இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் 33ம் வாரம் (ஆ)

முதல் வாசகம்: தானியேல் 12,1-3
திருப்பாடல்: திருப்பாடல் 15
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 10,11-14.18
நற்செய்தி: மாற்கு 13,24-32


முதல் வாசகம்
தானியேல் 12,1-3

முடிவின் காலம்
1'அக்காலத்தில் உன் இனத்தார்க்குத் தலைமைக் காவலரான மிக்கேல் எழும்புவார். மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும். அக்காலத்தில் உன் இனத்தார் விடுவிக்கப்படுவர். நூலில் யார் யார் பெயர் எழுதப்பட்டுள்ளதோ. அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். 2இறந்துபோய் மண்புழுதியில் உறங்குகிற அனைவருள் பலர் விழித்தெழுவர்; அவருள் சிலர் முடிவில்லா வாழ்வு பெறுவர்; வேறு சிலரோ வெட்கத்திற்கும் முடிவில்லா இழிவுக்கும் உள்ளாவர். 3ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலவும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்தவர் விண்மீன்களைப் போலவும், என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் ஒளிவீசித் திகழ்வர்.


தானியேல் புத்தகம் எபிரேய விவிலியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த எபிரேய தானியேல் புத்தகம், 12அதிகாரங்களைக் கொண்டுள்ளது. இதில் அதிகமான பகுதிகள் எபிரேய மொழியில் எழுதப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்கள் தானியேல் புத்தகத்தை இறைவாக்கு புத்தகமாக கருதினாலும், இலக்கிய வகையில் தானியேல் புத்தகம் வெளிப்படுத்தல் வகையையே சார்ந்திருக்கிறது. இந்த எபிரேய தானியேல் புத்தகத்தை விட, கிரேக்க மொழியில் மட்டும் (செப்துவாஜின்த்) சில பகுதிகள் காணப்படுகின்றன, அவை: அசிரியாவின் மன்றாட்டு, மூவர் பாடல், சூசன்னா மற்றும் பேலும் பறவை நாகமும் போன்ற பகுதிகளாகும். தானியேல் எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்ட இளைஞர், நெபுக்கத்நெசார் இவர்களை தன்னுடைய அரச அவையில் பணிக்கு அமர்த்துகின்றார், பலவிதமான ஆபத்துக்கள் முன்னிருந்தாலும் தானியேல் தன்னுடைய மூதாதையரின் நம்பிக்கைகளுக்கு பிரமானிக்கமாக இருக்கின்றார். முதல் ஏற்பாட்டு யோசேப்பைப் போல் (தொ.நூல் 37-50) இவரும் ஞானத்திலும் அறிவிலும் சிறந்து விளங்குகின்றார். தானியேல் புத்தகத்தில் பல காட்சிகள் காணப்படுகின்றன, அத்தோடு பல வினாக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தின் காலமாக கிரேக்க கலாபனைக் காலத்தை கணிப்பதனால், கிரேக்கருடை மாயக்கவர்ச்சிகளை நம்ப வேண்டாம் என்றும், தங்களுடைய மூதாதையரின் நம்பிக்கைகளுக்கு பிரமாணிக்கமாக இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார் ஆசிரியர்.

தானியேல் புத்தகத்தின் 12வது அதிகாரம், முடிவின் காலத்தை பற்றி விபரிக்கின்றது. தானியேல் புத்தகத்தில் மிக்கேல் சம்மனசானவரைப் பற்றி மூன்று முறை குறிப்பிடப்படுகின்றது.

வ.1: அக்காலம் என்பது இறுதியான காலத்தை குறிக்கும் (וּבָעֵת הַהִיא֩ வுவா'எத் ஹஹி'- அந்த காலத்தில்). மிக்கேல் இஸ்ராயேலரின் தலைமைக்காவலர் என அடையாளப்படுத்தப்படுகிறார் (מִיכָאֵל הַשַּׂר הַגָּד֗וֹל மிகா'ஏல் ஹசார் ஹகாதோல்- தலைமை அதிகாரி மிக்கேல்). மிக்கேல் கடவுளுடைய தலைமைதூதர்களில் முதல்வர் ஒருவர் என அறியப்படுகிறார். விவிலியத்தில் மற்ற வானதூதர்களைப் போலல்லாது, பல புத்கங்களில் இவர் காட்டப்படுகிறார். கடவுளுடைய மக்களுக்காக மோசேயின் உடலைப் பொருத்து, சாத்தானோடு போராடினார் என்று யூதாவின் திருமுகத்தில் காட்டப்படுகிறார் (காண்க யூதா 1,9). திருவெளிப்பாடு புத்தகத்தில், புராதன கால பாம்போடு போராடுபவராகவும் காட்டப்படுகிறார். மிக்கேல் என்கின்ற எபிரேயச் சொல்லிற்கு 'கடவுளைப் போல் யார்?' ஏன்ற அர்த்தம் கொடுக்கப்படுகிறது.

துன்ப காலம் ஒன்று வெகுசீக்கிரத்தில் வருகின்றது என்று ஆசிரியர் இந்த வரியில் காட்டுகின்றார். அந்த துன்ப காலம், உலகம் தோன்றியது முதல் இருந்திராத துன்ப காலம் என்பதும் சொல்லப்படுகிறது. ஆந்த துன்ப காலத்தில் மக்கள் விடுவிக்கப்படுவர் என்பது சொல்லப்படுகிறது (בָעֵת הַהִיא יִמָּלֵט עַמְּךָ֔ வா'எத் ஹஹி யிம்மாலெத் 'அம்மெகா- அக்காலத்தில் உம்மக்கள் விடுவிக்கப்படுவர்).

ஒரு குறிப்பிட்ட நூல் ஒன்று சிந்தனைக்கு எடுக்கப்படுகிறது (סֵּפֶר செபெர்- புத்தகம்). இந்த நூலில் குறிக்கப்பட்டவர்கள் மட்டும் விடுவிக்கப்படுவார்கள் என்பது சொல்லப்படுகிறது. வாழ்வின் புத்தகம் என அறியப்படும் இந்த சிந்தனை காலத்தால் மிகவும் பிந்தியதாக இருக்கவேண்டும். மறுவாழ்வு, தண்டனை, தீர்ப்பு, உயிர்ப்பு போன்றவை கிரேக்க காலத்திற்கு மிகவும் நெருக்கமானவை. இந்த புத்தகம், இங்கே ஆண்டவரின் தீர்ப்பை பற்றிபேசுகிறது. கிரேக்க காலத்திற்கு முன்னமும், இஸ்ராயேலர்கள் வாழ்வின் புத்தகம் என்ற சிந்தனையை கொண்டிருந்தார்கள், இருந்தாலும் அவர்கள் மறுவாழ்வை நம்பினார்களா என்பது தெளிவில்லை. இந்த வாழ்வின் புத்தகத்தில் பெயரிடப்பட்டுள்ளவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள் என்பது இந்த வரியின் அர்த்தம்.

வ.2: இறந்துபோய் மண் புழுதியில் உறங்குகின்ற அனைவருள் பலர் விழித்தெழுவர் என்கிறார் ஆசிரியர். மனிதன் மண் புழுதியினால் உருவானார் என்பது விவிலிய நம்பிக்கை (אַדְמַת־עָפָ֖ר 'அத்மாத்-'ஆபார்- மண்ணின் புழுதி). மண், புழுதி போன்றவை மிகவும் அடிப்படையான பௌதீக மூலக்கூறுகள். இதனைக் கொண்டுதான் கடவுள் மனிதர்களை உருவாக்கினார் என்பது மனிதரின் நிலையாமையைக் காட்டும் அதேவேளை, மனிதர்களுக்கும் இந்த பௌதீகத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்பதும் காட்டப்படுகிறது. புழுதியுள் உறங்கும் மனிதர்கள் இறந்தவர்களைக் குறிக்கலாம், இதில் பலர் விழித்தெழுவர் என்பது மறுவாழ்வு, அல்லது நிலைவாழ்வைக் குறிக்கலாம். சிலர் நிலைவாழ்வையும் பெறுவர் என்பதும் அடுத்த பிரிவில் காட்டப்படுகிறது (אֵלֶּה לְחַיֵּי עוֹלָם 'எல்லேஹ் லெஹாய் 'ஓலாம்- சிலருக்கு நிலைவாழ்வு). அதேவேளை சிலர் தண்டனை;கு உள்ளாவர் என்பதும் காட்டப்படுகிறது. தண்டனையைக் குறிக்க வெட்கம் (חֲרָפוֹת கராபோத்), மற்றும் அவமாணம் (דִרְאוֹן திர்'ஓன்) என்ற சொற்கள் பாவிக்கப்படுகின்றன.

வ.3: ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் இரண்டு அழகான உருவகங்களால் அணிசெய்யப்படுகிறார்கள். ஞானிகள் வானத்தின் போரொளியைப் போல இருப்பார்கள், (מַּשְׂכִּלִים மஸ்கிலிம்-அறிவாளிகள்). புலரை நல்வழிக்கொணர்ந்தவர்கள் விண்மீன்களைப்போல் இருப்பார்கள் (כּוֹכָבִ֖ים கோகாவிம்- விண்மீன்கள்).

இங்கே அறிவாளிகள் நீதிமான்களாகவும், அவர்களுடைய பண்புகள் ஒளிவீசுவனவாகவும் ஒத்த கருத்துப்படுத்தப்படுகின்றன.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 16

பற்றுறுதியும் நம்பிக்கையும்

(தாவீதின் கழுவாய்ப் பாடல்)

1இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

2நான் ஆண்டவரிடம் ‛நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன்.

3பூவுலகில் உள்ள தூயோர் எவ்வளவோ உயர்ந்தோர்! அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம்.

4வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர் தங்கள் துன்பங்களைப் பெருக்கிக்கொள்வர்; அவற்றுக்குச் செலுத்தப்படும் இரத்தப் பலிகளில் நான் கலந்து கொள்ளேன்; அவற்றின் பெயரைக்கூட நாவினால் உச்சரியேன்.

5ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவNர்

6இனிமையான நிலங்கள் எனக்குப் பாகமாகக் கிடைத்தன் உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே.

7எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.

8ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்.

9என் இதயம் அக்களிக்கின்றது என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.

10ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.

11வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.



தாவீதின் பாடல் என அறியப்படும் இந்த 16வது சங்கீதம், ஒரு வேண்டுதல் பாடல் போல காணப்படுகிறது. இதனை தாவீதுதான் எழுதினார் என பாரம்பரியமாக நம்பப்படுகிறது. எந்த சூழ்நிலையில் தாவீது இதனை எழுதினார் என்பது புலப்படவில்லை, ஆனால் சாவின் பயம் ஒன்று இந்த திருப்பாடலின் பின் இருப்பதை காணமுடிகிறது. தூய பேதுருவும், நற்செய்தியாளர் லூக்காவும், இநத பாடலை இயேசுவினுடைய உயிர்ப்போடு ஒப்பிட்டு பார்க்கின்றனர், அவர்களுக்கு தாவீது ஒரு இறைவாக்கினர் மற்றும் இந்த வரிகள் இயேசுவை பற்றிய வரிகள் (ஒப்பிடுக தி.ப 2,25-28). எபிரேய கவிநடையாக திருப்பிக்கூறல் அமைப்பை இந்தப் பாடல் சார்ந்துள்ளது.

வ.1: முதலாவது வரியில் உள்ள முன்னுரையின் ஒரு சொல்லின் அர்த்தம் என்னவென்று புலப்படவில்லை (מִכְתָּם לְדָוִד மிக்தாம் லெதாவித்). இந்த முதலாவது வரியில் இருந்து, தாவீது எதோ ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இந்த பாடலை பாடியிருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது.

வ.2: இந்த வரி தாவீதின் விசுவாச பிரகடனம் போல வருகின்றது. தாவீது கடவுளை தன்னுடைய தலைவராகக் காண்கிறார். இந்த தலைவரை தன்னுடைய ஒரே நன்மைத்தனமாகவும் காண்கிறார் (טוֹבָתִ֗י தோவாதி). இந்த நன்மைத்தனத்தை தமிழ் மற்றும் வேறு விவிலியங்கள், செல்வம் என மொழிபெயர்க்கின்றன. அது தவறில்லை.

வ.3: பூவுலகில் உள்ளோரை 'எவ்வளவு தூயவர்கள்' (לִקְדוֹשִׁים אֲשֶׁר־בָּאָ֣רֶץ லெகெதோஷிம் 'அஷோ-பா'ஆரெட்ஸ்) என்று தாவீது பாடுகிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது. தன்னுடைய துன்பமான வேளையிலும், பூவுலகத்தோரை தூயவர்கள் என்கிறார். அத்தோடு அவர்களோடு இருப்பது தனக்கு பேரின்பம் என்கிறார். யார் இந்த பூவுலகத்தோர் மற்றும் ஏன் இப்படிச் சொல்கிறார் என்பதும் கேள்வியாகவே இருக்கிறது. இது சக இஸ்ராயேல் மக்களைக் குறிக்கலாம். சாதாரணமாக விவிலயம் மண்ணுலகத்தோரை அவ்வளவு தூயவர்கள் எனக் காட்டுவது கிடையாது.

வ.4: வேற்று தெய்வ வழிபாட்டைப் பற்றிச் சொல்லப்படுகிறது. இந்த வரி மிகவும் சிக்கலான வரியாக காணப்படுகிறது. எபிரேய விவிலியத்தில், வேற்று தெய்வம் என்று இந்த வரியில் காணப்படவில்லை, வேறு (אַחֵ֪ר 'அகார்) என்றுதான் காணப்படுகிறது. ஆனால் துன்பங்கள் என்ற சொல்லிற்கும், வேறு தெய்வங்கள் என்ற சொல்லிற்கும் தொடர்பு உள்ளததை ஆய்வாளர்கள் அவதானிக்கின்றனர் (עַצְּבוֹתָם֮ 'அட்செவோதாம்). வேறு தெய்வங்களை தேடிப்போகிறர்வர்கள் தங்கள் துன்பங்களை பெருக்கிக்கொள்கின்றனர் என்ற நம்பிக்கை இங்கே தெரிகிறது. இந்த சொல் வேறு தெய்வங்கள் என்ற சொல்லிலிருந்து மருவி வந்ததொனவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர் (עַצְּבִים 'அட்செவிம்- சிலைகள்). தாவீதினுடைய காலத்தில் சில இஸ்ராயேலர் வேற்று தெய்வ வழிபாடான இரத்த பலியில் கலந்திருக்கிறார்கள் என்பதும் இங்கே புலப்படுகிறது. அத்தோடு இந்த பொய் தெய்வங்களின் பெயர்களும் இவர்களின் நாளாந்த உச்சரிப்பில் இருந்திருக்கிறது என்பதும் புலப்படுகிறது. தாவீது இந்த இரண்டையும் துன்பத்தின் காரணமாக காண்கிற படியால் அவற்றை தான் செய்யேனென்கிறார்.

வ.5: இந்த திருப்பாடலிலே மிகவும் அழகான வரி இதுவாகும். கடவுளை தன் உரிமைச் சொத்தாகவும் (מְנָת־חֶלְקִ֥י மெனாத்-கெலெகி), தன் கிண்ணமாகவும் (כוֹסִי கோசி) காண்கிறார் தாவீது. உரிமைச் சொத்து என்பது உரிமை நிலத்தைக் குறிக்கும், ஆரம்ப கால இஸ்ராயேலருக்கு நிலம் எதிர்கால அடையாளத்தைக் கொடுத்தது. ஆண்டவரே நிலமாக இருப்பது மிகவும் ஆழமான விசுவாச வார்த்தை. இரச கிண்ணம் அக்காலத்தில் வெற்றியின் அடையாளமாக பார்க்கப்பட்டது, ஆக ஆண்டவரே இவருடைய வெற்றியாகவும் வருகிறார். இந்த ஆண்டவர் இவரின் பங்கைக் காக்கிறார் (אַתָּ֗ה תּוֹמִיךְ גּוֹרָלִי 'அதாஹ் தோமிக் கோராலி).

வ.6: இந்த வரியை பலவிதமாக பலர் மொழிபெயர்க்கின்றனர். ஆண்டவரை உரிமைச் சொத்தாகவும், கிண்ணமாகவும் கொண்டிருப்பதால், அவருக்கு கிடைத்துள்ள நிலம் இனிமையானதாகவும், வளமானதாகவும் அமைகிறது (בַּנְּעִמִים ,שָֽׁפְרָה வன்னெ'இமிம், ஷாப்ராஹ் இனிமையான இடங்கள், அழகான இடங்கள்) என்றும் சிலர் மொழிபெயர்ப்பு செய்கின்றனர்.

வ.7: இந்த வரியில் தாவீது, தான் ஆண்டவரை போற்றுவதற்கான (אֲבָרֵךְ 'அவாரெக்- புகழ்கின்றேன்) காரணத்தை விளக்குகிறார். நம்முடைய ஆண்டவர் அந்தரத்தில் இருந்துகொண்டு பேசுகிறவர் இல்லை, அவர் உள்ளுணர்வுகளுடாக பேசுகிறவர், அவர் மனட்சாட்சி மூலமாக பேசுகிறார் என தமிழ் விவிலியம் மொழிபெயர்க்கின்றது. எபிரேய விவிலியம், அவர் சிறுநீரகம் மூலமாக பேசுகிறார் என சொல்லிடுகிறது (כִלְיוֹתָֽי ,כִּלְיָה கிலெதோதாய், கில்யாஹ்- சிறுநீரகம்). சிறுநீரகம்தான் உணர்வுகளின் உறைவிடம் என அக்காலத்தில் நம்பினர், இதனால்தான் ஆண்டவர் இரவில் இந்த உணர்வு உறுப்புக்கள் மூலமாக பேசுகிறார் என நம்புகிறார் ஆசிரியர்.

வவ.8-11: பின்வருகின்ற வசனங்கள் ஆண்டவரின் பெருமைகளை ஒத்த கருத்துச் சொற்களில் அழகாக வர்ணிக்க முயல்கின்றன.

வ.8: கண் முன்னால் இருப்பதையும், வலப்புறத்தையும், ஆசிரியர் ஒத்த கருத்துச் சொற்களாக பாhக்கிறார், ஏனெனில் இரண்டும் மிக முக்கியமான இடங்கள். לְנֶגְדִּי லெகெக்தி- என் முன்னால், מִימִינִ֗י மிமிநி- என் வலதுகையில்.

வ.9: இதயம் அக்களிப்பதையும், உள்ளம் மகிழ்ந்து துள்ளுதலையும், அவர் உடல் பாதுகாப்பில் இருப்பதற்கு காரணமாக காண்கிறார். இந்த வரியின் இரண்டாவது பிரிவை, என் மகிமை துள்ளுகிறது (וַיָּגֶל כְּבוֹדִי வய்யாகெல் கெவோதி) என்றே எபிரேய விவிலியம் கொண்டுள்ளது. இது பெரிய வித்தியாசத்தை தரவில்லை, இருப்பினும் சிலர், இங்கே சிறிய எழுத்துப்பிழை அல்லது மாறுதல் இருப்பதாக காண்கின்றனர். இங்கே இருப்பது என் மகிமை அல்ல (כְּבוֹדִי கெவோதி- என் மகிமை), மாறாக என் ஈரல் (כְּבֵדִי கெவெதி- என் ஈரல்) என்கின்றனர். இதயத்தைப் போல, ஈரல் உள் மனதிற்கு ஒத்த கருத்துச் சொல்லாக பாவிக்கப்பட்டடிருக்கலாம். பிற்காலத்தில் இது மருவியிருக்கலாம். மசரோட்டியர் காலத்திற்கு முன்னர், எபிரேய விவிலியம் மெய்யெழுத்துக்களால் மட்டுமே வாசிக்கப்பட்டது. உயிர் எழுத்துக்களை (புள்ளிகள்) அவர்கள் மனப்பாடத்திலே வாசித்தார்கள். இதுவும் இந்த மருவலுக்கு காரணமாக அமைந்திருக்கலாம். (ஆரம்ப காலத்தில் தமிழ் இலக்கியங்களை ஓலைச் சுவடுகளில் எழுதியபோது, நம் முன்னோர்கள் குத்துக்களையும், தரிப்புக் குறிகளையும் பாவியாது எழுதினதைப் போல).

வ.10: பாதாளம் (שְׁאוֹל ஷெயோல்), மற்றும் படுகுழி (שָׁחַת ஷஹாத்- படுகுழி) விவிலியத்தில் மிகவும் முக்கியமான சொற்கள். இஸ்ராயேல் மக்கள் ஆரம்ப காலத்தில் நரகம், மறுவாழ்வு, உத்தரிப்புஸ்தலம் போன்றவற்றை நம்பவில்லை. இந்த ஆழம் காணாத குழிகளுக்குள் இறப்பின் பின்னர் ஆன்மா செல்வதாகவும் (இவர்களுடைய ஆன்மா பற்றிய அறிவும் வித்தியாசமானது), இது கடவுள் இல்லா நிலையெனவும் நம்பினர். இதனைப்பற்றிய சரியான புரிதல்கள் காணக்கிடையாது. ஆசிரியர் தன்னையோ அல்லது இந்த பாடலின் கதாநாயகனையோ உம் அன்பர் (חֲסִידְךָ֗ ஹசித்கா) எனச் சொல்லி, அவர் இந்த படுகுழியைக் காணமாட்டார் என்கிறார்.

வ.11: இதுவும் அழகான ஒரு வரி. வாழ்வின் வழியை தான் அறியப்போவதாகச் சொல்கிறார் (תּֽוֹדִיעֵנִי אֹ֤רַח חַ֫יִּ֥ים தோதி'எனி 'ஓராக் கய்யிம்). இந்த வாழ்வின் வழி ஷெயோல் மற்றும் ஷஹாத் போன்ற அழிவின் குழிகளுக்கு எதிர்பதமாக அமைகிறது. அத்தோடு ஆண்டவரின் முகத்தின் முன் தான் நிறைவான மகிழ்ச்சிகளைக் (שֹׂבַע שְׂמָחוֹת சவா' செமாகோத்) காண்பதாக சொல்கிறார். இந்த நிறைவான மகிழ்ச்சிகள் என்ற பன்மைச் சொல் விவிலியத்தில் இந்த இடத்தில் மட்டுமே காணக்கிடக்கின்றது. ஆண்டவரின் வலப்பக்கம் என்பது, ஆண்டவரின் விசேட இடத்ததைக் குறிக்கும். வலம், விவிலிய பார்வையில் மங்கள வார்த்தை. இந்த இடத்தில் நிறைவான மகிழ்வு கிடைக்கும் என்கிறார். புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் இந்த வலப்பக்கத்தை அதிகமாக அடையாளப்படுத்துவர். இயேசுவும் கடவுளின் வலப்பக்கத்திற்கு போனதாக பல புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆண்டவரின் வலப்பக்கம் நல்லது என்றால் அவரின் இடப்பக்கம் கூடாததா? என்ற கேள்வி எழுகிறது. அப்படியல்ல. எபிரேயம் நன்மை தீமை என்று ஒப்பிட்டு பார்க்காத ஒரு அரிதான மெய்யியல். இந்த ஒப்பிட்டு பார்க்கும் தன்மை கிரேக்கருடைய காலத்திலே வளர்ந்தது.



இரண்டாம் வாசகம்
எபிரேயர் 10,11-14.18

11ஒவ்வொரு குருவும் நாள்தோறும் இறை ஊழியம் புரியும்போது மீண்டும் மீண்டும் அதே பலிகளைச் செலுத்தி வருகிறார். அவையோ பாவங்களை ஒருபோதும் போக்க இயலாதவை. 12ஆனால், இவர் ஒரே பலியைப் பாவங்களுக்காக என்றென்றைக்கும் எனச் செலுத்திவிட்டு, கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்துள்ளார். 13அங்கே தம் பகைவர் தமக்குக் கால்மணை ஆக்கப்படும்வரை காத்திருக்கிறார். 14தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார். 15இதுபற்றித் தூய ஆவியாரும், 'அந்நாள்களுக்குப்பிறகு அவர்களோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே. 16என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதி வைப்பேன்' என்று நமக்குச் சான்று பகர்கிறார். இவ்வாறு சொன்ன பின், 17'அவர்களது தீச்செயலையும் அவர்களுடைய பாவங்களையும் இனிமேல் நினைவுகூர மாட்டேன்' என்றும் கூறுகிறார். 18எனவே பாவமன்னிப்பு கிடைத்தபின் பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலிக்கு இடமேயில்லை.

எபிரேயர் 10 அதிகாரத்தில் இயேசுவின் பலியின் மேன்மை காட்டப்படுகிறது. இதற்கு முன் வந்த அதகிகாரஙகள் இயேசுவை உண்மையான குருத்துவம் பற்றி பேசுகின்ற வேளை, இந்த அதிகாரம் அவரது பலியின் மேன்மையைப் பற்றி விவரிக்கின்றது.

வ.11: இஸ்ராயேலின் குருக்களின் பலி நாளாந்த பலியாக இருக்கின்றபடியால், ஒவ்வொரு நாளும் அதன் தேவை அதிகமாகவே இருக்கிறது என்கிறார். அதே பலிகள் என்பது நிறைவில்லாத மிருக பலியை குறிக்கிறது எனலாம் (τὰς αὐτὰς θυσίας டாஸ் அவ்டாஸ் தூசியாஸ்- அதே பலி). இந்த பலிகளால் பாவங்களை போக்க முடியாது என்கிறார் ஆசிரியர். தலைமைக் குருக்களின் பலி சாதாரண பலி என்பதும், அதனால் பாவங்களை போக்க முடியாது என்பதைக் காட்டுவதே ஆசிரியர் தன்னுடைய மிக முக்கியமான நோக்கமாகக் கொண்டுள்ளதை காணமுடிகிறது.

வ.12: இதற்கு எதிர்மாறாக இயேசுவின் மேன்மை காட்டப்படுகிறது. இயேசு செலுத்தியது ஒரே ஒரு பலி, அதனை அவர் பாவங்களுக்காக செலுத்தினார். அத்தோடு கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்துவிட்டார்.

இதன் மூலமாக இயேசுவின் பலியின் நித்தியம் காட்டப்படுகிறது. இந்த பலி அனைவரின் பாவங்களுக்கும் பரிகாரமாக அமைகிறது. இந்த பலியின் வல்லமை இயேசுவிற்கு கடவுளின் வலப்பக்கத்தைக் கொடுக்கிறது (ἐν δεξιᾷ⸃ τοῦ θεοῦ, என் தெக்ட்சியா டூ தியூ- கடவுளின் வலப்பக்கம்).

வ.13: இயேசு கடவுளின் வலப்பகத்தில் காத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. தன் பகைவர்கள் தனக்கு கால்மணை ஆகும் வரை இயேசு காத்திருக்கிறார் என்பது போல காட்டப்படுகிறது. இயேசுவின் பகைவர்கள் யார் என்பது சொல்லப்படவில்லை. இது திருப்பாடல் 101,1ஐ நினைவூட்டுகிறது.

பகைவர்கள் கால்மணையாகுவது ஒரு போர் இலக்கிய சொற்பிரயோகம். இதில் பெரிய அரசர் போரில் தோற்ற அரசர்களை தன்னுடைய கால்மனையாக்குகிறார். இதன் மூலம் அவர் தன்னுடைய அதிகாரத்தை நிலைநிறுத்துகிறார் (ἐχθροὶ எக்த்ரொய்- பகைவர்கள்). வ.14: கிறிஸ்துவின் மக்கள் தூயவர்கள் என அடையாளம் காட்டப்படுகிறார்கள் (ἁγιαζομένους ஹகியாட்சொமெனூஸ்- தூய்மையாக்கப்பட்டவர்கள்). இவர்கள் ஒரே பலியினால், நிறைவுள்ளவரானார்கள். தூயவர்கள் மற்றும் நிறைவுள்ளவர்கள் என்ற வார்த்தை பிரயோகம், கிறிஸ்தவர்களின் மனப்புண்களை ஆற்றும் நல்ல முயற்ச்சி எனலாம்.

வ.15: முதல் ஏற்பாட்டில் உடன்படிக்கை கடவுளால் செய்யப்பட்டது. புதிய ஏற்பாட்டில் அதே உடன்படிக்கை இயேசுவினால் நிறைவேற்றப்படுகிறது. இப்போது தூய ஆவியினால் நிறைவேற்றப்படும் உடன்படிக்கை ஒன்று பேசப்படுகிறது (ἡ διαθήκη ἣν διαθήσομαι ஹே தியாதேகே ஹேன் தியாதேசொமாய்- அந்த உடன்படிக்கை நான் ஏற்படுத்துவேன்). இ;நத உடன்படிக்கைதான் கடவுளின் உடன்படிக்கை என உணரப்படுகிறது.

வ.16: எரேமியா புத்தகத்தில் 31,33 வது வசனம் மேற்கோள் காட்டப்படுகிறது. சட்டத்தை உள்ளத்தில் எழுதுவதும், உள்ளத்தில் பதியவைப்பதும் எரேமியாவின் சிந்தனைகள். எருசலேமின் வீழ்ச்சியோடு பழைய உடன்படிக்கை உடைபட்டதாகவும், அதனால் இனி பயனில்லை என்பதும், கடவுள் மீண்டும் ஒரு புதிய உடன்படிக்கை ஏற்படுத்தவேண்டிய தேவையிலிருக்கிறார் என்பது எரேமியா புத்தகத்தில் சொல்லப்பட்டது. இந்த புதிய உடன்படிக்கை இதயத்தில் செய்யப்படவேண்டியதாக இருக்கிறது. இந்த சிந்தனை எருசலேம் தேவாலயத்தின் அழிவு நாட்களில் உருவானது. இதனை எபிரேயர் புத்தக ஆசிரியர் மேற்கோள் காட்டுவது மிகவும் சுவாரசியமாக உள்ளது.

διδοὺς νόμους μου ἐπὶ καρδίας αὐτῶν - திதூஸ் நொமூஸ் மூ எபி கார்தியாஸ் அவ்டோன் - சட்டத்தை அவர்கள் இதயத்தில் வைப்பேன்.

καὶ ἐπὶ ⸂τὴν διάνοιαν⸃ αὐτῶν ἐπιγράψω αὐτούς, - காய் எபி டேன் தியானொய்யான் அவ்டோன் எபிகிராபோ அவ்டூஸ்- அவர்களுடைய சிந்தையில் எழுதுவேன்.

வ.17: எரேமியாவின் நம்பிக்கை தரும் வார்த்தைகள் மேலும் காட்டப்படுகின்றன. இந்த முறை எரேமியா 31,34 வரி மேற்கோள் காட்டப்படுகின்றது. மக்ளுடைய பாவங்களும், தீச்செயல்களும் நினைவுகூறப்படா எனக் காட்டப்படுகிறது.

கடவுள் ஒருவருடைய பாவத்தையும் தீச்செயல்களையும், நினைவுகூறுவதன் வாயிலாக அவர் தண்டிக்கப்படுவார் என நம்பப்பட்டது. இதனால் கடவுள் ஒருவருடைய தீச்செயல்களை மறக்க வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். இதனைத்தான் எரேமியா மக்களுக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகளாக கொடுத்தார், அதனையே எபிரேய ஆசிரியர் கோடிடுகிறார். οὐ μὴ μνησθήσομαι ἔτι. ஊ மே ம்னேஸ்தேசொமாய் எதிடி- அதனை நான் இனி நினைவுகூறமாட்டேன்.


நற்செய்தி வாசகம்
மாற்கு 13,24-32

மானிடமகன் வருகை

(மத் 24:29-31 லூக் 21:25-28)

24'அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது. 25விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும். 26அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். 27பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.

அத்தி மர உவமை

(மத் 24:32-35 லூக் 21:29-33)

28'அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். 29அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். 30இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 31விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.

மானிடமகன் வரும் நாளும் வேளையும்

(மத் 24:36-44)

32'ஆனால் அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தைக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது விண்ணகத்திலுள்ள தூதருக்கோ மகனுக்கோ கூடத் தெரியாது.


மானிட மகனின் வருகை பற்றிய பகுதி அனைத்து சமநோக்கு நற்செய்திகளிலும் காட்டப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு முன்னர், எருசலேம் கோவில் அழிவு பற்றிய பகுதி, வரப்போகும் கேடுபற்றி அறிவித்தல், மற்றும் வரப்போகும் கொடும் வேதனை போன்ற பதிகள் தரப்பட்டுள்ளன. மானிட மகன் என்ற சொல் (υἵος τοῦ ἀνθρώπου ஹுய்யொஸ் டூ அந்த்ரோபூ- மானிட மகன்), பல கோணங்களில் நோக்கப்படுகிறது. இந்த இடத்தில் அது ஆண்டவருடைய இறுதி நாளை குறிக்கலாம்.

வ.24: அந்நாட்களில் வேதனைகளுக்கு பின், கதிரவன் இருண்டுவிடும் எனச் சொல்லப்படுகிறது. கதிரவன் இருண்டு விடுதல் ஒருவகையான சூரிய கிரகணத்தோடு சம்மந்தப்பட்ட ஒரு நிகழ்வு, இதனை அவர்கள் ஆண்டவரின் நாளோடு தொடர்பு படுத்திப் பார்க்கிறார்கள். சூரியன் இருண்டு விடும் நாளை ஆசிரியர் அறிந்திருக்கிறார் எனலாம் (ὁ ἥλιος σκοτισθήσεται, ஹொ ஹேலியொஸ் ஸ்கொடிஸ்தேசெடாய்- சூரியன் இருண்டு விடும்). நிலா இல்லாத இரவையும் ஆசிரியர் வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார் (ἡ σελήνη οὐ δώσει τὸ φέγγος αὐτῆς, ஹே செலேனே ஊ தொசெய் டொ பெக்கொஸ் அவ்டே- நிலாவும் ஒளி தராது).

வ.25: விண்மீன்கள் வானத்திலிருந்து விழுதல்: இது எரி கற்களை விழுகையை குறிக்கலாம். விண்மீன்கள் வானத்திலிருந்து விழுதல் மிகவும் அரிதானது. ஆனால் விண்கற்கள் விழுவதை சாதாரணமாக அவதானிக்கலாம். அதேவேளை வான் கோள்கள் அதிரும் என்ற அடையாளமும் காட்டப்படுகிறது.

இந்த வரி எசாயா 13,10: 34,4 மற்றும் யோவேல் 2,10 போன்ற முதல் ஏற்பாட்டு விவிலிய நூல்களை நினைவூட்டுகின்றன. அவை அனைத்தும் ஆண்டவரின் இறுதி நாட்களையே நினைவூட்டுகின்றன.

அக்காலத்தில் இந்த வான்வெளி அடையாளங்கள் வான வல்லமைகளை அடையாளப்படுத்தியதாக நம்பப்பட்டன. ஆக இவைகளின் விழுகை மற்றும் அசைவுகள், வாணக வாசிகளின் அடையாளங்களாகவும் பார்க்கப்பட்டன.

வ.26: இந்த வேளையில் மானிட மகன், மிகுந்த வல்லமையோடும், மாட்சியோடும் மேகங்கள் மீது வருகின்றார். மானிட மகன் கடவுளின் நீதியைக் காட்டும் வேளை, அவர் மேகங்கள் மீது வருவது, அவருடைய தெய்வீகத்தைக் காட்டுகிறது எனலாம் (ἐν νεφέλαις என் நெபெலாய்ஸ்- மேகத்தில்). முதல் ஏற்பாட்டில் மேகம், பல வேளைகளில் ஆண்டவரின் பிரசன்னத்தைக் காட்டுவது நினைவில் வரலாம்.

வ.27: மானிட மகன் தன்னுடைய படைகளை அனுப்புகிறார். அவர் வானதூதர்களின் மேல் அதிகாரம் கொண்டவராக இருக்கிறார். அவருடைய கட்டளைகளை வானதூதர்கள் கடைப்பிடிக்கிறார்கள். வானதூதர்கள் அனுப்பப்படுகிறார்கள், அவர்கள் சென்று (ἄγγελος அங்கெலொஸ்- வானதூதுர்), மண்ணுலகின் அனைத்து திசைகளிலும் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களை கூட்டிச் சேர்க்கிறார்கள் (ἐκλεκτός எக்லெக்டொஸ்- தெரிவுசெய்யப்பட்டவர்).

மானிட மகனின் இறுதி வருகை சாதாரண நாட்களைப் போலல்லாது, சற்று வித்தியாசமாக இருக்கும் என்பது இங்கே தெளிவாக காட்டப்படுகிறது. அத்தோடு தெரிவு செய்யப்பட்டவர்கள் நிச்சயமாக இஸ்ராயேலராகத்தான் இருக்க வேண்டும் என்ற தேவையும் இல்லை என்பதும் காட்டப்படுகிறது.

வ.28: இயேசு உலக முடிவை விளங்கப்படுத்த இயற்கையை விளக்கத்திற்கு எடுக்கிறார். அத்திமரம் (συκῆ சுகே- அத்தி), இஸ்ராயேல் மக்களுடைய வாழ்வோடு பின்னிப்பினைந்தது. ஆதனை நன்கு அவதானிப்பவர், இயற்கையில் காலத்தையும் நன்கு அவதானிப்பர். ஆரம்ப காலத்தில் மக்கள் இப்படியான அடையாளங்கள் மூலமாகத்தான் காலத்தை கணித்தனர் என்பது புலப்படுகிறது.

கோடைக் காலத்தில் இதன் கிளைகள் தளிர்த்து, இலைகள் தோன்றுகின்றன. இந்த இரண்டு மாற்றங்களைக் கொண்டும் மக்கள் காலத்தை அறிந்துகொள்கின்றனர். வ.29: இயற்கையின் நிகழ்வுகளைக் கொண்டு காலத்தை கணிக்க தெரிந்த மனிதனுக்கு, வான் வெளியில் அசைவுகளைக் கொண்டு, கடவுளின் நாளையும் கணிக்க முடியும் என்கிறார். ஏற்கனவே சொன்ன அடையாளங்களைக் கொண்டு, மானிட மகன் வாயிலுக்கு அருகில் உள்ளார் என்பதை அறியக் கேட்கிறார் (ὅτι ἐγγύς ἐστιν ἐπὶ θύραις. ஹோடி எக்குஸ் எஸ்டின் எபி தூராய்ஸ்- வாயிலுக்கு அருகில் உள்ளார்).

வ.30: மக்கள் அனைவருக்கும் என்ன நடக்கும் என்பது ஒரு பெரிய கேள்வி. இறந்தவர்கள் நீதி தீர்ப்பை எதிர்கொள்கிறார்கள். ஆனால் வாழ்கிறவர்க்ள அனைவருக்கும் என்ன நடக்கும் என்பது பலருடைய கேள்வி. இந்த கேள்வியை பவுல் அதிகமாக தெசலோனிக்க திருப்சபையிடமிருந்து சந்தித்தார்.

இயேசு இந்த கேள்விக்கு தனனுடைய பலத்தை காட்டுகிறார். அதாவது இந்த உலகில் மக்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். உலகின் முடிவு நாளில் நடைபெற இருக்கிறது நிச்சயமாக நடைபெறும்.

வ.31: இறைவனின் வார்த்தை மிக முக்கியமானது. அதனைப்போலவே புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வார்த்தைகள் மிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. ஒருவருடைய வார்த்தையின் கனத்தைக் கொண்டு அவருடைய அதிகாரத்தைக் கணிக்கலாம்.

இயேசு தன்னுடைய வார்த்தைகள் விண்ணையும் மண்ணையும் விட மிக முக்கியமானவை எனக் காட்டுகிறார் (ὁ οὐρανὸς καὶ ἡ γῆ παρελεύσονται- ஹொ ஹுரானொஸ் காய் ஹே கே பாரெலூசொன்டாய்- விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும் οἱ δὲ λόγοι μου οὐ °μὴ παρελεύσονται. ஹொய் தெ லொகொய் மூ ஊ மே பாரெலூசொன்டாய்- என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா:). வ.32: அடையாளங்களைப் பற்றி பேசியவர், மானிட மகனின் வருகை நாளைப் பற்றியும் பேசவேண்டியிருக்கிறார்.

இருந்தாலும், மானிட மகன் வரலாற்றில் பிறந்த படியால், வரலாற்றை மாற்ற முயலவில்லை எனலாம். நாள் நேரம் மற்றும் அவற்றின் தாக்கம் போன்றவை கடவுளுக்கு உரியவை, அவற்றை மனிதர்கள் வலுக்கட்டாயமாக தெரிய நினைப்பது தவறானவை என்பது காட்டப்படுகிறது. நேரத்தையும் காலத்தையும் மானிட மகனே அறிய முயல்வதில்லை என்பது அவருடைய தாழ்ச்சியையும், அதேவேளை இது கடவுளுக்கு உரியது என்பதும் நினைவூட்டப்படுகிறது. கிரேக்க-உரோமையர்கள் காலத்தைக் கணிப்பதில் மிகவும் வல்லவராக இருந்தார்கள். அதேவேளை ஆரம்ப கால திருச்சபை ஆண்டவரின் இரண்டாவது வருகையை மிகவும் சிரத்தையோடு எதிர்பார்த்தது. இந்த சிந்தனையை மாற்றவே, ஆசிரியர் இந்த வார்த்தை மகிவும் கடுமையாக பதிகின்றார்.

வவ.33-36: இந்த நாட்களின் மட்டில் அனைவரையும் கவனமாக இருக்கச் சொல்கிறார். இதனை முன்மதியோடு செயற்பட்ட, தொலைநாட்டுக்கு சென்ற முதலாளியின் பணியாளர் என்ற உவமையோடு ஒப்பிட்டு பார்க்கிறார். வீட்டுத் தலைவர் எப்போதும் வரலாம், ஆனால் விழிப்பாயிருக்கும் பணியாளர் நல்ல சன்மானம் பெறுகிறார். விழிப்பாயிருத்தல் என்ற கட்டளைதான் இந்த பகுதியின் மிக முக்கியமான செய்தியாக வருவதை அவதானிக்கலாம் (γρηγορεῖτε. க்ரேகொரெய்டெ- விழிப்பாயிருங்கள்).

ஆண்டவருடைய நாள் நிச்சயமாக வரும்.

எப்போது மற்றும் எங்கே என்பது மனிதர்களின் பிரச்சனையல்ல,

அவரவர் நாளாந்த கடமைகளைப் சரிவரசெய்வதே,

தகுந்த ஆயத்தம்.

ஆண்டவரின் நாளைக் கண்டு ஆண்டவரின்

மக்கள் பயம்கொள்ளத் தேவையில்லை.

காலமும் நேரமும் கடவுளுக்குரியவை,

பொறுப்புக்களும், பணிகளும் நமக்குரியவை.

காலத்தை, தக்ககாலமாக கடவுள் மாற்றட்டும்.

அன்பு ஆண்டவரே,

விழித்திருக்க சொல்லித்தாரும்