இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






தூய ஆவியார் பெருவிழா

முதலாம் வாசகம்: திருத்தூதர் பணிகள் 2,1-11
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 104
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 12,3-7.12-13
நற்செய்தி: யோவான் 20, 19-23<


யார் இந்த தூய ஆவியார்?
விவிலியத்தில் ஆழமான சிந்தனைகளையும் பல ஆராய்சித் தேடல்களையும் உருவாக்கிய சிந்தனைகளில், தூய ஆவியானவர் பற்றிய சிந்தனையும் மிக முக்கியமானது. கத்தோலிக்க திருச்சபை இவரை, அவளின் பாரம்பரிய விசுவாசத்தின் படி, திரித்துவத்தின் மூன்றாவது ஆளாக ஏற்றுக்கொண்டு நம்புகிறது. எபிரேயத்தில் רוּחַ קָדוֹשׁ (ரூஹா காடோஷ்), தூய மூச்சு அல்லது தூய காற்று என பொருள்கொள்ளலாம். கிரேக்கத்தில் πνεῦμα ἅγιος (புனுமா ஹகியோஸ்), தூய மூச்சு என்றும், இலத்தீனில் Spiritus (ஸ்பிரித்துஸ்), உயிர்-ஆவி என்றும் பொருள் கொள்ளலாம். எபிரேயத்தில் இவர் பெண் பாலகவும், கிரேக்கத்தில் பலர்பாலகவும், இலத்தீனில் ஆண்பாலகவும்  இருப்பதனால், தூய எரோம், கடவுள் பால் பிரிவினைகளை கடந்தவர் என்று வாதாடுகிறார். (காண் தொ.நூ 1,2: யோபு 33,4). இந்த வாதாட்டம் திருச்சபையின் தந்தையியலின் ஆளுமையைக் காட்டுகிறது. 

முதல் ஏற்பாட்டில், கடவுள் தெரிவு செய்யும் நபர்களை உற்சாகப்படுத்தி உந்துபவர்களாக  இந்த சக்தி வர்ணிக்கப்படுகிறது. முக்கியமாக நீதிமான்களையும், இறைவாக்கினர்களையும், அரசர்களையும் இந்த ஆவி ஆட்கொள்கிறது (காண் நீதி.தலை 3,10: 6,34). இறைவாக்குரைத்தல், கனவுகளுக்கு விளக்கம் கொடுத்தல் போன்றவை இந்த ஆவியின் முக்கியமான பணிகளாக காட்டப்படுகிறன (காண் தொ.நூ 41,38: 1சாமு 10,10). மிக முக்கியமாக இறைவாக்கினர்கள் இந்த ஆவியின் நபர்களாக காணப்பட்டனர் (எசே 2,2). அத்தோடு முதல் ஏற்பாட்டில் இந்த ஆவியார் அதிகமான வேளைகளில் நபர் சாராத சக்தியாக காணப்படுகிறார். 

புதிய ஏற்பாட்டில் இந்த ஆவியானவரைப் பற்றிய சிந்தனை, முதல் ஏற்பாட்டு விசுவாசத்தில் இருந்து வளர்கின்றது. நற்செய்தியாளர்கள் லூக்கா, யோவான் மற்றும் பவுல் போன்றவர்கள் இந்த ஆவிபற்றிய சிந்தனைகளை விசேட விதமாக இயேசுவின் பணியுடன் இணைத்து காட்சியமைக்கிறார்கள். மாற்கு நற்செய்தியாளர் இயேசு தூய ஆவியில் திருமுழுக்கு கொடுப்பார் எனவும் (காண்க மாற் 1,8), அவர் அந்த ஆவியை தனது திருமுழுக்கில் பெற்றார் எனவும் (காண்க மாற் 1,10), இந்த தூய ஆவிக்கெதிரான குற்றம் பாரதூரமானது எனவும் காட்டுகிறார் (காண்க மாற் 3,29). சில வேளைகளில் இயேசு அசுத்த ஆவிகளை விரட்டுவதையும் காட்டுகிறார் (காண்க மாற் 3,11). ஆண்டவரின் பிறப்பு நிகழ்சிகளில் இந்த ஆவியானவரின் முக்கியமான பணிகளை மத்தேயு விவரிக்கின்றார் (காண்க மத் 1,20), அதே ஆவியானவரை இயேசு இறுதியில் சீடர்களுக்கும் கொடுத்து கட்டளை கொடுக்கிறார் (காண்க மத் 28,18-20). லூக்காவின் நற்செய்தியின் ஒவ்வொரு பகுதியையும் இந்த ஆவியார் ஆட்கொள்ளுவார். மரியா, சக்கரியா, எலிசபேத்து, யோவான், சிமியோன் போன்றவர்கள் இதே ஆவியால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆவியார் திருமுழுக்கில் இயேசு மீது இறங்குகிறார், ஆண்டவரை பாலை நிலம் அழைத்து செல்கிறார், பணிகளில் அவர்கூட இருக்கிறார், இறுதியாக இந்த ஆவியானவரை இயேசு தன் சீடர்களுக்கு பணிக்கிறார் (காண்க லூக் 24,49). இதே ஆவியின் ஆட்கொள்ளலை திருத்தூதர் பணிகள் நூல்கள் ஆழமாக காட்டுகிறது. வரலாற்றில் ஒரு கட்டத்தில், இந்த நூல், தூய ஆவியின் நற்செய்தி என அழைக்கப்படும் அளவிற்கு அவரின் செயற்பாடுகளை இங்கே காணலாம். பவுல், உயிர்த்த ஆண்டவரின் முகவராக தூய ஆவியைக் காண்கிறார் (காண்க உரோ 8,9). இந்த ஆவியானவரையும் கிறிஸ்துவையும் பிரிக்க முடியாது என்பதும் அவர் நம்பிக்கை (காண்க 1தெச 1,5-6). முதல் ஏற்பாட்டை போலல்லாது பவுல் தூய ஆவியை தனி ஆளாக காட்டுகிறார், அத்தோடு தூய ஆவியின் கொடைகளையும் கனிகளையும் தனித்தனியாக விவரிக்கிறார் (காண்க 1கொரி 12-14: கலா 5,22-23). உரோமையார் 8ம் அதிகாரம் தூய ஆவியார் அருளும் வாழ்வை விவரிக்கிறது. 

இவர்களின் சிந்தனைகளையும் தாண்டி தூய ஆவியானவரின் உள்ளார்ந்த அனுபவத்ததை விவரிக்கிறார் யோவான் நற்செய்தியாளர். யோவான் தூய ஆவியானவரை துணையாளராக காட்டுகிறார். ஒருவருடைய புதிய பிறப்பு இந்த தூய ஆவியானவராலேயே நடக்கிறது, எனவும் இயேசு அறிவித்த பலவற்றை இந்த ஆவியானவரே விளங்கப்படுத்துவார் என்பது யோவானின் தனித்துவமான படிப்பினை. உயிர்த்த இயேசுவின் பிரசன்னம் இந்த தூயஆவியாராலே, வழியிலே நடைபெறும் என்பதும் இவரின் புதிய சிந்தனை. திரித்துவத்தின் மூன்றாம் ஆளாக இந்த தூய ஆவியானவரை மத்தேயுவும், திருமுகங்களும் அங்காங்கே தெளிவாக காட்ட முயற்சிக்கின்றன (காண் மத் 28,19: 2கொரி 13,14). திரித்துவத்தின் மூன்றாம் ஆள், தூய ஆவியார் என்பது திருச்சைபயின் விசுவாச உண்மையும், பாரம்பரிய பிரகடணமுமகா இருக்கிறது. 

முதல் வாசகம்
திருத்தூதர் பணிகள் 2,1-11

தூய ஆவியின் வருகை 1பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். 2திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. 3மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். 4அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். 5அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். 6அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர். 7எல்லோரும் மலைத்துப்போய், 'இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? 8அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி?' என வியந்தனர். 9பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், 10பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், 11யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே! 'என்றனர்.

இன்றைய முதலாம் வாசகம், தூயஆவியாரின் வருகை நிகழ்வை காட்டுகின்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியைப் போல திருத்தூதர் பணிகளில் வேறு எந்த பகுதியும் முக்கியம் பெறவில்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வ.1: இந்த விழா, (πεντηκοστή பென்டேகோஸ்டே) பாஸ்காவிற்கு பதினைந்தாம் நாளுக்கு பின்னர் முற்காலத்தில் கொண்டாடப்பட்டது (காண் தோபி 2,1). இஸ்ராயேலரின் மூன்றில் இரண்டாவது முக்கியமான விழாவும் இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் இது எருசலேமில் பாஸ்காவின் பின்னர் ஏழாவது வாரத்தில் அறுவடைகளுக்கு நன்றியாக கொண்டாடப்பட்டது. இதனை வாரங்களின் திருநாள் (חַג שָׁבֻעֹת֙ ஹக் ஷவுஓத்) மற்றும் அறுவடையின் திருநாள் (חַג קָּצִיר֙ ஹக் காட்சிர்) என்றும் அழைப்பர். இயேசு யூதனாக இந்த விழாவில் பல முறை பங்குபற்றியிருப்பார். சில யூத குழுக்கள் இந்த திருவிழாவை தாங்கள் மோசேயிடம் இருந்து சட்டங்களை பெற்றுக்கொண்டதை நினைத்து கொண்டாடும் விழாவாகவும் இதனை பார்த்தனர். 

வ.2: தூய ஆவியாரின் வருகை விவரிக்கப்படுகிறது. லூக்கா இங்கே, இஸ்ராயேலர் சீனாய் மலையடிவாரத்தில் பெற்ற இறைக்காட்சி அனுபவத்தை ஒத்ததாக விவரிக்கின்றார் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். கொடுங்காற்று வீசுவது போல இரைச்சல் (ἦχος ὥσπερ φερομένης πνοῆς βιαίας) என்ற அடையாளம் அசாதாரணமான சூழ்நிலையை விளக்குகின்றது. இங்கே காற்றிற்கு (πνοή புனொஏ) பாவிக்கப்படுகின்ற அதே சொல்லைத்தான் கிரேக்க மொழி தூய ஆவிக்கும் பாவிக்கிறது. இங்கணம் இந்த இரண்டிற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பைக் காணலாம். இந்த இரைச்சல் வீடு முழுவதும் ஒலித்தது என்று சொல்லி, இது ஒரு தனி மனித அனுபவம் அல்ல மாறாக இது ஒரு வரலாற்று நிகழ்வு என லூக்கா காட்டுகிறார். 

வவ.3-4: தூய ஆவியானவரை காற்றாகவோ அல்லது நெருப்பு நாவாகவோ இங்கே லூக்கா காட்டவில்லை மாறாக தூய ஆவியை இவற்றிக்கு ஒப்பிடுகிறார். நெருப்பு போன்ற நாக்கு என்ற உருவகம் கிரேக்க உரோமைய இலக்கியங்களில் உள்ளாந்த உளவியல் அனுபவங்களையும்,  இறைவாக்கு, அறிவியல், பேச்சு அனுபவங்களையும் காட்டுவனவாக அமைந்திருந்தது. லூக்கா இந்த உருவகங்கள் மூலமாக கடவுள் தனது வல்லமையை காட்டுவதாக உணர்த்துகிறார். முழு வீடு, ஒவ்வொருவரின் தலை, வௌ;வேறான மொழிகள், இவைகள் கடவுளின் நிறைவான அருளையும் அவரின் பல்முகத்தன்மையையும் காட்டுகின்றன. பரவசப்பேச்சு மற்றும் பல மொழிப்பேச்சுக்கள் என்பவை ஒரே பொருளைக் குறிக்காது. பன்மொழி திறமை என்பது அக்காலத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்த ஒரு கல்வித் தகமை. பவுல் இப்படியான திறமையுடையவராக இருந்தார். இங்கே இந்த தகமையை பெறுகிறவர்கள் சாதாரண கலிலேயர்கள், இதனால்தான் இந்த நிகழ்வு மிக ஆச்சரியாமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த சாதாரண சமானிய கலிலேயர்களுக்கு வேறு நாட்டு மொழிகள் தெரிய வாய்ப்பில்லை இதனால் அவர்கள் ஏதோ ஒரு சக்தியினால் இதனை செய்கிறார்கள் என்பதும் மற்றவருக்கு புலப்படுகிறது. 

வவ. 5-8: ஈழத் தமிழர் சமூதாயத்தைப்போல், யூத மக்கள் பல காலங்களாக தாயக மற்றும் புலம் பெயர்ந்த சமூகங்களாக காணப்பட்டனர். இந்த புலம்பெயர்ந்த யூத மக்கள் அந்த நாட்டு மொழிகளையும் அத்தோடு கல்வி மொழியான கிரேக்கத்தையும், அரச மொழியான இலத்தீனையும் கற்றனர். தாயக இஸ்ராயேலில் அதிகமானோர் பாலஸ்தீன அரமேயிக்கத்தை பேசினர். இந்த அறுவடைத் திருநாளுக்காக அனைத்து புலம்பெயர்ந்த இடங்களில் இருந்து வந்தவர்களை லூக்கா இங்கே காட்டுகிறார். இவர்கள் ஒவ்வொருவரும் கலிலேயரின் அரமேயிக்கத்தை அறிந்திருக்க வாய்பில்லை, திருத்தூதர்கள் அனைவருக்கும் கிரேக்கமோ இலத்தீனோ தெரிந்திருக்கவும் வாய்பில்லை, அல்லது இதனை இந்த யூதர்கள் எதிர்பார்திருக்கவும் மாட்டார்கள். புலம் பெயர்ந்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது. தமது புலத்து மொழிகளில் கலிலேயர் பேசுவதைக் கேட்கின்றனர். வழமையாக புலம்பெயர்ந்தவர்கள் வசதி படைத்தவர்களாக இருந்தனர், இதனால் தாயகத்தில் இருந்த வறியவர்களை நக்கல் கண்களோடு பார்த்திருக்கலாம். இதனால் கலிலேயரின் சாகசங்கள் ஆச்சரியத்தை தருகிறது. (இந்த தாயாக-புல ஆச்சரியங்களை நாமும் நல்லூரிலும் மடுவிலும் அடிக்கடி காணலாம்). ஆச்சரியம் தந்தாலும் இவர்களின் கேள்விகள் நியாயமானவை. வானத்தின் கீழுலுள்ள (ἀπὸ παντὸς ἔθνους τῶν ὑπὸ τὸν οὐρανόν) அனைத்து நாடுகள் (வ.5) என்று அன்றைய உரோமைய சாம்ராச்சியத்தையும், அத்தோடு அவர்களுக்கு தெரிந்த நாடுகளையும் லூக்கா குறிப்பிடுகிறார் என்றே எடுக்க வேண்டும். இவை எந்தெந்த நாடுகள் என்று பின்வரும் வரிகள் விளக்குகின்றன. இவர்கள் கலிலேயர்கள் அல்லவா (வ.7: ἅπαντες οὗτοί εἰσιν οἱ λαλοῦντες Γαλιλαῖοι;)  என்ற இவர்களின் கேள்வி, கலிலேயர்களை புலம்பெயர்ந்தவர்கள் எப்படி பாhத்தார்கள், அல்லது அக்கால லூக்காவின் வாசகர்கள் எப்படி பார்த்தார்கள் என்பதை நமக்கு காட்டுகிறது. இவர்களின் வியப்பு, மகிழ்ச்சியை அல்ல, மாறாக சந்தேகத்தையே காட்டுகிறது. இங்கே வியப்பிற்கு பாவிக்கப்பட்டுள்ள இந்த கிரேக்க சொல் (ἐθαύμαζον எதௌமாட்சோன், ஆச்சரியப்பட்டனர்) பலவேளைகளில் இயேசு அதிசயங்கள் செய்தபோது மக்கள் சந்தேகப்பட்டு வியந்தார்கள், அதனை குறிக்க நற்செய்திகளில் பாவிக்கப்பட்டுள்ளது. 

வவ. 9-10: இவர்கள் எந்தெந்த இடத்தில் வசிக்கிறவர்கள் அல்லது இடத்தவர்கள் என்பதை லூக்கா விவரிக்கிறார். உரோமைய பேரரசு திருத்தூதர் காலத்தில் பரந்து விரிந்திருந்தது. பார்தியா, மேதியா, எலாயமியா, மொசோப்போதோமியா (Πάρθοι καὶ Μῆδοι καὶ Ἐλαμῖται καὶ οἱ κατοικοῦντες τὴν Μεσοποταμίαν) போன்றவை உரோமையரின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கவில்லை. மற்றைய பகுதிகளான: யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா (சின்ன), பிரிகியா, பம்பலியா, சீரேன் போன்றவை வடகிழக்கு உரோமைய மாகாணங்கள் (தற்போதைய துருக்கி, இஸ்ராயேல், லெபனான், சிரியா, பலஸ்தீனா). எகிப்து லிபியா போன்றவை, தெற்கு உரோமைய மாகாணங்கள் (தற்போதைய எகிப்து, லிபியா, துனிசயிh, அல்ஜீரியா, மோறாக்கோ போன்றய நாடுகளின் வடக்கு பிராந்தியாங்கள்). உரோமை என்பது பழைய உரோமை நிலவளவைக் குறிக்கும். 

வ.11: லூக்கா, யூதர்கள் மட்டுமல்ல யூத மதத்தை தழுவியவர்களையும் விவரிக்கின்றார். இவர்கள், கிரேக்கரும், அரேபியருமாவர். உரோமையில் பல யூதர்கள் இருந்தனர், ஆனால் உரோமையர்களில் சிலர் யூத மதத்தை தழுவினார்கள் என்பது சாத்தியமில்லை. இந்த விவரிப்பில் இருந்து அக்காலத்தில் சமய சுதந்திரங்களும், சகிப்புத்தன்மைகளும், தூர புனித இடங்களுக்கான பயணங்களும் வழமையில் இருந்ததை காணலாம். இந்த காலத்தில் அரேபியாவில் இஸ்லாம் என்ற ஒரு மதம் உருவாகியிருக்கவில்லை. அங்கே மத சகிப்புத்தன்மை இருந்திருக்கிறது. இந்த நாட்களில் இஸ்லாமியர் எருசலேமிற்கு வருவதையோ, அல்லது யூதர்கள் இஸ்லாமியரின் தேசங்களுக்கு செல்வதையோ சாதாரணமாக எதிர்பார்க்க முடியாது. இருவரும் தங்களுக்கென்று 'உண்மைகளை' உருவாக்க்கி அதனை நியாயப்படுத்த கதைகளையும், வியாக்கியானங்களையும் உருவாக்குகிறார்கள். (உரோமை பேரரசின் நில வரபடைத்தை காண இங்கே சொடுக்குக:http://www.timemaps.com/civilization/Ancient-Rome)



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 104

திருப்பாடல் 104 படைப்பின் மேன்மை 1என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். 

2பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர்;

3நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்; கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்; காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்! 

4காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்; தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர். 

5நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது என்றென்றும் அசைவுறாது.

6அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது; மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது; 

7நீவீர் கண்டிக்கவே அது விலகி ஓடியது; நீவீர் இடியென முழங்க, அது திகைப்புற்று ஓடியது 

8அது மலைகள்மேல் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, அதற்கெனக் குறித்த இடத்தை அடைந்தது

9அது மீறிச்செல்லாதவாறு அதற்கு எல்லை வகுத்தீர்; பூவுலகை அது மீண்டும் மூடிவிடாதபடி செய்தீர்; 

10பள்ளத்தாக்குகளில் நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்; அவை மலைகளிடையே பாய்ந்தோடும்;

11அவை காட்டு விலங்குகள் அனைத்திற்கும் குடிக்கத் தரும்; காட்டுக் கழுதைகள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்; 

12நீருற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக்கொள்கின்றன் அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன் 

13உம் மேலறைகளினின்று மலைகளுக்கு நீர் பாய்ச்சுகின்றீர்; உம் செயல்களின் பணியால் பூவுலகம் நிறைவடைகின்றது. 

14கால்நடைகளுக்கெனப் புல்லை முளைக்கச் செய்கின்றீர்; மானிடருக்கெனப் பயிர்வகைகளை வளரச் செய்கின்றர்; இதனால் பூவுலகினின்று அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கின்றீர்; 

15மனித உளத்திற்கு மகிழ்ச்சியூட்டத் திராட்சை இரசமும், முகத்திற்குக் களையூட்ட எண்ணெயும் மனித உள்ளத்திற்குப் புத்துணர்வூட்ட அப்பமும் அளிக்கின்றீர். 

16ஆண்டவரின் மரங்களுக்கு — லெபனோனில் அவர் நட்ட கேதுரு மரங்களுக்கு — நிறைய நீர் கிடைக்கின்றது. 

17அங்கே பறவைகள் கூடுகள் கட்டுகின்றன் தேவதாரு மரங்களில் கொக்குகள் குடியிருக்கின்றன.

18உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்குத் தங்குமிடமாகும்; கற்பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாகும். 

19காலங்களைக் கணிக்க நிலவை நீர் அமைத்தீர்; ஆதவன் தான் மறையும் நேரத்தை அறிவான்.

20இருளை நீர் தோன்றச் செய்யவே, இரவு வருகின்றது; அப்போது, காட்டு விலங்குகள் அனைத்தும் நடமாடும். 

21இளஞ்சிங்கங்கள் இரைக்காகக் கர்ச்சிக்கின்றன் அவை இறைவனிடமிருந்து தங்கள் உணவைத் தேடுகின்றன. 

22கதிரவன் எழவே அவை திரும்பிச் சென்று தம் குகைகளுக்குள் படுத்துக்கொள்கின்றன.

23அப்பொழுது மானிடர் வேலைக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்; அவர்கள் மாலைவரை உழைக்கின்றனர். 

24ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தணை எத்தணை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. 

25இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்; அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன. 

26அங்கே கப்பல்கள் செல்கின்றன் அங்கே துள்ளிவிளையாட லிவியத்தானைப் படைத்தீர்! 

27தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன. 

28நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன் நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. 

29நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்; நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். 

30உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன் மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். 

31ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! 

32மண்ணுலகின்மீது அவர் தம் பார்வையைத் திருப்ப, அது நடுங்கும்; மலைகளை அவர் தொட, அவை புகை கக்கும். 

33நான் வாழும் நாளெல்லாம் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்; என்னுயிர் உள்ளவரையிலும் என் கடவுளுக்குப் புகழ் சாற்றிடுவேன். 

34என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். 

35பாவிகள் பூவுலகினின்று ஒழிந்து போவார்களாக! தீயோர்கள் இனி இல்லாது போவார்களாக! என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! அல்லேலூயா!



இந்த திருப்பாடலை தமிழ் விவிலியம் படைப்பின் மேன்மை என்று தலைப்பிடுகிறது. 35 வரிகளைக் கொண்டுள்ள இப்பாடல், ஒரு புகழ்ச்சிப் பாடல் வகையைச் சார்ந்தது. இந்த திருப்பாடலின் மையக் கருத்து தொடக்க நூலின் முதலாம் அதிகாரத்தை ஒத்திருப்பதைக் காணலாம். உலகின் படைப்பை அழகான பாடலாக மாற்றுகிறார் ஆசிரியர். எபிரேயர்களின்  இலக்கியத்தில் அவர்களின் நம்பிக்கையும், விவிலிய அறிவும் எப்படியான ஆதிக்கங்களை செலுத்துகின்றன என்பதற்கு இந்த பாடல் நல்லதொரு உதாரணம். ஆச்சரியம் மற்றும் புகழ் போன்றவை இந்த பாடலின் மிக முக்கியமான பின்புல செய்திகளாக வருகின்றன. படைப்பு மற்றும் அதன் அதிசயங்கள் போன்றவை மனிதன் சிந்தித்து அதன் ஆச்சரியத்திலிருந்து கடவுள் நம்பிக்கையை பெருக்க நல்ல வாய்ப்பு என்பதைப்போல ஆசிரியர் பாடுகிறார். இந்த பாடல் தொடக்கவுரையுடன் தொடங்கி, கடவுளுக்கு தனி மனித புகழ்ச்சியை உண்டுபண்ணி, புகழ்ச்சியான ஒரு முடிவுரையுடன் நிறைவடைகிறது. 

படைப்பியல் என்பது இக்காலத்தைப்போல அக்காலத்திலும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தேடலாக இருந்திருக்கிறது. எகிப்திலும் மற்றும் மொசெப்தேமிய இலக்கியங்களிலும் இந்த படைப்பை பற்றிய கதைகளும் புராணங்களும் அதிகமாக இருந்திருக்கின்றன. இந்த திருப்பாடல் எகிப்திய படைப்பு இலக்கியத்தை பின்புலமாகக் கொண்டு எபிரேய தனித்துவமான இறையியிலில் அதன் ஒரே கடவுளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்த பாடலில், கதாநாயகனாக இருப்பவர் ஆண்டவர், படைப்பல்ல. இதுவே எபிரேய இலக்கியங்களுக்கும் மற்றைய இலக்கியங்களுக்குமான மிக முக்கியமான வேற்றுமைகளில் ஒன்று என எடுக்கலாம். 

வ.1: இந்த வரி ஒரு முன்னுரை போல தரப்படுகிறது. இந்த வரியின் முதலாவது பிரிவு கடவுளை மூன்றாம் நபராக (அவர்) காட்டி (בָּרֲכִי נַפְשִׁי என்உயிரே ஆண்டவரை போற்று), தன்னுடைய ஆன்மாவை இரண்டாவது நபராக (நீ) கொண்டு, அதற்கு கட்டளை கொடுக்கிறது. பின்னர் இரண்டாவது பிரிவில் கடவுள், இரண்டாவது நபராக (நீர்) (גָּדַלְתָּ מְּאֹד நீர் பெரியவர்) மாற்றம் பெறுகிறார். ஆண்டவருடைய ஆடை மனிதர்களுடைய, தங்க மற்றும் உயர் விலைமதிப்பற்ற ஆடைகள் அல்ல மாறாக அது, மாட்சியும் மேன்மையும் என்கிறார் இந்த ஆசிரியர் (הוֹד וְהָדָר). 

வ.2: மீண்டுமாக ஆண்டவர் பேரொளியை ஆடையாக அணிந்துள்ளார் என்கிறார் (אוֹר). ஒளி ஒரு அதிசயம், அதன் தோற்றம் செயற்பாடு மனிதர்களுக்கு புரியாதது. அதனை கடவுளின் ஒரு அங்கமாக கொண்டு அதனை கடவுளின் உடை என கவிபாடுகிறார். வான்வெளியை (שָׁמַ֗יִם) அக்கால மக்கள் ஒரு கவிழ்ந்த சட்டி என கண்டனர், இந்த அடிப்படையில் அதனை கடவுளின் கூடாரம் என்கிறார் இந்த எபிரேய ஆசிரியர்.  

வ.3: அக்காலத்திலேயே மனிதர்கள், நீர்த்திரளுக்கும் (מַּיִם) கார்முகிலுக்கும் தொடர்பிருந்ததை கண்டிருக்கிறார்கள் (עָבִים). இன்றைய விஞ்ஞானம் கார்முகிலில் நீர் இருப்பதை உறுதிசெய்கிறது. இங்கே நீர்த்திரள் என்பது, வானத்தில் இருந்ததாக நம்பப்பட்ட நீர்த்திரளைக் குறிக்கிறது. அங்கேதான் கார்முகிலும் இருக்கிறது, இந்த கார்முகில் கடவுளின் தேராக செயற்படுகிறதாம். கடவுள் காற்றின் இறக்கைகளில் பவனிவருகிறார் என்ற சொற்றொடரை ஆசிரியர் இங்கே அறிமுகம் செய்கிறார் (הַֽמְהַלֵּךְ עַל־כַּנְפֵי־רֽוּחַ׃). இங்கே காற்றிக்கு றுவா என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது, இந்த சொல்தான் வேறு இடங்களில் தூய ஆவியாருக்கு பாவிக்கப்படும் சொல். 

வ.4: கடவுள் காற்றுக்களை தன் தூதராக கொண்டுள்ளார் என்கிறார் ஆசிரியர் (עֹשֶׂ֣ה מַלְאָכָ֣יו רוּחוֹת).  இங்கே காற்றுக்கள் என்ற சொல் பெண்பால் பன்மையில் பாவிக்கப்பட்டுள்ளது. விவிலியத்தில் இந்த தூய ஆவிக்கான சொல் காற்றுக்கு அதுவும், பன்மையில் பாவிக்கப்பட்டுள்ளது என்பதை அவதானிக்க வேண்டும். காற்று மட்டுமல் நெருப்பும் சுவாலையும் (אֵשׁ לֹהֵט) ஆண்டவரின் சேவகர்கள் ஆகின்றன. எபிரேயர் 1,7 இந்த வசனத்தை நினைவூட்டுகிறது (7வானதூதரைக் குறித்து அவர் 'தம் தூதரைக் காற்றுகளாகவும் தம் பணியாளரைத் தீப்பிழம்புகளாகவும் செய்கிறார்' என்றார்). 

வ.5: பூவுலகு (אֶרֶץ எரெட்ஸ்- நிலம், மண்) நிலத்தில அசையாது நிற்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் அதனை நிலைநாட்டியவர் தன் கடவுள் என்பதுதான் இங்கே ஆசிரியரின் செய்தி. 

வ.6: இந்த நிலம் உருவாகுவதற்கு முன் எப்படி இருந்தது என்பதை சொல்கிறார். இங்கே இவர் தொடக்க நூலை ஒத்திருக்கிறார். ஆழ்கடல் என்ற சொல்லிற்கு, எபிரேயம் תְּהוֹם (தெஹொம்) என்ற சொல்லை பாவிக்கிறது, இதற்கு ஆழம் என்றுதான் பொருள். புரிவதற்காக தமிழ் விவிலியம் ஆழ்கடல் என்ற சொல்லை பாவிக்கிறது எனலாம். மலைகளுக்கு மேலாகவும் நீர்த்திரள் இருந்தது என்ற தொடக்க நூல் நம்பிக்கையை இங்கே ஆசிரியர் நமக்கு நினைவூட்டுகிறார். இன்றை நவீன கால புவியியலின் தோற்றம் பற்றிய கண்டுபிடிப்புக்கள் இந்த ஆசிரியரின் சில சிந்தனைகளை ஒத்திருப்பதை நோக்கலாம். 

வவ.7-8: இந்த நீருக்கு என்ன நடந்தது என்பதை விளக்குகிறார். நீர் நிலத்தைவிட்டு ஓடி கடலை அடைந்தது இதனால்தான் நிலம் உருவானது என்பது நம்பிக்கை. ஆனால் அதனை செய்தவர் தெரியாத சக்தியல்ல மாறாக அவர் கடவுள், அத்தோடு அது அவருடைய கட்டளை என்பதையும் சொல்கிறார். கடவுளுடைய கட்டளை இடி போல இருந்தது என்கிறார் (קוֹל רַעַמ). அது எப்படி ஓடியது என்பதையும் அழகாக காட்டுகிறார், அது ஆறு போல ஓடுகிறது. எபிரேய விவிலியம் இந்த இடத்தில் வித்தியாசம் காட்டுகிறது. தமிழ் விவிலியத்தில் இங்கே எழுவாய்ப் பொருள், நீர் அல்லது ஆழம். ஆனால் எபிரேய விவிலியம் இங்கே எழுவாய் பொருளாக மலைகளையும் (הָרִים), பள்ளத்தாக்குகளையும் (בְקָע֑וֹת) குறிப்பது போலவும் தோன்றுகிறது. (இருப்பினும் இங்கே எழுவாய்ப் பொருட்களில் மயக்கம் உள்ளது). 

வ.9: இந்த வரி நீரை அல்லது ஆழத்தை மீண்டும் எழுவாயாக எடுக்கிறது. இந்த வடிந்தோடிய நீர் இனி மீண்டும் வந்து பூவுலகை மூடாதபடி கடவுள் அதற்கு எல்லைகளை வகுத்துள்ளார் என்று நம்பிக்கையும் கொடுக்கி;றார். 

வ.10: இந்த வரி இன்னொரு எழுவாய்ப் பொருளை அறிமுகம் செய்கிறது, அவை நீரூற்றுக்கள் (מַעְיָנִים). நீரூற்றுக்கள் இயற்கையின் அதிசங்களில் ஒன்று. இங்கே இதனை உருவாக்கியவர் தன் கடவுள் என்கிறார் ஆசிரியர். ஆச்சரியம் எதுவெனில் இவை பள்ளத்தாக்குகளில் உருவாகி மலைகளுக்கிடையே ஓடுகின்றன. ஆனால் புவியியலின் படி இவை மலைகளில் உருவாகி பள்ளத்தாக்குகளிடையே ஓடுகின்றன. ஆசிரியரின் செய்தி இவற்றின் ஓட்டத்தைப் பற்றியல்ல மாறாக இவற்றின் கர்த்தரைப் பற்றி. 

வ.11: இந்த நீரூற்றுக்களின் பணி இங்கே பாடப்படுகிறது. அவை காட்டுவிலங்குகளுக்கு தண்ணீர் காட்டுகின்றன, முக்கியமாக காட்டுக் கழுதைகளை (פְרָאִ֣ים) இங்கே உதாரணத்திற்கு எடுக்கிறார் ஆசிரியர். ஒரு வேளை இவை முக்கியமில்லாத மிருகங்களாக இருந்தும் அவற்றிக்கு கடவுள் இரக்கம் காட்டுகிறார் என்றும் எடுக்கலாம். இந்த காட்டுக் கழுதைகள் பலைநிலத்தில் வாழ்நத பாமர மக்களையும் சிலவேளைகளில் குறிக்கின்றன. முதல் ஏற்பாட்டில் இந்த சொல் 28 தடவைகளாக வருகிறது. இந்த காட்டுக் கழுதை, காட்டுச் சுதந்திரமுள்ள, ஒழுக்கமற்ற, கவனிப்பாரற்ற மிருகத்தின் அடையாளம். 

வ.12: இந்த நீரூற்றுக்கள் விலங்குகளை மட்டுமல்ல மாறாக பறவைகளையும் கவனிக்கன்றன என்பதை காட்டுகிறார். பறவைகளின் கூடுகள் மற்றும் இன்னிசை (קֽוֹל) போன்றவை அவற்றின் சந்தோசமான வாழ்வியலைக் காட்டுகின்றன. பறவைகளை வானத்துப் பறவைகள் என்றே விவிலியம் அழைக்கிறது (עוֹף־הַשָּׁמַיִם). 

வ.13: இந்த வரியில் ஆசிரியரின் வானவியல் பற்றிய அக்கால அறிவு புலப்படுகிறது. வானத் திரைக்கு மேலே நீர்திரள் இருப்பதாகவும், அதனை கடவுள் யன்னல்கள் மூலம் கட்டுப்படுத்துவதாகவும் இவர்கால மக்கள் நம்பினர். இதனைத்தான் இவரும் காட்டுகிறார். மலைகளுக்கு மேல் விழும் மழையும், பனியும் கடவுளின் யன்னல்களினால் விழுகின்றன என்கிறார். 

வ.14: புல் (חָצִיר), மற்றும் தாவரங்களும் (עֵשֶׂב) கடவுளின் உருவாக்கமே. இவை விலங்குகளுக்கும் மனிதருக்கும் உணவாகின்றன, ஆனால் இவற்றை உருவாக்கியவர் கடவுள், இதனால் உணவளிப்பவர் கடவுள் என்கிறார் ஆசிரியர். 

வ.15: திராட்சை இரசம் (יַ֤יִן), எண்ணெய் (שָׁמֵן) மற்றும் அப்பம் (לֶחֶם) இவை அக்காலத்து உயர் உணவு வகைகள். இதனைக் கொண்டு மனிதருக்கு தேவையான உள் மகிழ்ச்சி (இரசம்), வெளி அழகு (எண்ணெய் மற்றும் கொழுப்பு), மற்றும் அப்பம் (உணவு) போன்றவையும் கடவுளின் கிருபையால் நிறைவாக கிடைக்கிறது என்கிறார். 

வவ.16-17: லெபனானின் மரங்கள் பெயர் பெற்றவை, அவற்றைப்போல மற்றைய மரங்களையும் கடவுள் காக்கிறார் என்கிறார். இந்த மரங்களில் பறவைகள் தங்கள் கூடுகளை அமைக்கின்றனவாம். தமிழ் விவிலியம் இந்த பறவையை கொக்கு என்கிறது. இதனை எபிரேயம் ஹசிடா (חֲסִידָה) என்கிறது. இது ஓருவகை நாரை, இந்த பறவைகள் தங்கள் குஞ்சுகள் மேல் அதிகமான அக்கறையை செலுத்தக்கூடியவை. 

வ.18: மரங்கள் மட்டுமல்ல மலைகளும் குன்றுகளும், விலங்குகளுக்கு வீடுகளாகின்றன. ஆசிரியர் வரையாடுகளைப் பற்றியும் (יְּעֵלִ֑ים), குழிமுயல்களைப் (שְׁפַנִּֽים) பற்றியும் நன்கு அறிந்திருக்கிறார்.  இவற்றின் இயற்கை பராமரிப்பை அவர் இறைவனின் திட்டமாக வியப்போடு நோக்குகிறார். நம்பிக்கை உரியவருக்கு அனைத்தும் கடவுளின் பராமரிப்பாகவே தெரியும் என்பது நன்கு புலப்படுகிறது.

வவ.19-22: காலங்களும் இறைவனின் திட்டத்திற்கு உட்பட்டதே என்பது எபிரேயர்களின் மிக முக்கியமான சிந்தனைகளில் ஒன்று. நிலவை (יָרֵחַ) வைத்தே இஸ்ராயேலர்கள் காலத்தை கணித்தனர். அவர் நிலவு ஆண்டு அட்டவணையையே பாவித்தனர். சூரிய ஆண்டு அட்டவணை உரோமையருடையது. சூரியனை (שֶׁ֗מֶשׁ) ஒரு ஆளாக ஒப்பிடுகிறார், இவருக்கு தான் எப்போது மறைய வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. இருள் இல்லாத உலகை நினைத்துப் பார்க்க முடியுமா? இன்றைய உலகம் இருளை தேவையற்றதாக நினைத்து செயற்கை பகலை உருவாக்க முனைகிறது. இதன் நல்ல உதாரணம்தான், மின்சார விளக்குகளில் நடக்கும் இரவு விளையாட்டுப் போட்டிகள். ஆனால் இரவு மிக முக்கியமானது. அந்த இரவில் பல வேலைகள் இயற்கையாக  நடைபெறுகின்றன. இந்த இரவு விலங்குகளுக்கு தேவையாக இருக்கிறது என்கிறார் ஆசிரியர். இருளையும் கடவுளே படைத்தார் (חֹשֶׁךְ) என்பது எபிரேய சிந்தனை. கிரேக்கர்கள் தான் இரவை தீமையின் அடையாளமாக பார்க்க தொடங்கினர். காட்டு விலங்குகள் (חַיְתוֹ־יָֽעַר), இளம் சிங்கங்கள் (כְּפִירִים) இந்த இரவிலேயே தங்கியிருக்கின்றன. சிங்கத்தின் கர்ச்சனையை ஆசிரியர், அவற்றின் உணவிற்கான வேண்டுதல் என கற்பனை செய்து பார்க்கிறார். கதிரவின் உதயம் இந்த சிங்கங்களை உறக்கத்திற்கு கொண்டு செல்கிறது. இனி இவர்கள் அடுத்த  இரவிற்காக காத்திருப்பார்கள். 

வ.23: பகிலில் உழைப்பவர்கள் மானிடர்கள் அவர்கள் காலை முதல் மாலை வரை உழைக்கிறார்கள். விலங்குகளும் மனிதர்களும் ஒரே நேரத்தில் நடமாட முடியாது, அப்படியாயின் அது ஆபத்தாக முடியும், இதனை அழகாக இறையியல் படுத்தி நமக்கு காட்டுகிறார் ஆசிரியர். 

வ.24: ஏற்கனவே காட்டுவிலங்குகள் மற்றும் பறவைகளைப் பார்த்து கடவுளை வியந்த ஆசிரியர் இப்போது படைப்பை இன்னும் ஆழமாக நோக்கி அங்கே கடவுளின் அதிசயத்தை கண்டு அனுபவிக்கிறார். கடவுள் அனைத்தையும் ஞானத்தோடு (בְּחָכְמָ֣ה) செய்துள்ளார் என்பதே இவரின் ஆச்சரியத்திற்கான காரணம். அந்த ஞானத்தின் அடையாளத்தை விளக்குகிறார். வ.25: பரந்து விரிந்த கடல்கள் (הַיָּ֥ם גָּדוֹל), அவற்றில் வாழும் எண்ணற்ற உயிரினங்கள். எபிரேய விவிலியம் கடல் என்று ஒருமையிலேயே சொல்கிறது. கடலும் அதில் வாழும் உயிரினங்களைப் பற்றியும் விவிலியம் பல இடங்களில் பல விதமாகச் சொல்கிறது. அக்காலத்தில் கடலிலே அறியப்படாத பல உயிரினங்கள் மற்றம் அரக்க இனங்கள் இருப்பதாக நம்பப்பட்டது. சில வேளைகளில் கடல் தீய சக்திகளின் உறைவிடமாகவும் அறியப்பட்டது. இதனை வேறு விதமாக கடலிலும் இஸ்ராயேலின் கடவுள்தான் இறைவன் என்பதைக் காட்டுகிறார். 

வ.26: கடலிலே கப்பல்கள்- இது அக்கால படகுகளைக் குறிக்கலாம், அவை பெரிய படகுகளாக (אֳנִיּ֣וֹת) இருந்திருக்கலாம். ஆரம்ப எகிப்தியருடைய காலத்திலேயே பெரிய படகுகள் பாவனையில் இருந்திருக்கின்றன. இந்த வரியின் இரண்டாவது பகுதியில் ஆசிரியர் லேவியத்தன் (לִוְיָתָ֗ן) என்ற சொல்லைப் பாவிக்கிறார். இதனைப் பற்றி பல விதமான கதைகள் பாரம்பரியத்தில் இருக்கின்றன. இது ஒருவகை புராதன கடல் உயிரினத்தைக் குறிக்கும். மத்திய கிழக்கு இலக்கியங்கள் இதனை கடல் அரக்க பாம்பாக கண்டன. முதல் ஏற்பாடு பல இடங்களில் கடவுள் இதனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை விவரிக்கின்றது. தற்கால திமிங்கலங்கள், பெரிய முதலைகள், ஒக்டோபஸ்கள் போன்றவற்றை அக்கால ஆசிரியர்கள் இவ்வாறு கண்டிருக்கலாம். முதல் ஏற்பாடு வேறு சில இடங்களில் இந்த லேவியத்தன் கடவுளுக்கு எதிரான அரக்க சக்தியாகக் காட்டப்படுகிறது (காண்க தி.பா 74,14: எசாயா 27,1). ஆனால் இது இங்கே ஒரு கடல் உயிரினமாகக் காட்டப்படுகிறது, அத்தோடு அது நட்பு ரீதியாகவும் காட்டப்படுகிறது. 

வவ.27-28: இவைகள் இயற்கையை அல்ல மாறாக கடவுளையே நம்பியிருக்கின்றன. இவ்வாறு  இயற்கை என்பது கடவுளின் திட்டம் என்பதை காட்டுகிறார் ஆசிரியர். தக்க காலத்தில் உணவு கொடுத்தல் கடவுளின் முக்கியமான பண்பு. விலங்குகள் சேகரித்துக் கொள்கின்றன, இதனையும் தன்னுடைய சிந்தனைப் பொருளாக்குகிறார். 

வ.29: ஆண்டவருடைய முகம் (פָּנֶה) என்பது ஒரு உறுப்பு என்பதை விட, இங்கே அது அவருடைய பாராமரிப்பைக் குறிக்கிறது. ஆண்டவரின் முகத்தை மறைத்தல் என்பது விலங்குகள் தங்கள் மூச்சை நிறுத்துவதற்கு சமன் என காட்டுகிறார். மீண்டும் புழுதிக்கே திரும்பும் என்பது, தொடக்க நூலில் அனைத்தையும் கடவுள் புழுதியிலிருந்தே படைத்தார் என்பதையும், புழுதி என்பது வெறுமையையும் நினைவூட்டுகிறது. 

வ.30: முதல் ஏற்பாட்டில் கடவுளின் ஆவியைப் பற்றிய வரிகளில் இந்த வரி மிக முக்கியமான வரி. ஏற்கனவே காற்றிற்கு பாவிக்கப்பட்ட அதே வார்த்தைதான் (רוּחַ) இங்கே பாவிக்கப்பட்டுள்ளது. இதன் சரியான அர்த்தம் நம்முடைய புலன்களுக்கு அப்பாற்பட்டது என நினைக்கிறேன். எபிரேய அகராதிகள் இந்த சொல்லிற்கு ஆவி, காற்று, மூச்சு, உணர்வு, சக்தி, மற்றும் ஆண்டவரின் ஆவி என்ற பல அர்தங்களைக் கொடுக்கிறன. ஆண்டவர் இதனை அனுப்பி உலகை புதுப்பிக்கிறார் என்பதன் மூலம், இந்த சக்தி, அவருடைய ஒரு ஊடகம் என்பது மட்டும் புலப்படுகிறது. 

வ.31: இந்த வரியை ஒரு புகழ்ச்சி வேண்டுதல் போல அமைக்கிறார் ஆசிரியர். ஆண்டவர் மாட்சி என்றென்றும் இருப்பதாக என்பது ஆசி என்பதை விட ஒரு புகழ்ச்சி செபம் என்று எடுக்கலாம். ஆண்டவர் தன் செயல்களை நினைத்து மகிழவேண்டும், இல்லையெனில் அங்கே தீமைதான் நிலைத்திருக்கும், இது தொடக்க நூல் செய்தி. இதனைத்தான் இவர் நமக்கு நினைவூட்டுகிறார். 

வ.32: இந்த வரியில் ஆசிரியர் தெய்வ பயத்தை நினைவூட்டுகிறார். மண்ணுலகு நடுங்குதல், மலைகள் புகை கக்குதல் என்பன, நில நடுக்கத்தையும், எரிமலை வெடிப்பையும் நமக்கு காட்டுகிறது. இதனை ஆசிரியர் ஆண்டவரின் சக்தியாக காண்கிறார். 

வவ.33-34: இந்த வரிகளில் தன்னுடைய எதிர்கால செயற்பாடுகளை சொல்வதாகச் சொல்லி அதனை இந்த பாடலின் ஒவ்வொரு வாசகருக்கும், கடமையாக்குகிறார். வாழ் நாள் எல்லாம் கடவுளைப் பாடுதலும், உயிருள்ள வரை அவர் புகழ் சாற்றுதலும் ஒருவரின் கடமையாகிறது. தியானப் பாடல் (שִׂיחַ), என்பதை வேண்டுதல் என்றும் எடுக்கலாம். இந்த வேண்டுதல் கடவுளுக்கு ஏற்றதாய் இருக்க வேண்டும் என்பது எத்துணை ஆழமான எபிரேய சிந்தனை என்பதை நோக்க வேண்டும். 'நான் ஆண்டவரின் மகிழ்ச்சி கொள்வேன்' (אָנֹכִ֗י אֶשְׂמַ֥ח בַּיהוָֽה) என்பது சிலருக்கு அக்காலத்தில் சவாலாக இருந்திருக்கும். பலர் உலக சொத்துக்கள், உறவுகள் மற்றும் இன்பங்களில் மகிழ்ச்சி கொள்ளும் வேளை இந்த ஆசிரியர் ஆண்டவரின் மகிழ்ச்சிதான் உண்மையான மகிழ்ச்சி என்கிறார். 

வ.35: இந்த வசனம் முடிவுரை போல அமைகிறது. பாவிகளும் (חַטָּאִ֨ים), தீயோர்களும் (רְשָׁעִ֤ים) சபிக்கப்படுகிறார்கள். இவர்கள் உலகில் இல்லாமல் போகுதல், நல்லவர்கள் இருப்பதற்கான வாய்ப்பாகிறது. இறுதியாக தன்னுயிரை கடவுளைப் போற்றக் கேட்கிறார். அல்லேலூயா (הַֽלְלוּ־יָֽהּ) என்ற சொல், ஆண்டவரை போற்றுங்கள் என்று பொருள் படும்.  



இரண்டாம் வாசகம்
1கொரிந்தியர் 12,3-7.12-13

3கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுப் பேசும் எவரும் 'இயேசு சபிக்கப்பட்டவர்' எனச் சொல்ல மாட்டார். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டடவரன்றி வேறு எவரும் 'இயேசுவே ஆண்டவர்' எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 4அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. 5திருத் தொண்டுகளும் பலவகையுண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. 6செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். 7பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது.

உடலும் உறுப்புகளும்

12உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். 13ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.



கொரிந்தியர் பன்னிரண்டாவது அதிகாரம் தூய ஆவியார் அருளும் கொடைகளைப் பற்றி விவாதிக்கின்றது. பவுலுடைய காலத்தில் தூய ஆவியார் பற்றிய அறிவு முதல் ஏற்பாட்டுக் காலத்தைப் போலன்றி நன்கு வளர்ந்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி இயேசுவின் சிந்தனைகளை தன்னுடைய வார்த்தைகளில் சொல்ல முயல்கிறார் என எடுக்கலாம். 

வ.3: பலர் தங்களை தூய ஆவியாரின் கொடைகளைப் பெற்றிருக்கிறவர்கள் என்று சொல்லி பல தப்பறைகைள பரப்பினர். இதில் சிலர் இயேசுவை வெளிப்படையாக சபிக்கவும் தொடங்கினர். இயேசுவை சபித்தல் என்பதற்கு கிரேக்க விவிலியம் அனாமெதா இயேசுஸ் (Ἀνάθεμα Ἰησοῦς) என்ற சொற்களை பாவிக்கிறது. இதே சொற்பிரயோகம் தான் பிற்காலத்தில் ஒருவரை திருச்சபையில் இருந்து வெளியேற்றவும் பாவிக்கப்பட்டது (அனத்தெமா சித்). ஆண்டவரின் ஆவியாரின் துணையின்றி எவரும் இயேசுவே ஆண்டவர் (Κύριος Ἰησοῦς) என்றும் சொல்ல முடியாது என்கிறார் பவுல். இதிலிருந்து, இயேசுவை ஆண்டவர் என்று சொல்வது தூய ஆவியாருடைய ஞானம் என்பது புலப்படுகிறது.

வ.4: அருட்கொடைகள் பலவகை உண்டு என்று பவுல் சொல்வதில் இருந்து அக்காலத்தில் பல அருட் கொடைகள் இருந்திருக்கின்றன என்பது தெரிகிறது. மக்கள் சில வேளைகளில் இந்த பன்முக அருட்கொடைகளுக்கு பல ஆவியார்களை காரணம் காட்டியிருக்கலாம். இதனைத்தான் பவுல் தெளிவு படுத்துகிறார். அதாவது ஆவியார் ஒருவரே என்கிறார். அருட்கொடைகளுக்கு கரிஸ்மா (χάρισμα) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதனை இறைவனின் கொடை, இலவசமான இறைதானம் மற்றும் இறையருள் என்று பலவாறு கிரேக்க அகராதிகள் வரைவிலக்கணங்கள் தருகின்றன. இந்த வசனம் திரித்துவத்தின் மூன்றாவது ஆளைக் குறிப்பது போல உள்ளது (πνεῦμα புனுமா, ஆவி). 

வ.5: நான்காவது வசனத்தைப் போலவே, இந்த வசனத்தையும் எதுகை மோனையில் அமைக்கிறார் பவுல். இந்த இரண்டு வரிகளிலும் மிக அழகான கிரேக்க சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன. திருத்தொண்டுகள் என்பதற்கு தியாகோனியோன் (διακονιῶν) என்ற கிரேக்க சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பணி, சேவை என்ற பல பொருள் உண்டு. திருத்தொண்டர் என்ற சொல்லும் இந்த சொல்லிருந்துதான் வருகிறது. இந்த வரியிலும், பணிகள் பலவாறாக இருந்தாலும் ஆண்டவர் ஒருவரே என்பதுதான் பவுலின் மையமான செய்தி. இது திரித்துவத்தின் இரண்டாம் ஆளைக் குறிப்பது போல உள்ளது (κύριος கூரியோஸ், ஆண்டவர்). 

வ.6: முதல் இரண்டு வசனங்களைப்போலவே இந்த வசனமும் கடவுளின் ஒருமையைக் காட்டுகிறது. செயற்பாடுகளின் பன்மை கடவுளின் ஒருமையை பாதிக்காது என்பதும், அவர் பன்மையில் வேலை செய்யும் ஒருமை என்பதை பவுல் காட்டுகிறார். செயற்பாடுகள் என்பதற்கு எனெர்கெமாடோன் (ἐνεργημάτων) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது செயற்பாடு, வேலை, முயற்சி போன்றவற்றைக் குறிக்கும். கடவுள் ஒருவராக இருந்தாலும் அவர்தான் அனைத்தையும் அனைவரிலும் செயற்படுத்துகிறார் என்று சொல்லி கடவுளின் வல்லமையை அழகாகக் காட்டுகிறார் பவுல். இந்த வசனம் திரித்துவத்தின் முதலாவது ஆளாகிய கடவுளைக் குறிப்பது போல உள்ளது (θεός தியோஸ், கடவுள்). 

வ.7: எதற்காக தூய ஆவியாரின் செயற்பாடுகள் என்பதை விளக்குகிறார். அவை பொது நன்மைக்காகவே என்பது பவுலுடைய விடை. ஆரம்ப கால திருச்சபையில் சில வேளைகளில் கொடைகளும், பணிகளும், சேவைகளும் தனிநபருடைய புகழுக்காக பயன்பட்டன, இவை திருச்சபையில் பல பிளவுகளை உருவாக்கியது. இந்த பின்புலத்தில்தான், தூய ஆவியாரின் கொடைகளின் நோக்கம் விளக்கப்படுகிறது. 

வவ. 8-11: இந்த வரிகள் தூய ஆவியாரின் கொடைகளாக ஞான சொல்வளம், அறிவு செறிந்த சொல்வளம், நம்பிக்கை, பிணி தீர்க்கும் அருள்கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்கு ஆற்றல், ஆவிக்குரிய பகுத்தறிவு, பல்வகை பரவசப்பேச்சு, அதனை விளக்கும் ஆற்றல், போன்றவற்றை காட்டுகின்றன. அத்தோடு இவற்றை ஆவியார் சுதந்திரத்தோடு தான் விரும்புகிறவர்களுக்கு பகிர்ந்தளிக்கிறார் என்பதும் காட்டப்படுகிறது. வவ. 12-31 உடலும் உறுப்புக்களும் என்ற அழகான ஒப்பீட்டு வாத முறை மூலம் பிரிவினைவாதம் பிழையானது என்பதை விளக்கப்படுகிறது. 

வ.12: உடலைப் பற்றிய அறிவு கிரேக்க உலகிற்கு எபிரேய உலகத்தைவிட நன்கு தெரிந்திருந்தது. கிரேக்க பேரரசில் பல விருத்தியடைந்த மருத்துவர்களும், மருத்துவங்களும் பரவியிருந்தன. பவுல் தன்னுடைய வாதத்திற்கு இந்த உடலை (σῶμα சோமா) ஒரு உதாரணப் பொருளாக எடுக்கிறார். உடல் ஒன்றாக இருந்தாலும் அதில் பல உறுப்புக்கள் ஒன்றாக வேலைசெய்து உயிரைக் காக்கின்றன என்பது நல்ல உதாரணமாக காணப்படுகிறது. இருப்பினும், கிரேக்க உலகில் அனைத்து உறுப்புக்களும் ஒரே மரிiயாதையில் நோக்கப்பட்டனவா என்ற கேள்வியும் எழாமலில்லை. உடலில் உறுப்புகள் பல ஆனால் உடல் ஒன்று, இவ்வாறே கிறிஸ்துவும் ஒன்றாக இருக்கிறார் என்கிறார் பவுல். இங்கே கிறிஸ்து உடல் என்றால், சீடர்கள்தான் அவர் உறுப்புக்கள் என்று எடுக்க வேண்டும.   


நற்செய்தி வாசகம்
யோவான் 20,19-23

இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்

(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)

19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்று வாழ்த்தினார். 20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்' என்றார். 22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, 'தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா' என்றார்.


இயேசுவின் உயிர்ப்பின் பின்னான தோற்றத்தை ஒவ்வொரு நற்செய்தியாளர்களும் தங்களது வாசகர்களின் உடனடி விசுவாச தேவைக்காக விளக்க முயல்கின்றனர். ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு ஒரு வரலாற்று நிகழ்வு, அது ஒரு தனி மனித அனுபவம் அல்ல என்பதில் திருச்சபையின் பாரம்பரியம் மிக அவதானமாக இருக்கிறது. ஆனால் நற்செய்தியாளர்களின் வாhத்தைகள், அமைப்புக்கள், விலத்தல்கள், சேர்ப்புக்கள் மற்றும் இறையியல் முக்கியத்துவங்கள் மிக தனித்துவமானவை. இவற்றை வாசிக்கும் போது கவனத்தில் கொள்ளல் வேண்டும். 

வ.19: வாரத்தின் முதல் நாள் என்பது ஞாயிறு தினமாக இருக்க வேண்டும். கடைசி நாள் சனிக்கிழமையாக இருக்கிறது (τῇ ἡμέρᾳ ἐκείνῃ  ⸂τῇ μιᾷ⸃). மலைவேளையாக இருப்பது இருட்டைக் குறிக்கலாம் (ὀψία). இது யோவான் நற்செய்தியில் ஒரு அடையாளம். இருட்டு அல்லது மாலை கடவுள் இல்லாத சூழ்நிலையைக் குறிக்கிறது. சீடர்கள் யூதர்களுக்கு அஞ்சுகிறார்கள். யோவான் நற்செய்தியில் யூதர்கள் என்ற வார்த்தை அனைத்து யூதர்களையும் குறிக்காது, இது இயேசுவிற்கு எதிரானவர்கள் மற்றும் அவருடைய சாவில் சம்மந்தப்பட்ட யூதர்களை மட்டுமே குறிக்கும். ஆக யேவான் இங்கே அப்பாவி யூதர்களை வசைபாடவில்லை, கிறிஸ்தவர்களை துன்புறுத்தியவர்களையே நினைக்கிறார். கதவுகளை மூடி சீடர்கள் உள்ளே இருப்பது அவர்களின் பயத்தையும், துன்புறும் நிலையையும், மற்றும் ஆபத்தான நிலையையும் காட்டுகிறது. மூடப்பட்ட கதவுகள் இங்கே இவர்கள் அடிமைத்தனத்தில் இருப்பதை நினைவூட்டுகிறது. கூடியிருந்தவர்கள் இயேசுவின் சீடர்கள்தான் என்பது அவர்களுக்கான விசேட வார்த்தையின் மூலம் புலப்படுகிறது (οἱ μαθηταὶ). 

இப்படியான நிலையில்தான் இயேசு வருகிறார். எனவே இயேசுவின் வருகைக்கு காலங்கள் நிலைமைகள் தடையில்லை என்பதை உணரலாம். வந்த அவர் மறைவாக இருக்கவில்லை அவர் அவர்கள் நடுவில் எழுந்து நிற்கிறார் (ἔστη εἰς τὸ μέσον). இது அவரின் அதிகாரத்தையும் அவருடைய தெய்வீகத்தையும் காட்டுகிறது. இயேசுவை கட்டுப்படுத்தவோ தடைசெய்யவோ முடியாது என்பதுதான் இந்த சொற்களின் நோக்கம். இறுதியாக இந்த வரியில் உள்ள இயேசுவின் வார்த்தைகள் கவனமாக நோக்கப்பட வேண்டும். அவர் அவர்களுக்கு அமைதியை தருகிறார் (εἰρήνη ὑμῖν). இதனை 'உங்களுக்கு அமைதி' என்று வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு முறையில் மொழிபெயர்க்கலாம். அமைதி (εἰρήνη எய்ரேனே) என்ற சொல் கிரேக்க-உரோமை உலகத்தில் மிக முக்கியமானது. இதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. இது நாட்டின் அரசி;யல் அமைதி நிலையை குறிக்கிறது அத்தோடு இருவருக்கிடையிலான சமாதானம், சுகாதராம், வெற்றி, நிறைவு, உதவி, மெசியாவின் அமைதி, ஆன்மாவின் அமைதி, மனச் சாந்தி, மற்றும் இறப்பிற்கு பின்னான அமைதி போன்றவற்றை குறிக்கும். 

இயேசுவின் அமைதி, சீடர்களுக்கு மிகவும் தேவையாக உள்ளது, அவர்கள் அனைத்தையும் இழந்திருக்கிறார்கள். போரின் பின்னர் அல்லது கலவரங்களின் பின்னர் சீசர்கள் தருகின்ற அரசியல், பொருளாதார, சமய அமைதியல்ல இந்த அமைதி, இது அதனையும் தாண்டிய உள்ளார்ந்த அமைதி. இந்த அமைதியை கடவுள் தருகின்ற படியால் இது முடிவடையாத அமைதியாகிறது. அத்தோடு இந்த அமைதி அனைத்து பயத்தையும், கேள்விகளையும் இல்லாமல் ஆக்கின்றது. 

வ.20: ஆண்டவர் தன் கைகளையும் விலாவையும் காட்டுகிறார் (τὰς χεῖρας καὶ τὴν πλευρὰν). இதன் மூலம் இவர் மாயையான ஆவியல்ல மாறாக உண்மையான கடவுள். இவர் இயேசு என்பதைக் காட்டுகிறார். கைகளும் விலாவும் அவருடைய காயங்களைக் காட்டுகின்றன. இதன் மூலம் இறைவனுக்கு மனிதர் ஏற்படுத்திய வடுக்களே அவரை இறைவன் என காட்ட அடையாளமாகின்றன என்பதையும் யோவான் அழகாக காட்டுகிறார். தோமா இன்னொரு சந்தர்பத்தில் இந்த கைகளையும், விலாவையும் அதன் காயங்களையுமே அடையாளமாக கேட்பார் (காண்க வவ.24-27). இது தோமாவின் கேள்வி மட்டுமல்ல, முதல் கிறிஸ்தவர்களின் கேள்வி. இதற்க்குத்தான் யோவானும், இயேசுவும் விடைதருகின்றனர். 

ஆண்டவரைக் கண்டவுடன் சீடர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர் (ἐχάρησαν). இதுதான் இந்த வரியின் மிக முக்கியமான செய்தி. அமைதியற்று பயத்துடன் இருந்தவர்கள் ஆண்டவரின் வருகையால் மகிழ்ச்சி கொள்கின்றனர். இந்த மகிழ்ச்சி சாதாரண இன்பத்தையோ அல்லது நிறைவையோ குறிக்காது, மாறாக இது ஒரு இறையனுபவம். இதனைத்தான் இந்த சொல் (χαίρω) குறிக்கிறது. 

வ.21: மீண்டுமாக இறையமைதியை கொடுத்த ஆண்டவர் சீடர்களை அனுப்புகிறார். அனுப்புதல் (πέμπω) என்ற சொல்லும் யோவான் நற்செய்தியில் முக்கியமான சொல். அனுப்புகிறவர்களின் அதிகாரம், முக்கியத்துவம், தன்மை போன்றவற்றைக் கொண்டு அனுப்பப்படுகிறவர் முக்கியம் பெறுகிறார். அரசர்களின் ஆணைகள், அரசர்களின் அதிகாரத்தால் அனுப்படுகின்றன, இதனால் அதே அரச அதிகாரத்தை பெறுகின்றன. இது அக்கால உலகிற்கு நன்கு தெரிந்த விடயம். இயேசு தந்தையால் அனுப்பப்பட்டவர், இதனால் அவர் இறை-அனுப்பப்பட்டவர். அவருக்கு அனுப்பியவரின் அதே அதிகாரங்கள் இருக்கின்றன (காண்க யோவான் 3,17: 4,34: 5,36: 10,36: 14,24: 17,3.8). 

இப்போது இயேசு சீடர்களை அனுப்புகிறார். இதனால் சீடர்கள் இயேசு-அனுப்பப்பட்டவர்கள் ஆகின்றனர். இயேசுவின் அதே அதிகாரங்களையும், வல்லமைகளையும் இவர்கள் பெற தகுதியுடையவர்கள் ஆகின்றனர். 

வ.22: ஆண்டவர் அவர்கள் மேல் தூய ஆவியை ஊதுகிறார் (ἐνεφύσησεν). தூய ஆவி காற்று வடிவில் இருப்பதனால் ஒருவேளை இயேசு இதன் வாயிலாக அவர்களுக்கு அடையாளம் கொடுக்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்ந சொல் (ἐμφυσάω எம்புசாவோ) புதிய ஏற்பாட்டில் இந்த இடத்தில் மட்டுமே உள்ளது. இதற்கும் பெந்தகோஸ்து நிகழ்விற்கும் பல தொடர்புகள் உள்ளது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு இங்கே தூய ஆவியை உடனடியாக இயேசுவே தருகிறவராக இருப்பதை யோவான் காட்டுகிறார்.

வ.23: சீடர்களுக்கு மன்னிக்க அதிகாரம் கொடுக்கப்படுகிறது. மன்னிப்பதற்கு கடவுள் ஒருவருக்கே அதிகாரம் உள்ளது என்பதை யூதர்கள் நன்கறிவர். இதனால்தான் இயேசுவை சாதாரண மனிதராக கண்ட யூதர்கள் அவர் பாவங்களை மன்னித்த போது அதனை தேவநிண்தனை என்றார்கள். இப்போது இயேசு இந்த அதிகாரத்தை அனைத்து சீடர்களுக்கும் கொடுக்கிறார், அத்தோடு மன்னிக்காதிருக்கவும் அதிகாரம் கொடுக்கிறார். 

இந்த வசனத்தை மொழிபெயர்ப்பது மிகவும் கடினம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  இந்த வசனத்தை திரித்தெந்தின் பொதுச்சங்கம் பாவ மன்னிப்பிற்கான அதிகாரமாக வாதாடியது. இந்த வசனத்தை யோவானுடைய சூழலியல் பார்வையில் நோக்கினால், இயேசு இந்த அதிகாரத்தை அனைத்து சீடர்களுக்கும் கொடுக்கிறார். இவர்களை யோவான் திருத்தூதர்கள் என்று இந்த இடத்திலே சொல்லவில்லை. ஆனால் பாவம் (ἁμαρτία ஹமார்தியா) மற்றும் மன்னித்தல் (ἀφίημι அபியேமி) போன்ற முக்கியமான திருவருட்சாதன வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளன. யோவான் நற்செய்தியில் பாவம் என்பது, இயேசுவை நம்பாமல் இருத்தல் என்பதை குறிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். 

தூய ஆவியார், திரித்துவத்தின் மூன்றாவது நபர். 

இவர்தான் இயேசு கொடுத்த மிக மிக உன்னதமான கொடை.

இவர் உன்மையை வெளிப்படுத்துகிறவர். இயேசுவின் துணையாளர். 

இந்த உலகின் அனைத்து தீமைகளும், இவருடைய இல்லாமையையே 

வெளிப்படுத்துகின்றனவா என்ற கேள்வியை வெளிப்படுத்துகிறது. 

அன்பு ஆவியாரே, 

எம்மில் வாரும், உம்மை பற்றிப் பிடிக்க வரம் தாரும், ஆமென். 

////////////////