இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் 32ம் ஞாயிறு ஆ

முதலாம் வாசகம்: 1அரசர் 17,10-16
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 146
இரண்டாம் வாசகம்;: எபிரேயர் 9,24-28
நற்செய்தி: மாற்கு 12,38-44


முதல் வாசகம்
1அரசர் 17,10-16

10எலியா புறப்பட்டு, சாரிபாத்துக்குப் போனார். நகரின் நுழைவாயிலை வந்தடைந்த பொழுது, அங்கே ஒரு கைம்பெண் சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். அவர் அவரை அழைத்து, 'ஒரு பாத்திரத்தில் எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா' என்றார். 11அவர் அதைக் கொண்டு வரச் செல்கையில், அவரைக் கூப்பிட்டு, 'எனக்குக் கொஞ்சம் அப்பமும் கையோடு கொண்டு வருவாயா?' என்றார். 12அவர், 'வாழும் உம் கடவுளாகிய ஆண்டவர்மேல் ஆணை! என்னிடம் அப்பம் ஏதும் இல்லை பானையில் கையளவு மாவும் கலயத்தில் சிறிதளவு எண்ணெயுமே என்னிடம் உள்ளன. இதோ, இப்போது இரண்டொரு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அப்பம் சுட்டு, நானும் என் மகனும் சாப்பிடுவோம். அதன் பின் சாகத்தான் வேண்டும்' என்றார். 13எலியா அவரிடம், 'அஞ்ச வேண்டாம், போய் நீ சொன்னபடியே செய். ஆனால், முதலில் எனக்கு ஒரு சிறிய அப்பம் சுட்டுக் கொண்டு வா. பிறகு உனக்கும் உன் மகனுக்கும் சுட்டுக்கொள். 14இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைப்பது இதுவே: நாட்டில் ஆண்டவர் மழை பெய்யச் செய்யும் நாள் வரை பானையிலுள்ள மாவு தீராது; கலயத்திலுள்ள எண்ணெயும் குறையாது' என்று சொன்னார். 15அவர் போய் எலியா சொன்னபடியே செய்தார். அவரும் அவருடைய மகனும், அவர் வீட்டாரும் பல நாள் சாப்பிட்டனர். 16எலியா வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கின்படி பானையிலிருந்து மாவு தீரவில்லை; கலயத்திலிருந்த எண்ணெயும் குறையவில்லை.

எலியா இஸ்ராயேலில் (வட நாடு) பணியாற்றிய மிக முக்கியமான இறைவாக்கினர். முதல் ஏற்பாட்டில் ஒரு கடவுள் வழிபாட்டை முழு மூச்சாக முன்னெடுத்தவர்களில் இவர் மிக முக்கியமானவர். முதன்மையானவர் என்றும் சொல்லலாம். இவருடைய பெயரே, 'என் கடவுள் யாவே' (אֵלִיָּהוּ 'எலியாஹு) என்றுதான் அர்த்தப்படும். 1அரசர் 17ம் அதிகாரத்தில் எலியா இறைவாக்கினர் அறிமுகப்படுத்தப்படுகிறார். எலியா தன்னுடைய இறைவாக்குப் பணியை ஒம்ரியின் மகனான அகாபின் காலத்தில் வடநாடான இஸ்ராயேலில் தொடங்குகிறார். ஒம்ரி, வடநாட்டில் மிகவும் பலமான அரசர்களில் ஒருவர். இவரைப் பற்றி விவிலியத்திற்கு வெளியிலும் அதிகமாக பேசப்படுகிறது. பல தரவுகளும் காணக்கிடைக்கின்றன. தற்கால ஆய்வுகளின் படி ஒம்ரியின் அரசு, தாவீதின் குடும்பத்தைவிட மிகவும் பிரசித்தி பெற்றதாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

விவிலியம், மிக முக்கியமாக தென்நாட்டு பதிவுகள், ஆகாபை மிகவும் தீய அரசராகவே காட்டுகின்றன. எலியா ஆகாபையும் அவர் கொள்கைகளையும், அவருடைய வெளிநாட்டு மனைவியும் அரசியுமான இசபெலையும் அதிகமாக எதிர்த்தார். ஆகாபு எலியாவை வெறுத்தாலும், அவரை பற்றி சற்று பயந்தார், ஆனால் இசபெல் எலியாவை அழிப்பதை நோக்கமாக கொண்டிருந்தார் என்று விவிலியம் காட்டுகிறது.

1அரசர்கள் 17ம் அதிகாரம், எலியாவை அறிமுகம் செய்து, அவரை மிக பிரசித்தி பெற்ற அத்தோடு பலமான இறைவாக்கினராகக் காட்டுகிறது. எலியா காலத்தில் மிக கொடிய பஞ்சம் நிலவியதாகவும், அதனை எலியாவால்தான் கட்டுப்படுத்த முடிந்தது என்கின்ற பாரம்பரிய நம்பிக்கையை இந்த பகுதி பதிவு செய்கிறது.

வவ.1-7: எலியா, கிலயா-திஸ்பேயைச் சேர்ந்தவர், ஆகாபு அரசரிடன் வாழும் கடவுளின் பெயரில் பஞ்சம் ஒன்றை வரவழைக்கிறார். இதனால் அரசரின் சினத்தை சந்தித்து, தப்பி ஓடிவிடுகிறார், கடவுள் இவரை காகங்களைக் கொண்டு பாராமரிக்கிறார். யோர்தான் நதி இவருக்கு தண்ணீர் தர, காகங்கள் காலையில் அப்பமும், மாலையில் இறைச்சித்துண்டும் கொண்டுவருகின்றன. சில நாட்களில் யோர்தானில் தண்ணீர் இல்லாமல் போக, எலியா தங்கியிருந்த கெரீத்து ஓடையும் வற்றிப் போகிறது.

வவ.8-9: இந்த வேளையில் ஆண்டவரின் வாக்கு (דְבַר־יְהוָ֖ה தெவார்-அதோனாய்) அவருக்கு வருகிறது. அது அவரை சரீபாத்துக்கு செல்லச் சொல்கிறது. கடவுள் யாரையும் யாராலும் காப்பாற்றக்கூடியவர் என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன. நாடு முழுவதும் பஞ்சத்தில் வாட கடவுள் அவருடைய இறைவாக்கினருக்கு இரக்கம் காட்டுகிறார். பஞ்சத்தை இவர்தான் உண்டாக்கியவர் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், அவருக்கு உணவு கிடைக்க கடவுள் செய்கிறார்.

வ.10: எலியா புறப்பட்டு சரிபாத்திற்கு செல்கிறார். இது ஒரு பெனிசிய துறைமுக நகர். ஒரு புறவின மக்கள் வாழும் இடம், மத்திய தரைக்கடலின் கரையோரத்தில், தீர் சீதோன் நகர்களுக்கு இடையில் அமைந்துள்ளது. கடவுளின் மக்களை வரவேற்கும் இன்னொரு புறவின நகராக இது விவிலியத்தில் எலியா இறைவாக்கினரால் இடம் பிடிக்கிறது. நகரின் நுழைவாயில் வழியாகவே எலியா நுழைகிறார், அப்போது கைம்பெண் ஒருவர் சுள்ளிகளைப் புறக்கிக்கொண்டு இருக்கிறார். எலியா அவரிடம் முதலில் குடிக்க தண்ணீர் கேட்கிறார்.

சாதாரணமாக அறிமுகமில்லாதவர்களால் இப்படிக் கேட்க முடியாது, ஆக இந்த பெண்ணிற்கு எலியா இறைவாக்கினரை தெரிந்திருக்கிறது எனலாம். எலியாவின் தோற்றம் அவரை இறைவாக்கினராக காட்டியிருக்கலாம்.

வ.11: உடனடியாக தனக்கு அப்பமும் வேண்டும் என்கிறார். இதனை அவர் ஒரு விண்ணப்பமாகவே கேட்கிறார். וַיֹּאמַ֔ר לִֽקְחִי־נָא לִי פַּת־לֶחֶם בְּידֵךְ׃ வாய்யோமர் லக்கி லி பாத்-லெகெம் பெயாதாக்- உம் கையில் சிறு துண்டு அப்பமும் கொண்டுவரமுடியுமா என்றார்.

இந்த கேள்வியை எலியா தன்னுடைய சந்தேகத்தை நீக்குவது போல கேட்கிறார். அவருக்கு இந்த பெண்ணின் நிலை தெரிந்திருக்க வாய்ப்புள்ளது எனலாம்.

வ.12: எலியா தன்னுடைய சொந்த நாட்டிலிருந்து விரட்டப்படுகிறார். தான் வெறுத்த தெய்வங்களின் நாட்டிலே அவர் அடைக்கலம் தேடுகிறார். புறவினப் பெண் ஒருவர் அவருக்கு தண்ணீர் கொடுக்க முன் வருகிறார். எலியா அப்பம் கேட்டவுடன் அந்தப் பெண், தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்துகிறார்.

இந்த பெண் எலியாவின் கடவுளை வாழும் கடவுள் என்கிறார். அதாவது தன்னுடைய பெனிசிய தெய்வங்களை உண்மைக் கடவுளாக ஏற்கவிலலை என்பது தெளிவாகிறது. இதனைப் போலவே யோசுவாவின் காலத்தில், எரிக்கோ நகர் பெண் ஒருவர் தன் தெய்வங்களை விடுத்து உண்மைக் கடவுளை நம்பினதை இங்கே நினைவிற் கொள்ளலாம் (ஒப்பிடுக யோசுவா 2,11). சரிபாத்து கைம்பெண் எலியாவின் கடவுள் மேல் ஆணையிடுகிறார் (חַי־יְהוָה אֱלֹהֶיךָ காய்- அதோனாய் 'எலோஹெகா- வாழும் உங்கள் கடவுள்). தன்னிடம் அப்பம் ஏதும் இல்லை என்கிறார். தன்னுடைய பானையில் கையளவு மாவும், கலயத்தில் சிறிதளவு எண்ணெய் மட்டுமே உள்ளது என்கிறார். சுள்ளிகளை தான் பொறுக்கிக்கொண்டு சென்று, அப்பம் சுட்டு உண்டு, பின்னர், சாகத்தான் போகிறோம் என்கிறார். இதனை அவர் பயத்தோடே சொல்லியிருக்கலாம். ஒருவேளை அவர் எலியாவின் சாபத்தை நினைத்து பயந்திருக்கலாம்.

இஸ்ராயேலில் ஏற்பட்ட பஞ்சம் பொனிசியாவை பாதித்ததா அல்லது இந்த ஏழைக் கைம்பெண்ணின் நிலைதான் இப்படியானதா என்று தெரியவில்லை. இருந்தாலும், இங்கே வறுமையின் கோர முகம் காட்டப்படுகிறது எனலாம்.

வ.13: எலியா அவரைத் திடப்படுத்துகிறார், அஞ்ச வேண்டாம் என்கிறார் இருந்தாலும் முதலில் தனக்கு அப்பம் சுடுமாறு கட்டளையிடுகிறார். אַל־תִּירְאִ֔י 'அல்-திர்'இ- பயம் கொள்ள வேண்டாம். அதேவேளை பின்னர், அவளுக்கும் அவள் மகனுக்கும் அப்பம் சுட்டுக்கொள்ளுமாறும் கட்டளையிடுகிறார்.

ஒருவர் முதலில் தன் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது இந்த வரியில் காட்டப்படுகிறது, அதேவேளை அவர் கடவுள் மட்டில் அதிக பயம் உள்ளவராகவும் இருக்க வேண்டும் என்பதும் சொல்லப்படுகிறது.

வ.14: இந்த பெண் பலவிதமான கேளவிகளை தன்னகத்தே கொண்டிருந்திருப்பார். அவற்றிக்கெல்லாம் எலியா பதில் கொடுக்கிறார். இஸ்ராயேலின் கடவுள் அப்பாவி மக்களை துன்புறுத்தாதவர் என்பதற்கு இங்கே நல்ல உதாரணம் கிடைக்கிறது. தன் மக்கள் தங்கள் பாவத்தால் பட்டினி கிடக்க, இங்கே ஒரு புறவினப் பெண் ஆசீர் பெறுகிறார்.

எலியா இஸ்ராயேலின் கடவுளின் வாக்கை இந்த பெண்ணிற்கு கொடுக்கிறார். இந்த பெண்ணின் மாவும் எண்ணெய்யும் பஞ்சம் முடியும் வரை தீராது என்கிறார். அதாவது நாட்டில் உள்ள பஞ்சம் இவரை தாக்காது என்பது சொல்லப்படுகிறது. அப்பமும் எண்ணெய்யும் அடையாளமாக பார்க்கப்படுகிறதா என்பது ஒரு கேள்வி? இவை அடையாளமாக பார்க்கப்படுவது போல தோன்றவில்லை எனலாம். இருந்தாலும், அனைத்தையும் தீர்மானிக்கிறவர் கடவுள் என்பதற்கு இந்த அப்பமும் எண்ணெய்யும் நல்ல உதாரணம். הַקֶּמַח לֹא תִכְלָ֔ה וְצַפַּחַת הַשֶּׁמֶן לֹא תֶחְסָ֑ר ஹக்கெமாக் திக்லாஹ் வெட்சாபாகாத் ஹஷ்ஷெமென் லோ' தெக்சார்- மாவு குறையாது, கலசத்தில் எண்ணெய்யும் குறையாது.

வ.15: ஆண்டவர் சொன்னது போல ஆகாபு வீட்டார் கேட்கவில்லை, ஆகவே கொடிய பஞ்சத்தை அவர்கள் எதிர்நோக்க, இங்கே ஒரு புறவினப் பெண் எலியா சொன்னதைக் கேட்டு, அவரும் அவர் மகனும் பல நாள் சாப்பிடுகின்றனர். இறைவாக்கினர்கள் சொல்வது போல் கேட்டால் குறையில்லை என்பது இங்கே காட்டப்படுகிறது.

வ.16: அதிசயம் இன்னொரு முறை வார்த்தைப் படுத்தப்படுகிறது. எலியா வழியாக ஆண்டவர் உரைத்தபடி பானையிலிருந்து மாவோ, கலசத்திலிருந்து எண்ணெய்யோ குறையவில்லை. இந்த வரி, அதிசயத்திற்கு காரணம் எலியா அல்ல மாறாக கடவுள் என்பதை அழகாகக் காட்டுகிறது (כִּדְבַר יְהוָ֔ה אֲשֶׁר דִּבֶּר בְּיַד אֵלִיָּהוּ׃ கித்வார் அதோனாய் அஷேர் திவ்வெர் வெயாத் 'எலியாஹு- ஆண்டவர் உரைத்தபடி அதாவது அவர் எலியா வழியாக சொன்னது).



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 146

மீட்பராம் கடவுள் போற்றி!

1அல்லேலூயா! என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு;

2நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன்.

3ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்; உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம்.

4அவர்களின் ஆவி பிரியும்போது தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்; அந்நாளில் அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம்.

5யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.

6அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே!

7ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்.

8ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.

9ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்துவிடுகின்றார்.

10சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா!



வ.1: ஆசிரியர் தன் நெஞ்சத்திற்கு கட்டளை கொடுப்பது போல பாடுகிறார். அல்லேலூயா என்ற சொல் (הַלְלוּ־יָהּ ஹல்லூ-யாஹ்) கடவுளைப் புகழுங்கள் என்ற எபிரேய சொல்லின் தமிழ் வடிவம். இது பன்மை வடிவமாக இருந்தாலும், தனி மனிதருக்கும் இந்த சொல் பாவிக்கப்படுகிறது. நெஞ்சே என்கின்ற சொல் (נֶפֶשׁ நெபெஷ்), ஒருவரின் சுயத்தை அல்லது ஆன்மாவைக் குறிக்கும். அல்லேலூயா என்ற சொல் இன்று பல செபங்களில் வியங்கோள் அல்லது கட்டளை சொல்லாக வழங்கி வருகிறது.

வ.2: எபிரேய திருப்பிக்கூறல் அழகாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அ1. நான் உயிரோடு உள்ளவரை - אֲהַלְלָה יְהוָה 'அஹல்லாஹ் அதோனாய்

ஆ1. ஆண்டவரை போற்றிடுவேன் - אֲזַמְּרָה לֵֽאלֹהַי 'அட்சாம்ராஹ் லெ'லோகய்

அ2. என் வாழ்நாள் எல்லாம் - בְּחַיָּ֑י பெகாய்

ஆ2. கடவுளை புகழ்ந்து பாடுவேன். - בְּעוֹדִי׃ பெ'ஓதி

இந்த வரிகள் இப்படியான புகழ்சிப்பாடல்களின் மையக் கருத்ததை வெளிப்படையாகவே காட்டுகின்றன. மனித பிறப்பின் காரணமும், இலக்கும் கடவுளை புகழ்தலே என்ற முதல் ஏற்பாட்டின் மிக முக்கியமான இறையியல் ஒன்றை நமக்கு நினைவூட்டுகின்றன.

வ.3: ஆட்சியாளர்களை மிகவும் நக்கலாக கிண்டலடிக்கிறார் ஆசிரியர். அவர்களை நம்பவேண்டாம் என்றும், அவர்கள் சாதாரன மானிடர்களே என்பதையும் மற்றவர்களுக்கு தெளிவூட்டுகிறார். ஆட்சியாளர்களை (נְדִיבִים בְּבֶן நெதிபிம் பெபென்- அரச மக்களில்), தெய்வீக பிறப்புக்களாக இஸ்ராயேலின் அயலவர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கை படிப்படியாக இஸ்ராயேல் வழிபாட்டிலும் வளர தொடங்கிய ஆபத்தை ஆசிரியர் சாடுவதனைப் போல இந்த வரி உள்ளது. இப்படியான தலைவர்கள் ஒரு விசுவாசியை காப்பாற்ற முடியாதவர்கள், ஏனெனில் அவர்களும் சாதாரண மனிதர்களே என்பது இவர் வாதம்.

அரசர்களையும், தலைவர்களையும் சாதாரண மக்கள் தங்களுக்கு மேலானவர்கள் என கருதுவதும் அல்லது அவர்களை கடவுள்களாக காண்பதும் இன்றளவும் இயல்பில் உள்ளது. கடவுள் மனிதர்களை மட்டும்தான் படைத்தார். மனிதர்கள்தான் அரசர்களையும், வகுப்பு பிரிவுகளையும் படைத்தனர். இது அடிப்படையிலே பிழையானது என்பதில் முழு விவிலியமுமே மிகத் தெளிவாக உள்ளது.

வ.4: இந்த வரி, ஏன் மனித தலைவர்கள் நம்ப முடியாதவர்கள் என்பதை விளக்குகிறது. மனிதர்கள் பிரியக்கூடிய ஆவியால் உருவானவர்கள், அவர்களின் ஆவி (רוּחַ றுவாஹ்) பிரியும்போது அவர்கள் மண்ணுக்கு திரும்புவார்கள் என்கிறார் இந்தப் பாடலாசிரியர். இது அவர்கள் மண்ணினால் உருவானவர்கள் என்ற தொடக்க நூல் நம்பிக்கையை நினைவூட்டுகிறது. மேலும், அவர்களின் இறப்போடு, அவர்களின் (ஆட்சியாள்களின்) எண்ணங்களும் மறையும் என்று, மிக ஆழமான மெய்யறிவையும் வாசகர்களுக்கு முன்வைக்கிறார்.

வ.5: மேற்குறிப்பிட்ட ஆட்சியாளர்களைப் போலல்லாது, யாக்கோபின் கடவுள் உயர்ந்தவர் என்ற சிந்தனையை முன்வைக்கிறார். 'யாக்கோபின் இறைவன்' (אֵל יַעֲקֹב 'எல் யா'அகோவ்) என்பது, முதல் ஏற்பாட்டில் கடவுளுக்கு கொடுக்கப்பட்ட அழகான பெயர்களில்; ஒன்று. இது யாக்கோபுக்கும்- கடவுளுக்கும்- இஸ்ராயேலருக்கும் இடையிலான நம்பிக்கையின் உறவைக் குறிக்கிறது. பேறு பெற்றோர் என்போர், இஸ்ராயேல் மக்களுக்கு மிக முக்கியமானவர்கள். நம்முடைய புனிதர்களை இது நினைவூட்டுகிறது எனலாம். இந்த பேறுபெற்றவர்களுக்கு ஒரு வரைவிலக்கணமாக அவர்கள் கடவுளாகிய ஆண்டவரை நம்பியிருப்போர் என்கிறார்.

நம்பிக்கை, பேறுபெற்றோரின் உன்னதமான பண்பு என்பது புதிய ஏற்பாட்டின் மிக முக்கியமான படிப்பினை. இந்த படிப்பினை முதல் ஏற்பாட்டிலும் காணப்படுகிறதை இந்த வரியில் காணலாம் (✼ஒப்பிடுக: லூக் 7,50), அல்லது இந்த படிப்பினையின் தொடர்சியாகவே புதிய ஏற்பாடு இருக்கிறது எனவும் கருதலாம். (✼இயேசு அப்பெண்ணை நோக்கி, 'உமது நம்பிக்கை உம்மை மீட்டது அமைதியுடன் செல்க' என்றார்.)

வ.6: இந்த கடவுள் யார் என்று விளக்க முயல்கிறார் ஆசிரியர். இந்த கடவுள் புராணக் கதைகளிலுள்ள பெயர் தெரியாத கடவுள் அல்ல, மாறாக இவர் விண் (שָׁמַיִם ஷமாயிம்), மண் (אָרֶץ 'எரெட்ஸ்), கடல் (יָּם யாம்) மற்றும் அவற்றில் உள்ள யாவற்றையும் படைத்தவர். இந்த மூன்று பொளதீக சக்திகளும் அக்கால மக்களுக்கு பல ஆச்சரியங்களையும், கேள்விகளையும் கொடுத்தன. இவற்றை படைத்தவர்களாக பலரை பாரசீக, பபிலோனிய, கிரேக்க கதைகள் முன்மொழிந்தன. இஸ்ராயேல் ஆசிரியர், இவற்றை உருவாக்கியவர், பெயர் தெரியாக் கடவுள் அல்ல மாறாக அவர் யாக்கோபின் கடவுள், அத்தோடு இந்த கடவுள்தான் என்றென்றும் நம்பிக்கையை காப்பாற்றுகிறவர் என்கிறார்.

வ.7: ஆண்டவரின் முப்பரிமாண மீட்புச் செயல்கள் பாராட்டப்படுகின்றன. அ. ஒடுக்கப்பட்டோருக்கு நீதி (עֹשֶׂה מִשְׁפָּט ׀ לָעֲשׁוּקִ֗ים 'ஓசெஹ் மிஷ்பாத், லா'அஷுகிம்):

ஒடுக்கப்பட்டோருக்கு நீதி செய்தல் இக்காலத்தில் மட்டுமல்ல, அக்காலத்திலும் மிக முக்கியமான சமூக பணியாக பார்கப்பட்டது. எளியவர்கள் பலவாறு ஒடுக்கப்பட்டார்கள். நீதியில்லாத கட்டமைப்பு இவர்களுக்கு ஆபத்தானதாகவே அமைந்தது. இதனால் இவர்கள் தலைவர்களின் இரக்கத்தையே அதிகமாக நம்பினார்கள், இருப்பினும் பல அரசியல் தலைவர்கள் இந்த கடமைகளில் தவறியவர்களே. இவர்களைப் போல் அல்லாது இஸ்ராயேலின் கடவுள் ஒடுக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவார் என்கிறார் ஆசிரியர். சமூக கட்டமைப்பு என்பது அதிகமான வேளைகளில் பலமானவர்களால் அவர்கள் நலனுக்காகவே உருவாக்கப்படுகின்றன. ஆனால் கடவுளின் கட்டமைப்பு அனைவருக்குமானது. அதனைத்தான் விவிலியம் ஆண்டவரின் நியமங்கள் என்கிறது.

ஆ. பசித்தோருக்கு உணவு (נֹתֵן לֶחֶם לָרְעֵבִ֑ים நோதென் லெஹெம் லார்'எபிம்): உணவு மனிதரின் அடிப்படைத்தேவைகளில் மிக முக்கியமானது. உணவினால்தான் பல புரட்சிகளும், போர்களும் வரலாற்றில் உருவாகின்றன. பசியால் வாடுதல், வறுமை என்பவை சாத்தானின் கோர முகங்கள். இந்த வறுமையிலிருந்து தலைவர்கள் அல்ல, மாறாக கடவுள்தான் தம் மக்களை காக்கிறவர் என்கிறார் ஆசிரியர்.

உணவு கொடுக்கிறவர் தெய்வம். இந்த சொற்களுக்கு பின்னால் பல விவிலிய இறையியல் பொதிந்து கிடக்கிறது.

இ. சிறைப்பட்டோருக்கு விடுதலை (מַתִּיר אֲסוּרִים׃ மதிர் 'அசூரிம்): அதிகமான குற்றவாளிகள் சிறையில் இல்லை வெளியில்தான் இருக்கிறார்கள், பல நல்லவர்களும் சிறையில் வாடுகிறார்கள் என்பது மனித உரிமை வாதிகளின் வாதம். விவிலிய கால உலகில் பல காரணங்களுக்காக அப்பாவிகள் சிறையில் வாடினார்கள். இவர்களின் விடுதலை மனித தலைவர்களின் சுய விருப்பத்திலேயே தங்கியிருந்தது. இப்படியில்லாமல், கடவுள் சிறைப்பட்டோரை உண்மையாக விடுவிப்பவர் என்கிறார் ஆசிரியர் (இலங்கை அரசியலைப் போல - இங்கே அவர்கள் விரும்பினால் பிடிப்பார்கள், பின்னர் விடுவார்கள், விட்டும் பிடிப்பார்கள், ஏதோ பிடிபடுகிறவர்கள், விலங்குகள் போல்).

இந்த மூன்று சமூகப் பணிகள் புதிய ஏற்பாட்டில் இயேசுவிற்கு பல விதத்தில் ஒப்பிடப்படுகிறது, இயேசுவும் தன்னுடைய பணிகள் இவைதான் என, பல இடங்களில் காட்டியுள்ளார். ஆக இந்த பணிகள் இறைவனின் பணிகள் என்பது புலனாகின்றன.

வ.8-9: இந்த வரிகளில், இன்னும் மேலதிகமான தனிமனித நல்வாழ்வின் நலன்கiளை ஆண்டவர் செய்வதாக ஆசிரியர் பாடுகிறார்.

அ. பார்வையற்றவரின் கண்களை திறத்தல் - பாhவையற்றவர் வாழ்ந்தும் இறந்தவராக கருதப்பட்டவர். அத்தோடு பார்வையற்ற தன்மை கடவுளின் தண்டனையாகவும் கருதப்பட்டது. பார்வைபெறுவது என்பது ஒருவர் மீண்டும் உயிர் பெறுதலுக்கு சமனாக பார்க்கப்பட்டது. עִוְרִ֗ים 'இவ்ரிம்- பார்வையற்றவர்கள்.

ஆ. தாழ்த்தப்பட்டோருக்கு (כְּפוּפִ֑ים கெபூபிம்.) உயர்ச்சி - பலவிதமான தாழ்ச்சிகளை விவிலிய கால உலகம் காட்டுகிறது. முக்கியமாக பெண்கள், கைம்பெண்கள், ஏழைகள், நோயாளிகள், புறவினத்தவர், சிறுவர்கள் மற்றும் பலர் இந்த வகைக்குள் அடங்குவர். இவர்கள் சந்தித்த தாழ்ச்சி அவர்களை மிகவும் பலவீனப்படுத்தியது. அத்தோடு இவர்களை இரண்டாம்தர குடிமக்களாக்கியது. இவர்களும் மதிக்கப்படாத மனிதர்களாவே பார்க்கப்பட்டார்கள்.

இ. நீதிமான்களுக்கு அன்பு - நீதிமான்கள் (צַדִּיקִֽים ட்சதிகிம்) கடவுளுடைய சட்டங்களை கடைப்பிடிப்பவர்கள் என்று முதல் ஏற்பாடு அழகாக காட்டுகிறது (✼காண்க தி.பா 1,2). நீதிமான்களை கடவுள் அன்பு செய்கிறார் என்பது முதல் ஏற்பாடு காட்டுகின்ற ஓரு முக்கியமான படிப்பினை. இதன் வாயிலாக ஒருவர் கடவுளின் அன்பை பெற நீதிமானாக வாழ வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்படுகிறது.

(✼2ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்;).

ஈ. அயல் நாட்டினர்க்கு பாதுகாப்பு - அயல் நாட்டினரை (גֵּרִ֗ים கெரிம்) இஸ்ராயேல் மக்கள் உட்பட பலர் தரக்குறைவானவராகவே கருதினர். இஸ்ராயேல் மக்களின் சகோதரத்துவம் தங்கள் மக்களை மட்டுமே உள்வாங்கியது. ஆனால் இந்த திருப்பாடலின் வரி இஸ்ராயேலின் உண்மை ஆன்மீகத்தை காட்டுகிறது. அதாவது அயல் நாட்டவரும் இஸ்ராயேல் கடவுளின் பிள்ளைகள் என்பது இங்கே புலப்படுகிறது.

உ. அனாதைப் பிள்ளைகளையும், கைம் பெண்களையும் ஆதரிக்கிறார் - இந்த இரண்டு வகையான குழுக்கள் பல சக்திகளால் சுரண்டப்பட்டவர்கள். இஸ்ராயேல் சமுகத்தின் அடி தட்டு மக்கள் என்று கூட இவர்களைச் சொல்லலாம். இயற்கை அழிவுகள், மற்றும் மனித செயற்பாட்டு அழிவுகளால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் இவர்களே. இவர்களை காத்தல், அரசன் மற்றும் அரசியல் தலைவர்களின் முக்கியமான கடமையாக கருதப்பட்டது. יָתוֹם וְאַלְמָנָה யாதோம் வெ'அல்மானாஹ்- அனாதைகள் மற்றும் கைம்பெண்கள்.

ஆனால் அதிகமான சந்தர்பங்களில் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களாகவே தொடர்ந்து இருந்தனர். ஆனால் கடவுளின் பார்வையில் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களில்லை, அவர்கள் அவர் பாதுகாப்பிற்கு உரியவர்கள் என்பது ஆசிரியரின் வாதம்.

ஊ. பொல்லாரை கவிழ்கிறார் - மேற்குறிப்பிட்ட வாதங்கள் கடவுளின் ஆக்க செயற்பாட்டை காட்டுகின்ற அதேவேளை, இது கடவுளின் தண்டனையைக் காட்டுகிறது. கடவுள் இரக்கமுடையவர் இருப்பினும் கடவுளின் இன்னொரு முகம் நீதி மற்றும் நீதித்தீர்ப்பு. கடவுளின் இரக்கத்தால் பொல்லாருக்கு வாய்ப்பு கிடையாது, மாறாக அவர்கள் தங்கள் பொல்லாப்பிலிருந்து அழிவது திண்ணமே என்கிறார் ஆசிரியர். רְשָׁעִים ரெஷா'யிம்- பொல்லாதவர்கள்.

வ.10: இந்த இறுதியான வசனம், சீயோனுக்கு (צִיּוֹן ட்சியோன்) புகழ் பாடுவது போல் உள்ளது. கடவுளின் ஆட்சி காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் ஆட்சியல்ல அத்தோடு சீயோன் என்பது ஒரு சாதாரண அரசியல் தலைவரின் ஆட்சிப் பீடம் அல்ல, மாறாக அது காலத்தை கடந்த கடவுளின் வீடு உள்ள இடம் என்பதை காட்டுகிறார் ஆசிரியர்.

அல்லேலூயா என்ற சொல்லுடன் தொடங்கிய இந்த அழகான திருப்பாடல் அதே சொல்லுடன் முடிவடைவது இந்த வகை திருப்பாடல்களின் தனித்துவம்.



இரண்டாம் வாசகம்
எபிரேயர் 9,23-28

கிறிஸ்துவின் பலி பாவங்களைப் போக்குகிறது

23ஆதலின், விண்ணகத்தில் உள்ளவற்றின் சாயல்களே இத்தகைய சடங்குகளால் தூய்மை பெறவேண்டுமென்றால், மண்ணகத்தில் உள்ளவை இவற்றிலும் சிறந்த பலிகளால் அல்லவா தூய்மை பெறவேண்டிருக்கும்! 24அதனால்தான் கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்டதும் உண்மையான தூயகத்திற்கு முன்னடையாளமாய் இருப்பதுமான இவ்வுலகத் தூயகத்திற்குள் நுழையாமல் விண்ணுலகிற்குள்ளேயே நுழைந்திருக்கிறார். அங்கே இப்போது நம் சார்பாகக் கடவுளின் திருமுன் நிற்கிறார். 25தலைமைக்குரு விலங்குகளின் இரத்தத்துடன் ஆண்டுதோறும் தூயகத்திற்குள் செல்வார். அதற்கு மாறாக, கிறிஸ்து தம்மையே ஒரே முறை பலியாகக் கொடுத்தார். அதை மீண்டும் மீண்டும் செய்யவில்லை. 26அவ்வாறு செய்திருப்பாரென்றால், உலகம் தோன்றிய காலந்தொட்டு, அவர் மீண்டும் மீண்டும் துன்புற்றிருக்கவேண்டும். அதற்கு மாறாக, உலகம் முடியும் காலமான இப்போது தம்மையே பலியாகக் கொடுத்து, பாவங்களைப் போக்குவதற்காக ஒரே முறை உலகில் வெளிப்படுத்தப்பட்டார். 27மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர். பின்னர் இறுதித் தீர்ப்பு வருகிறது. இதுவே அவர்களுக்கெனவுள்ள நியதி. 28அவ்வாறே, கிறிஸ்துவும் பலரின் பாவங்களைப் போக்கும் பொருட்டு, ஒரேமுறை தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். அவர் மீண்டும் ஒருமுறை தோன்றுவார். ஆனால், பாவத்தின் பொருட்டு அல்ல, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவார்.


கடந்த வாரங்களைப் போலவே இந்த வாரமும் இரண்டாம் வாசகம் ஆண்டவரின் தலைமைக்குருத்துவத்தை பற்றியதாகவே எபிரேயர் புத்தகத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இன்றைய இரண்டாம் வாசகம் கிறிஸ்துவின் குருத்துவ உடன்படிக்கை செயற்பாடுகளை விவரிக்கும் பகுதியலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி (8-10 வரையான அதிகாரங்கள்) இயேசு மெல்கிசதேக்கின் வழிவந்த ஆதி-அந்தமில்லாத உண்மையான குரு என்பதையும், அவர் வழியாகவே மட்டுமே நிலையான மீட்பு உண்டு என்பதையும் விவரிக்கின்றது. எருசலேம் ஆலயம் கடவுளின் வானக இருப்பிடத்தின் முன்னடையாளம் என்ற சிந்தனை இரண்டாவது ஆலயத்தின் காலத்தில் உதித்திருக்க வேண்டும். இது கிறிஸ்தவர்களின் சிந்தனை அல்ல, ஏற்கனவே இஸ்ராயேலர்கள் கடவுளை உலக ஆலயத்தில் அடக்க முடியாது என்பதனை ஏற்றுக்கொண்டனர். சாலமோனின் ஆலயத்திலும் பின்னர் வந்த இரண்டாம் ஆலயத்திலும் மிக புனிதமான இடம் என்று ஒன்று இருந்தது, அங்கே விடுதலைபயண அனுபவத்தின் எச்சங்கள் இருந்ததாக இஸ்ராயேலர் நம்பினர். வருடத் தவணையில் தலைமைக் குரு அதனுள் நுழைந்து மக்களின் பாவங்களுக்காக பரிகாரப் பலி செய்வார்.

வ.23: விண்ணகத்தையும் மண்ணகத்தையும் ஒப்பிடவேண்டாம் என்;கிறார் ஆசிரியர். மண்ணகம் என்றுமே விண்ணகத்தைவிட தாழ்வானவை என்பது சொல்லப்படுகிறது. மண்ணகத்தில் உள்ளவவை விண்ணகத்தின் சாயல் என்றால், விண்ணகத்தின் பலி முறைகள் ஏன் விண்ணகத்தை பிரதிபலிக்கவில்லை என்பது இவருடைய கேள்வி. இங்கே ஆசிரியர் மண்ணக அதாவது எருசலேம் தேவாலயத்தின் நடைபெறும் பலிகளைப் பற்றியே பேசுகிறார் என எடுக்கலாம். இந்த புத்தகம் எழுதப்பட்ட வேளை, எருசலேம் தேவாலயம் அழிந்திருக்க வேண்டும். இருந்தாலும் அதன் நினைவுகள் அழியாமல் இருந்திருக்கும்- எருசலேம் தேவாலயத்தின் நினைவுகள் என்றும் அழியாது.

வ. 24: உலக புனித இடத்தையும் வானகத்தையும் ஒப்பிடுகிறார் ஆசிரியர். இயேசுதான் உண்மையான தலைமைக் குரு என்பது அவர் வாதம். மண்ணக தலைமைக்குருவும் மண்ணக ஆலயமும் கடவுளின் உண்மையான குருவான இயேசுவிற்கு முன்னால் ஒன்றுமில்லை என்கிறார். எருசலேம் தேவாலயம், விண்ணக தூயகத்திற்கு அடையாளமாக இருப்பதுதான் இருந்தாலும், அதற்குள் இயேசு நுழையவேண்டிய தேவையில்லை என்பது சொல்லப்படுகிறது. அவர் நேரடியாக விண்ணக தூயகத்திற்குள்ளேயே நுழைந்துவிட்டார், நமக்காக, என்பது விளங்கப்படுத்தப்படுகிறது.

வ.25: ஒவ்வொரு வருடமும் ஒப்புக்கொடுக்கப்படும் மிருக பலியினால் பயனில்லை என்பதுபோல சாடுகிறார். மிருக பலிக்கு பதிலாக இயேசுவின் சொந்த இரத்தம் சிந்தப்பட்டதனால். மனித குருத்துவம் தேவையில்லை என்பதனைப்போல கூறுகிறார். இயேசுவின் பலியும் ஒரே ஓரு முறை செலுத்தப்பட்ட நித்திய பலி என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த நூல் சில வேளைகளில் ஆரம்ப கிறிஸ்தவர்களுக்கும் எருசலேம் தேவாலயத்திற்கும் இடையிலான விரிசலை அல்லது, தேவாலயம் அழிக்கப்பட்டிருந்த வேளையில் எழுந்திருந்த சில கருத்துக்களை பின்புலமாகக் கொண்டிருக்கிறது என சிலர் கருதுகின்றனர்.

வ.26: இயேசு தன்மக்களின் பாவத்திற்காக தொடர்ச்சியாக தூயகத்தினுள் செல்லவேண்டிய தேவையில்லை அத்தோடு, அவர் தன்னை தொடர்ச்சியாக பலிகொடுக்கவும் வேண்டியதில்லை. அப்படியாயின் அவர் உலகம் தொடங்கிய காலத்திலிருந்தே பலியாகிக்கொண்டிருக்க வேண்டும். அவர் நுழைவு ஒருமுறைதான் பலியும் ஒரு முறைதான்.

வவ. 27-28: மனிதர்களின் மரணத்தையும் கிறிஸ்துவின் பலியையும் ஒப்பிடுகிறார் ஆசிரியர். சாவின் பின்னர் நீதித் தீர்ப்பு உண்டென ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் இக்காலத்திலேயே நம்பத் தொடங்கிவிட்டதனை இந்த வரியில் காணலாம். இந்த சாவும் தீர்வையும் ஒரு முறை நடப்பதனைப் போலவே கிறிஸ்துவின் பலியும் நடந்தது எனவும், இன்னொருமுறை கிறிஸ்து தோன்றவும் இருக்கிறார் என்பதையும் ஆசிரியர் விளங்கப்படுத்துகிறார். κρίσις கிரிசிஸ்- தீர்ப்பு. மனிதரின் நியதி, ஒருமுறை சாவதும், இறுதி தீர்ப்பை எதிர்நோக்குவதும் ஆகும்.

இரண்டாவது முறையான தோற்றம், பலியாக அல்ல மாறாக காத்திருப்போருக்கு மீட்பை கொடுக்க என்கிறார் இந்த பெயர் தெரியாத ஆசிரியர். கிறிஸ்துவின் நியதி, ஒருமுறை பலரின் பாவத்திற்காக தன் உயிரைக் கொடுப்பதும், மீண்டும் ஒருமுறை தோன்றுவதுமாகும். கிறிஸ்து மீண்டும் தோன்றுதல், பாவத்தின் பொருட்டு அல்ல மாறாக தன்காக காத்திருப்போருக்கு மீட்பு அளிக்கவே (σωτηρία சோடேரியா- மீட்பு).


நற்செய்தி வாசகம்
மாற்கு 12,38-44

மறைநூல் அறிஞரைக் குறித்து எச்சரிக்கை

(மத் 23:1-36; லூக் 20:45-47)

38இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது, 'மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் தொங்கல் ஆடை அணிந்து நடமாடுவதையும் சந்தை வெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறார்கள்; 39தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விருந்துகளில் முதன்மையான இடங்களையும் பெற விரும்புகிறார்கள்; 40கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்; நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதாக நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் இவர்களே' என்று கூறினார்.

ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கை

(லூக் 21:1-4)

41இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக அமர்ந்துகொண்டு மக்கள் அதில் செப்புக்காசு போடுவதை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். செல்வர் பலர் அதில் மிகுதியாகப் போட்டனர். 42அங்கு வந்த ஓர் ஏழைக் கைம்பெண் ஒரு கொதிராந்துக்கு இணையான இரண்டு காசுகளைப் போட்டார். 43அப்பொழுது, அவர் தம் சீடரை வரவழைத்து, 'இந்த ஏழைக் கைம்பெண், காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட மிகுதியாகப் போட்டிருக்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 44ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்' என்று அவர்களிடம் கூறினார்.


இன்யை நற்செய்தி வாசகம் இரண்டு அழகாக நிகழ்வுகளைக் நமக்கு தருகின்றன. முதலாவது பகுதியில் இயேசு மறைநூல் அறிஞர்களை கடுமையாக சாடுகிறார். இரண்டாவது பகுதியில் ஏழைக் கைம்பெண் ஒருவரை அனைவருக்கும் உதாரணமாக ஆண்டவர் எடுக்கிறார்.

வ.38: மறைநூல் அறிஞர்கள்- γραμματεύς கிராம்மாடெயூஸ்- மறைநூல் அறிஞர்கள். வாசிக்க எழுத தெரிந்தவர்கள், அனைவரும் மறைநூல் அறிஞர்கள் எனப்படுவர். இவர்கள் பல நாடுகளில் பல அரசுகளில் பணியாற்றியிருக்கிறார்கள். இவர்களைப்போலவே விவிலிய உலகிலும் மறைநூல் அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். தாவீது-சாலமோனின் காலத்தில்தான் இவர்கள் தொழில் ரீதியாக பணியில் இருந்திருக்கிறார்கள் எனலாம். அதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளில் அவர்களின் பணி தொடர்ந்திருக்கிறது. இராபிக்கள் அத்தோடு இக்கால யூத அறிஞர்களையும் இந்த தொடர்பில் எடுக்கலாம்.

முதல் ஏற்பாட்டுக் காலத்தில், தோறா (சட்டம்) கற்றுத்தேர்ந்தவர்கள் மறைநூல் அறிஞர்கள் என அறியப்பட்டார்கள். பாரசீக காலத்தில் எஸ்ரா மிக முக்கியமான மறைநூல் அறிஞராக இருந்தார் (காண்க எஸ்ரா 7,6.10). הוּא־סֹפֵר ஹு'-சோபெர், அவர் ஒரு மறை நூல் அறிஞர்). இயேசுவுடைய காலத்திற்கு சற்று முன் வாழ்ந்த பென் சீரா (கி.மு 180), மறைநூல் அறிஞர்கள் கடவுளுடைய வெளிப்பாட்டைக் காட்டக்கூடியவர்கள் என்கிறார். மறைநூல் அறிஞர்கள் விவிலியத்தைவிட மேலும் வேற்று நாட்டு பாரம்பரியங்களையம், புத்தகங்களையும் அறிந்திருக்கிறார்கள். சிலவேளைகளில் இவர்கள் நீதிபதிகளாகவும் இருந்திருக்கிறார்கள். மக்கள் இவர்களுக்கு மிகவும் முக்கியத்துவமும், மரியாதையும் கொடுத்தார்கள்.

இயேசுவுடைய கொலையோடு இவர்கள் சம்மந்தப்பட்டவர்கள் என்ற நம்பிக்கையால் புதிய ஏற்பாட்டில் இவர்கள் அதிகமான எதிர்மறையான விளங்கங்களைப் பெறுகிறார்கள் எனலாம். மத்தேயு இவர்களை கடுமையாக சாடுவார். ஆரம்ப கிறிஸ்தவர்கள் எதிர்கொண்ட துன்பங்கள் காரணமாக இப்படியான நிலை தோன்றியிருக்கலாம் (காண்க மத்தேயு 23). இயேசு மறைநூல் அறிஞர்கள் எவரையும் தனிப்பட்ட ரீதியில் எதிர்கவில்லை அல்லது, அவர்களை எதிரிகளாகவும் காணவில்லை. அவர் அவர்களுடைய கொள்கைகளையும் பிழையான அணுகுமுறையையுமே எதிர்த்தார். அதுவும் அவர் நேரடியாகவே எதிர்த்தார். இதனைவிட சில மறைநூல் அறிஞர்கள் இயேசுவுடைய நண்பர்களாகவும், சீடர்களாகவும் இருந்ததற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

இந்த வரி ஆண்டவருடைய கற்பித்தலின் ஒரு பகுதியாகவே வருகின்றது. மறைநூல் அறிஞர்களைக் குறித்து கவனமாக இருக்குமாறு ஆண்டவர் கேட்கிறார். அவர்களுடைய நடை உடை பாவனையை விரும்பாதவர் போல காணப்படுகிறார் அல்லது அதனை அவர் வெளிவேடத்தனமாக காண்கிறார் என எடுக்கலாம். அக்கால யூத பழமைவாதிகள் (இக்காலத்திலும் கூட) தொங்கல் ஆடை அணிவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். இயேசு இந்த ஆடையை வெறுக்கவில்லை, மாறாக அவர் இந்த ஆடையின் மகத்துவத்தை அவர்கள் பேணவில்லை என்பதில் ஆதங்கம் கொள்கிறார் எனலாம். στολή ஸ்டொலே- தொங்கலாடை.

மேலும் அவர்கள் பெறும் வாழ்த்தையும் இயேசு எதிர்க்கவில்லை, மாறாக அந்த வாழ்த்தின் மாண்பினைப் பற்றியே ஆதங்கம் கொள்கிறார். ἀσπασμός அஸ்பாஸ்மொஸ்- வாழ்த்து.

வவ.29-30: முன்னைய வரியில் இயேசு வெளிப்படுத்திய ஆதங்கத்தை இந்த வரிகள் தெளிவு படுத்துகின்றன. அவர்களுடைய வெறுக்கத்தக்க செயல்களை இயேசு அட்டவணைப் படுத்துகிறார்.

அ. தொழுகைக் கூடங்களில் முதன்மையான இடம்: சாதாரணமாக மறைநூல் அறிஞர்கள் தொழுகைக் கூடங்களில் மிக முக்கியமான இடத்தை பெற்றார்கள். அங்கே வாசிக்கப்படும் முதல் ஏற்பாட்டு வாசகங்களின் விளக்கங்களை அவர்கள்தான் கொடுத்தார்கள். சிலவேளைகளில் இவர்கள் தொழுகைகூடத்தில் இருந்த மோசேயின் இருக்கைகளிலும் அமர்த்தப்பட்டார்கள். πρωτοκαθεδρίας ἐν ταῖς συναγωγαῖς புரோடொகாதெர்ரியாஸ் என் டாய்ஸ் சுனாகோகாய்ஸ்- செபக்கூடங்களில் முதன்மையான இருக்கை.

ஆ. விருந்துகளில் முதன்மையான இடங்கள்: இவர்கள் சமுதாயத்தில் மதிக்கப்பட்டவர்களாக இருந்ததால், விருந்துபசாரங்களில் இவர்கள் பிரத்தியோகமாக கவனிக்கப்பட்டார்கள். இவர்களை மக்கள் அதிகமாக விரும்பியதால் பல சலுகைகளை அவர்களால் பெறமுடிந்தது. இந்த சலுகைகள் அவர்கள் வாழ்வை நோக்கியதாகவே இருந்தது. வாழ்வு வித்தியாசமாக மாறுகின்றபோது இந்த சலுகைகள் வெறும் லஞ்சமாகவே பார்க்கப்படும். இதனைத்தான் இயேசு கடிந்துகொள்கிறார். πρωτοκλισίας ἐν τοῖς δείπνοιςஇ புரோடொக்லிசியாஸ் என் டொய்ஸ் தெய்ப்னொய்ஸ்- விருந்தில் முதன்மையான இடம்.

இ. கைப்பெண்களின் வீடுகள்: கைம்பெண்கள் யூத ஆண் சமுதாயத்தில் மிகவும் பலவீனமானவர்களாக கருதப்பட்டடர்கள். இவர்கள் பலவற்றிக்காக பலரில் தங்கியிருந்தார்கள். இவர்களுடைய சட்ட வேலைகள் மற்றும் ஆன்மீக தேவைகளுக்காக மறைநூல அறிஞர்களின் உதவி இவர்களுக்கு தேவைப்பட்டிருக்கலாம். கைம்பெண்களின் வீடுகள் என்று குறிப்பிடப்படுவது அவர்களின் பொருட்களைக் குறிக்கலாம் (οἰκίας τῶν χηρῶν ஒய்காய்ஸ் டோன் கோரோன்- கைம்பெண்களின் வீடுகள்). இந்த பொருட்களை சிலவேளைகளில் பொல்லாத மறைநூல் அறிஞர்கள் ஏமாற்றி பெற்றிருக்கலாம், அல்லது துஸ்பிரயோகம் செய்திருக்கலாம்.

யூத சமுதாயம் பெண்களுக்கு எதிரான சமுதாயம் என்று எடுக்கக்கூடாது, அக்கால சமுதயாஙகளில், யூத சமுதாயம் பல விதத்தில் முன்மாதிரியாகவே விளங்கியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இருந்தாலும் பாதிக்கப்படும் பெண்களுக்காகவும், தங்கள் நிலைகளை தவறாக பயன்படுத்தும் பிழையான தலைவர்களையும் நோக்குகிறார் ஆண்டவர்.

ஈ. நீண்ட நேரம் செபிப்பதாக நடிப்பு: யூத மக்களின் செப வாழ்க்கை மிகவும் அழகானது. திருப்பாடல்கள் மற்றும் இறைவாக்குகளை உள்ளடக்கி அவர்களின் செபங்கள் மிக நேர்த்தியாக அமையும். இருந்தாலும், மறைநூல் அறிஞர்கள் தங்களுக்கென்று தனித்துவமான செபங்களை உருவாக்கியிருந்தார்கள்.

இவர்கள் நீண்ட நேரம் செபிப்பதன் வாயிலாக, மக்களின் பாராட்டை பெற்றார்கள். இருந்தாலும். இந்த பாராட்டை பெறும் பொருட்டு நீண்ட நேரம் செபிப்பதை போல் இவர்கள் நடித்ததையே ஆண்டவர் கடுமையாக சாடுகிறார்.

உ. இவர்கள்தான் தண்டனை தீர்ப்பிற்கு உள்ளாகப் போகிறார்கள் என்று இந்த வரிகள் முடிவடைகின்றன. தப்பு செய்கிறவர்கள் தண்டனை பெறவேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டிய இவர்களே குற்றம் செய்தால், அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். இதனைத்தான் இந்த முடிவு காட்டுகிறது (οὗτοι λήμψονται περισσότερον κρίμα. ஹுடொய் லம்ஸ்சான்டாய் பெரிஸ்சொடெரொன் கரிமா- இவர்கள் பெரிய தண்டனை பெறுவார்கள்).

41: ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கை: எருசலோம் தேவாலயத்தில் பலவிதமான காணிக்கைகள் செலுத்தப்பட்டன. இந்த காணிக்கையை செலுத்துவதற்கான பாரம்பரியங்களும் சட்டங்களும் வித்தியசமாக இருந்தன. உரோமைய அரசாங்கம் பலவிதமான வரிகளை மக்கள் மேல் சுமந்த எருசலேம் தேவாலயமும் பலவிதமான சமய காணிக்கையை அதன் மக்களிடம் இருந்து எதிர்பார்த்தது.

மறைநூல் அறிஞர்களை கடுமையாக எதிர்த்தவர் இப்போது ஆலய வளாகத்தினுள் இருந்து கொண்டு, மக்களின் நடவடிக்கையை அவதானிக்கிறார். இந்த முறை காணிக்கை பெட்டி (γαζοφυλακίου கட்சுப்சுலாகியூ- காணிக்கை பெட்டி) அவரின் பார்வையை பெறுகிறது. எக்காள வடிவில் 13 இப்படியான பெட்டிகள் எருசலேம் தேவாலயத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. அதிகமான ஆலயங்கள் உண்டியல்களையே நம்பியிருக்கின்றன. எருசலேம் தேவாலயமும் அதனைத்தான் செய்கிறது. இந்த இடத்தில் அனைவரையும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கையில் இயேசு இந்த இடத்தை தேர்வு செய்கிறார். மக்கள் இதில் செப்பு காசு போடுவதையும் பணக்காரர்கள் அதிகமாக போடுவதையும் அவர் நோக்குகிறார்.

செப்புக் காசுகளைக் குறிக்க χαλκός கால்கொஸ் என்ற சொல் பாவிக்கப்படுகிறது. இது செப்பு தகடாக இருந்திருக்கலாம்.

வ.42: ஏழைக்கைம்பெண்ணின் செயல் இயேசுவின் பார்வையை ஈக்கிறது. இந்த குறிப்பிட்ட ஏழைக் கைம்பெண் தன்னிடம் இருந்த இரண்டு காசுகளைப் போடுகிறார். இதனை ஒரு கெதிராத்திற்கு இணையான பணம் எனப் பார்க்கிறார் ஆசிரியர்.

இந்த கெதிராத்தை கிரேக்க விவிலியம் λεπτὰ δύο, (லெப்டா துவொ) என்கிறது. இது ஒரு தெனாரியத்தில் 128 இல் ஒரு பகுதி. அதாவது ஒரு தொனாரியம் என்பது ஒரு நாட்கூலி. இப்படியிருக்க, வெறு ஆறு நிமிடங்கள் மட்டுமே வேலைசெய்தால் கிடைக்கும் மிக மிக பெறுமதி குறைந்த பணம்தான் இந்த லெப்டொன் என்னும் காசுகள். இவை கொப்பரினால் செய்யப்பட்டன. நம்முடைய பணமதிப்பின் படி 1500 இலங்கை ரூபாய்களுக்கு வெறும் 11 ரூபாய்கள் மட்டுமே தேறும்.

இந்த பணத்தின் பெறுமதி இயேசுவை வெகுவாக கவர்கிறது.

வ.43: இயேசு தன் சீடர்களை வரவழைக்கிறார். அவர்களிடம் இந்த பெண்தான் மற்ற அனைவரையும் விட அதிகமான போட்டார் என்கிறார். இதிலிருந்து இயேசுவின் சீடர்கள் அவரோடு இந்த நேரத்தில் இருந்திருக்கவில்லை என்பது தெரிகிறது.

அல்லது அவர்கள் இந்த பெண்ணை நோக்கியிருந்தால், அவரை பற்றி தப்பாக எண்ணியிருப்பார்கள். (நம்முடைய ஆலயங்களில் ஏழைகள் பெறும் பாராட்டைப் போல). இயேசுவின் இந்த பாராட்டு அவர்களுக்கு கடும் வியப்பை ஏற்படுத்தியிருக்கும். இயேசுவின் சீடர்கள் கூட இந்த பெண்ணை விட அதிகமாக காணிக்கை போட்டிருப்பார்கள்.

கடவுளின் பார்வை வித்தியாசமான அது ஏழைகளின் பக்கம்தான் என்பதையும் இந்த வரி காட்டுகிறது.

வ.44: சீடர்களின் மனக்கேள்விகளை அறிந்த ஆண்டவர், அதனை இந்த வரியில் விளங்கப்படுத்துகிறார். ஏன் இந்த கைம் பெண் மற்றவர்களைவிட பாராட்டு பெறுகிறார் என்பதை ஆண்டவர் தெளிவு படுத்துகிறார்.

சாதாரணமாக நல்ல மனிதர்கள் தங்களிடமுள்ள மேலதிகமானவற்றைத்தான் கோயிலுக்கு காணிக்கையாக போடுவார்கள். இந்த பெண் தன்னிடமிருந்த அனைத்தையும் போட்டுவிட்டார். இந்த இரண்டு செப்புகாசுகள்தான் அவரிடம் இருந்த சொத்து என்றும் கூட சொல்லாம். அவர் தன்னுடைய செலவுகள் மற்றும் தேவைகளை கருத்தில் கொள்ளாது, அனைத்தையும் போட்டுவிட்டார். அதாவது அவர் கோயிலுக்குள் பல தேவைகளுக்கா வேண்ட வந்து, தன்னிடம் இருந்ததையும் கொடுத்துவிட்டு ஆண்டவருக்கு முன் வெறுமையாக திரும்புகிறார்.

கடவுள் எண்ணிக்கையையும், பணத்தின் பெறுமதியையும் காண்கிறவர் அல்ல, மாறாக உள்ளத்தின் பெறுமதியை காண்கிறவர் என்பது இங்கு நன்கு புலப்படுகிறது. πάντα ὅσα εἶχεν ἔβαλεν ὅλον τὸν βίον αὐτῆς. பான்டா ஹொசா எய்கென் எபாலென் ஹொலொன் டொன் பியொன் அவ்டேஸ்- தன்னிடமிருந்த அனைத்தையும், அவைதான் அவர் வாழ்வாக இருந்தது.

வாழ்வில் மிகுதியாக இருப்பதை கடவுளுக்கு கொடுத்தால்,

அது பிச்சை,

வாழ்வில் தேவையானவற்றை கடவுளுக்கு கொடுத்தால்,

அது பரிசு, காணிக்கை.

கடவுளுக்கு காணிக்கைதான் பொருந்தும்.

பிச்சை கொடுத்தல், கொடுப்பவருக்கு வலிக்காது,

தியாகம் செய்து காணிக்கை கொடுப்பவருக்கு

நிச்சயமாக வலிக்கும்.

கடவுளிடம் பலவற்றை தேடிப் போகும் ஆன்மீகம் மாறி,

கடவுளுக்கு கொடுக்கும் அன்புறவு வளர வேண்டும்.

அன்பு ஆணடவரே,

காணிக்கை கொடுக்க கற்றுத்தாரும். ஆமென்.

...................................................

சமர்ப்பணம்:

கடந்த வாரம், தன்னுடைய மூன்று புத்தகங்களை வெளியிட்ட,

(மனுவுக்கு மனு, அதிர்வுகள் -2, அம்மாக் கோழியும் அப்பாச் சேவலும்)

எம் அன்புச் சகோதர, அமதி குரு அன்புராசாவின்

சமூக அக்கறைக்குச் சமர்ப்பணம்.

வாழ்க உங்கள் சேவை, வளர்க உங்கள் சமூக அக்கறை!!