இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தி மூன்றாம் வாரம் 

முதல் வாசகம்: மலாக்கி 3,19-20
திருப்பாடல்: திருப்பாடல் 98
இரண்டாம் வாசகம்: 2தெசலோனிக்கர் 3,7-12
நற்செய்தி: லூக்கா 21,5-19


முதல் வாசகம்
மலாக்கி 3,19-20 (4,1-2)

1'இதோ! சூளையைப்போல் எரியும் அந்த நாள் வருகின்றது. அப்போது ஆணவக்காரர், கொடுமை செய்வோர் அனைவரும் அதனுள் போடப்பட்ட சருகாவர்; வரப்போகும் அந்த நாள் அவர்களுடைய வேரையோ, கிளையையோ விட்டுவைக்காது; முற்றிலும் சுட்டெரித்து விடும்,' என்கிறார் படைகளின் ஆண்டவர். 2'ஆனால் என் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கைகளில் நலம் தரும் மருந்து இருக்கும். நீங்களும் தொழுவத்திலிருந்து வெளிவரும் கொழுத்த கன்றுகளைப்போல் துள்ளி ஓடுவீர்கள்.

இன்றைய வாசகங்கள் அனைத்தும் இறுதி நாட்களையும் அல்லது ஆண்டவரின் இரண்டாம் வருகையை பற்றியும் குறிக்கின்றவையாக அமைக்கப்பட்டுள்ளன. எபிரேய கணக்கில் இந்த புத்தகம்தான் சிறிய இறைவாக்கினர் புத்தகங்களில் இறுதியாக உள்ள இறைவார்த்தை புத்தகம். இதன் இறுதி வசனங்கள் மோசேயையும், எலியாவையும் நினைவூட்டுகின்றன. இங்கணம், சட்டங்களுக்கு அடையாளமாக மோசேயும், இறைவாக்குகளுக்கு அடையாளமாக எலியாவும் நினைவூட்டப்பட்டு முழு விவிலியமும் இணைக்கப்பட்டுள்ளது போல அமைந்துள்ளது. இதனால் இந்த புத்தகம் அதன் இறுதி வடிவத்தில் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்ற ஒரு பலமான வாதமும் இருக்கின்றது. இதன் மொழியியல், மற்றும் வார்த்தைகளின் தன்மையை வைத்து இந்த புத்தகம் பாரசீகர் காலமான கி.மு 5ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும் வாதாடுகின்றனர் சிலர். எருசலேம், பபிலோனிய நாடு கடத்தலின் பின்னர், கைவிடப்பட்டு மக்கள் தொகையில் சிறுத்து, பாதுகாப்பின்றி, மதில்களின்றி கைவிடப்பட்ட நிலையில் இருந்தது.  மலாக்கி (מַלְאָכִי malākî) என்று இந்த புத்தகத்தின் ஆசிரியர் அறியப்படுகிறார். இந்த சொல்லின் அர்த்தமாக 'செய்தியாளர்' என்று பொருள்படும். சிலர் இதனை מלאכּיּה malakiya கடவுளின் செய்தியாளர் என்ற சொல்லின் குறுகிய வடிவமாக பார்க்கின்றனர். மலாக்கி என்பது இவரின் இயற்பெயரா அல்லது காரண இடுகுறி பெயரா என்பதிலும் மாற்றுக்கருத்துக்கள் உள்ளன. குருக்களின் செயற்பாடுகளை ஆங்காங்கே இந்தப் புத்தகம் படம்பிடிப்பதனால் இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஒரு குருவாக இருக்கலாம் என்ற வாதமும் இருக்கின்றது. ஆனால் இவர் எந்த குரு குடும்பத்தை சார்ந்தவர் என்பதில் ஒற்றுமையான கருத்துக்கள் இல்லை. இந்த புத்தகம், கேள்வி பதில் முறை வகை இலக்கியத்தை சார்ந்தது, முக்கியமான ஆறு உரைகளையும் உள்ளடக்கியுள்ளது. இஸ்ராயேலர் பபிலோனியாவிலிருந்து வந்து எண்பது வருடங்களாயிருந்தது, ஆனாலும் அவர்களுக்கு பல விதத்தில் நம்பிக்கையில்லாத தன்மையே மேலோங்கியிருந்தது. இந்த காலத்தில் இஸ்ராயேல் சந்தித்தது பொருளியல் வறுமையே அன்றி ஆண்டவரின் அருளின் வறுமையல்ல என்ற ஆழமான சிந்தனையை மலாக்கி முன்வைக்கிறார். மலாக்கியின் புத்தகத்தின் வடிவத்தை 'கண்ணாடி விம்ப' வடிவம் என்ற அமைப்பினுள் அறிஞர்கள் காண்கின்றார்கள் உ-ம் அஆஇ-இஆஅ. 

வ.1: எபிரேய மற்றும் செப்துவாஜின்ட் விவிலியத்தில் மலாக்கி புத்தகம் மூன்றாம் அதிகாரம்  இருபத்திநான்காவது வசனத்தோடு நிறைவடைகிறது, ஆனால் தமிழ் மற்றும் சில ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் கடைசி ஐந்து வசனங்களை தனி அதிகாரமாக அதாவது நான்காவது அதிகாரமாக கொண்டுள்ளன. இந்த வசனத்தில் மலாக்கி ஆணவக்காரையையும் (זֵדִים dzedîm) கொடுமை செய்வோரையும் கடுமையாக சாடுகிறார். 'அந்த நாள் வருகிறது' என்று கடவுளின் நாளை நினைவூட்டுகிறார் (הַיּוֹם בָּ֔א hayyôm bā’).  இஸ்ராயேலர்கள் கடவுளின் நாள் என்ற ஒரு கருதுகோளை நம்பிக்கையாக கொண்டிருந்தனர், 

இது இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றிய நம்முடைய நம்பிக்கையைப் போன்றது. இந்த நாளிலே கடவுள் தீமை செய்வோரை கடுமையாக தண்டித்து, மெசியாவின் ஆட்சியை ஏற்படுத்தி, இஸ்ராயேலின் மாட்சியை மீண்டும் உறுதிப்படுத்தும் நாளாக இருக்கும் என்று நம்பினர். இந்த நம்பிக்கை இயேசுவின் காலத்திலும் இருந்தது. ஆணவக்காரர் மற்றும் கொடுமை செய்வோர் என்று யாரை குறிப்பிடுகிறார் என்பதை முழு மலாக்கி புத்தகத்தையும் வாசித்து தெரிந்து கொள்ள வேண்டும், இவர்கள் கடவுளின் சட்டங்களையும் நீதியையும் கடைப்பிடிக்காத யூதர்களாகவம், யூதரல்லாத யூதேயா வாசிகளாகவும் இருக்கலாம். சூழைக்குள் சருகு எரிந்து பொசுங்கி போவது நல்ல ஒரு உதாரணம், இதனை அதிகமானவர்கள் நன்கு அறிந்திருந்துனர், அதனையே இறைவாக்கினர் இங்கு பயன்டுபடுத்துகிறார் (בֹּעֵר כַּתַּנּ֑וּר bô‘er katannûr) எறியும் போறனைக்குள் போல்). இந்த நாளில் தண்டிக்கப்படுபவர்கள் இந்த கொடுமைக்காரர்கள் மட்டுமல்ல மாறாக அவர்களின் சந்ததியினரும் என்று, அவர்களின் அனைத்து சந்ததியினரும் கண்டிக்கப்படுகின்றனர். 

இந்த வரியிலிருந்து அக்கால ஏழை மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளலாம்.  விவிலியம் ஆண்டவருக்கு கொடுக்கின்ற முக்கியமான பெயரான 'படைகளின் ஆண்டவர்' என்ற சொல் இங்கே பாவிக்கப்பட்டுள்ளது (יְהוָה צְבָא֔וֹת YHWH dzeva’ôt அதோனாய் ட்செபாஓத் இராணுவ கடவுள்). இந்த பெயர் எப்பொழுதெல்லாம் கடவுளின் நீதி மற்றும் தண்டனையை பற்றி விவரிக்கின்றபோது அதிகமாக பாவிக்கப்படுகிறது. 

வ.2: இந்த வரி, முதல் வரிக்கு எதிர்மாறாக ஆண்டவரின் நேர்மையாளருக்கு கிடைக்கும் ஆசீர்வாதத்தை விவரிக்கின்றது. அநீதியான கொடியவர்களின் அசூர வளர்ச்சியும், நல்லது செய்வோரின் தாங்கமுடியாத வீழ்ச்சியும், இறையியலில் பல தாக்கங்களை அக்காலத்திலேயே ஏற்படுத்தியிருக்கின்றன என்பதனை இங்கே காணலாம். நன்மை செய்தும், நம்பிக்கையிழந்து துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலாக இந்த வசனம் வருகின்றது. 

ஆண்டவரின் பெயருக்கு அஞ்சி நடத்தல் என்பது (יִרְאֵ֤י שְׁמִי֙ yir’ê šemî என்பெயருக்கு அஞ்சுவோர்), ஆண்டவரின் கட்டளைகளை கடைப்பிடிப்போரைக் குறிக்கும். இந்த வசனம் முதல்ஆள் தன்மையில் அமைக்கப்பட்டு கடவுளின் நேரடி வார்த்தைகள் நினைவூட்டப்பெறுவது இதன் தனித்துவமாகும். நீதியின் கதிரவன் (שֶׁמֶשׁ צְדָקָ֔ה šemeš dzedāqāh) என்பது இங்கே கடவுளின் நீதித் தீர்ப்பைக் குறிக்கின்றது. கதிரவனின் இறக்கைகள் என்பது எதைக் குறிக்கிறது என்பது தெளிவாக இல்லை (מַרְפֵּא בִּכְנָפֶיהָ marphē’ biknāphêhā), ஒருவேளை கதிரவனை ஒரு பறவையாக உருவகப் படுத்தி, பின்னர்; இறக்கைகளாக அதன் கதிர்களை உருவகிக்கிறார் என எடுக்கலாம். துள்ளிக் குதிக்கும் பண்பை முதல் ஏற்பாடு ஆரோக்கியமான உடலின் அடையாளமாக பார்க்கின்றது, கொழுத்த கன்றுகள் தங்களின் ஆரோக்கியமான உடலின் திறமையால் துள்ளிக் குதிக்கின்றன, இதே போல் நேர்மையாளர்கள் ஆண்டவரின் வருகையின் போது துள்ளிக் குதிப்பார்கள் என்கிறார் மலாக்கி. 



பதிலுரைப் பாடல்
திருப்பாடல்: 98

1ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. 

2ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.

3இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

4உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். 

5யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். 

6ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்,

7கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக! 

8ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள்; 

9ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்.



பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார். திருப்பாடல் 98, ஒரு குழு புகழ்ச்சிப் பாடல். இதனை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம்.

அ. வவ.1-3

ஆ. வவ.4-9

இந்த இரண்டு பகுதிகளும், பாடல் பாடுங்கள் (שִׁירוּ לַיהוָה šîrû laYHWH) வ.1, ஆர்ப்பரித்து பாடுங்கள் (הָרִיעוּ לַיהוָה hārî‘û laYHWH) வ.4, என்ற விதத்தில் ஆரம்பிக்கின்றன. இவை இந்த பாடலின் புகழ்ச்சி வகையை காட்டுகின்றன. அத்தோடு அரச பாடல்கள் என்ற வகைக்குள்ளும் வரும்படியாக பல வார்த்தைகள் இந்த பாடலில் காணப்படுகின்றன. 

வ.1: ஆண்டவர் வியத்தகு செயல்கள் செய்வதாலும் அவரின் வலக்கரம் வெற்றியளிப்பதாலும், ஆண்டவருக்கு எப்போதும் புதிய பாடலே படிக்கப்படவேண்டும் என்கிறார் ஆசிரியர். வலக்கரம் மற்றும் வலிமைமிகு புயங்கள் என்பன ஆண்டவரை ஒரு வலிமையுள்ள மற்றும் ஒப்பிட முடியாத அரசராக காட்டுகின்றன. 

வ.2: ஆண்டவர் ஒரு பேரரசரைப்போல தன் தீர்ப்பினை அதாவது மீட்பை மற்றய மக்களுக்கு முன் இஸ்ராயேலருக்கு காட்டுகிறார். இது அவரின் வலிமையைக் காட்டுகிறது. 

வ.3: ஆண்டவர் தனது அன்பிரக்கத்தையும் (חַסְדּוֹ hasdô), உறுதிமொழியையும் (אֱֽמוּנָתוֹ֮ ’emûnātô) நினைவுகூருகிறார். இந்த வரியும் ஆண்டவரை ஒர் உன்னதமான அரசராகக் காட்டுகிறது. மக்களினங்கள் இந்த நன்மைத்தனங்களை காண்பதை தமக்கு பெறுமதியாக இஸ்ராயேலர் காண்கின்றனர். மற்றய மக்களுக்கு முன் தங்களது தோல்வியால் வெட்கப்படுகின்ற மக்களுக்கு இது புத்துணர்ச்சி தருகிறதாக அமைகிறது.

வ.4: ஆண்டவரை புகழ அனைத்து மக்களினங்களையும் அழைக்கிறார் ஆசிரியர். வழமையாக இஸ்ராயேலின் கடவுளை தாங்களாக மட்டும் வணங்க முயல்கிறவர்கள் இப்போது அனைவரையும் அழைப்பது, ஆண்டவர் அனைவருக்குமுரியவர் என்பதை இவர்கள் விளங்கியிருப்பதைக் காட்டுகிறது. அத்தோடு இந்த ஆர்ப்பரிப்பை மகிழ்சியோடு செய்ய கேட்கிறார். மகிழ்சியில்லாத ஆர்ப்பரிப்புக்கள் இஸ்ராயேலரின் ஆர்ப்பரிப்பாக இருக்க முடியாது. 

வ.5: யாழ் (כִנּוֹר kinôr) மற்றும் பாடல் ஒலிகள் என்பவை ஆண்டவரை புகழ தவிர்க்க முடியாத  உபகரணங்கள். கின்னோர் எனப்படும் இந்த யாழ், இஸ்ராயேலர்களின் புனித இசையில் மிக முக்கியமான ஒரு நரம்பிசைக் கருவி. தாவீது அரசர் இதனைப் பயன்படுத்தித்தான்  ஆண்டவரை புகழ்ந்ததாக நம்பப்படுகிறது. 

வ.6: ஆண்டவரை புகழ இன்னும் இரண்டு இசைக் கருவிகளை பயன்படுத்தக் கேட்கிறார் ஆசிரியர். எக்காளங்கள்; (חֲצֹ֣צְרוֹת hazdzderôt) மற்றும் கொம்புகள் (שׁוֹפָר šôpār) போன்றவை போர்குரிய இசைக்கருவிகள். இவற்றை போர் அறிவிப்பின்போதும், போர் வெற்றியின்போதும் பயன்படுத்தினர். ஆண்டவரின் வருகையும் அவர் பிரசன்னமும் இங்கே ஒரு போர் நிகழ்வினைக் காட்டுவது போல ஆசிரியர் பாடுகிறார். 

வ.7: கடலில் உள்ளவை அதிகமான வேளைகளில் அடக்க முடியாத சக்திகளாக கருதப்பட்டன. அத்தோடு உலகில் உள்ளவை அனைத்தும் ஆண்டவரின் ஆட்சிக்குட்பட்டவை என்பதையும் ஆசிரியர் இங்கே நினைவூட்டுகிறார். சில தெய்வங்களுக்கு மேலாக, கடலிலும் உலகிலும் சக்திகள் காணப்பட்டன என்ற நம்பிக்கை அக்காலத்தில் இருந்தது, ஆனால் ஆண்டவராகிய கடவுளுக்கு முன் கடல் மற்றும் நிலம் போன்றவற்றில் எந்த சக்தியும் கிடையாது என்கிறார் ஆசிரியர். அத்தோடு அவற்றை கடவுளாகிய அரசருக்கு முன் முழங்கிடுமாறு கட்டளையிடுகிறார்.

வ.8: ஆறுகளையும் (נָהָר நஹார்- ஆறு), மலைகளையும் (הַר ஹார்- மலை) உருவகப்படுத்துகிறார். ஆறுகளின் கிளைகளை கரங்களாகவும், மலைகளில் எழும் ஓசைகளை பாடல்களாகவும் பல மொழிகளின் கவி நயங்கள் பார்க்கின்றன, அவ்வாறே இந்த எபிரேய கவிஞரும் பார்க்கின்றார். 

வ.9: இவ்வளவு மேற்குறிபிட்ட செயற்பாடுகளையும் ஆண்டவருக்கு முன்னால் செய்யமாறு அனைவரையும் அழைக்கிறார் ஆசிரியர். அத்தோடு ஆண்டவரின் வருகை நீதியை மையப்படுத்திய வருகையாக இருக்கும் எனவும், அங்கே அவரின் நீதியில் எந்த விதமான பாகுபாடுகளும் இருக்காது எனவும் சாற்றுகிறார். கடவுளை அரசராகவும், நீதிபதியாகவும் பார்ப்பது அக்காலத்திலிருந்து ஒரு வழமை, இவ்வாறு பார்ப்பதன் மூலம், இவ்வுலக அரசர்களும் மற்றும் நீதிபதிகளும் எச்சரிக்கப்படுகின்றனர். கடவுளின் ஆட்சி என்ற ஒரு வாதம் கிறிஸ்தவர்களின் வருகைக்கு முன்பே வழக்கிலிருந்ததை இந்த திருப்பாடலின் வாயிலாக கண்டுணரலாம். 



இரண்டாம் வாசகம்
2தெசலோனிக்கர் 3,7-12

7எங்களைப்போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும். ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித்திரியவில்லை. 8எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை. மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். 9எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல, மாறாக, நீங்களும் எங்களைப் போல நடப்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம். 10'உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது' என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். 11உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம். 12இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம்.

ஆண்டவரின் இரண்டாம் வருகையைப்பற்றிய பிழையான வாதமும், கருதுகோள்களும் பல சலசலப்புக்களை தெசலோனிக்க திருச்சபையில் ஏற்படுத்திய அதேவேளை, சில சோம்பித்திரிபவர்கள் இதனை தமக்கு சாதகமாக பாவித்தனர் என்ற குற்றச்சாட்டு ஆசிரியருக்கு (பவுலுக்கு) முன்வைக்கப்பட்டது. ஆண்டவரின் நாள் வந்துவிட்டது என்ற ஒரு பிழையான நம்பிக்கையையும் சிலர் பரப்பி வந்ததும் ஆசிரியரின் கவனத்தில் இருந்தது. இந்த வரிகள், திருச்சபையில் அதுவும், ஆண்டவரின் இரண்டாம் வருகைக் காலத்தில் வாழ்கிறவர்கள் எப்படியான ஒழுக்க சீலர்களாக இருக்க வேண்டும் என்ற படிப்பினைகளை காட்டுகிறது. 

வ.7: வேறு நபர்களின் உதாரணத்தை எடுக்காமல் ஆசிரியர் தனது உதாரணத்தையே அதுவும் அவரோடு இருந்தவர்களின் உதாரணத்தையும் எடுக்கிறார். இந்த கடிதத்தை பவுல் எழுதியிருந்தால், அவர் உதாரணத்தை எடுக்க அவருக்கு முழு உரிமையும், தகுதியும் இருந்தது. இக் கடிதத்தை பவுல் பெயரில் வேறு ஒருவர் எழுதியிருந்தாலும், அவரும் பவுலின் உதாரணத்தைத்தான் எடுக்க வேண்டும், ஏனெனில் அதற்காகத்தான் அவர் இக்கடிதத்தை பவுலின் பெயரில் எழுதுகிறார். சோம்பல் அக்காலத்திலும் மிக முக்கியமான பிரச்சனையாக திருச்சபையில் இருந்ததை ஆசிரியர் நமக்கு இயம்புகிறார். ἀτακτέω அடாக்டெஓ- சும்மாயிருத்தல், சோம்பித்திரிதல்,  என்பது சட்டங்களை மதிக்காதிருத்தல், வேலை செய்யாமலிருத்தல், கவனமில்லாத வாழ்க்கை வாழ்தல் என்ற பல அர்த்தங்களை கொடுக்கிறது. சோம்பல்தான் பல முக்கியமான பிரச்சனைகளுக்கு காரணம் என முதல் ஏற்பாடு அழகாக காட்டுகிறது. 

Confer: நீதி 19,15: 15சோம்பல் ஒருவரை தூங்கிக் கொண்டே இருக்கச் செய்யும்; சோம்பேறி பசியால் வருந்துவார்.

சீராக் 22,1-2: 1சோம்பேறிகள் மாசுபடிந்த கல் போன்றவர்கள்; அவர்களது இழிவு கண்டு எல்லோரும் எள்ளி நகையாடுவர். 2சோம்பேறிகள் குப்பைமேட்டுக்கு ஒப்பானவர்கள்; அதைத் தொடுவோர் அனைவரும் கையை உதறித் தட்டிவிடுவர்.

சோம்பலாக இருப்பதால்தான் சிலர் தங்கள் தேவைகளுக்காக திருச்சபையை குழப்புகின்றனர், என்ற ஒரு நம்பிக்கையை ஆசிரியர் கொண்டிருந்ததை இங்கே காணலாம். 

வ.8: தெசலோனிக்க திருச்சபையில் சிலர் இலவசமாக உணவருந்தி மற்றவருக்கு தொடர் சுமையாக இருந்ததாக பவுலுக்கு அறிவிக்கப்பட்டது. சிலர் பவுலை காரணம் காட்டியும் இலவச உணவுகளை பெற்றுக்ககொண்டதாகவும் கூறப்பட்டது. அதே நேரம் சிலர் இரண்டாம் வருகை வந்துவிட்டது  இதனால் அழியக்கூடிய இந்த உலகில் வேலை செய்ய வேண்டிய தேவையில்லை என்ற வாதங்களையும் முன்வைத்தனர். இதனால் பவுல் இங்கே இரண்டு முக்கியமான படிப்பினைகளை முன்வைக்கிறார்.

அ. தான் எவரிடமும் இலவசமாக உணவருந்தவில்லை என்கிறார்: ஒரு வேளை பவுலை பற்றிய பிழையான வாதத்தை சரிசெய்ய இப்படி சொல்லியிருக்கலாம். நற்செய்தியில் ஆண்டவர், பணியாளர் தன் கூலிக்கு உரியவர் என்பதை சொல்லியிருந்தும் (✽காண்க லூக் 10,7), இங்கே ஒரு நடைமுறை சிக்கல் காரணமாக பவுல் இலவச உணவு உண்ணுவதை தவிர்த்திருந்ததைக் காண்கிறோம். இந்த காலகட்டத்தில் சிறிய-வறிய கிறிஸ்தவர்கள், பணக்கார கிறிஸ்தவர்களின் நன்மைத்தனத்தில் தங்கியிருந்தனர், இந்த நிலையை பவுல் கண்டிக்கவில்லை மாறாக வசதியிருந்தும், தங்கள் சோம்பல்தனத்தால் வேலைசெய்யாமல் இருந்தவர்களையே கண்டிக்கிறார். 

(✽7அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவர் வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம்.)

ஆ. யாருக்கும் சுமையாய் இராதபடி இராப்பகலாய் உழைத்ததாக சொல்கிறார் (νυκτὸς καὶ ἡμέρας nuktos kai hēmeras). திருப்பணியாளர்கள் நன்கொடைகளை பெற்றுக்கொண்டாலும், அந்த நன்கொடைகளுக்காக தன் மக்களை வருத்தக்கூடாது என்ற அழகான வாதத்தை திருச்சபை முன்வைக்கிறது. நன்கொடைகள் அக்காலத்திலிருந்தே மக்களை வருத்தும் சக்தியாக மாறிவிட்டதை இந்த வசனம் காட்டுகிறது. நன்கொடைக்காக மக்களை வருத்தும் சில இக்கால பணியாளர்கள் இந்த வரிகளை கவனமாக  வாசிக்க வேண்டும். மக்களின் நிலைதான் பணியாளர்களின் நிலையை தீர்மானிக்க வேண்டும் என்று பவுல் சொல்வது மிக அழகாக உள்ளது. பவுல் கூடாரம் அடிக்கும் தொழிலை தன் சாதாரண தொழிலாக கொண்டிருந்தவர், தெசலோனிக்காவில் அதனை அவரும் அவர் நண்பர்களும்  செய்திருந்திருக்க அதிகமான வாய்புள்ளது. 

வ.9: இந்த வசனத்தில் எட்டாம் வசனத்தை பவுல் விளக்குகிறார். அதாவது இயேசுவின் அறிவுரையான, வேலையாள் கூலிக்குரியவர் என்ற வாதத்தை பவுல் ஏற்றாலும், நல்ல முன்மாதிரி காட்ட பணியாளர்கள் தங்கள் இலவசங்களை துறக்க வேண்டும் என்கிறார். முன்மாதிரி காட்டலும் ஒரு பணியாளரின் முக்கியமான நற்செய்திப் பணி என்பதும் இங்கு புலப்படுகிறது. 

வ.10: உழைக்க மனமில்லாதவர் உண்ணலாகாது, இந்த வசனத்தை பவுல் முன்னபே இவர்களுக்கு அறிவித்திருக்க வேண்டும். இதிலிருந்து உழைக்க மனமில்லாத பலர் உண்ணுவதற்கு ஆயத்தமாக இருந்த நிலை பாரதூரமானது என்பது தெளிவாகிறது. தொடக்கநூலில் கடவுள் ஆதாமை உழைத்து உண்ணும் படிதான் கட்டளை கொடுத்தார் ஆனால் இன்று உழைக்காமல் பலர், மற்றவர்களின் உழைப்பில் உண்டுகொண்டிருப்பது வழக்கமாகிவிட்டது. அத்தோடு அந்த உழைக்காமல்-உண்ணலுக்கு வியாக்கியானம் செய்வதும் வழக்கமாகிவிட்டது. ஆனால் பவுலுடைய வாதம் உழைக்காத அனைவருக்கும் பொருந்தும். 

வ.11: தெசலோனிக்க திருச்சபைக்கும் இன்றைய பல ஈழத்து தள திருச்சபைகளுக்கும் பல தொடர்புகள் இருக்கும் போல. இந்த உழைக்காமல் சுற்றித்திரியும் தெசலோனிக்க கிறிஸ்தவர்களின் விபரங்களை பவுல் அறிந்திருப்பார் என தெரிகிறது. ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்களின் பெயர்களை பவுல் சொல்லாமல் விடுகிறார், சில இடங்களில் பவுல் சச்சரவு செய்கிறவர்களின் பெயர்களை சொல்ல தயங்குவதில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 

வ.12: இறுதியாக இத்தகைய சோம்பல்காரர்களுக்கு கடவுளின் பெயரால் கட்டளை கொடுக்கப்படுகிறது. ஒருவேளை இவர்கள் குழப்படிகாரர்களாக இருந்தாலும், இயேசு கிறிஸ்துவின் பெயரால் வரும் கட்டளைகளை ஏற்றுக்கொள்கிறவர்கள் என நம்பலாம். 


நற்செய்தி வாசகம்
லூக்கா 21,5-19

5கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். கவின் மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். 6இயேசு, 'இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்' என்றார். 7அவர்கள் இயேசுவிடம், 'போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?' என்று கேட்டார்கள். 8அதற்கு அவர், 'நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, 'நானே அவர்' என்றும், 'காலம் நெருங்கி வந்துவிட்டது' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். 9ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும்பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது' என்றார். 10மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: 'நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். 11பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும். 12இவை அனைத்தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின்பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். 13எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். 14அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். 15ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. 16ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். 17என்பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். 18இருப்பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. 19நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள்.

இயேசுவின் காலத்திலிருந்தது இரண்டாவது எருசலேம் தேவாலயமாகும். முதலாவது தேவாலயம், அதாவது சாலமோனின் தேவாலயத்தை பபிலோனியர் இடித்து தரைமட்டமாக்கினர், அதன் பொக்கிசங்களையும் பபிலோனியாவிற்கு கொண்டு சென்றனர் (ஒப்பிடுக 2அரசர் 25). பபிலோனிய அரசின் வீழ்ச்சியின் பின் எழுந்த பாரசீகர் இஸ்ராயேலருக்கு விடுதலை அளித்தனர், அவர்களை பாலஸ்தீனாவிற்கு செல்லவும் அனுமதித்தனர். இஸ்ராயேலருக்கு அதாவது யூதருக்கு பாரசீகர் விடுதலை அளித்தது அவர்களின் சொந்த அரசியல் நலனுக்காகவே என்றும் அதிகமான வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பாரசீகர் எகிப்தையும், மற்றும் கீரேக்கத்தையும் கைப்பற்ற இந்த பாலஸ்தீன பிரதேசம் முக்கியமான கேந்திர நிலையமாக இருந்தது. யூதர்களுக்கு விடுதலை அளித்த இவர்கள், எருசலேம் தேவாலயத்தையும் மீள நிர்மாணிக்கவும் உதவி செய்தனர். நெகேமியா மற்றும் எஸ்தர் புத்தகங்கள் இந்த வரலாற்றை இன்னொரு பார்வையில் விவரிக்கின்றது. நெகமியா கட்டிய இந்த ஆலயம் இரண்டாவது ஆலயம் என்று அறியப்படுகிறது. இந்த ஆலயத்தை பின்னர் பெரிய ஏரோது அழகு படுத்தினார். இந்த அழகு படுத்தப்பட்ட ஆலயத்தின் காலத்தில்தான் இயேசு வாழ்ந்தார். இயேசுவிற்கும் அவர் காலத்தது யூதர்களுக்கும், சாலமோன் கட்டிய முதலாவது ஆலயத்தை அறிந்திருக்கக்கூடிய வாய்ப்பு இருந்திருக்காது.

இரண்டாவது ஆலயம் அதன் அழகிலும் மேன்மையிலும் முதலாவது ஆலயத்திற்கு குறைவாகவே இருந்தது (காண்க அக்காய் 2,1-3). இந்த மேன்மையில் குறைவாயிருந்த மற்றும் பெரிய ஏரோது அரசனால் அழகுபடுத்தப்பட்டிருந்த ஆலயத்தைப் பற்றியே இன்றை வாசகம் கருத்தியம்புகின்றது.  அத்தோடு இந்த பகுதியை லூக்கா எழுதிய போது ஆலயம் உரோமையர்களால் அழிக்கப்பட்டதை (கி.பி 70) தன் வாழ்நாளில் கண்டிருப்பார் அல்லது கேள்விப்பட்டிருப்பார். அதேவேளை ஆலயத்தின் அழிவிற்கும், யூதர்களை உரோமையர் துன்புறுத்தியதற்கும், யூதர்கள் கிறிஸ்தவர்களை காரணம் காட்டினர். இப்படியான காலப்பகுதியில், இயேசுவின் இந்த வரிகளை நினைவுகூருவது யூத கிறிஸ்தவர்களுக்கும், மற்றைய கிறிஸ்தவர்களுக்கு; உதவியாக இருந்திருக்கும். ஆலயத்தின் அழிவைப் பற்றிய வரிகள் மத்தேயு நற்செய்தியிலும் (மத் 24,1-3) மாற்கு நற்செய்தியிலும் (மாற் 13,1-4) வித்தியாசமாக பதியப்பட்டுள்ளன. 

வ.5: இந்த ஆலயத்தின் கட்டமைப்பைப் பற்றி அன்றைய உலகின் சில வரலாற்று ஆசிரியர்களும் எழுதியிருக்கிறார்கள். யோசேபுஸ் மற்றும் உரோமைய வரலாற்றாசிரியரான துகிதுஸ் என்பவர்களும் எழுதியிருக்கிறார்கள். பெரிய ஏரோது ஒரு கட்டடப் பிரியன், இவர் தன் அரசியல் நோக்கத்திற்காக இந்த ஆலயத்தை அழகுபடுத்தியிருந்தார். இதனையே சிலர் பெருமையாக பேசிக் கொண்டிருந்ததை இயேசு கேட்கிறார். 

வ.6: இயேசு ஆலயத்தின் அழிவை முன்கூட்டியே அறிவித்தார் என்பது போல இந்த வரியை லூக்கா அமைக்கிறார். கல்லின்மேல் கல்லில்லாதபடி அழிதல் என்பது, கற்கள் கூட எடுத்துச் செல்லப்படும் என்பதை உணர்த்துவது போல உள்ளது (οὐκ ἀφεθήσεται λίθος ἐπὶ λίθῳ ouk afethēsetai lithos epi lithō). இரண்டாவது ஆலயம் அழிந்ததன் பின்னர் உரோமையர்கள் அந்த இடத்தை தரைமட்டமாக்கினர், பின்னர் இன்னொரு உரோமைய சீசர் அந்த இடத்தை நிரப்பி அதில் உரோமைய கடவுளுக்கு ஆலயம் அமைத்தான். கிறிஸ்தவர்கள் காலத்தில் அதே இடத்தில் கிறிஸ்தவ மன்னர்கள் வேறு தேவாலயங்களையும் அமைத்தனர், பின்னர் வந்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அவற்றை இடித்துவிட்டு அதில் மசூதிகளை அமைத்தனர். இன்று இரண்டாம் தேவாலயம் அமைந்திருந்ததாக கூறப்படும் இடத்தில் அல்-அக்ஷா மசூதி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தேவாலயத்தை ஏரோது வளப்படுத்தியபோது பெரிய தடுப்புச்சுவர்களை எழுப்பி அங்கே மணல் மேடுகளையும், சமதளங்களையும் அமைத்திருந்தான். இப்படியான ஒரு தடுப்புச் வரின் ஒரு பகுதிமட்டும்தான் இன்று எஞ்சியிருக்கிறது. அதனைத்தான் யூதர்கள் 'அழுகையின் சுவர்' என்றழைக்கிறார்கள். அங்கே யூதர்கள் வந்துகூடி தங்களது ஆலயத்ததை நினைத்து அழுகிறார்கள். ஒருவரின் மதத்தை அழித்து அதில் இன்னொரு மதத்திற்கு நினைவிடம் அமைக்கும் மனிதர்களின் அசுத்தமான வரலாற்றிக்கு தூய நகர் எருசலேம் நல்லதோர் உதாரணம். எருசலேமிற்கு அமைதியின் நகர் என்றும் ஒரு பொருளுண்டு, அந்த அமைதியை ஆண்டவர்தான் எருசலேமிற்கு தரவேண்டும் என நினைக்கிறேன். ஏன் எருசலேமால் அமைதியை கொடுக்கவும் முடியவில்லை, அமைதியில் வாழவும் முடியவில்லை என்பதை அரசியல்-சமய சுயநல வாதிகள்தான் சொல்ல வேண்டும், நம் ஆண்டவர் அல்ல.

வவ.7-12: ஆண்டவர் தேவாலயத்தின் அழிவைப்பற்றி கூறுகின்ற போது இவர்கள் கோபம்கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மாறாக அவர்கள் இந்த அழிவுக்காலத்தின் அடையாளங்களைக் கேட்கிறார்கள். இது ஒருவகை இரண்டாம் வருகை அல்லது இறுதிகால விவரிப்பு போல உள்ளது. இயேசு இவர்களுக்கு பல அடையாளங்களைத் தருகிறார். 

அ. பலர் இயேசுவின் பெயரை தவறாக பயன்படுத்துவர்: இயேசுவின் உயிர்ப்பின் பின்னர்  இயேசுவின் பெயரை பலர் தவறாக பயன்படுத்தியுள்ளனர். இயேசுவின் காலத்தைத் தொடர்ந்து பலர் தங்களை மெசியா என்றும் கூறிக்கொண்டனர், இவர்களுள் சிலர் புதிய மதங்களையும் உருவாக்கினர். 

ஆ. காலம் நெருங்கிவிட்டது என்றும் கூறுவார்கள்: ஆண்டவரின் இரண்டாம் வருகை அல்லது  இறுதிக்காலம் என்பது ஆரம்ப கால திருச்சபையில் மிக முக்கியமான கருதுகோளாக  இருந்தது. இதனைவைத்து சிலர் பல குழப்பங்களையும் உருவாக்கினர். இந்த குழப்பங்கள் திருத்தூதர்களின் சீடர்களுக்கும், நற்செய்தியாளர்களுக்கும் பலத்த தலையிடியைத் தந்தது. அதன் எதிர்விளைவுகளை இங்கே காணலாம். 

இ. (வ.9): இந்த வசனம் ஒரு வேளை யூதர்களுக்கும், உரோமையர்களுக்குமிடையில் நடத்த  இறுதிப்போரைப் பற்றியதாக இருக்கலாம். இறுதிப்போரில் யூதர்கள் பலமான பின்னடைவைச் சந்தித்தார்கள். மசாதா யுத்தம் என்றும் இது அறியப்படுகிறது. இதன் பின்னர் யூதர்கள் பல அநியாயங்களையும் சந்தித்தார்கள். சில யூதர்கள் இதற்கு கிறிஸ்தவர்களே காரணம் என்றும் குற்றம் சாட்டினர். இந்த பயங்கரமான நாட்கள் ஆரம்ப திருச்சபைக்கு பல கேள்விகளை தந்தது. இதற்கு விடைதருவது போல் இந்த வரி அமைந்துள்ளது. 

ஈ. நாட்டை எதிர்த்து நாடும், அரசை எதிர்த்து அரசும் எழும்: இதுவும் யூதர்களின் கிளர்ச்சியையும் அத்தோடு உரோமையில் உரோமை பேரரசில் நடந்த சிறு குழப்பங்களையும் நினைவூட்டுகிறது. 

உ. நிலநடுக்கம், பஞ்சம், கொள்ளை நோய்; மற்றும் அச்சுறுத்தும் அடையாளங்கள்: ஆண்டவருடைய இரண்டாம் வருகை அல்லது கடவுளின் நாளில் இந்த அடையாளங்கள் நடைபெறும் என்பது பழங்கால நம்பிக்கை. முதல் ஏற்பாட்டிலும் இந்த அடையாளங்கள் ஆண்டவரின் வருகையில் எதிர்பார்கப்பட்டன. இந்த அடையாளங்கள் அக்காலத்தில் ஏற்கனவே ஏற்பட்டவை, அதேவேளை விஞ்ஞானம் வளர்ந்திராத அந்நாட்களில் இவை மனிதருக்கு அறியப்படாத சக்திகளாக பார்க்கப்பட்டன. அக்கால சில சமய நம்பிக்கைகள் இந்த அடையாளங்களை தெய்வங்களின் போராகவும் பார்த்தன (எசாயா 13,6-16: அக்காய் 2,6-7: செக் 14,4). 

ஊ. துன்புறுத்தப்படல், தொழுகைக்கூடத்திற்கு கொண்டு செல்லல், சிறையில் அடைத்தல், ஆளுநர்களிடம் கொண்டு செல்லல்: இவையனைத்தும் ஆரம்ப கால திருச்சபை சந்தித்த பயங்கரமான துன்புறுத்தல்களும் துன்பங்களுமாகும். இவற்றுக்கு ஆரம்பகால திருச்சபை தலைவர்கள் பல விளக்கங்களைக் கொடுத்தனர். இயேசுவும் இதற்கு பல விளக்கங்களைக் கொடுத்தார். லூக்கா இந்த துன்பங்களை ஆண்டவரின் இரண்டாம் வருகையின் ஆயத்த நிகழ்வாக பார்க்கின்றார். தொடக்க திருச்சபை பல துன்பங்களை உரோமையரிடமிருந்தும் யூத தலைமைத்துவமத்திடமிருந்தும் ஒரே நேரத்தில் சந்தித்தது. இருந்தும் உரோமையரிலும், யூதரிலும் பலர் ஆரம்ப திருச்சபையின் அங்கத்துவர்களாக இருந்ததையும் நினைவுகூர வேண்டும். 

வ.13: லூக்கா மருத்துவரான படியால் இங்கே உளவியல் ஆலோசனை செய்கிறார். துன்பங்களையும் காட்டிக்கொடுப்புக்களையும் இயேசுவிற்கு சாட்சியம் பகர்வதற்கான வாய்ப்பாக பார்க்கிறார் (εἰς μαρτύριον eis marturion -ஒரு சாட்சியம்). 

வ.14: துன்பங்களுக்கு பதிலளிப்பது என்பது ஒரு முக்கியமான துன்பம். இக்காலத்திலும் சில துன்பங்கள் மறைபொருளாகவே நீடிக்கின்றன. துன்பங்களுக்கு விளக்கமின்மை அந்த துன்பங்களை பூதாகரமாக்குகின்றன. அனைத்து துன்பங்களுக்கும் விளக்கம் கிடையாது என்ற உண்மையை லூக்கா அழகாக காட்டுகின்றார். 

வ.15: ஆபத்தான வேளையில், அனைவரும் கைவிடுகின்ற வேளையில் எல்லாருக்கும் எல்லாமாக ஆண்டவரே வருவார் என்ற நம்பிக்கை கொடுக்கப்படுகின்றது. எதிரிகளால் கிறிஸ்தவர்களை எதிர்த்து நிற்கவும் பேசவும் முடியாது என்று லூக்கா பதிவு செய்வது, துன்புறுத்தப்பட்டாலும் உண்மையானவர்கள் கிறிஸ்தவர்கள்தான் என்ற நம்பிக்கையைக் கொடுக்கின்றது. 

வ.16-17: இந்த வசனம் கிறிஸ்தவர்களுக்கு இன்னோர்  அதிர்ச்சியைக் கொடுக்கிறது. துன்புறுத்துகிறவர்கள் வெளியாட்கள் மட்டுமல்ல மாறாக குடும்பத்தவருமே என்ற இன்னொரு ஆரம்ப கால திருச்சபையின் துன்பியல் காட்டப்படுகிறது. ஆரம்ப கால திருச்சபையில் ஒருவர் கிறிஸ்தவராகவும், மற்றவர் கிறிஸ்தவத்தை விரும்பாதவராகவும் இருந்தனர், இது பல கசப்புக்களையும் சில வேளைகளில் காட்டிக் கொடுப்புக்களையும் உண்டுபண்ணியது. இந்த தொகுப்பில் பெற்றோர், சகோதரர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் அடங்குகின்றனர். காட்டிக்கொடுப்பு எப்பக்கத்திலிருந்து வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய தைரியத்தை கேட்கிறார் லூக்கா. 

வ.18: தலைமுடி ஒன்று கூட விழாது: (καὶ θρὶξ ἐκ τῆς κεφαλῆς ὑμῶν οὐ μὴ ἀπόληται. kai thridz ek tēs kefalēs humōn hou mē apolētai -ஆனால் உங்கள் தலையிலிருந்து ஒரு முடியும் உதிராது) உண்மையில் கலாபனையின்போது கிறிஸ்தவர்கள் உயிர் உட்பட அனைத்தையும் இழந்தனர். ஆனால் இங்கு தலைமுடிகூட விழாது என்பது துன்பத்தையல்ல மாறாக துன்பத்தையும் தாண்டிய சாட்சியத்தைக் குறிப்பதுபோல இருக்கிறது. இந்த தலைமுடி இறையரசை குறிப்பதாகவே பார்க்ப்படவேண்டும். 

வ.19: மனவுறுதியோடு வாழ்வைக் காத்துக்கொள்ளல்: இங்கே வாழ்வு என்பது நிலைவாழ்வை அல்லது மறுவாழ்வைக் குறிக்கலாம். இந்த வசனத்திலிருந்து ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் சிலர் கலாபனையின் போது தங்கள் நம்பிக்கையை மறுதலித்த வரலாற்றைக் காட்டுகின்றது. லூக்காவின் பார்வையில் இவர்கள் வாழ்வை இழந்தவர்கள். 

இரண்டாம் வருகை எப்போது என்று கேட்டு,

கேள்வியும் விளங்காமல் விடையும் தெரியாமல்,

மற்றவர்களை குழப்பும் கிறிஸ்தவம் ஆபத்தானது.  

ஆண்டவருக்கு வேண்டியது சாட்சியம் மட்டுமே.

அவர் வரும் நேரம் வரட்டும்.

அன்பான ஆண்டவரே உமக்கு சாட்சியம் சொல்ல

எம்வாழ்வை தகுதியாக்கும். 

இன்று தெரிவாகும் புதிய இலங்கை குடியரசுத் தலைவர்,

நாட்டையும் மக்களையும் நேசிக்கும் பணியாளராக இருக்க,

செபங்கள்!