இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் முப்பதாம் வாரம் (ஆ)

முதல் வாசகம்: எரேமியா 31,7-9
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 125
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 5,1-6
நற்செய்தி: மாற்கு 10,46-52


முதல் வாசகம்
எரேமியா 31,7-9

ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்; முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்; 'ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்!' என்று பறைசாற்றுங்கள். 8இதோ! வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்; மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் காலூனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்; பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர். 9அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களைநான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன்.ஏனெனில், நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.

எரேமியா தென்நாடான யூதேயாவின் வாழ்வில், ஈடு இணையற்ற இறைவாக்கினர். இவர் காலத்தில்தான் எருசலேம் பபிலோனியரிடம் வீழ்ந்தது. எரேமியா வடநாடான இஸ்ராயேல் மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார் என்ற ஒரு பாரம்பரியமும் இருக்கிறது. யூதேயாவின் இடப்பெயர்விற்கு பின்னர், எரேமியா எகிப்திற்கு சென்று அங்கிருந்து இஸ்ராயேல் மக்களை தேடினார் என்றும் நம்பப்படுகிறது. எரேமியா எகிப்திலே மறைசாட்சியானார் என்பதும் ஒரு பாரம்பரியம். நாடு கடத்தப்பட்டோருக்கு எரேமியா கடிதம் ஒன்றை எழுதுகிறார் (காண்க எரே.29), இந்த கடிதத்தை தொடர்ந்து அவருடைய நம்பிக்கை கலந்த வார்த்தைகள் பின் அதிகாரத்தில் தரப்படுகின்றன. 31வது அதிகாரத்தில் உறுதிதரும் வார்த்தைகளால் எரேமியா தன் மக்களை திடப்படுத்துகிறார்.

வவ.1-6: இஸ்ராயேல் மக்கள் தங்கள் கடவுள், தங்களை கைவிட்டுவிட்டார் என்று உணர்ந்தனர். இடப்பெயர்வும், அது கொண்டுவந்த துன்பமான நாட்களும் அவர்களை இப்படி எண்ணத் தோன்றியது. ஆனால் ஏரேமியா இந்த சிந்தனைகளை மாற்றுகிறார். கடவுள் தன் உடன்படிக்கையை மறக்கவில்லை என்கிறார். இஸ்ராயேலை அவர் கன்னிப் பெண்ணாகவும், கடவுளை அவள் காதலனாகவும் காட்டுகிறார். எருசலேம் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்கிறார். சமாரியாவின் வளமான மலைகளும், அதன் பசுமையான நினைவுகளும் பாடப்படுகின்றன. இந்த வரிகள் அதிகமாக வடநாடான இஸ்ராயேலையும், அதன் மக்களையும் குறிப்பது போலவே தோன்றுகிறது. எரேமியா தென்நாட்டில் இருந்தாலும், அவருடைய நினைவுகள் வடநாட்டையும் அதன் மக்களையும் நினைக்கிறது என்பது காட்டப்படுகிறது.

வ.7: வடநாடான இஸ்ராயேலைக் குறிக்க பல நேர்த்தியான வார்த்தைகள் பாவிக்கப்படுகின்றன. யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடச் சொல்கிறார். யாக்கோபு என்ற சொல் இங்கே வடநாட்டை குறிப்பதாகவே அமைகிறது (לְיַֽעֲקֹב שִׂמְחָ֔ה லெயா'அகோவ் ஷிம்காஹ்- யர்ககோபுவிற்கு மகிழ்ச்சி பாடல் பாடுங்கள்). யாக்கோபை மக்களினத் தலைவன் என்கிறார் ஆண்டவர். அதாவது யாக்கோபு என்னும் வடநாடு இன்னமும் ஆண்டவரின் அன்பினைப் பெற்றவர்தான் என்பது சொல்லப்படுகிறது (בְּרֹ֣אשׁ הַגּוֹיִ֑ם பெரோ'ஷ் ஹகோயிம்- மக்களினத் தலைவனை).

இஸ்ராயேலின் மிஞ்சினவர்களை கடவுள் மீட்டருளினார் என்று பறைசாற்றச் சொல்கிறார் கடவுள் (אֵת שְׁאֵרִית יִשְׂרָאֵל 'எத் ஷெ'எரித் யிஷ்ரா'ஏல்- இஸ்ராயேலின் மிஞ்சினவர்கள்). இஸ்ராயேலில் மிஞ்சினவர்களுக்கு என்ன நடந்தது என்பது ஒரு பெரிய கேள்வி. வடநாட்டு மக்கள் அசிரியாவில் காணமலே போனார்கள். அவர்களில் சிலர் எகிப்து நாட்டிற்கு அகதியாக சென்றுவிட்டார்கள் என்றும் எரேமியா கருதினார். இஸ்ராயேலில் மிஞ்சினர்கள் என்பது இங்கே யூதேயாவினரையா, அல்லது இஸ்ராயேலரையா குறிக்கிறது என்பதிலும் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன.

வ.8: வடக்கு நாட்டிலிருந்து அவர்களை அழைத்து வருவேன் என்கிறார் ஆண்டவர். מֵאֶרֶץ צָפ֗וֹן மெ'எரெட்ஸ் ட்சாபோன்- வடக்கு நாட்டிலிருந்து. இந்த வரி வட நாட்டினரை (இஸ்ராயேல்) குறிக்கிறது என்றால் 'வடக்கு' என்பது அசிரியாவைக் குறிக்கலாம், அல்லது இது தென்நாடு (யூதேயா) என்றால், இது பபிலோனியாவைக் குறிக்கும். பபிலோனியா வடநாடு என்பது பொருந்துவதாக தெரியவில்லை. இருந்தாலும், இந்த இடத்தில் வடநாடு என்பது மட்டும் சொல்லப்படாமல், உலகின் கடை எல்லையிலிருந்து மக்கள் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது (וְקִבַּצְתִּים֮ מִיַּרְכְּתֵי־אָרֶץ֒ வெகிபாட்ஸ்திம் மிய்யார்கெதெ-' ஆரெட்;ஸ்- உலகின் தூரஇடங்களிலிருந்து கூட்டிச்சேர்ப்பார்).

இந்தக் கூட்டத்தினுள், பார்வையற்றோரும், காலூனமுற்றோரும், கருவுற்றோரும், பேறுகாலப் பெண்களும் அடங்குவதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் பெரும் கூட்டமாய் திரும்பி வருவார்கள் எனவும் காட்டப்படுகிறது. இந்த பெரும் கூட்டமாக திரும்பி வரும் காட்சி இஸ்ராயேல் வாசகர்களுக்கு அவர்கள் கேள்விப்பட்ட அவர்களின் முன்னோரின் விடுதலைப் பயண உணர்வைக் கொடுத்திருக்கும்.

வ.9: இடப்பெயர்வு அழுகையோடுதான் நடைபெறுகிறது, முடிவும் பெறுகிறது. பலவற்றை இழந்தவர்கள் நாடு திரும்பும் போது, அழுகையோடுதான் திரும்பி வருகிறார்கள். இந்த அழுகை அவர்களின் துன்பத்தையும், அதேவேளையில் தற்போது கிடைத்திருக்கும் ஆனத்தத்தையும் குறிக்கும்.

ஆறுதலளித்து அவர்களை திரும்பிவரச் செய்வேன் என்கிறார் ஆண்டவர். மன்றாட்டுக்களோடு அவர்களை நடத்திச் செல்வேன் என்கிறது எபிரேய பாடம் (וּֽבְתַחֲנוּנִים֮ אֽוֹבִילֵם֒ אֽוֹלִיכֵם֙ வுவ்தாஹானூனிம் 'ஓவிலெம் 'ஓலிகெம்- மன்றாட்டுக்களோடு அவர்களை நடத்துவேன்). நீரோடைகள் மற்றும் சீரான பாதைகள் பாலைவன பிரதேச மக்களுக்கு மிகவும் விருப்பத்திற்கு உரியவை. இந்த பாதைகள் கால்களை வலுப்படுத்தும், அத்தோடு சோர்வையும் இல்லாமல் செய்யும். இதனைத்தான் கடவுள் நாடுதிரும்பும் மக்களுக்கு கொடுக்கவிருப்பதாகச் சொல்கிறார். இந்த உருவகங்கள் இஸ்ராயேல் மக்களுக்கு மிகவும் தெரிந்தவையாகவும் விரும்பப்பட்டவையாகவும் இருந்தன.

ஆண்டவர் இஸ்ராயேலுக்கு தன்னுடைய உரிமையை நினைவு படுத்துகிறார். தன்னை இஸ்ராயேலின் தந்தை என்கிறார் (כִּי־הָיִ֤יתִי לְיִשְׂרָאֵל לְאָ֔ב கி-ஹாயிதி லெயிஸ்ரா'எல் லெ'ஆவ்- ஏனெனில் நான் இஸ்ராயேலின் தந்தைகயாக இருக்கிறேன்). ஏப்ராயிமை தன்னுடைய தலைச்சான் பிள்ளை என்கிறார். எப்ராயிம் (אֶפְרַ֖יִם 'எப்ராயிம்), யாக்கோபை அல்லது வடநாட்டைக் குறிக்கும் இன்னொரு முக்கியமான சொல். எப்ராயிம் யாக்கோபுவின் மகனான யோசேப்பின் மகன், இவர் யாக்கோபுவின் பன்னிரு புதல்வர்களில் ஒருவராக இல்லாவிட்டாலும், பன்னிரு கோத்திரங்களில் ஒன்று எப்ராயிம் என்றே அழைக்கப்படுகிறது. அதேவேளை இந்த பெயர் வடநாடான இஸ்ராயேலுக்கு ஒரு ஒத்த கருத்துச் சொல்லாகவும் பாவிக்கப்டுகிறது. וְאֶפְרַ֖יִם בְּכֹ֥רִי הֽוּא׃ வெ'எப்ராயிம் பெகோரி ஹு'- எப்ராயிம் அவன் என் தலைச்சான் பிள்ளை.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 126

விடுதலைக்காக மன்றாடல்

(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)



1சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.

2அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது; ‟ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

3ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.

4ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.

5கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.

6விதை எடுத்துச் செல்லும்போது – செல்லும்போது – அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது – வரும்போது – அக்களிப்போடு வருவார்கள்.



இது ஒருவகை சீயோன் மலைப்பாடல். שִׁ֗יר הַֽמַּעֲלוֹת ஷிர் ஹம்மா'லோத். ஐந்தாவது புத்தகத்தை சார்ந்த இப்பாடலை அதிகமானவர்க்ள் ஒரு குழு புலம்பல் பாடலாக காண்கின்றனர். ஆறு வரிகளை மட்டும் கொண்டு;ள்ள இப்பாடலை அதன் அர்த்தத்தை மையமாகக் கொண்டு இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். எதிர்கால வளமையை மீளாக்குதல் என்பதே இப்பாடலின் மைய பொருளாக வருகிறது. (வவ.1-3, வவ.4-6)

வ.1: உயர ஏறுதலின் பாடல் என்று தொடங்குகிறது. சீயோனின் வளமையை ஆண்டவர் திரும்பி கொணர்ந்தபோது கனவு போலிருந்தது என்பது எந்த நிகழ்வை குறிக்கிறது என்பதில் தெளிவின்மை இருக்கிறது. கி.மு 701ல் சென்னாகெரிபின் முற்றுகையின் போது ஆண்டவர் எருசலேமை அற்புதமாக காத்த நிகழ்வை குறிக்கிறது என்பர் சிலர் (காண்க எசாயா 37,36-37). ஆனால் இது ஒரு விவசாய பாடல் போல தோன்றுகிற படியால், இது காலத்தை கடந்தது என்றும் சொல்லலாம். திருப்பாடல்களுக்கு காலத்தைக் கணிப்பது மிகவும் கடினம்.

வ.2: 'அப்போது அவர் எங்கள் வாய்;களையும், நாக்குகளையும் சிரிப்பால் நிறைத்தார்' என்றே இரண்டாவது வரியின் அ பிரிவை, நேரடி மொழிபெயர்க்க வேண்டும். பிற இனத்தார் என்பது இங்கு பிற நாட்டவர்களை அதாவது இஸ்ராயேலரின் கடவுளை வணங்காதவர்களை குறிக்கிறது.

வ.3: மக்களின் மகிழ்ச்சிக்கு காரணம் ஆண்டவரின் மாபெரும் செயல்கள் என்பது சொல்லப்படுகிறது. ஆண்டவரின் மாபெரும் செயல்கள் என்பது மக்களின் துன்பத்தை துடைக்கும் செயலாக மாறுகிறது. הִגְדִּיל יְהוָה ஹிக்தில் அதோனாய்- மாபெரும் செயல்புரிந்தார் ஆண்டவர்.

வ.4-6: இது இரண்டாவது பிரிவின் தொடக்கத்தில் முதலாவது வசனத்தில் வந்த அதே 'வளமையை ஆண்டவரே திருப்பி கொண்டுவாரும்' என்று பொருளில் அமைந்துள்ளது. தென்நாடு என்பது நெகேபுவைக் குறிக்கும். பாலைவனத்தில் ஆறுகள் கிடையாது, ஆனால் ஓடைகள் எனப்படும், மழைக்கால ஆறுகளை, மக்கள் கடவுளின் அதிசய கொடையாகக் கண்டனர். மழையைத் தருபவரும் கடவுள் என்றபடியால் அது அவரின் ஆசீர்வாதமாகக் கருதப்பட்டது. ஆசிரியர் இந்த ஓடைகளை தங்களது வாழ்வுக்கு ஒப்பிடுகிறார். இந்த இரண்டாவது பிரிவில் இரண்டு விடயங்கள் சொல்லப்பட்டுள்ளது.

அ). கண்ணீரில் விதைப்பு - மகிழ்சியில் அறுவடை

ஆ). புலம்பலோடு விதை விதைப்பு - மகிழ்ச்சியில் கதிர் சேகரிப்பு.

விசுவாச வாழ்வு, விவசாயிகளின் அனுபவத்தோடு ஒத்திருப்பதை அழகாகச் சொல்லுகிறார் இந்த அறியப்படாத ஆசிரியர்.



இரண்டாம் வாசகம்
எபிரேயர் 5,1-6

துன்புற்ற தலைமைக் குரு

1தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார். 2அவர் தாமே வலுவின்மைக்கு ஆளாயிருப்பதால், அறியாமையில் இருப்போருக்கும் நெறி தவறி நடப்போருக்கும் பரிவு காட்டக் கூடியவராயிருக்கிறார். 3அவர் மக்களுடைய பாவத்திற்குக் கழுவாயாகப் பலி செலுத்துவது போல, தம் வலுவின்மையின் பொருட்டுத் தமக்காகவும் பலி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்.✠ 4மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்தது போன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வர வேண்டும்.✠ 5அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகத் தம்மையே உயர்த்திக் கொள்ளவில்லை. 'நீர் என் மைந்தர்; இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்' என்று அவரிடம் கூறியவரே அந்த மேன்மையை அவருக்கு அளித்தார். 6இவ்வாறே மற்றோரிடத்தில், 'மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்றும் கூறப்பட்டுள்ளது.


இயேசுவின் தலைமைக்குருத்துவத்தின் நிலையை விளக்கும் இன்னொரு முயற்ச்சி இந்த பகுதி. தலைமைக் குருவாக இயேசுவை அடையாளம் காண்பதன் வாயிலாக, தலைமைக் குருக்களைப் பற்றிய சில பிழையான கருத்துக்களை சரிசெய்கிறார் ஆசிரியர். தலைமைக் குருக்கள் இந்த கடிதம் எழுதப்பட்டவேளையில் பிரதான அதிகாரிகளாக இருந்திருக்க வேண்டும். தலைமைக் குருக்களை புறக்கணித்துவிட்டோம் என்ற குற்ற உணர்வும் சில கிறிஸ்தவர்களுக்கு இருந்திருக்கலாம். அதேவேளை இயேசு தலைமைக்குருவாக இருந்தால் மட்டுமே மக்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அவரை அப்படிக் காட்டவேண்டிய ஒரு தேவையும் ஆசிரியருக்கு இருந்திருக்கிறது எனலாம்.

வ.1: தலைமைக்குரு யார் என்பதை தன் வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார். தலைமைக்குருவைப் பற்றி வாசகர்கள் நன்கு தெரிந்திருப்பார்கள். இருந்தாலும், இப்படிச் சொல்வதன் மூலம், மக்களின் கருத்தை தாங்கள் ஆமோதிப்பதை அவர் நினைவூட்டுகிறார் எனலாம். ἀρχιερεὺς ஆர்கெய்யெரெயுஸ்- தலைமைக்குரு. தலைமைக்குருக்கள் சதுசேயர்களாக இருந்தார்கள் என நம்பப்படுகிறது. தலைமைக்குருக்களுக்கும் மக்கபேயர்களுக்கும் நெருங்கிய வரலாற்று தொடர்பு இருந்திருக்க வேண்டும். மக்கபேயர்கள் அல்லது ஹஸ்மோனியர்கள் உரோமையருடைய காலத்தில் சதுசேயர்களாக மாறி அவர்களுள் பிரசித்தி பெற்ற குடும்பத்தின் தலைவர்கள் தலைமைக் குருக்களாக உருவானார்கள். ஆரம்ப காலத்தில் இவர்கள் அரசியல் மற்றும் ஆன்மீக தலைவர்களாக இருந்தார்கள். உரோமையர்கள் இவர்களை வெறும் ஆன்மீக தலைவர்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்தார்கள். இருந்தாலும் இவர்கள் யூத மக்கள் மத்தியில் மிகவும் அதிகாரம் படைத்தவர்களாகவும், வசதிபடைத்தவர்களாகவும் இருந்தார்கள். இயேசுவுடைய மரணத்தில் இவர்களுக்கு மிக முக்கியமான பாத்திரம் இருந்திருக்கிறது. இயேசுவை உரோமையர்கள் கொலை செய்ய தூண்டியமைக்கு அரசியல் காரணம், அல்லது உரோமையரைப் பற்றிய பயம் போன்றவையும் முக்கியமான காரணங்களாக இவர்களுக்கு இருந்தன.

தலைமைக்குரு ஒவ்வொருவரும், யொம்கிப்பூர் என்ற தினத்தில் மக்களுடைய பாவத்திற்காக ஆலயத்தில் அதிதூய இடத்தினுள் பலி ஒப்புக்கொடுத்தார்கள். இந்த பலியில் அவர்கள் தங்கள் பாவத்திற்காகவும் செபித்தார்கள். இதனை ஆசிரியர் உதாரணமாக எடுத்து, தலைமைக்குருக்கள் சாதாரண மனிதர்கள் என்பதை காட்டுகிறார். தலைமைக்குருக்கள் மக்கள் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதன் மூலம், மக்களுக்கும் அவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பது தெளிவாக்கப்படுகிறது (ἐξ ἀνθρώπων λαμβανόμενος எக்ட்ஸ் அந்ரோபோன் லம்பானொமெனொஸ்- மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்).

இவர்கள் மக்களின் பாவத்திற்கு கழுவாயாக காணிக்கைகளையும், பலிகளையும் செலுத்துகிறார்கள். அத்தோடு மக்களுக்காக கடவுள் முன் பணிபுரிகிறார்கள் (δῶρά °τε καὶ θυσίας ὑπὲρ ἁμαρτιῶν, தோரா டெ காய் தூசியாஸ் ஹுபெர் ஹமார்டியோன்- பாவத்திற்காக காணிக்கைகளும் பலிகளும்).

வ.2: இந்த வரியில் தலைமைக்குருவின் பலவீனத்தையும் பலத்தையும் அலசுகிறார். தலைமைக்குரு பலவீனமானவர் என்பது நினைவுபடுத்தப்படுகிறது (αὐτὸς περίκειται ἀσθένειαν அவ்டொஸ் பெரிகெய்டாய் அஸ்தெநெய்யான்- அவர் தானும் பலவீனத்திற்குள்ளாகியிருக்கிறார்). அறியாமையில் இருப்போருக்கும் நெறிதவறியிருப்போருக்கும் அவர் பரிவு காட்டக்கூடியவராக இருக்கிறார்.

மக்கள் அறியாமையில் இருப்பவர்கள் என்ற மனப்பாங்கு அக்காலத்தில் தலைவர்களிடம் மேலோங்கியிருந்ததை இந்த வரி காட்டுகிறது எனலாம். தலைமைக்குருக்கள் பரிவுள்ளவர்கள் என்பதும் இங்கே சொல்லப்படுகிறது.

வ.3: தலைமைக்குரு மக்களின் பாவத்திற்காக கழுவாய்ப் பலி செலுத்துகிறார், அதேபோல அவர் தன்னுடைய பாவத்திற்காகவும், அதே கழுவாய் செலுத்தவேண்டியவர் என்பதும் சொல்லப்படுகிறது. அதாவது அவரும் சாதாரண மனிதர்களுள் ஒருவர் என்பது மேலும் மேலும் வலியுறுத்தப்படுகிறது. நேர்முகமாக தலைமைக்குருவை பாராட்டுவது போலச் சொல்லி, அவர்கள் சாதாரண மனிதர்கள் என்பதை வாசகர்கள் மறக்கக்கூடாது என்பது சொல்லப்படுகிறது.

வ.4: தலைமைக்குரு என்கின்ற பணியை யாரும் தேர்ந்துகொள்ள முடியாது என்பதையும் இந்த வரியில் ஆசிரியர் காட்டுகிறார். அதற்கு உதாரணமாக ஆரோன் காட்டப்படுகிறார். மோசேயின் சகோதரரான ஆரோன் குருவாக தேர்வு செய்யப்பட்டதாக விடுதலைப்பயண வரலாறு காட்டுகிறது. யூத மக்கள் மத்தியில் குருத்துவம் முக்கியத்துவம் பெற்றதன் பின்னர், அவர்களின் வரலாறு ஆரோன் மற்றும் லேவியருடன் தொடர்பு படுத்தப்படுகிறது. யூத மக்களின் மத்தியில் குருத்துவம் மிகவும் காலத்தால் பிந்தியது என்ற ஒரு பலமான வாதமும் இருக்கிறது. இந்த பணியை மதிப்புக்குரிய பணி என்கிறார் எபிரேயர் ஆசிரியர் (τιμή டிமே- மதிப்பு).

வ.5: இந்த உதாரணத்தை எடுத்துக் கொண்ட ஆசிரியர், இயேசுவும் தன்னை உயர்த்திக் கொள்ளாதவர் மற்றும், கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர், என அடையாளப்படுத்தப்படுகிறார். திருப்பாடல் புத்தகத்தில் சொல்லப்பட்ட 'நீரே என் மைந்தர், இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்' என்ற வரி இயேசுவிற்கு சாட்டப்படுகிறது. இந்த வரி முதலில் தாவீதின் அரச குடும்பத்திற்கு சார்பாக பயன்படுத்தப்பட்டது, பின்னர் இந்த வரி மெசியாவிற்கு பாவிக்கப்பட்டது. இறுதியாக இது இயேசுவிற்கு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த வரியை சொன்னவராக கடவுளும், இந்த வரிக்கு உரியவராக இயேசுவும் காட்டப்படுகிறார்கள் (υἱός μου εἶ σύ, ἐγὼ σήμερον γεγέννηκά σε· ஹுய்யொஸ் மூ எய் சூ எகோ சேமெரொன் கெகென்னேகா செ- நீர் என் மைந்தர், இன்று உம்மை பெற்றெடுத்தேன்), காண்க தி.பா 2,7.

வ.6: தலைமைக்குருக்களுக்கு அடையாளமாக பிற்காலத்தில் உருவகிக்கப்பட்ட சாலேமின் அரசர் மெல்கிசதேக்கும், இந்த வரியில் இயேசுவிற்க முன்னடையாளமாக கொண்டுவரப்படுகிறார். σὺ ἱερεὺς εἰς τὸν αἰῶνα κατὰ τὴν τάξιν Μελχισέδεκ, சு ஹெய்ரெயூஸ் எய்ஸ் டொன் அய்யோனா காடா டேன் டாக்சின் மெல்கிசெதெக்- மெல்கிசதேக்கின் மரபுப்படி நீர் என்றென்றும் குருவே. காண்க திருப்பாடல் 110,4.

மெல்கிசதேக் முதல் ஏற்பாட்டில் ஒரு ஆச்சரியமான பாத்திரம் מַלְכִּי־צֶֽדֶק மல்கி-ட்செதெக். இவரை நாம் முதன் முதலில் தொடக்கநூலில் சந்திக்கின்றோம். 10 தடவைகளாக இவர் விவிலியத்தில் காட்டப்படுகிறார். அதில் எபிரேயர் நூலில் மட்டும் 8 தடவைகளாகவும், திருப்பாடலில் 1 தடவையும், தொடக்கநூலில் 1 தடவையும் காட்டப்படுகிறார்.

இவர் சாலேமின் அரசர் எனப்படுகிறார். இந்த சாலேம் பிற்கால எருசலேம் என நம்பப்படுகிறது. இவர் அதிஉன்ன கடவுளின் குரு என்று முதலில் காட்டப்படுகிறார். הוּא כֹהֵן לְאֵל עֶלְיוֹן׃ ஹு' கோஹென் லெ'ஏல் 'ஏலியோன்- அவர் அதி உன்னத கடவுளின் குரு. தொடக்கநூலில் வரும் மெல்கிசதேக்கைப் பற்றிய பகுதியின் பாட வரிகளை ஆய்வு செய்கிறவர்கள், இந்த வரி பிற்கால இணைப்பாக இருக்கலாம் என்ற முடிவிற்கு வருகின்றனர். குhனானிய கடவுளான ஏல் தெய்வமுவும், எபிரேய கடவுளான யாவேயும் இந்த வரியில் இணைக்கப்பட்டடுள்ளது என்ற ஆய்வியல் தரவுகளும் பலமாக உள்ளன. தாவீதின் அரியணையை பாதுகாக்கவும், எருசலேமின் அதிகாரத்தை மையப்படுத்தவும், மெல்கிசதேக் பயன்படுகிறார் என்ற ஒரு நம்பிக்கையும் உள்ளது.

திருப்பாடல் 110 உம் தாவீதிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அரச பாடல் என்றே காட்டப்படுகிறது. எப்படியாயினும் மெல்கிசதேக் என்பவர் ஒரு கட்டுக்கதை அல்ல என்பது மட்டும் புரிகிறது. விவிலிய ஆசிரியர்களுக்கு இந்த நபரைப் பற்றிய சில தகவல்கள் தெரிந்திருக்கிறது எனலாம், அல்லது இவரைப் பற்றிய ஒரு வாய்மொழிப் பாரம்பரியம் ஒன்று பாவனையில் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.


நற்செய்தி வாசகம்
மாற்கு 10,46-52

பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல்

(மத் 20:29-34 லூக் 18:35-43)

46இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். 47நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, 'இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்' என்று கத்தத் தொடங்கினார். 48பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், 'தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்' என்று இன்னும் உரக்கக் கத்தினார். 49இயேசு நின்று, 'அவரைக் கூப்பிடுங்கள்' என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, 'துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்' என்றார்கள். 50அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். 51இயேசு அவரைப் பார்த்து, 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?' என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், 'ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்' என்றார். 52இயேசு அவரிடம், 'நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று' என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.


பார்தமேயு பார்வைபெறுதல் என்ற பகுதி மாற்குவிற்கே தனித்துவமான ஒரு பகுதி. இந்த பகுதியை ஒத்த, பகுதிகள் மத்தேயுவிலும் (மத்தேயு 9,27-31: 20,29-34), லூக்காவிலும் காணப்படுகின்றன (லூக்கா 18,35-43). இருந்தாலும் மாற்குவின் பகுதி தனித்துவமான ஒன்றாகவே தெரிகிறது எனலாம். இந்த பகுதிக்கு முன் செபதேயுவின் மக்களது அதிகாரத்திற்கான வேண்டுதல் நடைபெற்றிருக்கிறது. அவர்கள் அதிகாரத்தை கேட்க இயேசு எரிக்கோவிற்கு செல்ல ஆர்வம் காட்டுகிறார். எரிக்கோ ஒரு புறவின நகர். இயேசுவின் காலத்தில் பிரசித்தி பெற்றிருந்தாலும், இது ஒரு கானானிய நகராகவே அறியப்படுகிறது. விவிலியத்தில் இது ஒரு நகரையும் தாண்டிய அடையாளம் என்றே கருதப்படவேண்டும்.

வ.46: இயேசு தன்னோடு தன் சீடர்களையும் எரிகோவிற்கு அழைத்து வருகிறார். எரிகோவில் இயேசு அனேகமாக போதனை செய்திருக்க வேண்டும். சீடரோடு எரிகோவிற்கு வந்தவர், பல மக்களோடு எரிகோவை விட்டு வெளியே செல்வதாக மாற்கு காட்டுகிறார். இந்த எரிகோவை கடந்து செல்லத்தான் யோசுவா பல முயற்சிகளை முன்னொடுத்தார். இங்கே இயேசு சாதாரணமாக உள்ளே சென்ற பல மக்களை வெளியே கொண்டுவருகிறார்.

முதல் ஏற்பாட்டில் ராகாபு எரிகோவுடன் அடையாளப்படுத்தப்படுவார். புதிய ஏற்பாட்டில் பார்த்திமேயு, திமேயுவின் மகன், வழியோரம் அமர்ந்திருந்து பிச்சை எடுப்பதாக காட்டப்படுகிறார். பார்திமேயு என்பது அரமேயத்தில் திமேயுவின் மகன் என அர்த்தம் கொடுக்கும். இருந்தாலும், கிரேக்க விவிலியம், இன்னொருமுறை இவரை திமேயுவின் மகன் என விளக்கம் கொடுக்கிறது. ὁ υἱὸς Τιμαίου Βαρτιμαῖος, ஹொ ஹுய்யொஸ் டிமாய்யூ பார்டிமாய்யொஸ்- திமேயுவின் மகன் பார்திமெயூ.

வ.47: இவர் இயேசுவை தாவீதின் மகன் என கேள்விப்படுகிறார். இவருடைய பார்வைதான் தடையாக இருக்கிறது, கேள்விப் புலன் அல்ல. சாதாரணமாக பார்வைப் புலன் அற்றவர்கள் செவிப்புலனில் வல்லமையுடையவர்களாக இருப்பார்கள். இவர் தாவீதைப் பற்றியும், வரவிருக்கும் அவர் மகனைப் பற்றியும் நன்கு அறிந்திருக்கிறார். இவர் ஒரு யூதரா என்பது சொல்லப்படவில்லை. இவருடைய பெயர் மற்றும் தாவீதைப் பற்றிய அறிவு இவரை யூதர் என அடையாளப்படுத்துகிறது எனலாம்.

தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என இவர் கத்தத் தொடங்குகிறார். υἱὲ Δαυὶδ Ἰησοῦஇ ἐλέησόν με. ஹுய்யெ தாவீத் ஈயேசூ எலேசென் மெ- தாவீதின் மகனே என்மேல் இரங்கும். இந்த வரிகள் பிற்காலத்தில் திருச்சபையுடைய மன்றாட்டுக்களை நினைவுபடுத்துவதாக உள்ளது எனலாம்.

வ.48: இயேசுவிற்கு அருகில் இருப்பவர்கள் எப்போது விசுவாசத்தில் அறிவிலிகளாகவும், துன்புறுகிற மக்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாகவும் புதிய ஏற்பாட்டில் காட்டப்படுவது ஒரு வழமை. இவர் பார்வையற்றவராக இருந்தாலும், இயேசுவை தாவீதின் மகன் என அடையாளம் காண்கிறார், அத்தோடு அவரை நோக்கி கத்தவும் செய்கிறார். ஆனால் இயேசுவிற்கு அருகில் உள்ளவர்கள் அவரை சரியாக புரிந்துகொண்டார்களாக என்ற கேள்வியை மறைமுகமாக கேட்க வைக்கிறார் ஆசிரியர்.

மக்களின் அதட்டலால் இவர் பயந்தது போல தெரியவில்லை, மாறாக அவர் மேலும் உரக்கக் கத்துகிறார்.

வ.49: இயேசுவை பின்பற்றியவர்களின் பார்வை வேறு, இயேசுவின் பார்வை வேறு என்பது காட்டப்படுகிறது. இயேசுவை பின்பற்றியவர்கள் இந்த நபரை அகற்ற, இயேசுவிற்கு அவரின் குரல் தெளிவாகவே கேட்கிறது. இயேசு முதலில் நிற்கிறார். அதாவது மக்களின் குரலைக் கேட்கும் இயேசு நிற்கின்ற கடவுளாக காட்டப்படுகிறார் (στὰς ஸ்டாஸ்- நின்றுகொண்டு). மக்கள் இவருக்கு கட்டளையிட, இயேசு மக்களுக்கு கட்டளையிடுகிறார். இயேசு 'அவரைக் கூப்பிடுங்கள்' என்கிறார் (φωνήσατε αὐτόν போனேசாடெ அவ்டொன்). அதாவது இவருக்கும் இயேசுவிடம் இடம் உள்ளது என்பது காட்டப்படுகிறது.

இயேசுவின் கட்டளையோடு அவரை சுற்றிநின்றவர்களின் பார்வையும் மாறுபடுகிறது. அவர்கள் முதலில் இவரை பார்வையற்ற பிச்சைக்காரராக மட்டுமே பார்த்தனர், இப்போது இயேசுவின் அன்பைப் பெற்றவராக பார்க்கின்றனர். துணிவுடன் எழுந்து வரச்சொல்லியும், இயேசு அவரை கூப்பிடுகிறார் என்றும் உற்சாகப்படுத்துகின்றனர்.

கூட்டம் எப்போதுமே கூட்டம். தலைவரின் குரலில் மட்டும்தான் அதிகாரம் உள்ளது என்பது இங்கு அழகாக காட்டப்படுகிறது.

வ.50: பார்தமேயுவின் நடவடிக்கை நிச்சயமாக அடையாளமாக இருக்க வேண்டும் எனப் பல ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். பார்த்தமேயு தன்னுடைய மேலுடையை உதறிவிட்டு குதித் தெழுகிறார். பிச்சைக்காரர்கள் சாக்குடையை மேலுடையாக போர்த்தியிருப்பர். அது அழுக்காவே இருக்கும். அக்காலத்தில் பலர், பல தேவைக்காக மேலுடைகளை போர்த்தியிருந்தனர். உடைகள் ஒருவருடைய அடையாளமாக கருதப்பட்டது.

இங்கே இவர் தன்னுடைய அடையாளங்கள், அழுக்குகள் அனைத்தையும் உதறிவிட்டு குதித்தெழுகிறார். அவருடைய இலக்கு இயேசுவாகவே இருக்கிறது.

வ.51: நின்ற கடவுள், இப்போது விருப்பம் கேட்கிறார். இந்த கடவுள் தன் மக்களிடம் என்ன வேண்டும் எனக் கேட்கிறார். τί σοι θέλεις ποιήσω; டி சொய் தெலெய்ஸ் பொய்யேசோ- நான் உமக்கு என்ன செய்ய விரும்புகிறீர்?

பார்வையற்றவர் மிகவும் தெளிவாக இருக்கிறார். அவர் இயேசுவை தாவீதின் மகன் என்றவர், இப்போது ரபூனி என்கிறார் (ραββουνι ராப்பூனி- ஆசிரியர்) இந்த சொல் ஆசிரியரைக் குறிக்கிறது. அவர் தான் பார்வை பெறவேண்டும் என்கிறார்.

வ.52: இயேசு அவரிடம் போகலாம் என்கிறார். அதாவது இயேசுதான் தலைவர், அவர்தான் கட்டளையிடுகிறவர். அவருடைய நம்பிக்கை அவரை குணமாக்கிற்று என்கிறார் (ὕπαγε, ἡ πίστις σου σέσωκέν σε. ஹுபாகே, ஹே பிஸ்டிஸ் சூ செசோகென் செ- சென்றுவருக, உம்முடை நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று).

இங்கே நடந்தவை உற்று நோக்கப்படவேண்டும். அவர் உடனடியாக நலம் பெறுகிறார் (καὶ εὐθὺς ἀνέβλεψεν காய் எவ்துஸ் அனெப்லெப்சென்- அவர் உடனடியாக பார்வைபெற்றார்), பின்னர் அவர் பின்பற்றி அவர் வழியிலே நடக்கிறார் (ἠκολούθει ⸀αὐτῷ ἐν τῇ ὁδῷ. ஏகொலூதெய் அவ்டோ என் டே ஹொதோ- அவரை பின்பற்றி அவர் வழியில் நடந்தார்).

எரிகோவில் பல சாட்சியங்கள் படிப்பினைக்கு தரப்படுகின்றன.

இயேசுவோடு இருந்தவர்கள் வெறும் கூட்டமாகவே இருக்கிறன்றார்கள்.

தூரத்தில் இருந்தவர், இயேசுவை அடையாளம் காண்கிறார்.

அனைத்தையும் துறக்க தயாராக இருந்தார்.

கடவுள் நின்றார், கேட்டார், நலமாக்கினார்.

பார்வையற்றவர், பார்வைபெற்றார், அவரைப் பின்பற்றினார்.

இதில் உண்மையாக பார்வை பெற்றவர் அவர் ஒருவரே.

அன்பு ஆண்டவரே நானும் பார்வை பெறவேண்டும்.

ஆமென்.