இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






திருவருகைக்காலம் இரண்டாம் வாரம் (இ)A Commentary on the Sunday Readings

முதல் வாசகம்: பாரூக்கு 5,1-9
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 126
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 1,4-11
நற்செய்தி: லூக்கா 3,1-6


திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு 'எதிர்நோக்கு' என்ற கருப்பொருளில் அடையாளப்படுத்தப்படுகிறது. எதிர்நோக்கு மிக முக்கியமான இரண்டு பண்புகளை விவிலியத்தில் காட்டுகிறது. திக்வாஹ் (תִּקְוָה) என்று எபிரேயத்தில் அறியப்படும் இந்த சொல் காத்திருத்தலைக் காட்டுகிறது. இதே அர்த்தத்தை கிரேக்கச் சொல் எல்பிஸ் (ἐλπίς) என்ற சொல்லும் கொடுக்கிறது. இந்த விவிலிய சொற்கள் கடவுளுடைய நம்பிக்கையையும், முறிவுபடாத அன்பையும் காட்டுகின்றன. இறுதியாக இந்த சொற்கள் மெசியாவிற்காக காத்திருத்தலை குறிக்க பயன்படத் தொடங்கிவிட்டன. கிறிஸ்தவர்களுக்கு இந்த சொல் மெசியாவின் இரண்டாம் வருகையை குறிக்க பயன்படுகிறது.

முதல் வாசகம்
பாரூக்கு 5,1-9

1எருசலேமே, உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்துவிடு; கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் ஆடையாக அணிந்துகொள். 2கடவுளிடமிருந்து வரும் நீதியை ஆடையாய்ப் புனைந்து கொள்; என்றுமுள்ளவரின் மாட்சியை மணிமுடியாக உன் தலைமீது சூடிக்கொள். 3கடவுள் வானத்தின்கீழ் உள்ள எல்லா நாடுகளுக்கும் உன் பேரொளியைக் காட்டுவார். 4'நீதியில் ஊன்றிய அமைதி', 'இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி' என்னும் பெயர்களால் கடவுள் உன்னை என்றென்றும் அழைப்பார். 5எருசலேமே, எழுந்திரு; உயர்ந்த இடத்தில் எழுந்து நில். கீழ்த்திசையை நோக்கு கீழ்த்திசைமுதல் மேற்றிசை வரை உள்ள எல்லா நாடுகளிலிருந்தும் உன் மக்கள் தூயவரின் சொல்லால் ஒன்று சேர்க்கப்பட்டு, கடவுள் தங்களை நினைவு கூர்ந்ததற்காக மகிழ்வதைப் பார். 6பகைவர்கள் கடத்திச் சென்ற உன் மக்கள் உன்னைவிட்டுப் பிரிந்து சென்ற பொழுது நடந்து சென்றார்கள்; ஆனால் கடவுள் அவர்களை உன்னிடம் திரும்ப அழைத்துவரும் பொழுது அரியணையில் வீற்றிருக்கும் மன்னர்போல் உயர்மிகு மாட்சியுடன் அழைத்துவரப்படுவார்கள். 7கடவுளின் மாட்சியில் இஸ்ரயேல் பாதுகாப்புடன் நடந்துவரும் பொருட்டு, உயர் மலைகள் என்றென்றும் உள்ள குன்றுகள் எல்லாம் தாழவும் பள்ளத்தாக்குகள் நிரம்பவும் இவ்வாறு நிலம் முழுதும் சமமாகவும் கடவுள் கட்டளையிட்டுள்ளார். 8மேலும், காடுகளும் நறுமணம் வீசும் மரங்கள் அனைத்தும் கடவுளின் கட்டளையால் இஸ்ரயேலுக்கு நிழல் கொடுத்தன. 9கடவுள் தம் மாட்சியின் ஒளியில் மகிழ்ச்சியோடும், தம்மிடமிருந்து வெளிப்படும் இரக்கத்தோடும் நீதியோடும் இஸ்ரயேலை அழைத்து வருவார்.

பாரூக்கு புத்தகம் ஆறு அதிகாரங்களைக் கொண்ட ஒரு இணைத்திருமுறை நூல். இது கிரேக்க மொழியில் எழுதப்பட்டதாலும், செப்துவாஜின்து புத்தகத்தில் மட்டுமே காணப்பட்டதாலும், எபிரேயரும், சீர்திருத்தவாத கிறிஸ்தவர்களும் இந்த புத்தகத்தை ஏற்றுக்கொள்ளுவது கிடையாது. பாரூக்கு என்ற இறைவாக்கினரை இவர்கள் மறுக்கவில்லை என்பது இங்கே நோக்கப்பட வேண்டும். பாரூக்கு எரேமியா இறைவாக்கினருடைய உதவியாளராக செயற்பட்டிருக்கிறார். இவரைப் பற்றிய தரவுகள் எரேமியா புத்தகத்தில் காணக்கிடக்கின்றன (காண்க எரே 32:36:43:45). பாரூக்கு புத்தகம் முதலில் எபிரேய மொழியில்தான் எழுதப்பட்டது என்ற புராதன நம்பிக்கை ஒன்றும் உள்ளது. பாரூக்கு புத்தகத்தில் பல இலக்கிய வகைகள் காணக்கிடக்கின்றன. சில பகுதிகள் வரலாறாகவும், சில பகுதிகள் கவிதையாகவும், இன்னும் சில பகுதிகள் உரைநடையாகவும் இருக்கின்றன. இப்படியாக நான்கு பெரிய பகுதிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். பிற்காலத்தில் இந்த நான்கு பகுதிகளையும், ஒரு ஆசிரியர் தொகுத்திருக்க வேண்டும்.

பாரூக்கு குறிப்பிட்ட இஸ்ராயேலர்களை மட்டும் அழைக்காமல் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுகிறார். அந்த அழைப்பில், இஸ்ராயேலின் அழிவிற்கு மக்களின் பாவம்தான் காரணம் எனவும், அனைவருக்கும் பாவத்தை விட்டு விலகவேண்டிய தேவையுள்ளதையும் காட்டுகிறார். கிரேக்க கலாச்சாரத்தின் ஆட்கொள்கை இந்த புத்தகத்தில் இருப்பதை ஆய்வாளர்கள் இலகுவாக அiடாயளம் கண்டுகொள்கின்றனர்.

இந்த புத்தகம் காலத்தால் மிகவும் பிந்தியது, பபிலோனிய வாழ்க்கையைப் பற்றி இந்த புத்தகம் பேசினாலும், இது உண்மையில் கிரேக்க காலத்திலேயே எழுதப்பட்டது என்பது மிக முக்கியமான வாதம். ஆக, இது கி.பி 135ம் ஆண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

எருசலேமை மையப்படுத்தும் இந்த புத்தகம் எருசலேமிலேயே எழுதப்பட்டிருக்கலாம். செபத்தினதும், வேண்டுதல்களினதும் நோக்கமாக எருசலேமின் புதுப்பிப்பு பார்க்கப்படுகிறது. ஆசிரியருக்கு எருசலேம் தேவாலய வழிபாடுகள் மற்றும் சடங்குகள் நன்கு தெரிந்திருக்கிறது. இதனால் ஆசிரியர், ஒரு சட்ட வல்லுனர், அல்லது குருவாக இருந்திருக்க வேண்டும். தோறா, இணைச் சட்ட படிப்பினைகள், இஸ்ராயேலின் ஞான பாரம்பரியம் போன்றவை இந்த நூலின் முக்கிய போதனைகளாகின்றன.

துன்பமும் வெறுமையும் நம்பிக்கையின்மையும் நிறைந்த எருசலேமிற்கு, பாரூக்கினுடைய ஐந்தாம் அதிகாரம் நம்பிக்கை ஒளியை வீசுகின்றது. அகதியாக போன எருசலேம் மகள், அரசியாக முடியுடனும் ஆடம்பர உடைகளுடனும் வருவாள் என்பது எத்துணை அழகு!, தியாகம் நிறைந்த கார்த்திகை-மார்கழி மாதங்களில், ஈழத் தமிழருக்கு இது சாலப் பொருந்தும். மாட்சி, ஒளி, நீதி, மகிழ்ச்சி, இரக்கம் எம்மட்களுக்கு இன்றைய அவசர தேவை. ஆனால் அதை தருபவர் மனிதரல்ல கடவுள் என்கிறார் பாரூக்கு. அகதியாய் இருக்கும் நாமும் இந்த நம்பிக்கையைக் கொண்டு முன்னேறுவோம்.

வ.1: எருசலேமிற்கு கட்டளைகள் கொடுக்கப்படுகின்றன. துன்பத்தின் ஆடைகளை கழைந்துவிட்டு (ἔκδυσαιஇ எக்துசாய்- எடுத்துவிடு), மாட்சியின் பேரழகை (ἔνδυσαι என்துசாய்- அணி) அணியச் சொல்கிறார் ஆசிரியர். துன்பம் (πένθος பென்தொஸ்) காலத்திற்கு உட்பட்டது. ஆனால், கடவுளின் பரிசான மாட்சி (δόξα தொக்ஸ்சா) காலத்திற்கு அப்பாற்பட்டது. ஆடைகள், மணிமுடிகளை அலங்காரமாக்கி எருசலேமை ஒரு பெண்ணாக அழகு பார்க்கிறார் ஆசிரியர்.

ஆ. ஷகடவுளிடமிருந்து வரும் நீதியை ஆடையாய்..| ஷகடவுளுடைய நீதியான ஆடையை..| (τῆς παρὰ τοῦ θεοῦ δικαιοσύνης டேஸ் பாரா டூ தியூ திகாய்சுனேஸ்)?:

இங்கு நீதியா, அல்லது ஆடையா என்று நோக்குமிடத்து, மொழி பெயர்ப்பில் இரண்டாம் மற்றும் ஆறாம் வேற்றுமை உருபுகளிக்கிடையில் ஒரு மயக்கம் உள்ளதை அவதானிக்கலாம். ஷகடவுளுடைய நீதியான ஆடையை அணிந்துகொள்| என்பது நேரடி மொழிபெயர்ப்பாக அமையலாம் (6ம் வேற்றுமை). முதலாவது வசனம், ஷஆடையை| எழுவாய்-வேற்றுமையாய் கொண்டிருப்பதால் இரண்டாவது வசனமும், ஆடையையே மையப்படுத்துகிறது என எண்ணுகிறேன்.

(பி.கு. இரண்டாம் வேற்றுமையுருபு - - Accusative Case, ஆறாம் வேற்றுமையுருபு - Genitive Case). என்றென்றும், என்றென்றுமுள்ளவர்: (αἰώνιος அய்யோனியோஸ்): இந்த பதத்தை மீண்டும் மீண்டும் வரவழைத்து, ஆசிரியர், கடவுளைப்போல அவர் ஆசீர்வாதங்களும் காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டது. என்றுமுள்ளது எனும் இறையியல் வாதத்தை உறுதிப்படுத்துகிறார்.

வவ.3-4: கடவுள் வானத்தின் கீழ் உள்ள எல்லா நாடுகளுக்கும், எருசலேமின் பேரொளியைக் காட்டுவார் எனச் சொல்லப்படுகிறது. அதாவது மாட்சியிழந்துள்ள எருசலேம், ஆண்டவருடைய இரக்கப் பார்வையால் இழந்த மாட்சியும் மீளக் கிடைக்கும் என்கிறார் (σὴν λαμπρότητα. சேன் லம்புரொடேடா).

எருசலேமிற்கு புதிய பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. மிகவும் அழகான வார்த்தைகளால் இந்த பெயர்கள் அமைக்கப்படுகின்றன: நீதியின் ஊன்றிய அமைதி - Εἰρήνη δικαιοσύνης எய்ரேனே திகாய்யுசுனேஸ்- நீதியின் அமைதி. δόξα θεοσεβείας தெக்ட்சா தியொசெபெய்யாஸ்- இறைநம்பிக்கையின் மாட்சி.

வ.5: எழு, நில், நோக்கு, பார்: எதை?

இந்த ஏவல் வினைச்சொற்கள், அருகில் உள்ள எதிர்காலத்தைக் குறிக்கின்றன. அதாவது ஆண்டவரின் ஆசீர்வாதங்கள் நிச்சயமானவை என உறுதிப்படுத்துகிறார் ஆசிரியர். கடவுளைக் குறிக்க 'தூயவர்' என்ற சொல் பாவிக்கப்படுகிறது (ἅγιος ஹகியொஸ்).

வ.6. நடந்து சென்றார்கள், அழைத்து வரப்படுவார்கள்:

தண்டித்தவர்கள் மனிதர்கள் ஆனால் ஆறுதல்படுத்துபவர் கடவுள் எனும் உண்மை இவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது.

அடிமைகள் போல கடத்திச் செல்லப்பட்டவர்கள், கால்நடையாக கொண்டு செல்லப்பட்டவர்கள், அரியணையில் உள்ள அரசர்கள் போல் உயர் மாட்சியுடன் அழைத்து வரப்படுவார்கள் (μετὰ δόξης ὡς θρόνον βασιλείας. மெடா தொக்சேஸ் ஹோஸ் துரோனொன் பசிலெய்யாஸ்). இந்த வரிகள் மிகவும் ஆறுதல் அளிப்பதாக அமைகிறது.

வ.7. மலைகளுக்கு, குன்றுகளுக்கு, பள்ளத்தாக்குகளுக்கு ஆண்டவரின் கட்டளையிடுகிறார். இவற்றை சமப்படுத்தும் செயல் பாதைகளைச் செம்மைப்படுத்தலுக்கு சமமாகும், அதாவது சமமான பதைகளில் பயணம் இலகுவாகவும் வேகமாகவும் அமையும், எம்முடைய 'விரைவு வீதிகளைப்போல'. ஷஉம் வார்த்தை என் கால்களுக்கு விளக்கு, என் பாதைக்கு வெளிச்சம்| எனும் திருப்பாடல் நினைவிற்கு வருகிறது (தி.பா 119,105).

மலைகளை, குன்றுகளை, பள்ளத்தாக்குகளை, சமவெளியாக்குதல் அக்காலத்தில் கடவுளால் மட்டுமே செய்யக்கூடி செயலாக பார்கக்ப்பட்டிருக்கும்.

வ.8. தம் மாட்சியின் ஒளியில், மகிழ்ச்சியோடும், தம்மிடமிருந்து வரும் இரக்கத்தோடும் நீதியோடும்..:

இந்த அழகான வரி, ஆண்டவரின் ஆசிர்வாதத்தின் தன்மையைப் படம்பிடிக்கிறது. மாட்சி, ஒளி, மகிழ்ச்சி, இரக்கம், நீதி, இவைகள் கடவுளிடமிருந்து வருகின்ற, விலைக்கு வாங்க முடியாத கொடைகள்.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 126

விடுதலைக்காக மன்றாடல்

(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

1சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.

2அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது; ‟ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

3ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.

4ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.

5கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.

6விதை எடுத்துச் செல்லும்போது – செல்லும்போது – அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது – வரும்போது – அக்களிப்போடு வருவார்கள்.



இது ஒருவகை சீயோன் மலைப்பாடல். שִׁ֗יר הַֽמַּעֲלוֹת ஷிர் ஹம்மா'லோத். ஐந்தாவது புத்தகத்தை சார்ந்த இப்பாடலை அதிகமானவர்க்ள் ஒரு குழு புலம்பல் பாடலாக காண்கின்றனர். ஆறு வரிகளை மட்டும் கொண்டுள்ள இப்பாடலை, அதன் அர்த்தத்தை மையமாகக் கொண்டு இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். எதிர்கால வளமையை மீளாக்குதல் என்பதே இப்பாடலின் மைய பொருளாக வருகிறது. (வவ.1-3, வவ.4-6)

வ.1: உயர ஏறுதலின் பாடல் என்று தொடங்குகிறது. சீயோனின் வளமையை ஆண்டவர் திரும்பி கொணர்ந்தபோது கனவு போலிருந்தது என்பது எந்த நிகழ்வை குறிக்கிறது என்பதில் தெளிவின்மை இருக்கிறது. கி.மு 701ல் சென்னாகெரிபின் முற்றுகையின் போது ஆண்டவர் எருசலேமை அற்புதமாக காத்த நிகழ்வை குறிக்கிறது என்பர் சிலர் (காண்க எசாயா 37,36-37). ஆனால் இது ஒரு விவசாய பாடல் போல தோன்றுகிற படியால், இது காலத்தை கடந்தது என்றும் சொல்லலாம். திருப்பாடல்களுக்கு காலத்தைக் கணிப்பது மிகவும் கடினம். כְּחֹלְמִים கெஹோல்மிம்- கனவைப்போல.

வ.2: 'அப்போது அவர் எங்கள் வாய்களையும், நாக்குகளையும் சிரிப்பால் நிறைத்தார்' என்றே இரண்டாவது வரியின் அ பிரிவை, நேரடி மொழிபெயர்க்க வேண்டும். פִּינוּ וּלְשׁוֹנֵנוּ பினூ வுலெசோனெனூ- எமது வாய்களும் மற்றும் எனம் நாவுகளும்.

பிற இனத்தார் என்பது இங்கு பிற நாட்டவர்களை அதாவது இஸ்ராயேலரின் கடவுளை வணங்காதவர்களை குறிக்கிறது. இவர்கள் இஸ்ராயேலைப் பற்றியும் அவர்களது கடவுளைப் பற்றியும் பெருமையாக பேசுவது அதிசயமாகும் (גּוֹיִ֑ם கோயிம்- வேறுநாட்டவர்).

வ.3: மக்களின் மகிழ்ச்சிக்கு காரணம் ஆண்டவரின் மாபெரும் செயல்கள் என்பது சொல்லப்படுகிறது. ஆண்டவரின் மாபெரும் செயல்கள் என்பது மக்களின் துன்பத்தை துடைக்கும் செயலாக மாறுகிறது. הִגְדִּיל יְהוָה ஹிக்தில் அதோனாய்- மாபெரும் செயல்புரிந்தார் ஆண்டவர். ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்தார் என்பது அடிக்கடி விவிலியத்தில் ஆண்டவரின் பெருமையைப் பாடும் ஒரு வரி வடிவம்.

வ.4: இது இரண்டாவது பிரிவின் தொடக்கத்தில் முதலாவது வசனத்தில் வந்த அதே 'வளமையை ஆண்டவரே திருப்பி கொண்டுவாரும்' என்று பொருளில் அமைந்துள்ளது. தென்நாடு என்பது நெகேபுவைக் குறிக்கும். பாலைவனத்தில் ஆறுகள் கிடையாது, ஆனால் ஓடைகள் எனப்படும், மழைக்கால ஆறுகளை, மக்கள் கடவுளின் அதிசய கொடையாகக் கண்டனர். மழையைத் தருபவரும் கடவுள் என்றபடியால் அது அவரின் ஆசீர்வாதமாகக் கருதப்பட்டது. ஆசிரியர் இந்த ஓடைகளை தங்களது வாழ்வுக்கு ஒப்பிடுகிறார். இந்த இரண்டாவது பிரிவில் இரண்டு விடயங்கள் சொல்லப்பட்டுள்ளது. אֲפִיקִ֥ים 'அபிகிம்- வரண்ட ஓடைகள்.

வ.5). கண்ணீரில் விதைப்பு - மகிழ்சியில் அறுவடை:

கண்ணீர் துன்பத்தின் அடையாளம், அது அறுவடையோடு மாற்றம் பெறுகிறது. துன்பத்திற்கு பின்னால் மகிழ்ச்சி நிச்சயமாக வரும் என்ற நம்பிக்கையை இது கொடுக்கிறது. מֶשֶׁךְ־הַזָּרע மெஷெக்- ஹட்ஸரா'- விதை நெல் பை. இந்த விதை நெற்பை என்ற சொல் இந்த இடத்திலும் யோபு 28,18 மட்டுமே காணப்படுகிறது. அரிதான சொற்களில் இதுவும் ஒன்று.

வ.6). புலம்பலோடு விதை விதைப்பு - மகிழ்ச்சியில் கதிர் சேகரிப்பு.

விசுவாச வாழ்வு, விவசாயிகளின் அனுபவத்தோடு ஒத்திருப்பதை அழகாகச் சொல்லுகிறார் இந்த அறியப்படாத ஆசிரியர். אֲלֻמֹּתָי 'அலுமோதாவ்- கதிர், இந்தச் சொல்லும் இந்த இடத்திலும் தொடக்கநூல் 37,7 மட்டுமே காணப்படுகிறது.

பல துன்பங்களைச் சந்தித்த மக்களுக்கு இந்த வரிகள் நிச்சயமாக நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கு என்ற பண்புகளை இந்த வரிகள் ஆழமாக காட்டுகின்ற படியால் இதனை நம்பிக்கை பாடல் என்றும் சொல்லாம்.



இரண்டாம் வாசகம்
பிலிப்பியர் 1,4-11

4உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன்றாடிவருகிறேன். 5ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள். 6உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன்.

8கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன் என்பதற்குக் கடவுளே சாட்சி. 9மேலும், நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, 10அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன். 11கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன்.



பிலிப்பி ஒரு முக்கியமான உரோமை நகர், வெளிநாட்டிலிருந்த ‘குட்டி உரோமை’ எனவும் அழைக்கப்பட்டது. பவுலடிகளாரின் போதனைகளைப் பெற்ற முதலாவது ஐரோப்பிய நகரமான இங்கு அமைக்கப்பட்ட திருச்சைபை அவருடைய இதயத்துக்கு மிக அருகிலிருந்தது. கிறிஸ்துவிற்கு முன் 6ம் நூற்றாண்டுகளில் இந்த இடத்தில் உரோமைய-கிரேக்க குடியேற்றம் தொடங்கியிருக்க வேண்டும். இந்த இடத்திற்கு அருகாமையில் அதிகமான பொன் தாதுப் பொருளும், நீருற்றுக்களும் இருந்ததால் இந்த இடம் பிரசித்தி பெற்ற இடமாக மாறியது. பேரிய அலெக்சாந்தருடைய தகப்பன் அரசர் இரண்டாம் மசிதோனிய பிலிப்பு இந்த இடத்தை உருவாக்கினார். அவருடைய பெயராலேயே இந்த இடம் அழைக்கப்பட்டது. கிரேக்கருக்கு பின்னர் உரோமையரும் இந்த இடத்தை மீள கட்டி உருவாக்கியிருக்க வேண்டும்.

உரோமையருடைய அனைத்து நகர நிர்வாக அமைப்புக்களும், இந்த இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உரோமையருக்கு பின்னர் பல கிறிஸ்தவ நகர் அமைப்புக்கள் அந்த இடத்தில் தோன்றின என்பதும் இன்று கண்டுபிடிக்கப்படுகின்றன.

உரோமையர்கள் பல போர்களை பிலிப்பியில் செய்திருக்கிறார்கள். யூலியஸ் சீசரை கொலை செய்த பிரிவினரோடு மார்க் அன்டனி இந்த இடத்தில் போர் செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார். பிலிப்பியில்தான் மக்கள் மன்றம் சார்ந்த உரோமை குடியரசு, சீசரை சார்ந்த உரோமை பேரரசாக மாறியும் இருக்கிறது. புரூட்டஸ் இந்த இடத்தில்தான் தற்கொலை செய்து கொண்டார், பிற்காலத்தில் இந்த இடத்தில்தான் அன்டனியின் படைகளும் தோற்றுப் போனது. அகுஸ்து தன்னை சீசராக பிரகடனப்படுத்தி, பிலிப்பியை ஒரு உரோமை காலனியாக மாற்றினார். இத்தாலியிலிருந்து விரட்டப்பட்ட அரசியல் கைதிகளை இங்கே கொண்டுவந்து குடியேற்றினார். உரோமைய குடிமக்களுக்கு பல விசேட சலுகைகள் பிலிப்பியில் வழங்கப்பட்டன.

பவுல் தன்னுடைய காட்சியின் படி ஆசியாவை விட்டு பிலிப்பியில் நற்செய்தி அறிவித்தார் (காண்க தி.பணி 16,9). கி.பி 50 களில் லூக்காவும், சீலாவும் இங்கு பணியாற்றி கிறிஸ்தவ மறையை பலப்படுத்தினர். இதுதான் ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட முதலாவது தளச் திருச்சபை. பவுல் தன்னுடைய இரண்டாவது மற்றும் மூன்றாவது திருத்தூது பயணங்களில் இந்த திருச்சபையை தரிசித்திருக்கிறார். இங்கு காணப்பட்ட பன்முகப்பட்ட இன மத தன்மை பவுலை வெகுவாக கவர்ந்தது. உரோமைய ஆதிக்கம், கர்வம் மற்றும் சிவில் சமுக முறைமையை பவுல் தன்னுடைய நற்செய்தி பணிக்கு பயன்படுத்திக்கொண்டார். உரோமையர்கள் தங்கள் குடியுரிமையைப் பற்றி பெருமை பாராட்டுவதை உதாரணமாகக் கொண்டு, கிறிஸ்தவர்கள் தங்கள் கிறிஸ்தவ குடியுரிமையை பயன்படுத்த வேண்டும் என்கிறார்.

இன்றைய வாசகத்திலிருந்து சில செய்திகள்:

வவ.1-3: இந்த பகுதி பிலிப்பிய திருமுகத்தின் வாழ்வையும் முன்னுரையையும் உள்ளடக்கியிருக்கிறது.

பிலிப்பி நகர மக்களை கிறிஸ்துவோடு இணைந்து வாழ்கின்றவர்கள் என்கிறார். πᾶσιν τοῖς ἁγίοις ἐν Χριστῷ Ἰησοῦ பாசின் டொய்ஸ் ஹகியொய்ஸ் என் கிறிஸ்டோ ஈசூ- இயேசுவில் இணைந்துள்ள புனிதர்களுக்கு. இந்த திருச்சபையில் இறைமக்கள், சபைக் கண்காணிப்பாளர்கள் (ἐπισκόποις எபிஸ்கொபொய்ஸ்), திருத்தொண்டர்கள் (διακόνοις தியாகொனொய்ஸ்) போன்றவர்கள் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

தன்னை கிறிஸ்துவின் பணியாளர் எனவும், தன்னோடு திமோத்தேயுவையும் இணைத்துக்கொள்கிறார். தந்தையாம் கடவுளிடமிருந்து ஆண்டவராம் இயேசுவிடமிருந்தும் அருளும் அமைதியும் இரஞ்சப்படுகிறது. கடவுளை தந்தை என்பதும் (θεοῦ πατρὸς தியூ பட்ரொஸ்), கிறிஸ்துவை ஆண்டவர் (κυρίου Ἰησοῦ Χριστοῦ கூரியூ ஈசூ கிறிஸ்டூ) என்பதும் ஆரம்ப கால திருச்சபையிலே வேத சத்தியமாக இருந்திருக்கிறது.

பிலிப்பியர்களை நினைவுகூரும் பொழுதெல்லாம் தான் தன் கடவுளுக்கு நன்றி செலுத்துவதாகச் சொல்கிறார் (Εὐχαριστῶ τῷ θεῷ எவ்கரிஸ்டோ டோ தியூ).

வ.4: பிலிப்பியர்களை எப்போதும் நினைத்து மகிழ்ச்சியோடு மன்றாடிவருகின்றதாக சொல்கிறார். மகிழ்ச்சியோடு மன்றாடுதல் என்பது, பிலிப்பியர் திருமுகத்தில் மட்டுமே உள்ள வெகுவான சிறப்பியல்பு μετὰ χαρᾶς (மெடா காரிஸ்).

வ.5: பிலிப்பியர்கள் நற்செய்தி பணியில் பவுலோடு பல காலமாக பங்காற்றுகிறவர்களாக புகழாரம் சூட்டப்படுகின்றார்கள்.

பிலிப்பி திருச்சபையோடு பவுலுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை இந்த வரி அடையாளம் காட்டுகிறது.

வ.6: இந்த நற்செயல் ஆண்டவரால் தொடங்கப்பட்டது, அத்தோடு இந்த செயல் கிறிஸ்துவின் நாள் வரை தொடரப்போகிறது. அந்த நாளில் இது நிறைவுபெறப்போகிறது என்பதும் சொல்லப்படுகிறது. ἄχρι ἡμέρας Χριστοῦ Ἰησοῦ அர்கி ஹெமெராஸ் கிறிஸ்டூ ஈசூ- இயேசு கிறிஸ்துவின் நாள் வரை.

இயேசு கிறிஸ்துவின் நாள் என்பது, ஆண்டவருடைய இரண்டாம் வருகையை குறிக்கும் நாளாக இருந்திருக்கலாம்.

வ.7: பிலிப்பியர்கள் பவுலுடைய இதயத்திற்கு நெருக்கமானவர்கள் என்பது தெளிவாக இந்த வரியில் காட்டப்படுகிறது.

பிலிப்பியர்கள் பல தேவைகளுக்காக பவுலுக்கு உதவிசெய்தவர்கள். இவர்களின் நன்மைத்தனங்களைப் பற்றி பவுல் பலருக்கும் எழுதியிருக்கிறார். με ἐν τῇ καρδίᾳ ὑμᾶς மெ என் டே கார்தியா ஹுமாஸ்- நீங்கள் என் இதயத்தில். பிலிப்பியர்கள் அனைவரும் தனக்கு நெருக்கமானவர்கள் என்று அங்கு தனக்கு ஒருசிலர் மட்டுமே இருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை.

இந்த கடிதத்தை எழுதியபோது அவர் சிறையிலிருந்தார் என்பது இந்த வரியில் தெளிவாகிறது. தான் தற்காலத்தில் சிறையிலிருந்ததாகவும், அதற்கு முன், நற்செய்தி பணியில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. பவுல் தான் பெற்ற அனைத்து அருளிலும் பிலிப்பியருக்கு பங்குள்ளது என்பதை தெளிவு படுத்துகிறார்.

வ.8: பவுல் தனக்கு, கிறிஸ்துவிற்கும் திருச்சபைக்கும் பெரிய வித்தியாசம் இல்லாமல், ஒரே அன்பை காட்டுவதாகச் சொல்கிறார். கிறிஸ்து இயேசுவோடு கொண்டுள்ள அதே பரிவுள்ளம், பிலிப்பிய திருச்சபைமீதும் உள்ளது என்பதைக் கடவுளே அறிவார் என்று சொல்கிறார். ὑμᾶς ἐν σπλάγχνοις Χριστοῦ Ἰησοῦ. ஹுமாஸ் என் ஸ்பிலாக்நொய்ஸ் கிறிஸ்டூ ஈசூ- உங்களுக்கு கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள இரக்கம்.

வவ.9-10: தன்னுடைய செபத்தை அவர் தெளிவுபடுத்துகிறார். பிலிப்பியர்கள் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும், அறிவிலும் வளர செபிக்கிறார்.

அறிவும், அனைத்தையும் உய்த்துணரும் பண்பும் மக்களுக்கு மிக முக்கியமானவை. இதனைக்கொண்டே நல்ல சமூகம் உருவாகிறது என்பதில் பவுல் கவனமாக இருக்கிறார். அன்பால் நிறைந்து சிறந்தவற்றையே ஏற்றுச் செல்லுமாறு இறைவனை வேண்டுகிறார். சிறந்தவற்றை ஏற்றுச் செல்ல அன்பால் நிறையவேண்டியதாயுள்ளது என்பது இங்கே காட்டப்படுகிறது.

வ.11: நீதியானதும் குற்றமற்றதுமான வாழ்வு கடவுளின் மகிமைக்காகவே அமைய வேண்டும் என்று செபத்ததை முடிக்கிறார். நம்முடைய தூய வாழ்வு நம் சுயநலத்தை விட்டு இயேசுவை மையப்படுத்த வேண்டும் என்பதை தனது அன்பு மக்களுக்கும் நமக்கும் செல்லமாக சொல்கிறார் பவுல்.

கடவுளின் மாட்சியும் புகழ்ச்சியுமே இங்கு எழுவாய் பொருட்களாகின்றன. δόξαν ⸄καὶ ἔπαινον θεοῦ தொக்சான் காய் எபாய்னொன் தியூன்- கடவுளின் மாட்சியும் புகழ்ச்சியும்.


நற்செய்தி வாசகம்
லூக்கா 3,1-6

1திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். 2அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார். 3'பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்' என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார். 4இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: 'பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; 'ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; 5பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்றுயாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும் ;கரடு முரடானவை சமதளமாக்கப்படும். 6மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்'.'

நற்செய்தியாளர் புனித லூக்கா, ஓர் அறிமுகம்:

இந்த வருடம் லூக்காவின் நற்செய்தி வருடம். ஒவ்வொரு நற்செய்தியாளரும் தனித்துவமானவர்கள், லூக்காவும் மிகவே தனித்துவமானவர். லூக்கா மாற்கு நற்செய்தியிலிருந்து முக்கியமான தரவுகளபை; பெற்றிருந்தாலும், தனக்கே உரிய மிக இரகசியமான மூலத்திலிருந்து பல தரவுகளை நமக்கு தருகிறார். பவுல் கூறுவதைப்போல லூக்கா, மாண்புமிகு அன்பான வைத்தியர். இவருடைய இயேசு அனுபவம் மிக அழகானதும் ஆழமானதுமாகும். நுற்செய்தியைவிட லூக்கா திருத்தூதர் பணிகள் என்ற இன்னொரு புத்தகத்தையும் செய்திருக்கிறார். இயேசு வரலாற்று நாயகன், அவரைப்பற்றி செய்திகள் அனைத்தும் வரலாற்றில் நடந்த உண்மைச் செய்திகள், ஆகவே அவைகளை அனைவரும் நம்ப வேண்டும், நம்பி வாழவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். லூக்காவின் நற்செய்தி நான்கு முக்கியமான பண்புகளைத் தாங்கியுள்ளது:

அ. அழகான இலக்கிய வகைகளை கையாண்டு லூக்கா தரவுகளை தருகிறார்.

ஆ. தான் ஒரு வரலாற்று ஆசிரியர் என்பதில் எப்போதுமே லூக்கா தெளிவாகவும், கவனமாகவும் இருப்பார்.

இ. தன்னுடைய வரலாற்று கதைகளில் அவர் இறையியல் பின்ணணிகளை இணைத்துவிடுவார்.

ஈ. லூக்காவின் நற்செய்தி மேய்ப்புப் பணியையும், அனைத்து மக்களையும் உள்ளவாங்குவதாகவே இருக்கும்.

லூக்காவுடைய இறையியல் சிந்தனைகள் (6):

லூக்கா வரலாற்றிலே இயேசுவைக் காண்கிறார். மற்றைய நற்செய்திகளைப் போலல்லாது, இங்கே இயேசுவின் சுயசரிதை சாயல் காண்படுகிறது, அதேவேளை கிறிஸ்தவர்களுடைய நம்பிக்கைக்கு எது தேவையாக இருக்கிறதோ அதனை மட்டுமே அவர் உள்வாங்கியிருக்கிறார். முதல் ஏற்பாட்டு காலத்திற்கும், அங்கு வாழ்ந்த இஸ்ராயேல் மக்களுக்கும், இயேசுவிற்கும் தொடர்பை காட்டும் லூக்கா, பின்னர் இயேசுவிற்கும் திருச்சபைக்குமான தொடர்பை காட்டுகிறார். அனைத்தும் ஒரே வரலாறு, அதனை தீர்மானிப்பவர் கடவுள் என்பதில் அவர் மிகவும் கரிசனையாக இருப்பார். கடவுளுடைய வரலாறு இயேசுவில் தங்கியிருக்கிறது எனவும், இயேசுதான் இந்த வரலாற்றின் தொடக்கமும் முடிவும் என்பதும் அவர் கண்டுபிடிப்பு. திருச்சபை என்பது இயேசுவின் தொடர்ச்சி என்பதிலும் அவர் மிகுந்த நம்பிக்கையுடையவர். ஆரம்ப கால திருச்சபை இந்த வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை பெறுவதால் அதனைப் பற்றி அனைவரும் அறிய வேண்டும் என்பதால்தான், முதல் திருச்சபையை பற்றி அதிகமாக எழுத முனைகிறார் எனலாம். (அடுத்த வாரம் தொடரும்...)

இன்றைய நற்செய்திப் பகுதி இயேசு ஆண்டவருடையதும் திருமுழுக்கு யோவான் உடையதும் பிறப்பின் பின்னால் நடந்தவற்றையும், ஆண்டவருடைய திரு முழுக்கிற்கு முன்னர் நடந்தவற்றையும் காட்டுகின்றது.

உயர்ந்தவர் ஒருவரை மையப்படுத்த இன்னொருவரை ஒப்பிட்டு பார்க்கும் முறையை தன் இலக்கிய நடையாக கையாள்வார் லூக்கா நற்செய்தியாளர். இது ஒரு முக்கியமான கிரேக்க இலக்கிய வடிவம், இதனை அறிஞர்கள் சின்கிரேசிஸ் (Syncresis) என அடையாளப்படுத்துகிறார்கள். இயேசுவின் பிறப்பு அறிவிப்பு, பிறப்பு, பணி இந்த மூன்றையும் மையப்படுத்தவும், திருமுழுக்கு யோவான் மெசியா அல்ல என ஆணித்தரமாக காட்டவும், திரு முழுக்கு யோவானுடைய வரலாறு லூக்காவுக்கு மிகவும் தேவையாக இருக்கிறது.

வவ.1-2: திபேரியசு (Τιβέριος), பிலாத்து (Πόντιος Πιλᾶτος பொன்டியொஸ் பிலாடொஸ்), ஏரோது (Ἡρῴδης ஹேரோதேஸ்), பிலிப்பு (Φιλίππος பிலிப்பொஸ்), லிசானியசு (Λυσανίας லிசானியாஸ்), அன்னா (Ἅννας ஹன்னாஸ்), கயபா (Καϊάφας காய்யாபாஸ்):

இவர்கள் உரோமைய மற்றும் யூத, பேரரசனும், ஆளுநனும், ஆட்சியாளர்களும், தலைமைக்குருக்களுமாவர். இவ்வரலாற்று தலைவர்களை உள்ளே கொண்டுவந்து அதன் வழியாக இயேசு ஆண்டவர் வரலாற்றில், அதுவும் ஒரு குறிப்பிட்ட இடத்தில், காலத்தில், உரோமையாக்களின் அதிகார நேரத்தில், தோன்றிய உண்மை மனிதர் எனவும், அவர் ஒரு வரலாறு கட்டுக்கதையல்ல என்கிறார்.

வரலாற்றை அப்படியே கச்சிதமாக ஆட்கள், இடம், நேரம் போன்றவற்றைக் கொண்டு அறிவிப்பதில் லூக்காவை, மிஞ்ச லூக்காவில்தான் முடியும்.

வ.2ஆ: இந்த காலத்தில்தான் திருமுழுக்கு யோவான் அறிமுகமாகிறார். திருமுழுக்கு யோவானை லூக்கா செக்கரியாவின் மகன் என அறிமுகம் செய்கிறார். இவர் பாலைவனத்தில் வாழ்ந்தவர் எனவும், அத்தோடு கடவுளின் வாக்கை பெற்றவர் என்று மேலதிகமாக தரவுகளையும் தருகிறார். இதன் மூலமாக திருமுழுக்கு யோவான் கிறிஸ்து அல்ல என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன. ἐγένετο ῥῆμα θεοῦ ἐπὶ Ἰωάννην τὸν Ζαχαρίου υἱὸν ἐν τῇ ἐρήμῳ. ஏகெனெடொ ஹேரேமா தியூ எபி ஈயோஅன்னேன் டொன் ட்சக்கரியூ ஹுய்யொன் என் டே எரேமோ- ஆண்டவரின் வார்த்தை பாலைவனத்தில் இருந்து செக்கரியாவின் மகன் யோவானுக்கு வந்தது.

பாலைவனத்தில் கடவுளுடைய வாக்கை பெற்றார்:

பாலைவனத்தில்; கடவுள் வாக்கை பெற வேண்டிய தேவை உண்மை இறைவாக்கினர்களுக்கு இன்றியமையாதது, பல இறைவாக்கினர்கள் ஆபிரகாம் தொடங்கி மோசே வரை பாலை நிலத்தில்தான் பல இறையனுபவங்களைப் பெற்றார்கள். லூக்காவிற்கு திருமுழுக்கு யோவானை புதிய எலியாவாகவும், மெசியாவிற்கு கட்டுப்பட்டவராகவும் காட்டவேண்டிய தேவை இருக்கிறது. பாலைவனத்தின் அமைதியில் பணியாளர்கள் இறைவனின் செய்தியை பெறுவர் என்பதும் ஓர் பழங்கால நம்பிக்கை. (இங்கே குறிப்பிடப்படுகின்ற பாலை நிலத்தை ஈழத்தில் காண முடியாது).

வ.3: திருமுழுக்கு யோவானின் செய்தி அதன் சாரம்சம் சொல்லப்படுகிறது: 'பாவமன்னிப்பு அடைய மனம்மாறி திருமுழுக்கு பெறவேண்டும்' (βάπτισμα μετανοίας εἰς ἄφεσιν ἁμαρτιῶνஇ பப்டிஸ்மா மெடாநொய்யாஸ் எய்ஸ் அபெசின் ஹமார்டியோன்- பாவமன்னிப்பு அடைய திருமுழுக்கு பெறவேண்டும்).

யோர்தான் நதிக்கு அக்கரைப் பகுதிகள் என்பது இப்போதைய யோர்தான் நாட்டைக் குறிக்கும். இந்த பகுதியில்தான் அக்காலத்தில் பல இறைவாக்கினர்கள், இறைமனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இது அமைதியான இடமாகவும், மிகவும் வரண்ட பகுதியாகவும் இருந்தபடியால் இங்கே மனிதர்கள் குறைவாக இருந்தார்கள் அத்தோடு இந்த பகுதியில் உரோமையர்களின் ஆதிக்கமும் மிக குறைவாகவே இருந்தது.

வ.4: எசாயாவின் இறைவாக்கு கோடிடப்படுகிறது: φωνὴ βοῶντος ἐν τῇ ἐρήμῳ· போனே பொஓன்டொஸ் என் டெ எரேமோ. ஷபாலை நிலத்தில் குரலொன்று முழங்குகின்றது| -

விவிலியத்தில் அதிகமாக வாசிக்கப்பட்ட மற்றும் ஆராயப்பட்ட வசனங்களில் இதுவும் ஒன்று. செப்துவாயின்த் மற்றும் எபிரேய விவிலியங்களுக்கிடையில் இரண்டு வேறு பாடங்களை அவதானிக்கலாம்.

செப்துவாயின்த்: ஷபாலை நிலத்திலே குரலொன்று முழங்குகின்றது!

கடவுளுடைய பாதையை ஆயத்தப்படுத்தங்கள்,

எமது கடவுளுடைய வழியை நேராக்குங்கள்..|

(φωνὴ βοῶντος ἐν τῇ ἐρήμῳ,

Ἑτοιμάσατε τὴν ὁδὸν κυρίου,

εὐθείας ποιεῖτε τὰς τρίβους τοῦ θεοῦ ἡμῶν·)

எபிரேய விவிலியம்: ஷகுரலொன்று முழங்குகின்றது!

பாலைநிலத்திலே கடவுளின் பாதையை செம்மை படுத்துங்கள்.

ஷஎமது கடவுளுக்காக வரண்ட நிலத்திலே பெரிய வீதியை நேராக்குங்கள்|

(ק֣וֹל קוֹרֵ֔א

בַּמִּדְבָּ֕ר פַּנּ֖וּ דֶּ֣רֶךְ יְהוָ֑ה

יַשְּׁרוּ֙ בָּעֲרָבָ֔ה

מְסִלָּ֖ה לֵאלֹהֵֽינוּ׃)

(பி. கு. நான் முயற்சிக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு வேறுபடலாம்)

எசாயா (40.3) குறிப்பிடுகின்ற பாலைவன குரலின் அடையாளங்கள் நிச்சயமாக லூக்கா ஒப்பிடுதலை ஒத்ததாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எசாயா குறிப்பிடுகின்ற குரல், அதன் சொந்தக்காரர், பாலை நிலம், செம்மை படுத்தல் போன்றவை யூத மக்களுக்கு ஆழமான கருத்துக்களை கொடுத்தன. பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து மீட்புச்செய்தியையும், மீட்பவரையும் அவை குறிக்கலாம் (சிலர் இவை பாரசீக மன்னன் சைரசை குறிக்கின்றன என்பர்), ஆனால் லூக்கா இன்னும் கொஞ்சம் ஆழமாக சென்று இந்த குரலை யோவானுக்கும், மெசியா என்பது இயேசு ஆணடவரே எனவும் காட்டுகின்றார். எபிரேய விவிலியம் முதலாவது மற்றும் உரிமையான பாடம் என்பதனை இஃது நோக்க வேண்டும். லூக்கா இங்கு செப்துவாயின்த் விவிலியத்தையே ஒப்பிடுகின்றார்.

லூக்கா கிரேக்க மொழி பேசுகிறவராகவும், புறவினத்தவராகவும், அவருடைய காலத்தில் செப்துவாஜின்து பிரபலமாக இருந்தபடியாலும், அதனை பாவித்திருக்கலாம்.

வ.6 அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்: (ஒப்பிடுக எசாயா 52,10) ὄψεται πᾶσα σὰρξ τὸ σωτήριον ⸂τοῦ θεοῦ⸃. ஒபெடாய் பாசா சார்க்ஸ் டொ சோடேரியோன் டூ தியூ.

லூக்கா இங்கு அனைவரும் என்று எல்லா சதைகளையும், (σὰρξ சார்க்ஸ், சதை) அதாவது மக்களையும் குறிப்பிடுகின்றார். எசாயாவும் 52,10 இல் அனைத்து மக்களையும் (כָּל־הַגּוֹיִ֑ם கோல் ஹக்யோம், அனைத்து இனமக்களும்) உள்வாங்கியே குறிப்பிடுகிறார். கடவுள் யாருக்கும் சொந்தமானவர் அல்;ல, அனைவரும் மற்றும் அனைத்தும் கடவுளுக்கே சொந்தம். கடவுளை தமக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்பவர்கள், நிச்சயமாக சரியான பாதையில் இல்லை என்பதை சிறுகுழந்தை கூட அறியும். கடவுளைக் கட்டுபடுத்த விழைகிறவர்கள், அல்லது கடவுளுக்கு தங்கள் அடையாளத்தை கொடுக்க முயல்கிறவர்கள், கடவுள் பெயரால் வன்முறை செய்கிறார்கள், இது கடவுள் பெயரால் செய்யப்படும் துரோகம். இவர்கள் வெறுக்கப்பட வேண்டியவர்கள்.

நம்முடைய கடவுள் என்றில்லை,

கடவுளுக்குத்தான் அனைவரும் சொந்தம்.

மீட்கப்பட்டவர்கள் என்றில்லை,

அனைவரும் மீட்கப்பட வேண்டியவர்கள்.

இயேசுவை மீட்க வேண்டிய தேவையில்லை,

இயேசுதான் நம்மை மீட்க வேண்டும்.

கடவுளின் வருகைக்கு அனைவரும் ஆயத்தப்படுத்துவோம்!

அவர் ஒவ்வொரு நாளும் வருகிறார் என்பதனையும் மறவாதிருப்போம்!

கடவுளை நமக்கு சொந்தமாக்காமல்

நம்மை கடவுளுக்கு சொந்தமாக்குவோம்! ஆமென்.

………………………………………

இலங்கையில் நடக்கும் அரசியல் கோமாளித்தனங்கள் இல்லாமல் போகவும்,

நாடு சமநிலைக்கு திருப்பவும், அர்ப்பணம்!