இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் இருபத்தொன்பதாம் வாரம் (ஆ)

முதல் வாசகம்: எசாயா 53,10-11

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 33

இரண்டாம் வாசகம்: எபிரேயர் 4,14-16

நற்செய்தி: மாற்கு 10,32.35-45


முதல் வாசகம்
எசாயா 53,10-11

10 அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். 11அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.

துன்புறும் ஊழியர் என்ற தலைப்பில் உள்ள பகுதியிலிருந்து இந்த வரிகளும் எடுக்கப்படுகின்றன. இரண்டாம் எசாயா புத்தகத்தில் பல பகுதிகள் இறைவனின் ஊழியரைப் பற்றி பேசுகின்றன. இறைவனின் இந்த ஊழியர் யார் என்பதில் பல ஊகங்கள் இருக்கின்றன. பாரசீகம் மன்னரான பேரரசர் சைரசுவை எசாயா கடவுளின் ஊழியராகப் பார்க்கிறார். எசாயாவின் கருத்துப்படி இந்த சைரசு மற்றைய நாடுகளை கைப்பற்றுவதன் வாயிலாக யூதாவும் எருசலேமும் விடுதலை அடையும் என்பது இவரின் நம்பிக்கை. இன்னொரு விதத்தில் எசாயா சைரசுவை கடவுளின் மெசியாவாக கண்டார் என்றும் ஒரு வாதம் இருக்கிறது. ஆனால் யூதர்கள் எதிர்பார்த்த மெசியாவாகத்தான் சைரசுவைக் கண்டார் என்பதை நிரூபிப்பது சாத்தியாமாக இருக்காது என நினைக்கின்றேன் (காண்க எசாயா 45,1). மெசியா என்பது திருப்பொழிவு செய்யப்பட்டவர் என்ற அர்த்தத்தைக் கொடுப்பதால், விடுதலை தருகின்ற அரசியல் தலைவர்கள் அருட்பொழிவு செய்யப்பட்டவர்கள் என எடுக்கலாம். ஆனால் தாவீதின் வழியில் வரும் எதிர்பார்க்கப்பட்ட மெசியா என்று எடுக்கவேண்டிய தேவையில்லை.

எசாயா குறிப்பிடுவததைப் போல சைரசு மன்னர் இந்த துன்பங்களை சந்தித்தார் என சொல்வதற்கில்லை. இந்த இடத்தில் சைரசு பொருந்தாவிட்டால், யார் பொருந்துவார் என்ற கேள்வி எழுகிறது. சிலர் இந்த இடத்திற்கு இறைவாக்கினர் எரேமியாவை பரிந்துரைக்கின்றனர், இருந்தாலும் எரேமியா இறைவாக்கினர், அமைதியாக தன்துன்பத்தை வெளிக்காட்டவில்லை, அவர் பல முறை கடுமையாக முறையிட்டிருக்கிறார் (எரேமியா 15,18: 20,7-8).

இரண்டாம் எசாயாவில் வரும் துன்புறும் ஊழியரின் பாடல், மோசேயுடைய இன்னொரு புதிய விடுதலைப் பயண அனுபவத்தை எதிர்பார்பது போல அமைகிறது. இருந்தாலும், இரண்டாம் எசாயா உண்மையில், இஸ்ராயேல் தேசத்தைத்தான் கதாநாயகராக கொண்டிருக்கிறது எனலாம். இதேவேளை துன்புறும் ஊழியர் கடவுளின் பணியாளராக இஸ்ராயேலை மீட்க வேண்டியவராக இருக்கவேண்டும், எனவே எப்படி துன்புறும் ஊழியரும், மீட்கப்படவேண்டியவரும் ஒரே ஆளாக இருக்க முடியும். இந்த சிக்கலை சந்திக்க, இரண்டு வகையான இஸ்ராயேல் தேசங்களை அதாவது ஒருவர் பாவம் செய்த இஸ்ராயேல், இன்னொன்று கடவுளுக்கு கீழ்படிவான திருச்சபை, என்ற சிந்தனையும் முன் வைக்கப்படுகிறது.

வ.10: துன்புறும் ஊழியரை மிகவும் ஆழமான வர்த்தைகளில் காட்டுகிறார் எசாயா. தன் ஊழியரை நொறுக்கவும், நோயால் வதைக்கவும், ஆண்டவர் திருவுளம் கொள்கிறார். இந்த வரி எபிரேய சிந்தனையில் நோக்கப்படவேண்டும். அதாவது கடவுள் ஏன் நல்லவர்களை வதைக்க வேண்டும். நல்லவர்கள் வதைக்கப்பட்டால், அதற்கு கடவுள் காரணம் இல்லையெனில் கடவுளைவிட இன்னொரு சக்தி இருக்கிறது என்பதை அது கொடுக்கலாம். ஆனால் அப்பாவி உயிர்கள் கழுவாயாக வதைபடுவது அக்கால சமுதாயத்தில் சாதாரண விடயமாக இருந்திருக்கிறது. ஆண்டவருடைய திருவுளமாக இது இருப்பதனால், இதற்கு பின் காரணம் ஒன்று இருந்திருக்க வேண்டும் என எடுக்கலாம்.

இந்த காரணத்தை அடுத்த வரிப்பிரிவு காட்டுகிறது. அதாவது அந்த ஊழியர் தன்னுடைய வதையை குறைநீக்கப்பலியாகக் கொடுக்கிறார். אָשָׁם֙ 'ஆஷாம்-குறைநீக்கப்பலி. இந்த குறைநீக்கப் பலியின் காரணமாக இவர் தன்னுடைய வழிமரபு கண்டு நீடூழி வாழ்வார் எனச் சொல்லப்படுகிறது. மெசியாவிற்கு என்ன வழிமரபு என்ற கேள்வியை கேட்கலாம். இந்த வழிமரபு அவருடைய சொந்த பிள்ளைகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. அல்லது எசாயாவின் ஆசிரியர் இந்த மெசியாவை ஒரு சாதாரண மனித தலைவராகக் கண்டிருந்தால், இந்த கேள்விற்கான அவசியம் இருந்திருக்காது.

ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும் எனச் சொல்லப்படுகிறது. ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதே இஸ்ராயேல் கோத்திரத்து மகனுடைய சிறப்பு. இதனையும் இந்த ஊழியர் சிறப்பாக செய்கிறார்.

வ.11: துன்ப வாழ்வு ஒரு கட்டத்தில் நிறைவடைய வேண்டும் என்பது இஸ்ராயேலர்களுடைய நம்பிக்கை. அவர்கள் மறுவாழ்வில் நம்பிக்கை கொள்ளாதவர்கள் என்பதால், துன்பங்கள் இந்த உலகிலேயே நிறைவடையவேண்டும் என நம்பினார்கள். ஆசிரியரும், இந்த பின்புலத்தோடே, துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார் என்று சொல்கிறார். அதாவது அவருடைய துன்பத்திற்கான பலன் கிடைக்கும் என்பது பொருளாகிறது.

துன்புறுகின்ற ஊழியர், தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார் என சொல்லப்படுகிறார். בְּדַעְתּ֗וֹ יַצְדִּיק צַדִּיק עַבְדִּי לָרַבִּים 'பெத'தோ யட்ஸ்திக் ட்சாதிக் 'அவ்தி லாரபிம்- தன்னுடைய அறிவால் அதிகமானவர்க்ளை நீதிமான்களாக மாற்றுவார். பலர் நீதிமான்களாக மாற, அவர்களின் தீச்செயல்களை இவர் சுமக்கிறார். அதாவது ஒரு தீச்செயல் இன்னொரு பாதகமான நிலையைக் கொண்டுவரும். இதனைத்தான் இந்த ஆண்டவரின் ஊழியர் சுமக்கிறார். இது மெசியாவின் வேலையை ஒத்ததாக இருக்கிறது. பாவங்களின் தண்டனையை மெசியா பெறுகின்ற வேளை, பாவிகள் நல்லவர்களாக மாற வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் நீதி நிலைநாட்டப்படுகிறது. பாவம் தண்டிக்கப்படுகிறது. பாவிகளுக்கும் இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

வ.12: இந்த அதிகாரத்தில் இறுதி வரி. இவருடைய நீதியான வாழ்க்கையைப் பார்த்து கடவுள் இவருக்கு நீதிமான்கள் மத்தியில் மதிப்பளிக்கிறார். வலியவரோடு கொள்ளைப் பொருட்களையும் பங்கிட்டுக் கொள்கிறார். போரில் கொள்ளைப் பொருட்கள் பரிசில்களாக கருதப்பட்டன. அவை வலியவர்கள் மற்றும் வீரர்களால் பங்கிடப்பட்டன. முக்கியமான பங்கு அரசருக்கு கொடுக்கப்பட்டன. இந்த ஆண்டவரின் ஊழியர், துன்பங்களை சுமந்தவராக இருந்தாலும், வலியவர்களோடு கொள்ளைப் பொருட்களை பங்கிடும் பாக்கியம் பெறுகிறார். இது அவருடைய பலத்தையும், முக்கியத்துவத்தையும் காட்டுகிறது.

இதற்கான காரணமாக அவர் தன்னை சாவிற்கு கையளித்ததும், கொடியவருள் ஒருவராக கருதப்பட்டதும், பலரின் பாவத்தை சுமந்ததும், கொடியவர்காக பரிந்து பேசியதும் காரணங்களாக மாறிவிடுகின்றன.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 33

புகழ்ச்சிப் பாடல்

1நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே.

2யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;

3புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள்.

4ஆண்டவரின் வாக்கு நேர்மையானது அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.

5அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.

6ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின.

7அவர் கடல்நீரைக் குவியல்போல் சேர்த்து வைத்தார்; அந்நீரை ஆழ் நிலவறைகளில் சேமித்து வைத்தார்.

8அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக! உலகில் வாழ்வோர் அனைவைரும் அவருக்கு அஞ்சிநடுங்குவராக!

9அவர் சொல்லி உலகம் உண்டானது அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது.

10வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்து விடுகின்றார்.

11ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.

12ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.

13வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார்.

14தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார்.

15அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே!

16தன் படைப் பெருக்கத்தால் வெற்றிபெரும் அரசருமில்லை; தன் வலிமையின் மிகுதியால் உயிர் தப்பிய வீரருமில்லை.

17வெற்றி பெறப் போர்க்குதிரையை நம்புவது வீண்; மிகுந்த வலுவுள்ளதாயினும் அது விடுவிக்காது.

18தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.

19அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.

20நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.

21நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்;

ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.

22உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!



திருப்பாடல் 33, புகழ்ச்சிப்பாடலாக கருதப்படுகிறது. இருப்பத்திரண்டு வரிகளைக்கொண்டுள்ள இந்தப் பாடல் அழகாக இரட்டை வரி அமைப்பில் பிரித்து நோக்கப்படுகிறது. தொடக்க மற்றும் முடிவு வரிகள் கடவுளில் மகிழ்வதற்கான அழைப்பை விடுகின்றன. அனேகமான திருப்பாடல்களைப் போல, இந்த திருப்பாடலும் திருப்பிக்கூறல் என்ற எபிரேய கவிநடையில் அமைந்துள்ளது. இந்தப் பாடலுக்கு தலைப்பு வழங்கப்படவில்லை, இதனால் இதனுடன் தொடர்புள்ள விவிலிய பின்புலத்தை அறிவது கடினமாக இருக்கலாம்.

வ.1: இந்த வரி இப்பாடலின் ஆரம்ப அழைப்பாக பணியாற்றுகிறது. நீதிமான்கள் ஆண்டவரில் களிகூரக் கேட்கப்படுகிறார்கள். அதாவது நீதிமான்கள் என்பவர்கள் (צַדִּיקִים ட்சத்திகிம்), ஆண்டவரில் தங்களது திருப்தியை தேடக் கேட்கப்படுகிறார்கள், இச்செயலானது அவரைப் புகழ்வதற்கு பொருத்தமானது என சொல்கிறார் ஆசிரியர்.

வ.2: இசைக் கருவி யாழ், எபிரேய இசைக்கருவிகளில் மிகவும் பிரசித்தமானது, இதனை வாசிப்பதில் தாவீது அரசர் விருப்பமுடையவராய் இருந்தார் என சொல்லப்படுகிறது. இது ஒருவகை நரம்பிசைக் கருவி. நம்முடைய யாழ் நகருக்கும் இதற்கும் தொடர்பிருப்பதாக ஈழ வரலாறு சொல்கிறது. பத்து நரம்பிசைக் கருவி என்றும் இதனை ஒத்த சொல்லில் அழைத்தார்கள். இதனைத்தான் ஆசிரியர் திருப்பிக்கூறும் நடையில் இங்கே பாவிக்கிறார். இதிலிருந்து இந்த திருப்பாடல் ஒரு புகழ்ச்சிப்பாடல் என்பது புலப்படுகிறது. ஆகவே திருப்பாடல்கள் வாசிக்கப்படுவதை விட, பாடப்படவேண்டும் என்பது உண்மையே.

வ.3: ஆண்டவருக்கு புதிய பாடல் பாடப்படவேண்டும் (שִׁיר חָדָשׁ ஷிர் ஹாதாஷ்), அவருக்கான பாடல்கள் திறம்பட இசைக்கப்பட வேண்டும் என்பதில் பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஆண்டவர் சாதாரண தலைவர்களைப் போல அர்த்தமில்லா உதட்டுப் புகழ்ச்சிக்கு உரியவர் அல்லர், அவர் மேன்மை மிக்கவர், இறைவன். இதனால் அவருக்கான பாடல்கள் எப்போதும் புதியனவாகவும், மகிழ்ச்சி ஒலியுடையதாகவும் இருக்க வேண்டும் என்பது இவர் நம்பிக்கை.

வ.4: வாக்கு என்பது ஒருவரின் அடையாளம். அரசர்களுடைய வாக்கு, கட்டளை அல்லது ஆணை போன்றது, அது பொய்க்கக் கூடாது, இதனை விட ஆண்டவருடைய வாக்கு உண்மையானது என்கிறார் ஆசிரியர் (דְּבַר־יְהוָה தெவார் அதோனாய்). ஒருவருடைய வாக்கிற்கும் செயல்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருக்க வேண்டும். தாறுமாறான செயற்பாடுகள் நல்ல வாக்கை பிரதிபலிக்காது. ஆனால் ஆண்டவரைப் பொறுத்த மட்டில் அவர் வாக்கும் செயல்களும் (מַעֲשֶׂה ம'அசெஹ்) ஒன்றானவை என்கிறார்.

வ.5: ஆண்டவர் எதை விரும்புகிறார். சடங்குகளின் பெருக்கம், ஆண்டவர் சடங்குகளையும், பலிகளையும் மற்றும் இரத்தத்தையும் விரும்புகிறார் என்ற பொய்பிரச்சாரத்தை முன்வைத்தன. இஸ்ராயேல் இனம் குருத்துவத்தை மையப்படுத்தியபோது, இந்த ஆபத்துக்களை அதிகமாகவே எதிர்கொண்டது. ஆனால் ஆரம்ப காலத்தில் ஆண்டவர் பலிகளையோ அல்லது எரிபலிகளையோ விரும்பியதாக காட்டப்படவில்லை. இந்த பலிகள் அனைத்தும் காலத்தால் பிற்பட்டவை. இவற்றைவிட ஆண்டவர் உண்மையாக விரும்புவை, நீதியும் நேர்மையும் என்கிறார் இந்த ஆசிரியர் (צְדָקָ֣ה וּמִשְׁפָּט ட்செதாகாஹ் வுமிஷ்பாத்). இயேசு ஆண்டவருடைய படிப்பினைகளில் இந்த சிந்தனை ஆழமாக ஊடுருவி இருந்தது. இதன் காரணமாகத்தான் இந்த முழு பூவுலகுமே அவரது அன்பால் நிறைந்துள்ளது. ஆண்டவருடைய பேரன்பு என்பது முதல் ஏற்பாட்டில் மிக முக்கியமான சொற் பிரயோகம்

வ.6: இந்த வரி ஆண்டவரின் வாக்கின் பலத்தை காட்டி, அத்தோடு பிரபஞ்சத்தின் தொடக்கத்தையும் காட்டி நிற்கின்றன. பிரபஞ்ச படைப்புக்களை தெய்வங்களாக பார்த்த, அக்கால கானானிய மக்கள் நடுவில் வாழ்ந்த இஸ்ராயேலருக்கு, கடவுளின் பெருமையையும், பிரபஞ்ச படைப்புக்களின் சிறுமையையும் காட்ட வேண்டிய தேவை ஆசிரியருக்கு இருந்தது. வானங்களும் (שָׁמַיִם ஷமாயிம்), வான்கோள்களும் (כָּל־צְבָאָֽם கோல் ட்செவா'ம்), ஒன்றுமில்லை மாறாக கடவுளுடைய படைப்பே என்பது இவர் சிந்தனையில் உள்ள உண்மை.

வ.7: வானங்கள் மட்டுமல்ல அதற்கு இணையாக கீழ் உள்ள நீரை அறிவிக்க வேண்டிய தேவை ஆசிரியருக்கு இருந்தது. கடல், பல விதத்தில் விவிலியத்தில் காட்டப்படுகிறது. சில வேளைகளில் இது நேர்முகமாகவும் பல வேளைகளில் எதிர் மறையாகவும் காட்டப்படுகிறது. இந்த கடலில்தான் தீய சக்திகள் உறைவதாகவும் அக்கால விஞ்ஞானம் கருதியது. ஆனால் கடவுளுக்கு முன்னால் இவையும் சாதாரண படைப்புக்களே. அத்தோடு இவையும் கடவுளின் சிந்தனையால்

உருவானவையே என்று பெரிய விஞ்ஞானத்திற்கு, சிறிய ஆனால் ஆழமான முடிவுரையை எழுதுகிறார் ஆசிரியர். இந்தக் கடலை (מֵי הַיָּם மி ஹயாம்), கடவுள் குவியல் போல் குவித்துள்ளார் எனச் சொல்கிறார், இது தொடக்க நூல் (※1,9) சிந்தனையை நினைவூட்டுகிறது எனலாம். நிலவறைகளில் சமுத்திர நீரை சேமித்துவைத்துள்ளார் கடவுள் என்கிறார் ஆசிரியர். இதற்க்கு תְּהוֹמֽוֹת தெஹோமோத் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆழ்கடல் நீர்கள் என்று எபிரேயம் காட்டுகின்றது. இது எதனை குறிக்கிறது என்பது தெளிவாக இல்லை. ஒருவேளை இது நிலக்கீழ் நீரைக் குறிக்கலாம். அத்தோடு ஆழமான பாதாளங்கள் நிலத்தின் கீழே உள்ளன என்பதும் இவர்கள் நம்பிக்கையாக இருந்தது. இந்த இடத்திலே கடவுள் நீரை சேமித்து வைத்துள்ளார் என்கிறார் ஆசிரியர்.

(※அப்பொழுது கடவுள், 'விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!' என்றார். அது அவ்வாறே ஆயிற்று.)

வ.8: ஆண்டவருக்கு அஞ்சுதல் என்பது ஒரு விவிலிய விழுமியம். இக்கால சிந்தனையில் இது மூட நம்பிக்கையாக பார்க்கப்படலாம். ஆனால் இந்த கடவுள் அச்சம் என்பது ஆழமான விசுவாசத்தைக் குறிக்கிறது. இந்த அச்சத்தின் காரணமாக மனிதர் நன்மைத் தனத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டனர். இக்கால சிந்தனையில் இதனை மரியாதை கலந்த அன்பு என்று கூடச் சொல்லலாம். இன்று உலகில் உள்ள அவவிசுவாசம் மற்றும் காட்டுச் சுதந்திரத்திரத்திற்கான காரணமாக இந்த இறையச்சம் இன்மையே என்பது பலருடைய எண்ணம்.

வ.9: இந்த உலகத்தின் படைப்பு எப்படி உருவானது, அதனுடைய மூல கர்த்தர் யார் என்பது அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி முக்கியமான கேள்வியாக உள்ளது. புகழ்ச்சிப்பாடல்களில் பல மெய்யறிவுச் சிந்தனைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்கான சான்றை இந்த வரியில் கண்டுகொள்ளலாம். உலகத்தை ஒரு சொல்லால் படைத்தவர் நம் கடவுள் என்ற ஆழமான மெய்யறிவு வாதத்தை முன்வைக்கிறார் ஆசிரியர். 'அவர் சொன்னார் அது உருவானது' என்பது இஸ்ராயேலின் அசைக்க முடியாத நம்பிக்கை (כִּי הוּא אָמַר וַיֶּהִי கி ஹு' 'ஆமர் வய்யெஹி). இந்த வரியில், உலகம் என்ற எழுவாய் பொருள் எபிரேய விவிலியத்தில் இல்லை, ஆனால் முன்னுள்ள வரியில் அது உள்ளபடியால் தமிழ் விவிலியம் இந்த வரிக்கும் உலகு என்ற சொல்லை பயன்படுத்துகிறது.

வ.10: ஆண்டவர் ஏன் வேற்றினத்தாரின் திட்டங்களை முறியடிக்க வேண்டும், ஏன் வேற்றினத்தார் தோற்க்க வேண்டும் என்பது நம்முடைய கேள்வியாக இருக்கலாம். கடவுள் இஸ்ராயேலின் கடவுள் மட்டுமல்ல, அவர் அனைவரின் கடவுள். இதனைத்தான் இயேசு காட்டினார். ஆனால் இங்கு வேற்றினத்தார் என குறிப்பிடப்படுகிறவர்கள் (גּוֹיִם கோயிம்), அனைத்து மக்களையும் குறிக்கவில்லை, மாறாக இஸ்ராயேலின் வீழ்ச்சியை விரும்பிய ஒரு குறிப்பிட்ட மக்களாக அல்லது அவர்களது தலைமைத்துவமாக இருக்கலாம். இங்கே இவர்களின் எண்ணங்கள் குலைக்கப்படுகிறது என்றால், இஸ்ராயேல் காக்கப்படுகிறது என்று பொருள்.

வ.11. தீயவர்களுடைய எண்ணங்கள் தீமையானவை, ஆனால் கடவுளுடைய எண்ணங்கள் அனைவருக்கும் நன்மையானவை. இதனால் இந்த எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும் (לְעוֹלָם லெ'ஓலாம்), அவர் இதயத்தின் திட்டங்களும் அனைத்து பரம்பரைக்கும் உறுதியாக இருக்கும். ஆசிரியர் ஆண்டவருக்கும் இதயத்தைக் கொடுத்து மனித வார்த்தைகளில் அவரை வடிக்க முயல்கிறார்.

வ.12: இஸ்ராயேல் இனம் அக்கால சமுதாயத்துடன் ஒப்பிடுகின்ற வேளை மிக சிறியதாகவும், மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்தது. நிலத்தை பொறுத்த மட்டில் பெரிதாக வளமான நிலங்களை கொண்டிருந்தது என்று சொல்வதற்கும் இல்லை. இங்கே 'ஆண்டவரை தம் கடவுளாக கொண்ட இனம்' என்பதை 'யாவேயை கடவுளாக கொண்ட இனம்' (אֲשֶׁר־יְהוָה אֱלֹהָיו 'அஷேர்-அதோனாய் 'ஏலோஹாய்வ்), என்று மொழிபெயர்க்க வேண்டும். இதனால் பலர் கடவுளாக பல தெய்வங்களை கொண்டிருந்த வேளை, இஸ்ராயேல் தங்கள் கடவுளாக ஆண்டவரை (அதோனாய்-யாவே) கொண்டிருப்பதனால் அது பேறுபெற்றது என்கிறார் ஆசிரியர். அதேவேளை ஆண்டவரும் இஸ்ராயேலை தன் உரிமைச் சொத்தாக எடுத்திருந்தார், இதனால் இஸ்ராயேல் பேறுபெற்றதாகின்றது. உரிமைச் சொத்தாக எடுத்தல் என்பது ஆட்சி அதிகாரம் அல்லது வாரிசு அதிகாரம் போன்றவற்றைக் குறிக்கும். இதனை இஸ்ராயேல் பெற்றுள்ளது என்பது இவர் வாதம்.

வ.13: கடவுள் எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? என்பதற்கு இந்த வரி விளக்கம் கொடுக்கிறது. வானின்று கடவுள் பார்க்கிறார், இதனால் கடவுள் வானில் இருக்கிறார் என்ற இவர்களின் நம்பிக்கை புலப்படுகிறது. ஆதாமின் மக்கள் அனைவரையும் பார்க்கிறார் என்று எபிரேய பாடம் வாசிக்கிறது. இங்கே ஆதாம் என்பவர் அனைத்து மக்களினங்களையும் குறிக்கிறார் (כָּל־בְּנֵי הָאָדָם கோல்-பெனெ ஹா'ஆதாம்).

வ.14-15: இந்த வரிகளும் பதின்மூன்றாவது வரியை ஒத்ததாக இருக்கின்றன. பார்த்தல் என்ற எபிரேய சொல் רָאָה (ரா'ஹ்), நோக்கல், கண்நோக்கல், அவதானித்தல், உற்றுபார்த்தல், ஆராய்தல் போன்ற அர்த்தத்தைக் கொடுக்கும். கடவுள் மனிதர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் என்ற படியாலும், மனிதர்களின் செயல்களை உற்று நோக்குவதனாலும் அனைத்தும் அவருக்கு நன்கு தெரிந்திருக்கின்றன.

வ.16-17: மனிதரின் பலம் என்ன? அரசர் தன் படையால் காப்பாற்றப்பட முடியாதவர், படைவீரர் தன்னுடைய அதீத பலத்தாலும் மீட்கப்பட முடியாதவர், என்பது அக்கால இராணுவ அறிவுக்கு எதிரானது. ஏனெனில் சாதாரண அரசர்களும், வீரர்களும், தங்கள் படைபலத்திலும் உடல் வலிமையிலுமே அதிக கவனம் செலுத்தினர். இதனைத்தான், வீண் என்கிறார் ஆசிரியர்.

அதற்கான காரணத்தையும் வரலாறு இவருக்கு சொல்லிக் கொடுத்திருக்கலாம். இந்த பாடலின் ஆசிரியர் ஒரு அரசராக இருந்தால் இது அவருக்கு நன்கு தெரிந்திருக்கும். இந்த சிந்தனைக்கு மேலும் வலுவூட்ட போர்க் குதிரையை உதாரணமாக எடுக்கிறார் ஆசிரியர் (סּוּס சுஸ் குதிரை). அக்காலத்தில் குதிரையின் வலுவினைக் கொண்டு படைகளின் பலம் கணக்கிடப்பட்டது. இக்காலத்து இராணுவ வாகனங்களைப் போல.

வ.18: இது இப்படியிருக்க கடவுள் யாரை காக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான விடையை, கடவுள் தமக்கு அஞ்சி நடப்போரையும், தம் பேரன்பிற்காக காத்திருப்போரையும் காக்கிறார் என்கிறார் ஆசிரியர். இந்த சிந்தனை ஏற்கனவே முன் வரியில் வந்திருக்கிறது. கடவுளுக்கு அஞ்சுதல் என்பது கடவுளில் நம்பிக்கை வைத்தல் என்பதைக் குறிக்கும். கடவுளின் அன்பிற்காக காத்திருத்தல் என்பதும் (לַמְיַחֲלִים லம்யாஹாலிம்), கடவுளில் நம்பிக்கை வைத்தலையே குறிக்கும்.

வ.19: இவர்களுக்கான உதவி சொல்லப்படுகிறது. கடவுள் இவர்களை சாவினின்று காக்கிறார் (מִמָּוֶת נַפְשָׁם மிம்மாவெத் நப்ஷாம்), அத்தோடு அவர்களை பஞ்சத்திலும் உயிர்பிக்கின்றார் (לְחַיּוֹתָם בָּרָעָב லெஹய்யோதாம் பாரா'ஆவ்). இந்த வரியும் இராணுவ சிந்தனைகளையே பின்புலமாகக் கொண்டுள்ளது. போர் காலத்தில் பஞ்சமும் சாவும் நிச்சயமானவை, இதனை அரசரின் பலமோ, போர்க்குதிரைகளோ தவிர்க்காது. அதனை தவிர்க்கக்கூடியவர் ஆண்டவர் ஒருவரே.

வ.20-21: இந்த வரிகளில் ஆசிரியர் இஸ்ராயேல் மக்களின் வரைவிலக்கணத்தைக் காட்டுகிறார். அவர்கள் ஆண்டவரை நம்பியிருக்கிறவர்கள், அவர்களின் கேடயமும் துணையும் ஆண்டவர் என்கிறார்;. இதனால் இதயம் களிகூர்வதாகவும், அவரது தூய்மையான பெயரில் நம்பிக்கை வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. נַפְשֵׁנוּ חִכְּתָה לַיהוָה நப்ஷெனூ ஹிக்தாஹ் லதோனாய் - நம் ஆன்மாக்கள் கடவுளுக்கு காத்திருக்கின்றன.

வ.22: இந்த வரி இறுதியான வரியாக, வேண்டுதலாக வருகிறது. இறுதியாக ஆசிரியர் கடவுளின் பேரன்பிற்காக இரஞ்சுகிறார் (יְהִי־חַסְדְּךָ יְהוָ֣ה עָלֵינוּ யெஹி-ஹஸ்தெகா அதோனாய் 'ஆலெனூ). அதற்கான நியாயமான தங்களுடைய எதிர்நோக்கை காட்ட முயற்சிக்கிறார். இந்த எதிர்நோக்கு (יָחִיל யாஹில்), ஒரு விவிலிய விழுமியமாக இருக்கிறபடியால் இவருடைய வேண்டுதல் சரியான பாதையில் செல்கிறது எனலாம்.



இரண்டாம் வாசகம்
எபிரேயர் 4,14-16

4. இயேசு கிறிஸ்துவின் குருத்துவத்தின் மேன்மை

மாபெருந் தலைமைக் குரு இயேசு

14எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! 15ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். 16எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.


இந்த புத்தகம் திருமுகமா அல்லது விரிவுரையா என்பதில் இன்னமும் கருத்தொற்றுமை இல்லை. கிறிஸ்தியலை மையமாக கொண்டு, அழகான இறையியல் வாதங்களை, அக்கால தேவைகளுக்கு ஏற்றபடி கொடுத்த இந்த புத்தகம், இன்றும் எமக்கு பல சிந்தனைகளைத் தந்துகொண்டே இருக்கிறது. எபிரேயர் புத்தகத்தின் நான்காம் அதிகாரம், இயேசுவை இரக்கம் நிறைந்த நம்பத்தகுந்த தலைமைக் குரு என்று வர்ணிக்கிறது. இன்றைய வாசகம் இரண்டு கருத்துக்களை முக்கியமாக முன்வைக்கிறது.

அ. இயேசு மாபெரும் தலைமைக்குரு: ἀρχιερέα μέγαν அர்கெய்எரா மெகான்

ஆ. அவர் துன்புற்ற தலைமைக் குரு. Ἀρχιερέα πεπειρασμένον அர்கெய்எரா பெபெய்ராஸ்மொன்

வவ. 14-16: எந்த ஒரு தலைமைக் குருவும் தன்னுடைய மனிதத்தன்மை மற்றும் சுய பாவ நிலை என்று பலவீனங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளார், எனவே வானங்களைக் கடக்கூட இயலாதவர். ஆனால் இயேசுவிற்கு இந்த சிக்கல்கள் இல்லையென்பதால், அவர்தான் உண்மையான தலைமைக் குருவாகிறார். இயேசுவினுடைய இரக்க குணத்தை விவரிக்க (συμπαθέω) சும்பதேயோ என்ற கிரேக்க மூலச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது ஒருவர் தன்னுடையவர்களுக்காக 'சேர்ந்து துன்பப்படுதலைக்' (compassio-compati) குறிக்கும். ஆக இயேசுவின் இரக்கம், அனுதாபம் அல்ல, அதையும் தாண்டிய அன்புகடந்த உடன்-இருப்பு என்கிறார் ஆசிரியர். வழமையாக அரியணைகள், ஆட்சியாளர்களின் அதிகாரங்களையும் செல்வங்களையும் குறிக்கும், இங்கே இயேசுவின் அரியணை இரக்கத்தின் அரியணை என்று விவரிக்கப்படுகிறது.


நற்செய்தி வாசகம்
மாற்கு 10,32.35-45

செபதேயுவின் மக்களது வேண்டுகோள்

(மத் 20:20-28)

35செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், 'போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்' என்றார்கள். 36அவர் அவர்களிடம், 'நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?' என்று கேட்டார். 37அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்' என்று வேண்டினர். 38இயேசுவோ அவர்களிடம், 'நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?' என்று கேட்டார்.✠ 39அவர்கள் அவரிடம், 'இயலும்' என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, 'நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். 40ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல் மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்' என்று கூறினார். 41இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். 42இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், 'பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். 43ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். 44உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். 45ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்' என்று கூறினார்.


செபதேயு (Ζεβεδαῖος ட்செபதாய்யொஸ்), ஒரு பணக்கார கலிலேய மீனவர். இவர் வேலையாட்களை கொண்டிருந்த படியால் அவர் வாழ்ந்த சமுதாயத்தில் சற்று வசதியானவராக இருந்திருக்க வேண்டும். இவர் மக்கள் இவரையும், இவர் கடல்சார் சொத்துக்களையும் விட்டுவிட்டு வருவது, இயேசுவின் போதனைகளில் சீடர்கள் பலவற்றை தியாகம் செய்ய கேட்கப்பட்டார்கள் என்பதைக் காட்டுகின்றது. செபதேயு, தன்னுடைய பிள்ளைகளான யோவான் மற்றும் யாக்கோபினாலும், அவர் மனைவி சலோமியின் பெயரின் பொருட்டுத்தான் விவிலியத்தில் அறியப்படுகிறார்.

மாற்கு நற்செய்தியின் 10 வது அதகிகாரம் பல முக்கியமான படிப்பினைகளை தொடர்சியாக கொண்டுள்ளது. இந்த அதிகாரத்தில் இயேசு தன்னுடைய சாவைப் பற்றி மூன்றாவது முறையாகவும் பேசுகிறார். அதாவது தன்னுடைய மரணம் எப்படிப் பட்டது என்பதில் அவர் தெளிவாக உள்ளார். ஆண்டவர் எவ்வளவு தெளிவாக இருந்தாலும், சீடர்கள் இன்னும் குழந்தைகளாகவே தங்களுடைய ஆன்மீகத்தில் இருப்பது தெளிவாகிறது. ஆண்டவர் எருசலேமிற்கு செல்வதைப் பற்றியும், தனது மரணத்தைப் பற்றியும் அறிவிக்கின்றபோது, சீடர்கள் அதிகாரத்தைப் பற்றியும், செல்வத்தைப் பற்றியும் கலந்தாலோசிக்கின்றனர்.

இன்றைய நற்செய்திப் பகுதி மத்தேயு நற்செய்தியில் 20,20-28 இல் சற்று மேலதிக தகவல்களுடன் விவரிக்கப்பட்டுள்ளது. மத்தேயு நற்செய்தியில் செபதேயுவின் மனைவிதான் தன் பிள்ளைகளுக்காக பரிந்து பேசுகிறார். மத்தேயு திருத்தூதர்கள் அல்லது சீடர்களிடன் மென்மையான போக்கினைக் கடைப்பிடிப்பார். மாற்கு சொல்ல வந்ததை அப்படியே சொல்லிவிடுவார்.

வ. 35: செபதேயுவின் மக்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் யாக்கோபுவும் யோவானும். பாரம்பரிய நம்பிக்கை இந்த யோவானை (Ἰωάννης ஈயோஅன்னேஸ்), நற்செய்தியாளர் யோவான் எனவும், இயேசுவின் மிகவும் அன்புக்குரிய சீடராகவும் அடையாளம் காண்கிறது. இவர்தான் இயேவுடைய பன்னிருவருள் மிகவும் வயது குறைந்தவராக இருந்திருக்க வேண்டும். இவருடைய சகோதரர் யாக்கோபு (Ἰάκωβος ஈயாகோபொஸ்), பெரிய யாக்கோபு என அறியப்படுகிறார். இவருடைய பெயர் முதலில் வருவதனால், இவர் மூத்தவராக இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. ஸ்பெயின் நாட்டில் வேதம் போதித்து, பின்னர் முதன் முதலாக எரோதுவினால் மறைசாட்சியான முதல் திருத்தூதர் இவர் என நம்பப்படுகிறது. இவர் சந்தியோகுமயோர் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த இருவரும் செபதேயுவின் மக்கள் என மாற்கு காட்டுகிறார்.

இவர்கள் இயேசுவை அணுகிச்செல்கிறார்கள். சாதாரணமாக மக்கள் இயேசுவை அணுகிச் செல்வது எதாவது வரம் வேண்டியதாக இருக்கும், இங்கும் அப்படியே. ஆனால் இவர்கள் இயேசு விரும்பாத வரம் ஒன்றை கேட்கச் செல்கிறார்கள்.

இவர்கள் தங்கள் விருப்பத்தை தங்கள் போதகர் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். மாற்குவின் இந்த வசன அமைப்பே இவர்களுடைய விருப்பம் பிழையான விருப்பம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இவர்களின் விருப்பம் இயேசுவின் விருப்பம் அல்ல என்பதை அவர் காட்டிவிடுகிறார் (θέλομεν ποιήσῃς ἡμῖν. தெலொமென் பொய்யேசேஸ் ஹேமின்- நாங்கள் விரும்புகின்றோம் நீர் செய்ய வேண்டும்).

வ.36: இயேசுவின் கேள்வியும் வித்தியாசமாக இருக்கிறது. தான் என்ன செய்ய வேண்டும் என போதகர் கேட்கிறார். தலைவரை பணியாளர்கள் வேலை வாங்குவதுபோல இந்த வரி அமைக்கப்பட்டுள்ளது. இயேசுவின் விருப்பததை அவர்கள் தீர்மானிக்கிறார்கள். இந்த வரியின் மூலமாக வாசகர்கள்-கிறிஸ்தவர்கள் இயேசுவிடம் கேட்கும் ஆசீர்வாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது சொல்லப்படுகிறது. ⸂τί θέλετέ με ποιήσω⸃ ὑμῖν; டி தெலெடெ மெ பொய்யேசோ ஹுமின்- நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?

வ.37: ஆண்டவரை அணுகியவர்கள் இப்போது அவரை நோக்குகிறார்கள். இயேசு அரியணையில் இருக்கும்போது, ஒருவர் அவரின் வலப்புறமும், இன்னொருவர் அவரின் இடப்புறமும் அமர அனுமதி கேட்கிறார்கள். இதனை அவர்கள் ஆசீராகவே கேட்கிறார்கள். அவர்களின் எண்ணம் பிழையாக இருந்தாலும், அவர்கள் இயேசுவின் மீது வைத்திருந்து மரியாதை குறையவில்லை. அதாவது இந்த அருளை இயேசுதான் தீர்மாணிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதாவது இயேசுதான் தங்களது தலைவர் என்பதில் எந்த மாற்றத்தையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை எனலாம்.

இயேசு பலவேளைகளில் தன்னை அரசராக காட்டுவதை தவிர்த்திருக்கிறார். இப்படியிருக்க இவர்கள் அவரை அவரின் அரியணையுடன் தொடர்பு படுத்துகிறார்கள். அரியணையைக் குறிக்க மாட்சி என்ற சொல் கிரேக்க விவிலியத்தில் பாவிக்கப்பட்டுள்ளது (δόξῃ σου. தொக்ட்சே சூ).

வ.38: வழமையாக மாற்கு நற்செய்தியில் இப்படியான கேள்விகளுக்கு கடுமையாக பதிலளிக்கும் இயேசு இவர்களின் கேள்விக்கு அமைதியாகவே பதிலளிக்கிறார். அதாவது இவர்களின் செயல் அறியாமையின் அடையாளம் என்பதை அவர் புரிந்துவிட்டார்.

கிரேக்க அறிவுலகத்தில் அறியாமை என்பது ஒரு பலவீனம். சில வேளைகளில் கேட்கப்படும் கேள்விகள் ஒருவருடைய தகமையை அப்படியே காட்டிவிடும் என்பதற்கு இந்த வரி ஒரு நல்ல உதாரணம். கிரேக்க விவிலியம் இயேசுவின் வசனத்தை கேள்வியாக கேட்கமால் நேரடியாக வசனமாகவே காட்டிவிடுகிறது. οὐκ οἴδατε τί αἰτεῖσθε. ஊக் ஒய்தாடெ டி அய்டெய்ஸ்தெ- நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது.

தன்னுடைய தீர்ப்பின் பின் இயேசு அவர்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்கிறார். அதாவது, தன்னுடைய கிண்ணத்தில் அவர்களால் பருக இயலுமா என்றும், தன்னுடைய திருமுழுக்கை அவர்களால் பெறமுடியுமா என்றும் அவர் கேட்கிறார். இங்கே சொல்லப்படும் கிண்ணம் ஆண்டவருடைய பாடுகளைக் அடையாளமாகக் காட்டுகிறது (τὸ ποτήριον ὃ ἐγὼ πίνω டொ பொடேரியொன் ஹொ எகோ பினோ- நான் பருகும் கிண்ணம்). விவிலியத்தில் கிண்ணம் ஒருவருடைய அதிகாரம், நிலை, மற்றும் கடமைகளைக் காட்டுகிறது. இயேசுவை கடவுளின் செம்மறியாக அடையாளம்படுத்தினால், இந்த கிண்ணம் அந்த செம்மறியின் இரத்தமாக அடையாளம் கொடுக்கும். இஸ்ராயேல் கலாச்சாரத்தில் கிண்ணம் உணவுப்பரிமாற்றத்தின் முக்கியமான பாத்திரம். இந்த கிண்ணம் ஒருவரை அவர் சமூக உறவோடு அடையாளப்படுத்துகிறது. ஒரே கிண்ணம் என்பது ஒரே உறவையும், ஒரே இனத்தையும் குறிக்கும். இயேசு, கிண்ண அடையாளம் மூலம், தன் சீடர்கள் தன் சாயலைப் பெறவேண்டும் என்பதை காட்டுகிறார் எனலாம்.

திருமுழுக்கு ஒருவரின் புதுவாழ்வைக் குறிக்கிறது. இங்கே இயேசுவின் திருமுழுக்கு சாதாரண யூத கழுவுதல் சடங்கு இல்லை என்பதையும், அதனை இவர்களால் பெறமுடியுமா என்பதையும் காட்டுகிறது. βάπτισμα ὃ ἐγὼ βαπτίζομαι பப்டிஸ்மா ஹொ எகோ பப்டிஸ்சோமாய்- நான் கொடுக்கும் திருமுழுக்கு. இந்த கேள்வியின் மூலம் தன் சீடர்கள் ஆண்டவரின் கிண்ணத்திலும், திருமுழுக்கிலும் பங்குபெற தகுதி பெறவேண்டும் என்பதைக் இயேசு சொல்கிறார். அதாவது சீடர்கள் அதிகாரத்தை கேட்காமல், ஆண்டவரின் தியாக பணிவாழ்வை நோக்க வேண்டும் என்பது உரைக்கப்படுகிறது.

வ.39: சீடர்கள் தங்கள் இயலுமையைக் காட்டுகிறார்கள், இயேசுவும் அதனை ஆமோதிக்கிறார். அதவாது இயேசுவிற்கு தன் சீடர்களின் உண்மையான விசுவாசமும் பலமும் தெரியும். ஆக சீடர்கள் இயேசுவின் புது திருமுழுக்கை பெற்றவர்கள். அவருடைய துன்பத்தில் பங்கு பெற்றவர்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு திருத்தூதர்களின் உண்மை முகம் காட்டப்படுகிறது.

வ.40: சீடர்கள் ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினாலும், அவருடைய திருமுழுக்கைப் பெற்றாலும், அதிகாரத்தை தருவது சீடத்துவம் அல்ல மாறாக அது கடவுளின் திட்டம் என்பது சொல்லப்படுகிறது. அதாவது ஒருவர் அதிகாரத்தை எதிர்நோக்கி ஆண்டவரை பின்பற்றக்கூடாது, இயேசு அதிகாரத்தை பறைசாற்றுகிறவர் அல்ல என்பது காட்டப்படுகிறது. காலத்தில் அது தந்தையின் செயலாக இருக்கும் என்பது சொல்லப்படுகிறது.

அதிகாரம், மாட்சி போன்றவை கடவுளுக்குரியன. அவையும் தற்செயலானவையல்ல. அவற்றையும் கடவுள்தான் தீர்மானிக்கிறார். ஏற்கனவே அவை யாருக்கு என்று தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்பது சொல்லப்படுகிறது. ἀλλ᾿ οἷς ἡτοίμασται அல்ல் ஹொய்ஸ் ஹேடொய்மாஸ்டாய்- யாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோ அவர்களுக்கு.

வ.41: இந்த வரிகளைக் வாசிக்கிறவர்களுக்கு யோவான் யாக்கோபுவின் மீது அதிருப்தியும் கோபமும் வரலாம், இது அவர்களின் பெயரையும் சாட்சியத்தையும் களங்கப்படுத்தலாம். இதனைத் இந்த வரி தவிர்க்கிறது. அதாவது, இவர்கள் இருவர்கள், இருவர் மட்டுமல்ல, மாறாக அனைத்து சீடர்களும் ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள் என்பது காட்டப்படுகிறது. அவர்களின் கோபம் அவர்களை ஒரே நிலையில் வைத்து, இன்னும் அவர்கள் கிறிஸ்தவத்தில் வளர வேண்டும் என்று காட்டுகிறது (ἤρξαντο ἀγανακτεῖν ஏர்ட்சான்டொ அகானாக்டெய்ன்- கோபம் கொள்ள தொடங்கினார்கள்). இவர்களின் கோபம் அந்த இடத்தில் ஒரு நிலையான செயலாக காட்டப்படாமல் அது தொடர்ச்சியான கோபமாகக் காட்டப்படுகிறது. இங்கே தொடர்ச்சியான வினைமுற்று பாவிக்கப்படுகிறது.

வ.42: இயேசு இந்த பன்னிருவரையும் வழிக்கு கொண்டுவர பிறவினத்தவர்களை உதாரணத்திற்கு எடுக்கிறார். பிறவினத்தவர்கள் என்பவர்கள் இஸ்ராயேல் அல்லாதவர்களைக் குறிக்கிறது. ἄρχειν τῶν ἐθνῶν அர்கெய்ன் டோன் எத்னோன்- பிறவினத் தலைவர்கள். இஸ்ராயேலர்களை இயேசு விட்டுவிடுவது அவர்களில் பொறாமை இல்லை என்பதைக் காட்டவில்லை, மாறாக அவர்கள் பொறாமையற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

இந்த தலைவர்கள் இறையரசிற்கு ஒவ்வாத இரண்டு காரியங்களைச் செய்கிறார்கள். அதாவது அவர்கள் மக்களை அடக்கி ஆள்கிறார்கள் (κατακυριεύουσιν காடாகூரியூசின்), பெரியவர்கள் தங்கள் மக்கள் மேல் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள் (κατεξουσιάζουσιν காடெட்சூசியாட்சூசின்). அண்டவரின் மக்களுக்கு இந்த இரண்டு பண்புகளும் பொருந்தாது என்பது தெளிவாக சொல்லப்படுகிறது.

வ.43: மாற்கு நற்செய்தியின் மிக முக்கியமான கட்டளை கொடுக்கப்படுகிறது. உங்களிடையே அப்படியிருக்கக்கூடாது என்கிறார். அதாவது இயேசுவின் சீடர்கள் சாதாரண ஒழுங்குகளில் ஒழுக முடியாது என்பது தெளிவாக சொல்லப்படுகிறது. இதற்கு மாற்றுக்கொள்கை ஒன்று கொடுக்கப்படுகிறது. அதாவது, இங்கே பெரியவர்கள் சிறியவர்களாகவும், அதிகாரிகள் தொண்டர்களாகவும் இருக்க கேட்கப்படுகிறார்கள்.

இன்னொரு வரியில் தொண்டர்கள் பெரியவர்களாகவும் இருக்கலாம் என்பது மறைமுகமான படிப்பினையாகவும் இருப்பதை அவதானிக்கலாம். μέγας ⸁γενέσθαι ἔσται ὑμῶν διάκονος, மெகாஸ் கெனெஸ்தாய் எஸ்டாய் ஹுமோன் தியாகொனொஸ்- பெரியவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.

வ.44: இயேசுவின் பணியாளர் படிப்பினை இந்தவரியிலும் தொடர்கிறது. அதாவது முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனவைருக்கும் பணியாளராக இருக்கட்டும் என்கிறார் (πρῶτος ἔσται πάντων δοῦλος· புரோடொஸ் எஸ்டாய் பன்டோன் தூலோஸ்- தலைவர் அனைவரின் பணியாளரகா இருக்கட்டும்). கிரேக்க உரோமைய உலகமும், யூத உலகமும், தலைவர்களையும் பணியாளர்களையும் வேறு படுத்திப் பார்த்தனர். பணியாளர்கள் எப்படியாவது வாழ்வில் தலைவர்களாக விரும்புவார்கள். அடிமைகள் அடிமைத்தனத்தில் இருக்க விரும்ப மாட்டார்கள். வாழ்வில் முன்னேற வேண்டும் என்பது இயற்கையான விதி. கிறிஸ்தவம் இதனையும் தாண்டிய ஒரு தியாக மறை நிலை என்பதை அழகாகக் காட்டுகிறார் ஆண்டவர்.

வ.45: இந்த புதுவிதி எப்படி சாத்தியம் என்பதற்கு இயேசு தன்னையே உதாரணமாகக் கொடுக்கிறார். அதாவது தான் மெசியா, ஆனால் அவர் மாற்கு நற்செய்தியில் மிக முக்கியமான சொல்லான மானிட மகன் என அடையாளப்படுத்தப்படுகிறார் (υἱὸς τοῦ ἀνθρώπου ஹுய்யொஸ் டூ அந்ரோபூ- மானிட மகன்). இந்த சொல் இயேசுவை சாதாரண பணியாளராகக் காட்டுகிறது.

மெசியா, தாவீதின் வாரிசு, கடவுளின் மகன் அதிக வல்லமையுடையவர், ஆனால் அவர் தொண்டு ஏற்கும் அதிகாரத்தை விடுத்து, பலருடைய மீட்பிற்காக தொண்டாற்றவும், தன்னுயிரைக் கொடுக்கவும் வந்தார் என்கிறார். இயேசு, பணி மற்றும் தாழ்ச்சிக்கு உதாரணமாக இதனைவிட வேறு எதனையும் காட்ட முடியாது என நினைக்கின்றேன். மெசியாவே தொண்டராகவும், பலியாகவும் மாறுகின்றபோது, சாதாரண சீடர்கள் எந்நிலையில் இருக்க வேண்டும் என்பது இங்கே சட்டமாகிறது.

இயேசு மெசியா என்பதில் எந்த மாற்றமும் இல்லை,

எசாயாவின் இறைவாக்கு இயேசுவிற்கே அதிகமாக பொருந்துகிறது,

இந்த மெசியா பணியேற்பதைவிட, பணியாற்றுவதை அதிகமாக

விரும்புகிறார்.

இயேசுதான் நம் தலைமைக்குரு,

இந்த தலைமைக்குருவிற்கு,

பலியும், பீடமும், நெருப்பும் தேவையில்லை,

அவர்தான் அனைத்தும்.

அன்பு ஆண்டவரே

உம்மை இன்னும் அதிகமாக அன்பு செய்ய உதவிசெய்யும்.

ஆமென்.

..............................................................................................

உரோமைத் திருப்பீடத்தில், இளையோர் ஆயர்மன்றம் சிறப்புற நடைபெற இந்த ஆவனம் சமர்ப்பணம்.