது பல தேவைகளுக்காக பயன்பட்டது. கொம்பு பலத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த கொம்பினுள் எண்ணெய் நிரப்பப்பட்டு பல தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது. அத்தோடு முதன் முறையாக சாமுவேல் புத்தகத்தில் ஈசாயின் பெயர் அறிமுகமாகிறது. இவருடைய புதல்வரில் ஓருவர் அரசராக வருவார் என்பது சொல்லப்படுகிறது, ஆனால் அவர் யார் என்று சொல்லப்படவில்லை.

வவ.2-3: சாமுவேலின் அச்சம் காட்டப்பட்டுள்ளது. சாமுவேல் இறைவாக்கினராக இருந்தாலும், அரசர் சவுல் பலமிகக்வராக இருந்திருக்கிறார் என்பது புலப்படுகிறது. ஒரு அரசர் இருக்கின்ற போது இன்னொருவரை அரசராக தெரிவு செய்வது, அரசருக்கு எதிரான கலமாக கருத்தப்படும், இதற்காக இறைவாக்கினர் நிச்சயமாக தண்டிக்கப்படுவார். இதற்கு பதிலை தருகிறார் கடவுள். கடவுளுக்கு பலியிடுவதுதான் இறைவாக்க்கினரின் நோக்கம் என்பது போல ஈசாயிடம் செல்லச் சொல்கிறார் கடவுள். இந்த பலிக்கு ஈசாய் வருகின்ற போது அபிசேக நிகழ்வை நடத்தவும் சொல்கிறார். கடவுளுக்கு பலிசெலுத்துவதை சவுலால் தடுக்க முடியாது, அத்தோடு சாமுவேலும் பாதுகாக்கப்படுவார். அதே வேளை அபிசேகம் செய்யப்படவேண்டியவரை கடவுள் தான் காட்டுவதாக கூறுவது, இஸ்ராயேலின் கடவுள் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறவர் என்பது புலப்படுகிறது.

வ.4: ஊர்ப் பெரியவர்களின் கேள்வி பல கோணங்களில் கேள்விகளை எழுப்புகின்றது. இறைவாக்கினர்களின் வருகை அவதானமாக நோக்கப்படுகிறது. இவர்களின் கேள்வியிலிருந்து, இறைவாக்கினர்கள் சாதாரணமாக ஊர்களுக்குள் செல்வதில்லை என்பது புலப்படுகிறது. வ.6: சாமுவேல் ஈசாயின் மூத்த மகன் எலியாபை கண்டு அவர்தான் கடவளின் அபிசேகத்தை பெறுபவர் (מְשִׁיחֽוֹ) என நினைக்கிறார். ஒருவேளை இவர் மூத்தவர் என்பதனாலும் அல்லது அவருடைய தேக ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டதாலும் இவரை அவ்வாறு சாமுவேல் நினைத்திருக்கலாம்.

வ.7: கடவுளின் பார்வையும், மனிதரின் பார்வையும் இரண்டு வித்தியாசமான பார்வைகள் என்பது புலப்படுகிறது. மனிதர் உடலின் தோற்றங்களை அவதானிக்கின்றனர் ஆனால் கடவுள் மனிதரின் இதயத்தை நோக்குகின்றார் என இந்த வரி காட்டுகின்றது. எபிரேய விவிலியம், மனிதர் கண்களைப் பார்க்கின்றனர் ஆனால் கடவுள் இதயத்தை பார்க்கிறார், என்கிறது. இங்கே வெளித் தோற்றங்களைக் குறிக்க கண்கள் (לַעֵינַ֔יִם) என்ற சொல் பாவிக்கப்படுகின்றது.

வவ.8-9: ஈசாயின் இரண்டாவதும் மூன்றாவதுமான புதல்வர்கள், அபினதாப் மற்றும் சம்மாகு போன்றவர்களையும் கடவுள் நிராகரிப்பது காட்டப்படுகிறது. இந்த வரியும், மனிதர்களின் தெரிவு, கடவுளின் தெரிவு இல்லை என்பதைக் காட்டுகிறது அல்லது கடவுளின் தெரிவு வித்தியாசமானது என்பதைக் காட்டுகின்றது. கடந்து போகுதல் (וַיַּעֲבִרֵהוּ அவர் கடந்து போனார்), என்பது ஒருவர் தன்னை வெளிப்படுத்துவதற்கு சமன், அல்லது தன் ஆளுமையை காட்டுவதற்கு சமன் எனலாம்.

வ.10: ஈசாயின் ஏழு புதல்வர்களும் சாமுவேல் முன்னால் கடந்து சென்றார்கள். இவர்களில் ஒருவரையும் கடவுள் தேர்ந்து கொள்ளவில்லை என சாமுவேல் சொல்கிறார், ஆக தெரிவு செய்பவர் கடவுள் இல்லை என்பதில் கவனமாக இருக்கிறார் (לֹא־בָחַר יְהוָ֖ה בָּאֵֽלֶּה). ஈசாயின் ஏழு புதல்வர்கள் அவருக்கு நிறைவான மக்கட் செல்வம் இருந்ததைக் குறிக்கிறது. இந்த வரி வாசகர்களுக்கு தேடலை உருவாக்குவதனைப் போல அமைக்கப்பெற்று, பின்னர் தாவீது காட்சியினுள் வரவழைக்கப்படுகிறார்.

வ.11: தாவீது சிறுவன் என அறிமுகப்படுத்தப்படுகிறார், அவரது வேலையாக ஆடுமேய்த்தல் காட்;டப்படுகிறது. இதிலிருந்து இவர் குடும்பத்தில் மிகவும் சிறியவராகவும், முக்கியமில்லாதவராகவும் இருந்தார் என்பது புலப்படுகிறது (הַקָּטָן וְהִנֵּה רֹעֶה בַּצֹּאן). இருப்பினும் சாமுவேல், தாவீதுதான் கடவுள் தேடும் நபர் என கண்டுகொள்கிறார். அவர் வரும்வரை இவர் உண்ணாமல் இருப்பது, சாமுவேலுடைய அவசரத்தைக் காட்டுகிறது.

வ.12: தாவீதின் வருகை ஒரு கதாநாயகனின் வருகை போல காட்டப்படுகிறது. அவருடைய சிவந்த மேனி, ஒளிரும் கண்கள், அழகிய தோற்றம் போன்றவை அவருடன் கடவுளின் ஆவி இருப்பதைக் காட்டுகிறது. அத்தோடு இவரைத் திருப்பொழிவு செய்யுமாறு சாமுவேலுக்கு கட்டளை கொடுக்கப்படுகிறது. முதல் ஏற்பாட்டில், நேரடியாக கடவுள் தெரிந்து கொண்டவர்களில் தாவீது மிக மிக முக்கியமானவர் என்பதற்க்கு இந்த வரி நல்ல சான்று.

வ.13: இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தாவீது எண்ணெய்யால் சகோதரர்கள் முன்னிலையில் அபிசேகம் செய்யப்படுகிறார். இது அவருடைய அபிசேகம் மறைவானதல்ல என்பதைக் காட்டுகிறது. அத்தோடு அவர்தான் இனி இஸ்ராயேலின் தளபதி என்பதையும் காட்டுகிறது. அபிசேகத்திற்கு பாவிக்கப்பட்டுள்ள சொல் அவரை மீட்பராகக் காட்டுகிறது (מָשַׁח மாஷாஹ் திருப்பொழிவு செய்). ஆண்டவரின் ஆவி இது முதல் தாவீதுடன் இருக்கிறது (וַתִּצְלַח רֽוּחַ־יְהוָה֙ אֶל־דָּוִ֔ד). ஆண்டவரின் ஆவி தாவீதோடு இருத்தல் என்பது, தாவீது கடவுளின் விருப்பத்தோடே அரசராகிறார் என்பதை அழகாகக் காட்டுகிறது. தாவீது இராமாவிற்கு தனது சொந்த வேலையை தொடர சென்றிருப்பார்.

வவ.14-15: இந்த வரிகள் எப்படி தாவீது சவுலுடைய இல்லத்திற்கு வந்தார் என்பதைக் காட்டுகின்றன. ஒரு பக்கம் தாவீது கடவுளின் ஆவியை பெற்றுக்கொள்ள, மறுபக்கம் அரசர் சவுல் கடவுளின் ஆவியை இழந்து விடுகிறார். இது இனி சவுல் கடவுள் தெரிந்து கொண்ட அரசர் இல்லை என்பதைக் காட்டுகிறது. சவுல் முன்பு கடவுளின் ஆவியை பெற்றபோது பரவசப்பேச்சு பேசினார் (காண்க 1சாமு 10,10), இப்போது அசுத்த ஆவி அவரை கலக்கமடைய செய்கிறது. இந்த அசுத்த (רֽוּחַ־רָעָה) ஆவி எங்கிருந்து வந்தது என்று ஆசிரியர் சொல்லவில்லை. இந்த தீய ஆவியின் செயற்பாடுகள் தனிமனிதனுடையவையல்ல, அதனை மற்றவர்களும் கண்டு கொள்கின்றனர்.

வவ. 16-17: தீய ஆவியை எதிர் கொள்ள யாழ் இசையை உதவிக்கு அழைக்கின்றனர் சவுலின் ஊழியர்கள். இசை ஆன்மாவின் குரல் என்பது தமிழ் பாரம்பரிய நம்பிக்கை, அதனை இந்த வரி உறுதிசெய்கிறது. எபிரேயர்கள் மன அழுத்தத்தை குறைக்க இசையை நம்பினார்கள் என்பது இங்கனம் தெளிவாகின்றது. யாழ் (כִּנּוֹר கின்னோர்), எபிரேயர்களுக்கு மிகவும் பிடித்தமான இசைக்கருவி, இது ஒரு நரம்பிசைக்கருவி. தாவீது ஆரம்பத்திலேயே யாழிசையில் பிரபல்யமாக இருந்தார் என்பதும் புலப்படுகிறது. சவுலும் இந்த இசை மருத்துவத்தில் நம்பிக்கையுடையவராக இருந்தார் என்பதும் தெரிகிறது.

வ.18: இந்த வரி தாவீதினுடைய ஆளுமையை இன்னும் அதிகமாக வரையறுக்கிறது. தாவீது ஒரு யாழிசை கலைஞனாகவும், வீரமுள்ளவராகவும், போர்த்திறனுள்ளவராகவும், பேச்சுத்தினுள்ளவராகவும், அழகானவராகவும் அத்தோடு கடவுள் அவரோடு இருப்பதாகவும் காட்டப்படுகிறார். இது தாவீதை முடிக்குரிய அரசராகவே காட்டுகிறது. சாமுவேல் புத்தகத்தின் உண்மையான கதாநாயகன் தாவீது என்பதும் இந்த புத்தகங்கள் அவரை அதிகமாகவே புகழ்கின்றன என்ற வாதத்தையும் இங்கே நோக்க வேண்டும்.

வவ.19-20: சவுலின் வேண்டுதலை மதித்து, தன் அரசருக்கு காணிக்கைகளையும் மகனையும் அனுப்பி வைக்கிறார் ஈசாய். இதிலிருந்து ஈசாயின் குடும்பம் சவுல் அரசர் மேல் அதிக மரியாதையும் பிரியமும் வைத்திருந்தார்கள் என ஆசிரியர் காட்ட முயற்சிப்பது தெரிகிறது. சவுல் மற்றும் ஈசாயின் விருபங்களோடே தாவீது சவுலின் அரண்மனைக்கு வருகிறார் என்பதையும் ஆசிரியர் காட்டுகிறார். இதனால் ஈசாயின் குடும்பம் எந்த விதமான உள்நோக்கத்தையோ அல்லது சவுலை அரியணையில் இருந்து அகற்றவேண்டும் என்ற சிந்தனையோ கொண்டிருக்கவில்லை என காட்டவும் முயல்கிறார்.

வவ.21-22: தாவீது உடனடியாக சவுலின் அரசவையில் சேருவதும், சவுல் அவர்மீது அதிகமான அன்பு செலுத்துவதும் இவர்களுக்கிடையிலான உண்மையான அன்பைக் காட்டுகிறது. இசைக்கலைஞனாக வந்தவர் படைக்கலன்களை தாங்கும் அரசரின் மெய்க்காப்பாளராகிறார். இவ்வாறு கடவுள் அவரை மெதுமெதுவாக பயிற்சிகொடுக்கிறார் எனலாம். தாவீது, சவுலின் அன்புள்ளவராக நிரந்தரமாக அரண்மனையிலே தங்குகிறார். இது ஈசாய்கு சொல்லி அனுபப்படுகிறது. தந்தை வீட்டின் தலைவராகவும் முதலாளியாகவும் இருந்ததனால் சவுல், ஈசாயிடம் சொல்லியருக்கலாம்.

வ.23: இந்த வரி தீய ஆவிக்கும் தாவீதிற்கும் இடையில் நடக்கும் நிகழ்வைக் காட்டுகிறது. தாவீதின் இசை சவுலின் தீய ஆவியை விரட்ட சவுல் நலமடைகிறார். இவ்வாறு தாவீதின் இருப்பு சவுலுக்கு நன்மையையே செய்கிறது என்பது புலப்படுகிறது. எபிரேய விவிலியத்தில் இந்த வரியில், இந்த தீய ஆவியை கடவுள் அனுப்புவதாக காட்டப்பட்டுள்ளது (רֽוּחַ־אֱלֹהִים֙ אֶל־שָׁאוּל). ஆக இந்த தீய ஆவியின் வருகையும் கடவுளுடைய சித்தத்தோடே நடைபெறுகிறது போல தென்படுகிறது. கடவுள் அனுப்பும் தீய ஆவிகள், கடவுளின் இனிய மைந்தன் தாவீதின் வல்லமையால் சவுலை விட்டு ஓடுகின்றன.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 23

1ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4மேலும் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.
5என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.
6உண்மையாகவேஇ என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.


திருப்பாடல் புத்தகத்திலுள்ள 151 பாடல்களில், முதன்மையான பாடலாக இந்தப் பாடலைக் கொள்ளலாம். பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல இசைவடிவங்களைக் கொண்டுள்ள இந்த பாடல் பல ஆண்டுகள் சென்றாலும் அழியாத கடவுள்-மனித பாரம்பரியமாக மாறிவிட்டது. இந்த பாடலின் முன்னுரை இதனை தாவீதின் பாடலாக முன்மொழிகிறது (מִזְמ֥וֹר לְדָוִ֑ד). அழகான இந்த பாடலை மூன்று பிரிவாக பிரித்து கடவுளின் பாதுகாக்கும் தன்மையை உற்று நோக்கலாம். இங்கே பாவிக்கப்பட்டுள்ள சொற்பிரயோகங்கள் சாதாரண சொற்களாக இருந்தாலும் அவை மிக ஆழமான உணர்வுகளை தாங்கியுள்ளன. தேவை ஒன்றும் இராது, பயம் இராது, ஆண்டவரில் வாழ்தல் போன்றவை மிக ஆழமான வரிகள். எப்படியான பின்புலத்தில் தாவீது இந்த திருப்பாடலை பாடினார் என்பது புலப்படவில்லை ஆனால் இதன் வரிகளைக் கொண்டு நோக்குகின்ற போது, கடுமையான சிக்கிலிருந்து அவர் மீண்ட போது ஆண்டவரின் நன்மைத் தனத்தை நினைத்து அவர் பாடியிருக்கலாம் என்பது புலப்படுகிறது. தாவீதுதான் இந்தப் பாடலை பாடினார் அல்லது இயற்றினார் என்பதற்கும் போதிய சான்றுகள் இல்லை, இதனை சிலர் திருப்பயண பாடல் என்றும் காண்கின்றனர்.

வ.1: ஆண்டவரை ஆயராக வர்ணிப்பது, முதல் ஏற்பாட்டின் மிக முக்கியமான உருவகம். இதனைத்iதான் புதிய ஏற்பாட்டில் இயேசுவும் அடிக்கடி செய்வார் (காண்க எசே 34,10: செக் 11,16: யோவா 10,11.14). ஆயத்துவம் அக்கால இஸ்ராயேல் மக்களுக்கு மிக தெரிந்திருந்தது. ஆயர்கள் அதிகமாக நல்லவர்களாக இருந்து தங்கள் மந்தைகளை காத்தார்கள். மந்தைகளை தங்கள் சொந்த பிள்ளைகள் போல வளர்த்தார்கள், சில வேளைகளில் ஆபத்துக்களையும் பாராது தங்கள் மந்தைகளை மேய்த்தார்கள். தாவீது கூட நல்ல ஆயனாக தன் மந்தைக்காக கொடிய விலங்குகளுடன் போரிட்டதாக விவிலியம் சொல்கிறது (காண்க 1சாமு 17,34.37). இதனால் தாவீது உண்மையான ஆயனாக கடவுளைக் காண்பது அவருடைய சொந்த அனுபவம் என்றுகூட சொல்லலாம் (יְהוָ֥ה רֹ֝עִ֗י לֹ֣א אֶחְסָֽר), அத்தோடு கடவுள் தன் ஆயனாக இருப்பதனால் தனக்கு எதுவும் தேவையில்லை என்கிறார்.

வ.2: இங்கே தாவீது தன்னை ஓர் ஆடாக வர்ணிக்கிறார். பசும் புல் வெளிமீது இளைப்பாற செய்வது அழகான உருவகம். நவீன உளவியலாளர்கள் சிலர், கிறிஸ்தவம் மக்களை மந்தைகளாக காட்டுகின்றது என்று குற்றம் சாட்டுகின்றனர், ஆனால் மந்தைகளுக்குள் இருக்கும் இந்த அதிசயமான பண்புகள் நல்ல அடையாளங்கள் என்பதை சாதாரண உணர்வுகள் ஏற்றுக்கொள்கின்றன. பசும்வெளி மற்றும் குறையாத நீரோடைகள் என்பன பாலஸ்தீன ஆடுகளுக்கும் மேய்ப்பர்களுக்கும் என்றுமே ஒரு கனவுதான். இப்படியானவை அங்கே குறைவு அவை கிடைத்தாலும், அங்கே அதிகமான போட்டிகளிருக்கும். ஆனால் ஆண்டவர் ஆயனாக இருக்கின்ற படியால் இந்த கனவு, தாவீதுக்கு நனவாகிறது.

வ.3: கடவுள் தனக்கு புத்துயிர் அழிப்பதாக தாவீது பாடுகின்றார். இதனை எபிரேய விவிலியம், 'என் ஆன்மாவை புதுப்பிக்கிறார்' என்று அழகாக காட்டுகிறது (נַפְשִׁ֥י יְשׁוֹבֵב). கழைத்துப்போய் சேர்ந்துபோய் இருக்கின்ற தலைவர்களுக்கு, தங்கள் பதவி, பலம், குலம், சொத்துக்கள், இன்பங்கள் போன்றவை புத்துயிர் அளிக்கா மாறாக அதனை தருபவர் கடவுள் ஒருவரே என்பது தாவீதுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அத்தோடு கடவுளுடைய நன்மைத்தனங்களுக்கும் அவருடைய நீதியான பெயருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய பெயரைப்போலவே அவருடைய உறவும் இருக்கிறது என்பது ஆசிரியரின் அனுபவம்.

வ.4: இந்த வரி இன்னும் ஆழமான உணர்வுகளைத் தாங்கிச் செல்கிறது. முதல் மூன்று வரிகளும் கடவுளை மூன்றாம் ஆளாகவும், ஆயனாவும் வர்ணித்தது. இந்த நான்காம் வரி கடவுளை இரண்டாம் ஆளாக காட்டுகிறது அத்தோடு அவரை வழியில் பாதுகாப்பவராக காட்டுகிறது. இந்த வரியில் இருந்துதான் சிலர் இந்த பாடலை வழித்துணை திருப்பயணப் பாடல் என்று சிலர் காண்கின்றனர். பாலைவனங்கள், பயங்கரங்கள், தனிமையான பாதைகள், வழிப்பறிக் கொள்ளைகள் என்று பாலஸ்தீனத்தின் பாதைகள் இருந்திருக்கின்றன. இந்த பாதைகளில் கடவுளின் காத்தல் மிகவும் அனுபவிக்கப்பட்டிருக்கின்றது. இதனால்தான் ஆசிரியர் சாவின் இருள் சூழ் பள்ளத்தாக்கில் தான் நடக்க நேர்ந்தாலும் என்று பாடுகிறார் (גַּ֤ם כִּֽי־אֵלֵ֨ךְ בְּגֵ֪יא צַלְמָ֡וֶת לֹא־אִ֘ירָ֤א). அதற்கான காரணமாக கடவுளுடைய கோலையும் (שֵׁבֶט ஷெவெட்), நெடுங்கழியையும் (מִשְׁעֶנֶת மிஷ்எனெத்), காட்டுகிறார். இவை ஆயர்களுடைய பாதுகாப்பு ஆயுதங்கள், இதனைக் கொண்டே அவர்கள் தங்கள் மந்தைகளை பாதுகாத்தார்கள். பிற்காலத்தில் இவை பாதுகாப்பின் அடையாளங்களாக மாறின. அரசர்களுடைய கையிலிருக்கும் கோலுக்கும், ஆயனுடைய கோலுக்கும் அதிகமான தொடர்பிருக்கிறது.

வ.5: இவ்வளவு நேரமும் தன்னை ஆடாக வர்ணித்த ஆசிரியர் இந்த வரியிலிருந்த தன் உருவத்தை விருந்தாளியாக மாற்றுகிறார். ஆட்டின் தலையில் நறுமண தைலம் பூச மாட்டார்கள். எதிரிகளின் கண்முன்னே விருந்தை ஏற்பாடு செய்தல், தலையில் நறுமண தைலம் பூசுதல், பாத்திரத்தை இரசத்தால் நிறைத்தல் போன்றவை சிற்றரசர்களுக்கு பேரரசர்கள் கொடுக்கும் அன்பு விருந்தைக் காட்டுகிறது. இப்படியான விருந்துகள் மத்திய கிழக்கு முன்னைய பேரரசுகளில் பலமுறை நடந்திருக்கிறது. இந்த வரியை வைத்து பார்க்கும் போது, பாடலாசிரியர் ஒரு அரசர் போல தோன்றுகிறது, அல்லது அவர் அரச உதாரணத்தை எடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தன்னுடைய எதிரிகள் அவமானப்பட கடவுள் தன்னுடைய நன்மைத் தனத்தைக் காட்டுகிறார் அதாவது தன்னை உயர்த்துகிறார் என்பது இந்த ஆசிரியரின் அனுபவம்.

வ.6: கடவுளின் அருளும், பேரன்பும் (ט֤וֹב וָחֶ֣סֶד) வாழ்நாள் முழுவதும் புடைசூழ்ந்து வரும் என்பதிலிருந்து ஆசிரியரின் அசைக்க முடியாத நம்பிக்கை புலப்படுகிறது. அத்தோடு ஆசிரியரின் கடவுள் அனுபவம் ஒரு முடிவுறாத அனுபவம் என்பதும் புலப்படுகிறது. ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்வேன் என்கிறார் ஆசிரியர். இந்த ஆண்டவரின் இல்லத்தை எபிரேய விவிலியம், கடவுளின் வீடு (בֵית־יְ֝הוָ֗ה) என்கிறது. இதனால் இதனை எருசலேம் ஆலயம் என்று எடுக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகிறது. இது எருசலேம் ஆலயமாக இருந்தால், இந்த பாடலின் ஆசிரியராக தாவீது இருக்க முடியாது.



இரண்டாம் வாசகம்
எபேசியர் 5,8-14

8ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். 9ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது. 10ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள். 11பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம். அவை குற்றமென எடுத்துக்காட்டுங்கள். 12அவர்கள் மறைவில் செய்பவற்றைச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது. 13அவர்கள் செய்வதை எல்லாம் குற்றமென ஒளியானது எடுத்துக்காட்டும்போது அவற்றின் உண்மைநிலை வெளியாகிறது. 14அவ்வாறு தெளிவாக்கப்படுவதெல்லாம் ஒளிமயமாகிறது. ஆதலால், 'தூங்குகிறவனே, விழித்தெழு; இறந்தவனே, உயிர்பெற்றெழு; கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்' என்று கூறப்பட்டுள்ளது.

திருச்சபை சார்பான அழகிய இறையியல் கருத்துக்களைக் கொண்டுள்ள இந்த திருமுகம் எபேசியருக்கு எழுதப்பட்டது என்று கருதப்பட்டாலும், மூலப் பிரதியில் இது எபேசியருக்கு எழுதப்பட்டதாக இல்லை. பவுல் எபேசில் மூன்று வருடங்கள் பணிசெய்திருக்கிறார், ஆனால் இந்த கடித்தத்தை பவுல்தான் எழுதினாரா என்பதில் பல அழுத்தமான கேள்விகள் உள்ளன. திருச்சபைக்கெதிரான கலாபனைகளும், பிழையான போதனைகளுமே இந்த திருமுகத்தை எழுத காரணமாக இருந்தன என்ற வாதம் ஒன்றிருக்கிறது. யூத சமூகத்தைப்பேலவே திருச்சபையும் புனிதமானது, யூத கிறிஸ்தவர்களைப்போலவே பிறவின கிறிஸ்தவர்களும் அழைக்கப்பட்டவர்கள், மற்றும் பிற மதங்களில் உள்ள மூட நம்பிக்கைகள் கிறிஸ்தவத்திற்கு எதிரானவை என்ற பல கருத்துக்களை முக்கிய பொருளாக இந்த திருமுகம் கொண்டுள்ளது. பவுலையும் அவரது போதனைகளையும் நேரடியாக பார்த்திராத எபேசியர்களுக்கு இந்த திருமுகம் பவுலின் அனுபவத்தை கொடுக்கும் என்பது ஆசிரியரின் நம்பிக்கையாக இருந்திருக்கலாம். இந்த திருமுகத்தின் 4 தொட்க்கம் 6 வரையிலான அதிகாரங்கள், கிறிஸ்துவின் மறையுடலாகிய திருச்சபையை பற்றிய போதனைகளை தாங்கிவருகின்றன. இந்த 5ம் அதிகாரத்தின் பகுதி, இதன் வாசகர்களை ஒளி பெற்றவர்களாய் நடந்து கொள்ளுமாறு அழைப்பு விடுகிறது.

வ.8: கிறிஸ்து இல்லாத வாழ்வு இருளான வாழ்வு, இதனால் அவர்கள் கிறிஸ்தவத்திற்குள் நுழைவதற்கு முன் இருளில் இருந்தார்கள் என்று பவுல் வாதிடுகிறார். இதன் நோக்கமாக அவர்களின் முன்னைய வாழ்வை பவுல் சாடுகிறார் என்று எடுக்க முடியாது, ஆனால் புதிய வாழ்விற்குள் வந்ததன் பின்னர் அவர்கள் ஒளியின் மக்களாய் இருக்கின்ற படியால், ஒளி வாழ்வினுள் வாழ அழைக்கப்படுகிறார்கள்.

வ.9: ஒளி நன்மையையும் நீதியையும் மற்றும் உண்மையையும் விளைவிக்கின்றது. கிரேக்க மெய்யியலின் ஒளி (φῶς), முக்கியமான ஒரு கருப்பொருள். கிரேக்க உரோமையர்கள் ஒளியை உலகின் முக்கியமான படைப்பு மூலப்பொருளாகக் கருதினர். சில முக்கியமில்லாத கிரேக்க பாடங்கள் இந்த ஒளி என்ற இடத்தில், ஆவி என்ற சொல்லை வைத்து வாசிக்கின்றன. ஆனால் இந்த வரியின் நடையில் ஒளி என்றே சொல்லே மூலச் சொல்லாக இருக்க வேண்டும். இயேசு தன்னை உலகின் ஒளி என்று சொல்வதை நினைவில் கொள்ளவேண்டும்.

வ.10: இந்த வரியிலிருந்து எபேசிய திருச்சபையில் கணிசமான கிறிஸ்தவர்கள் தங்கள் கிறிஸ்தவ வாழ்விலிருந்து தவறி வாழ்ந்துகொண்டிருந்திருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள் என்று ஆசிரியர் சொல்வதன் வாயிலாக இவர்களுக்கு கிறிஸ்தவத்தை பற்றிய நல்ல அறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

வ.11: பயனற்ற இருளின் செயல்களை செய்கிறவர்கள் (ἀκάρποις τοῦ σκότους) என்று யாரையோ ஆசிரியர் சாடுகிறார். இவர்கள் ஒருவேளை யூத பிரிவினை வாதிகளாகவோ, அல்லது கிறிஸ்தவ பிரிவினை வாதிகளாகவோ இருந்திருக்கலாம். இப்படி செய்வது குற்றமென காட்டச் சொல்கிறார். ஒருவேளை குற்றம் என்று சொல்வதன் மூலமாக, இருளின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பது எவ்வளவு ஆபத்தனாது என்பதை காட்ட முயன்றிருக்கலாம்.

வ.12: இந்த வரி மிகவும் கனமான வரியாக காட்டப்பட்டுள்ளது. இவர்கள் மறைவில் எதை செய்கிறார்கள் என்பது இந்த வரியில் சொல்லப்படவில்லை, அதேவேளை அது மிகவும் அசிங்கமான செயற்பாடு என்று ஆசிரியர் சொல்வது மட்டும் புலப்படுகிறது. ஒருவேளை கிறிஸ்தவர்கள் தங்கள் முன்னைய வாழ்விற்கு திரும்பி, கிறிஸ்தவத்திற்கு ஒவ்வாத வாழ்வை வாழ தொடங்கியிருப்பதை இது காட்டலாம்.

வ.13: முன்னைய வரிகளில் பவுல் ஒளிக்கும் இருளுக்கும் இடையிலான போரை பற்றி வாதாடுகிறார். ஒருநாள் இருளின் செயற்பாடுகள் குற்றமென ஒளி காட்டும் என்கிறார். ஒருவேளை இது ஆண்டவரின் இரண்டாம் வருகையைப் பற்றியதாக இருந்திருக்கலாம்.

வ.14: இந்த வரியில் ஆசிரியர் இறைவாக்கொன்றை கோடிடுவது போல தோன்றுகிறது. இது அனேகமாக எசாயா புத்தகத்தின் சிந்தனைகளுடன் தொடர்பு பட்டிருக்க வேண்டும். இந்த வரியில் ஒளியை ஆசிரியர் கிறிஸ்துவுடன் ஒப்புடுகிறார் அத்தோடு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது, இறந்தவர்கள் அனைவரும் நித்திரை என்கின்ற மரணத்திலிருந்து உயரித்தெழுவர் என்பதும் சொல்லப்படுகிறது.


நற்செய்தி வாசகம்
யோவான் 9,1-41

பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறுதல் 1இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார். 2'ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?' என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள். 3அவர் மறுமொழியாக, 'இவர் செய்த பாவமும் அல்ல் இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல் கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார். 4பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது அப்போது யாரும் செயலாற்ற இயலாது. 5நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி' என்றார். 6இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி, 7'நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்' என்றார். சிலோவாம் என்பதற்கு 'அனுப்பப்பட்டவர்' என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார். 8அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், 'இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?' என்று பேசிக்கொண்டனர். 9சிலர், 'அவரே' என்றனர்; வேறு சிலர் 'அவரல்ல் அவரைப்போல் இவரும் இருக்கிறார்' என்றனர். ஆனால் பார்வை பெற்றவர், 'நான்தான் அவன்' என்றார். 10அவர்கள், 'உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?' என்று அவரிடம் கேட்டார்கள். 11அவர் அவர்களைப் பார்த்து, 'இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி, என் கண்களில் பூசி, 'சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைப் கழுவும்' என்றார். நானும் போய்க் கழுவினேன்; பார்வை கிடைத்தது' என்றார். 12'அவர் எங்கே?' என்று அவர்கள் கேட்டார்கள். பார்வை பெற்றவர், 'எனக்குத் தெரியாது' என்றார்.

பரிசேயரின் கேள்விக்கணைகள்

13முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டிவந்தார்கள். 14இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்தநாள் ஓர் ஓய்வுநாள். 15எனவே, 'எப்படிப் பார்வை பெற்றாய்?' என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர். அதற்கு அவர் 'இயேசு என் கண்களில் சேறு பூசினார்; பின் நான் கண்களைக் கழுவினேன்; இப்போது என்னால் பார்க்க முடிகிறது' என்றார். 16பரிசேயருள் சிலர், 'ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது' என்று பேசிக் கொண்டனர். ஆனால் வேறு சிலர், 'பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?' என்று கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது. 17அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம், 'உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?' என்று மீண்டும் கேட்டனர். 'அவர் ஓர் இறைவாக்கினர்' என்றார் பார்வை பெற்றவர். 18அவர் பார்வையற்றிருந்து இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை அவருடைய பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை யூதர்கள் நம்பவில்லை. 19'பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என நீங்கள் கூறும் உங்கள் மகன் இவன்தானா? இப்போது இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது?' என்று கேட்டார்கள். 20அவருடைய பெற்றோர் மறுமொழியாக, 'இவன் எங்களுடைய மகன்தான். இவன் பிறவிலேயே பார்வையற்றவன்தான். 21ஆனால் இப்போது எப்படி அவனுக்குக் கண் தெரிகிறது என்பதோ யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனிடமே கேளுங்கள். அவன் வயது வந்தவன் தானே! நடந்ததை அவனே சொல்லட்டும்' என்றனர். 22யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய பெற்றோர் இப்படிக் கூறினர். ஏனெனில் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளும் எவரையும் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கிவிடவேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தங்களிடையே உடன்பாடு செய்திருந்தார்கள். 23அதனால் அவருடைய பெற்றோர், 'அவன் வயதுவந்தவன் தானே! அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்' என்றனர். 24பார்வையற்றிருந்தவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு அவரிடம், 'உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து. இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்' என்றனர். 25பார்வை பெற்றவர் மறுமொழியாக, 'அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்; நான் பார்வையற்றவனாய் இருந்தேன்; இப்போது பார்வை பெற்றுள்ளேன்' என்றார். 26அவர்கள் அவரிடம், 'அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?' என்று கேட்டார்கள். 27அவர் மறுமொழியாக, 'ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. இப்போது மீண்டும் ஏன் கேட்க விரும்புகிறீர்கள்? ஒரு வேளை நீங்களும் அவருடைய சீடர்கள் ஆக விரும்புகிறீர்களோ?' என்று கேட்டார். 28அவர்கள் அவரைப் பழித்து, 'நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள். 29மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும்; இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது' என்றார்கள். 30அதற்கு அவர் 'இது வியப்பாய் இல்லையா? எனக்குப் பார்வை அளித்திருக்கிறார்; அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர் எனத் தெரியாது என்கிறீர்களே! 31பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவி சாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும். 32பிறவிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே! 33இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது' என்றார். 34அவர்கள் அவரைப் பார்த்து, 'பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?' என்று சொல்லி அவரை வெளியே தள்ளினர்.

பார்வையற்றோர் பரிசேயரே

35யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, 'மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?' என்று கேட்டார். 36அவர் மறுமொழியாக, 'ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்' என்றார். 37இயேசு அவரிடம், 'நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்' என்றார். 38அவர், 'ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன்' என்று கூறி அவரை வணங்கினார். 39அப்போது இயேசு, 'தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்' என்றார். 40அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, 'நாங்களுமா பார்வையற்றோர்?' என்று கேட்டனர். 41இயேசு அவர்களிடம், 'நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் 'எங்களுக்குக் கண் தெரிகிறது' என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்' என்றார்.


பார்வை என்பது (βλέπων) விவிலிய சிந்தனைப்படி கடவுளுடைய ஆசீர்வாதம். பார்வையற்றவர்கள் பாவிகளாக கருதப்பட்டனர். மருத்துவங்கள் அதிகமாக வளராத அந்த நாட்களில் பார்வையற்றவருக்கு பார்வை கொடுத்தல் என்பது முழுக்க முழுக்க அதிசயமாகவே கருதப்பட்டது. பார்வையற்றவர் பார்வை பெறுதல் என்ற இந்த அதிகாரம் அடையாளங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. யோவான் நற்செய்தியில் வரும் பாத்திரங்கள் முக்கியமாக அடையாளங்கள் வாயிலாக பேசுகின்றன. இந்த ஒன்பதாவது அதிகாரம் யார் பார்வையற்றவர்கள் என்ற முக்கியமான கேள்வியை வாசகர்களுக்கு முன்வைக்கிறது. இந்த பகுதியை மூன்று முக்கியமான பிரிவுகளாக பிரிக்கலாம்.

அ. பார்வையற்றவர் பார்வைபெறுதல் (வவ.1-12)

ஆ. பரிசேயரின் கேள்விக்கணைகள் (வவ.13-34)

இ. பார்வையற்றவர் பரிசேயர்கள் (வவ.35-41)

வ.1: இயேசு பார்வைற்றவரை τυφλὸν காண்கிறார் ஆனால் அவர் எந்த கேள்வியையும் சீடர்களிடம் எழுப்பவில்லை. இதன் மூலமாக யோவான் நற்செய்தியாளர் இயேசுவை அனைத்தும் அறிந்தவர் என காட்ட முயல்கிறார் எனலாம்.

வ.2: சீடர்கள் இயேசுவை ரபி (ῥαββί) என அழைத்து அவர்களின் கேள்வியைக் கேட்கின்றனர். இராபி என்பதன் மூலம் இவர்கள் இயேசுவை உண்மையான ஆசிரியர் என எடுக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. இவர்களின் கேள்வியிலிருந்து, பார்வையற்றிருத்தல் பாவம் என்ற யூத சிந்தனை தெளிவாக தெரிகிறது. இவர்களின் கேள்வி பார்வையற்றல் பாவமா என்பதைப் பற்றியல்ல மாறாக அது யாருடைய பாவமாக இருக்கிறது என்பதைப் பற்றியது.

வ.3: இந்த வரியில் பார்வையற்றிருத்தல் யாருடைய பாவமுமல்ல என்பதை இயேசு விளக்குகிறார். ஆனால் இயேசு இன்னொரு உண்மையையும் சேர்த்துக்கொள்கிறார் அதாவது இது கடவுளின் இரக்கம் மட்டும் மாட்சியை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு என்கிறார். குறைகள் இருந்தால்தானே நிறைவின் பலம் தெரியும் என்பது போல.

வவ.4-5: பகல் இரவு (ἡμέρα, νὺξ), என்ற இரண்டு உருவகங்களை வரவழைத்து தன்னை பகலாக காட்டுகிறார் இயேசு. யோவான் நற்செய்தியில் இரவு, தீய சக்திகளின் நேரமாக கணிக்கப்படுகிறது. பகல் ஆண்டவரின் நேரமாக கணிக்கப்படுகிறது. இயேசு தான் பகல் நேரத்தின் ஆண்டவர் என்கிறார். ஐந்தாவது வரியில், இயேசு தன்னை உலகின் ஒளியாக வெளிப்படுத்துகிறார். நானே என்ற வரிகள் யோவான் நற்செய்தியில் ஏழு தடவைகள் வருகின்றது. அதில் இங்கிருப்பது முக்கியமான வரியில் ஒன்று (φῶς εἰμι τοῦ κόσμου).

வவ.6-7: இயேசு தரையில் உமிழ்ந்து சேறு உண்டாக்கி பார்வையற்றவரின் கண்களில் பூசுகிறார் அத்தோடு சீலோவாம் குளத்தில் போய் கழுவச் சொல்கிறார். ஆண்டவராகிய இயேசுவின் தொடுகையொன்றே போதும் பல கோடிப் பேர்கள் பார்வை பெற அப்படியிருக்க ஏன் ஆண்டவர் பல அடையாளங்களைச் செய்கிறார். ஒருவேளை இயேசு பலருடைய கவனத்தை ஈர்க்க இப்படி செய்திருக்கலாம். எச்சில் மண்ணுடன் சேர்த்து பூசப்படும் போது கண்களின் சில நோய்கள் குணமடைகிறது என்ற நம்பிக்கை அக்காலத்தில் வழக்கிலிருந்திருக்கிறது. ஒருவேளை இதன் மூலமாக தான் செய்வது மந்திரமல்ல என்பதை காட்ட இயேசு முயன்றிருக்கலாம். சீலோவாம் (Σιλωάμ) என்பதற்கு ஏன் யோவான் அனுப்பப்பட்டவர் என்ற அர்த்தத்தை கொடுக்கிறார் என்பது தெளிவாக இல்லை. ஒருவேளை இதன் மூலமாக இயேசுதான் அந்த அனுப்பப்பட்டவர், அவர்தான் குணமளிப்பவர் என கூறவிழைந்திருக்கலாம். சீலோவாம் பழைய எருசலேமிலிருந்து பிரசித்த பெற்ற குளம், இதனை யூதர்கள் தூய்மைச் சடங்கிற்கு பாவித்தனர். இயேசு சொன்ன படியே கழுவிய அந்த நபர் பார்வை பெறுகிறார். இதனால் இயேசு ஆண்டவர் என்பது புலப்படுகிறது.

வவ.8-9: பார்வையற்றவரின் தோற்றத்திலே பல கேள்விகள் எழுகின்றன. சிலர் அவரை அடையாளம் காண்கின்றனர் இன்னும் சிலர் அவரை அடையாளம் காண தவறுகின்றனர். இருப்பினும் அந்த நபர் தன்னில் தெளிவாக இருக்கிறார். இந்த அடையாளம் மூலமாக இயேசுவைப் பற்றிய பல தப்பான கருத்துக்கள் அன்று இருந்திருக்கிறது என்பதும் புலப்படுகிறது. இந்த முன்நாள் பார்வையற்றவர், பிச்சைக்காரராகவும் இருந்திருக்கிறார். இதன் வாயிலாக அவர் நன்கு தெரிந்தவர் என்பதை யோவான் முன்னிறுத்துகிறார்.

வவ. 10-12: இங்கே யோவான் காட்டுகின்ற, அவர்கள் என்பவர்கள் அனைத்து யூதர்களையும் குறிக்காது மாறாக இயேசுவை மறுத்த யூதர்களையே குறிக்கும். இவர்களின் கேள்விக்கு பதிலாக இயேசுதான் தனக்கு பார்வை தந்ததாக அந்த முன்நாள் பார்வையற்றவர் சொல்கிறார். இதன் மூலமாக இந்த கேள்வி கேட்கிறவர்கள் ஆரம்ப முதலே இயேசுவை நம்ப மறுக்கிறார்கள் என்பது புலப்படுகிறது.

வவ. 13-15: இப்போது இந்த நபர் பரிசேயர்களின் முன்னால் விசாரிக்கப்படுகிறார். சாதாரண மக்கள் பரிசேயர்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை இந்த வரிகள் காட்டுகின்றன. இவர்களின் கேள்வியாக இருப்பது, இந்த சகோதரனுடைய குணமாக்கல் அல்ல, மாறாக ஒய்வு நாளில் எப்படி ஒருவர் இதனை செய்ய முடியும் என்பதாகும். இவ்வாறு இவர்களின் சிறுபிள்ளைத் தனத்தை யோவான் படம் பிடிக்கிறார். பார்வை பெற்றவர் தான் பெற்ற அனுபவத்தையும், அவர் ஏற்கனவே சொன்னதையும் அப்படியே சொல்கிறார். இதன் மூலம் உண்மையில் என்னதான் நடந்தது என்பது தெளிவாகின்றது.

வ. 16: இயேசு கடவுளிடம் இருந்து வந்தவர் இல்லை என்பது சில யூதர்களுடைய முக்கியமான வாதம். இதற்கு இவர்கள் இங்கே உதாரணம் தேடுகின்றார்கள். கடவுளின் மக்கள் ஓய்வுநாளை கடைப்பிடிப்பர், இந்த மனிதர் ஓய்வு நாளை உடைக்கிறார் ஆக இவர் கடவுளின் மகன் அல்ல என்பது இவர்களின் வாதம். ஆனால் இன்னும் சிலர் இயேசுவை பாவியாக ஏற்க மறுக்கின்றனர். இதற்கு அவர்கள் தரும் காரணம், அவருடைய இந்த புதுமை.

வ.17: இந்த வரியில் முன்னால் பார்வையற்றவரின் விசுவாச அறிக்கை சொல்லப்படுகிறது. இவருடைய நம்பிக்கையின் படி இயேசு ஒரு இறைவாக்கினர் (προφήτης).

வவ.18-19: பரிசேயர்கள் இவரின் பெற்றோரை அழைத்து விசாரிக்கின்றனர். பார்வையற்றவரை இவர்கள் முழு மனிதராக ஏற்க மறுத்ததன் காரணமாக அவர்கள் அவரின் பெற்றோரை அழைத்து விசாரித்திருக்கலாம். இவர்களின் கேள்வி இரண்டு விதமாக இருக்கிறது. ஒன்று இவர்தான் உண்மையான மகனா? இரண்டாவது அவருடைய பார்வையின் இரகசியம் என்ன என்பது.

வவ.20-21: பெற்றோர் தங்கள் மகனின் அடையாளத்தை ஏற்றுக்கொள்கின்றனர். அத்தோடு அவர்கள் அவரை வயது வந்தவர் என்கின்றனர், அதாவது அவருக்கு சுய அறிவு உள்ளது என்கின்றனர். இந்த நேரத்தில், இந்த இடத்தில் இவரின் பெற்றோருக்கு அங்கே என்ன வேலை, பெற்றோர் இருக்கும் போது இந்த பார்வையற்ற மகன் ஏன் பிச்சை எடுக்க வேண்டும். ஒருவேளை இந்த நிகழ்வின் போது அங்கே ஒரு திருவிழா நடந்திருக்கலாம்.

வவ.22-23: யோவான் ஒரு கதையை விவரிப்பதில் வல்லவர். பெற்றோரை இங்கே நேர்முகமான மக்களாகக் காட்டுகிறார். இந்த பெற்றோர் யூதர்களுக்கு அஞ்சுகின்றனர். இங்கே யூதர்கள் என்பவர்கள் இயேசுவை ஏற்காத யூதர்களைக் குறிக்கின்றது. இயேசுவின் காலத்தில் அவரை கிறிஸ்துவாக யாரும் நேரடியாக, அதாவது சாதாரண யூதர்கள், ஏற்றுக்கொண்டார்களா என்பதில் பல கேள்விகள் உள்ளன. அதே வேளை இவர்கள் செபக்கூடத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டார்களா என்பதிலும் சில சந்தேகங்கள் உள்ளன. இந்த நிகழ்வுகள் ஆரம்ப கால திருச்சபையின் பிரச்சனைகளை மையப்படுத்துகின்றது. வயது வராதவர்களின் சாட்சியம் செல்லாது எனவேதான் அவரை வயது வந்தவர் என காட்டுகிறார் யோவான்.

வவ.24-25: கடவுளை மாட்சிப் படுத்த இரண்டாம் முறையாக கேள்வி கேட்கின்றனர் யூதர்கள். இவர்களின் கேள்வியிலிருந்தே இவர்கள் ஏற்கனவே இயேசுவிற்கு எதிரானவர்கள் என்பது புலப்படுகிறது. அவர்கள் இயேசுவை பாவி என்கின்றனர் (ἁμαρτωλός). முன்நாள் பார்வையற்றவர், இயேசுவை பாவியாக ஏற்க மறுக்கிறார் அதேவேளை தான் இப்போது தான் பார்வை பெற்றவர் என்பதிலும் கவனமாக இருக்கிறார்.

வவ.26-27: இந்த இரண்டாவது கேள்விக்கு இந்த நபர் தரும் பதில் நகைச்சுவையாக உள்ளது. தான் ஏற்கனவே சொல்லிவிட்டதாகவும், இவர்கள் விளங்கியும் நடிக்கிறார்கள் என்பது போல வாதிடுகிறார். அத்தோடு நீங்களும் இயேசுவின் சீடராக மாறலாம் என்ற யோவான் நற்செய்தியின் மையப்பொருளை கொண்டுவருகிறார்.

வவ.28-29: யூதர்களுடைய முக்கியமான வாதம் வெளிச்சத்திற்கு வருகிறது. அவர்கள் தங்களை மோசேயின் சீடர்கள் என்கின்றார்கள். அத்தோடு மோசே கடவுளோடு முகமுகமாக பேசிய ஒரே நபர், ஆனால் இயேசு எங்கிருந்து வருகிறார் என்பது இவர்களுக்கு தெரியாது என்கிறார்கள்.

வவ.30-33: இந்த வரிகள் பல சான்றுகளை இயேசுவிற்கு கொடுத்து, இயேசுவிற்கு எதிரான யூதர்கள் மடமையில் வாழ்கிறார்கள் என்பதை அழகாக இந்த முன்நாள் பார்வையற்றவர் மூலமாக விளக்குகிறார் யோவான். இவர் பல வாதங்களை முன்வைக்கிறார்.

அ. இவர்களின் அவநம்பிக்கை வியப்பானது

ஆ. இயேசு இவருக்கு பார்வை அளித்திருக்கிறார்

இ. இயேசு பாவியாக இருந்திருந்தால், கடவுள் அவருக்கு செவிசாயார்

ஈ. இயேசு இறைவனின் திருவுளப்படி நடப்பவர்.

உ. பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறுவது என்பது அரிது.

இந்த காரணங்களின் மூலமாக யோவான் இயேசுவை மோசேயைவிட உயர்த்த முயல்கிறார். அதாவது இயேசு கடவுளிடமிருந்து வந்தவர். அவர்தான் கிறிஸ்து.

வ.34: இந்த வசனம் மிக முக்கியமானது. இது இவர்களின் பிடிவாதத்தையும், ஆண்டவருக்கு எதிரான செயற்பாடுகளையும் வன்மையாக காட்டுகிறது. இவர்கள் பார்வையற்றவரை பாவி என்கின்றார்கள். மறைமுகமாக அவர் பிறவியில் பார்வையற்றவர் என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். இவரை செபக்கூடத்திற்கு வெளியே தள்ளுகிறார்கள். இந்த செயற்பாடுகளை அன்றையை யூத தலைமை கிறிஸ்தவர்களுக்கு செய்தது.

வ.35: வெளியே தள்ளப்பட்டவர் செபக்கூடத்தை விட உன்னதமான இடத்தை அடைகிறார். இயேசு அவருக்கு நம்பிக்கை என்னும் வாய்ப்பைக் கொடுக்கிறார். மானிட மகனிடம் நம்பிக்கை கொள்கிறீரா என்ற கேள்வி உன்மையில் வாசகர்களுக்கான கேள்வி (σὺ πιστεύεις εἰς τὸν υἱὸν τοῦ ⸀ἀνθρώπου;).

வ.36: இந்த வரி பார்வைபெற்றவரின் நம்பிக்கை இன்னும் வலுவடையவில்லை என்பதைக் காட்டுகிறது. அவர் இயேசுவை இன்னும் முழுமையாக அறியவில்லை. நிக்கதேமுவைப்போல, சமாரியப் பெண்ணைப்போல இவரும் இன்னும் நிறைவடையவில்லை. இவரின் கேள்வி இயேசுவை இன்னும் ஆழமாக தன்னை வெளிப்படுத்த வைக்கிறது. இந்த வகை கேள்விகள் யோவான் நற்செய்திக்கே தனித்துவமானவை.

வ.37: இறுதியாக இயேசு தன்னை வெளிப்படுத்துகிறார். நான் தான் அவர் என்கிறார். இது முதல் ஏற்பாட்டில் கடவுள் தன்னை வெளிப்படுத்துவதற்கு சமனானது என யோவான் நற்செய்தி ஆய்வாளர்கள் கருதுவர் (ὁ λαλῶν μετὰ σοῦ ⸁ἐκεῖνός ἐστιν.).

வ.38: இதுதான் இந்த அதிகாரத்தின் முக்கியமான செய்தி. அதாவது நம்பிக்கை கொள்ளல், அவரை வணங்கள். இதனைத்தான் யோவான் நற்செ;யதியாளர் ஒவ்வொரு வாசகரிடமிருந்தும் எதிர்பார்க்கிறார்.

வ.39: இயேசு தன்னுடைய வருகையின் காரணத்தை விளக்குகிறார். பார்வை பெறுதலும் பார்வையிழத்தலும் தன்னுடைய கைகளிலே உள்ளது என்கிறார் இயேசு. இயேசு தன்னை தீர்ப்பளிப்பவராக காட்டுவது நிச்சயமாக பரிசேயருக்கு கோபத்தை உண்டாகியிருக்கும். இருப்பினும் அது தன்னுடைய வேலை என்பதில் இயேசு கருத்தாய் இருக்கிறார்.

வ.40: இந்த கேள்வியின் மூலம் உண்மையில் பார்வையற்றோர் பரிசேயரே என்று இயேசு விளக்குகின்றார். அல்லது யோவான் ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு நற்செய்தியுரைக்கிறார்.

வ.41: பார்வையற்றவர் பாவிகள் இல்லை என்பதையும், பார்வையுடையோர் அனைவரும் நல்லவர்கள் இல்லை என்பதையும் மீண்டும் இயேசு காட்டுகிறார். கண்ணிருந்தும் பார்வையிருந்தும் பார்க்காமிலிருப்பவர்கள் உண்மையில் பாவிகள் என்பதை யோவான் அழகாக காட்டுகிறார். இறுதியாக இயேசுவை தங்கள் வீம்பின் காரணமாக நம்பாதவர்கள் பாவிகளே என்பது யோவானின் மைய செய்தியாக அமைகிறது.

ஒளி என்பது புற வெளிச்சம் மட்டுமல்ல,

அக வெளிச்சம் கூட ஒளியாகிறது.

பார்வையிருந்தும் பார்க்காமல் இருப்பவர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள்.

பார்வையற்றும் பார்க்கும் மனிதர்கள் ஞானிகள்.

அன்பு ஆண்டவரே உண்மையான ஒளியாகிய உம்மை காண வரம் தாரும். ஆமென்.