இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தோராம் வாரம் (ஆ)

முதல் வாசகம்: இணைச்சட்டம் 6,2-6

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 17

எபிரேயர் 7,23-28

நற்செய்தி: மாற்கு 12,28-34


முதல் வாசகம்
இணைச்சட்டம் 6,2-6

2நீங்களும் உங்கள் பிள்ளைகளும்இ பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ் நாளெல்லாம் கடைப்பிடிப்பீர்களாக! இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள். 3இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த முனைந்திடு! அதனால்இ உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடிஇ பாலும் தேனும் நிறைந்துவழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய். 4இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். 5உன் முழு இதயத்தோடும்இ உன் முழு உள்ளத்தோடும்இ உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! 6இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்.

இணைச்சட்ட நூல் இஸ்ராயேல் மக்களின் சட்ட வாழ்வில் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இணைச்சட்டத்தை ஒரு தனித்துவமான பாரம்பரியமாகவே அறிஞர்கள் வரையறைப் படுத்துகின்றனர். இந்த இணைச்சட்டம் முதல் நான்கு சட்ட நூல்களுக்கும் (தொடக்கநூல், விடுதலைப்பயணம், லேவியர், எண்ணிக்கை) ஒரு முடிவுரை போலவே காணப்படுகிறது. தோறா அல்லது சட்ட நூல்களில் ஐந்தாவது புத்தகமாக கருதப்படும் இந்த நூலை மோசேதான் எழுதினார் என்று பாரம்பரியமாக கருதப்படுகிறது. இணைச்சட்டம் என்ற பெயர் கிரேக்க சொல்லில் இருந்து எடுக்கப்படுகிறது (காண்க இ.ச 17,18 δευτερονόμιον தியுடெரொநொமியொன்). இதனை எபிரேயத்தில், பிரதி என்று ஆரம்ப காலத்தில் தவறாக விளக்கம் கொடுக்கப்பட்டது என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர் (מִשְׁנֵה மிஷ்னெஹ்- பிரதி). எபிரேய மொழியில் இணைச்சட்டம் 'אֵלֶּה הַדְּבָרִים' ('எல்லெஹ் ஹத்வாரிம்- வார்த்தைகள் இவையே) என்று அழைக்கப்டுகிறது. இதுதான் இந்த புத்தகத்தின் முதலாவது சொல், இந்த முறையில்தான் அதிகமாக எபிரேய விவிலிய புத்தகங்கள் பெயரிடப்பட்டுள்ளன. இதனை இரண்டாவது சட்டம் என அழைப்பது, இந்த புத்தகத்தின் உள்ளடக்கத்திற்கு மிகச் சரியாக பொருந்தவில்லை என்ற வாதமும் இரு;கிறது.

கடவுள் ஆபிரகாமிற்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறுவதை இந்த புத்தகம் காட்டுகிறது. எகிப்தில் வளர்ந்த இஸ்ராயேல் இனம், பாரவோன்களின் துன்புறுத்தலை சந்திக்கிறது.

இதனைக் கண்ட கடவுள் அவர்களை மோசே தலைமையில் மீட்டெடுக்கிறார். அடுத்த கட்டமாக அவர்களை கடவுள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு கொண்டு வருகிறார், இருப்பினும் அவர்கள் பாலை நிலத்தில் கடவுளை விட்டு அகன்று செல்கின்றார்கள். கடவுள் மனம் நொந்து, இவர்கள் அல்ல, அடுத்த தலைமுறைதான் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு செல்லும் எனக் காட்டுகிறார். இதனால் இவர்கள் நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் சுற்றித்திரிய வேண்டிவந்தது. இந்த புத்தகத்தின் தொடக்கத்தில் மோசே உரையாற்றுகிறார், அவரும் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு போகமுடியாதவராக இருந்தார். மோசே தன்னுடைய உரையில் மக்களை எச்சரிக்கிறார், கடவுளின் கட்டளைகளை கடைப்பிடித்தால் மட்டுமே வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு செல்ல முடியும் என படிப்பிக்கிறார்.

இந்த புத்தகத்தின் ஆசிரியரையும், எழுதப்பட்ட காலத்தையும் இலகுவாக கணிக்க முடியாது. அதிகமான மோசேயுடைய உரைகள் இந்த புத்தகத்தில் இருந்தாலும், அதனை இன்னொருவரே தொகுத்திருக்க வேண்டும் என்றே எண்ணத்தோன்றுகிறது. அத்தோடு இங்கே மோசே 'அவர்' என்று படர்கையிலே சொல்லப்படுவதும், இதுவும் அதற்கான காரணமாக இருக்கலாம் (காண்க இ.ச 1,1). அதேவேளை இந்த புத்தகம் மோசேயுடைய இறப்பையும் பதிவு செய்கிறது (காண்க இ.ச 34). மோசேக்கு பிறகு ஏழாம் நூற்றாண்டில் இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற ஒரு பலமான வாதம் இருக்கிறது. இந்த காலத்தில்தான் இணைச்சட்டம் என்ற நூல் ஒன்று, யூதேயாவில் யோசியா அரசர் காலத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதுவும் அதற்கான காரணமாக இருந்திருக்கலாம் (காண்க 2அரசர் 22,8). இந்த கருதுகோல் கருத்தில் எடுக்கப்பட்டால், இணைச்சட்டத்தின் ஆசிரியராக மோசே இருக்கமாட்டார், மாறாக அவர் பெயர் இந்த புத்தகத்திற்கு வலுச்சேர்க்கவும், அதிகாரம் கொடுக்கவும் சேர்க்கப்பட்டிருக்கும். இதனை விட இணைச் சட்டம் பபிலோனிய அடிமைத்தனத்தின் போது அல்லது அதற்கு பின்னர் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற வாதமும், பிரதி வாதமும் இருக்கின்றன.

மக்களின் நவீன கால பிரசித்தி பெற்ற நம்பிக்கைக்கும், முன்னோர்களின் உண்மையான விசுவாசத்திற்கும் மிக முக்கியமான வித்தியாசங்கள் இருக்கின்றன என்பதை இந்த புத்தகத்தின் இறையியல் காட்டுகின்றது. கடவுள் ஏன் தன் மக்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்தார், இதனால் அவர்கள் தங்கள் தனித்துவத்தை கானானிய மக்களுடன் உறவாடும் போது கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அதிகமாகச் சொல்கிறது. ஆபிரகாமின் தெரிவு இந்தப் புத்தகத்தின் மிக முக்கியமான கருப்பொருள். கடவுள் இஸ்ராயேலை தனித்துவமாக தெரிவு செய்துள்ளார், இதனால் இஸ்ராயேல் அவரின் விசேட அன்பிற்கு உரியது, இருந்தாலும் மற்றைய மக்களை கடவுள் அன்புசெய்வில்லை என்றோ அவர்களை வெறுக்கிறார் என்பதோ இந்த புத்தகத்தின் செய்தியல்ல. இந்த புத்தகத்தின் எழுவாய்ப் பொருள் இஸ்ராயேல் மக்களாக இருப்பதனால் இது மற்றவர்களை பற்றி பேசவில்லை என்றே சொல்லவேண்டும்.

6. வ.1: கானான் நாட்டை அடைவதும் அங்கு ஆண்டவரின் கட்டளைகளை கடைப்பிடிப்பதும் இணைச்சாட்ட நூலின் மிக முக்கியமான தத்துவம். இந்த வரியில் மோசே பேசுவது போல ஆசிரியர் காட்டுகிறார். இந்த கட்டளைகள் இரண்டு நோக்கங்களுக்காக முன்வைக்கப்படுகின்றன. முதலாவது கட்டளைகள் கற்றுக்கொடுக்கப்படவேண்டியது (לְלַמֵּד אֶתְכֶם லெலாமெத் 'எத்கெம்- உங்களுக்கு கற்பிக்க,) இரண்டாவது அவை கடைப்பிடிக்கப்படவேண்டியது (לַעֲשׂוֹת லா'அசோத்- செய்யப்படவேண்டியது). ஆக கட்டளைகள் கற்கப்படவேண்டியது அத்தோடு அவை கடைப்பிடிக்கப்படவேண்டியது என்பது காட்டப்படுகிறது. அத்தோடு இவை உங்கள் கடவுளாகிய ஆண்டவருடையது என்பதும் மிக முக்கியமாக காட்டப்படுகிறது יְהוָה אֱלֹהֵיכֶם அதோனாய் 'ஏலோஹெகெம்- உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.

வ.2: யார் யாரெல்லாம் ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இந்த வரியில் சொல்லப்படுகிறது. அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் (אַתָּה֙ וּבִנְךָ֣ 'அத்தாஹ் வுவ்நெகா- நீங்களும் உங்கள் பிள்ளைகளும், וּבֶן־בִּנְךָ֔ வுவென்-பின்கா- உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகள்). அவர்கள் செய்யவேண்டியதும் சொல்லப்படுகிறது, அவர்கள் கடவுளுக்கு அஞ்சவேண்டும், அதாவது ஆழமான விசுவாசத்தை முன்னெடுக்கவேண்டும் (תִּירָא אֶת־יְהוָה திரா' 'எத்-அதோனாய்- உங்கள் கடவுளுக்கு அஞ்சுங்கள்), அதனை அவர்கள் வாழ்நாளெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் (כֹּל יְמֵי חַיֶּיךָ கோல் யெமே ஹய்யெகா- உங்கள் வாழ்நாளெல்லாம்).

இஸ்ராயேலருக்க சட்டங்கள் அவர்களுக்கு அடையாளம் கொடுப்பவை ஆகவே அதனை அவர்கள் வாழ்நாளெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும். இதனை கொண்டுதான் ஒருவரின் வாழ்நாள் கணிக்கப்படுகிறது. அதாவது அவர்கள் நெடுநாள் வாழ்வார்கள் எனப்படுகிறது.

வ.3: இஸ்ராயேல் மக்களை, இஸ்ராயேல் என்ற யாக்கோபுவின் பெயரோடு ஒப்பிட்டு ஒருமைப் பெயரில் அழைக்கிறார் ஆசிரியர். இஸ்ராயேலை செவிகொடுக்க கேட்கிறார், அத்தோடு அவற்றை செயற்படுத்தவும் கேட்கிறார். செவிகொடுத்தல் என்பது அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அழைப்பையும் தொட்டுநிற்கின்றது. இந்த இரண்டிற்கும் ஒரே எதுகைச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன (שָׁמַעְתָּ ஷாம'தா- செவிகொடு: שָׁמַרְתָּ ஷாமர்தா- கவனமாக). இப்படிச் செய்வதனால் அவர்கள் தங்கள் முதாதையருக்கு கடவுள் கொடுத்த நாட்டில், பாலும் தேனும் பொழிந்து வடியும் வாட்டில் நலம் பல பெற்று மேலும் பெருகுவார்கள். אֶרֶץ זָבַת חָלָב וּדְבָֽשׁ 'எரெட்ஸ் ட்சாவாத் ஹாலாவ் வுதெவாஷ்- பாலும் தேனும் பொழியும் நாடு.

வ.4: நான்காம் வரியிலிருந்து 10ம் வரிமட்டுமான இந்த பகுதிகள் மிக மிக முக்கியமானவை. இதனை இஸ்ராயேலர்களின் காலைச் செபம் என்று சொல்வார்கள். இவர்களின் காலைச் செபம் ஷேமா இஸ்ராயேல் என்று தொடங்குகின்றனது. இதில் மிக முக்கியமான இறையியல் நம்பிக்கைகள் பொதிந்து கிடக்கின்றன.

இஸ்ராயேலே செவிகொடு உன் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர் (שְׁמַע יִשְׂרָאֵל יְהוָה אֱלֹהֵינוּ יְהוָה ׀ אֶחָד ஷெமா யிஷ்ரா'எல் அதோனாய் 'எலோஹேனூ அதோனாய் 'எஹாத்- இஸ்ராயேலே கேள் உன்கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்). ஒரு கடவுள் நம்பிக்கை இஸ்ராயேலருடைய நம்பிக்கையின் அடிப்படையாக இருந்தாலும், பல கடவுள் நம்பிக்கை முறை அவர்கள் மத்தியில் மறைமுகமாக மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது, அல்லது அவர்களுக்கு இடைஞ்சலாக இருந்தது என்பது இன்றுவரை சந்தேகிக்கப்படுகிறது. ஒரு கடவுள் நம்பிக்கையை வலியுறுத்துவது இணைச்சட்ட ஆசிரியரின் மிக முக்கியமான படிப்பினைகளில் ஒன்று. இதனை வலியுறுத்த அவர் மோசேயின் நாட்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது.

வ.5: இந்த ஒரே ஆண்டவரின் அன்பு கூறுவதற்கு ஒரு மனிதன் தன் ஆளுமையின் அனைத்தையும் கொடுக்கவேண்டும் என்று அழகான எபிரேய வார்த்தைகளின் சொல்லப்படுகிறது. இஸ்ராயேலர்கள் தங்கள் முழு இதயத்தோடு, அதவாவது இதயம் பிரதிநிதித்துவப் படுத்தும் தங்கள் முழு சிந்தனையோடும் (בְּכָל־לְבָבְךָ֥ பெகோல்-லெவாவ்கா- உங்கள் முழு இதயத்தோடும்), முழு உள்ளத்தோடும் அதாவது உள்ளம் பிரதிநிதித்துவப் படுத்தும் முழு ஆன்மாவோடும் (בְכָל־נַפְשְׁךָ֖ வெகோல்-நாப்ஷெகா- முழு ஆன்மாவோடும்), முழு ஆற்றலோடும் அதாவது முழு வலிமையோடும் (בְכָל־מְאֹדֶֽךָ வெகோல்-மெ'), கடவுளை அன்பு செய்ய கேட்கப்படுகிறார்கள். אָהַבְתָּ֔ אֵת יְהוָה אֱלֹהֶיךָ 'அஹவ்தா 'எத்-அதோனாய் 'எலோஹெகா.

வ.6: இந்த வார்த்தைகள் புத்தககத்தில் இல்லாமல் அவர்கள் உள்ளத்தில் இருக்கவேண்டும் என்பதில் மோசே மிகவும் கவனமாக இருக்கின்றார் (אָנֹכִי מְצַוְּךָ הַיּוֹם עַל־לְבָבֶךָ׃ 'ஆனோகி மெட்ஸ்வ்வெகா ஹய்யோம் 'அல்-லெவாவெகா- இன்று நான் கட்டளையிடுவதை உன் இதயத்தில்). புத்தகத்தில் இருப்பவை வாசிக்கவும், ஆய்வு செய்யவும் பயன்படும். உள்ளத்தில் இருப்பவை வாழவும், வாழ்வாக்கவும் பயன்படும் என்பதில் மோசே உறுதியாக இருக்கின்றார். வவ.7-8: பிள்ளைகளிடம் எதைப் பற்றி பேசவேண்டும். இந்த கேள்வியில் மோசே அக்காலத்திலேயே மிகவும் தெளிவாக இருந்திருக்கிறார். பிள்ளைகளிடம் எதனை பேசுகிறோமோ அதாவே அவர்கள் மாறுகிறார்கள். பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு, அவர்கள் வீட்டில் இருக்கும் போதும் வெளியில் செல்லும்போதும் அதனைப்பற்றி கலந்தாலோசிக்கக் கூறுகிறார்.

மிகவும், சுவாரசியமாக வழிப்பயணங்கள், படுக்கை, எழும்பும்போதும் அவற்றைப் பற்றி பேசும்படி கேட்கிறார். கடவுளுடைப் பற்றி வார்த்தைகளுக்கு காலம், நேரம் கிடையாது, அவை எங்கும் இருக்கவேண்டும் எப்போதும் இருக்க வேண்டும் என்பது இப்படியான சொற்களால் வலியுறுத்தப்படுகிறது.

யுதர்கள் தங்கள் கையில் வழிபாட்டின் போது கட்டும் ஒரு வகையான தோலாலான சட்ட செபம் தெபிலிம் (תפלם) என அறியப்படுகிறது. இதில் விடுதலைப்பயணம் 13,1-10: 11-16: இணைச்சட்டம் 6,5-9: 11,13-21 போன்ற வாசகங்கள் காணப்படுகின்றன. இதனை அவர்கள் அடையாளமாக தங்கள் மேல் கைகளிலும், நெற்றியின் உச்சியிலும் அணிவார்கள். இத்தயை முறை அவர்கள் வாயில் நிலைகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது. இதே போல சில சட்டங்களை உள்ளடக்கிய வாசக பட்டம் ஒன்று சுருள் வடிவில் அவர்களுடைய வீட்டு வாயிலில் அடிக்கப்பட்டது அல்லது ஒட்டப்பட்டது. இது யூதர்களின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. நம்முடைய வீட்டு வாயில்களில் நாம் மிக்கேல் சம்மனசானவரின் திருவுருவப் படங்களை வைப்பதைப் போல. இதனை அவர்கள் מְזוּזֹת மெட்ஸ்வுட்சோத் என அழைக்கிறார்கள் இதில் இணைச்சட்டம் 6,4-9: 11,13-21: விடுதலைப்பயணம் 13,1-10.11-16: எண்ணிக்கை 10,35-36 போன்றவை உள்ளடக்கப்பட்டிருக்கும். மிக சிறிய அளவில் இந்த வரிகள் இருக்கும் இவை வாசிக்கப் படுவதற்கல்ல, மாறாக அடையாளமாக வைத்திருக்கவே பயன்படுகிறது.



இரண்டாம் வாசகம்
எபிரேயர் 7,23-28

23மேலும், அந்தக் குருக்கள் சாவுக்கு ஆளானவர்களாய் இருந்ததால் தம் பணியில் நிலைத்திருக்க முடியவில்லை. வேறு பலர் தொடர்ந்து குருக்களாயினர். 24இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார். 25ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார். 26இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர். 27ஏனைய தலைமைக் குருக்கள் செய்வது போல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும் பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் தம்மைத் தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒருமுறைக்குள் செய்து முடித்தார். 28திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள். ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார்.

கடந்த வாரத்தில் ஏற்கனவே தலைமைக்குருவின் இறையியலைபை; பற்றியும் அவருடைய முக்கியத்துவத்தைப் பற்றியும் அலசினோம். தலைமைக்குருவைப் பற்றியிருந்து அறிவு ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு உதவியாகவும், இடைஞ்சலாகவும் இருந்தது. உரோமையருடைய ஆட்சியில் உண்மையான எபிரேய அல்லது யூத அடையாளத்துடன் இருந்த ஒரே ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமைத்துவம் தலைமைக்குருதான். ஏரோதின் வாரிசுகள் உண்மையான இஸ்ராயேலர்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அத்தோடு உரோமைய அதிகாரிகளை யூதர்கள் முழுமையாகவே வெறுத்தார்கள். இக்காலத்தில் யூத கிறிஸ்தவர்கள் தங்கள் தலைமைக்குருவிலிருந்து தொலையில் போவதையும், அல்லது எருசலேம் தேவாலயத்தில் இருந்து ஒதுக்கப்டுவதையும் மனவேதனையோடே பார்த்திருப்பார்கள். இப்படியான காலத்தில், இந்த சதுசேய் அல்லது மக்கபேயர்களின் வாரிசுகளான தலைமைக்குருக்கள் வெறும் மனிதர்கள் என்பதை ஆழமாக காட்ட வேண்டிய தேவை எபிரேய ஆசியரிக்கு மிக முக்கியமான தேவைதான்.

வ.23: சாவுக்குரியவர்கள் மட்டுப் படுத்தப்பட்டவர்கள் என்பதைக் காட்டுகிறார் எபிரேய ஆசிரியர் (διὰ τὸ θανάτῳ κωλύεσθαι παραμένειν· தியா டொ தானாடோ கோலூஸ்தாய் பாராமெனெய்ன்- சாவால் அவர்கள் மட்டுப்படுத்தப்பட்டார்கள்).

தலைமைக்குருக்களின் வரலாற்றை பார்த்தால் அவர்களிடையே போட்டியும் பூசலும் மலிந்து கிடந்ததைக் காணலாம். மக்கபேயர்கள் புத்தகங்கள் இதனை தெளிவாக காட்டுகின்றன. சில வேளைகளில் சகோதரர்களே தங்கள் சகோதரர்களை கிரேக்கரிடமும், உரோமையரிடமும் காட்டிக் கொடுத்தனர். சிலர் தேவாலயத்திலே கொலையும் செய்யப்பட்டனர். இது அவர்களை வெறும் மனிதர்கள் என்றே காட்டியது. ஒரு சுpல யூதர்கள் இவர்களை மெசியாவின் சாயலாக காண முயன்றார்கள் என்ற வாதமும் இருக்கிறது. இவர்கள் தாவீதின் வழிமரபில் இல்லாதது, இவர்களுக்கு இன்னொரு முக்கியமான பின்னடைவு.

இவர்களால் தங்கள் பணியில் தொடர்ந்து நிலைத்திருக்க முடியாது, சிலர் வருகிறார்கள், இன்னும் சிலர் அவர்களை பின்தொடர்கிறார்கள். இதனை அவர்களின் பலவீனம் அல்லது மனித தன்மைக்கு உதாரணமாக எடுக்கிறார் ஆசிரியர்.

வ.24: இயேசு அப்படியல்ல, அவர் மாறாதவர் அத்தோடு அவர் குருத்துவமும் மாறாதது. இந்த வரியில் இயேசுவின் பலம் வெகுவாக காட்டப்படுகிறது. ὁ δὲ διὰ τὸ μένειν αὐτὸν εἰς τὸν αἰῶνα ἀπαράβατον ἔχει τὴν ⸀ἱερωσύνην· ஹொ தெ தியா டொ மெனெய்ன் அவ்டொன் எய்ஸ் டொன் அய்யோனா அபாராபாடொன் எகெய் டேன் ஹெய்ரோசுனேன்- அவர் நிரந்தரமாக நித்தியத்திற்கும் நிலையான குருவாக இருக்கிறார்.

இயேசுவின் குருத்துவத்திற்கு முடிவில்லை என்பது எபிரேயர் வாசகர்களுக்கு மிகவும் மகிழ்சியான செய்தியைக் கொடுத்திருக்கும்.

வ.25: இயேசு தன் வழியாக கடவுளிடம் வருகிறவரை முழுவதும் மீட்க வல்லவராக இருக்கிறார். இந்த வரி மூலமாக மற்றவர்கள் முழுiமாய பணியை செய்கிறவர்கள் இல்லை என்பது சொல்லப்படுகிறது. மற்றவர்களை முழுமையாக மீட்கக்கூடியவர் இயேசு ஒருவரே என்பது ஆரம்ப கால திருச்சபையின் போதனைகளில் ஒன்றாக இருந்திருக்கலாம். இரண்டாவதாக அவர்களுக்காக பரிந்து பேசவே இயேசு என்றும் உயிர்வாழ்கிறார் என்பது சொல்லப்படுகிறது. இயேசுவின் உயிரும் அவர் பணியும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டது என்பது அழகாகக் காட்டப்படுகிறது.

வ.26: இயேசுவுடைய குருத்துவத்திற்கென்று பல அழகான அடையாளங்களும் தனித்துவங்களும் இருக்கின்றன. முதலாவது இயேசுவே மக்களுக்கு ஏற்ற தலைமைக்குரு எனச் சொல்லப்படுகிறார். வழமையாக தெய்வங்கள்தான் தங்கள் மக்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது. ஆனால் இங்கே மக்கள் இயேசுவை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது போல வரி அமைக்கப்படுகிறது. அதாவது இயேசுதான் மக்களுக்கு ஏற்றவர் எனப்படுகிறது - மக்கள் எழுவாய்ப் பொருளாகவும், இயேசு செயற்படுபொருளாகவும் காட்டப்படுகிறார்கள் (γὰρ ἡμῖν °καὶ ἔπρεπεν ἀρχιερεύς கார் ஹேமின் காய் எnரெபென் அர்கெய்ரூஸ்- ஏனெனில் அவர் எங்களுக்கு தலைமை குருவாக இருப்பது பொருத்தமாக இருக்கிறது).

இவர் தூயவர் (ὅσιος ஹொசியோஸ்), கபடற்றவர் (ἄκακος அகாகொஸ்), மாசற்றவர் (ἀμίαντος அமியான்டொஸ்), பாவிகளிடமிருந்து பிரிக்கப்பட்டவர் (κεχωρισμένος ἀπὸ τῶν ἁμαρτωλῶν கெகோரிஸ்மெனொஸ் அபோ டோன் ஹமார்டோலோன்), வானங்களுக்கு மேலே உயர்த்தப்பட்டவர் (ὑψηλότερος τῶν οὐρανῶν ஹுப்பேலொடெரொஸ் டோன் ஹுரானோன்). இந்த பண்புகள் அக்கால நம்பிக்கையில் உயர் தெய்வம், அல்லது உயர் கடவுளின் பண்புகளாக கருதப்பட்டிருக்க வேண்டும்.

வ.27: மீண்டும் ஒரு முறை சாதாரண மனித தலைமைக் குருவின் செயலும், இயேசுவின் செயலும் ஒப்பிடப்படுகிறது. அதாவது மனித தலைமைக்குருக்கள் தங்கள் பாவத்திற்காகவும் மக்களின் பாவத்திற்காகவும் நாள்தோறும் பலி செலுத்துகிறார்கள். இது அவர்களையும் மக்களையும் ஒரே நிறுவையில் வைக்கிறது.

ஆனால் இயேசுவின் வழி வித்தியாசமானது. அவர் தம்மையே பலியாக செலுத்தியவர். முனித தலைமைக் குருக்கள் மிருக பலியைத்தான் செலுத்தினார்கள். இயேசு தன்னையே பலியாக்கினவர். அதுவும் அதனை அவர் ஒரே ஒரு முறைக்குள் செய்து முடித்தவர் (τοῦτο γὰρ ἐποίησεν ἐφάπαξ ἑαυτὸν ⸁ἀνενέγκας. டூடொ கார் எபொய்யேசென் எபாபாட்ஸ் ஹெஆப்டொன்- ஏனெனில் அததை ஒரே முறையில் செய்தார்). இந்த பலி என்பது அவருடைய கல்வாரி மரணத்தைக் குறிக்கிறது என்பது தெளிவாகிறது.

வ.28: திருச்சட்டம் (ὁ νόμος ஹொ நொமொஸ்) பலமானது, அதனை அவர்கள் கடவுளுக்கு நிகராகவே கருதினார்கள். இருந்தாலும் இந்த திருச்சட்டத்தின் படி நியமிக்கப்படுகிறவர்கள் மனித குருக்களாக இருப்பதை திருச்சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்த திருச்சட்டத்தின் பின்னர் வேறு நியமங்களும் இருக்கின்றன, அதாவது அது கடவுளின் ஆணை இந்த வாக்கின் படி என்றென்றும் நிறைவுள்ளவரான கடவுள் மகனே குருவாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார் (υἱὸν εἰς τὸν αἰῶνα τετελειωμένον. ஹுய்யொன் எய்ஸ் டொன் அய்யோனா டெடெலெய்மெனொன்- என்றென்றும் நிறைவான மகன்).

இயேசுவின் மிக ஆழமான இறையியல் பண்புகள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன. இந்த பண்புகளை ஆராய்கின்றபோது, ஆரம்ப கால திருச்சபையின் இறையியலில் ஆழம் புரிகிறது.


நற்செய்தி வாசகம்
மாற்கு 12,28-34

முதன்மையான கட்டளை

(மத் 22:34-40; லூக் 10:25-28)

28அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, 'அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?' என்று கேட்டார். 29-30அதற்கு இயேசு, ''இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக' என்பது முதன்மையான கட்டளை. 31'உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக' என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை' என்றார். 32அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், 'நன்று போதகரே, 'கடவுள் ஒருவரே அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை' என்று நீர் கூறியது உண்மையே. 33அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது' என்று கூறினார். 34அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், 'நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை' என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.


மாற்கு நற்செய்தியின் 12வது அதிகாரத்தில், கொடிய குத்தகைக்காரர் உவமை (1-12), சீசருக்கு வரி செலுத்துதல் (13-17), உயிர்த்தெழுதலைப்பற்றிய கேள்வி (18-27), தாவீதின் மகன் பற்றிய விளக்கம் (35-37), மறைநூல் அறிஞரைப் பற்றிய விளக்கம் (38-40), மற்றும் ஏழைக் கைம் பெண்ணின் காணிக்கை (41-44) போன்ற மிக சுவாரசியமான நிகழ்வுகள் விளக்கப்பட்டுள்ளன. வழக்கம் போல மாற்கு தனக்கே உரிய சுருக்கமான மற்றும் நேர்த்தியான விதத்தில் நிகழ்வுகளை அமைத்துள்ளார். இந்த நிகழ்வு மூன்று சமநோக்கு நற்செய்திகளிலும் சில வேறுபாடுகளுடன் காணப்படுகிறது. மாற்கு நற்செய்தியில் இந்த பகுதிக்கு பின்னால் சதுசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் காண்படுகிறார்கள். சதுசேயர்கள் உயிர்ப்பினைப்பற்றி வாதாட்டத்தில் ஈடுபட, மறைநூல் அறிஞர்கள் இயேசுவின் சட்ட அறிவை சோதிக்க முயல்கின்றார்கள். இந்த பகுதி மத்தேயு நற்செய்தியில் (காண்க 22,34-46) சதுசேயர்களுக்கு எதிராக பரிசேயர்கள் இயேசுவை பாராட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. லூக்கா நற்செய்தியில் (காண்க 10,25-40) சட்ட வல்லுனர்கள் இந்த காட்சியின் பின்னால் உள்ளனர். இந்த மூன்று காட்சி அமைப்பிலும், சட்டத்தைப் பற்றிய யூதர்களின் அறிவே முதனை;மை பெறுவதை அவதானிக்கலாம்.

வ.28: இயேசுவும் அவர் சீடர்களும் சதுசேயர்களும் வாதாடிக்கொண்டிருக்கிறார்கள் என எடுக்கலாம். அல்லது சதுசேயர்கள் இயேசுவோடு வாதாடிக்கொண்டிருக்கிறார்கள் என எடுக்கலாம். சதுசேயர்களுக்கும் மற்றைய குழுக்களுக்குமிடையில் தொடர்சியாக பல முறுகல்கள் இருந்ததை அவதானிக்கலாம். சதுசேயர்கள் அரசியலில் அதிகமான ஆர்வம் காட்டினார்கள். இவர்கள் சில தேவைகளின் பொருட்டு உரோமையர்களுடன் அனுசரித்து சென்றார்கள் எனலாம். இவர்கள் மோசேயின் சட்டங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று எடுக்கமுடியாது, மாறாக அவர்கள் அதற்கு தங்கள் சார்பான அர்த்தத்தை கொடுத்தார்கள் எனலாம். இதே சதுசேயர்களின் முன்னோர்களான மக்கபேயர் அல்லது ஹஸ்மோனியர்கள் கிரேக்க ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சதுசேயர்களை சிலர் யூதர்களின் எபிகூரியர்கள் என எடுக்கிறார்கள். இவர்கள் இக்கால வாழ்விற்கு மட்டுமே முக்கியம் கொடுத்தார்கள். சாவின் பின் வாழ்வு, வானதூதூதர்கள் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. மோசேயின் முக்கியத்துவத்தை இவர்கள் மறுத்தார்கள் என்பதற்கில்லை. அடிப்படையான சிந்தனைகளில் யூத குழுக்கள் ஒருமித்தவர்களாகவே இருந்தார்கள். இருந்தாலும், இவர்களுக்கு இடையில் இருந்த போட்டி மனப்பான்மை இவர்களை மற்றவரிடம் இருந்து பிரித்தது எனலாம். இயேசு இந்த குழுக்களில் எவரையும் தன்னுடைய எதிரியாக கருதியதில்லை, அவர்கள்தான் இயேசுவை தங்கள் இடைஞ்சலாக பார்த்தனர். இயேசு பரிசேயருக்கு நல்ல விளக்கம் கொடுத்ததை ஒரு மறைநூல் அறிஞர் நோக்கி இயேசுவை சுயநலநோக்கோடு பாராட்டவும், மேலும் கேள்வி கேட்கவும் அணுகுகிறார். இவர் கடவுளை இரண்டு பிழையான நோக்கத்தோடு அணுகுகிறார் என்பது காட்டப்படுகிறது. இவர் சதுசேயரை வெறுக்கிறார், அத்தோடு கடவுளை கேள்வி கேட்கிறார். εἷς τῶν γραμματέων எய்ஸ் டோன் கிராம்மாடெஓன்- மறைநூல் அறிஞர்களின் ஒருவர்.

இயேசுவிடமே கேள்வி கேட்கிறார் (ποία ἐστὶν ἐντολὴ πρώτη πάντων; பொய்யா எஸ்டின் என்டொலே புரொடே பான்டோன்- எல்லாவற்றிலும் முதன்மையான கட்டளை எது?).

வவ.29-31: இணைச்சட்ட நூலிலே காணப்படும் மிக முக்கியமான விசுவாச சத்தியம் நன்கு காட்டப்படுகிறது (காண்க இ.ச 6,4-5: யோசுவா 22,5). இயேசு தன்னுடைய விவிலிய அறிவிலும், யூத சட்டத்திலும் மிகவும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் இருந்திருக்கிறார் என்பதற்கு இந்த இரண்டு வரிகளுமே சாட்சியங்கள். இயேசு இவற்றை இரண்டாக தருகிறார் அந்த சட்ட வல்லுனர்க்கு. சட்ட வல்லுனர்களே ஆண்டவர் முன் சட்டத்தை விளக்கம் கேட்டு நிற்கிறார்கள் என்பது போல காட்சி அமைகிறது.

அ. இஸ்ராயேலே கேள், நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர், அவரை அவர்கள் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும், முழு ஆற்றலோடும் கடவுளை அன்பு செய்யச் சொல்லிக் கேட்கிறார்கள். இதனை முதன்மையான கட்டளை என்கிறார் ஆண்டவர். ஆ. இரண்டாவது கட்டளை சொல்லப்படுகிறது (δευτέρα தியுதெரா- இரண்டாவது). இந்த கட்டளையின் முக்கியத்தும் லேவியர் புத்தகத்தில் காட்டப்பட்டாலும், இயேசுதான் இதன் முக்கியத்துவத்தை நற்செய்தியில் வலியுறுத்துகிறார். உன்மீது அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக என்கிறார் ஆண்டவர் (ஒப்பிடுக லேவியர் 19,18). இவற்றைவிட மேலான கட்டளை ஒன்றும் இல்லை என்பதையும் இயேசு முடிவுரையாக காட்டிவிடுகிறார். μείζων τούτων ἄλλη ἐντολὴ οὐκ ἔστιν. மெய்ட்சோன் டூடோன் அல்லே என்டொலே ஊக் எஸ்டின். இவற்றைவிட மேலான கட்டளை வேறேதுமில்லை.

வ.32: இதற்கு மறைநூல் அறிஞர்கள் வேறுவிதமாக பதிலளிக்கின்றனர். கடவுள் ஒருவரைத்தவிர வேறு கடவுள் இல்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள். இதனை அவர்கள் உண்மை என்றும் சொல்கிறார்கள் (ἀληθείας அலேதெய்ஸ்). இயேசுவை அவர்கள் நல்ல போதகர் என்றும் விழிக்கின்றனர் (καλῶς, διδάσκαλε காலோஸ் திதாஸ்காலெ). மறைநூல் அறிஞர்கள் சரியாகச் சொல்கிறார்கள் இருந்தாலும் அவர்கள் ஏன் இதனை ஏற்றுக்கொள்வதில்லை என்ற கேள்வியை ஆசிரியர் வாசகர்களிடம் கேட்கிறார் எனலாம்.

வ.33: இந்த வரி இவர்கள் உண்மையாகவே மறைநூல் அறிஞர்கள் என்பதைக் காட்டுகிறது. ஆண்டவரிடம் முழு இதயத்தோடும், முழு அறிவோடும், முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், ஒருவர் தன்னிடம் அன்பு கூர்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவதும், எரிபலிகளைவிடவும், மேலானது என்கிறார் அந்த சட்ட வல்லுனர். இந்த வரி மூலமும், சட்ட வல்லுனர்களுக்கு அனைத்தும் தெரிந்திருந்தது, இருந்தாலும் அவர்கள் இயேசுவிற்கு எதிராக ஏன் செயற்பட்டார்கள் என்பது உள்ளார்ந்த கேள்வியாக அமைகிறது. அதேபோல அனைத்தும் தெரிந்திருந்தாலும், சமுதாயம் உண்மையான கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயற்படலாம். எரிபலிகள் அக்காலத்தில் மிக முக்கியமான பலிவகையாக கருதப்;பட்டது. இயேசுவுடைய காலத்தில் எரிபலிகள் சிறு தொகையில் நடைமுறையில் இருந்தன. இதனை ஒரு சட்ட வல்லுனர் இரண்டாம் தரமாக கருதி சரியான முடிவைத் தெரிவிக்கின்றார். περισσότερόν ἐστιν πάντων τῶν ὁλοκαυτωμάτων καὶ θυσιῶν. பெரிஸ்சொடெரொன் எஸ்டின் பான்டோன் டோன் ஹொலொகௌடோமாடோன் காய் தூசியோன்.

வ.34: இயேசுவிற்கு அனைவரையும் நன்கு பாராட்டத் தெரியும். இந்த சட்ட வல்லுனரை அறிவுத் திறனோடு பதிலளிக்கக்கூடியவர் என இயேசு அடையாளம் கண்டுகொள்கிறார். யாரும் இயேசுவுடைய ஆட்சிக்கு தூரத்தில் இல்லை என்பதை இந்த வரி காட்டுகிறது (οὐ μακρὰν εἶ ἀπὸ τῆς βασιλείας τοῦ θεοῦ. ஊ மாக்ரான் எய் அபொ டேஸ் பசிலெய்யாஸ் டூ தியூ- நீர் விண்ணரசின் இருந்து தொலைவில் இல்லை).

சட்டங்கள் பலிகள் நிச்சயமாக தேவையானவை.

சட்டங்களும் பலிகளும் ஒருவரை ஆண்டவரிடம் கொண்டு செல்கின்றன.

இருந்தாலும் சட்டங்களும் பலிகளும்

இரண்டாம் தரம் வாய்ந்தவை என்பதை

அறிஞர்களின் சொல்லைக்கொண்டே

எண்பிக்கின்றார் ஆண்டவர் இயேசு.

அன்பு ஆண்டவரே, அனைத்திற்கும் மேலாக

உம்மை அன்பு செய்ய வரம் தாரும், ஆமேன்.