இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






உயிர்ப்புப் பெருவிழா (இ)

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 10,34அ.37-43
பதிலுரைப் பாடல்: 118
இரண்டாம் வாசகம்: கொலோசேயர் 3,1-4
நற்செய்தி: யோவான் 20,1-9


உயிர்ப்பு:

௧. மரணத்திலிருந்து ஒருவர் மீண்டெழுந்து வருவது உயிர்பு என்று அழைக்கப்படுகிறது. எபிரேய முதல் ஏற்பாட்டில் உடலின் உயிர்ப்பை பற்றிய சிந்தனைகள் இல்லை. புதிய ஏற்பாட்டில் இந்த சிந்தனையை குறிக்க (ἀνάστασις அனஸ்டாசிஸ் - உயிர்ப்பு, சாவிலிருந்து எழும்புதல்,) என்ற கிரேக்க சொல் பாவிக்கப்படுகிறது. முதல் ஏற்பாட்டில், கடவுள் எவ்வாறு மனிதனை மண்ணில் இருந்து உருவாக்கினாரோ, அவ்வாறே மனிதன் மண்ணுக்கு திரும்புகிறார் என்று நம்பினர். சீயோல் שְׁאוֹל (ஷெ'ஓல்) எனப்படும் பாதாளம் இந்த இறந்தவர்களின் இருப்பிடமாக நம்பப்பட்டது.  இப்படியாக சீயோல் ஆதாள-பாதாளமாகவும், இருண்ட இடமாகவும் அறியப்பட்டது, அத்தோடு கைவிடப்பட்ட இடமான இங்கிருந்து, எவருக்கும் விடிவு இல்லை எனவும் எண்ணப்பட்டது. இதற்கு வேறு பல பெயர்களும் விவிலியத்தில் உள்ளன (தி.பா 6,5). ஆனால் பல விவிலிய பகுதிகள் கடவுளுக்கு சீயோலின் மீதும் அதிகாரம் உள்ளது என்பதை எண்பிக்கிறது (யோபு 12,22: தி.பா 139,8: ஆமோஸ் 9,2). 

தனி மனிதனின் உயிர்பை பற்றி முதல் ஏற்பாடு பேசாவிட்டாலும், சில பகுதிகள் தேசிய உயிர்ப்பைப்பற்றி பேசுகின்றன (காண் எசாயா 26,19: எசேக் 37,13-14: ஓசேயா 6,1-2). முதல் ஏற்பாட்டு நூல்களில், மத்திய கிழக்கு பகுதிகளின்  சில சிந்தனைகள் தாக்கத்தை செலுத்தியிருப்பதனைக் இங்கனம் தெளிவாகவே காணலாம்.

௨. இணைத்திருமுறை நூல்களும், கிரேக்க-உரோமையர் கால நூல்களும், உடலின் உயிர்ப்பைப் பற்றி அதிகமாகவே பேசுகின்றன. இவை கிரேக்க சிந்தனைகளின் தாக்கத்தை கொண்டிருப்பதைக் காணலாம். உதாரணமாக பரிசேயர்கள் உடலின் உயிர்ப்பை அப்படியே நம்பினர். இந்த காலகட்டத்திலும் சில குழுக்கள் உடலின் உயிர்ப்பை நம்பாமல் தமது பழைய சிந்தனைகளையே கொண்டிருந்தனர். சில கும்ரான் ஆய்வுகள், கும்ரான் பகுதியில் இருந்தவர்கள் உடலின் உயிர்ப்பை நம்பினர் என சொல்லத் தூண்டுகின்றன (காண்க 4Q521 1:12). சீராக்கின் ஞானம், சாலமோனின் ஞானம் போன்ற நூல்களில் இவ்வறிவின் வளர்ச்சியைக் காணலாம். இரண்டாம் மக்கபேயர் புத்தகத்தில், போரில் நாட்டுக்காக மடிந்தவர்களும், கிரேக்க கலாபனைகளின் போது மடிந்தவர்களும்  உயிர்பெறுவர் என சொல்லப்படுவதை வாசிக்கலாம் (காண் 2மக் 7,9: 12,43-45). இன்னும் அதிகமாக, விவிலியத்துள் ஏற்றுக்கொள்ளப்படாத, இரண்டாம் எஸ்திரா என்ற புத்தகம் இந்த சிந்தனையை மேலும் ஆழமாகச் சொல்கிறது. 

௩. உயிர்ப்புதான் புதிய ஏற்பாட்டின் மையச் செய்தி. கிறிஸ்துவின் உயிர்ப்பே வரலாற்றின் மையமாகவும் முதல் ஏற்பாட்டின் நிறைவாகவும் கிறிஸ்தவர்களால் பார்க்ப்படுகிறது. அனைத்து புதிய ஏற்பாட்டு புத்தகங்களும் திருமடல்களும் இதனையே அடிப்படையாக கொண்டுள்ளன. இதனை பாஸ்கா மறைபொருள் என்கின்றோம். இயேசுவினுடைய போதனைகளிலும் இந்த செய்தி முக்கியமான செய்தியாக இறுதிவரைக்கும் பயணிக்கிறது. (காண்க யோவான் 11,25) இயேசு, தான் இவ்வுலகில் மனிதனாக இருந்த காலத்தில் பலரை உயிர்பித்தாலும், அவரின் உயிர்ப்புச் செய்தி, இப்படியான பொது மரணத்தை தாண்டியதாகவே இருந்தது. இயேசு உயிர்ப்பித்த பலர், அவருக்கு முன்னரோ அல்லது பின்னரோ இறந்து போயினர். உயிர்ப்பைப் பற்றி சொல்லுகிற அதே வேளை, இயேசு நித்திய தண்டனையையும் பற்றி அறிவுறுத்துகிறார் (காண்க யோவான் 5,25). வெறுமையான கல்லறையே புதிய ஏற்பாட்டில் உயிர்பிற்கான முதல் அடையாளம். நான்கு நற்செய்தியாளர்களும் இதனை தங்களுக்கே உரித்தான வகையில் விவரிக்கின்றனர். திருத்தூதர் பவுல் புதிய ஏற்பாட்டில் உயிர்ப்பினைப் பற்றி ஆழமான போதனைகளை முன்வைக்கிறார் (காண்க 1கொரி 15). ஆக உயிர்ப்பு இயேசுவிலேயே தங்கியுள்ளது. முதல் ஏற்பாட்;டில் கடவுள் தன் மூச்சை ஊதி உயிர்கொடுத்தார், புதிய ஏற்பாட்டில் கடவுள், தன் உயிரைக் கொடுத்து உயிர்;ப்பு கொடுக்கிறார். 

முதல் வாசகம்
திருத்தூதர் பணி 10,34.37-43

34அப்போது பேதுரு பேசத் தொடங்கி, 'கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். 37திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். 38கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். 39யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். 40ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். 41ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். 42மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். 43அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக்குறித்துச் சான்று பகர்கின்றனர்' என்றார்.

திருத்தூதர் பணிகள் நூல், வைத்தியர் லூக்கா திருச்சபைக்கு விட்டுச்சென்ற இன்னொரு பொக்கிசம். இந்த நூலில் பல போதனைகள் அதாவது மறைபரப்பு மறையுரைகள் இருப்பதனை அவதானிக்கலாம். அதிகமான பவுலின் மறையுரைகளும், ஒரு சில முக்கியமான பேதுருவின் மறையரைகளும் இங்கே அழகாக பதியப்பட்டுள்ளன. இந்த மறைபரப்பு உரைகள் அன்றைய நாள் கிரேக்க-உரோமைய உரைகளை ஒத்திருக்கின்றன என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இன்றைய முதல் வாசகம் பேதுரு, கொர்ணேலியு (Κορνήλιος  கொர்னேலியோஸ்) என்ற உரோமைய நூற்றுவத்தலைவரின் வீட்டில் வழங்கிய மறையுரையின் சிறு பகுதியாகும். இந்த கொர்ணேலியுவின் வீடு செசாரியா மரித்திமாவில் அமைந்திருந்தது (இந்த நகரத்தை எரோது, உரோமைய சீசருடைய பெயரிலே கட்டுவித்தார்). கொர்னேலியுதான் திருச்சபையில் உள்வாங்கப்பட்ட முதலாவது யூதரல்லாத நண்பர். இவர் வீட்டில் நடந்தவை பின்னர் திருச்சபையின் முதலாவது பொதுச்சங்கத்தில் பேச்சுப் பொருளானது. கடவுளை நம்ப அவரவர் நல்ல மனப்பக்குவத்தை கொண்டிருந்தால் போதும், ஒருவரின் இனத்திலோ அல்லது அவர் பிறப்பிலோ, இயேசு அல்லது கடவுள் தங்கியிருக்கவில்லை என்பதற்கு இந்த உரோமையர் திருமுகம் நல்லதோர் அடையாளம். 

வ.34: இந்த வசனத்திற்கு முன் பேதுரு பிறவினத்தவர்கள் மட்டில் யூத கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த மனநிலையை தானும் கொண்டிருந்ததை, லூக்கா காட்டுவார் (வவ.1-16). பின்னர் மனம்மாறி கொர்னேலியுவின் வீட்டிற்கு வந்திருந்தார். இங்கே மனமாற்றம் அடைபவர் கொர்னேலியு அல்ல மாறாக பேதுரு, அதாவது யூத கிறிஸ்தவர்கள்தான் மனம்மாறுகிறார்கள் என்பதை மறைமுகமாக காட்டுகிறார் லூக்கா. இது லூக்காவில் சிறப்பம்சங்களில் ஒன்று. கிரேக்க மூல பாடல் இந்த வரியை இப்படி சொல்கிறது 'அப்பபோது பேதுரு வாயைத் திறந்து சொன்னார், உண்மையாக நான் அறிந்துகொள்கிறேன், அதாவது கடவுளிடம் ஆள்பார்த்துசெயற்படும் தன்மை இல்லை' (Ανοίξας δὲ Πέτρος τὸ στόμα⸃ εἶπεν· ἐπ᾿ ἀληθείας καταλαμβάνομαι ὅτι οὐκ ἔστιν προσωπολήμπτης ὁ θεός அனொக்ட்சாஸ் தெ பெட்ரொஸ் டொ ஸ்டொமா எய்பென், எப் அலெதெய்யாஸ் காடாலாம்பானொமாய் ஹொடி ஊக் எஸ்டின் புரொசோபொலேம்ப்டேஸ் ஹொ தியுஸ்) (நேரடி மொழிபெயர்ப்பு). இந்த வரி, ஒரு சில யூதர்கள், தங்கள் கடவுள் ஆள்பார்த்துத்தான் செயல்படுவார், அதாவது யூதர்கள் ஆண்டவருடைய பார்வையில் முக்கியமானவர்கள் என்ற சிந்தனையை கொண்டிருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்த யூத முன்னிலை வாதம் ஆரம்ப கால திருச்சபையில் முக்கியமான ஒரு பிரச்சனையாக இருந்தது. 

வவ. 35-38: இயேசுவின் தன்மைகளைப் பற்றி சுருக்கமாக பேதுரு மறையுரைக்கிறார், அதேவேளை யார் கடவுளுக்கு ஏற்புடையவர் என்ற சிந்தனையை பேதுரு விளக்கமாக இன்னொரு பார்வையில் காட்டுகிறார். யூத மக்கள் தாங்கள் விருத்தசேதனம் செய்வதாலும், தோறா என்னும் சட்டங்களை கடைப்பிடிப்பதாலும் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் (δικαιοσύνη திகாய்யோசுனே) ஆகின்றனர் என நம்பினர். இதனை அனைவருக்கும் பொருந்தும் விதத்தில் மாற்றுகிறார் பேதுரு. அதாவது கொர்னேலியு வீட்டில் கண்ட காட்சி யூதரான இவருக்கு புதிய விளக்கத்தைக் கொடுக்கிறது. எந்த இனத்தவராக இருந்தாலும், அவர் கடவுளுக்கு அஞ்சி, நேர்மையாக செயற்பட்டார் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராக மாறுகிறார் என்பது அந்த செய்தி (ὁ φοβούμενος αὐτὸν καὶ ἐργαζόμενος δικαιοσύνην δεκτὸς αὐτῷ ἐστιν ஹொ பொபொவுமெனொஸ் அவ்டொன் காய் எர்காட்சொமெனொஸ் திகாயோசுனேன் தெக்டொஸ் அவடோ எஸ்டின்). 

அ). இயேசு கிறிஸ்து வழியாக அமைதி உண்டு, அவர் அனைவருக்கும் ஆண்டவர் (εἰρήνην διὰ Ἰησοῦ Χριστοῦ, οὗτός ἐστιν πάντων κύριος எய்ரேனேன் தியா இயேசூ கிறிஸ்டூ, அவுடொஸ் எஸ்டின் பான்டோன் கூரியோஸ்).

ஆ). இயேசு யோவானின் காலத்திற்கு பின் முக்கியமான பணியாற்றினார். 

இ). அவர் கடவுளால் திருப்பொழிவு பெற்றவர் (ὡς ἔχρισεν αὐτὸν⸃ ὁ θεὸς πνεύματι ἁγίῳ ஹோஸ் எக்ரிசென் அவுடொன் ஹொ தியூஸ் புனுமாடி ஹகியோ). 

ஈ). கடவுளின் ஆவியையும் வல்லமையையும் கொண்டவர் (ὁ θεὸς ἦν μετ᾿ αὐτοῦ ஹொ தியூஸ் ஹேன் மெத் அவுடூ). 

உ). அவர் நற்செயல்களையும் குணமாக்கலையும் செய்து வந்தார் (ὃς  ⸀διῆλθεν εὐεργετῶν ஹொஸ் தியேல்தென் எவ்வெர்கெடோன்). 

வவ. 39-40: சாட்சியம் பகர்வது திருத்தூதர்களின் முக்கியமான பணி என்று லூக்கா அடிக்கடி திருத்தூதர் பணி நூலில் வலியுறுத்துவார் (μάρτυς மார்த்துஸ்- சாட்சியம்). பேதுரு  இரண்டுவகையான சாட்சியம் சொல்கிறார். இயேசு செய்த நல்லவைகள், மக்கள் இயேசுவிற்கு செய்த தீமை. அதாவது இந்த இயேசு யூதேயாவிலும் எருசலேமிலும் நல்லதையே செய்ய மக்கள் அவரை மரத்திலே தொங்கவிட்டு கொன்றார்கள் என்கிறார். இங்கே சிலுவை என்று பாவிக்காமல் மரம் என்ற சொல்லை பாவிக்கிறார் (κρεμάσαντες ἐπὶ ξύλου கிரெமாசான்டெஸ் எபி ட்சூலூ). இந்த மரம் என்ற சொல் முதலாம் நூற்றாண்டிலே சிலுவைக்கு ஒத்தகருத்துச் சொல்லாக பயன்பட்டிருக்கிறது அத்தோடு இது இணைச்சட்டம் 21,23ஐயும் நினைவுபடுத்துகின்றது. மூன்றாவதாக கடவுள் இயேசுவை உயிர்ப்பித்ததையும் அவரை தோன்றச்செய்ததையும் அத்தோடு தாங்கள் சாட்சி பகர்வதாக கூறுகிறார். 

வ. 41: ஆண்டவர் உயிர்த்த பின்பு அவரோடு உண்டு குடித்த தாங்களே விசேட சாட்சிகள் என்கிறார் பேதுரு. உயிர்த்த ஆண்டவர் அனைவருக்கும் தோன்றவில்லை என்ற ஒரு உண்மையும் இங்கே பதியப்பட்டுள்ளது. உயிர்த்த ஆண்டவருடன் இவர்கள் உண்டு குடித்தது அனைத்து நற்செய்திகளிலும் பதியப்படவில்லை, இங்கு லூக்கா இவ்வாறு எழுதுவதன் மூலம், ஆண்டவரின் உயிர்பின் பின் நடந்த அனைத்து காட்சிகளும் நற்செய்தியில் இல்லை என்பது புலப்படுகிறது. 

வ. 42: இப்போது இந்த உயிர்த்த ஆண்டவரின் கட்டளையை பேதுரு விவரிக்கின்றார். அதாவது இயேசுவே இறந்தோருக்கும் வாழ்வோருக்குமான கடவுளின் நடுவர் என்பதே அந்த கட்டளை (οὗτός ἐστιν ὁ ὡρισμένος ὑπὸ τοῦ θεοῦ κριτὴς ζώντων καὶ νεκρῶν ஹவுடொஸ் எஸ்டின் ஹொ ஹோரிஸ்மெனொஸ் ஹுபொ டூ தியூ கிறிடேஸ் ட்சோன்டோன் காய் நெக்ரோன்). இந்த நடுவத்தன்மை (κριτής கிறிடேஸ்) இயேசுவின் தெய்வீகத்தை வலியுறுத்தும் ஒரு சொல். 

வ. 43: இஸ்ராயேல் மக்கள் ஏற்கனவே பாவமன்னிப்பை பற்றி அறிந்திருந்தனர், ஆனால் இப்போது இறைவாக்கினர் அனைவரும் அறிவித்திருந்த பாவமன்னிப்பிற்கு புது விளக்கம் கொடுக்கப்படுகிறது. 

லூக்கா இங்கே, அனைத்து இறைவாக்கினர்களினதும் இறைவாக்கு இயேசுவில் நிறைவாகிறது என்கிறார் (τούτῳ πάντες οἱ προφῆται μαρτυροῦσιν டூடோ பான்டெஸ் ஹொய் புரொபேடாய் மார்டுரூசின்). இப்படியாக அனைத்து இறைவாக்கினரும் சொல்கின்ற செய்தியாவது, கிறிஸ்துவின் பெயரில் நம்புவதனால்; பாவமன்னிப்பு ஏற்படுகிறது என்பதாகும்.





பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 118

நன்றிப் புகழ் மாலை 1ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

2‛என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!

3‛என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!

4‛என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக!

5நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்; ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார்.

6ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்?

7எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்; என்னை வெறுப்போர்க்கு நேர்வதைக் கண்ணாரக் காண்பேன்.

8மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!

9உயர்குடியினர் மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்!

10வேற்றினத்தார் அனைவரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்; ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.

11எப்பக்கமும் அவர்கள் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டனர்; ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.

12தேனீக்களைப்போல் அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர்; நெருப்பிலிட்ட முட்களைப்போல் அவர்கள் சாம்பலாயினர்; ஆண்டவரின் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.

13அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.

14ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே.

15நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.

16ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.

17நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்;

18கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.

19நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்து விடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.

20ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.

21என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.

22கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!

23ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!

24ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.

25ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்!

26ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.

27ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்; கிளைகளைக் கையிலேந்தி விழாவினைத் தொடங்குங்கள்; பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள்.

28என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.

29ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.



ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும் என்ற ஆழமான விசுவாசத்தை மையப்பொருளாக வைத்து இந்த 118வது புகழ்சித்திருப்பாடல் வருகின்றது. 

இந்த திருப்பாடலை இவ்வாறு பிரிக்கலாம்:

அ). வவ.1-4: ஒரு குழு புகழ்ச்சிக்கான அழைப்பு. 

இந்த வரிகள் ஊடாக ஆசிரியர் மக்களை புகழ்சிக்கு அழைக்கிறார். முதலில் மக்களையும் பின்னர் குருக்களையும் அழைப்பது, கடவுளை புகழ்வது அனைவரின் கடமையென அழகாகவும் ஆழமாகவும் காட்டுகிறார். ஆண்டவரின் பேரன்பு என்பது உண்மையில் எபிரேயத்தில் ஆண்டவரின் இரக்கத்தையே குறிக்கிறது (חַסְדּוֹ ,חֶסֶד ஹெசட்- இரக்கம்). ஆண்டவருக்கு அஞ்சுவோர் என்று எபிரேய கோட்பாடுகளை பின்பற்றுவோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

வ.1: ஆண்டவர் நல்லவர், அவரது இரக்கம் என்றென்றும் உள்ளது என்பது ஒரு ஆழமான எபிரேய நம்பிக்கை (לְעוֹלָם חַסְדּֽוֹ׃ லா'ஓலாம் ஹஸ்தோ). ஆண்டவருடைய நன்மைத்தனத்திற்கு முன்னால் மற்றவர்களுடைய நன்மைத்தனங்கள் வெறுமையானவை என்பதை இந்த வரி காட்டுகிறது. 

வ.2: இந்த என்றென்றும் உள்ள நன்மைத்தனத்தை இஸ்ராயேல் மக்கள் சாற்றக் கேட்கப்படுகிறார்கள். இதுதான் இஸ்ராயேல் மக்களுடைய படைப்பின் நோக்கம். இதனை ஆசிரியர் ஒரு கட்டளை போல கொடுக்கிறார் (יֹאמַר־נָא יִשְׂרָאֵל யோ'மர்-நா' யிஸ்ரா'ஏல்- செல்வார்களாக இஸ்ராயேலர்). 

வ.3: இஸ்ராயேலருக்கு பொதுவாக கொடுக்கப்பட்ட கட்டளை இப்போது ஆரோன் குடும்பத்தாருக்கு கொடுக்கப்படுகிறது, அதாவாது ஆண்டவரின் குருக்களுக்கு கொடுக்கப்படுகிறது. குருக்கள் ஆண்டவரின் புகழைச் சாற்றுவதை தங்களது தலையாய கடைமையாக செய்ய வேண்டும் என்ற செய்தி வலியுறுத்தப்படுகிறது (יֹאמְרוּ־נָא בֵֽית־אַהֲרֹן யோ'ம்ரூ-நா' வெத்-'அஹரோன்- ஆரோனின் குடும்பத்தார் சாற்றவார்களாக). 

வ.4: இறுதியான இந்த நம்பிக்கையை அனைத்து ஆண்டவருக்கும் அஞ்சுவோரையும் சாற்றக் கேட்கிறார் ஆசிரியர். இப்படியாக அனைத்து மக்களும் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள் எனலாம். அதேவேளை இங்கே பாவிக்கப்பட்டிருக்கின்ற சொற்பிரயோகங்கள் இஸ்ராயேல் மக்களுக்கான ஒத்த கருத்துச் சொற்கள் எனவும் சிலரால் நோக்கப்படுகின்றன (יִרְאֵי יְהוָה யிர்'எ அதோனாய்- ஆண்டவருக்கு அஞ்சுவோர்). 

ஆ). வவ.5-13: அரசரின் சாட்சியம். இங்கே இன்னொரு புதிய குரல் ஒலிக்கிறது அது அரசரின் குரல். அரசர் தன்னுடைய  இராணுவ துன்பங்களின் போது, எவ்வாறு கடவுள் கைகொடுத்தார் என்பதை சாட்சிசொல்கிறார்.  இதனை மக்கள் தங்களுக்கும் படிப்பினையாக எடுக்க வேண்டுமென்பதே அரசரின் விருப்பம். மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பதே மேல் என்று அரசர் தன்னுடைய நேச படைகளைவிட ஆண்டவர் தரும் பாதுகாப்பே உன்னதமானது என்கிறார்.

வ.5: தான் ஒரு நெருக்கடியான வேளையில் ஆண்டவரை நம்பியதாகவும், ஆண்டவர் அதனைக் கேட்டதாகவும் சொல்கிறார். இந்த வரியுடன் காட்சி மாறுகிறது, இங்கே பேசுகிறவர் அரசராக மாறுகிறார். ஆசிரியர் அரசர் போல பேசுகிறார், அல்லது அரசரை பேசவைக்கிறார் எனலாம். பின்வரும் வரிகள் அவை அரசர்க்குரியவை என்பதை என்பதைக் காட்டுகின்றன. 

வ.6: ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்சவேண்டும் (יְהוָה לִי לֹא אִירָא அதோநாய் லி லோ' 'இரா') என்ற ஆழமான நம்பிக்கை, வரியாக தரப்படுகிறது. இந்த வரி தாவீதின் காட்சியை நினைவுபடுத்துவது போல உள்ளது. ஆண்டவர் தன் பக்கம் உள்ளதால் யாருக்கும் அஞ்ச வேண்டிய தேவை தனக்கு இல்லை என்பதை ஆசிரியர் காட்டுகிறார். 

வ.7: தன்னுடைய ஆண்டவருக்கு புதுப்பெயர் ஒன்றை வைக்கிறார். ஆண்டவரை தனக்கு துணைசெய்யும் ஆண்டவர் என்கிறார் (יְהוָה לִי בְּעֹזְרָי அதோனாய் லி பெ'ட்ஸ்ராய்- கடவுள் எனக்கு என் உதவியாக). 

வ.8: மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தல் நலம் என்கிறார் ஆசிரியர். இதுவும் தாவீதின் அனுபவத்தை ஒத்திருக்கிறது எனலாம். நம்பிக்கை வைத்தலை, அடைக்கலம் புகுதல் என்ற வார்த்தையில் காட்டுகிறார் ஆசிரியர் (לַחֲסוֹת லாஹசோத்- அடைக்கலம் புக). 

வ.9: உயர்குடி மக்களிடம் நம்பிக்கை வைத்தல் ஒரு சாதாரண வழக்கமாக இருந்திருக்கிறது. உயர்குடி மக்களுக்கு எபிரேய மூல விவிலியம் நெதிவிம் (בִּנְדִיבִים׃ பின்திவிம்- உயர்குடிமக்களில்) எனக்காட்டுகிறது. இவர்கள் அரச மைந்தர்களாக இருக்கவேண்டிய தேவையில்லை. 

வவ.10-11: வேற்றினத்தார்களை ஆண்டவர் பெயரால் அழித்ததாக ஆசிரியர் காட்டுகிறார். ஆண்டவர் பெயரால் எப்படி போர் செய்ய முடியும். இங்கே இவர் வேற்றினத்தார் என்று சொல்பவர்களை சூழலியலில் இவருடைய சொந்த எதிரிகளாகவே பார்க்க வேண்டும். இவர்களை எபிரேய விவிலியம் גּוֹיִם (கோயிம்- வேற்று நாட்டு மக்கள்) என்று காட்டுகிறது. இவர்கள் பல திசைகளில் ஆசிரியரை சூழ்ந்துகொண்டார்கள் என்று சொல்லப்படுகிறார்கள். இது போரில் எதிரிகள் அரசரை சூழ்ந்து தாக்குவதற்கு சமன். 

வ.12: இந்த எதிரிகளுடைய படைகள் பெரிதாக இருந்திருக்க வேண்டும் அல்லது, அவர்களின் தாக்குதல்கள் துல்லியமாக இருந்திருக்க வேண்டும். இதனால்தான் தன் எதிரிகளை தேனீக்களுக்கு ஒப்பிடுகிறார் ஆசிரியர் (דְבוֹרִ֗ים தெவோரிம்- தேனீக்கள்). 

எதிரிகள் தேனீக்களை போல சுறுசுறுப்பாக இருந்தாலும், தான் அவர்களை நெருப்பைப் போல் சுட்டெரிப்பேன் என்கிறார். முட்கள், நெருப்பில் விரைவாக சாம்பலாகும், இதனைப்போலவே ஆண்டவரின் துணையால் எதிரிகள், முட்களைப்போல அழிக்கப்படுவார்கள் என்கிறார் ஆசிரியர். 

வ.13: ஆண்டவரின் துணையை இன்னொருமுறை காட்டுகிறார். ஏதிரிகளின் தள்ளுதல் பலமாக இருந்தாலும், ஆண்டவரின் துணை அதனைவிட பலமாக இருக்கிறது என்பது சொல்லப்படுகிறது.

இ). வ.14-19: புதுப்பிக்கப்பட்ட அரச சாட்சியம்.

வ.14: ஆண்டவரே என் ஆற்றலும் பாடலும் என்று மொழி பெயர்க்ப்பட்டுள்ளது. பாடல், என்பதை பலம் என்றும் மொழிபெயர்கலாம் (זִמְרָה ட்சிம்ராஹ்- இசை, பாடல், பலம்). ஆண்டவர் தன்னை கண்டித்தார் என்று சொல்லி கடவுளின் கண்டிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்கிறார் அரசர்.

வ.15: நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கிறது என்கிறார் (קוֹל רִנָּה கோல் ரின்னாஹ்- மகிழ்ச்சிக் குரல்), இதனை அவர் ஆண்டவரின் வலக்கரத்தின் பலம் என்று காட்டுகிறார் (אָהֳלֵי צַדִּיקִים 'அஹாலே ட்சதிகிம்- நீதிமான்களின் கூடாரங்கள்). 

வ.16: விவிலியத்தில் மிக முக்கியமான ஒரு அடையாளம். இது பலம், உரிமை, வாரிசு போன்ற பல அர்த்தங்களைக் கொடுக்கிறது. அதிகமானவர்கள் வலக்கை பழக்கமுடையவர்களாக இருந்ததால் வலக்கை பலத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது (יָמִין யாமின்-வலக்கை). இடக்கை பழக்கம் அதிகமான வேளையில் நல்ல அடையாளமாக பார்க்கப்படவில்லை. இருப்பினும் இதற்கும் விதிவிலக்கு இருந்தது. இஸ்ராயேலின் நீதிமான்களில் ஒருவர் இடக்கை பழக்கமுடையவராக இருந்தார், அதனை கடவுள் நல்ல விதமான பாவித்தார் என்று நீதிமொழிகள் புத்தகம் காட்டுகிறது (காண்க நீதி.3,12-30: אֵהוּד בֶּן־גֵּרָא 'எஹுத் பென்-கெரா'). 

வ.17: ஆண்டவர் வலப்பக்கத்தில் இருப்பதனால் தனக்கு அழிவில்லை என்கிறார். தான்  இறக்கமாட்டேன் என்கிறார். அத்தோடு இவர் இறக்காமல் இருப்பதன் நோக்கம், ஆண்டவரின் செயல்களை எடுத்துரைப்பதே என்கிறார் (לֹא אָמוּת லோ' 'ஆமுhத்- இறவேன்: וַאֲסַפֵּ֗ר வா'அசாபெர்- எடுத்துரைப்பேன்). 

வ.18: ஆண்டவர் இவரை கண்டித்ததையும் மறைக்காமல் தன் பாடலில் காட்டுகிறார். ஆண்டவரின் கண்டிப்பிற்கு காரணம் இருக்கிறது என்பதும், இந்த கண்டிப்பால் தான் அழியவில்லை என்பதையும் நேர்மையாக அறிக்கையிடுகிறார். 

வ.19: தான் பாவியாக இருந்தாலும், ஆண்டவரின் கண்டிப்பை சந்தித்தாலும், தன்னை நீதிமான் என்று காட்டுகிறார். இதனால் நீதிமான்கள் செல்லும் வாயில்களில் தானும் செல்ல முடியும் என்பது இவர் நம்பிக்கை. இந்த வாயில்களில் தான் நுழைவது, ஆண்டவருக்கு நன்றி செலுத்தவாகும் என்பதையும் அறிக்கையிடுகிறார் (שַׁעֲרֵי־צֶדֶק ஷ'அரெ-ட்சாதெக்- நீதியின் வாயில்கள்). 

உ). வவ.20-28: ஓரு நன்றி வழிபாடு.

இந்த வரிகள் பாடலாக மட்டுமன்றி நன்றி வழிபாடாகவும் உருவகப் படுத்தப்பட்டுள்ளது. இது ஆண்டவரின் வாயில் இவ்வழியாக நீதிமான்கள் நுழைவர் என்பது இந்த வழிபாட்டைக் குறிக்கிறது. 22வது வசனத்தை புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அதிகமாக இயேசுவிற்கு பாவிக்கின்றனர்- கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்து. 26வது வசனம், ஆண்டவரின் பெயரால் வருகிறவர் ஆசிர்வாதங்களைக் கொண்டுவருகிறார் என்பது, பின்நாளில் குறிப்பிட்ட நபர்களை குறித்து வாசிக்கப்பட்டது, நமக்கு இது இயேசுவைக் குறிக்கிறது. 27வது வசனம், கிளைகளை கையிலேந்தி ஆண்டவரை புகழக் கேட்கிறது, இது ஒருவகை ஆர்ப்பரிப்பைக் குறிக்கலாம். இயேசு எருசலேமுள் நுழைந்தபோது இவ்வகையான ஒரு செயலை கூட்டம் செய்தமை நினைவுக்கு வரலாம்.

வ.20: இந்த வாயில் அதிகமாக எருசலேமின் நுழைவாயில்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இங்கே நீதிமான்கள் (צַדִּיקִ֗ים ட்சாதிக்கிம்) என்பவர்கள், ஆண்டவரின் மக்கள் அனைவரையும் குறிக்கலாம். ஆண்டவரின் மக்கள் நீதிமான்களாக வாழ அழைக்கப்பட்டவர்கள் என்பது இங்கணம் சொல்லப்படுகிறது.  

வ.21: கடவுளிக்கு நன்றி செலுத்தவே இவர் எருசலேமிற்குள் நுழைகிறார் போல. ஆண்டவர் இவருக்கு செவிசாய்த்ததை, அவர் தன் வேண்டுதல் கேட்கப்பட்டதற்கு ஒப்பிடுகிறார். 

வ.22: கட்டுவோர் புறக்கணித்த கல் முலைக்கல் ஆகிற்று என்ற தமிழ் மொழி பெயர்ப்பு, எபிரேய விவிலியத்தில் (אֶבֶן מָאֲסוּ הַבּוֹנִ֑ים הָיְתָ֗ה לְרֹאשׁ פִּנָּה׃ 'எவென் மா'அசூ ஹபோனிம், ஹாய்தாஹ் லெரோ'ஷ் பின்னாஹ்) என்று உள்ளது. இது ஒரு பழிமொழியாக இருந்திருக்க வேண்டும். இதற்கான சரியான காரணம் சரியாக தெரியவில்லை. பல அர்த்தங்கள் இந்த 'மூலைக்கல்லுக்கு' கொடுக்கப்படுகிறது. சிலர் இதனை 'தலைக்கல்' என்கின்றனர். சாதாரணமாக மூலைக்கற்கள் அல்லது தலைக்கற்கள் நிலத்தினுள் மறைந்துவிடும், இருப்பினும் இவை முக்கியமான கற்களாக இருக்கின்றன. இந்த கற்களின் உறுதியில்தான் கட்டடம் நிலைத்துநிற்கிறது. இதனைவிட வேறு பல அர்த்தங்களும் இந்த கல்லுக்கு கொடுக்கப்படுகிறது. சிலர் சுவரில் இருக்கும் பெயரைக்கொண்ட கல்லை இந்தக் கல்லாக பார்க்கின்றனர், இன்னும் சிலர், இதனை அழகாக செதுக்கப்பட்டு, உயரத்தில் இருக்கும்,  இணைக்கும் கல்லாகவும் இதனை பார்க்கின்றனர். எது எப்படியாயினும் இது, முக்கியமான கல் என்பது மட்டும் மிக தெளிவாக தெரிகிறது.  

புதிய ஏற்பாட்டு ஆசிரியர் இந்த 'மூலைக்கல்' அடையாளத்தை இயேசுவிற்கு பாவிக்கின்றனர் (காண்க லூக் 20,17: தி.பணி 4,11: 1பேதுரு 2,7). முதல் ஏற்பாட்டில் பல இடங்களில் இந்த உதாரணம் காணக்கிடைக்கிறது (எசாயா 8,14: 28,16-7). அனைத்து இடங்களிலும் இது ஆண்டவரின் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. 

வ.23: சாதாரண கல் முலைக்கல் ஆவது நிச்சயமாக மனிதர்களின் கண்களுக்கு வியப்பே,  இதனைத்தான் இந்த வரி காட்டி அதனை ஆண்டவரின் அதிசயமாக பார்க்கிறது. 

வ.24: இந்த பாடல் ஒரு முக்கியமான விழா அல்லது வரலாற்று நிகழ்வு நாளில் பாடப்பட்டிருக்க வேண்டும். இந்த வரியின் வார்த்தைகள் அதனை குறிப்பது போல உள்ளது. இந்த குறிப்பிட்ட நாளை ஆண்டவரின் வெற்றியின் நாள் என்கிறார் ஆசிரியர் அத்தோடு, அந்த நாளில் ஆர்ப்பரிக்கவும் அகமகிழவும் கேட்கிறார் (נָגִילָה וְנִשְׂמְחָה நாகிலாஹ் வெநிஷ்மெஹாஹ்- நாம் மகிழ்வோம், நாம் களிப்படைவோம்). 

வ.25: இந்த வரி இன்னொரு வேண்டுதல் போல காட்டப்படுகிறது. இதனை பாடலுக்கான பதிலுரையாகவும் எடுக்கலாம். ஆண்டவரே மீட்டருளும் மற்றும் ஆண்டவரே வெற்றிதாரும் என்ற வரிகள் ஒரே அர்த்தத்தையும் கொடுக்கலாம். போரில் பாவிக்கப்படக்கூடிய வார்த்தைகள் போலவும் இவை உள்ளன. הוֹשִׁיעָה נָּא ஹோஷி'ஆஹ் நா' - மீட்டருளும், הַצְלִיחָה נָּא ஹட்சிஹாஹ் நா'- வெற்றி தாரும்.

வ.26: இந்த வரி இன்னொருவர் சொல்வதைப்போல உள்ளது. அனேகமாக இந்த வரியை குருக்கள் அல்லது இந்த குறிப்பிட்ட நிகழ்வில் அரசரை போற்றுகிறவர்கள் சொல்லியிருக்கலாம். இந்த பாடல் பலர் படிக்கும் பாடல் என்பதை இந்த வரியும் நன்றாக காட்டுகிறது.  ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர் (בָּרוּךְ הַבָּא בְּשֵׁם יְהוָה பாரூக் ஹபா' பெஷெம் அதேனாய்) என்பது, இந்த பாடலின் கதாநாயகரைக் குறிக்கலாம். பிற்காலத்தில் இந்த பகுதி, புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசு ஆண்டவருக்கு கொடுக்கப்பட்டது. இந்த வரியின் இறுதிப் பகுதி மக்களுக்கு கொடுக்கப்படும் ஆசீர் போல வார்த்தைப் படுத்தப்பட்டுள்ளது (בֵּרַכְנוּכֶם מִבֵּית יְהוָה׃ பெராக்னூகெம் மிபெத் அதேனாய் - கடவுளின் இல்லத்திலிருந்து உங்களை ஆசீக்கின்றோம்). 

வ.27: அனைத்து திருப்பாடல்களினதும் முதன்மையான கதாநாயகர் இறைவன் என்பது இங்கே நன்றாக புலப்படுகிறது. ஆண்டவரே இறைவன் என்பது இஸ்ராயேலரின் முதன்மையான விசுவாச பிரகடணம் (אֵל ׀ יְהוָה֮ 'ஏல் அதேனாய்- ஆண்டவரே இறைவன்). அதோனாய் அல்லது யாவே என்பது, இஸ்ராயேலர் கடவுளை குறிக்க பயன்படுத்திய தனித்துவப் பெயர்ச்சொல். யாவே என்பது அதி பரிசுத்தமான சொல்லாக இருப்பதனால், அதனை எழுதியவர், வாசிக்கும் போது 'அதோனாய்;' என்றனர். பெயரும் ஆளும் எபிரேயர்களுக்கு ஒரே அர்த்தத்தைக் கொடுத்ததும் இதற்கான காரணமாக இருந்திருக்கலாம். 

ஆண்டவரை ஒளியாக கருதுவதால், அவரை ஒளிர்ந்தார் என்கிறார் ஆசிரியர். கிளைகளை கையிலேந்து விழாவை தொடங்கக் கேட்கிறார் ஆசிரியர். முதல் ஏற்பாட்டுக் காலத்தில், இஸ்ராயேல் நாட்டில் ஒலிவ இலைகள் வெற்றியைக் குறிக்க பயன்பட்டன. கிரேக்க நாட்டில் வேறு கிளைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இலைகளைப் போலவே மாட்டுக்கொம்புகளும் வெற்றிப் பவனிக்கு பாவிக்கப்ட்டன. இந்த கொம்புகளுக்குள் நறுமண தைலங்களும் இடப்பட்டன. பிற்கால பந்தங்கள் மற்றும் எக்காள வாத்தியங்கள் போன்றவை இந்த கொம்பிலிருந்து வந்தவையே. 

வ.28: மீண்டும் ஒருமுறை நம்பிக்கை சொல்லப்படுகிறது. இதுதான் திருப்பாடல்களின் நோக்கம். ஆசிரியர் கடவுளை தன் இறைவன் என்கிறார் (אֵלִי אַתָּה 'எலி 'அத்தாஹ் - என் இறைவன் நீரே).  இந்த இறைவனுக்கு அவர் நன்றியும் செலுத்தி, அவரை புகழ்ந்துரைக்கவும் செய்கிறார் (אוֹדֶךָּ 'ஓதெஹா நன்றி சொல்வேன், אֲרוֹמְמֶךָּ 'அரோம்மெகா- புகழ்ந்தேற்றுவேன்).  

ஊ). வ.29: குழு புகழ்ச்சிக்கான இறுதி அழைப்பு.

இங்கே குருவின் குரல் மீண்டும் ஒலிக்கிறது. அரசரைப் போல மக்கள் கூட்டம் அனைவரையும் நன்றி செலுத்தி ஆண்டவரைப் புகழக் கேட்கிறார். ஆண்டவர் நல்லவர் மற்றும் என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு என்பது, அதிகமாக பாவிக்கப்படும் விவிலிய வரி  (ט֑וֹב כִּ֖י לְעוֹלָ֣ם חַסְדּֽוֹ தோவ் கி லெ'ஓலாம் ஹஸ்தோ- நல்லவர், அதாவது அவரது பேரன்பு என்றும் உள்ளது).  



இரண்டாம் வாசகம்
கொலோசேயர் 3,1-4

1நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். 2இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். 3ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு  இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. 4கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

கொலோசு, உரோமையர் பேரரசின் காலத்தில் ஒரு முக்கியமில்லாத நகராக அறியப்பட்டது. பவுல் எபேசில் நற்செய்தி அறிவித்த காலத்தில் இங்கும் நற்செய்தி பரவியிருக்க வேண்டும். பவுலுடைய உடன்-பணியாளர்களில் ஒருவர் இங்கே நற்செய்தியை கொண்டுவந்திருக்க வேண்டும். எபாஃபிரஸ் (Ἐπαφρᾶς) (காண்க கொலோ 4,12) என்னும் கொலோசேய நபர் அந்த சீடராயிருக்க வாய்ப்புள்ளது. இக்கடிதத்தின் முகவுரை, செய்தி மற்றும் முடிவுரையிலிருந்து இதனை பவுலே எழுதினார் என நம்பினால் தவறில்லை. இதற்கு எதிர்கருத்துக்கள் இல்லாமலும் இல்லை. கொலோசேயில் சில தப்பறைகள் இருந்ததாகவும் அதனை களைவதற்கே பவுல் இந்த கடிதத்தை எழுதினார் எனவும் நம்பப்படுகிறது. இது எப்படியான தப்பறைகள் என்பதில் பல கருத்துக்கள் உள்ளன, சில இதனை யூதர் கால அட்டவணை சார்ந்த பிரச்சனைகளாகவும், சிலர் இதனை பிறமத சிலை வழிபாட்டு பழக்கவழக்கங்கள் எனவும் காண்கின்றனர். இன்றைய வாசகம் சிறிய பகுதியாக இருந்தாலும், முக்கியமான கொலோசேய செய்திகளை தாங்கி வருகின்றது. இந்த பகுதியிலே பவுல் பிழையான மெய்யறிவு-வாதிகளை சாடி, ஏதற்காக மக்கள் கிறிஸ்துவை பின்பற்ற வேண்டும்? என்ற இறையியல் வாதத்தை முன்வைக்கிறார். 

வவ. 1-2: கொலோசேயர் ஏற்கனவே கிறிஸ்துவோடு இணைந்துவிட்டதால் அந்த இணைப்பு அவர்கள் வாழ்வில் மாற்றத்தை காட்ட வேண்டும் என்கிறார் பவுல். அதாவது கிறிஸ்து மேலுலகை சார்ந்தவர் என்பதால், அவரைச் சார்ந்தவர்களும் மேன்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பது பவுலின் எதிர்பார்ப்பு, (τὰ ἄνω ζητεῖτε, οὗ ὁ Χριστός ἐστιν ἐν δεξιᾷ τοῦ θεοῦ καθήμενος டா ஆனோ ட்சேடெய்டெ, ஹு கிறிஸ்டொஸ் எஸ்டின் என் தெக்ட்சியா டூ தியூ காதேமெனொஸ்- மேலுலகு சார்ந்வற்றை தேடுங்கள் அங்கேதான் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்). இதில்  மேலுலகு மற்றும் கீழுலகு என்று இரண்டு வகையான வாழ்கை முறையை பவுல் விவாதிப்பதைக் காணலாம். மேலுலகு என்பது விண்ணகம் என்பதைவிட, இங்கு நல்ல கிறிஸ்தவ நம்பிக்கை வாழ்வை குறிக்கிறது. கீழுலகு என்பது கொலோசேய அக்கால மெய்யறிவு வாதத்தை குறிக்கலாம், இதன் வார்த்தை பிரயோகம் சாதரண உலகத்தைக் குறிக்கிறது (τὰ ἐπὶ τῆς γῆς டா எபி டேஸ் கேஸ்- உலகத்தின் மேல்). கடவுளின் வலது பக்கத்தில் இருக்கிறார் என்பதன் மூலம், கிறிஸ்துவின் வழியும், அவர் இருக்கும் உலகமும்தான் உண்மையானது என காட்டப்படுகிறது. 

வ. 3: ஏன் இவர்கள் கிறிஸ்துவோடு இணைந்திருக்க வேண்டும் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறார். கிறிஸ்துவோடு இறந்துள்ளார்கள் என்பது, இவர்களின் திருமுழுக்கையும், உயிர்ப்பையும் குறிக்கும். வாழ்வு மறைந்திருக்கிறது என்பது, இந்த புதிய வாழ்வை யாரும் திருட முடியாது என்பதை விளக்குகிறது. 

வ. 4: 'கிறிஸ்துவே உங்கள் வாழ்வு' (ἡ ζωὴ  ὑμῶν ஹே ட்சோன் ஹுமோன்) என்றும் சில பாடங்கள் மொழிபெயர்க்கப்படுகிறது. ஏன் மாட்சி இன்னும் தென்படவில்லை என்ற வாதம் இவர்களிடையே  இருந்திருக்கலாம், ஆனால் கிறிஸ்து வரும்போதுதான் அந்த மாட்சி தொன்படும் என்கிறார் பவுல்.

 


நற்செய்தி வாசகம்
யோவான் 20,1-9

1வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். 2எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, 'ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!' என்றார். 3இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். 4இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். 5அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. 6அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், 7இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. 8பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார். 9இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.

திருவிழிப்பு சனியில் வாசித்த மத்தேயுவின் பதிவைத்தான் யோவானின் நடையில் இங்கு காண்கின்றோம். ஆண்டவரின் உயிர்பின் பின் நடைபெறும் காட்சிகள் நாடக அரங்கேற்றத்தைப் போல், சிறிய-பெரிய-முக்கிய பாத்திரங்களினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

வவ. 1-2: மகதலா மரியா இங்கே ஒரு சிறிய பாத்திரம், அவர் கண்ட காட்சியிலிருந்து ஆண்டவரின் உயிர்ப்பை நம்பவில்லை மாறாக சாதாரண மனக் குழப்பத்தையே வெளிப்படுத்துகிறார். 

அ. எப்படி யூத மற்றும் உரோமைய காவலர்களால் பாதுகாக்கப்பட்ட கல்லறையின் வாயில் திறக்கப்பட முடியும்? (மத்தேயுவிற்கு இந்த கல்லை வானதூதர் திறந்தார்)

ஆ. எப்படி உடலை களவாடி கொண்டு செல்ல முடியும்? இது ஓர் பாரதூரமான குற்றம். 

வாரத்தின் முதல் நாளே விடியும் முன் (ஞாயிறு விடியல்) கல்லறைக்கு சென்றது அவர் ஆண்டவர்மேல் கொண்ட அன்பை காட்டுகிறது. பேதுருவிடமும் யோவானிடமும் சொன்னது,  இவர்களின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. யோவான் நற்செய்தியில், இந்த தனி அன்புகொண்டிருந்த சீடர் (τὸν ἄλλον μαθητὴν ὃν ἐφίλει ὁ Ἰησοῦς டொன் அல்லொன் மாதேடேன் ஹொன் எபிலெய் ஹொ இயேசூஸ்) யார் என்று இலகுவில் அடையாளம் காண முடியாது. அவர் யோவானாக இருப்பதற்கு வாய்ப்புகள் பாரம்பரிய முறைப்படி அதிகமாகவே உள்ளன. எங்களுக்கு தெரியவில்லை (οὐκ οἴδαμεν ஊக் ஒய்தாமென்), என்று மகதலா மரியா கூறுவதனால், அவருடன் இன்னும் பலர் சென்றிருந்தனர் என ஊகிக்கவைக்கிறது. ஏன் யோவான் மற்றைய பெண்களின் பெயர்களை குறிப்பிடவில்லை? ஒருவேளை மகதலா மரியாவின் பாத்திரத்தை மையப்படுத்தவென நினைக்கலாம். இந்த ஊகம் சரியாக இருக்கலாம், ஏனெனில் அனைத்து நற்செய்திகளும் இந்த மகதலா மரியாவை பெயர்சொல்லி விவரிக்கின்றன.

வ.3: மகதலா மரியாவின் அவதானத்தைக் கேட்ட இந்த இருவர், பேதுரு மற்றும் அன்புச் சீடர் (ὁ Πέτρος καὶ ὁ ἄλλος μαθητὴς ஹொ பெட்ரொஸ் காய் ஹொ அல்லொஸ் மாதேடேஸ்) உடனடியாக கல்லறைக்கு புறப்படுகின்றனர். இந்த இருவர் யோவான் நற்செய்தியில் மிக முக்கியமான பாத்திரங்கள். 

வவ. 4-5: இந்த வரிகள் பல கேள்விகளை எற்படுத்துகிறன. ஆசிரியர் பல வேiளைகளில் அன்புச் சீடரை முக்கியமாக உள்வாங்குவது சாதாரணம், அது வரலாற்று நிகழ்வாகக்கூட இருக்கலாம்,  அல்லது அப்படியான தேவை ஒன்று இருந்திருக்கலாம். இங்கு அவர் பேதுருவைவிட வேகமாக ஓடியதன் மூலம், அன்புச் சீடர் அல்லது அன்புச் சீடரின் கிறிஸ்தவ குழு, பேதுருவின் குழுவிற்கு எந்த விதத்திலும், எதிரானதோ அல்லது குறைவானதோ இல்லை எனக்காட்டுகிறார் என நிச்சயமாக நம்பலாம். அவர் உள்ளே நுழையவில்லை என்பதால், யோவான் பேதுருவுக்காக காத்திருப்பது புலப்படுகிறது. யோவான் பேதுருவுக்காக காத்திருப்பது பேதுருவின் முக்கியத்துவத்தையும், ஆரம்ப கால திருச்சபை பேதுருவுக்கு கொடுத்த மரியாதையையும் காட்டுகிறது. 

வ. 6: பேதுரு உடனடியாக, நிற்காமல் உள்ளே நுழைவது அவரின் தலைமைத்துவத்தையும் திருச்சபையில் அவருக்கிருந்த பொறுப்பையும், அல்லது இயேசுவின் மீது அவர்கிருந்த அன்பையும் காட்டுகிறது. அவர்தான் வெறுமையான கல்லறையை முதலில் காண்கிறார். இங்கே அவர் யோவானை (அன்பு சீடரை) மிஞ்சுகிறார். 

வ. 7: சுருட்டி வைக்கப்பட்டிருந்த துண்டுகளும், வேறு வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்ததும், அதனால் சுற்றப்பட்டிருந்தவர், எழுந்து அதனை அவிழ்த்து வைத்தது போல உள்ளது. தலையை மூடியிருந்த துண்டை இயேசு முதலில் கழட்டியிருக்க வேண்டும், அதனால்தான் அது தனியே வைக்கப்பட்டிருக்கிறது. யோவான் இவ்வாறு, யாரும் இயேசுவின் உடலை கொண்டுபோய்  இருக்கமுடியாது அத்தோடு இந்த பெண்கள் சொல்வது அறியாமையினாலும் அல்லது துன்பத்தினாலும் என்று விவரிக்கின்றார். 

வ. 8: இது முக்கியமான வசனம். (εἶδεν καὶ ἐπίστευσεν· எய்தென் காய் எபிஸ்டெயுசென்- கண்டார் நம்பினார்). யோவான் நற்செய்தியில் நம்புதல் முக்கியமான விழுமியம், யோவான் தனது நற்செய்தியின் நோக்கமாகவும் இதனையே தருகிறார் (யோவான் 20,31). யோவானின் நற்செய்தி நம்பகமானது, ஏனெனில் அவர் இயேசுவைக் கண்டவர் அத்தோடு நம்பியவர். 

வவ. 9-10: சீடர்களின் தற்போதைய நிலை விவரிக்கப்படுகிறது. அவர்கள் இன்னும் நிறைவாக புரிந்துகொள்ளவில்லை. 8வது வசனத்தில் அன்புச் சீடர் நம்பினார் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆக நம்பிக்கையும் புரிந்துகொள்ளுதலும் இரண்டு வேறு விழுமியங்கள் எனலாம். இந்த நற்செய்தி எழுதப்பட்ட காலத்தில் ஏற்கனவே இயேசுவின் உயிர்ப்பை யோவான் முழுமையாக புரிந்திருப்பார், ஆனால் வெறுமையான கல்லறையில் அந்த பக்குவத்தை அவர் அப்போது பெற்றிருக்கவில்லை என்பதை அவர் பின்நோக்கி நினைத்துப் பார்க்கிறார். இறுதியாக அவர்கள் வெறும் கல்லறையை பார்த்துவிட்டு தங்கள் இடத்திற்கே திரும்பி செல்கிறார்கள், அதாவது தங்களது பழைய பயத்திற்கும், ஒழிந்த வாழ்க்கைக்கும் திரும்புகிறார்கள். இயேசு இன்னமும் அவர்களுக்கு தோன்றவில்லை. 

ஆண்டவரை புரிந்து கொள்ளுதல் இரண்டாவதாக வரலாம், 

ஆனால் அவரை நம்புதல் எங்களது வாழ்வின் மையமாகவும், 

முதலாவதாகவும் இருக்கவேண்டும். 

யோவான் ஆண்டவரை நம்பினதற்கு 

அவர் ஆண்டவரின் மார்பில் இடம் பிடித்துக்கொண்டமையே காரணம்.

அன்பான ஆண்டவரே! உமது உயிர்ப்பு, 

எங்ளது நாளாந்த வாழ்வில் மாற்றம் ஏற்றபடுத்த உதவிசெய்யும்.

ஆமென்!!!