இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






The Epiphany of the Lord: ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

முதல் வாசகம்: எசாயா 60,1-6 பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 72 இரண்டாம் வாசகம்: எபேசியர் 3,2-3.5-6 நற்செய்தி: மத்தேயு 2,1-12


ஆண்டவரின் திருட்காட்சி என்பது, முதல் ஏற்பாட்டில் பல வேறு நிகழ்வுகளில் கடவுள் தன்னை வெளிப்படுத்தியதை ஞாபகப்படுத்துகிறது. கடவுள் தன்னை வெளிப்படுத்துவதை  இஸ்ராயேலரும் கிறிஸ்தவர்களும் ஒரு மறைபொருளாகவே பார்கின்றனர். கீழைத்தேய திருச்சபையிலே மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இவ்விழா பின்னர் கத்தோலிக்க முழுத் திருச்சபையின் விழாவாக மாறியது. பல வகைகளில் தன்னை வெளிப்படுத்திய  இறைவன், இறுதியாக இயேசுவில் தன்னை முழு மனித இனத்திற்கும் வெளிப்படுத்தியதையும்,  இறைவனின் இறைத்தன்மை அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்துகிறது என்னும் விசுவாசத்தையும் இவ்விழா நினைவூட்டுகிறது. ஞானிகளின் வருகையும், அவர்களின் பரிசில்களும் எமது பாலன் குடில்களை இன்று அலங்கரிக்கும். அதிகமான இடங்களில் இன்றோடு பாலன் குடிகள் எடுத்து வைக்கப்படும்.  திருக்காட்சி விழா எபிபானியா (Epiphania) என்று இலத்தீனில் அழைக்கப்படுகிறது. இது (ἐπιφάνεια எபிபானெய்யா) என்ற கிரேக்க சொல்லில் இருந்து எடுக்கப்பட்டது. இதன் அர்த்தமாக தோற்றம், தோன்றுதல், மற்றும் வெளிப்படுத்துதல் போன்றவை காணப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் அரசியல் தலைவர்களின் தோன்றுதலுக்காகவே இந்த சொல் பாவிக்கப்பட்டது, பின்னர் இது தெய்வங்களின் தோன்றுதலுக்காக பாவிக்கப்பட தொடங்கியது. முதல் ஏற்பாட்டில் ஆண்டவருடைய வருகையை அல்லது அவருடைய நாளை குறிக்க பயன்பட்ட சொல்லாகிய 'கடவுளின் நாள்' (יוֹם יְהוָה யோம் அதோநாய்)(காண்க யோவேல் 2,31). மற்றும் புதிய ஏற்பாட்டில் சில ஆசிரியர்கள் குறிக்கும் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையோடு; (ἡμέρᾳ τοῦ κυρίου: ஹெமெரா டூ கூரியூ- ஆண்டவரின் நாள், காண்க- 1கொரி 5,5) எபிபானியா எனும் சொற்பதம் தொடர்புபட்டுள்ளது. 

முதல் வாசகம்
எசாயா 60,1-6

1எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! 2இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! 3பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். 4உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். 5அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். 6ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர். 

நாடுகளின் துருவ நட்சத்திரம் (வடமீன், வழிகாட்டும் நட்சத்திரம்) என்னும் சிந்தனையுள்ள, மூன்றாம் எசாயாவின் பகுதியிலிருந்து, இவ்வாசகம் எடுக்கப்பட்டுள்ளது. நாடுகடத்தப்பட்டுள்ள யூதா மக்களுக்கும், சிதைந்துபோயுள்ள சீயோன் நகரின் எதிர்கால நம்பிக்கையை உறுதிபடுத்துவதாகவும், அழகான உருவக அணிகளுடன் இப்பகுதி அமைந்துள்ளது. இந்த வரிகள் கவிநடையில், திருப்பிக்கூறல் என்ற எபிரேய இலக்கிய வடிவில் அமைந்துள்ளன. வ.1: எருசலேமின் ஒளியென எசாயா ஆண்டவரின் மாட்சியை ஒப்பிடுகிறார். வியங்கோல் வாக்கியத்தில் அமைந்துள்ள இந்த வினைச் சொற்றகள், நம்பிக்கையை தருவதாக மறைமுகமாக அமைக்கப்பட்டுள்ளன (קוּמִי אוֹרִי கூமி 'ஓரி- எழுக, ஒளிர்க). ஒளி (אוֹר ஓர்), இன்று போல் அன்றும் கடவுளை காட்டும் மிக முக்கியமான அடையாளம். எருசலேமை ஒளி வீசச் சொல்வதன் மூலமாக எருசலேம், ஒளியில்லாமல் இருக்கிறாள் என வாசகர்களுக்கு காட்டுகிறார் ஆசிரியர். ஒளியில்லாமல் இருத்தல், இருட்டில் இருப்பதாகும், அதாவது அது கடவுள் இல்லாமல் இருப்பதற்குச் சமம். இங்கே ஒளி கடவுளின் பிரசன்னத்தைக் குறிக்க பாவிக்கப்பட்டுள்ளது.  வ.2: முதலாவது வசனத்தில் ஒளியைக் குறிப்பிட்ட ஆசிரியர் இரண்டாவது வசனத்தில் இருளைக் குறிப்பிடுகிறார். ஆண்டவரின் வருகை எனும் நிகழ்வு, இஸ்ராயேல் மக்களிடம் காலம் காலமாக  இருந்த முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று. எருசலேமின் அழிவின் பின்னர் இந்நிகழ்வு, முக்கியமான நிகழ்வாக உருவெடுக்கிறது. இதனையே இவ்வசனத்தில் காண்கிறோம். (חֹשֶׁךְ֙ ஹொஷேக்) இருள், இங்கு ஆண்டவரின் வருகையின் முன் நிகழ்வைக் காட்ட பயன்படுத்தப்படுகிறது. ஆண்டவரின் மாட்சி: (כָּבוֹד கவோட் மாட்சி, அருள், நிறைவு) என்று ஆண்டவரின் மாட்சியை சொல்லி எருசலேமில் அவரது பிரசன்னம் இருக்கும் என நம்பிக்கை கொடுக்கிறார். இருள் மக்களினங்களைக் கவ்வும் ஆனால் ஒளியும், மாட்சியும் எருசலேம் மீது வரும் என்பது, வேற்றுமைகளை ஒப்பிடுவதாக அமைகிறது. வேற்று நாட்டினர்க்கு இருளும், இருட்டும் கொடுக்கப்பட, எருசேலமிற்கு ஒளியும், மாட்சியும் கொடுக்கப்படுகின்றன.  வ.3. ஆண்டவருடைய ஆசீரால் பல மாற்றங்கள் நடப்பதாக கூறுகிறார் ஆசிரியர், அதாவது பிற நாட்டு மக்களும் தலைவர்களும் ஒளியை தேடி எருசலேமிற்கு வருவார்களாம். இது எருசலேமின் உயர்சியை காட்டும் ஒரு உருவகம்.  உதயக் கதிர், (נֹגַהּ זַרְחֵךְ நோகாஹ் ட்சர்ஹெக்) இது எருசலேமின் புது மாட்சியையோ அல்லது அந்த மாட்சியைக் கொடுக்கும் ஆண்டவரையோ குறிக்கலாம். வ.4: மிகவும் ஆழமானதும் அழகானதுமான வரிகள். கண்களை உயர்திப் பார்க்கச்சொல்லி, எசாயா நம்பிக்கை இல்லாமல் இருக்க வேண்டாம் எனச் சொல்கிறார். இதுவும் ஒருவகை உருவக அணி. ‘புதல்வர் புதல்வியர் தூக்கி வரப்படுவர்’ என்பது இஸ்ராயேல் மக்களின் இடம்பெயர் மற்றும் புலம்பெயர் வாழ்வை காட்டுகிறது. இந்த உருவக அணி, எம் மக்களின் புலம்பெயர் வாழ்வையும் படம் பிடிக்கிறது. தூக்கி வரப்படுதல், பல அர்த்தங்களைக் கொடுக்கிறது. உயர் குல மக்களே அக்காலத்தில் பல்லக்குகளில் தூக்கி வரப்பட்டார்கள், அல்லது குழந்தைகள் தூக்கி வரப்பட்டார்கள். இந்த இரண்டு பிரிவினரும் மிகவும் அன்பு செய்யப்பட்டவர்கள். எம்முடைய புலம் பெயர் மக்களும் ஈழத்தை நோக்கி வந்தால் எப்படி இருக்கும், அதற்கு முன் நம் நாடு அவர்களுக்கு ஆபத்தில்லா நாடாக மாற வேண்டும் (תֵּאָמַֽנָה தெ'ஆமனாஹ்- தூக்கிவரப்படுவார்கள்).  வ.5: அடிமைத்தனத்தில் வாடும் தன் மக்கள் நாடு திரும்பினால் நிச்சயமாக நாடு என்னும் தாய்க்கு அது மகிழ்வாகவே இருக்கும். அத்தோடு இஸ்ராயேலுக்கு புது உணர்வு காட்டப்படுகின்றன அவை: கண்டு மகிழ்வாய், இதயம் விம்மும், செல்வமும் சொத்துக்களும் கொண்டு வரப்படும். யூதா நாடும் எருசலேமும் கொள்ளையிடப்பட்ட போது எதிரிகள் இதனையே செய்தார்கள், உணர்ந்தார்கள்;.  இப்போது அதனை எருசலேம் உணரும் என்கிறார் எசாயா. அன்னியர் ஒரு நாட்டை சூறையாடியபோது அதன் சொத்துக்களை கொள்ளையடித்து கடல் மார்கமாகவும் தரைமார்க்கமாகவும் கொண்டு சென்றார்கள், அப்படியான செல்வங்கள் மீண்டும் தாயகம் வரும் என்கிறார் ஆசிரியர். (வடக்கு கிழக்கு சூறையாடபட்ட்போது எமது செல்வங்கள் கொண்டு செல்லப்பட்டன, அவை தாயகம் திரும்பினால் எப்படியிருக்கும்!).  வ.6. இவ்வசனம் மிக முக்கியாமானது. இஸ்ராயேலருக்கும் எசாயாவிற்க்கும் இது சாலமோனின் நாட்களை ஞாபகப்படுத்துகிறது, அவர்காலத்தில் சிபாவின் அரசி பரிசில்களை எருசலேமிற்கு கொண்டுவந்ததை நினைவூட்டுகிறது. கிறிஸ்தவர்களுக்கு இந் நிகழ்வு ஞானியர் இயேசுவிற்கு பரிசில்களை கொண்டுவந்ததை நினைவூட்டுகிறது. அக்காலத்தில் ஒட்டகங்கள் தூர பிரதேசங்களுக்கு பொருட்களை எடுத்துச்செல்ல நல்ல ஊடகமாக பாவிக்கப்பட்டன, இன்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சிறிய அளவில் இந்த ஊடகம் பாவனையில் உள்ளது. 



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 72

1கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.  2அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!  3மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும். 4எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக பிறரை ஒடுக்குவோரை நொறுக்கி விடுவாராக!  5கதிரவனும் நிலாவும் உள்ளவரையில், உம் மக்கள் தலைமுறை தலைமுறையாக உமக்கு அஞ்சி நடப்பார்களாக.  6அவர் புல்வெளியில் பெய்யும் தூறலைப்போல் இருப்பாராக நிலத்தில் பொழியும் மழையைப் போல் விளங்குவாராக.  7அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.  8ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.  9பாலைவெளி வாழ்வோர் அவர்முன் குனிந்து வணங்குவர்; அவர் எதிரிகள் மண்ணை நக்குவார்கள். 10தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.  11எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.  12தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். 14அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்; அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது.  15அவர் நீடுழி வாழ்க! சேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக! அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக!  16நாட்டில் தானியம் மிகுந்திடுக! மலைகளின் உச்சிகளில் பயிர்கள் அசைந்தாடுக! லெபனோனைப்போல் அவை பயன் தருக! வயல்வெளிப் புல்லென நகரின் மக்கள் பூத்துக் குலுங்குக!  17அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக!  18ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேலின் கடவுள் போற்றி! போற்றி! அவர் ஒருவரே வியத்தகு செயல்களைப் புரிகின்றார்!  19மாட்சி பொருந்திய அவரது பெயர் என்றென்றும் புகழப்பெறுவதாக! அவரது மாட்சி உலகெல்லாம் நிறைந்திருப்பதாக! ஆமென், ஆமென்.  20(ஈசாயின் மகனாகிய தாவீதின் மன்றாட்டுகள் நிறைவுற்றன.)

திருப்பாடல்கள் 127ம் 72ம் சாலமோனைப்பற்றிய திருப்பாடல்கள் என வல்லுனர்கள் ஏற்றுக்கொள்கின்றனர், அல்லது சாலமோனுக்கான தாவீதின் செபம் எனவும் கருதுகின்றனர். சாலமோனின் மெய்யறிவும், செல்வமும், போர் இல்லாத அமைதியையும் விரும்பிய ஒரு அரசியல் தலைவராக நோக்கப்படுகிறார். அதேவேளை இத்திருப்பாடல் மனித அரசனைத் தாண்டிய ஒரு பெருந்தலைவரை, மெசியாவை குறிக்கிறது என்பதை மறுக்க முடியாது. 19 வரிகளைக் கொண்ட இத்திருப்பாடல், பல கருத்துக்களால் பிணைக்கப்பட்ட அடிகளைக் கொண்டமைந்துள்ளதை காணலாம். வ.1: சாலமோனுக்குரிய பாடல் என்று இதன் முன்னுரை கூறுகிறது (לִשְׁלֹמֹ֨ה லிஷ்லோமோஹ்- சாலமோனுக்கு). நீதித் தீர்ப்பும், நீதியும் அரசியல் தலைவர்களிடம் இருக்கவேண்டிய மிக மிக முக்கியமான பண்புகள். இதன் இல்லாமை பல ஆபத்துக்ளை உருவாக்கும். இதற்கு இந்த உலக வரலாறே நல்ல சாட்சியம். இதனை இந்த பாடலின் ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார், ஆதலால் அதனை சாலமோனுக்கும் அவர் மைந்தருக்கும் கேட்கிறார். வரலாற்றில் குறைவான தலைவர்களே இந்த புண்ணியங்களைக் கொண்டிருந்தனர் எனலாம்.   வ.2: மக்களை நீதியோடு ஆளுதல் (דִּין தின்-ஆளுதல்), அதிலும் எளியோருக்கு நீதி வழங்குதல் மிக முக்கியமானதாகிறது. இதனாலேயே இஸ்ராயேல் மக்களும் மற்றவர்களும் அரசர்களை கடவுளின் பிரதிநிதியாகக் கண்டனர். இஸ்ராயேல் மக்களுக்கு அரசர் என்ற தலைவர் கடவுளின் பிரதிநிதி மட்டுமே, அவர் கடவுள் கிடையாது. இந்த சிந்தனையால் அவர்கள் மற்றைய அக்கால மக்களிடமிருந்து வேறுபடுகிறார்கள்.  வ.3: மலைகளும் (הָרִים ஹாரிம்) குன்றுகளும் (גְבָע֗וֹת கெபா'ஓத்) சமாதானத்தையும் நீதியையும அறிவிக்கும் என்று சொல்லி அவற்றை உருவகங்களாக பாவிக்கிறார். மலையும் குன்றும் நிலப்பரப்பில் உயர்ந்து நிற்கின்ற படியால் அவை செய்தியாளரைப் போல் அறிவிப்பு பணி செய்கின்றன என்பது இவரின் கற்பனை.  வ.4: எளியோரின் மக்களும் (עֲנִיֵּי־עָם 'அனியே-'ஆம்), ஏழைகளின் பிள்ளைகளும் (בְנֵ֣י אֶבְי֑וֹן பெனே 'எவ்யோன்) சமுதாயத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள். நல்லாட்சியில் இவர்கள் பாதுகாக்கப்படவேண்டும். இதனை பல மேற்கத்தைய நாடுகள் வித்தியாசமாக செய்கிறார்கள். ஆசிய நாடுகளில் இவர்கள் இன்னும் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஏழை எளியவர்களின் துன்பியல் வாழ்வு, இந்த உலகத்தின் சாபம். இந்த திருப்பாடலில் இவர்களை மக்கள்ளென்றும், பிள்ளைகள் என்றும் கூறினாலும் அது சாதாரண ஏழை எளியவர்களையே குறிக்கின்றன.  வ.5: கதிரவனும் (שָׁמֶשׁ ஷெமெஷ்), நிலவும் (יָרֵחַ யாரெஹா) எக்காலத்திலும் அழிந்துபோகாது என்பது அக்கால வானசாஸ்திரம். இதனை உருவகமாக பாவித்து, கடவுளுடைய நம்பிக்கையும்  இப்படித்தான் இருக்கும் என்கிறார் ஆசிரியர். கடவுளுக்கு அஞ்சி நடத்தல் என்பது நம்பிக்கைக்கான இன்னொரு பதம்.  வ.6: புல்வெளித் தூறலும் (מָטָר மாதார்), மழையும் (זַרְזִיף ட்சார்ட்சிப்) இஸ்ராயேலருக்கும் செமித்திய மக்களும் நிச்சயமாக கடவுளின் ஆசீர்கள் ஏனெனில் இவை அவர்கள் நிலங்களில் மிக அரிதானவை. இங்கே அரசரை இந்த அழகிய உருகங்களுக்கு ஒப்பிடுகிறார் ஆசிரியர். மழையும், தூறலும் நிலத்தில் பச்சையான வளர்ச்சியை உருவாக்குகின்றன, அதேபோல் அரசர் இருப்பார் என்கிறார் ஆசிரியர்.  வ.7: ஏற்கனவே சொல்லப்பட்ட உருவங்கள் வாயிலாக அரசரின் காலத்தில் நீதி (צַדִּיק ட்சாதிக்), நிலவைப்போல் பொய்க்காது, நிலைக்கும் என்று உற்சாகமூட்டுகிறார் ஆசிரியர். שָׁל֗וֹם  ஷாலோம்-அமைதி.  வ.8: இந்த அரசரின் எல்லைகள் விவரிக்கப்படுகின்றன. கடல்கள் என்பது இங்கே மேற்கத்தைய மத்தியதரைக் கடலையும், கிழகத்தைய சாக்கடலையும் குறிக்கிறது. பேராறு என்பது யூப்பிரதிஸ் நதியைக் குறிக்கிறது. உலகின் எல்லை என்பது கிரேக்க மற்றும் பாரசீக எல்லைகளைக் குறிக்கலாம். சாலமோனின் காலத்தில் அல்ல தாவீதின் காலத்திலும்கூட இஸ்ராயேல் அரசர்கள் இந்த எல்லைகள் வரை தம் ஆட்சியை விரிவுபடுத்தவில்லை. இதனை ஆசிரியரின் எதிர்கால எதிர்பார்ப்பு என்றே எடுக்க வேண்டும். அல்லது இந்த பாடல் மனித அரசரைக் குறிக்காமல், மெசியாவை குறிக்கிறது என்றால், இந்த நில வரைபு சரியாக அமைகிறது. இந்த எல்லைகளைத்தான் இஸ்ராயேல் மக்கள் உலகம் என நம்பினார்கள்.  வ.9: பால்வெளி மக்கள் (צִיִּים ட்சியிம்) இஸ்ராயேலருக்கு எப்போதுமே சவாலாகவே  இருந்தார்கள். இவர்களின் படையெடுப்புக்களும், வழிப்பறி கொள்ளைகளும் மிக ஆபத்தானவையாக இருந்தன. குனிந்து மண்ணை நக்குதல் என்பது குனிந்து தலையடிபட வணங்குதலை குறிக்கிறது. வ.10: தர்சீசும், தீவுகளும், சேபாவும், செபாவும் சாலமோனுடன் நல்லுறவை கொண்டிருந்த நாடுகள். அவை சாலமோனுக்கு பல பரிசில்களை கொண்டுவந்ததாக விவிலியம் காட்டுகிறது. பிற்காலத்தில் இந்த நாடுகளிலிருந்து பல பெண்களை சாலமோன் மணந்ததாகவும் சொல்லப்படுகிறது.   வ.11: இந்த வரி புகழ்ச்சி வரியாக எடுக்கப்படவேண்டும். தாவீதின் காலத்திலும், சாலமோனின் காலத்திலும், பல பலமான அரசுகள் இருந்தன, அவை இஸ்ராயேலுக்கு கீழ்ப்பட்டிருக்கவில்லை.  இஸ்ராயேல் எக்காலத்திலும் ஒரு சிறிய அரசாகவே இருந்தது. இந்த புகழ்ச்சி ஆசிரியரின் எதிர்பார்ப்பாக இருக்கலாம், அல்லது மெசியாவை குறிப்பதாக அமையலாம்.  வ.12-14: இந்த வரிகள், அரசர் ஏழைகளுக்கு செய்யும் பரிவினைக் காட்டுகிறது. ஏழைகள் என்போர் (אֶבְיוֹן எவ்யோன்) என்று எபிரேயத்தில் வருகிறது. இது தேவையில் இருப்போரையும், வறியவர்களையும், கைவிடப்பட்டவர்களையும், சுரண்டப்பட்டவர்களையும் குறிக்கும். கடவுளே இவர்களின் பாதுகாவலராக கருதப்பட்டார். இவர்களை பாதுகாக்கும் அரசர் கடவுளின் பணியாளராக பாhக்கப்பட்டார். இவர்கள் பலவிதமான அடிமைத்தனங்களுக்குள் இலகுவில் அகப்பட்டனர். ஆக இவர்களுக்கு விடுதலை எப்போதுமே தேவைப்பட்டது. இரக்கம் காட்டப்படாமல் இருந்த இவர்கள், அரசரிடம் இருந்து அரசியல், பொருளாதார மற்றும் சமய இரக்கத்தை எதிர்பார்த்தனர். இவர்களின் உயிரும் ஒரு பொருட்டாக கருதப்படவில்லை. கொடுமையும் வன்முறையும் இவர்கள் சந்தித்த சாதாரண அநியாயங்கள்.  இவர்களின் இரத்தம் ஓர் இரத்தமாகவே கருதப்படவில்லை. இன்று வரலாற்றில் இருக்கின்ற அனைத்து நினைவு தூபிகளுக்கும், பிரமாண்ட கட்டடங்களுக்கும் பின்னால் இவர்களின் இரத்தம்தான் பொதிந்துள்ளது. இந்த திருப்பாடல் ஆசிரியரின் பார்வையில் இந்த அரசர் (சாலமோன்) இந்த மக்களை காக்கிறார் அல்லது காக்கும் படி வேண்டப்படுகிறார். இந்த வரிகள் சாலமோனை விட மெசியாவிற்கே அதிகமாக பொருந்தும், ஏனெனில் சாலமோன் சாதாரண மக்கள் மேல் பல வரிச்சுமைகளை சுமத்தினார் என விவிலியம் காட்டுகிறது.  வ.15: இந்த பாடலின் மிக முக்கியமான வரி. இந்த அரசருக்கு பொன்னும், வேண்டுதல்களும், ஆசிகளும் தரப்படுகின்றன. ஓர் அரசருக்கு இவை மிக முக்கியமானவை. நீடுழி வாழ்க என்பது பல நாடுகளில் அரசர்களுக்கு வாழ்த்தப்படும் ஒரு சிறிய செபம். அத்தோடு நீடிய ஆயுள் கடவுளின் அருளாக கருதப்பட்டது. குறுகிய கால ஆட்சி கடவுளால் எற்கப்படாத ஆட்சியாகவே கருதப்பட்டது. ஆக இவருக்கு நீடிய ஆயுள் வாழ்த்தப்படுகிறது.  வ.16: நாட்டில் தானியங்களின் பெருக்கமும், பயிர்களின் வளர்ச்சியும், மற்றும் வயல்களின் வீரியமும் நல்ல அடையாளங்கள். லெபனான் அக்காலத்தில் மிகவும் வளமையான நாடாக கருதப்பட்டது. இஸ்ராயேல், லெபனானைப்போல் அவ்வளவு வழமான நிலம் கிடையாது. இதனால் லெபனான் எப்போதுமே ஒரு கவர்ச்சிப் பொருளாக பார்க்கப்பட்டது. வயல்வெளி பூக்களென மக்கள் பூத்துக் குலுங்குதல் அவர்களின் வளமான வளர்ச்சியைக் காட்டுகிறது.  வ.17: அழகான வரி. பெயர் என்பது அக்காலத்தில் (இக்காலத்திலும்) ஒருவரின் அடையாளமும் தனித்துவமுமாகும். பெயர் என்பது உண்மையில் அந்த ஆளையே குறித்தது. இந்த அரசரின் பெயர் என்றென்றும் நிலைக்கும் படியாக விரும்பப்படுகிறது, இதற்கு அழகான எபிரேய சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன (יְהִי שְׁמוֹ לְעוֹלָם யெஹி ஷெமோ லெஓலாம்- அவர் பெயர் என்றும் இருப்பதாக). கதிரவன் என்றும் நிலைக்கும் ஒரு பௌதீக சக்தி, அதனைப்போல் இவர் பெயரும் இருக்கும் என பாடப்படுகிறது. கடவுள் ஆபிரகாமிற்கு, அவர் வழியாக அனைவரும் ஆசீர் பெறுவர் என்று கூறினார் இந்த ஆசீர் இந்த அரசரில் நினைவுகூரப்படுகிறது (✽காண்க தொ.நூல் 12,2). ஒரு நாட்டவர் மற்றய நாட்டு அரசர்களை புகழ்வது சாதாரணமல்ல, அப்படிச்செய்தால் அந்த புகழப்படும் அரசர் உண்மையில் அசாதாரணமனவாரகவே இருப்பார். அப்படியே இவரும் இருப்பார் என்கிறார் ஆசிரியர்.  (✽2உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்.) வ.18: இந்த வரி பல சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த பாடல் சாலமோனுக்கு என்று முன்னுரைக்கப்பட்டாலும், இது கடவுளாகிய மெசியாவிற்கே என்பது போல தோன்றுகிறது.  இஸ்ராயேலின் கடவுள்தான் ஆண்டவராகிய கடவுள் என்று சாற்றுகிறார் ஆசிரியர்  (יְהוָה אֱלֹהִים אֱלֹהֵי יִשְׂרָאֵל அதோனாய் 'எலோஹிம் 'எலோஹே யிஸ்ரா'எல் - ஆண்டவராகிய கடவுள் இஸ்ராயேலின் கடவுள்). ஒருவேளை இது பல கடவுள் வழிபாடுகளுக்கு எதிரான சொல்- யுத்தமாக இருக்கலாம்.  வ.19: மாட்சி என்கின்ற சொல் முதல் ஏற்பாட்டில் மிகவும் முக்கியமான சொல். இது கடவுளுடைய வல்லமை, அதிகாரம், ஆதிக்கம், பலம், வன்மம் என்ற பல அர்த்தங்களைக் கொடுக்கும்  (כָבוֹד காவொத்). இந்த மாட்சியை அனைவரும் கடவுளுக்கு கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார் ஆசிரியர். இந்த வசனத்தின் நிறைவில் 'ஈசாயின் மகனாகிய தாவீதின் மன்றாட்டுகள் நிறைவுற்றன', என்ற ஒரு துணை வரியுள்ளது. ஒருவேளை இதன் மூலம் இந்த பாடல் தாவீதின் பாடல் என காட்ட முயற்சிக்கலாம். כָּלּוּ תְפִלּוֹת காலோ தெபிலோத்- செபங்கள் நிறைவுற்றன.



இரண்டாம் வாசகம்
எபேசியர் 3,2-3.5-6

2உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்களிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். 3அந்த மறைபொருள் எனக்கு இறை வெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அதைப்பற்றி நான் ஏற்கெனவே சுருக்கமாக உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 4அதை நீங்கள் வாசிக்கும்போது, கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நான் புரிந்து கொண்டேன் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். 5அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 6நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும் ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

தூய பவுலுடைய திருச்சபை சிந்தனைகளை தாங்கிய திருமடல் என இதனை சிலர் அழைக்கின்றனர். தளத் திருச்சபைக்கான அறிவுறுத்தல்களையும், வழிபாட்டு முறைகளையும், அமைதியான படிப்பினைகளையும், கொண்டமைந்துள்ள இக் கடிதத்தில், பவுலடிகளார் மற்றைய கடிதங்களிலிருந்து மாறுபடுவதனையும் காணமுடியும். இது பவுலுடையது என்பதனைவிட, அவருடைய பெயரில் எழுதப்பட்டது என இன்று பலர் இதனைக் காண்கின்றனர். இருப்பினும் இதனை பவுல் எழுதவில்லை என்பதற்கும் போதிய சான்றுகளை காணமுடியாது.  இன்றைய வாசகம் பவுல் தன்னுடைய அப்போஸ்தலிக்க பணியை விளக்குவதாக அமைந்துள்ளது. பவுல் அதிகமான வேளைகளில் தன்னுடைய திருத்தூதுத்துவம் புறவினத்தவர்கானது என்பதை அழகாக விளக்குவார். அப்படியான ஒரு விளக்கமே இந்த பகுதியாகும். மூன்றாம் அதிகாரத்தின் முதலாவது வசனம் பவுல் இந்த கடிதத்தை எழுதியபோது கைதியாக இருந்தார் என காட்டுகிறது (வ.1). இந்த கடிதம் ஒரு வாதத்தை போல அமைந்துள்ளது. அத்தோடு அவசரத்தில் எழுதப்பட்டது போலவும் இதன் கிரேக்க வரிகள் உள்ளன. இதிலிருந்து இது பவுலால் அவசரமாக எழுதப்பட்தே அன்றி, பிறகாலத்தில் நேர்த்தியான இறையியல் சிந்தனையில் பவுலின் பெயரில் எழுதப்படவில்லை என்ற முடிவிற்கு வரலாம். (இது சில ஆய்வாளர்களின் கருத்து).  வ.2: இந்த வசனத்தின் மூலம் வாசகர்கள் ஏற்கனவே பவுலுக்கு பரீட்சயமானவர்கள் என்பது தெரிகிறது. தன்னுடைய பொறுப்பு (τὴν οἰκονομίαν τῆς χάριτος τοῦ θεοῦ டேன் ஓய்கொனொமியான் டேஸ் காரிடொஸ் டூ தியூ), தான் பிறவினத்தவர்கான திருத்தூதன் என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள், அல்லது அறியவேண்டியவர்களாக இருக்கிறார்கள் என பவுல் கூறுகிறார். வ.3: இந்த வசனத்தில் பவுல் இரண்டு முக்கியமான செய்திகளைக் கூறுகிறார்.  அ. பிறவினத்தவர்கான திருத்தூதுத்துவம் ஒரு மறைபொருள், அது இறைவெளிப்பாட்டால் அருளப்பட்டது.  ஆ. இதனைப் பற்றி ஏற்கனவே எபேசியருக்கு எழுதப்பட்டிருக்கிறது.  பவுல் எபேசிய திருச்சபையில் பல காலம் பணியாற்றியிருக்கிறார். இங்கே பவுல் முன்னைய கடிதம் ஒன்றைப் பற்றி சொல்வது போல தோன்றுகிறது. வ.4: பிறவினத்தவர்க்கான பணியை கிறிஸ்துவின் மறைபொருள் என காண்கிறார் பவுல். இதனை அவர் நன்கு அறிந்துதான் செய்வதாக வாதிடுகிறார். இது எதோ எதிர்வாதம் போல் தெரிகிறது. கிறிஸ்துவின் மறைபொருள் என்பது ஆரம்ப கால திருச்சபையின் முக்கியமான கருப்பொருள்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும் (μυστηρίῳ τοῦ Χριστοῦ முஸ்டேரிஓ டூ கிறிஸ்டூ).   வ.5: கிறிஸ்துவைபற்றிய மறைபொருள் என்ற மட்டில் கிறிஸ்தவ நற்செய்தியாளர்களும்,  இறைவாக்கினர்களும் முதல் ஏற்பாட்டு மக்களைவிட உயர்ந்தவர்களாகின்றனர். பிறவினத்தவர்களைப் பற்றிய இயேசு ஆண்டவரின் வெளிப்பாடு அவரது மனித பிறப்பின் பின்னரே, நேர்த்தியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது, இதனால் அவரின் பிறப்பின் பின் வாழும் இறைவாக்கினர்களும் திருத்தூதர்களும் முக்கியம் பெறுகிறார்கள்.  வ.6: பவுல் அந்த மறைபொருளை இங்கே விளக்குகிறார். அதாவது இயேசுவின் நற்செய்தி வழியாக பிறவினத்தார் இனி உண்மையில் பிறவினத்தார் கிடையாது. அவர்கள் இயேசுவில் அவர் வாக்குறுதியின் உடன்-உரிமைக் குடிமக்களாகவும் (συγκληρονόμα சுன்ங்கிலேரொனொமா), உடன்-உறுப்புக்களாகவும் (σύσσωμα சுஸ்ஸோமா), மற்றும் உடன்-பங்காளிகளாகவும் (συμμέτοχα சும்மெடொகா) மாறியிருக்கிறார். இதுதான் அந்த மறைபொருள் என்று தனது நற்செய்தியின் அழகான ஆழத்தைக் காட்டுகிறார்.   


நற்செய்தி வாசகம்
மத்தேயு 2,1-12

1ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, 2'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள். 3இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. 4அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். 5-6அவர்கள் அவனிடம், 'யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், 'யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்' என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார்' என்றார்கள். 7பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான். 8மேலும் அவர்களிடம், 'நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்' என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். 9அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. 10அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். 11வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். 12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

கிறிஸ்து பிறப்புக் காலத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஞானிகளின் வருகைத் திருநாள் மிக முக்கியமானது. யார் இந்த ஞானிகள், இவர்கள் எத்தனை பேர், இவர்களின் தொழில் என்ன, எங்கிருந்து வந்தவர்கள், ஏன் வந்தார்கள் என்ற கேள்விகள், எம்முடைய குழந்தைகளின் முக்கியமான கேள்விகள். ஞானிகளின் வருகை மத்தேயுவிற்கே மிகவும் தனித்துவமான பகுதியாகும்.  இதனை வேறு நற்செய்திகளில் காணமுடியாது. ஞானி என்பதை கிரேக்க விவிலிய மொழி (μάγος மாகோஸ்) என்று காட்டுகிறது. இது ஒரு யேர்மானிய-இந்தியச் சொல் என்கிறது ஒர் அகராதி. இவர்கள் கீழைத்தேய அதாவது பபிலோனிய, அராபிய, பாரசீக, இந்திய, மேதிய, வானசாஸ்திரிகளாகவோ, அல்லது ஆசிரியர்களாகவோ இருக்கலாம். இந்த வாசகப் பகுதி முக்கியமானது, இங்கேதான் இயேசு ஆண்டவர் அரசர் என பிறவினத்தவரால் அறிக்கையிடப்படுகிறார். இந்த ஞானிகள் தாங்கள் வான் வெள்ளியைக் கண்டதாகக் கூறுகிறார்கள் ஆனால் இந்த வான் வெள்ளியைப் பற்றிய மேலதிக தரவுகளை விவிலியத்தில் காணக் கிடைக்கவில்லை. பிறவினத்தவர் இயற்கையின் அறிவைக்கொண்டே கிறிஸ்துவை அடையக்கூடியவர்கள் என்பதற்கு இந்த பகுதி நல்ல சான்று. முதல் ஏற்பாட்டில் ஏற்கனவே பாலாம், யாக்கோபின் நட்சத்திரம் என்ற இறைவாக்கை உரைத்திருக்கிறார் (காண்க எண் 24,17).  மத்தேயு இயேசுவை எதிர்பார்க்கப்பட்ட மெசியாவாகவும், தாவிதின் உண்மையான இறை வாரிசாகவும், புதிய மோசேயாகவும் காட்ட முயல்கிறார் என்று பார்த்திருக்கின்றோம். இந்த ஞானிகளின் வருகை மூலம் மத்தேயு இன்னொரு கருத்தையும் முன்வைக்கிறார். அதாவது ஞானிகள் பிறவினத்தவர், தெரிந்து கொள்ளப்படாதவர்கள், விவிலியத்தை அறியாதவர்கள், வாக்களிப்பிற்கு அப்பாற்பட்டவர்கள் இருப்பினும், அவர்கள் ஞானிகள், விவேகிகள் மற்றும் அறிவாளிகள் இதனால்தான் அவர்கள் மெசியாவை தேடி வந்து கண்டடைகிறார்கள். ஆனால் எருசலேமில் இருக்கும் யூதர்கள், அவர்கள் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மறைவல்லுனர்கள் தங்களின் மெசியாவை காண தவறுகிறார்கள் அத்தோடு அந்த மெசியாவை தொலைக்கவும் முயல்கிறார்கள்.  வ.1: கிழக்கிலிருந்து ஞானிகள்: இந்த மெய்யறிவுவாதிகளைத்தான் நாம் மூவிராசாக்கள் என்று அழைக்கிறோம். இவர்களை அரசர்கள் என்றோ, மூன்று பேர்கள் என்றோ மத்தேயு பதிவு செய்யவில்லை. இவர்களைப்பற்றி பல சுவாரசியமான பாரம்பரியங்களைச் தலத்திருச்சபைகள் கொண்டிருக்கின்றன. இன்னும் விசேடமாக நம்முடைய சில ஈழத்து கதைகள், இதில் கஸ்பார் என்னும் ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து சென்றார் என்றும் சொல்லும் (கதைவிடும்). யேர்மனி பாரம்பரியம் ஒன்று, இவர்கள் யேர்மனி நாட்டில்தான் அடக்கம் செய்யப்பட்டனர் என்கிறது.  இவர்களை மூவர் என்கிறது கிறிஸ்தவ பாரம்பரியம்: கஸ்பார், மெல்கியோர், பல்தசார். உண்மையில், மத்தேயுவின் ஞானிகள் இன்னும் அறியப்படவேண்டியவர்கள். அல்லது மத்தேயு, இவர்களின் அடையாளங்களை விட அவர்கள் மூலமான தன் செய்திக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.  வ.2: இந்த ஞானிகள் கேள்வி கேட்கிறார்கள். சாதாரணமாக அரசன்தான் கேள்வி கேட்பான். இங்கே அவனே கேள்வி கேட்கப்படுகிறான். விவிலியத்தில் வரும் பெரிய ஏரோது அவ்வளவு சாதாரணமானவன் கிடையாது. அவன் இன்னும் உரோமைய வரலாற்றிலே தன்னுடைய வன்முறைக்கும், சந்தேகங்களுக்கும், கட்டடக் கலைக்கும் அறியப்படுகிறான். இவனிடமே வந்து  இஸ்ராயேலின் அரசர் எங்கே என்று கேட்பது, இந்த எரோதுவை கொச்சைப்படுத்தவும், அவனுக்கு நல்ல பாடம் புகட்டவும் செய்யும். அத்தோடு அவர்கள் தாங்கள் அந்த அரசரை வணங்க வந்ததாக கூறுகிறார்கள், ஆக தங்களது வணக்கம் இந்த புதிய அரசருக்குத்தான், ஏரோதுவிற்கு இல்லை என்கிறார்கள் போல.  இந்த ஞானிகள் விண்மீன் என கூறுவதை கிரேக்கத்தில் ἀστήρ அஸ்டேர் என காண்கின்றோம். ஆங்கில ஸ்டார், யேர்மனிய ஸ்டர்ன் போன்றவை இதிலிருந்தே வருகின்றன. இது மாட்சியையும் வான அடையாளத்தையும் குறிக்கிறது. வ.3: இந்த வரி இங்கணம் இயேசுவை வரவேற்றது என்கிறார் மத்தேயு. எருசலேம் முழுவதும் அரசனோடு சேர்ந்து கலங்கிற்று என்கிறார் (πᾶσα Ἱεροσόλυμα μετ᾿ αὐτοῦ பாசா இயெரொசொலூமா மெத் அவுடூ). இந்த கலக்கத்திற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். ஏரோதிற்கு தன் ஆட்சியைப் பற்றிய கவலை, மக்களுக்கு புதிய ஆட்சியைப் பற்றிய கவலையாக இருக்கலாம். ஒருவேளை கொடிய ஏரோதுவை நினைத்தும் எருசலேம் கலங்கியிருக்கலாம். இருப்பினும் இயேசுவின் வருகை அரசியலுக்கும் சமயத்திற்கும் கலக்கம் கொடுத்தது என்பது மட்டும் புலப்படுகிறது.  வ.4: ஏரோதுவின் விசாரனை காட்சிப்படுத்துகிறது. ஏரோது அனைவரையும் வரவழைக்கிறான். மத்தேயு நற்செய்தியில் தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவிற்கு எதிரானவர்களாகவே காட்டப்படுகிறார்கள். இங்கே இவர்கள் தங்கள் மெசியாவிற்கு எதிராக முழு இஸ்ராயேலன் அல்லாதவனோடு கூட்டணி வைக்கிறார்கள். ஏரோது மெசியாவென்றே குழந்தையை அழைக்கிறான், ஆக அவனுக்கு மெசியா என்ற அரசரைப் பற்றிய புரிதல்  இருந்திருக்கிறது.  வவ.5-6: இஸ்ராயேல் தலைவர்களுக்கு இறைவார்த்தையில் நல்ல புலமைத்துவம் இருந்தது என்பததைக் காட்டி இருந்தும் அவர்கள் அதனை பாவிக்கவில்லை என்பது போல் காட்டுகிறார் மத்தேயு. இவர்களுக்கு இயேசு பெத்லேகேமில் பிறப்பார் என்று தெரிந்திருந்தது, இது முதலாம் வசனத்தோடு ஒத்திருக்கிறது (ஒப்பிடுக வ.1). அத்தோடு அவர்கள் அதற்கு சான்றாக இறைவாக்கு ஒன்றையும் முன்வைக்கிறார்கள். மத்தேயு இவர்கள் வாயில் வைக்கின்ற இறைவாக்கு மீக்காவினதும் சாமுவேலினதும் இறைவாக்குகளின் தெரிவாகும் (காண்க ✽மீக்கா 5,2.✽✽4 மற்றும் ✽✽✽2சாமு 5,2). இந்த இறைவாக்கு பல முக்கியமான தரவுகளைத் தருகிறது. அ. மெசியா பெத்லேகேமில் பிறப்பார். ஆ. பெத்லேகேம் ஒரு அறியப்படாத சிறிய நகரம் கிடையாது. இ. இஸ்ராயேலின் உண்மையான ஆயர் மெசியா.  ஈ. இது ஊகமல்ல மாறாக இறைவாக்கு. (✽நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். ✽✽அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்; ✽✽✽சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். 'நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்' என்று உமக்கே ஆண்டவர் கூறினார்'.) வ.7: ஏரோதுவிற்கு வான சாஸ்திரமும் தெரிந்திருக்கிறது. இவ்வளவு நேரமும் யூத தலைமையோடு  இருந்தவன் இப்போது தனித்து இயங்குகிறார். ஒருவேளை இவன் யூத தலைமையை நம்பாமல் இருந்திருக்கலாம். தன் மக்களைவிட அந்நியரை அதிகமாக நம்புகிறான் (நல்ல அரசன் நல்ல மக்கள்). ஏரோது ஞானிகளை தனிமையாக அழைத்து விசாரிப்பதற்கு கிரேக்க விவிலியம் திருட்டு மற்றும் இரகசியம் சம்பந்தமான ஒரு சொல்லை பாவிக்கிறது (λάθρᾳ லாத்ரா).  இதனைத்தான் யோசேப்பும் செய்தார் (காண்க ✽மத் 1,19) ஆனால் நல்லதற்கு, இங்கே ஏரோது தீங்கு செய்ய செய்கிறான். ஏரோது விண்மீனைப் பற்றி விசாரித்ததிலிருந்து, விண்மீனைப் பற்றிய அறிவுகள் அக்காலத்தில் வழக்கிலிருந்தன என அறியலாம்.  வ.8: ஏரோது ஞானிகளை பெத்லகேமிற்கு அனுப்பிவைக்கிறான். இன்னும் குழந்தையைப் பற்றி திட்டமாக அறிய விரும்பிய அவன், அதனை தான் வணங்க வேண்டும் என்கிறான். இந்த வணக்கத்திற்கு கிரேக்கம் προσκυνέω (புரொஸ்குநெயோ) என்ற சொல்லைப் பாவிக்கிறது. இது குப்புற விழுந்து, நிலம் மட்டும் தாழ்ந்து வணங்கும் ஒரு செயல் (நம் அரசியல் தலைவர்களுக்கு கைவந்த கலை, ஏரோதுவிற்கும் இவர்களும் நல்ல உறவு போல). இப்படியாக தானும் மெசியாவை அரசராக ஏற்றுக்கொண்டுள்ளதாக ஞானிகளுக்கு பொய் சொல்கிறான்.  (✽19அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.) வ.9: நற்செய்தி மீண்டும் விண்மீனைப் பற்றி சாற்றுகிறது. இந்த வரி பல கேள்விகளை முன்வைக்கிறது. அதாவது விண்மீன் (ἀστήρ) ஏற்கனவே எழுந்திருந்தாலும், இப்போதே இவர்களுக்கு வழிகாட்டுகிறது. இவர்கள் இந்த விண்மீனை பின்தொடர்ந்து எருசலேம் வரவில்லை, மாறாக இவர்கள் எருசலேம் வந்ததால் எழுந்த விண்மீனை சரியான வழிக்கு பாதைகாட்ட கண்டு கொள்கிறார்கள். இந்த விண்மீன் அவர்களுக்கு குழந்தையின் இருந்த இடம்வரை வழிகாட்டுகிறது. வ.10: விண்மீன் நின்றதை கண்டதும் இவர்கள் பெருமகிழ்சி கொள்கிறார்கள். இதனை கிரேக்கம் அழகாக ἐχάρησαν χαρὰν (எகாரேசான் காரான்) என்று விவரிக்கின்றது. நற்செய்தியில் இந்த  இடத்தில் மட்டும்தான் பெருமகிழ்ச்சி இப்படியாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியை இவர்கள் தங்கள் இடத்திலோ அல்லது ஏரோதுவின் மாளிகையிலோ அடையவில்லை.  வ.11: ஞானிகள் குழந்தையையும் அதன் தாயையும் காண்கிறார்கள். இவர்கள் மரியாவையும் கண்டார்கள் என சொல்லி மத்தேயு மரியாவிற்கும் முக்கியத்துவம் கொடுப்பதுபோல தோன்றுகிறது. அல்லது இந்த குழந்தையின் தாய் மரியாதான் என உறுதியாக சொல்வது போல தோன்றுகிறது (τὸ παιδίον μετὰ Μαρίας τῆς μητρὸς αὐτοῦ டொ பாய்தியோன் மெடா மாரியாஸ் டேஸ் மேட்ரொஸ் அவுடூ). இரண்டு முக்கியமான அடையாளங்களை இந்த ஞானிகள் செய்கிறார்கள்.  அ. குழந்தைக்கும் மரியாவிற்கும் முன்னால் முகம் பட விழுகிறார்கள். இயேசுவிற்கு முன்னால் உலக ஞானம் பணிந்து விழுந்து கிடக்கிறது. ஏனெனில் அவர்கள் உண்மையான ஞானத்தை  இங்கேதான் காண்கிறார்கள். மத்தேயு இயேசுவை உண்மையான ஞானமாகக் காட்டுகிறார், அந்த ஞானத்தை வைத்திருப்பவராக மரியாவைக் காட்டுகிறார். இந்த விழுதல் அக்காலத்தில் அரசர்களுக்கும் தெய்வங்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டது. ஆக இயேசு கடவுளாகவும், உன்னத அரசராகவும் காட்டப்படுகிறார் (✽ஒப்பிடுக தானி 3,5-6)  (✽5எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கிய அந்த நொடியில், நீங்கள் தாழவீழ்ந்து நெபுகத்னேசர் அரசன் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவேண்டும். 6எவராகிலும் தாழ வீழ்ந்து பணிந்து தொழவில்லையெனில், அவர்கள் அந்நேரமே தீச்சூளையில் தூக்கிப்போடப்படுவார்கள்' என்று கூறி முரசறைந்தான்.) ஆ. இயேசுவிற்கு பரிசில்களை அல்லது காணிக்கைகளை வழங்குகிறார்கள். இவர்கள் மூன்று பொருட்களை காணிக்கையாக்குகிறார்கள் இதிலிருந்துதான் இந்த ஞானியர் மூவர் என்ற பாரம்பரியம் தொடங்குகிறது. பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் χρυσὸν καὶ λίβανον καὶ σμύρναν: இவை அரசர்களுக்கு கொடுக்கப்படுகின்ற விலையுயர்ந்த பரிசுப்பொருட்கள் (காணிக்கைப்பொருட்கள்). சாலமோனுக்கு கிடைத்தவையும் இவைதான். மத்தேயு இயேசுவை தாவீதின் உண்மையான வாரிசாக காட்டுகிறார் போல. சிலர் ஆண்டவரின் மரணத்தின் பின்னர் நடந்த நிகழ்வுகளைக் காட்ட இப்பொருட்கள் பயன்படுகின்றன என்கின்றனர். இந்த மூன்று பொருட்களுக்கும் அறிஞர்கள் பல விதமான இறையியில் வாதங்களை முன்வைக்கின்றனர். சிலர் இதனை அரச பொருட்களாகவும், சிலர் இதனை தெய்வீக காணிக்கை பொருட்களாகவும் காண்கின்றனர்.  வ.12: எரோதுவிடம் திரும்பிப் போகவேண்டாம் என கனவில் ஞானிகள் எச்சரிக்கப்படுகிறார்கள். யார் இவர்களை கனவில் எச்சரித்தது? கடவுள் அல்லது கடவுளின் தூதராக இருக்கலாம். கனவு (ὄναρ ஓனார்) அக்காலத்தில் இறைவெளிப்பாடின் ஒரு முக்கியமான ஊடகமாக கருதப்பட்டது. யோசேப்புவும் இப்படியான கனவில்தான் வழிகாட்டப்படுகிறார். இவர்கள் ஞானிகள் என்ற படியால் இதனை நன்றாக விளங்கியிருப்பார்கள். இந்த ஞானியர் நாடு திரும்பினார்கள் என்று சொல்லி இந்த கதைக்கு நல்ல முடிவுரை எழுதுகிறார் மத்தேயு.   கிறிஸ்த வாழ்வும், அனைத்து வாழ்வும் ஒரு தேடலான பயணம். இந்த தேடல் இனிமையாக இருக்கலாம், அல்லது கடினமாக இருக்கலாம்.  நம் பயணம் கடவுளை நோக்கியதாக இருந்தால், எந்த ஏரோதுக்களை சந்தித்தாலும், ஆபத்துக்கள் இருக்காது. கடவுள் இனத்தால் கட்டுப்பட்டவர் அல்லர்,  அப்படியானவர் கடவுளும் கிடையாது. கிறிஸ்துவை கிறிஸ்தவர்கள் தேடினாலும் தேடாவிடினும், அவர் கிறிஸ்துவே, பலர் அவரை இன்னும் தேடுகிறார்கள். அன்பு ஆண்டவரே,  நீரே உண்மையான ஞானம் என அறியவும்,  தேடவும், வணங்கவும்,  பின்னர் அதனை  எம்மிடங்களில் வாழவும் அருள் தாரும். ஆமென்.