இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






தவக்காலம், ஐந்தாம் வாரம் (இ),

முதலாம் வாசகம்: எசாயா 43,16-23
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 125
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 3,8-14
நற்செய்தி: யோவான் 8,1-11


முதல் வாசகம்
எசாயா 43,16-21

16கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர்நடுவே பாதை அமைத்தவரும், 17தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச்செய்து, திரிகளை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே. 18முன்பு நடந்தவற்றை மறந்து விடுங்கள்; முற்கால நிகழ்ச்சிபற்றிச் சிந்திக்காதிருங்கள்; 19இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலைநிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன். 20காட்டு விலங்குகளும் என்னைப் புகழும்; குள்ள நரிகளும், தீக்கோழிகளும் என்னைப் பெருமைப்படுத்தும்; ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்களுக்குப் பாலைநிலத்தில் குடிக்கக் கொடுப்பேன்; பாழ்நிலத்தில் நீரோடைகள் தோன்றச் செய்வேன். 21எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர்.

இந்தப்பகுதி பொங்கிவரும் கடவுளின் நன்மைத்தனமாக 43வது அதிகாரத்தில் பதியப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது எசாயா புத்தகம், நம்பிக்கை தருவதாக, நாடு கடந்த அல்லது அதற்கு சற்று பிற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். 'அகதியாய் இருந்து பார், தாய் மண்ணின் சுகம் தெரியும்' என்று முகநூல் ஆசிரியர்கள் எழுதுவது நினைவிற்கு வருகிறது. இந்த பகுதி எகிப்திலிருந்து சுவீகரித்த விடுதலை இறையியலை, பபிலோனியாவில் இருந்தவர்களுக்கு நினைவூட்டுவது போல அமைக்கப்பட்டுள்ளது. இத்தாலிய எழுத்தாளர் உம்பேர்தோ எகோ, நினைவிழந்தவர் ஆன்மாவை இழந்தவர் என்று சொல்வார், இதனையே பல வருடங்களுக்கு முன் இஸ்ராயேல் மக்கள், ஆண்டவர் செய்தவற்றை நினைந்து, தங்களையும் தங்கள் எதிர்காலத்தையும் காத்துக்கொண்டனர். நினைவூட்டுகிற கதையம்சத்தை கொண்டிருந்தாலும் எபிரேய கவிதை அமைப்பை தழுவி அமைக்கப்பட்டுள்ளது. மன்னித்தலையும் மறத்தலையும் ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி வியாக்கியானம் செய்வது, அவ்வளவு ஆரோக்கியமாக இருக்காது என்பதை இஸ்ராயேலர்களின் படிப்பினைகளில் இருந்து புரிந்து கொள்வது அவசியம்.

வவ.16-17: கடலுக்குள் பாதை என்பது, செங்கடலுக்குள் (புற்கடல்) பாதையமைத்து பாரவோனின் படைகளிடமிருந்து தமது முன்னோர்களை காத்ததை நினைவூட்டுகிறார். இதனை உண்மையில் பாரவோனுக்கும் கடவுளுக்கும் இடையில் நடந்த போராகவே கருதுகிறார் ஆசிரியர். பெரும் படைகொண்டு வந்தவர்கள், எழாதவாறு வீழ்ந்தனர் என்கிறார். எத்தனையாயிரம் படைகள் வந்தாலும் இஸ்ராயேல் கடவுளின் முன் அணைந்த திரியாவார்கள் என்பது இவர்களின் வரலாற்று பாடம். הַנּוֹתֵן בַּיָּם דָּרֶךְ ஹநோதென் பாயிம் தெரெக்- தண்ணீருள் பாதை அமைக்கிறவர்.

ஆண்டவருடைய பலத்தைக் குறிக்க சில சொறகள் பயன்படுத்தப்படுகின்றன: தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும், ஒன்றாக கூட்டிவந்தவராக கடவுள் பார்க்கப்படுகிறார்.

வ.18: உளவியல் பேசுகிறார் எசாயா. முதல் நடந்தவை, எபிரேய பாடத்தில் முதலாவதாக நடந்தவற்றை அதாவது, கடவுளால் கைவிடப்பட்ட நிலையை குறிக்கிறது. இது எகிப்திய அடிமைத்தனத்தின் துன்பியலையும் அத்தோடு பபிலோனியனர்கள், அசிரியர்கள் இழைத்த கொடுமைகளையும் குறிக்கலாம். பழையதை நினைக்க வேண்டாம் என்கின்றாரே தவிர அவற்றை மறக்கச் சொல்லவில்லை. அத்தோடு கடவுள் தர இருக்கும் நம்பிக்கையான எதிர்காலத்தை நினைக்கச் சொல்கிறார். (நேர்கூற்று சிந்தனை வாழவைக்கும்). אַל־תִּזְכְּרוּ רִֽאשֹׁנוֹת 'எல்-திட்ஸ்கெரூ ரெ'ஷோனோத்- முன்னையதை நினைக்க வேண்டாம்.

வவ.19-20: ஆண்டவர் புதியனவற்றை செய்கிறேன் என்று நிகழ்காலத்திலே சொல்கிறார், மாறாக எதிர்காலத்தில் இல்லையென்பதை அவதானிக்கவேண்டும். பாலைவனத்தில் பாதைகளையும், நீரோடைகளையும் அமைப்பது, இவர்களுக்கு நன்கு தெரிந்த விடுதலைப் பயண அனுபவமாகும்.

நிலத்தின் மிருகங்கள், நரிகள், தீக்கோழிகள் இவை இறுதிகாலத்தை குறிக்கின்றன என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த மிருகங்களுக்கு இவை தெரிந்துள்ளது உங்களுக்கு தெரியவில்லையா? என கேட்பது போல தோன்றுகிறது. பாலை நிலத்தில் தண்ணீர் என்னும் உவமானம் கடவுளுடைய இருத்தலைக் குறிக்கும்.

வவ.21. இறைவனின் புகழை அறிக்கையிடுவதே, மக்கள் படைக்கப்பட்டதன் நோக்கம் என்கிறார் ஆசிரியர். עַם־זוּ יָצַרְתִּי לִ֔י 'அம்-ட்சு யாட்சார்தி லி- எனக்கென உருவாக்கப்பட்ட இந்த மக்கள்.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 126

விடுதலைக்காக மன்றாடல் (சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்) 1சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.

2அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது; ‟ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

3ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.

4ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.

5கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.

6விதை எடுத்துச் செல்லும்போது – செல்லும்போது – அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது – வரும்போது – அக்களிப்போடு வருவார்கள்.



இது ஒருவகை சீயோன் மலைப்பாடல். שִׁ֗יר הַֽמַּעֲלוֹת ஷிர் ஹம்மா'லோத். ஐந்தாவது புத்தகத்தை சார்ந்த இப்பாடலை அதிகமானவர்க்ள் ஒரு குழு புலம்பல் பாடலாக காண்கின்றனர். ஆறு வரிகளை மட்டும் கொண்டுள்ள இப்பாடலை அதன் அர்த்தத்தை மையமாகக் கொண்டு இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். எதிர்கால வளமையை மீளாக்குதல் என்பதே இப்பாடலின் மைய பொருளாக வருகிறது. (வவ.1-3, வவ.4-6)

வ.1: உயர ஏறுதலின் பாடல் என்று தொடங்குகிறது. சீயோனின் வளமையை ஆண்டவர் திரும்பி கொணர்ந்தபோது கனவு போலிருந்தது என்பது எந்த நிகழ்வை குறிக்கிறது என்பதில் தெளிவின்மை இருக்கிறது. கி.மு 701ல் சென்னாகெரிபின் முற்றுகையின் போது ஆண்டவர் எருசலேமை அற்புதமாக காத்த நிகழ்வை குறிக்கிறது என்பர் சிலர் (காண்க எசாயா 37,36-37). ஆனால் இது ஒரு விவசாய பாடல் போல தோன்றுகிற படியால், இது காலத்தை கடந்தது என்றும் சொல்லலாம். திருப்பாடல்களுக்கு காலத்தைக் கணிப்பது மிகவும் கடினம்.

வ.2: 'அப்போது அவர் எங்கள் வாய்;களையும், நாக்குகளையும் சிரிப்பால் நிறைத்தார்' என்றே இரண்டாவது வரியின் அ பிரிவை, நேரடி மொழிபெயர்க்க வேண்டும். பிற இனத்தார் என்பது இங்கு பிற நாட்டவர்களை அதாவது இஸ்ராயேலரின் கடவுளை வணங்காதவர்களை குறிக்கிறது. גּוֹיִם கொய்யிம்- என்ற இந்தச் சொல் இஸ்ராயேலை குறிக்க பயன்படவில்லை.

வ.3: மக்களின் மகிழ்ச்சிக்கு காரணம் ஆண்டவரின் மாபெரும் செயல்கள் என்பது சொல்லப்படுகிறது. ஆண்டவரின் மாபெரும் செயல்கள் என்பது மக்களின் துன்பத்தை துடைக்கும் செயலாக மாறுகிறது. הִגְדִּיל יְהוָה ஹிக்தில் அதோனாய்- மாபெரும் செயல்புரிந்தார் ஆண்டவர்.

வ.4-6: இது இரண்டாவது பிரிவின் தொடக்கத்தில் முதலாவது வசனத்தில் வந்த அதே 'வளமையை ஆண்டவரே திருப்பி கொண்டுவாரும்' என்று பொருளில் அமைந்துள்ளது. தென்நாடு என்பது நெகேபுவைக் குறிக்கும். பாலைவனத்தில் ஆறுகள் கிடையாது, ஆனால் ஓடைகள் எனப்படும், மழைக்கால ஆறுகளை, மக்கள் கடவுளின் அதிசய கொடையாகக் கண்டனர். மழையைத் தருபவரும் கடவுள் என்றபடியால் அது அவரின் ஆசீர்வாதமாகக் கருதப்பட்டது. ஆசிரியர் இந்த ஓடைகளை தங்களது வாழ்வுக்கு ஒப்பிடுகிறார். இந்த இரண்டாவது பிரிவில் இரண்டு விடயங்கள் சொல்லப்பட்டுள்ளது.

அ). கண்ணீரில் விதைப்பு - மகிழ்சியில் அறுவடை

ஆ). புலம்பலோடு விதை விதைப்பு - மகிழ்ச்சியில் கதிர் சேகரிப்பு.

விசுவாச வாழ்வு, விவசாயிகளின் அனுபவத்தோடு ஒத்திருப்பதை அழகாகச் சொல்லுகிறார் இந்த அறியப்படாத ஆசிரியர்.



இரண்டாம் வாசகம்
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 3,8-14

8உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். 9கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவனாக இயலாது. கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. 10கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன். 11அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும். இலக்கை நோக்கி ஓடுதல். 12நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன். 13அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு, 14பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.

பவுல் தனது காதல் திருச்சபைக்கு எழுதிய மடல்தான் பிலிப்பியர் திருமுகம் என்று முன்னர் பார்த்திருக்கிறோம். (காண் இல 13, தவக்காலம் இரண்டாம் வாரம் (இ). இந்த பிலிப்பியர் திருமுகத்தில் பல ஆழமான பகுதிகள் உள்ளன, அவற்றில் இன்றைய நாள் வாசகம் மிகவும் முக்கியமானது.

வ.8: அழகான வார்த்தை அமைப்பில் இந்த வரி, மூல கிரேக்க பாடத்தில் அமைந்துள்ளது. பவுல் இங்கு வணிகச் சொற்களைப் பயன்படுத்துகிறார். கிறிஸ்துவை சந்திப்பதற்கு முன்னர் பலவற்றை தனது சொத்துக்களாக கொண்டிருந்தார். இந்த கடிதத்தை எழுதுகிறபோது ஒரளவுக்கு தனது முடிவை ஊகித்திருப்பார் என்று எண்ணலாம். கிறிஸ்துவைப்பற்றிய அறிவே தனது வரவு, மற்றெல்லாம் தேவையில்லா செலவு என்கிறார் (ζημία ட்ஸேமியா- விரயம், செலவு). கிறிஸ்து ஆண்டவரைப்பற்றிய அறிவு என்று, இந்த அறிவை பவுல் மையப்படுத்துவது அக்காலத்தில் மக்கள் மத்தியில் இருந்த உலக-அறிவுப்பசியின் ஆபத்தை நமக்கு நினைவூட்டுகிறார். குப்பை என்று தமிழிலும் வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, உன்மையில் 'மலக் கழிவைக்' குறிக்கும் (σκύβαλον ஸ்குபலொன்- மலக்கழிவு). இவ்வாறு, இயேசுவிற்கு முன்னால் அனைத்து பொருட்களின் பெறுமதியை காரசாரமாக மூக்கை மூடிக்கொண்டு சொல்லுகிறார் (இன்று பல கழிவுகள் கிறிஸ்துவின் இடத்தை பிடிக்க முயலுகின்றன)

வ.9: (அ). கிறிஸ்துவில் இணைந்திருத்தல், இதனை சரியாக, 'கிறிஸ்துவில் கண்டுபிடிக்கப்படல்' என்றுதான் கிரேக்கம் வாசிக்கிறது. கடவுளைப் பற்றிய சரியான புரிதல் ஒவ்வொரு இஸ்ராயேலரின் கடமை அதனைத்தான் தான் இயேசுவில் சரியாக செய்கிறேன் என்று வாதிடுகிறார். εὑρεθῶ ἐν αὐτῷ ஹெவ்ரெதோ என் அவ்டோ- அவரில் இணைந்திருத்தல்.

(ஆ). ஏற்புடமை (δικαιοσύνη திகையோசுனெ) என்பது இஸ்ராயேல் மக்கள் மத்தியில் இருக்கின்ற முக்கியமான பாரம்பரிய விசுவாசம். ஆபிரகாமின் பி;ள்ளைகளாக இருப்பதனாலும், திருச்சட்டங்களை கடைப்பிடிப்பதனாலும் ஒருவர் ஏற்புடமையை அடையலாம் என்பது, பல நூற்றாண்டு கருதுகோளாக இருந்தது. கிறிஸ்துவின் வருகை இதனை மாற்றியது என்பதில் பவுல் ஆழமாக இருக்கிறார். இந்த வரியில், இயேசுவில் கொண்டுள்ள நம்பிக்கைதான், தன்னை ஏற்புடையாக்குகிறது என்கிறார். பவுலின் நம்பிக்கை என்பது வாழ்க்கையையும் குறிக்கும் என்பதை அவதானிக்கவேண்டும். (πίστεως Χριστοῦ பிஸ்டெயோஸ் கிறிஸ்து) கிறிஸ்துவில் நம்பிக்கையா அல்லது கிறிஸ்துவைப் பற்றிய நம்பிக்கையா என்பது இன்னும் அறிஞர்களால் வாதிடப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இங்கே ஆறாம் வேற்றுமையில் மயக்கம் உள்ளது. இதன் அர்த்த்ம் பவுலுக்கு மட்டும்தான் தெரியும் போல. இரண்டு கருத்துக்களிலும் ஆழமான அர்தங்கள் உள்ளன.

வவ.10-11: பவுல் தனது முடிவை தெரிந்து வைத்திருந்தார் என இந்த இரண்டு வரிகளிலும் காணலாம். மூன்று விதமான விருப்பங்களை தருகிறார். கிறிஸ்துவை அறிதல், துன்பங்களில் பங்கேற்றல், சாவில் ஒத்திருத்தல். இதனால்தான் கிறிஸ்துவின் உயிர்ப்பில் பங்குகொள்ள முடியும் என்கிறார். பவுலுடைய காலத்தில் எற்கனவே யூதர்கள் உயிர்ப்பை பற்றிய புதிய அறிவை கொண்டிருந்தனர். உயிர்ப்பு என்னும் வாதம் கிறிஸ்தவர்களின் கண்டுபிடிப்பல்ல. ஆனால் கிறிஸ்துவின் உயிர்ப்பில் புது விளக்கத்தையே பவுல் காட்டுகிறார்.

γνῶναι αὐτὸν குனோனாய் அவ்டோன் - அவரைப் பற்றிய அறிவு

ἀναστάσεως αὐτοῦ அனாஸ்டாஸ்செயோஸ் அவ்டூ - அவரின் மீட்பு

παθημάτων αὐτοῦ, பாதேமாடோன் அவ்டூ - அவரின் துன்பம்

வ.12: இங்கே பவுல் சில அடிப்படைவாதிகளின் கருத்துக்களை உடைக்கிறார். ஒருவருடைய விசுவாச வாழ்வு, அவர் கிறிஸ்துவில் உயிர்ப்பதாகும். இது ஒரு ஓட்டம், இவ்வுலகில் அது யாருக்கும் நிறைவடையாது என்கிறார். 'தொடர்ந்து ஒடுகிறேன்' என்பதை கடினப்பட்டு; ஓடுகிறேன் என்றுதான் பார்க்க வேண்டும்.

வவ.13-14: மூன்றாவது தடவையாக இன்னும் தான் அந்த இலக்கை அடையவில்லை என்ற கருத்தை உறுதிப்படுத்துகிறார். கடந்தது என்று சொல்லுவது தன்னுடைய பழைய நம்பிக்கைகளையோ பலவீனங்களையோ குறிக்கலாம், முன்னிருப்பது என்பது, கிறிஸ்துவின் உயிர்ப்பைக் குறிக்கும். இந்த கிறிஸ்து-ஒன்றிப்பு வாழ்வு ஒரு பரிசு என்பதும் பவுலுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. βραβεῖον - பிராபெய்யோன்- பரிசு.


நற்செய்தி வாசகம்
நற்செய்தி: யோவான் 8,1-11

விபசாரத்தில் பிடிபட்ட பெண் 1இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். 2பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார். 3மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, 4'போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள். 5இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?' என்று கேட்டனர். 6அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். 7ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, 'உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்' என்று அவர்களிடம் கூறினார். 8மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார். 9அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார். 10இயேசு நிமிர்ந்து பார்த்து, 'அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?' என்று கேட்டார். 11அவர், 'இல்லை, ஐயா' என்றார். இயேசு அவரிடம் 'நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்' என்றார்.

யார் யாருக்கு கல்லெறிவது? யோவான் நற்செய்தியை யார் எழுதியது என்பது இன்னும் அறியப்படாத இனிமையான தேடல். கத்தோலிக்க பாரம்பரியம் இவரை, ஆண்டவருக்கு நெருக்கமாக இருந்நதவரும், அருவடைய மார்பில் சாய்ந்தவரும், அன்னை மரியாவை பாராமரித்தவருமான கலிலேய இளைஞனான யோவான் என்று காண்கின்றனர்.

இந்த ஊகிப்பை, ஆய்வியல் ரீதியாக நிரூபிக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. கி.பி. 90-175 ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்த அழகானதும் ஆழமானதுமான நற்செய்தி, உருவகங்கள் மற்றும் அடையாளங்கள் வாயிலாக ஆண்டவர் இயேசுவை, உன்னத கடவுளாக காட்டுகிறது. கிரேக்க மற்றும் இராபினிக்க-எபிரேய சிந்தனைகளை கொண்டுள்ள இந்த நற்செய்தியை அவற்றால் கட்டுப்பட்டது என்று சொல்ல முடியாது. யோவான் நற்செய்தி தனித்துவமானது. அழகிற்கு அழகுசேர்த்தால் போல் வரும் இந்த பகுதி, யோவானின் கழுகுப் பார்வையை நமக்கு காட்டுகிறது. ஏழாவது எட்டாவது அதிகாரங்கள் எருசலேமில் ஆண்டவரும் அவரை புரிந்து கொள்ளாதவர்களுக்கும் இடையில் நடந்த வாத பிரதிவாதங்களை விவரிக்கின்றன. யோவான் 7,53 - 8,11 போன்ற வசனங்கள், அவற்றினுடைய மொழி மற்றும் இறையியல் நடையை கருத்தில் கொண்டு, மூல கிரேக்க பிரதியில் இருந்திருக்கவில்லை எனவும், பின்னர் தோன்றிய பிரதிகளில் இருந்து மூல பிரதியுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது என பல அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இந்தப் பகுதி லூக்காவின் சாயலை ஒத்திருப்பதாகவும் சிலர் காண்கின்றனர்.

வ.1: ஓலிவ மலைக்கு ஆண்டவர் செபிக்கச் செல்வது சமநோக்கு (ஒத்தமைவு) நற்செய்தியில் அதிகமாக காணப்படுகிறது, யோவான் நற்செய்தியில் இங்கு மட்டுமே வருகிறது. எருசலேமிற்கு கிழக்கில் இருக்கும் இந்த குன்று ஒலிவ மரங்களை அதிகமாக கொண்டிருப்பதனால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஆண்டவருடைய வாழ்விலும் வார்த்தையிலும் இந்த மலை முக்கியம் பெறுகிறது. இங்கிருந்து பழைய எருசலேமையும், தாவீதின் நகரையும் காணலாம், இந்த மலையில் இருந்துதான் ஆண்டவர் எருசலேமை பார்த்து அழுதார் என்று பாரம்பரியமும் வரலாறும் கூறுகின்றன. ὄρος τῶν ἐλαιῶν. ஓரொஸ் டோன் எலாய்யோன்- ஒலிவ மலை.

வ.2: மலையிருந்து வருகிறபடியால் அவர் இரவு முழுவதும் செபத்தில் இருந்தார் எனக் கொள்ளலாம். முதல் ஏற்பாட்டில் கடவுள் மலையில் இருப்பார், மக்கள் அவரைத் தேடி செல்வார்கள், இங்கே இவர் மலையிலிருந்து இறங்கி வந்து, மக்களுடன் அமர்ந்து கற்பிக்கிறார்.

வ.3-6: இந்த வரிகள் பல சிந்தனைகளை தாங்கி வருகின்றன. ஆணாதிக்க சமூதாயத்தின் கோர முகம் இங்கு படம்பிடிக்கப்படுகிறது. பரிசேயர்களைம் மறைநூல் வல்லுனர்களையும் இங்கு இயேசுவின் அதிகாரத்தை ஏற்காதவர்களின் அடையாளம் எனக் கொள்ளலாம். மறைநூல் வல்லுனர்கள் இங்கு மட்டும்தான் யோவான் நற்செய்தியில் வருகிறார்கள். ஆலயத்தின் நடுவில் பிடிபட்ட பெண்ணை நிற்க வைப்பதன் மூலம் அவர்களின் தேவை வேறாக இருக்கிறது என்கிறார் யோவான்.

அ. மறைநூல் அறிஞர்களும் பரிசேயரும் (οἱ γραμματεῖς καὶ οἱ Φαρισαῖοι ஹொய் கிராம்மாடெய்ஸ் காய் ஹொய் பாரிசாய்யொய்), விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை கூட்டிக் கொணர்ந்து அவரை மக்கள் நடுவில் நிறுத்துகிறார்கள்.

யூத சமுதாயத்தில் விபச்சாரம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது தெரிகிறது. இருந்தாலும் விபச்சாரிகள் இருந்திருக்கிறார்கள் என்றால் ஆண்கள் விபச்சாரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள் என்பது தெரிகிறது. இவரை மக்கள் நடுவில் நிறுத்தினார்கள் என்பது, அவர்களை ஆண்கள் நடுவில் நிறுத்தினார்கள் என்பதைக் குறிக்கிறது.

வ.4: தங்களைத்தான் உண்மையான ஆசிரியர்கள் என்று சொல்கிறவாக்ள், இயேசுவை 'ஆசிரியரே' διδάσκαλε, திதாஸ்காலெ- ஆசிரியரே என்று சொல்வது யோவானின் கைவன்மையை காட்டுகிறது. பெண்ணைக் கொண்டு வந்துள்ளனர், விபச்சாரத்தில் பிடிப்பட்ட ஆணை காணவில்லை. ஒரு வேளை இயேசு பெண்களுக்கு சீடத்துவம் கொடுத்ததால் இயேசுவை சிக்க வைக்க பெண்ணை அவர் முன்னிலையில் வைக்கின்றனர் என சந்தேகிக்கலாம்.

வ.5: தவறாக மோயிசனின் கட்டளைகளை குறிப்பிடுகின்றனர் (காண்: லேவி 20,10: இ.ச: 22,22): இந்த சட்டங்கள் பாலியல் விபச்சாரத்திற்கு எதிரானவை என்பதைவிட, அவை குடும்ப ஒழுக்கத்தையும், எதிர்கால சந்ததியை பாதுகாக்கவும் எழுதப்பட்டன என்றே கொள்ள வேண்டும். இந்த சட்டங்கள் ஆண்களையும் சமனாக தண்டிக்கிற படியால், இங்கே இவர்கள் செய்வது சட்டத்திற்கு முரணானது எனலாம். அவர்கள் மட்டுமே பேசுகிறார்கள், அந்த பெண் பேசவில்லை. அவருடன் விபச்சாரம் செய்தவர்களும் அங்கிருந்திருக்கலாம். பெண்களின் விபச்சாரம் தவறு என்று இந்த ஆண்கள் எப்படிச் சொல்லலாம்? பெண்களுக்கு சட்டம் அமைக்க ஆண்களுக்கு யார் அனுமதி அளித்தது?

விபச்சாரதம் தவறு என்றால், அதனை ஏற்படுத்தும் சூழலை எப்படிப் பார்ப்பது. விவிலியத்திலே வேற்று தெய்வ வழிபாடுகளும், அவநம்பிக்கையும் விபச்சாரமாகத்தான் பார்க்கப்படுகின்றன.

வ.6: அவர்களின் நோக்கம் சமூகத்தில் ஒழுக்கத்தை கொண்டுவரவல்ல, மாறாக இயேசுவை சிக்க வைக்க. இயேசுவின் அமைதியும், நிலத்தில் குனிந்து எழுதுதலும்தான் இந்த மாசுபட்ட ஆண் வர்க்கத்தை சார்ந்தவன் அல்ல என காட்டவே அமைகிறது. என்ன எழுதியிருப்பார்? தண்டிக்க படவேண்டியவர்கள் தண்டிக்க துடிக்கிறார்கள் என்று எழுதியிருப்பாரோ? மத்திய கிழக்கு நாடுகளில், உரையாடல்களின் போது குனிந்து வேறேதாவது செய்வது, அவர் அந்த உரையாடலில் ஈடுபாடு காட்டவில்லை என்பதைக் குறிக்கும். இயேசுவும் இதனைத்தான் செய்கிறார்.

வ.7-8: அவர் நிமிர்ந்து பார்த்து சொன்னார், என்பது அவருடைய கடவுள் தன்மையை காட்டுகிறது. மோசேயின் சட்டங்களை நன்கு தெரிந்திருந்தார் இயேசு அதனால்தான் குற்றமற்றவர் யார் இங்கு என வினவுகிறார். மீண்டும் குனிந்து எழுதுவது, ஆண்களில் யார் பாவிகள் என்று பார்ப்பது தனது நோக்கமல்ல என்பதைக் குறிக்கிறது.

வ.9: முதியவர்கள் (πρεσβύτερος பிரஸ்புடெரொஸ்- பெரியவர்கள்) தொடங்கி அனைவரும் சென்றுவிட்டனர் என்பது, சமுதாயத்தில் அனைவரும் பாவிகளே என்று யோவான் சொல்வதை கவனிக்கலாம். இந்தப் பெண்ணும் இயேசுவும் மட்டும் என்பது, கைவிடப்பட்டவர்களோடு இயேசு என்றும் இருக்கிறார் என்பது புலப்படுகிறது.

வவ.10-11: நிமிர்ந்து பார்ப்பதன் மூலம் இயேசு மீண்டுமாக தனது தெய்வீக தன்மையை காட்டுகிறார். இயேசுவின் கேள்வி இங்கே உண்மையில் விடையாக வருகிறது. இரண்டு கேள்விகள்: எங்கே ஒவ்வொருவரும்? ஒருவரும் தீர்ப்பிடவில்லையா? பரிசேயரும் மறைநூல் வல்லுனர்களும் இயேசுவை, போதகரே என்று விளித்த போது இந்தப் பெண், ஆண்டவரே என்கிறார். (κύριε கூரியே, ஆண்டவரே!). இயேசுவும் இந்த பெண்ணை தீர்ப்பிடாமல் விட்டது, சென்ற ஆண்களையும் தீர்ப்பிடாமல் விட்டதற்கு சமனாகும். இயேசு இந்த பெண்ணுக்கு பரிவு காட்டுகிறார், பாவ வாழ்க்கைக்கு அல்ல. இஃது, இயேசு மோசேயின் சட்டங்களுக்கு எதிரானவர் அல்ல மாறாக தான் சட்டங்களுக்கும் கடவுள் என்பதைக் குறிக்கலாம்.

பெண்களுக்கு ஆண்களும்,

ஆண்களுக்கு பெண்களும்

சட்டங்களை இயற்றுவதை விடுத்து,

எதிர்காலத்தையும் மனிதத்தையும் நேசித்தால்

சட்டங்கள் தேவைப்படாது.

இரக்கம் மட்டுமே மிஞ்சும்.

ஆண்டவர் இயேசுவே! பல குப்பைகள் உம்முடைய இடத்தை பிடிக்க முயலுகின்றன.

உம்மை உமது இடத்தில் வைக்க வரம் தாரும். ஆமென்.