இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






தவக்காலம், நான்காம் வாரம் (இ),

முதல் வாசகம்: யோசுவா 5,9-12

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 34

இரண்டாம் வாசகம்: 2 கொரிந்தியர் 5,17-21

நற்செய்தி: லூக்கா 15,1-3.11


முதல் வாசகம்
யோசுவா 5,9-12:

9ஆண்டவர் யோசுவாவிடம், 'இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்' என்றார். ஆகவே அந்த இடம் இந்நாள்வரை 'கில்கால்' என்று அழைக்கப்படுகின்றது. 10இஸ்ரயேலர் கில்காலில் தங்கினர். மாதத்தின் பதினான்காம் நாள் மாலை எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர். 11பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர். 12நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா நின்றது. இஸ்ராயேலருக்கு மன்னா மீண்டும் கிடைக்கவில்லை. கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.

முதல் ஏற்பாட்டில் ஆறாவது இடத்தில் அமைந்துள்ள இந்த நூல் பாரம்பரியமாக யோசுவா, மேசேயுடைய உதவியாளரினால் எழுதப்பட்டது என அழைக்கப்படுகிறது. இந்த புத்தகம் எப்போது எழுதப்பட்டது என்பதிலும் பல வியாக்கியானங்கள் உள்ளன. அநேகமாக கி.மு 1050ல் எழுதப்பட்டது எனக் கொள்ளலாம். தற்கால ஆய்வாளர்கள் யோசுவா புத்தகத்திற்கு இணைச்சட்டம், நீதிபதிகள், 1-2சாமுவேல், 1-2 அரசர்கள் போன்றவற்றோடு இறையியலில் நெருக்கிய தொடர்பிருப்பதனை அவதானிக்கின்றனர். இதனை 'இணைச்சட்ட வரலாறு' என்று அழைப்பர். எது எவ்வாறெனினும், இறையியலில் மிகவும் அழகான புத்தகங்களில் இதுவும் ஒன்று. நாடு கடவுள் தரும் கொடை, தேசியத்தை நிறுவுவதில் ஒற்றுமை, இஸ்ராயேலின் ஒற்றுமை, உடன்படிக்கையில் நம்பகத்தன்மை, மற்றும் புனிதப்போர் போன்றவை யோசுவா நூலின் முக்கியமான சிந்தனைகள். பிரேதேசங்களையும், சாதிப்-பொய்யையும், சம்மந்தமில்லா மதப்பிரிவினைகளையும், காலங்கடந்த ஆணாதிக்க சிந்தனைகளையும் தேவையில்லாமல் உள்வாங்கி, ஈழ தேசிய ஒற்றுமையை சிதைக்க நினைப்பவர்களுக்கு உண்மையில் இது ஓர் அழகான எதிர்க்கருத்து எனலாம். இன்றைய வாசக பகுதி வாக்களிக்ப்பட்ட நாட்டினுள் நுழைந்த பகுதியில் உள்ள ஆயத்த சடங்கு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

வ.9அ: எகிப்தின் பழிச்சொல் என்பது இரண்டு சிந்தனைகளை முன்வைக்கிறது. אֶת־חֶרְפַּת מִצְרַיִם 'எத்-ஹெர்பாத் மிட்ஸ்ராயிம் - எகிப்தின் நிந்தனை.

அ. விருத்தசேதனம் செய்யாத எகிப்தில் இருந்த நிலை.

ஆ. எகிப்திலே அடிமைகளாக இருந்த நிலை, அதாவது கைவிடப்பட்ட நிலை.

இவற்றை இப்போது கடவுள் நீக்குகிறார். நீக்கிவிட்டார் என்பதைவிட புரட்டிவிட்டார் என்றே எபிரேய மூல நூல் குறிப்பிடுகிறது.

வ.9ஆ: கில்கால் (גִּלְגָּל கில்கால்), சாக்கடலுக்கு, எரிக்கோவிற்கு வடகிழக்கில் அமைந்துள்ள நகர். 35தடவைகளாக முதல் ஏற்பாட்டில் வருவதனால் இதன் முக்கியத்துவத்தை அறியலாம். பெத்தோலுடன் சேர்த்து இஸ்ராயேலுக்கு முக்கியமான புனிதத் தளம். இங்கேதான் சவுலும் தாவிதும் பின்நாள்களில் அரசர்களாக திரு நிலைப்படுத்தப்பட்டார்கள். சவுலின் பணிவின்மையால் அவர் அரசபதவியை இழந்த நிகழ்வுகளும் இந்த இடத்துடன் தொடர்பு பட்டுள்ளது. இப்போது யோசுவா இங்கே செய்யும் உடன்படிக்கை பின்நாளில் பல அரசர்கள் செய்யும் உடன்படிக்கையுடன் தொடர்புபட்டு;ள்ளது. ஆக இந்நிகழ்வு பின்நாள் நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகின்றது எனலாம். அத்தோடு இந்நிகழ்வு செங்கடலை கடந்ததையும் நினைவூட்ட அமைக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.

வ.10: நிசான் மாதம் 14ம் நாள் (சித்திரை-வைகாசி எனக் கொள்ளலாம்.) பாஸ்கா (פָּסַח பாசஹ், கட) என்றால் கடத்தல் என்று பொருள். இந்த விழா இஸ்ராயேல் மக்களுடைய பழைய நாடோடி வாழ்வோடு தொடர்புபட்டது. (மேலும் அறிய காண்க வி.ப 12-13). ஏற்கனவே இஸ்ராயேல் மக்கள் இதனை எகிப்தில் கொண்டாடினார்கள் என விடுதலைப் பயண நூல் சொல்கிறது. எரிக்கோவில் கொண்டாடினார்கள் என்றால், கடவுள் கொடுத்த நாட்டில் முதல் தடவையாக கொண்டாடுகிறார்கள் என எடுக்கலாம். בְּעַרְבוֹת יְרִיחוֹ׃ பெ'அர்வோத் யெரிஹோ- எரிகோ பாலைவனத்தில்.

வ.11: நாடுபிடிப்பவர்களாக உள்நுழைந்தவர்களுக்கு எங்கிருந்து நிலத்தின் விளைச்சலும் புளிப்பற்ற அப்பமும் வறுத்த தானியமும் வந்தன? நிலத்தின் விளைச்சல் என்னும் சொல்லிலே ஒரு சொல் விளையாட்டு உள்ளதை அவதானிக்கலாம். מֵעֲבוּר மெ'அவுர் என்பது விளைச்சலைக் குறிக்கிறது, עָבַר 'அவர், என்பது கடத்தலைக் குறிக்கும். எனவே இவர்கள் நாட்டை கடந்து பிடித்ததைப்போல, விளைச்சலையும் பிடித்திருக்கலாம் என சிலர் கருதுகின்றனர்.

வ.12: (מָן மன்) மன்னா, கடவுள் இதனை இஸ்ராயேல் மக்களுக்கு நாற்பது ஆண்டுகளாக வழங்கினார். கொத்து மல்லி அல்லது உறைபனி போன்ற இந்த வெள்ளை உறைதிரவத்தை இஸ்ராயேல் மக்கள் கடவுளின் ஆச்சரியமாக கண்டனர். சில ஆய்வாளர்கள், சீனாய் பாலை நிலத்தில் சில மரங்கள் தருவதனை இது ஒத்திருக்கிறது என்கின்றனர். ஒருவகை மரப்பாசியும் மன்னாவுக்கு சொல்லப்படுகிறது. மன்னா என்பது வானகத்திலிருந்து வரும் உணவினை குறிக்கவும் பயன்படுகிறது. எப்படியாயினும், மன்னா கடவுளின் பராமரிப்பை குறிக்கிறது. யோவான் இயேசு ஆண்டவர்தான் உண்மையான மன்னா என்பார். இவ்வளவு காலமும் கடவுளின் மன்னாவை உண்ட மக்கள் இந்நாளில் இருந்து நிலத்iதின் விளைச்சலை உண்கின்றனர்.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 34

கடவுளின் கருணையைப் புகழ்தல்

(தாவீதுக்கு உரியது அவர் அபிமெலக்கின் முன் பித்துப் பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத்துரத்திவிட, அவர் வெளியேறினார்; அப்போது அவர் பாடியது)

1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

2நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.

3என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.

4துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்.

5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.

6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்.

7ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.

8ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்.

9ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.

10சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது.

11வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன்.

12வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா?

13அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு!

14தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு.

15ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன் அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.

16ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார்.

17நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.

18உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரைஅவர் காப்பாற்றுகின்றார்.

19நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல் அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.

20அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது.

21தீயோரைத் தீவினையே சாகடிக்கும்; நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர்.

22ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார்.



இந்த முப்பதிநான்காம் திருப்பாடலின் தலையங்க வரி இதற்கு பின்னால் உள்ள வரலாற்றை நினைவுபடுத்துகின்றது. (தாவீதுக்கு உரியது அவர் அபிமெலக்கின் முன் பித்துப் பிடித்தவர்போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத்துரத்திவிட, அவர் வெளியேறினார்; அப்போது அவர் பாடியது). இந்த பின்னணியை ✽1சாமு 21,10-14 இல் வாசிக்கலாம். சவுலுக்கும் தாவீதிற்கும் இடையில் நடந்த அதிகாரப் போட்டியில் தாவீது தன் உயிரைக் காக்க அந்நியரான பிலிஸ்திய அரசன் காத்தின் பாதுகாப்பை நாடி அவர் நாட்டில் தங்கினார். காத்தினுடைய தனிப்பட்ட பெயர் ஆகிஷ் ஆனால் இந்த திருப்பாடல் அவரை அபிமெலெக் அல்லது அகிமெலக் என வாசிப்பது வித்தியாசமாக உள்ளது ( אֲבִימֶלֶךְ அவிமெமெலக், Αχιμελεχ அகிமெலெக்). இந்த பிலிஸ்திய அரசன் தாவீதிற்கு அடைக்கலம் கொடுத்த போது சவுலின் பகைமையை மட்டுமே நினைத்திருப்பார், அனால் பிலிஸ்தியருக்கெதிரான தாவீதின் செயல்கள் அவருக்கு நினைவூட்டப்பெற்ற போது அவர் தாவீதை சிறைப்பிடிக்க முயல்கிறார், இதனால் தாவீது மனநோயாளிபோல் நடித்து தப்பிக்கிறார். தாவீது சிறந்த போர் வீரன் மட்டுமல்ல நல்ல தற்பாதுகாப்பு நடிகன் என்பதையும் நிரூபிக்கிறார். ஆகிஷிடம் இருந்து தப்பித்தது, தாவீதுக்கு ஒரு கடவுள் அனுபவத்தைக் கொடுக்கிறது, அந்த கடவுள் அனுபவம் அவரை இந்த பாடலை இயற்றி படிக்க வைத்ததாக எபிரேய வரலாற்று நம்பிக்கை எடுத்துரைக்கிறது.

(✽10பிறகு தாவீது எழுந்து அந்நாளில் தப்பியோடி காத்தின் மன்னன் ஆக்சிடம் சென்றார். 11ஆக்கிசின் அலுவலர்கள் அவரிடம், 'இவன் இஸ்ரயேல் நாட்டு அரசன் தாவீது அன்றோ? 'சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றான்' என்று பெண்கள் நடனமாடித் தங்களுக்குள் பாடிக் கொள்ளவில்லையா?' என்றனர். 12தாவீது இவ்வார்த்தைகளைத் தம் மனதில் வைத்துக் கொண்டு, காத்தின் அரசன் ஆக்கிசை முன்னிட்டு மிகவும் அஞ்சினார். 13அதனால் தம் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வாயிற் கதவுகளில் கிறுக்கிக் கொண்டு, தாடி வழியே வாயிலிருந்து நுரை ஒழுகச் செய்து அவர்கள் முன்னிலையில் ஒரு பைத்தியக்காரன் போல் நடித்தார். 14அப்போது ஆக்கிசு தன் அலுவலர்களிடம், 'இதோ இம்மனிதனைப் பாருங்கள்; இவன் ஒரு பைத்தியக்காரன்! இவனை ஏன் என்னிடம் அழைத்து வந்தீர்கள்? 15என் முன்னிலையில் பைத்தியக் காரத்தனத்தை காட்ட நம்மிடம் பைத்தியங்கள் குறைவா? இவன் என் வீட்டினுள் நுழையலாமா?' என்று சினமுற்றான்.)

வவ.1-2: இந்த முன்னுரையின் உதவியுடன் இந்த வரிகளை வாசிக்கின்ற போது இந்த வார்த்தைகளின் ஆழத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆண்டவரை புகழ்தல் அல்லது அவரது பெருமைகளை பறைசாற்றுதல் என்பது, ஒரு காலத்திற்கு உட்பட்டதல்ல ஏனெனில் கடவுள் ஒருவர் பலமாக இருக்கும் போது மட்டுமல்ல அவர் பலவீனமாக இருக்கும் போதும் தேவையானவர், என்ற உண்மையை தாவீது பிலிஸ்தியரின் அரண்மனையில் புரிந்துகொண்டார். கடவுளின் பெருமைகளை கேட்டபோது எளியோர் அக்களிப்பர் என்று தாவீது பாடுவது, இஸ்ராயேலரை குறிக்கும் அல்லது தாவீதைச் சார்ந்த இஸ்ராயேலரைக் குறிக்கிறது என்றும் எடுக்கலாம். יִשְׁמְעוּ עֲנָוִים וְיִשְׂמָחוּ யிஷ்மெ'ஊ 'ஆனாயிம் வெயிஸ்மா{ஹ- எளியோர் இதைக் கேட்ப்பார்கள், மகிழ்வார்கள்.

வ.3: தன்னோடு இணைந்து ஆண்டவரை பெருமைப்படுத்தக் கேட்கிறார் ஆசிரியர், அதனை அவர் ஆண்டவரின் பெயரை மேன்மைப் படுத்தல் முயற்ச்சி என்கிறார்.

ஆண்டவரை பெருமைப் படுத்தலும், அவரது பெயரை பெருமைப் படுத்தலும் (גַּדְּלוּ לַיהוָה கத்லூ லஅதோனாய்- ஆண்டவரை உயர்த்தல்: נְרוֹמְמָה שְׁמוֹ நெரோம்மாஹ் ஷெமோ- அவர் பெயரை உயர்த்துங்கள்), ஒத்த கருத்து வினைகளாக பார்க்கப்படுகிறது.

வ.4: தான் ஆண்டவரை துணைவேண்டி மன்றாடியதாகவும், அவர் மறுமொழி பகர்ந்ததாகவும், எல்லாவகையான அச்சத்திலிருந்தும் தன்னை விடுவித்ததாகவும் சொல்கிறார்.

ஆண்டவர் ஒருவருக்கு மறுமொழி கொடு;த்தல் மற்றும் அனைத்து விதமான அச்சங்களிலிருந்தும் விடுவித்தல் என்ற உணர்வுகள் ஆழமான நம்பிக்கையின் வரிகள். இதனை உரைக்கின்றவர், நிச்சயமாக ஆண்டவரைப் பற்றி பல ஆழமான அனுபவங்களைக் கொண்டவராக இருக்க வேண்டும். இந்த வரியும், தாவீதுதான் இந்த பாடலை எழுதினார் என்பதற்கு இன்னொரு சான்றாக இருக்கிறது. כָּל־מְגוּרוֹתַי கோல்-மெகூரோதாய்- என்னுடைய எல்லாவகையான அச்சங்கள்.

வ.5: ஆண்டவரை நோக்கி பார்த்தோரை இந்த வரி எழுவாய்ப் பொருளாக எடுக்கிறது. ஆண்டவரை மனித பண்புகளோடு வர்ணிப்பது திருப்பாடல்களின் தனித்துவம். ஆண்டவரின் முகம் என்பது அவரது பிரசன்னத்தைக் குறிக்கலாம். ஆண்டவரை பார்த்தல் என்பது அவரது பிரசன்னத்தை உணர்தல் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும்.

மக்கள் மகிழ்ச்சியால் மிளிர்தல் என்பது, அவர்களுடைய உள்ளத்தின் நிறைவைக் காட்டுகின்றது. அவர்களின் முகம் அவமானத்தை சந்திக்கவில்லை என்பது, அவர்கள் தோல்வியை சந்திக்கவில்லை என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.

வ.6: ஆசிரியர் தன்னை 'இந்த ஏழை அழைத்தான்' என்கிறார் (זֶה עָנִי קָרָא ட்செஹ் 'ஆனி காரா'). இவருடைய கூவி அழைத்தலுக்கு, மன்றாட்டு என்ற அர்த்தமும் கொடுக்கப்படலாம். ஆசிரியர் மிகவும் தாழ்ச்சியுடையவராக இருந்திருக்க வேண்டும், இதனால்தான் தன்னை ஏழை என்கிறார். செவிசாய்த்தலும், அனைத்து நெருக்கடிகளில் நின்று விடுவித்தலும், ஒத்த கருத்துச் செயற்பாடுகள். மீண்டும் மீண்டும் ஆண்டவரின் செவிசாய்த்தல் என்ற அர்த்தம் இந்த வரிகளில் வருவதைக் காணலாம்.

வ.7: ஆண்டவரின் தூதர், ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை காத்திடுவார் என்று உறுதிப்படுத்துகிறார். ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோர் என்போர், ஆண்டவரில் மிக நம்பிக்கை உள்ளோரைக் குறிக்கும். ஆண்டவருக்கு அச்சம் என்பது பயத்தை குறிக்காது. ஆண்டவரின் தூதர் ஒருவரைக் காத்தல் என்பதன் மூலம், அந்த நபர் ஆண்டவருக்கு அருகில் இருக்கிறார் என்பது சொல்லப்படுகிறது. מַלְאַךְ־יְהוָ֓ה סָ֘בִ֤יב לִֽירֵאָ֗יו மல்'அக்-அதோனாய் சாவிவ் லிரெ'ஆவ்- ஆண்டவரின் தூதர் அவருக்கஞ்சுவோரை சுழ்ந்திடுவார்.

வ.8: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப்பார்க்கச் சொல்கிறார். இந்த வரி நற்கருணை ஆண்டவரோடு தொடர்பு படுத்தப்படுகிறது. இந்த வரி திருப்பாடல்கள் புத்தகத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வரிகளில் ஒன்று. טַעֲמוּ וּרְאוּ כִּי־טוֹב יְהוָה த'அமூ வுரெ'ஊ கி-தோவ் அதோனாய்- சுவையுங்கள் பாருங்கள், ஆண்டவர் நல்லவர் என்று.

சுவை என்பது முதல் ஏற்பாட்டில் அனுபவமாகத்தான் இருக்கவேண்டும். இவர்கள் நற்கருணை கொண்டாடத்தில் பங்கெடுக்கவில்லை. அக்காலத்தில் நற்கருணை கொண்டாட்டமும் இருந்திருக்கவில்லை. ஆண்டவரை சுவைத்தலை அவரிடம் அடைக்கலம் புகுதல் என்ற ஒத்த கருத்துச் சொல்லில் இன்னொருமுறை வார்த்தைப் படுத்துகிறார் (יֶחֱסֶה־בּֽוֹ யெஹெசெஹ்-போ அவரில் அடைக்கலம் புகுவோர்).

வ.9: ஆண்டவருக்கு அஞ்சுவோரை ஆண்டவரின் தூயவர் என்கிறார் தாவீது. ஆண்டவருக்கு அஞ்சுதல் அதாவது அவரில் நம்பிக்கை கொள்ளல் என்பது தூய்மையான மக்களின் வாழ்வைக் குறிக்கிறது. இவர்களுக்கு எக்குறையும் இருக்காது என்கிறார். இந்த குறைகள் எவை என அவர் சொல்லவில்லை.

தாவீது பலவிதமான குறைகளை அனுபவித்தவர், அவர் ஆழமான நம்பிக்கையை கொண்டிருந்தபடியால், அக்குறைகள் அவரை தாக்கவில்லை. அனைத்து குறைகளையும் அவர் தாண்டி வந்திருக்கிறார். அந்த அனுபவம்தான் இங்கே சொல்லப்படுகிறது. קְדֹשָׁיו கெதோஷாவ்- அவர் தூயவர்கள்.

வ.10: அருட் தந்தை பெக்மான்ஸ் (இந்தியா தமிழ்நாடு) இந்த வரிகளைக் கொண்டு அழகான பாடல் வரியை உருவாக்கியுள்ளார்.

சிங்கக்குட்டிகள் உணவின்றி பசியாய் இருக்காது என்பது ஆசிரியரின் நம்பிக்கை போல. சிங்கம் மிகவும் பலமான வேட்டை மிருகம். அதனை நாம் வனத்து அரசன் என்கின்றோம். இதற்கு பல புராண கதைகள் சார்பாக உள்ளன. இஸ்ராயேல் நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிங்கங்கள் அழிந்துவிட்டன. இருப்பினும் இவர்களுக்கு ஆபிரிக்காவில் வாழ்ந்த சிங்கங்களை பற்றி அதிகமாக தெரிந்திருக்க வேண்டும், அத்தோடு சிங்கம் வல்லமையின் அடையாளமாகவும் இருந்திருக்கிறது. இதனால்தான் சிங்கக் குட்டிகள் பசியால் வாடாது என நம்பியிருக்கிறார் என எடுக்கலாம். தற்போதைய ஆய்வுகளின் படி சிங்கங்கள் உண்மையாக பலமான வேட்டை மிருகங்கள் கிடையாது, சிங்கத்தைவிடவும் பலமான வேட்டை மிருகங்கள் நிலத்திலும் நீரிலும் உள்ளன. அத்தோடு சிங்கங்கள் அதிகமான நேரத்தை தூக்கத்திற்கே செலவழிக்கின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சிங்கம் காட்டு அரசன் என்பது ஒரு கதைதான் என்பதும் உண்மை. இவை ஆசிரியின் எழுவாய்ப் பொருள் அல்ல.

அவருக்கு தெரிந்த சிங்கம் பலமான மிருகம். இப்படி பலமான மிருகத்தின் குட்டிகளே பசியால் வருந்தினாலும், ஆண்டவரை நாடுவோருக்கு என்றுமே குறைவிராது என்கிறார். ஆக ஆண்டவரை நாடுவோர், சிங்கத்தை விட பலசாலியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள் என்பது காட்டப்படுகிறது. כְּפִירִים கெபிரிம்- குருளைகள்.

வ.11: ஆண்டவருக்கு அஞ்சுதல் என்றால் என்வென்று சொல்லித்தருவதாகச் சொல்கிறார். ஆண்டவருக்கு அஞ்சுதல் என்பது, இஸ்ராயேலர்களின் ஆன்மீகத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. கடவுளுக்கு அஞ்சுதல் என்பது இறைபயத்தை குறிக்காது, அது இறைவனுக்கு மரியாதை கலந்த ஆழமான அன்பு-விசுவாசத்தைக் குறிக்கிறது.

இந்த ஆன்மீகம், தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுகிறது. பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதனை அவர்கள் தங்கள் கலாச்சாராமாகவே பார்த்தார்கள். לְכוּ־בָנִים שִׁמְעוּ־לִי லெகூ வானிம், ஷிம்மூ-லீ - வாருங்கள் பிள்ளைகளே எனக்கு செவிகொடுங்கள். יִֽרְאַת יְהוָ֗ה אֲלַמֶּדְכֶם׃ யிர்'அத் அதோனாய் 'அலாம்மெத்கெம்- கடவுளுக்கு அஞ்சுதலைக் கற்றுத்தருவேன்.

வவ.12-13: வாழ்க்கையில் இன்பம் காண்பது அனைவருடைய விருப்பம், இதனை அதிகமான நாட்கள் வாழ விருப்பம் என்றும் சொல்லலாம். வாழ்வில் இன்பம் காண அதிக காலம் வாழ மனிதர்கள் விரும்புவார்கள், இந்த விருப்பத்தை அக்கால மனிதர்களும் கொண்டிருந்தார்கள் என்பது இந்த வரியிலிருந்து தெளிவாகிறது. מִי־הָאִישׁ הֶחָפֵץ חַיִּ֑ים மி-ஹாயிஷ் ஹெளாபெட்ஸ் ஹய்யிம்- எந்த மனிதருக்கு வாழ்வில் மகிழ்வுகான விரும்பம்.

இதற்கான விடையாக, தீச்சொல்லிலிருந்து நாவைக் காத்திடவும், வஞ்சக மொழியை வாயைவிட்டு விலக்கிவிடுதலையும் காட்டுகிறார். தீச்சொல்லையும், வஞ்சக மொழியையும் ஆசிரியர் ஒத்த கருத்து சொற்களாக பாவிக்கின்றார். (שׁוֹנְךָ מֵרָע ஷோனெகா மெரா'- தீமையிலிருந்து நாவு). நாவும் அதனைச் சார்ந்த தீமையான வார்த்தைப் பிரயோகங்களும்தான் அனைத்து நிம்மதியின்மைகளுக்கும் காரணம் என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன. முதல் ஏற்பாடும், புதிய ஏற்பாடும் நாவை ஆபத்தான உறுப்பாக வர்ணிப்பதைக் காணலாம்.

வ.14: அழகான கட்டளை கொடுக்கப்படுகிறது. வாழ்வின் இன்பம் காண்பதற்கான இன்னொரு வாழ்கைக் கட்டளை, தீமையை விட்டு விலகுதல் என்பதாகும், அத்தோடு நன்மையை செய்தல், நல்வாழ்வை நாடுதல் மற்றும் அதனை அடைவதில் கருத்தாய் இருந்தல் என்பனவும் காட்டப்படுகின்றன. இந்த நான்கு கட்டளைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டிருக்கின்றன. நன்மையை செய்ய ஒருவர் தீமையை விட்டுவிட வேண்டும். நன்மையையும் தீமையையும் ஒருவர் ஒருமித்து செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அவருடைய தீமை மட்டும்தான் நினைவில் கொள்ளப்படும். நன்மை கருத்தில் எடுக்கப்படாது (סוּר מֵרָע וַעֲשֵׂה־טוֹב சூர் மெரா' வ'செஹ்-தோவ்- தீமையை விலத்து, அத்தோடு நன்மையைச் செய்).

சமாதானத்தை தேடுதல் மட்டும் போதாது அதனை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என்கிறார் ஆசிரியர். בַּקֵּשׁ שָׁלוֹם וְרָדְפֵהוּ׃ பகெஷ் ஷாலோம் வெராத்பெ{ஹ- சமாதானத்தை தேடு அத்தோடு அதனை தொடர்ச்சியாக தேடு.

வ.15: ஆண்டவரின் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன எனவும், அவருடைய செவிகள் அவர்களின் மன்றாட்டை கேட்கின்றன எனவும், ஆசிரியர் தன் நம்பிக்கையை அழகான உருவகங்களில் முன்வைக்கிறார்.

இஸ்ராயேலர்களின் நம்பிக்கை, கடவுளை மனிதராகவோ அல்லது உருவகமாகவோ பார்க்கவில்லை. இது கானானிய நம்பிக்கைக்கும் அவர்களுக்கும் இருந்த மிக முக்கியமான வித்தியாசம். இந்த வரிகளில் ஆசிரியர் கடவுளை மனிதராகக் காட்டவில்லை. இங்கே கடவுளின் கண்கள் (עֵינֵי יְהוָה 'எனே அதோனாய்- கடவுளின் கண்கள்) அவருடைய பார்வையையும், அவருடைய செவிகள் (אָזְנָ֗יו 'ஆட்செநாவ்- அவர்காதுகள்) அவருடைய கிரகிக்கும் தன்மையையும் காட்டுகின்றன. கடவுள் நீதிமான்களை பார்க்கிறார், அவர்களது மன்றாட்டை கேட்கிறார் என்ற செய்திதான் இங்கே முக்கியமான செய்தியாகும்.

வ.16: முதல் வரிக்கு எதிராக இந்த வரி வருகின்றது. ஆண்டவர் தீவினை செய்பவர்களை என்ன செய்வார் என்பது சொல்லப்படுகிறது. ஆண்டவரின் முகம் தீமை செய்பவர்களுக்கு எதிராக இருக்கிறது. ஆண்டவரின் முகம் என்பது இங்கே அவருடைய பிரசன்னத்தைக் குறிக்கிறது. தீமை செய்கிறவர்கள் ஆண்டவரின் பிரசன்னத்தைக் கொண்டிருக்க முடியாது என்பது சொல்லப்படுகிறது. இந்த சிந்தனையை எபிரேய வரியின் வார்த்தைகள் சற்று வித்தியாசமாகக் காட்டுகிறது פְּנֵי יְהוָה בְּעֹשֵׂי רָע பெனே அதோனாய் பெ'ஓசே ரா'- ஆண்டவரின் முகத் தீமை செய்வோருக்கு.

இந்த வரி விளக்கம் இல்லாமல் இருப்பதை இந்த வரியின் இரண்டாவது பிரிவு தெளிவு படுத்துகிறது. அதில், அவர் அவர்களின் நினைவை நிலத்தில் இருந்து வெட்டிவிடுவார் என்று காட்டுகிறது (לְהַכְרִית מֵאֶרֶץ זִכְרָֽם׃ லெஹகெரித் மெ'எரெட்ஸ் ட்சிக்ராம்- நிலத்திலிருந்து அவர்கள் நினைவை வெட்டிவிட).

வவ.17-20: இந்த வரிகளும் நீதிமான்களுடைய தகமைகளையும் அவர்களுக்கு கடவுள் செய்யும் நன்மைத்தனங்களையும் விளக்க முயல்கின்றன.

நீதிமான்கள் மன்றாடும் போது ஆண்டவர் செவிசாய்கின்றார், அவர்களை அனைத்து இடுக்கண்களிலிருந்தும் விடுவிக்கின்றார். இந்த செய்தி மூலமாக, நீதிமான்களும் மன்றாடவேண்டியவர்களே, அத்தோடு அவர்கள் இடுக்கண்களையும் சந்திக்கிறவர்களே. ஆனால் அவர்களுடைய முடிவு வித்தியாசமாக இருக்கும் என்பதே செய்தி (எபிரேய விவிலியத்தில் நீதிமான்கள் என்ற எழுவாய் மறைந்துள்ளது, சூழலியலில் இது நீதிமான்களைக் குறிக்கிறது צָעֲקוּ וַיהוָה שָׁמֵעַ ட்சா'அகூ வாயாதோனாய் ஷாமெ'அ- அவர்கள் கூக்கிரடுவர் ஆண்டவர் செவிசாய்ப்பார்).

உடைந்த உள்ளத்தாரையும் (נִשְׁבְּרֵי־לֵב நிஷ்வெரே-லெவ்- உடைந்த இதயம்) நைந்த நெஞ்சத்தாரையும் (אֶת־דַּכְּאֵי־רוּחַ 'எத்-தக்'எ-ரூஹா- நொருங்கிய ஆவி) ஒத்த வார்த்தையால் ஒற்றுமைப் படுத்தி பார்கிறார் ஆசிரியர்.

நேர்மையாளருக்கு தீமைகள் பல உண்டாகும் என்பதை ஆசிரியர் ஏற்றுக்கொள்கிறார். தீமைகள் பலவா அல்லது சிலவா என்பதல்ல, மாறாக அப்படியான வேளைகளில் கடவுள் அருகில் இருக்கிறாரா என்பதில்தான் அனைத்தும் இருக்கிறது. ஆசிரியரின் கருத்துப்படி நேர்மையாளர்களின் அனைத்து தீமைகளிலிருந்தும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கிறார் (יַצִּילֶנּוּ יְהוָה யாட்சிலெனூ அதோனாய்- ஆண்டவர் அவர்களை மீட்கிறார்).

எலும்புகள் மனிதருடைய பலத்தின் அடையாளமாக இருக்கின்றன. எலும்புகளில் உயிர் அணுக்கள் இருந்ததாகவும் நம்பப்பட்டது. இஸ்ராயேல் மக்கள் எலும்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இறந்வர்களின் எலும்புகளை சேமித்துவைப்பதையும் ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். யோசேப்பின் எலும்புகள் எகிப்பதிலிருந்து கானானிற்கு கொண்டுவரப்பட்டது நினைவுகூறப்பட வேண்டும். இந்த வரி யோவான் நற்செய்தியில் இறந்த இயேசுவின் எலும்புகள் உடைபடாததை நினைவு படுத்துகிறது. அதாவது நீதிமான்கள் துன்பப்பட்டாலும் அவர்களின் எலும்புகள் பாதுகாக்கப்படுகின்றன (காண்க யோவான் 19,31-37) עַצְמוֹתָיו 'ஆட்செமோதாய்வ்- அவர் எலும்புகள்.

வவ.20-21: தீயோரை கடவுள் சாகடிக்க வேண்டிய தேவையில்லை. அவர்கள் தங்கள் தீவினையின் செயல்களாலேயே சாகிறார்கள். அவர்கள் தண்டனை பெறுவதற்கான காரணம், அவர்கள் நல்லோரை வெறுப்பதாகும் என்கிறார் ஆசிரியர். ஆக நேர்மையாளர்களை வெறுத்தல் தீவினைக்கான காரணமாக அமைகிறது. (תְּמוֹתֵת רָשָׁע רָעָה தெமோதெத் ராஷா' ரா'ஆஹ்- தீமை தீயவனைக் கொல்கிறது)

இது தீயவர்களின் நிலையாக இருக்க, நல்லோர் ஆண்டவரினால் காக்கப்படுகிறார்கள். நல்லவர்கள் ஆண்டவரின் ஊழியர்கள் என அடையாளப் படுத்தப்படுகிறார்கள் (יְהוָה נֶפֶשׁ עֲבָדָיו அதோனாய் நெபெஷ் 'அவாதாவ்ய்). ஆண்டவரிடம் அடைக்கலம் புகுகிறவர்கள் தண்டனை அடையாமல் தப்புகிறார்கள். இங்கனம் அடைக்கலம் புகுகிறவர்கள் (הַחֹסִים ஹஹோசிம்), ஆண்டவரின் மக்களாக மாறுகிறார்கள்.



இரண்டாம் வாசகம்
இரண்டாம் வாசகம்

2கொரிந் 5,17-21:

17எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! 18இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். 19உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். 20எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். 21நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.


கொரிந்தியருக்கான இரண்டாம் திருமுகம், அந்த திருச்சபையிலே முளைத்த சில சிக்கல்களை கையாள, பவுலடிகளார் இதனை எழுதினார் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் பவுல் ஐந்து மடல்களை இந்த திருச்சபைக்கு எழுதினார் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொய்த் திருத்தூதர்களின் வருகையும் கொரிந்திய திருச்சபையின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தது. இந்த கடிதத்தின் ஒன்று தொடக்கம் ஏழு வரையான அதிகாரங்கள் இப்படியான பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்பதனை விளக்கி, மக்களை இயேசுவில் மையப்படுத்த கேட்கிறது. இன்றைய வாசகம் 'ஒப்புரவாக்கும் பணி' என்ற எண்ணக்கருவை தாங்கி வருகிறது.

வவ. 17: புதிதாய் படைக்கப்படுதல் மற்றும் பழையன கழிதல் போன்றவற்றை தனது சொந்த அனுபவத்தில் இருந்து எடுக்கிறார் இயேசு. அதாவது இயேசுவை அறிதலும் அவரை ஏற்றுக் கொள்ளலுமே இந்த புதுமைக்கான காரணம் என்பது அவர் வாதம். பவுல் ஆண்டவருடைய வருகை- அவருடைய பாஸ்கா மறைபொருள் போன்றவை காரணமாக ஏற்கனவே முழு உலகும் புதுப்பிக்கப்பட்டுவிட்டது என்கிறார்.

வவ. 18: இங்கே முக்கியமான சில சிந்தனைகளை முன்வைக்கிறார்.

அ. இது புதுப்பித்தல் கடவுளின் செயல்:

ஆ. கடவுள் கிறிஸ்து வாயிலாக நம்மை தன்னோடு ஒப்புரவாக்கினார்:

இ. இப்போது அந்த ஒப்புரவுப் பணி நமக்கும் தரப்பட்டுள்ளது.

ஒப்புரவு என்பது கிரேக்கத்தில் ஒரு வணிகச் சொல் καταλλαγή கடால்லாகெ, இது பண்டமாற்றைக் குறிக்கும். இதனை பவுல் கிறிஸ்துவின் மரணம் எமது பாவத்திற்காக பரிகாரம் செய்துள்ளது என்கிறார். இந்த நற்செய்தியை அதாவது இந்த ஒப்புரவு செய்தியை பெற்றவர்கள் அதனை மற்றவரோடு பகிரவேண்டும் என்கிறார்.

வவ. 19. கடவுள் மனித பாவங்களை பாராமல், இந்த ஒப்புரவுச் செய்தியை நம்மிடம் முதலில் ஒப்படைத்தார் என்கிறார். யார் இந்த 'நாம்' என்பது விளங்கவில்லை, திருத்தூதர்களாக இருக்கலாம் அல்லது அனைத்து கிறிஸ்தவர்களாகவும் இருக்கலாம்.

வவ. 20: இங்கே செய்தி தெளிவாக விளங்குகிறது. பவுல் திருத்தாதர்களை, தூதர்கள் என்கிறார். இதற்கு அரசஅதிகாரி என்ற சொல் பாவிக்கப்பட்டு;ள்ளது இது ஒரு முதல் குடிமகனையோ அல்லது முதிர்ச்சி உள்ளவரையோ குறிக்கும் (πρεσβεία பிரஸ்பெய்யா).

வவ. 21: ஏற்புடைமையாகுதல், (δικαιοσύνη திகையோசுனே) பவுலுடைய இறையியலில் மிகவும் முக்கியமான கரு. முதல் ஏற்பாட்டு நீதிமான்கள் என்பவர்களும் இந்த வாழ்வையுடையவர்களே. ஏற்புடைமையாகுதல் கடவுள் நமக்கு இயேசுவால் தரும் கொடை மட்டுமே அதனை யாரும் வாங்க முடியாது என்பதும் பவுலுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. கடவுள் கிறிஸ்துவை பாவ நிலை ஏற்கச்செய்தார் என்பதைவிட, பாவத்திற்கு பரிகாரமாக்கினார் என்றே கொள்ள வேண்டும். நற்செய்தி


நற்செய்தி வாசகம்
லூக் 15,1-3.11-32:

1வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். 2பரிசேயரும், மறைநூல் அறிஞரும், 'இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே' என்று முணுமுணுத்தனர். 3அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: 11மேலும் இயேசு கூறியது: 'ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். 12அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, 'அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். 13சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். 14அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; 15எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். 16அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. 17அவர் அறிவு தெளிந்தவராய், 'என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! 18நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக்கொண்டார். 20உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். 21மகனோ அவரிடம், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார். 22தந்தை தம் பணியாளரை நோக்கி, 'முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; 23கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். 24ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள். 25'அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, 'இதெல்லாம் என்ன?' என்று வினவினார். 27அதற்கு ஊழியர் அவரிடம், 'உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றார். 28அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். 29அதற்கு அவர் தந்தையிடம், 'பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. 30ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார். 31அதற்குத் தந்தை, 'மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. 32இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.'

மான்பு மிகு வைத்தியர் லூக்காவின் நற்செய்தி வாசிக்க வாசிக்க, தித்திக்க வைக்கும். இந்த உவமைகளை உற்று நோக்குகின்ற போது லூக்கா முதல் ஏற்பாட்டு சிந்தனைகளை அதிகமாக கையாள்வதைப் போல உள்ளது. இங்கே வருகின்ற கடவுள் முதல் ஏற்பாட்டில் தன்னை பல வேளைகளில் வெளிப்படுத்திய இரக்கதத்தின் தந்தையாக வருகிறார். இந்த 15வது அதிகாரம், காணமல் போன ஆடு, திராக்மா, மகன் போன்ற அழகான உவமைகளைத் தாங்கி வருகிறது. இதனை புறக்கணிக்கப்பட்டவரின் நற்செய்தி என்றும், இரக்கத்தில் ஊதாரித் தந்தையின் நற்செய்தி என்றும் வர்ணிக்கின்றனர். இன்றைய வாசகத்திலே வரும் உவமையில் மூன்று பாத்திரங்களை அவதானிக்கலாம். தந்தை, முதல் மகன், இரண்டாவது மகன். லூக்கா, ஒப்பிட்டு பின்னர் செய்தியை விவரிப்பதில் வல்லவர். இயேசு நிச்சயமாக இந்த உவமையை மக்களின் வாழ்வியலிருந்தே எடுத்திருப்பார். இஸ்ராயேல் சமுதாயம் தந்தை சமூதாயமாக இருந்தபடியால், இங்கே தந்தையும் மகன்களுமே பார்வைக்கு வருகின்றனர். இந்த உவமையில் தாயும் மகள்களும் மையப் படுத்தப்படவில்லை. இயேசு நமக்கு கடவுள் என்ற படியால், இந்த உவமை அவருடைய சொந்த அனுபவம் எனக் கொள்ளலாம். வவ. 1-3: இவை 15ம் அதிகாரத்திற்கு முன்னுரை. வரிதண்டுவோர் (οἱ τελῶναι ஹொய் தெலோனாய்), மற்றும் பாவிகள் (οἱ ἁμαρτωλοὶ ஹொய் ஹமார்டோலொய்), இயேசுவிடம் வர: பரிசேயரும் (οἱ Φαρισαῖοι ஹொய் பாரிசாய்யொய்), மறைநூல் வல்லுனர்களும் (οἱ γραμματεῖς ஹொய் கிராம்மாடெய்ஸ்) முணுமுணுக்கின்றனர். இவர்களை லூக்கா வழமைபோல ஒப்பிடுகிறார்.

வவ. 11-13: இந்த இரண்டு-மகன்கள் (δύο υἱούς. துவோ ஹுய்யொய்ஸ்) என்பது விவிலியத்தில் பல வேளைகளில் வருகிறது. காயின்-ஆபேல், இஸ்மாயில்-ஈசாக்கு. எசா-யாக்கோபு, மூத்த சகோதரர்கள்-யோசேப்பு: ஏன் கடவுள் இரண்டாவது மகன்களை தெரிவு செய்கிறார்? தெரிவு செய்பவர் எப்போதும் கடவுளே. தந்தையின் மரணத்திற்கு முன் மகன் சொத்தை கேட்பது இஸ்ராயேல் வழக்கமல்ல (காண்க சீராக் 33,22-21: இராபினிக்க தத்துவங்களும் தந்தையின் உரிமையினையே முதலில் பாதுகாக்கின்றன). அத்தோடு இணைச் சட்டப்படி மூத்த மகன் இரண்டு பங்குகள் பெற வேண்டும் (காண்க இ.ச 21,17). இங்கே அனைத்து சட்டங்களும் விலக்கப்படுகிறது. தந்தையின் சொத்துக்களை விற்பதும் அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் நிகழ்வல்ல, இயேசு புதுமைகளை உள்வாங்குகிறார். தாறுமாறாக வாழ்தல், அசிங்கமான வாழ்வைக் குறிக்கும்.

தொலைநாட்டிற்கும் பயணமாதலும், அங்கு தாறுமாறாக வாழ்தலும் இந்த இளைய மகன் பிழையான வாழ்கையொன்றை முன்னெடுக்கிறார் என்பது காட்சிப்படுத்தப்படுகிறது. வவ. 14-16: எந்த நாடு என்று கூறப்படவில்லை, தொலை நாடு என்பது அவர் தந்தையை விட்டு தொலை தூரம் போனார் என்பதைக் குறிக்கலாம். பஞ்சம், வறுமை, இளைய மகனுடைய ஆபத்தை உணர்த்துகிறது. தந்தையை விட்டு போய் இப்போது அந்நியரிடம் அடைக்கலம் தேடுகிறார். மகனாக இருந்தவர் இப்போது வேலையாளாக மாறுகிறார். பன்றிகளை இஸ்ராயேலர் வெறுக்கின்ற போது, முதலாளியான இவர் பன்றிகளை மேய்கிறார். (காண்க லேவியர் 11,7: இணைச் சட்டம்14,8). இவருக்கு பன்றிகளின் உணவு கூட இல்லை என்பது இவரின் உச்சகட்ட இல்லாமையை காட்டுகிறது. χοῖρος கொய்ரொஸ்- பன்றி.

வவ. 17-19: இவரின் அறிவு தெளிவு விவரிக்கப்படுகறிது. 'அவர் தனக்குள்' வந்தார் என்று மூல பாடம் வாசிக்கிறது. பாவ பரிகாரம் செய்கிறார். பல செயற்பாடுகளை லூக்கா முன்வைக்கிறார்.

அ. தவறை உணர்தல். (εἰς ἑαυτὸν δὲ ἐλθὼν தன்னுடைய சிந்தனைக்கு மீண்டார்)

ஆ. புறப்பட்டு போதல், (ἀναστὰς ἦλθεν அனாஸ்டாஸ் ஏல்தென்)

இ. பாவத்தை தந்தையிடம் அறிக்கையிடல்.

இங்கே அவர் தனக்குள்ளே பேசிக்கொள்கிறார். லூக்கா நற்செய்தியில் பலர் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர் (காண்க 12,17-18). எமது ஒப்புரவு திருவருட்சாதனத்திற்கு இதனை அடிப்படையாகக் கொள்ளலாம்.

வவ. 20-24: மகனின் வருகையும் தந்தையின் செயல்பாடுகளும் உடனுக்குடன் நடைபெறுகின்றன. தந்தையின் செயல்பாடுகளான: தொலைவில் காணல், பரிவு கொள்ளல், ஓடிப்போதல், கட்டித்தழுவுதல், முத்தமிடல், இவை இயேசுவின் இறை செய்தியை ஆழமாக வாசகர்களுக்கு உணர்த்துகின்றது. முதல் ஏற்பாட்டில் அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்த இந்த செயற்பாடுகள் பாவிக்கப்பட்டன. ஈசா யாக்கோபுக்கு, தாவீது அப்சலோமிற்கு இதனையே செய்தார்கள். மகன் பாவமன்னிப்பு செய்வதில் கருத்தாய் இருந்தார், அதுவும் இங்கே நோக்கப்பட வேண்டும். தந்தை அதனை கேட்பதில் ஈடுபாடு காட்டவில்லை, அவர் மகனையே பார்கிறார், பாவத்தை அல்ல. தந்தை பணியாளருக்கு பல கட்டளைகளை போடுகிறார். ஆடை, மோதிரம், மிதியடி இவை ஒருவரின் மாண்பினைக் குறிப்பவை. மகன் மாண்பினை மீண்டும் பொறுகிறார். கொழுத்த கன்றினை அக்கால மக்கள் விருந்துக்கு மட்டுமே செலவிட்டனர். மகன் வருகை விருந்தாகிறது. விருந்திற்கான காரணம்: இறந்திருந்தான்-உயிர் பெற்றான், காணாமல் போயிருந்தான்-கிடைத்துள்ளான். லூக்கா இங்கே அனைவரும் விருந்து கொண்டாடுவதை காட்டுகிறார்.

வவ. 25-28அ: இப்போது காட்சி மாறுகிறது. கதையின் அடுத்த முக்கிய பாத்திரத்தை உள் எடு;க்கிறார் லூக்காவின் இயேசு. மூத்த மகன் இங்கு இயேசுவின் போதனைகளை கேட்காதவர்களையே குறிக்கிறது, வயலிலிருந்து வருகிறார் என்பதன் மூலம் இவர் வீட்டை விட தொழிலையே அதிகம் காதலிக்கிறார் என்று சொல்லலாம். மூத்த மகனுடைய கோபத்திற்கு என்ன காரணம்? தம்பியின் வருகையா அல்லது அவர்மேல் உள்ள தந்தையின் பாசமா? லூக்கா, இளைய மகன் தன்னிலை உணர்ந்து தனக்குள் வந்தார் என்றும், இவர் தன்னிலை உணராமல் வெளியிலே நிற்கிறார் என்றும் காட்டுகிறார்.

வவ. 28ஆ-30: தந்தை சிறிய மகனை வரவேற்பது போல பெரிய மகனிடமும் அவரே வருகிறார், உள்ளே வரும் படி கெஞ்சிக்கேட்கிறார், என்கிறார் இயேசு. இளைய மகன் கூற வந்தததைப் போல இவரும் தனது வாதத்தை முன்வைக்கிறார். தம்பியைப் போல் அல்லாது, கட்டளை வாக்கியத்தில் தந்தையுடன் பேசுகிறார். இளைய மகனின் பாவ அறிக்கையை கேட்காத தந்தை இங்கே இவரின் நியாய வாதங்களைக் கேட்கிறார். அவரின் வாதம்: அடிமைபோல் வேலை செய்கிறேன், கட்டளைகளை மீறியதில்லை, ஓர் ஆட்டுக்குட்டியைக் கூட தந்ததில்லை, இவனுக்காக கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! இங்கே சுய நியாயமே மேல் நிற்கிறது.

வவ. 30-: தந்தையின் காரணங்கள் தரப்படுகின்றன: 'என்னுடன் இருக்கிறாய், என்னுடையது உன்னுடையதே'. உம்முடைய மகன் என்று சொன்ன மூத்தவருக்கு உன்னுடைய சகோதரன் என்று நினைவூட்டுகிறார் லூக்காவின் தந்தை. ஏற்கனவே வேலையாட்களுக்கு சொன்ன காரணத்தையே மூத்த மகனுக்கும் சொல்கிறார் (வ.24). இறந்து போயிருந்தான்-உயிர் பெற்றுள்ளான், காணாமற்போயிருந்தான்-கிடைத்துள்ளான். முதல் ஏற்பாட்டில் விருந்து மகிழ்வைக் குறிக்கும். இயேசுவும் பல வேளைகளில் விருந்துக்கு செல்வதை நற்செய்திகளில் பார்க்கலாம். லூக்கா, முணுமுணுத்த பரிசேயர் - மறைநூல் வல்லுனர்களை மூத்தவராகவும், பாவிகளை இளையவராகவும், இயேசுவை தந்தையாகவும் வர்ணிக்கிறார்.

ஆண்டவருக்கு தேவை கீழ்படிவும் மனந்திருந்தலுமே,

பாவத்ததைப் போல சுய நியாயப்படுத்தலும் நிவர்த்தி செய்யப்பட வேண்டியவையே.

பாவிகள் இந்த உலகில் மீட்கப்படுவார்கள்,

தாங்கள் பாவிகள் எனபதை ஏற்றுக்கொண்டால்.

நீதிமான்கள் என்று தங்களைத் தாங்களே

பெருமைப்படுத்துகிறவர்கள், கடவுளையும் அண்ட

விடமாட்டார்கள்.

சுயநியாயப்படுத்தல் ஒரு வருத்தம் என்பதை

அவதானிக்க கற்றுத்தாரும் ஆண்டவரே, ஆமென்.