இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திரண்டாம் வாரம்.

முதல் வாசகம்: 2 மக்கபேயர் 7,1-2.9-14
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 17
இரண்டாம் வாசகம்: 2 தெசலோனிக்கர் 2,16-3,5
நற்செய்தி: லூக்கா 20,27-38


அ. மக்கபேயர் (Μακκαβαῖος மக்காபய்யோஸ்)

மக்கபேயர் காலம் என்பது யூதா மக்கபேயு தோற்றுவித்த ஹஸ்மோனியர் காலத்தை குறிக்கிறது (கி.மு 160 - கி.மு 63). கிரேக்கர்களின் கலாபனையுடன் தோன்றிய இந்த காலம், யூதர்களின் வரலாற்றில் மிக முக்கியமான சுதந்திர காலம் எனவும் பார்க்கப்படுகிறது. பாலஸ்தினாவிற்குள் உரோமையர்களின் வருகையோடு இந்த காலம் நிறைவுற்றது. மத்தியாவின் மகனான யூதா முதல் முதலில் மக்கபேயு என்றழைக்கப்பட்டார், அத்தோடு இவர்தான் கிரேக்க செலுக்கியருக்கு எதிராக விடுதலை புரட்சியை தொடக்கியவர். இவர் இந்த யுகத்தின் முதலாவது தலைவராக கருதப்படுகிறார்.  கிறிஸ்தவ நாகரீகம், யூதாவின் வழிமரபுத் தலைவர்கள் அனைவரையும் மக்கபேயர்களாக பார்க்கிறது. மக்கபேயர் மற்றும் ஹஸ்மோனியர் என்பவை பிற்காலத்தில் ஒத்தகருத்துச் சொற்களாக பாவிக்கப்பட்டன. இராபினிக்க இலக்கியங்களில் மக்கபேயர் என்ற சொற்பதம்; பாவனையில் இருந்திருக்கவில்லை. யூதாவும் அவருடைய சகோரதர்களும் சில பட்டப்பெயர்களுடன் அழைக்கப்படுகிறார்கள். யூதாவிற்கு மக்கபேயு என்ற பெயர், அவருடை இராணுவ உணர்வுகளின் பொருட்டு கொடுக்கப்பட்டிருக்கலாம். மக்பட் என்பது சுத்தியலைக் குறிக்கிறது. பலமான வரவேற்புடன் தொடங்கப்பட்ட இந்த மக்கபேயர் காலம், பிற்காலத்தில் பெரிதாக யூத மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உரோமையருடைய காலத்திலிருந்து தலைமைக்குருக்கள், மற்றும் சதுசேயர் போன்றவர்களின் தோற்றத்தோடு பிற்கால மக்கபேயர்களுக்கு தொடர்பிருந்ததாக கருதப்படுகிறது.  மக்கபேயர்களின் தோற்றமும், வளர்ச்சியும், புகழும், சரிவும் மற்றும் அழிவும் ஈழத்தில் விடுதலை வீரர்களின் தோற்றத்தின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் நமக்கு நினைவூட்டுகின்றன. 

ஆ. மக்கபேயர் புத்தகங்கள்:

இந்த நூல்கள் செப்துவாஜிந் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாலும், கிரேக்க மொழியில் எழுதப்பட்டதாலும், இவை ஏபிரேய விவிலியத்திலும், சீர்திருத்த கிறிஸ்தவர்களின் விவிலியத்திலும் உள்வாங்கப்படவில்லை. கத்தோலிக்க விவிலியம் இரண்டு மக்கபேயர் புத்தகங்களை உள்ளடக்கியுள்ளது, இதனைவிட இன்னும் இரண்டு மக்கபேயர் புத்தகங்கள் இருக்கின்றன, இவ்வாறு இவை எண்ணிக்கையில் நான்கு. இவற்றின் முதல் இரண்டு புத்தகங்களும், யூதேயாவில், இரண்டாம் நூற்றாண்டின் வரலாற்றையும், இறையியல் சிந்தனைகளையும் நமக்கு நினைவூட்டுகின்றன. கிரேக்க தொலமியருக்கும், செலுக்கியருக்கும் இடையில் நடத்த அரசியல் இழுபறியில், எருசலேம் பலமாக தாக்கப்பட்டது. நான்காம் அந்தியோக்கஸ் என்ற செலுக்கிய அரசன் எருசலேமில் தனது கிரேக்க மயமாக்கல் திட்டத்திற்கு ஒத்துழைத்த ஜேன்சன் என்ற ஒருவனை தலைமைக்குருவாக்கினான், இவன் தன் அண்ணனான மூன்றாம் ஒனேசியஸ் என்பரை துரத்தியே இந்த பதவியை பிடித்தான். பிற்காலத்தில் எருசலேம் தேவாலயத்தை கிரேகக்க கடவுளான சீயுஸை வைத்து தீட்டுப்படுத்தினான். ஒரு கட்டத்தில் யூதர்களின் கிளர்ச்சியை அடக்க அந்தியோக்கஸ், தேவாலயத்தை இராணுவ முகாமாக மாற்றினான். இந்த வரலாற்றைத்தான் தானியேல் புத்தகமும் மறைமுகமாக விவரிக்கின்றது. மக்கபேயர் முதலாம் இரண்டாம் புத்தகங்கள், மக்கபேயர்களின் புரட்சியையும் அவர்களின் சீர்திருத்தங்களையும் அத்தோடு அவர்கள் சந்தித்த சவால்களையும் விவரிக்கின்றன. அதே வேளை இக்காலத்தில் சாதாரண மக்கள் சந்தித்த பயங்கரமான கொடுமைகளையும், அதனை விசுவாசத்தோடு எப்படி அவர்கள் எதிர்கொண்டு மேற்கொண்டார்கள் என்பதையும் விவரிக்கின்றன.  இவற்றைவிட இன்னும் இரண்டு மக்கபேயர் புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றில் மூன்றாவது மக்கபேயர் புத்தகம், யூதர்களின் நாடுகடந்த வாழ்வின் கதைகளை விவரிக்கின்றது. இந்த நூலின் முக்கிய இடமாக எகிப்திய அலெக்சாந்திரியா இருந்திருக்கலாம், அத்தோடு பல வழிகளில் இந்த புத்தகம் இரண்டாம் மக்கபேயர் நூலை ஒத்திருக்கிறது. நான்காம் மக்கபேயர் நூல் ஒரு மெய்யியல் வாதத்தை ஒத்திருக்கிறது. விசுவாசத்துடனான புத்தியா, அல்லது உணர்வு ரீதியான சிந்தனைகளா சிறந்தது என்ற ஒப்பீட்டை ஆலோசிக்கிறது. 

முதல் வாசகம்
2 மக்கபேயர் 7,1-2.9-14

1அக்காலத்தில் சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைதுசெய்யப்பட்டார்கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். 2அவர்களுள் ஒருவர் மற்றவர்களின் சார்பில், 'நீ எங்களிடமிருந்து கேட்டறிய விரும்புவது என்ன? எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட சட்டங்களை மீறுவதைவிட நாங்கள் இறக்கத் துணிந்திருக்கிறோம்' என்றார். 9தாம் இறுதி மூச்சு விடும் வேளையில், 'நீ ஒரு பேயன். நீ எங்களை இம்மை வாழ்வினின்று அகற்றிவிடுகிறாய். ஆனால் நாங்கள் இறந்தபின் என்றென்றும் வாழுமாறு அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார்; எனெனில் நாங்கள் இறப்பது அவருடைய கட்டளைகளின் பொருட்டே' என்று கூறினார். 10அவருக்குப் பிறகு மூன்றாமவரை அவர்கள் கொடுமைப்படுத்தினார்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, உடனடியாகத் தம் நாக்கையும் கைகளையும் அவர் துணிவுடன் நீட்டினார்; 11'நான் இவற்றை விண்ணக இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டேன்; அவருடைய சட்டங்களுக்காக நான் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவரிடமிருந்து மீண்டும் இவற்றைப் பெற்றுக் கொள்வேன் என நம்புகிறேன்' என்று பெருமிதத்தோடு கூறினார். 12அவர்தம் துன்பங்களைப் பொருட்படுத்தவில்லை. எனவே மன்னனும் அவனோடு இருந்தவர்களும் இந்த இளைஞரின் எழுச்சியைக் கண்டுவியந்தார்கள். 13அவரும் இறந்தபின் நான்காமவரையும் அவர்கள் அவ்வண்ணமே துன்புறுத்திக் கொடுமைப்படுத்தினார்கள். 14அவர் இறக்கும் தறுவாயில், 'கடவுள் மீண்டும் உயிர்த்தெழச் செய்வார் என்னும் நம்பிக்கை எனக்கு இருப்பதால், மனிதர் கையால் இறக்க விரும்புகிறேன். ஆனால் நீ வாழ்வுபெற உயிர்த்தெழமாட்டாய்' என்றார்.

வவ. 1-2: இந்த வரிகள் இரண்டாம் மக்கபேயர் புத்தகத்தின் ஏழாவது அதிகாரத்திலுள்ள சகோதரர் எழுவரின் சான்று என்ற அழகிய மறைசாட்சியத்தை உள்ளடக்கியது. அந்தியோக்குஸ் மன்னன் கிரேக்க மயமாக்கலை முழு வலிமையோடு எருசலேமில் புகுத்தினான். அதன் ஒரு கட்டமாக சீயுஸ் சிலை எருசலேம் தேவாலய பீடத்தில் நிறுவப்பட்டது, பின்னர் யூதர்கள் என்றும் புசிக்காத பன்றி இறைச்சி வலுகட்டாயமாக உண்ண திணிக்கப்பட்டது. மீறியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். ஆறாம் அதிகாரத்தின் இறுதியில் எலயாசர் என்று ஒரு மதிக்கப்பட்ட முதியவரும் மறைநூல் அறிஞரும், யூத நம்பிக்கைகளுக்காக தன் உயிரைத் தியாகம் செய்தார். அவரைத் தொடர்ந்து இந்த குடும்பம், அதாவது தாயும் அவர் ஏழு பிள்ளைகளும் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களின் தந்தைக்கு என்ன நடந்தது என்பது விவரிக்கப்படவில்லை, ஒருவேளை அவர் ஒரு விடுதலை வீரராக இருந்திருக்கலாம், அல்லது அவர் போரில் மடிந்திருக்கலாம். ஏதோ ஒரு நோக்கத்திற்காக அவர் இந்த விவரிப்பிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார். விசேட கலாச்சார அல்லது நம்பிக்கை காரணத்திற்காக தாயும் பிள்ளைகளும் வதைக்கப்பட்ட பாரம்பரிய கதைகள், கிரேக்க-உரோமைய மற்றும் யூத இலக்கியங்களில் அதிகமாகவே இருந்திருக்கின்றன. ஆய்வாளர்களின் கருத்துப்படி இந்த கதை இரண்டாம் மக்கபேயர் புத்தகத்திற்கு வெளியிலிருந்து பின்னர் உள்ளே வந்திருக்க வேண்டும் என்பதாகும். எங்கே இந்த கொடுமை நடந்தது என்பதும் தெளிவில்லாமல் உள்ளது. ஒருவேளை இது அந்தியோக்கியாவில் நடந்திருக்கலாம். இவர்கள் துன்புறுத்தப்பட்ட விதம், அன்றைய நாள் சித்திரவதைகளை படம்பிடிக்கிறது. இந்த எட்டு நபர்களுக்காக ஒருவர் பேசுவது, இந்த குடும்பம் சித்திவதைகளின் பின்னரும் கூட, தங்கள் எண்ணங்களில் ஒருமனப்பட்டவராக இருந்ததைக் காட்டுகிறது. (கடந்தகால முப்பது வருட போரின் கொடுமையில் நம்முடைய உறவுகளில் பலர் இப்படியான மிருகக் கொடுமைகளை அனுபவித்தவர்களே). முன்னோர்களின் சட்டங்களை மீறுவதைவிட இறப்பதே மேல் என்று இதில் ஒருவர் கூறுவது, ஆசிரியர் வாசகர்களுக்கு கொடுக்கும் செய்தி. வாசகர்கள் எப்படி வாழ வேண்டும், அல்லது சட்டங்கள் உயிரினும் மேலானது என்ற செய்தி இங்கே பரிமாறப்படுகிறது. கொடுங்கோலனான அரசனை, துன்புறுத்தப்பட்டவர் கேள்வி கேட்பது அவரின் துணிவைக் காட்டுகிறது. 

வ.9: இந்த வரி இரண்டாவது சகோதரரின் வார்த்தைகள். இவர் அந்தியோக்கசை பேயன் என்று சாடுகிறார். ἀλάστωρ அலாஸ்டோர் என்ற கிரேக்கச் சொல் சாத்தான், மூடன், சனியன், சூனியக்காரன் என்ற பல அர்த்தங்களைக் கொடுக்கிறது. இவர் இங்கே பல வாதங்களை அந்தியோக்கசை இம்சைப்படுத்துவது போல சொல்கிறார்.

அ. அந்தியோகசினால் இந்த வாழ்விலிருந்து மட்டும்தான் யூதர்களை அகற்ற முடியும் ஆ. இறந்தபின் கடவுள், என்றும் வாழுமாறு இன்னொரு வாழ்வை தருகிறார்.  இ. அவர்தான் அனைத்துலகின் அரசர் - அந்தியோகசின் அரசாட்சி கேள்விக்குட்படுகிறது ஈ. கடவுளின் கட்டளைக்களுக்காகவே மறைசாட்சியர் மரிக்கின்றனர். 

இந்த வாதங்கள், இக்காலத்தில் யூதர்களின் இறையியல், பாரம்பரிய நம்பிக்கையிலிருந்து படிப்படியாக வளருவதைக் காட்டுகிறன. 

வவ.10-11: மூன்றாவது சகோதரரின் நாக்கும் கைகளும் வெட்டப்படுகின்றன. நாக்கும் கைகளும் இழக்கப்படுவது, அவர் மனித மாண்பினை இழப்பதை நினைவூட்டுகிறது. இவற்றை தான் கடவுளிடமிருந்து பெற்றதனை நினைவூட்டுகிறார் அத்தோடு மீண்டும் இவற்றை பெறுவார் என்பதையும் கூறுகிறார். இந்த வரிகள், இவர்களின் பலமான உயிர்ப்பு நம்பிக்கையைக் காட்டுகிறன. 

வ.12: மன்னனினதும் அவன் சகபாடிகளினதும் வியப்பு, மறைசாட்சியம் எவ்வளவு உயர்வானது என்பதை காட்டுகிறது. இவர்களின் வியப்பினைப்போலவே அனைத்து துன்புறுத்துகிறவர்களும் வியந்து போகும் அளவிற்கு வாசகர்களின் சாட்சியம் இருக்க வேண்டும் என்பது ஆசிரியரின் நோக்கமாக இருந்திருக்கலாம்.

  வவ.13-14: நான்காம் சகோதரனின் துன்பமும் தனக்கு முன் இறந்த தன் சகோதரர்களை ஒத்ததாகவே இருக்கிறது. கடவுள் மீண்டும் உயரிப்பிப்பார் என்ற நம்பிக்கை மனிதர்களின் கையால் வரும் மரணத்தை தாங்க சக்தியைத் தருகிறது என்ற படிப்பினையை ஆசிரியர் முன்வைக்கிறார். அத்தோடு கடவுளின் மக்களை துன்புறுத்துகிறவர்களுக்கு உயிர்ப்பில்லை என்ற ஒரு ஆழமான வாதமும் இங்கே முன்வைக்கப்படுகிறது.   



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 17

1ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். 

2உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்; உம் கண்கள் நேரியன காணட்டும். 

3என் உள்ளத்தை ஆய்ந்தறியும்; இரவு நேரத்தில் எனைச் சந்தித்திடும்; என்னைப் புடமிட்டுப் பார்த்திடும்; தீமை எதையும் என்னிடம் காணமாட்டீர்; என் வாய் பிழை செய்யக்கூடாதென உறுதி கொண்டேன். 

4பிற மானிடர் செய்வது போல் அல்லாமல், நீர் உரைத்த வாக்கிற்கிணங்க, வன்முறையாளரின் வழிகளை விட்டு விலகியுள்ளேன். 

5என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை.

6இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும். 

7உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே! 

8உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். 

9என்னை ஒழிக்கத் தேடும் பொல்லாரிடமிருந்தும் என்னைச் சூழ்ந்து கொண்ட எதிரிகளிடமிருந்தும் என்னை மறைத்துக் கொள்ளும். 

10அவர்கள் ஈவு இரக்கமற்ற கல்நெஞ்சர்கள். தங்கள் வாயினால் இறுமாப்புடன் பேசுபவர்கள்.

11அவர்கள் என்னைப் பின் தொடர்கின்றனர்; இதோ! என்னை வளைத்துக் கொண்டனர்; அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு, வைத்த கண் வாங்காது காத்திருக்கின்றனர்.  12பீறிப்போடத் துடிக்கும் சிங்கத்திற்கு அவர்கள் ஒப்பாவர்; மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் இளஞ்சிங்கத்திற்கு நிகராவர். 

13ஆண்டவரே, எழுந்து வாரும்; அவர்களை நேருக்குநேர் எதிர்த்து முறியடையும்; பொல்லாரிடமிருந்து உமது வாளால் என்னைக் காத்தருளும். 

14ஆண்டவரே, மாயும் மனிதரிடமிருந்து — இவ்வுலகமே தங்கள் கதியென வாழ்ந்து மாயும் மனிதரிடமிருந்து — உமது கைவலிமையினால் என்னைக் காப்பாற்றும். அவர்களுக்கென நீர் ஒதுக்கி வைத்துள்ளவற்றால் அவர்கள் வயிற்றை நிரப்பும்; அவர்களின் மைந்தர் வேண்டிய மட்டும் நிறைவு பெறட்டும்; எஞ்சியிருப்பதைத் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச்செல்லட்டும்; 

15நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.



இந்த திருப்பாடல் தனிநபர் புலம்பல் பாடலாக அடையாளப் படுத்தப்படுகிறது. எபிரேய விவிலியத்தில் இந்த திருப்பாடலின் தொடக்க வரிகள் தாவீதின் பாடல் תְּפִלָּה לְדָוִד என்று தொடங்குகின்றது. சவுலுக்கும் தாவீதிற்கும் இடையிலான அரசியல் போட்டி உச்சத்தில் இருந்தவேளை, பல வேளைகளில் சவுல் தாவீதை கொலை செய்ய தேடினார் எனவும், ஆனால் கடவுள் தாவீதை சவுலின் கைகளிலிருந்து தப்புவித்தார் எனவும் 1சாமுவேல் புத்தகம் விவரிக்கின்றது (ஒப்பிடுக 1சாமுவேல் 19-23). இந்த திருப்பாடல் சவுல், மாவோன் பலைநிலத்தில் தங்கியிருந்த தாவீதை ஒற்றர்களின் உதவியோடு நெருங்கிய வேளை, தாவீது கடவுளை நோக்கி உருக்கமாக பாடியது என்று சிலர் இந்த பாடலுக்கு வரலாறு கொடுக்கின்றனர். இந்த திருப்பாடல் ஒரு நீதிமானின் புலம்பலாகவும், கடவுள் அவருக்கு இரக்கம் காட்டவேண்டியதின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. இந்த பாடலின் மூன்று முக்கியமான பிரிவுகள் வாசகர்களின் பார்வையை கவர்கின்றன.

அ. நீதிக்கான பாடலாசிரியரின் வேண்டுதல் (வவ 1-5)

ஆ. எதிரியைப்பற்றிய முறைப்பாடுகள் (வவ 6-12)

இ. எதிரியின் அழிவிற்கான மன்றாட்டு (வவ 13-15)

வவ. 1-5: இந்த பகுதி ஆண்டவரே என்று விழித்து தொடங்குகின்றது. இந்த பகுதியில் ஆசிரியர் தான் அப்பாவி மற்றும் குற்றமில்லாதவர் என்ற வாதத்தை கவலையோடு கடவுளிடம் முன்வைக்கிறார். அத்தோடு தன்னை ஆய்வு செய்ய தன் நேர்மைகளை உடனடியாக முன்வைக்காமல், அதனை கடவுளின் தீர்ப்பிற்கு விட்டுவிடுகிறார், பின்னர் தான் நீதிமான என்பதை எளிமையாக முன்வைக்கிறார். 

அ. ஆண்டவர் வழக்கை கேட்க வேண்டும், அவர் கண்கள் நேரியவற்றை பார்க்கட்டும்.

ஆ. ஆண்டவர் ஆசிரியரின் உள்ளத்தை ஆராயட்டும்.

இ. ஆசிரியர் தூய்மையான வாழ்வை வாழ்ந்துள்ளார். 

வவ. 6-15: இந்த வரிகள் ஆண்டவரின் உதவியை உடனடியாக கேட்டுநிற்பதாக அமைந்துள்ளன. வேண்டுதலாக இருந்தாலும், உள்ளாளத்தில் இந்த வரிகள் நம்பிக்கையை மையமாக கொண்டுள்ளதை அவதானிக்கலாம். 

வ.6: இதன் முதலாவது பகுதியில் நம்பிக்கையை குறித்தும், இரண்டாவது பகுதியில் வேண்டுதல் ஒன்றும் முன்வைக்கப்படுகிறது. ஆசிரியர் கடவுளுக்கு செவியிருப்பதாகவும் அந்த செவியை தன் பக்கம் திருப்பவேண்டும் என்று மன்றாடுகிறார். இது ஒரு வகை உருவக அணி. 

வ.7: ஆண்டவரின் பேரன்பை (חֶסֶד ஹெசெட்) இரஞ்சும் அதேவேளை, உண்மையான பாதுகாப்பு ஆண்டவரின் கரங்களிலிருந்தே வருகிறது என்பதை மையப்படுத்துகிறார் ஆசிரியர். 

வ.8: இந்த வரியில் இரண்டு உருவகங்கள் பாவிக்கப்பட்டுள்ளன.

அ. கண்ணின் மணியென காத்தல் - (כְּאִישׁוֹן בַּת־עָיִן ke’îšôn bat-‘âyin) கண்ணின் மணியென்பது இங்கே, 'உம் கண்ணின் மணி, மகளென காத்தரும்' என்றே மொழிபெயர்கப்படவேண்டும். கண்ணின் மணியில் பார்கப்படுபவரின் உருவம் தெரியும், இது அவர் பார்க்கிறவரின் பார்வைக்குள் இருக்கிறார் என்பதைக் குறிக்கிறது. அத்தோடு கண்ணின் மணி, மேல் கீழ் இமைகளால் எல்லா ஆபத்துக்களிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது. இப்படியான நெருங்கிய பாதுகாப்பை ஆசிரியர் கடவுளிடமிருந்து எதிர்பார்கிறார். 

ஆ. சிறகின் நிழழால் மூடுதல் - (בְּצֵל כְּ֝נָפֶיךָ תַּסְתִּירֵֽנִי bēdzēl kenãpêkã tastîrēnî)

வெயிலின் அகோரத்தை உணர மத்திய கிழக்கு நாடுகளின் பகல் வேளைகளைத்தவிர வேறெந்த இடமும் இருக்க முடியாது. இப்படியான பகுதிகளின் நிழல் உண்மையாகவே கடவுளின் பிரசன்னமாக உணரப்படும். கழுகின் நிழல் என்பது இஸ்ராயேல் மக்களிடையே பழங்காலமாக இருந்த ஒரு உருவக அடையாளம். இந்த நம்பிக்கை எகிப்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும். இங்கே கடவுள் ஒரு தாய் கழுகு தன் சிறகால் குஞ்சுகளை பாதுகாப்பது போல ஒப்பிடப்படுகிறார். 

வ.9: இரண்டு விதமாக எதிரிகள் அடையாளப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் கதாநாயகனை ஒழிக்க தேடுகிறார்கள், அத்தோடு அவரை சூழ்ந்து கொண்டுள்ளார்கள். உலகில் எங்கு மறைந்தாலும், ஒருநாள் கண்டுபிடிக்கப்படுவர் என்பது நியதி, ஆனால் கடவுளிடம் ஒழிந்தால் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம் என்ற நம்பிக்கை இங்கே வெளிப்படுகிறது. 

வ.10: கல்நெஞர்கள் (மூடப்பட்ட இதயம் உள்ளவர்கள் חֶלְבָּמוֹ סָּגְרוּ helbāmô sāgrû), இறுமாப்பு பேச்சுக்களை உடையவர்கள் என தன் எதிரிகளை சாடுகிறார். இது இவரின் தனிப்பட்ட அனுபவமாக இருக்கலாம். ஒருவருடைய பேசுசும் அவர் சிந்தனையும் எவ்வளவு தொடர்புள்ளது என்பதை நமக்கு காட்டுகிறார். 

வ.11: இங்கே, பின்தொடர்தல், வளைத்துக் கொள்ளல், தரையில் வீழ்த்துதல் என்ற போரியல் வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகளின் காரணமாகவும், இந்த பாடல் தாவீதின் பாடலாக இருக்கவேண்டும் என சிலர் வாதிடுகின்றனர். 

வ.12: சிங்கங்கள் (אַרְיֵה அர்யாஹ்) இன்று இஸ்ராயேல்-பாலஸ்தீன தேசத்திலே இல்லை, ஆனால் இந்த பாடலின் காலத்தில் அவை இங்கு இருந்திருக்கலாம். சிங்கங்கள், மற்றும் இளம் சிங்கங்கள் மனிதர்களால் வெற்றி கொள்ள முடியா விலங்கினங்களாக அக்காலத்தில் இருந்திருக்கலாம். இஸ்ராயேல் இனமும் சிலவேளை சிங்கத்திற்கு ஒப்பிடப்பட்டது. இங்கே ஆசிரியர் சிங்கத்தின் பலத்தைபோல் தன் எதிரியின் பலம் இருக்கிறது என மிக தாழ்மையாக ஏற்றுக்கொள்கிறார். 

வவ.13-15: இந்த இறுதி வரிகளில் ஆசிரியர் ஆண்டவரை கூவியழைத்து தன்னை மீட்குமாறு இறஞ்சுகிறார். இது இந்தப் பாடலின் இறுதி வேண்டுதல்களாகவும் அமைகின்றன.

வ.13: ஆண்டவரை ஒரு போர் வீரராகவும், வாளுடையவராகவும் ஆசிரியர் வர்ணிக்கிறார். இதனால் ஆசிரியர் நல்ல போர் அனுபவம் உடையவர் என கொள்ளலாம். 

வ.14: உலகம், மனிதர் அனைத்தும் அழியக்கூடியது என்ற உண்மையை இங்கே விளக்குகிறார். மனிதருக்கும் (מַת மாத் - ஆண்), சாவிற்கும் (מוּת மூத் - மரணம்) இடையிலான ஒலி ஒற்றுமையை பயன்படுத்தி அழகாக இந்த வரி அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு இங்கே எதிரிகளுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் சாபம் கொடுக்கப்படுகிறது. வசைபாடுதல் அக்காலத்தில் செபத்தின் அங்கமாக இருந்ததை இங்கே காணலாம். 

வ.15: இந்த வரியில் தன்னுடைய நம்பிக்கை வாழ்வை உறுதிப்படுத்துகிறார். நேர்மையில் நிலைத்திருந்தால் மட்டுமே கடவுளின் முகத்தைக் காணலாம் என்ற நம்பிக்கை இங்கே புலப்படுகிறது. நம்பிக்கையுடன் விழித்தெழுதல் என்ற வார்த்தை, ஒரு வேளை இந்த பாடல் ஒர் இரவுப்பாடலாக இருந்ததற்கான வாய்ப்பை ஊகிக்க தூண்டுகிறது. 



இரண்டாம் வாசகம்
2 தெசலோனிக்கர் 2,16-3,5

16நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும் 17உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக!

1சகோதர சகோதரிகளே! இறுதியாக எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள். ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே விரைந்து பரவிப் புகழ் பெற்றது. அதுபோல அது எங்கும் பரவிப் புகழ்பெறவும், 2தீயோர், பொல்லாதவர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படவும் வேண்டுங்கள்; ஏனெனில் நம்பிக்கை எல்லாரிடமும் இல்லை. 3ஆனால் ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காத்தருள்வார். 4நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டதை நீங்கள் செய்கிறீர்கள்; இனியும் செய்வீர்கள் என்னும் உறுதியான நம்பிக்கையை ஆண்டவர் எங்களுக்குத் தருகிறார். 5கடவுளின் அன்பையும், கிறிஸ்துவின் மன உறுதியையும் அடைய ஆண்டவர் உங்கள் உள்ளங்களைத் தூண்டுவாராக!



தூய பவுல் எழுதியதாக நம்பப்படும் இந்த இரண்டாம் தெசலோனிக்கர் திருமுகம், முதலாவது திருமுகத்தின் சில கேள்விகளுக்கு விடையளிப்பதாக அமைந்துள்ளது. முக்கியமாக ஆண்டவரின் இரண்டாம் வருகை ஏற்கனவே வந்துவிட்டது என்ற பேதகத்தை அக்காலத்தில் சிலர் முன்வைத்தனர், அந்த பேதகத்தையும் இந்த திருமடல் கடுமையாக சாடுகிறது. 

வ.16: இங்கே இயேசுவிற்கும், தந்தையாம் கடவுளுக்கும் சில வார்த்தை விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. இயேசுதான் ஆண்டவர் என்று பவுல் திரும்ப திரும்ப விளங்கப்படுத்துவார் அதனை இங்கேயும் காணலாம் (κύριος ἡμῶν Ἰησοῦς Χριστὸς kurios hêmōn Iêsous Christos). 'எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து' என்பதன் மூலமாக இந்த சொற்கள் ஒன்றுக்கொன்று ஒத்தசொல் என்பது காட்டப்பட்டுள்ளது. அல்லது கிறிஸ்துவாகவோ, ஆண்டவராகவோ இயேசுவைத்தவிர வேறெவரும் இல்லை என்பதைக் குறிக்கிறது. தந்தையாகிய கடவுள், தன் அருளால் நிலையான ஆறுதலையும், எதிர்நோக்கையும் அளித்துள்ளார் என கடவுளின் செயற்பாடுகள் நினைவூட்டப்பட்டுள்ளன. 

வ.17: கடவுளினதும், இயேசுவினதும் ஆசீர்கள் பொழியப்படுகின்றன. உள்ளங்களுக்கு ஊக்கமளித்தல் (παρακαλέσαι ὑμῶν τὰς καρδίας parakalesai humōn tas kardias), நல்லதை சொல்லவும் செய்யவும் உறுதிப்படுத்துதல் (στηρίξαι ἐν παντὶ  ἔργῳ καὶ λόγῳ ἀγαθῷ stēridzai en panti ergō kai logō agathō). 

பின்வரும் வரிகளை (1-5), கிறிஸ்தவ வாழ்விற்கான பரிந்துரைகள் என தமிழ் விவிலியத்தில் காட்டப்பட்டுள்ளது. 

வ.1: இறுதியாக, என்ற வார்த்தை இங்கு கடிதம் முடிவதையல்ல மாறாக, கடிதத்தில் புதிய கருத்தொன்று வருவதைக் காட்டுகிறது. அதாவது இங்கு ஆசிரியர் வாசகர்களின் மன்றாட்டை ஈர்கப் பார்க்கிறார். மன்றாட்டினால் மட்டுமே கடவுளின் செயற்பாடுகள் வெற்றியளிக்க முடியும் என்பதையும், கடவுளை மாட்சிப்படுத்தப்பட முடியும் என்பதையும் நினைவூட்டுகிறார். 

வ.2: இந்த வசனத்திலிருந்து பவுல் அல்லது இக்கடிதத்தின் ஆசிரியரும் அவர் நண்பர்களும், நற்செய்திக்கு எதிரானவர்களால் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை காணக்கூடியதாக உள்ளது. அனைவரிடமும் ஓரே விதமான நம்பிக்கை இன்மையே இதற்கான காரணம் எனவும் ஆசிரியர் காட்டுகிறார். நம்பிக்கை என்பது இங்கே இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொள்ளக்கூடியதும்,  அத்தோடு ஆரம்ப கால திருச்சபை போதித்த நம்பிக்கை தொகுப்பையும் குறிக்கின்றது, இதற்காகவே இந்த நம்பிக்கை என்ற சொல் (ἡ πίστις அந்த நம்பிக்கை hê pistis) ஒரு சுட்டுச் செல்லுடன் வருகிறது. 

வ.3: இந்த நம்பிக்கைக்கு எதிரானவர்களின் தாக்குதல்கள் திருத்தூதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து விசுவாசகிளுக்கும் ஒரு பிரச்சனையாக இருந்ததை பவுல் எச்சரிக்கிறார். கடவுள் ஒருவரே நம்பிக்கைக்கு உரியவர் என்று சொல்வதன் மூலம், இப்படியான நம்பிக்கையை எவரிடமும் வைக்கவேண்டாம் என்கிறார் போல. உறுதிப்படுத்தலும், காத்தலும் கடவுளுடையவை என்பதை அழகாக போதிக்கிறார். 

வ.4: இவர்களுடைய கட்டளைகள் என்னவென்று சொல்லப்படவில்லை, அது தெசலோனிக்கருக்கு நன்கு பரீட்சயமாயிருந்திருக்கலாம். அந்த கட்டளைகளை அவர்கள் செய்வதாகவும், எதிர்காலத்திலும் செய்யவேண்டும் எனவும் கேட்கப்படுகின்றனர். அநேகமாக இந்த இரண்டாம் வருகை காலத்தில் கிறிஸ்தவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றியதாக அந்த கட்டளைகள் இருக்கலாம்.

  வ.5: இந்த சிறிய பகுதியில் இறுதி ஆசிர் வழங்கப்படுகிறது. கடவுளுடைய அன்பும் (τὴν ἀγάπην τοῦ θεοῦ tēn agapên tou theu), கிறிஸ்துவின் மனவுறுதியும் (τὴν ὑπομονὴν τοῦ Χριστοῦ tên hupomonên tou Christou) கடவுளின் கொடைகள், அவை கடவுளிடமிருந்தே வருகின்றன அத்தோடு அவறிற்க்கு மனித பலங்கள் போதுமானவையல்ல என்பதையும் பவுல் முடிவுரையில் முடிக்காமல் சொல்கிறார். 


நற்செய்தி வாசகம்
லூக்கா 20,27-38

27உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, 28'போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். 29இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். 30இரண்டாம், 31மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; 32கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். 33அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?' என்று கேட்டனர். 34அதற்கு இயேசு அவர்களிடம், 'இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர். 35ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. 36இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே. 37இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று கூறியிருக்கிறார். 38அவர் இறந்தோரின் கடவுள் அல்ல் மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே' என்றார். 39மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, 'போதகரே, நன்றாகச் சொன்னீர்' என்றனர். 40அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

சதுசேயரும் உயிர்த்தெழுதலும்: 

பரிசேயர்களைப்போல கி.மு இரண்டாம் கி.பி முதலாம் நூற்றாண்டில் பாலஸ்தீனாவில் வாழ்ந்த மிக முக்கியமான குழுக்களில் இவர்களும் ஒருவர். இவர்களைப் பற்றிய சரியான தரவுகைளைப் பெறுவதில் பல சிக்கல்கள் கடுமையாக இருக்கின்றன. புதிய ஏற்பாடும், யோசேபின் எழுத்துக்களும், இராபினிக்க இலக்கியங்களும் இவர்களை வௌ;வேறு கோணத்தில் பார்க்கின்றன. லூக்காவின் கருத்துப்படி இவர்கள்தான் தலைமைக் குருக்களாக இருந்தவர்கள், பரிசேயர்களை விட இயேசுவின் மீது அதிகமான வெறுப்பை இவர்கள் கொண்டிருந்தவர்களாக காட்டப்பட்டுள்ளனர். இவர்கள் நம்பிக்கையில் பரிசேயர்களை எதிர்த்தவர்கள், இவர்களின் நம்பிக்கை வித்தியாசத்தை பவுல் ஒரு முறை தனக்கு சாதகமாக பாவித்தார் (✽ காண்க தி.ப 23,6-8). பரிசேயர்கள் நிர்வாகத்தையும், தண்டனையையும் பொறுத்த மட்டில், சதுசேயர்களை விட மென்மையானவர்களாக காண்பட்டனர், பதிலுக்கு மோசேயின் மோசேயின் சட்டங்களைப் பற்றிய வாதமும் நம்பிக்கையும் இவர்களிடையே இருந்த முக்கியமான பிளவாகக் காணப்பட்டது. எபிக்கூரியன் என்ற ஒரு கிரேக்க மெய்யறிவு வாதத்தை இந்த சதுசேயர்கள் பின்பற்றினார்கள் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. இந்த எபிக்கூறியர் மறுபிறப்பு, மறுவாழ்வு, வானதூதர் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் உரோமைய இராணுவ ஆட்சியாளர்களுக்கு சார்பாகவும் இருந்தார்கள் எனவும் பார்கப்படுகிறது. 

சதுசேயர் (Σαδδουκαῖος DZaddoukaios) என்ற கிரேக்கச் சொல்லின் மூலச் சொல் அறியப்படவில்லை, ஒரு வேளை சாடோக் என்ற குரு மரபில் இவர்கள் வந்ததை குறிக்க இச்சொல் மருவி வந்திருக்கலாம் எனவும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த வாதத்தை சதுசேயர்தான் உண்டாக்கினார்கள் என்ற வாதமும் இவர்களுக்கு எதிரானவர்களால் முன்வைக்கப்படுகிறது. சாதிக் צַדִּיק என்பது உத்தமர்களைக் குறிக்கும் ஒரு சொல்லாகவும் இருக்கிறது. எப்படியாயினும் இவர்கள் ஏரோதியரை அதிகம் ஏற்காத, பரிசேயரை சாராத, உரோமையின் பலத்தை ஏற்றுக்கொண்ட ஒரு யூத குருகுலமாக இருந்திருக்க வேண்டும். இவர்கள் ஆரம்ப கால திருச்சபைக்கு நிச்சயமாக தலையிடியாக இருந்திருப்பார்கள். மோசேயின் சட்டத்தை தவிர வேறு எந்த பாரம்பரியத்தையும் இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உயிர்ப்பைப் பற்றியும், ஆன்மாவைப் பற்றியும், ஆன்மாவின் நித்தியத்தைப் பற்றியும் இவர்கள் நம்பவில்லை. உரோமையருக்கு எதிரான கலகத்தின் பின்னரும், தேவாலயத்தின் அழிவின் பின்னரும் இவர்களின் இருப்பும் அழிந்து போனது.

(✽ 6அவர்களுள் ஒரு பகுதியினர் சதுசேயர் என்றும், மறுபகுதியினர் பரிசேயர் என்றும் பவுல் அறிந்து, 'சகோதரரே! நான் ஒரு பரிசேயன். பரிசேய மரபில் பிறந்தவன்; இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் எதிர்நோக்கின் பொருட்டு விசாரிக்கப்படுகிறேன்' என்று தலைமைச் சங்கத்தின் முன் உரத்த குரலில் கூறினார். 7அவர் இப்படிச் சொன்னபோது பரிசேயருக்கும் சதுசேயருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. எனவே அங்குத் திரண்டிருந்தோர் இரண்டாகப் பிரிந்தனர். 8சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்; பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்.) 

வ.27: லூக்கா சதுசேயர்கள் யார் என்று இந்த வசனத்திலே வரைவிலக்கணப்படுத்துகிறார். அவர்கள் உயிர்தெழுதலை நம்பவில்லை, ஆக இயேசுவின மைய படிப்பினைக்கு எதிரானவர்கள். ஆனாலும் இயேசுவை அணுக அவர்களுக்கு இயேசு வாய்ப்பினைக் கொடுக்கிறார். கடவுளை அணுக அனைவருக்கும் வாய்ப்புண்டு என்பதைக் காட்டுகிறார் போல. 

வ.28-34: இவர்களுடைய கேள்விக்குள் ஏற்கனவே இவர்களின் பதிலும் இருக்கிறது. இங்கே இவர்களின் கேள்வி பதிலை அறியவல்ல மாறாக இயேசுவை பிடிக்கவே, என்பதை லூக்கா அழகாக காட்டுகிறார். இங்கே திருமணத்தைப் பற்றிய சட்டங்கள் வினவப்படுகிறன. மோசே கொடுத்த திருமணச் சட்டங்கள் பரம்பரை தொடர்வதை மையமாகக் கொண்டுள்ளது. நாடோடி வாழ்விலும், எதிர்பார்க்காத போர் ஆபத்திலும் ஆண்கள் மரணத்தை எப்போதும் எதிர்பார்த்தவர்களாகவே இருந்தனர். ஆண்களின ;இறப்பு அந்த குடும்பத்திற்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது, முக்கியமாக குழந்தைகள் இல்லாத குடும்பத்தில் கணவனின் மரணம், அந்த சந்ததியையே இல்லாமல் செய்தது. இது அக்காலத்திலிருந்த ஒரு முக்கியமான இருப்பியல் ஆபத்து. இதனைவிட, ஆண் ஆதிக்கம், மற்றும் ஆண்களாலே வாரிசுரிமை கடத்தப்படுதல் என்ற நம்பிக்கைகள், பெண்களை குடும்பத்தின் பங்காளிகள் என்பதைவிடுத்து, பிள்ளைகளையும், பரம்பரையும் கொடுக்கும் இயந்திரமாகவே பார்க்க வைத்தது. ✽தொ.நூல் 38,8 இல் யூதா தன் இறந்த மகனின் சந்ததியை உயிரோடிருந்த இன்னொரு மகனைவைத்து உயிர்ப்பிக்க முயன்றதை வாசிக்கலாம். 

✽✽இணைச்சட்டம் 28,5-8 இறந்த சகோதரன் மட்டில் உயிரோடிருக்கும் சகோதரரின் கடமைகளை விளக்குகிறது. ஒருவரின் இறப்பின் பின்னரும் அவர் சந்ததி வாழ வேண்டும் என இஸராயேலரின் நம்பிக்கை அழகாக இருக்கிறது. அத்தோடு இங்கே கொழுந்தனை கேள்வி கேட்கக்கூடிய அதிகாரத்தையும் பெண்களுக்கு மோசே கொடுக்கிறார். யூதாவின் மருமகளான தாமாரும் இந்த கடமையை உணர்ந்து செய்ததாலே, இயேசுவின் மூதாதையர் பட்டியலில் இடம்பெற்றார் (ஒப்பிடுக தொ.நூல் 38: மத் 1,3).

இங்கு இறந்த சகோதரனின் மனைவி (அண்ணியார்) எத்தனை கொழுந்தினர்களை மணக்க முடியும் என்று குறிப்பிடப்படவில்லை, ஆனால் பல ஆண்களை மணக்கலாம் என்பது புலப்படுகிறது. ஏழு சகோதரர்கள் என்று சதுசேயர் கற்பனை செய்வது ஒரு நிறைவான அல்லது எண்ணிக்கையில் அதிகமான ஆண்களை குறிப்பதற்காகவும் இருக்கலாம்.  இன்றைய முதலாம் வாசகம் ஒரு தாய் மற்றும் அவரின் ஏழு பிள்ளைகளின் கதையையும் அவர்கள் விசுவாசத்திற்காக இறந்ததையும் குறிக்க, லூக்கா நற்செய்தியின் இந்த பகுதி ஒரு பெண்ணினதும் அவர் ஏழு கணவர்களினதும் கதையை குறிக்கிறது. மேற்குறிப்பிட்ட அந்த தாயைப்போலவே இறுதியாக இந்தப் பெண்ணும் இறக்கிறார். வ.33 சதுசேயரின் கேள்வியை தாங்கி வருகிறது. இவர்கள் உயிர்த்தெழுதலை நம்பாதவர்கள். வாழ்க்கை இந்த உலகத்தோடு முடிந்து விடுகிறது என்பதையும் போதித்தும் நம்பியும் வாழ்ந்தவர்கள். இவர்களின் இந்த உதாரணம் அவர்களுடைய நம்பிக்கையின் பண்புகளைக் காட்டுகிறது. அவர்கள் இயேசு போதித்த உயிர்ப்பையும், மறுவுலக வாழ்க்கையையும் இவ்வுலக வாழ்வுடன் ஒப்பிட பார்த்தனர். 'அவர் யாருக்கு மனைவி?' என்ற கேள்வி அவர்களின் ஆணாதிக்கத்தைக் காட்டுகிறது. இவர்கள் 'இவர் கணவன் யார்?' என்று கேட்க துணியவில்லை. அத்தோடு அவர்கள், எழுவரும் அவரை மணந்தனரே என்று சொல்லி ஏளனமாக இயேசுவை வினதுவது போலுள்ளது. ஒருவேளை இயேசுவின் உயிர்ப்பு படிப்பினையை இவர்கள், விபச்சாரத்திற்கு ஒப்பிட்டு ஏளனப்படுத்தியிருக்கலாம். இவர்களின் கேள்வியின் தொடக்கத்தில் இவர்கள் இயேசுவை போதகர் என் அழைக்கின்றனர் (διδάσκαλος திதாஸ்கலோஸ் ஆசிரியர்), ஆனால் கேள்வியின் முடிவில் ஏதோ இந்த ஆசிரியர் என்று தன்னை அழைப்பவருக்கு மோசேயின் சட்டம் தெரியாது என்பதனைப்போல ஒர் ஏளனத்தோடு முடிக்கின்றனர். 

(✽8அப்போது யூதா தம் மகன் ஓனானை நோக்கி, 'நீ உன் சகோதரன் மனைவியோடு கூடி வாழ். சகோதரனுக்குரிய கடமையைச் செய்து, உன் சகோதரனுக்கு வழிமரபு தோன்றச் செய்' என்றார்.) (✽✽இ.ச. 28,5-8: 5உடன்பிறந்தோர் சேர்ந்து வாழ்கையில், அவர்களில் ஒருவன் மகப்பேறின்றி இறந்துபோனால், இறந்தவனின் மனைவி குடும்பத்திற்கு வெளியே அன்னியனுக்கு மனைவியாக வேண்டாம். அவள் கொழுந்தனே அவளைத் தன் மனைவியாக ஏற்று, அவளோடு கூடிவாழ்ந்து, கணவனின் உடன்பிறந்தோன் செய்ய வேண்டிய கடமையை அவளுக்குச் செய்யட்டும். 6அவளுக்குப் பிறக்கும் ஆண் தலைப்பேறு இறந்துபோன சகோதரனின் பெயரிலேயே வளரட்டும். இதனால் அவன் பெயர் இஸ்ரயேலிலிருந்து அற்றுப்போகாது. 7இறந்தவனின் உடன்பிறந்தான் தன் அண்ணியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையெனில், அவள் நகர்வாயிலில் உள்ள தலைவர்களிடம் சென்று, 'தன் அண்ணன் பெயரை இஸ்ரயேலில் நிலைநிறுத்தும்படி ஒரு கணவனின் தம்பிக்குரிய கடமையை எனக்குச் செய்ய என் கொழுந்தனுக்கு விருப்பமில்லை' என்று கூறுவாள். 8அப்போது நகர்த் தலைவர்கள் அவனைக் கூப்பிட்டு அவனோடு பேசுவர். அவனோ விடாப்படியாக 'அவளை ஏற்றுக் கொள்ள எனக்கு விருப்பமில்லை' என்று கூறினால் 9அவன் அண்ணி அவனை அணுகி, தலைவர்களின் கண்முன்பாக, அவன் காலிலுள்ள மிதியடிகளைக் கழற்றி, அவன் முகத்தில் துப்பி, 'தன் சகோதரனின் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படும்' என்று கூறுவாள். 10இஸ்ரயேலில் அவளது பெயர் 'மிதியடிகழற்றப்பட்டவனின் வீடு' என்றழைக்கப்படும்.)

வ.35-36: திருமணம் என்பது என்ன, வருங்காலத்திற்கு ஏன் திருமணம் என்று விளக்குகிறார். மூல கிரேக்க மொழியில் 'இக்கால மக்கள் திருமணம் செய்கிறார்கள் அத்தோடு திருமணத்தில் கொடுக்கப்படுகிறார்கள்'. அக்காலத்தில் திருமணம் மூலமாக பெண்கள் விற்கவும் வாங்கவும்பட்டார்கள். திருமணத்தின் மேன்மைகள் பல வேளைகளில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டன. இயேசு திருமணத்திற்கு எதிரானவர் அல்ல, மாறாக விவாகரத்தே பிழையானது என்று அந்நாள் சமுதாயத்திற்கு முதலில் சொன்னவர் இயேசு ஆண்டவர்தான். இங்கே இயேசு திருமணத்தின் இக்கால நோக்கத்தை விளக்குகிறார். திருமணம் ஒரு திருவருட்சாதனம் ஆனால் அது முடியக்கூடியது. அத்தோடு மனிதர்களுத்தான் திருமணம், திருமணத்திற்காக மனிதர்கள் இல்லை என்பதையும் நோக்கலாம். ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் மட்டில் இருந்த திருமணம், பிள்ளை பெறுதல், பிள்ளை வளர்ப்பு மேலும் பல கேள்விகளின் தாக்கத்தை இங்கே காணலாம் எனவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

மேலும், அழியாத வருங்காலத்தில் யாரும் திருமணம் செய்வதுமில்லை அத்தோடு திருமணத்தில் கொடுக்கப்படுவதும் இல்லை என்கிறார் இயேசு. உயிர்ப்பு வாழ்வில் சில முக்கியமான மாற்றங்கள் உள்ளன அதில் முக்கியமான ஒன்று இந்த மனித திருமணம் இல்லாத வாழ்வு. உயிர்ப்பை தங்களது சொந்த கொடுக்கல் வாங்கல் அர்தத்தில் பார்க்க முயன்ற சதுசேயருக்கு இது நல்ல விளக்கமாக அமைந்திருக்கும். அவர்களுடைய கேள்வியான, பெண் யார் சொத்து? என்பதற்கு, பெண் எவர் சொத்துமல்ல அவர், அவர் சொத்து என்பதனைப்போல் நல்ல விளக்கம் கொடுக்கப்படுகிறது. பின்னர் உயிர்ப்பின்; மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கும் விளக்கம் தருகிறார் இயேசு. 

அ. இனி அவர்கள் சகாதவர்களாக இருப்பார்கள் - சாவு மனிதத்தின் ஓர் அங்கம். கிறிஸ்தவம் அதனை தவிர்க்க முடியா மறைபொருள் என்கிறது. மரணத்தின் ஆட்சி மிக பலமானது இருப்பினும் உயிர்ப்பிலே மரணம் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பது இயேசுவின் மிக முக்கியமான படிப்பினை. 

ஆ. வானதூதர்களைப்போல் இருப்பார்கள் (ἰσάγγελος isangelos) - எபிரேயர்களின் வானதூதர்கள் பற்றிய நம்பிக்கை காலத்தால் மிகவும் பிந்தியது. முதல் ஏற்பாட்டில் பல இடங்களில் கடவுளுக்கு பதிலாக வானதூதர்கள் என்ற சொல்லும் பாவிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஏனோக்கு, சாலமோனின் ஞானம், இரண்டாம் பாருக்கு போன்ற நூற்கள் இப்படியான வானதூதர்கள் பற்றிய அறிவை இன்னும் விளக்குகின்றன. இங்கு இயேசு இவர்கள் வானதூதர்கள் போல் இருப்பார்கள் என்பதன் மூலம், உயிர்த்த மக்கள் இந்த உலகியல் தேவைகள் கடமைப்பாடுகள் போன்றவற்றிலிருந்து மீண்டிருப்பார்கள் என்கிறார். 

இ. உயிர்த்த மக்கள், கடவுளின் மக்கள் - இதன் மூலம் இந்த உலகில் மக்கள் இன்னும் முன்னேற வேண்டிய தேவையிருப்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். இவ்வுலகின் சொந்தங்கள் மற்றும் கடமைப்பாடுகள் என்பன உயிர்த்த மக்கள்மேல் எந்தவிதமான ஆதிக்கத்தையும் செலுத்த முடியாது என்பதை இயேசு உரைக்கிறார். மனிதர்கள் கடவுளின் தன்மையை இழந்தாலும் உயிர்ப்பின் பின் அந்த தன்மையை பெற்றுக்கொள்வர் என்பது இங்கே நம்பிக்கை செய்தியாக இருக்கிறது. 

வவ.37-38: மோசேயின் சட்டங்கள் மற்றும் வார்த்தைகளை மட்டுமே ஏற்றுக்கொண்ட சதுசேயருக்கு இயேசு மோசேயின் வார்த்தைகளிலிருந்தே பதில் கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இயேசு எவ்வளவிற்கு முதல் ஏற்பாட்டில் பரீட்சயமாக இருந்தார் என்பதும் புலப்படுகிறது. ✽வி.ப 3,6 அனைத்து யூதர்களுக்கும் மிகவும் தெரிந்த முக்கியமான பகுதி. இங்கே மோசே கடவுளுடன் பேசியபோது, நிச்சயமாக அது ஆபிராகம் இறந்து பல ஆண்டுகளாயிருந்திருக்ககும்;. இப்படியாக கடவுளின் முன், மனிதர் இறப்பதில்லை அவர் நினைவுகளும்இறப்பதில்லை என்பது புலப்படுகிறது. 

இயேசு சதுசேயருக்கு (நமக்கும்) இன்னொரு அறிவுரையைத் தருகிறார் அதாவது, இந்தக் கடவுள் வாழ்வோரின் கடவுள், அவருக்கு காலங்கள் கிடையாது. இதனைக் குறிக்க இங்கே எந்த கால வினைச்சொல்லும் பாவிக்கப்படவில்லை மாறாக ஒரு நிகழ்கால வினையெச்சம் பாவிக்கப்பட்டுள்ளது (ζώντων dzôntôn வாழ்ந்துகொண்டிருக்கின்ற). ✽✽இது வி.ப 3,14ஐ நினைவூட்டலாம். அத்தோடு இந்த வாழுகின்ற கடவுளில் அனைவரும் வாழ்கிறவர்களே என்ற அழகான படிப்பினையும் தரப்படுகிறது. 

(✽6மேலும் அவர், 'உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே' என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார்.)

(✽✽கடவுள் மோசேயை நோக்கி, 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்றார். மேலும் அவர், 'நீ இஸ்ரயேல் மக்களிடம், 'இருக்கின்றவர் நானே' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்' என்றார்.)

வவ.39-40: இந்த வரிகளுக்குரியவர்கள் மறைநூல் அறிஞர்கள், இவர்களில் பரிசேயரும்  இருந்திருக்கலாம். இவர்கள் இயேசுவை பாராட்டவில்லை மாறாக சதுசேயர்கள் இயேசுவிடம் நன்றாக வாங்கிக்கட்டினார்கள் என்பதைப் பார்த்து சந்தோசப்படுகிறார்கள். இவர்களையும் வேறு இடத்தில் இயேசு நன்றாக கவனிப்பார். இயேசுவிற்கு பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர் என்ற வித்தியாசம் கிடையாது. இறுதியாக, கேள்விகேட்க துணிந்து, கேள்வி கேட்டவர்கள், மேலதிகமாக எதையும் கேட்காமல் இருக்கிறார்கள் என்று சொல்லி, உயிர்ப்பைப் பற்றிய போதனை சரியானதே என்று லூக்கா வாதிடுகிறார். 

மரணம், இறப்பு மற்றும் உயிர்ப்பு ஒரு மறைபொருள், 

நம் விசுவாசத்தின் முக்கியமான கூறுகள், 

இயேசுவைத்தவிர வேறெவரும் அதனை பற்றி அறிவிப்பது கடினம், 

எனெனில் அவர் மட்டுமே இவற்றைத் தாண்டினார் என்பது நம் விசுவாசம்.

நம் இனியவர்கள் இறந்தும், நம்மில், நினைவில் வாழ்கிறார்கள்.  

அன்பு ஆண்டவரே, 

இவ்வுலகை நல்லவிதத்தில் வாழ்ந்து, பாதுகாத்து, விருத்திசெய்து,

பின்னர் விட்டுவிட்டு

உம்மிடம் வந்து சேர அருள் புரியும், ஆமென்.

இறந்தும் வாழ்கின்ற எம் இனியவர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம்

Requiescant in Pace !!!