இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






திருமுழுக்கு யோவானின் பிறப்பு, பெருவிழா

முதல் வாசகம்: எசாயா 49,1-6
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 139
இண்டாம் வாசகம்: திருத்தூதர் பணிகள் 13,22-26
நற்செய்தி: லூக்கா 1,57-66.80


திருமுழுக்கு யோவான்: கிறிஸ்தவ பாரம்பரியம் இவரை முதல் ஏற்பாட்டின் இறுதி இறைவாக்கினர் என்றும், புதிய ஏற்பாட்டின் முதலாவது இறைவாக்கினர் எனவும் அழைக்கிறது. இயேசுவுடைய சமகாலத்தில் வாழ்ந்து இவர், இயேசுவுடைய உறவினராவார். இயேசுவிற்கு ஆறு மாதகங்களுக்கு இவர் மூத்தவராக இருந்திருக்க வேண்டும். பெரிய ஏரோதுவின் மகன் ஏரோது அந்திபாசின் காலத்தில் இவர் மறைசாட்சியாக மரித்தார்.

கியூ (Q) தரவும், மாற்கு நற்செய்தியும், யூத வரலாற்றாசிரியர் யோசேப்புசும் திருமுழுக்கு யோவானைப் பற்றிய பல தரவுகளை முன்வைக்கின்றனர். இதனைவிட யோவான் நற்செய்தியும் திருமுழுக்கு யோவானைப் பற்றிய தரவுகளை கொண்டுள்ளார். யோவான் என்பது அரமேயிக்க மொழியில் 'யோஹானான்' என்று வருகிறது, இதற்கு கடவுள் அருள்கூர்ந்தார் என்று வரும். மாற்குவும், யோசேபுசும் இவரை திருமுழுக்கு யோவான் என அழைக்கின்றனர் (Ἰωάννης ὁ βαπτίζων ஈயோன்னேஸ் ஹொ பப்டிஸ்சோன்), இந்தப் பெயர் அவருடைய பணியோடு சம்மந்தப்பட்டுள்ளது.

மனமாற்றத்தைப் பற்றி யோவான் போதித்தார் என்பது விவிலியத்தின் காட்டுதல். திருமுழுக்கு என்ற தூய்மைச் சடங்கு யூத மக்களுக்கு நன்கு பரீட்சயமாயிருந்தது. குளித்தல் மூலம் உடல் தூய்மை அடைதல் ஒருவருக்கு உளத் தூய்மையை கொடுக்கும் என்று யூத தூய்மைச் சடங்கு நம்பியது, இதற்காக அவர்கள் மிக்வோத் என்ற குளியல் முறையையும், இடத்தையும் அறிமுகப் படுத்தினார்கள். பிற்காலத்தில் இதுதான் திருழுழுக்காக மாறியது என்ற வாதமும் இருக்கிறது.

மாற்கு நற்செய்திப் படி யோவான் யோர்தான் நதிக்கரையில் பணியாற்றினார், அங்கேதான் அவர் கொலையும் செய்யப்பட்டார். யோவான் நற்செய்திப்படி அவர் பெத்தானியாவிலும் பணியாற்றியிருக்க வேண்டும். யோசேபுசின் கருத்துப்படி யோவான் மிகவும் பிரசித்தி பெற்றவராக இருந்திருக்கிறாhர். இதனைத்தான் மாற்குவும் காட்டுகிறார். யோவானுடைய காலத்தையும், இயேசுவுடைய காலத்தையும் சரியாக கணிக்க முடியாதிருந்தாலும், யோவான் இயேசுவிற்கு முன்னமே தன்னுடைய பணிவாழ்வை தொடங்கிவிட்டார் என்பது தெளிவு. அந்திபாஸ் யோவானை கொலைசெய்ததன் காரணமாகத்தான் அவனுடைய இராணுவம் நான்காம் அரேத்தாசிடம் தோற்றது என யூதர்கள் நம்பினர். பணிவாழ்விலும் யோவானுக்கும் இயேசுவிற்கும் தொடர்பிருந்திருக்கிறது.

இயேசு யோவானை ஏற்றுக்கொண்டார், அவர் கையால் திருமுழுக்கும் பெற்றார். விவிலியத்திற்கு வெளியே, இயேசு யோவானிடம் திருமுழுக்கு பெற்றதை உறுதிப்படுத்த முடியவில்லை.

யோவானுடைய செய்தி மிக தெளிவாக சொல்லப்படவில்லை. மக்கள் மத்தியில் தேவ பயத்தையும், ஒழுக்கமான வாழ்வையும், யோவான் பறைசாற்றினார் என யோசேப்புஸ் எழுதியிருக்கிறார். அவருடைய காலத்தில் அரசியல் நிலைமைகள் கடினமாக இருந்ததால் அவர் உரோமைய அரசையும், அவர்களின் கைப்பொம்மையான ஏரோது குடும்பத்தையும் யோவான் சாடியிருந்ததற்கான வாய்ப்புக்கள் அதிகம். ஆண்டவரின் இரண்டாம் வருகைப்பற்றி யோவான் பேசியது வெளிப்படையாக தெரியவில்லை. கிறிஸ்தவ பாரம்பரியம் யோவானை எலியாவின் மறுவருகையாகவும், இயேசுவின் முன்னோடியாகவும் காட்டி நம்புகின்றது. யோவானுடைய திருமுழுக்கு பாவமன்னிப்பு, மனமாற்றம், மற்றும் தூய்மை போன்றவற்றின் அடிப்படையாகவே அமைந்துள்ளது. இது நற்செய்தியாளர்களின் நம்பிக்கை, முக்கியமாக மாற்கு இதனைத்தான் முன்னிருத்துகிறார், இருப்பினும் யோசேப்புஸ் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. யோவான் எருசலேமின் குருத்துவத்தையும், ஆலய வழிபாடுகளையும் எப்படி நோக்கினார் என்பது தெளிவாக இல்லாவிடினும், அவற்றை இவர் எதிர்த்தார் என எடுக்கலாம்.

யோவானுக்கு பிரத்தியோக சீடர்கள் இருந்தார்கள் என்பதை மாற்குவும், யோவானும் காட்டுகிறார்கள். இவர்களில் பலர் பின்னர் இயேசுவோடு இணைந்துவிட்டார்கள். யோவானுடைய இறப்பின் பின்னர் பல சீடர்கள் யோவானை தலைவராகக் கொண்டு செயற்பட்டிருக்கலாம், இவர்களுக்கும், கிறிஸ்துவின் சிடர்களுக்கும் சிறு போட்டிகளும் இருந்திருக்கலாம். ஆரம்ப கால கிறிஸ்தவர்களுடைய வாழ்வில் திருமுழுக்கு யோவான் நிச்சயமாக தாக்கம் செலுத்தினார், சில பழக்க வழக்கங்கள் கூட, யோவானுடையவையாக இருந்திருக்கலாம்.

யோவானை எசேனிய அல்லது கும்ரானிய குழுக்களோடு இணைத்து பார்க்கின்ற பாரம்பரியமும் ஒன்று இன்றுவரை நம்பிக்கையில் உள்ளது.

முதல் வாசகம்
முதல் வாசகம்: எசாயா 49,1-6

மக்களினங்களுக்கு ஒளி இஸ்ரயேல் 1தீவு நாட்டினரே, எனக்குச் செவிகொடுங்கள்; தொலைவாழ் மக்களினங்களே, கவனியுங்கள்; கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்; என் தாய் வயிற்றில் உருவாகும் போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். 2என் வாயைக் கூரான வாள்போன்று ஆக்கினார்; தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்; என்னைப் பளபளக்கும் அம்பு ஆக்கினார்; தம் அம்பறாத் துணியில் என்னை மறைத்துக் கொண்டார். 3அவர் என்னிடம், 'நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்' என்றார். 4நானோ, 'வீணாக நான் உழைத்தேன்: வெறுமையாகவும் பயனின்றியும் என் ஆற்றலைச் செலவழித்தேன்: ஆயினும் எனக்குரிய நீதி ஆண்டவரிடம் உள்ளது; என் பணிக்கான பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது' என்றேன். 5யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்; ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்; அவர் இப்பொழுது உரைக்கிறார்: 6அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

எசாயா 49,1-13 வரையான பகுதி, இறைவனின் ஊழியனின் இரண்டாவது பாடல் என அறியப்படுகிறது. இந்த பாடலில் இஸ்ராயேல் ஆண்டவரின் ஊழியனாக காட்டப்படுகிறது. அத்தோடு அந்த ஊழியனின் சிறப்பும் விளக்கப்படுகிறது. ஆண்டவரின் ஊழியனின் சில கேள்விகளுக்கு பதிலளிப்பது போல தோன்றுகிறது. இந்த பகுதியை ஆய்வாளர்கள், இரண்டாவது எசாயாவின் புத்தகத்தினுள் நிலைநிறுத்துகின்றனர். இரண்டாவது எசாயா நம்பிக்கையையும் மன்னிப்பையும் மையப்படுத்துவதனை அவதானிக்கலாம். பாவங்களும், குற்றங்களும் தண்டனையை கொணர்ந்தாலும், ஆண்டவரின் இரக்கமும், அவர் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்போதுமே அவர் மக்களுக்கு துணையாக வரும் என்ற ஆழான சிந்தனைகள் இந்த பகுதியினுள் இருப்பதைக் காணலாம். குற்றம் மற்றும் தண்டனை என்பதனைப் பொறுத்தமட்டில், 'உண்மையாக மனமாறும் பாவிகளுக்கு கடவுள் பெரும் மறதிக்காரர்' என்ற திருத்தந்தை பிரான்சிஸ்குவின் வரி நினைவுக்கு வருகிறது.

வ.1: எசாயா புத்தகத்திலேயே இந்த வரிதான் மிகவும் பிரசித்தி பெற்ற வரி. எசாயா புத்தகத்தில் இஸ்ராயேலருக்கு நம்பிக்கை கொடுக்கும் மிக அற்புதமான வரி. பலவிதமான துன்பத்தை அனுபவித்த நாடு, நிலம், அரசன், ஆலயம், எதிர்காலம் அனைத்தையும் தொலைத்து, பபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்தவர்களுக்கு இந்த வரி மிகவும் இதமான இருந்திருக்கும்.

இஸ்ராயேலை அனைவரும் நகைக்கும் வேளை, எசாயா இறைவாக்கினர், ஆண்டவரின் திட்டத்தை அறிவிக்கிறார். இந்த வரி தீவு நாட்டினர்க்கும் (אִיִּים֙ 'இய்யிம்), தொலைவாழ் மக்களினங்களுக்கும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு சொற்களும் ஒரே மக்களினங்களைத்தான் குறிக்க வேண்டும். தீவு நாட்டினர் என்பது கிரேக்க தீவுகளைக் குறிக்கலாம், அல்லது இஸ்ராயேலின் அயல் நாட்டினரையும் குறிக்கலாம்.

இஸ்ராயேல் கைவிடப்பட்ட நாடு அல்ல மாறாக அது அழைக்கப்பட்ட நாடு என்று சொல்லப்படுகிறது. இந்த அழைப்பை கடவுள் கருப்பையிலே கொடுத்துவிட்டார். קְרָאָ֔נִי מִמְּעֵי אִמִּי הִזְכִּיר שְׁמִי׃ கெரா'னி, மிம்மெ'இ 'இம்மி ஹிட்ஸ்கிர் ஷெமி- என்தாய் வயிற்றிலே அவர் என்னை அழைத்தார், என் பெயரை நினைத்தார்.

வ.2: தன் வாயை கூரான வாள் போல ஆக்கினார் என்கிறார் (וַיָּשֶׂם פִּי כְּחֶ֣רֶב חַדָּה வய்யாசெம் பி கொஹெரெவ் ஹதாஹ்- கூரான வாள் போல என்வாயைப் போட்டார்). இந்த வசனமும் இஸ்ராயேலைக் குறிப்பது போன்றே உள்ளது. ஆண்டவரின் கையால் இஸ்ராயேல் பாதுகாக்கப்படுகிறது. நிழலால் பாதுகாக்கப்படுவது, ஓர் அழகான உருவகம் (בְּצֵל יָדוֹ הֶחְבִּיאָנִי பெட்செல் யாதோ ஹௌ;பி'ஆனி- உம் கையின் நிழலால் என்னை மறைத்தீர்). பல வேளைகளில் விவிலிய ஆசிரியர்கள் இந்த உருவகத்தை பாவிக்கின்றனர்.

இஸ்ராயேல் பளபளக்கும் அம்பாகிறது (חֵץ בָּרוּר ஹெட்ஸ் பாரூர்), அத்தோடு இந்த பளபளக்கும் அம்பு, அம்பாறத் துணியில் மறைத்து வைக்கப்படுகிறது. இந்த வார்த்தை பிரயோகங்கள் இஸ்ராயேலின் மகத்துவத்தையும், ஆண்டவரின் பார்வையையும் காட்டுகின்றன.

வ.3: இஸ்ராயேல், முக்கியமாக யூதா தன்னுடைய அடிமை வாழ்வாலும், நம்பிக்கை இல்லாத நிகழ்கால வாழ்க்கையாலும் மனமுடைந்து போயிருந்தது. இந்த வேளையில் அவர்களின் முக்கியமான நம்பிக்கையான, கடவுளின் தேர்ந்துகொள்ளப்பட்ட இனம், என்ற நம்பிக்கையே கேள்விக்குறியாகியது. இந்த வேளையில் இன்னமும் இந்த மக்கள் கடவுளின் மக்கள்தான், என்ற உண்மை சொல்லப்படவேண்டியிருந்தது. இந்த வரியில் ஆசிரியர் இரண்டு விதமான உறுதிப்பாட்டை முன்வைக்கிறார்.

அ. இஸ்ராயேல் கடவுளின் ஊழியன் (עַבְדִּי־אָתָּה יִשְׂרָאֵל 'அவ்தி-'ஆதாஹ் யிஸ்ரா'எல்). முதலாளி மற்றும் ஊழியன் உறவு முறை இஸ்ராயேலருக்கு மிக முக்கியமானது. ஏனெனில் இந்த உறவு முறையில்தான் அவர்கள் கடவுளுக்கு தம் பிரமாணிக்கத்தை வெளிக்காட்டினர், அத்தோடு கடவுளும் இந்த உறவில்தான், இவர்கள் தன் மக்கள் என்பதை ஏற்றுக்கொண்டார். எருசலேம் அழிக்கப்பட்டபோது இந்த ஊழியன-; உறவும் சிதைந்து போனது. ஒருவேளை இப்போது பபிலோனியர்கள் ஆண்டவரின் ஊழியர்களாக மாறிவிட்டார்களோ என்ற சந்தேகத்;தையும் உருவாக்கியது. இதனை தெளிவு படுத்துகிறார் ஆசிரியர். ஆக இன்னும் ஆண்டவரின் ஊழியன் இஸ்ராயேல்தான் என நம்பிக்கை தருகிறார் ஆசிரியர்.

ஆ. இஸ்ராயேல் வழியால்தான் கடவுள் மாட்சியுறுவார் (אֲשֶׁר־בְּךָ אֶתְפָּאָֽר 'அஷேர்-பெகா 'எத்பா'ஆர்). கடவுளை மாட்சியுற வைப்பதுதான் இஸ்ராயேலின் ஒரே நோக்கமாகவும் கொள்கையாகவும் இருக்கவேண்டும் என்பது முதல் ஏற்பாட்டின் கட்டளை (ஒப்பிடுக இணைச்சட்டம் 4,6-8). இந்த கட்டளையை, எப்படி தோற்றகடிக்கப்பட்ட இனம் முன்னெடுக்க முடியும் என்பதுதான் இஸ்ராயேலர்களின் கேள்வியாக இருந்தது. இதனை நிவர்த்தி செய்கிறார் ஆசிரியர். இஸ்ராயேல் வழியாய் கடவுள் மாட்சியுறுவார் என்பது, இனி இஸ்ராயேல் தொடர்ந்தும் தோற்ற இனமாக இருக்க முடியாது என்பதைக் காட்டுகிறது. இஸ்ராயேலை வெற்றி கொண்டவர்களால், கடவுள் மாட்சியுறவில்லை என்பதையும் இந்த வரி காட்டுகிறது.

வ.5: இந்த வரி ஆண்டவரின் ஊழியரின் அழைப்பபைப் பற்றி விவரிக்கின்றது. முதல் ஏற்பாட்டு மக்களுக்கு இந்த ஆண்டவரின் ஊழியர், எஞ்சியிருந்த இஸ்ராயேலையே குறித்தது. கிறிஸ்தவர்கள் இந்த வரியை தமக்கும், அல்லது கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் காண்கின்றனர். இந்த ஊழியரின் முக்கியமான பணியாக, யாக்கோபை அவரிடம் கொண்டுவருதலும், சிதறுண்ட இஸ்ராயேலை ஒன்று திரட்டலும் இருக்கிறது. இந்த வரிகள் எழுதப்பட்ட போது இஸ்ராயேல் அடிமையாகவும், சிதறுண்டும் இருந்தது. ஆக இந்த வரி எதிர்காலத்தை விட நிகழ்காலத்தையே (அக்காலத்தை) நேரடியாக பிரதிபலித்தது.

அத்தோடு இந்த ஊழியர் தன்னை கடவுள், தன் தாயின் கருப்பையிலே (வயிற்றில்) தேர்ந்துகொண்டதாக கூறுகிறார் (יֹצְרִי מִבֶּטֶן לְעֶבֶד לוֹ யோட்ஸ்ரி மிபெதென் லெ'எவெத் லோ- அவர் பணியாளராக இருக்க என்னை வயிற்றிலே உருவாக்கினார்). இந்த சிலேடையின் காரணமாகத்தான் விரிவுரையாளர்கள், இந்த ஊழியர் ஒரு இறைவாக்கினராக அல்லது முக்கியமாக இயேசுவாக இருக்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் இது இஸ்ராயேலின் மிஞ்சிய இனத்தை ஒரு நபராக வர்ணிப்பது போலவே சூழழியலில் இருக்கிறது.

ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன் என்ற வரி, எசாயா புத்தகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. அத்தோடு பல கோணங்களில் இது பல அர்த்தங்களையும் கொடுக்கிறது (וְאֶכָּבֵד בְּעֵינֵי יְהוָה வெ'எக்காவெத் பெ'எனி அதோனாய்). அதேவேளை, இந்த நிலைக்கு காரணம், கடவுள் தன் ஆற்றலாய் இருக்கிறார் என்ற சிந்தனையைக் கொடுக்கிறது. மதிப்பு பெற்றவர்கள்தான் சமுதாயத்தில் ஒரு நபராக கருதப்பட்டனர், மதிப்பு பெற்றவர்களால் தான் எதாவது மற்றவர்களுக்கு செய்ய முடிந்தது. இந்த ஊழியர்தான் கடவுளின் பார்வையில் மதிப்பு பெற்றவர் எனச் சொல்லி, தன்னால் இஸ்ராயேலுக்கு நம்பிக்கை கிடைக்கும் என்கிறார். அடுத்த வரி இந்த ஊழியரின் செயலை விவரிக்கின்றது.

அ. யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்தல்: இது ஒரு நம்பிக்கை. இந்த வரி எழுதப்பட்டபோது வட நாடு, இஸ்ராயேல் அசிரியாவினால் ஏற்கனவே அழிந்து போயிருந்தது, அதன் பத்து குலங்களும் (שִׁבְטֵי יַעֲקֹב ஷிவ்தே யா'அகோவ்), சிதைந்து போயிருந்தன. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதே அக்கால தென்நாட்டவருக்கு தெரியாதிருந்தது. சிலர் இவர்கள் அசிரியாவிற்கு நாடுகடத்தப்பட்டனர் என நம்பினர். சிலர் இவர்கள் எகிப்திற்கு சென்றுவிட்டார்கள் என்றும் நம்பினர். ஆனால் இவர்கள் நிச்சயமாக வடநாட்டை விட்டு தூரம் சென்றார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது. இவர்களை இந்த ஊழியர் ஒன்று கூட்டுவதாக சபதம் செய்கிறார். அத்தோடு இந்த குலங்களோடு தென்நாட்டு இரண்டு குலங்களையும் ஒன்றாக சேர்த்து ஒரே நாடு ஒரே இனம் என்ற தோரணையில் இறைவாக்குரைக்கிறார்.

ஆ. இஸ்ராயேலின் காக்கப்பட்டோரை திருப்பிக் கொணர்தல்: இந்த இஸ்ராயேலர் என்பவர், வட நாட்டினரைக் குறிக்கின்றதா? அல்லது தென்நாட்டினரைக் குறிக்கின்றதா? அல்லது முழு இனத்தையும் குறிக்கிறதா? என்பதில் பல கேள்விகளும் விடைகளும் உள்ளன. சூழலியலில் வைத்து பார்க்கின்றபோது இது முழு இனத்தையும் குறிப்பதாகவே உள்ளது. அத்தோடு காக்கப்பட்டோரை திருப்பிக்கொணர்தல் என்ற பண்பு கடவுள்குரிய பண்பு, இது இந்த ஊழியருக்கு கொடுக்கப்படுவது மிகவும் அழகாக உள்ளது. (ஈழத்திலும், புலம்பெயர்ந்தவர்களை, நம்பிக்கை இழந்தவர்களை, துன்புறுகிறவர்களை, கடவுளோடு சேர்ந்து ஒவ்வொரு ஈழத் தமிழரும் மீட்கும் பணியை முன்னெடுத்தால் எவ்வளவு நலமாக இருக்கும்- அதிகமானவர்கள் இந்த பணியை செவ்வனே செய்கிறார்கள், சிலர் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து, தாயகத்தில் குட்டையை குழப்பும் வேலையையும் செய்கிறார்கள் என்பதையும் இந்த இடத்தில் நினைத்தால் நலம்.).

இ. இப்படியான பணிகளை செய்வது எளிதல்ல: இதுதான் உண்மை. ஏனெனில் இந்த செயற்பாடுகள் அக்கால சூழலில் கனவாகவே கருதப்பட்டது. இந்த வேளையில் தென்நாட்டவர், பபிலோனில் வாழ்ந்தனர், அத்தோடு பலர், பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்தனர், இன்னும் பலர் செல்வந்தர்களாகவும், வெளிநாடுகளில் தங்களது அடையாளங்களை தொலைத்தவர்களாக அல்லது மாற்றியமைத்தவர்களாகவும் வாழ்ந்தனர். இதனால்தான் ஆசிரியர் இந்த கேள்வியை ஆண்டவரின் வாயில் வைக்கிறார். இந்த கேள்விக்கான விடை அன்று கிடைக்கவில்லை மாறாக 1947ம் ஆண்டிற்கு பின்னர் புதிய இஸ்ராயேல் நாடு உருவாகியபோதே ஒரளவு கிடைத்தது. ஈழத்தை பொறுத்தமட்டில் இதற்கான விடையை கடவுள்தான் தரவேண்டும்.... 2018ம் ஆண்டும் தரும் என்பது சந்தேகமாகவே உள்ளது.

ஈ. உலகம் முழுவதும் மீட்படைய இஸ்ராயேல் ஒளியாக மாற்றமடைகிறது. நாடுகளுக்கு ஒளி என்பது பலநாடுகளுடைய கனவு, பல நாடுகள் தங்களை உலகின் ஒளியாக கற்பனை செய்தார்கள். அசிரியா, பபிலோனியா, பாரசீகம், மேதியா, எகிப்பது, கிரேக்கம், உரோமை இன்னும் பல நாடுகள். இப்படியிருக்க சிறிய நாடாக இஸ்ராயேல் உலகின் ஒளியாக மாறுவதாக இறைவாக்குரைக்கப்படுகிறது. ஒளி (אוֹר ஓர்) என்பது முதல் ஏற்பாட்டில் கடவளின் அடையாளமாக பார்க்கப்படுகறிது. (❖காண்க தி.பா 27,1) இதே சிந்தனை புதிய ஏற்பாட்டிலும் காணக்கிடக்கிறது (❖❖யோவான் 1,9). இப்படியாக இந்த ஊழியர் கடவுளின் பிரசன்னமாக இஸ்ராயேலுக்கு மட்டுமல்ல முழு உலக மக்களினத்திற்கும் ஒளியாகிறார், அல்லது ஆகிறார்கள்.

(❖1ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு).

(❖❖அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.)



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 139

1ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!

2நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.

3நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர்; என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே.

4ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகு முன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.

5எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்; உமது கையால் என்னைப் பற்றிப்பிடிக்கின்றீர்.

6என்னைப்பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது; அது உன்னதமானது; என் அறிவுக்கு எட்டாதது.

7உமது ஆற்றலைவிட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்?

8நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்!

9நான் ழூகதிரவனின் இடத்திற்கும்ழூ பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,

10அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக் கொள்ளும்.

11'உண்மையில் இருள் என்னை மூடிக்கொள்ளாதோ? ஒளி சூழ்வதென இரவும் என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ?' என்று நான் சொன்னாலும்,

12இருள்கூட உமக்கு இருட்டாய் இல்லை; இரவும் பகலைப்போல ஒளியாய் இருக்கின்றது இருளும் உமக்கு ஒளிபோல் இருக்கும்.

13ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே!

14அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும்.

15என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர்.

16உம் கண்கள் கருமுளையில் என் உறுப்புகளைக் கண்டன் நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள நாள்கள் எல்லாம் எனக்கு வாழ்நாள் எதுவுமே இல்லாத காலத்திலேயே உமது நூலில் எழுதப்பட்டுள்ளன.

17இறைவா! உம்முடைய நினைவுகளை நான் அறிந்துகொள்வது எத்துணைக் கடினம்! அவற்றின் எண்ணிக்கை எத்துணைப் பெரிது!

18அவற்றைக் கணக்கிட நான் முற்பட்டால், அவை கடல் மணலிலும் மிகுதியாய் உள்ளன் அவற்றை எண்ணி முடிக்க வேண்டுமானால், நீர் உள்ளளவும் நான் வாழ வேண்டும்.

19கடவுளே! நீர் தீயோரைக் கொன்றுவிட்டால், எவ்வளவு நலம்! இரத்தப்பழிகாரர் என்னிடமிருந்து அகன்றால், எத்துணை நன்று!

20ஏனெனில், அவர்கள் தீயமனத்துடன் உமக்கு எதிராய்ப் பேசுகின்றார்கள்; அவர்கள் தலைதூக்கி உமக்கு எதிராய்ச் சதி செய்கின்றார்கள்.

21ஆண்டவரே! உம்மை வெறுப்போரை நானும் வெறுக்காதிருப்பேனோ? உம்மை எதிர்க்க எழுவோரை நானும் வெறுக்கின்றேன் அன்றோ?

22நான் அவர்களை அடியோடு வெறுக்கின்றேன்; அவர்கள் எனக்கும் எதிரிகள் ஆனார்கள்.

23இறைவா! நீர் என் உள்ளத்தை ஆய்ந்து அறியும்; என் எண்ணங்களை அறியுமாறு என்னைச் சோதித்துப் பாரும்.

24உம்மை வருத்தும் வழியில் நான் செல்கின்றேனோ என்று பாரும்; என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும்.



கடவுளுடைய அனைத்து வல்லமைகளையும் இந்த பாடல் காட்டுகின்றமை தெளிவாகின்றது. விவிலிய ஆய்வாளர்கள் இந்த பாடலை தனி மனித புலம்பல் பாடலாகவும், படைப்பைப் பற்றி சொல்லும் மெய்யியல் பாடலாகவும் காண்கிறார்கள். இந்த பாடலின் மிக முக்கியமான நான்கு தலைப்புக்களை காணலாம்:

அ. கடவுளின் சகல அறிவுத்தன்மை: வவ.1-6

ஆ. கடவுளின் சர்வ பிரசன்னம்: வவ.7-12

இ. கடவுளின் படைப்புத்திறன்: வவ.13-18

ஈ. கடவுளின் தூய்மை: வவ.19-24

இந்த பாடல் பாரம்பரியமாக தாவீதுடையது என நம்பப்படுகிறது. இருந்தாலும், இந்தப் பாடலில் உள்ள அரமேயிக்க சொற்பாவனைகள், இதனை தாவீதின் காலத்திற்கு பிற்பட்டதாக எண்ணத்தோன்றுகின்றது (לַמְנַצֵּחַ לְדָוִ֣ד מִזְמ֑וֹר லம்னாட்செஹா லெதாவித் மிட்ஸ்மோர்- பாடகர் தலைவர்க்கு தாவீதின் திருப்பாடல்).

வ.1: ஆசிரியர் கடவுள் தன்னை ஆய்ந்தறிந்திருக்கிறார் என்கிறார். அதாவது அவர் ஏற்கனவே தன்னை அறிந்தவர் என்று இறந்த காலத்தில் காட்டுகிறார். கடவுளுடைய பூரணமாக அறிவிற்கு தான் உட்பட்டவர் என்பதை இந்த வரி காட்டுகிறது. அறிதல் மற்றும், தேடுதல் ஒத்த கருத்துக்களாக பயன்படுகின்றன.

வ.2: தன்னுடைய அத்தனை அசைவுகளையும் கடவுள் அறிந்துள்ளார் என்பது அழகாக பாடப்படுகிறது. கடவுள், இவர் அமர்வதையும், எழுவதையும் அறிந்துள்ளார் (שִׁבְתִּ֣י וְקוּמִי என் அமர்தல், என் எழுதல்). கடவுளுக்கு தூரம் ஒரு பொருட்டல்ல என்பதைக் காட்ட, ஆசிரியர் தன் உணர்வுகளை கடவுள் தொலையிலிருந்து உணர்கின்றார் என்கிறார்.

வ.3: தன் பாதைகளைப் பற்றி பேசுகிறார். கடவுளுக்கு தன்னுடைய நடத்தல் மற்றும் படுத்தல் தெரிந்திருக்கிறது என்கிறார். அதேவேளை இவருடைய வழிப்பாதைகூட கடவுளுக்கு தெரிந்திருக்கிறது. இதன் மூலமாக கடவுளுக்கு தெரியாதது ஒன்றுமில்லை என்பது சொல்லப்படுகிறது (אָרְחִי וְרִבְעִי 'ஆர்ஹி வெரிவ்'இ- என் பாதை மற்றும் படுக்கை).

வ.4: வெளி செயற்பாடுகள் மட்டுமல்ல, தன்னுடைய வார்த்தை மற்றும் எண்ணத்தைக் கூட கடவுள் அறிந்துள்ளார் என்பதைக் காட்டுகிறார். ஒருவரின் வாயில் சொல் உருவாகும் முன்பே அதனை கடவுள் அறிந்துள்ளார் என்பதன் மூலம், இஸ்ராயேலின் கடவுளின் சர்வ வல்லமை வித்தியாசமாக காட்டப்படுகிறது. இதனை இன்னும் தெளிவாகக் காட்ட 'ஆண்டவரே நீர் என்னை முழுமையாக அறிந்துள்ளீர்' (יְהוָ֗ה יָדַעְתָּ כֻלָּהּ அதோனாய் யாத'தா குல்லாஹ்) என்ற வரிப்பிரிவு காட்டப்படுகிறது.

வ.5: இந்த வரி ஆண்டவருடைய பிரசன்னத்தைக் காட்டுகிறது. ஆண்டவர் தனக்கு முன்னும் பின்னுமாக அத்தோடு சூழ்ந்தும் இருக்கிறார் என்கிறார். கடவுள் எங்கு இருக்கிறார்? என்ற கேள்விக்கு இந்த அனுபவம் விடையாக அமைவது போல உள்ளது. கடவுள் தன்னை தம் கையால் பற்றிப்பிடிக்கிறார் என்பதன் மூலம், இவர் கடவுளைவிட்டு தொலைவில் இல்லை என்பதை காட்ட முயல்கிறார் எனலாம்.

வ.6: தன்னைப் பற்றிய கடவுளின் அறிவைப் பார்த்து வியந்து அது தன் அறிவிற்கு எட்டாதது என்கிறார்.

நம்பிக்கையாளர்கள் கடவுளைப் பற்றி வியப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமாக கடவுள் ஒருவரை எப்படி அறிகின்றார் என்ற நம்பிக்கை மிகவும் வியப்பிற்குரியது. פְּלִאָֽיה דַעַת מִמֶּ֑נִּי பில்'ஆய்ஹ் த'அத் மிம்மெனி- என்னைப் பற்றிய அறிவு ஆச்சரியமாகவுள்ளது. נִשְׂגְּבָ֗ה לֹא־אוּכַל לָהּ׃ நிஸ்கெவாஹ் லோ'-'வூகல் லாஹ்- அது எட்டமுடியாதது.

வ.7: கடவுளின் பார்வையிலிருந்து ஒருவரால், தப்பிக்க முடியுமா. என்பதற்கு இந்த வரி விடையளிக்கிறது. கடவுளின் ஆற்றல் மனிதரின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என்பதை காட்டுகிறார். ஆற்றலைக் குறிக்க 'உம் ஆவி' (מֵרוּחֶךָ மெரூஹெகா- உம் ஆவி) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ஒத்தகருத்துச் சொல்லாக 'உம் முகம்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது (מִפָּנֶיךָ மிபானெகா- உமது முகம்). இந்த திருப்பாடல் அதிகமான ஒத்த கருத்துச் சொற்களையும், எதுகை மோனைகளையும் பாவிக்கின்றமைக்கு இந்த வரி நல்லதோர் உதாரணம்.

வ.8: வானத்திற்கு (שָׁמַיִם ஷாமாயிம்) எதிர்ப்பதமாக பாதாளத்தை (שְּׁאוֹל ஷெ'ஓல்) இஸ்ராயேலர்கள் கண்டுகொண்டார்கள். இஸ்ராயேலர்கள் ஆரம்ப காலத்தில் நரகம் பற்றிய நம்பிக்கையை கொண்டிருந்தார்களா? என்பதற்கு சரியான புரிதல் இதுவரை இல்லை. வானகம் என்பது கடவுளுடைய தலையணை அல்லது அவருடைய இருப்பிடமாக கருதப்பட்டது. இங்கேதான் வானதூதர்கள் மற்றும் செராபீன்கள் இருக்கிறார்கள் என்றும் நம்பினார்கள். பாதாளத்தை அவர்கள் கடவுள் இல்லாத பள்ளம் என நம்பினார்கள். இங்கே கடவுளுடைய பிரசன்னம் இல்லாமல் இருந்தாலும், இதனையும் கடவுள்தான் கட்டுப்படுத்துகிறார் என்ற நம்பிக்கையும் காணப்பட்டது.

நரகம் என்ற சிந்தனை கிரேக்க காலத்தை சார்ந்தது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. வவ.9-10: இந்த வரிகள் ஊடாக கடவுளின் அதிகாரம் எங்கெல்லாம் இருக்கிறது என்பது காட்டப்படுகிறது. இஸ்ராயேலர்கள் கிழக்கையும் மேற்கையும் குறிக்க இரண்டு விதமான வார்த்தைகளை பயன்படுத்தினர். கிழக்கை குறிக்க அவர்கள் 'கதிரவன் இடம்' என்ற சொல்லை பயன்படுத்தினர். இந்த இடத்திலிருந்து கதிரவன் உதித்ததால், அது அங்கே இருக்கிறது என நம்பினர். இந்த வரியில் கிழக்கை குறிக்க 'வைகறையின் இறகுகள்' என்ற சொல்லை எபிரேய பாடம் பாவிக்கின்றது (כַנְפֵי־שָׁחַר கான்பே-ஷாஹர்). இங்கே வைகறை ஆளாக வர்ணிக்கப்படுகிறது. இது கானானிய தெய்வமான சாகாரின் புராணத்தோடு சம்மந்தப்பட்டது. இந்த இடத்தை ஆசிரியர் கிழக்கிற்கு பயன்படுத்துகிறார்.

மேற்கைக் குறிக்க 'கடலின் எல்லை' (אַחֲרִית יָם 'அஹரித் யாம்) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இங்கே கடல் என்பது மத்தியதரைக் கடலைக் குறிக்கிறது. இது அவர்களுடைய மேற்கு எல்லையைக் குறிக்கும்.

இந்த இரண்டு எல்லைகளுக்கும் தாம் சென்றாலும், அங்கும் கடவுளுடைய கரங்கள் இருக்கும் என்கிறார். அதாவது, கடவுளுடைய வல்லமை எங்கும் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. உமது கரம், மற்றும் உமது வலக்கரம் என்ற ஒத்த கருத்துச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன (יָדְךָ யாத்கா-உம் கரம்: יְמִינֶךָ யெமினெகா- உம் வலக்கை).

வவ.11-12: இருள் (חֹשֶׁךְ ஹோஷெக்) விவிலியத்தில் எதிர்மறையான அர்த்தத்தை கொடுக்கிறது. இருளின் இருள்தன்மை தீய சக்தியை குறிப்பதாக பல மதங்களில் கருதப்படுகிறது. எபிரேயர்களும் ஆரம்ப காலத்தில் இந்த நம்பிக்கையையே கொண்டிருந்தார்கள்.

ஆசிரியர் இருளிடமே கேள்வி ஒன்றை கேட்கிறார். இருளால் தன்னை மூடி முடியுமா என்று கேள்வி கேட்கிறார். அத்தோடு ஆண்டவருக்கு இருள்கூட ஒளிதான், அதாவது அவருக்கு இருளே கிடையாது என்கிறார். גַּם־חֹשֶׁךְ לֹֽא־יַחְשִׁיךְ காம்-ஹோஷெக் லோ'-யஹ்ஷிக் - இருள்கூட இருள் அல்ல. וְלַיְלָה כַּיּ֣וֹם יָאִ֑יר வெலய்லாஹ் கயோம் யா'யிர்- இரவும் பகலைப்போல ஒளியே.

வ.13: கடவுளின் படைப்புத்திறன் விவரிக்கப்படுகிறது. கடவுள் தன்னுடைய உள்ளுறுப்புக்களை உருவாக்கிறனார் என்கிறார். உள்ளுறுப்பைக் குறிக்க כִּלְיָה (கில்யாஹ்) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது சிறுநீரகத்தையே குறிக்கிறது. விவிலியத்தில் சிறுநீரகம்தான் உணர்வுகள் மற்றும் அறிவின் உறைவிடமாக கருதப்படுகிறது (காண்க: தி.பா 7,9: 26,2). இந்த சிறநீரகம் என்பது உள்ளுறுப்புக்களை குறிக்கிறது என்று புதிய மொழிபெயர்ப்புக்கள் காட்டுகின்றன.

இந்த வரி திருப்பிக்கூறல் முறையில் 'என் தாயின் வயிற்றில்' என்ற சொல் மூலம் மீண்டும் சொல்லப்படுகிறது (בֶטֶן אִמִּי பெதென் 'இம்மி).

வ.14: கடவுள் தன்னை அஞ்சத்தகு முறையில் படைத்துள்ளதாகவும், இதனை நினைத்து தான் நன்றி நவில்வதாகவும் சொல்கிறார். ஆண்டவரின் செயல்கள் அனைத்தும், வியத்தக்கவை என்பதை தன் மனம் நன்கு அறிந்துள்ளது என்கிறார். 'அஞ்சத்தகு முறை' (נוֹרָא֗וֹת நோரா'ஓத்) மற்றம் 'வியத்தக்கவை' (נִפְלָאִים நிப்லா'யிம்) எனபன ஒத்த கருத்துச் சொற்களாக பயன்படுத்தப்படுகின்றன.

வ.15: படைப்பு ஓர் ஆச்சரியம். படைப்பைப் பற்றி விவிலியத்தை விட பல விதமான கதைகள் வழக்கிலிருந்திருக்கின்றன என்பதற்கு இந்த வரி நல்லதோர் உதாரணம். எலும்புகள் என்பதற்கு 'அமைப்பு' என்ற சொல்லை எபிரேய விவிலியம் பயன்படுத்துகிறது. לֹא־נִכְחַד עָצְמִ֗י லோ'- நிக்ஹர் 'ஆட்ஸ்மி- என் அமைப்புக்கள் மறைவாய் இல்லை.

மனிதர்கள் மறைவாக உருவாகிறார்கள் என்பதும், மனிதர்களுடைய மூலக் கரு, நிலத்தின் கீழ்பகுதியினுள் உருவானது என்பதும் ஆரம்ப கால நம்பிக்கையாக இருந்திருக்கிறது. இந்த சிந்தனைகளின் தாக்கங்களை இந்த வரியில் காணலாம்.

வ.16: இந்த வரியில் ஆண்டவருடைய கண்களின் வல்லமை விவரிக்கப்படுகிறது. ஆண்டவரின் கண்கள் தன்னை கருமுளையிலேயே கண்டுகொண்டன என்றும், தன்னுடைய வாழ்நாட்களை அவர் பிறப்பதற்கு முன்பே கடவுள் கண்டுவிட்டார் என்பதும் அழகான வார்த்தைகளால் சொல்லப்படுகிறது.

ஆண்டவர் தனது வாழ்நாளை அவருடைய புத்தகத்தில் எழுதிவிட்டார் என்கிறார். ஆண்டவருடைய புத்தகம் என்பது இஸ்ராயேலர்களுடைய நம்பிக்கையில் மிகவும் பழமையானது. இந்த புத்தகத்தில் கடவுள் ஒருவருடைய நன்மை தீமைகளை பதிகிறார் என்று இவர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கை புதிய ஏற்பாட்டிலும், முக்கியமாக திருவெளிப்பாடு நூலிலும் காணக்கிடக்கிறது (סִפְרְךָ֮ சிப்ரெகா- உமது புத்தகம்).

வவ.17-18: கடவுளுடைய நினைவுகளைப் பற்றிப் பேசுகிறார் (רֵעֶ֣יךָ ரெ'ஏகா). கடவுளுடைய நினைவுகளை அறிந்துகொள்வது எத்துணை கடினம் என்றும், அவற்றின் எண்ணிக்கையை நினைத்தும் ஆச்சரியப்படுகிறார்.

கடவுளுடைய நினைவுகள் இஸ்ராயேலருடைய வெற்றியின் இரகசியம். இந்த நினைவுகள் மூலமாகத்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். பல விதமான அழிவுகளிலிருந்தும் அவர்கள் மீண்டு வந்ததற்கும் இந்த நினைவுகள்தான் காரணம். கடவுளின் நினைவுகள் இவர்களுக்கு வாழ்வு கொடுத்தது, அடையாளமும் கொடுத்தது. இந்த காரணத்தில்தான் பல இறைவாக்குகளும், திருப்பாடல்களும், ஞான நூல்களும் கடவுளின் நினைவுகளைக் கொண்டாடுகிறது. இதனைத்தான் ஆசிரியரும் செய்கிறார்.

கடவுளின் நினைவுகள் எண்ணிலடங்கா என்பதைக் குறிக்க கடல் மணலையும், நீரையும் ஒப்பிடுகிறார். கடல் மணலை எவராலும் எண்ண முடியாது. חוּל ஹோல்-கடற்கரை மணல்: இந்த அளவையைக் கொண்டுதான் தன் சந்ததியை எண்ண சொன்னார் கடவுள், ஆபிரகாமுக்கு. இந்த அளவில்தான் யோசேப்பு எகிப்தில் தானியத்தை சேகரித்து வைத்தார், யோசுவாக்கு எதிராக எதிரிப்படைகள் மணலைப் போன்று அதிகமாக வந்தார்கள், இஸ்ராயேலருக்கு எதிராக பெலிஸ்திய படைகளும் மணலைப் போலவே அதிகமாக வந்தார்கள். சாலமோனின் ஞானம், மணலைவிட அதகிம் என்று 2அரசர்கள் புத்தகம் காட்டுகின்றது.

கடவுளின் நினைவுகளை எண்ணவேண்டும் என்றால் ஒருவர் கடவுள் உள்ள அளவும் வாழ வேண்டும் என்கிறார். கடவுள் காலங்களைக் கடந்தவர், அவருக்கு வாழ்நாள் என்ற அளவை கிடையாது, அதனைப்போலவே அவர் நினைவுகளும். ஆக அவரை அறிய ஒருவர் அவருடைய காலம் வரை வாழவேண்டியிருக்கும். இது சாத்தியமில்லை என்பது ஆசிரியரின் வாதம்.

வ.19: இவ்வளவு நேரமும் படைப்பைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் பேசியவர் இந்த வரியில் தன் எதிரிகளைப் பற்றி பேசுகிறார். தீயோர் மற்றும் இரத்தப்பழிகாரர் என்று எதிரிகள் ஒத்த கருத்துச் சொற்களில் காட்டப்படுகின்றனர் (רָשָׁע ராஷா': אַנְשֵׁי דָמִ֗ים 'அன்ஷெ தாமிம்). கொன்றுவிடும், அகற்றிவிடும் (תִּקְטֹל திக்தோல்: סוּרוּ சூரூ ) என்ற ஒத்த கருத்து வினைன் சொற்களும் பாவிக்கப்படுகின்றன.

இந்த வரியிலிருந்துதான் இந்த பாடல் தாவீதின் பாடல் என்ற சிந்தனையை சில ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள்.

வ.20: தன் எதிரிகளை கடவுளின் எதிரிகள் என்று காட்டி, அதன் வாயிலாக அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே என்கிறார். இவர்களுக்கு எதிராக இரண்டுவிதமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். அவர்கள் கடவுளுக்கு எதிராக பேசுகிறார்கள். அவர்கள் கடவுளுக்கு எதிராக சதி செய்கிறார்கள். எதிராக சதி செய்தலைக் குறிக்க, அவர்கள் 'வெறுமையாக உம் எதிரிகள்' என்ற சொல் பாவிக்கப்படுகிறது (לַשָּׁוְא עָרֶיךָ லஷ்ஷாவெ' 'ஆரெகா).

வவ.21-22: எதிரிகளை வெறுத்தலுக்கான காரணம் சொல்லப்படுகிறது. அவர்கள் கடவுளின் எதிரிகளாக இருக்கின்ற படியால் அவர்கள் வெறுக்கப்படுகிறார்கள். அயலவர்களை வெறுக்க வேண்டாம் என லேவியர் சட்டம் சொல்ல, அவர்கள் கடவுளுக்கு எதிரானவர்களாக இருக்கின்ற படியால், வெறுக்கப்பட வேண்டியவர்களே என்கிறார் ஆசிரியர்.

அவர்களை சாதாரணமாக வெறுக்கவில்லை மாறாக அடியோடு வெறுக்கின்றேன் என்கிறார் (תַּכְלִית שִׂנְאָה שְׂנֵאתִים திக்லித் சின்'ஆஹ் சென்'திம்- முழுமையான வெறுப்பில் அவர்களை வெறுக்கிறேன்). கடவுளின் எதிரிகள் தனக்கும் எதிரிகள் என்கிறவர் யார் இந்த எதிரிகள் என்று குறிப்பிடவில்லை.

வவ.23-24: சாதாரணமாக திருப்பாடல்கள் வேண்டுதல்களில் முடிவடையும். இந்த திருப்பாடல் முடிவில் ஆசிரியர் கடவுளை தன்னை சோதித்து பார்க்க கேட்கிறார். இந்த சோதனை முடிவு அவருக்கு நன்மை பயக்கம் என்பதால் அந்த முடிவை எடுக்கலாம். தன் உள்ளத்தையும், எண்ணகளையும் ஒத்த கருத்துச் சொற்களில் காட்டுகிறார் (לְבָבִי லெவாவி- என் இதயம்: שַׂרְעַפָּי சர்'அப்பாய்).

அதேவேளையில் கடவுளை வருத்தும் வழியில் தான் செல்லவில்லை என்றும் அப்படிச் சென்றால், அதனை ஆராயச் சொல்கிறார். கடவுளின் வழியை அவர் 'என்றுமுள' வழி என்கிறார். இந்த வழியில் நடக்கச் சொல்கிறார் (דֶרֶךְ עוֹלָם தெரெக் 'ஓலாம்- நித்திய வழி).



இரண்டாம் வாசகம்
திருத்தூதர் பணிகள் 13,22-26

22பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து 'ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன் என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்' என்று சான்று பகர்ந்தார். 23தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். 24அவருடைய வருகைக்கு முன்பே யோவான், 'மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்' என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார்.✠ 25யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் 'நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை' என்று கூறினார். 26சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது.

இன்றைய வாசகப் பகுதி திருத்தாதர் பணிகள் நூலில் பவுலுடைய முதலாவது மறைத் தூதுரைப் பயணத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த பயணத்தில் பவுல் தன்னோடு பர்னபாவையும் இணைத்துக்கொள்கிறார். முதலாவது தூதுரைப் பயணம் மிகவும் முக்கியமானது. இதில்தான் புறவினத்தவர்கள் நேரடியாக அவர்கள் மண்ணில் திருத்தூதர்களை சந்தித்தார்கள். பவுல் என்ற உன்னதமான சீடரை இவர்கள் சந்தித்து அவர் வழியாக இயேசுவை பெற்றுக்கொண்டார்கள். இந்த பயணம் திருச்சபையின் அடையாளத்தையே மாற்றியது. யூத கிறிஸ்தவ திருச்சபை அதிலே புறவினத்தவர்களும் இருந்தார்கள் என்ற அடையாளம் பவுலுடைய முதலாவது திருத்தூது பயணத்தாலே, திருச்சபை பொதுவான திருச்சபை அங்கே யூதர்களும் இருக்கிறார்கள் என்ற அடையாளத்தைக் கொடுத்தது.

செலுக்கியா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பவுல் சைப்பிரஸ் தீவு வழியாக சின்ன ஆசியாவை அடைகிறார். இன்று அது துருக்கி நாடு என அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில்தான் பவுல் தன்னுடைய முதல் ஏழு திருச்சபைகளை நிறுவினார். பல நூற்றாண்டுகளாக இந்த திருச்சபை கிறிஸ்தவத்தின் அத்திவாரமாக இருந்திருக்கிறது. இந்த பயணத்தை பவுல் கி.பி 46-48 செய்திருக்க வேண்டும். யோவான் மாற்குவின் இந்த இருவருடன் சேர்ந்திருக்க வேண்டும். சைபிரசில் இவர்கள் சலாமி நகர் வந்து பின்னர் பபோஸ் நகரை அடைகிறார்கள். சைபிரஸ் தீவில் நற்செய்தியை போதித்துவிட்டு அவர்கள் சின்ன ஆசியாவை நோக்கி பயணிக்கிறார்கள். இது 170 கிமீ தூரத்தை கொண்டது, இதனை இவர்கள் கடல் மார்க்கமாக கடந்திருக்கிறார்கள். சின்ன ஆசியாவில் இவர்கள் பெருகை என்ற அக்கால உரோமைய பிரசித்தி பெற்ற நகரை அடைகிறார்கள். இந்த இடத்தில் யோவான் மாற்கு இந்த இருவரையும் விட்டு எருசலேம் திரும்பிவிட்டார். பெருகையில் இவர்கள் அதிக காலம் செலவழிக்காமல் அங்கிருந்து பிசிதியா வருகிறார்கள். பின்னர் பிசிதிய அந்தியோக்கியாவிற்கு பயணமாகிறார்கள். இந்த அந்தியோக்கியா அக்கால கிரேக்க-உரோமைய உலகில் பிரசித்தி பெற்ற நகராக இருந்தது. இந்த நகரில் அவர்கள் தொழுகைக்கூடங்களுக்கு செல்கிறார்கள், பல யூதர்களையும் சந்திக்கிறார்கள்.

ஒருநாள் இந்த தொழுகைக் கூடத்தில் இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டு திருப்பாடல்கள் பாடப்பட்ட பின்னர், விருந்தினர் நேரத்தில் வழக்கப்படி, செபக்கூட தலைவர், பவுலை பேச அழைக்கிறார். அப்போது பவுல் தன்னுடைய உரைகளில் இன்னொரு முக்கியமான உரையை நிகழ்த்தி மீட்பின் வரலாறு எப்படி இயேசுவில் நிறைவடைகிறது என எண்பிக்கிறார். அந்த உரையில் ஒரு பகுதி இன்றைய வாசகமாக எடுக்கப்பட்டுள்ளது.

வவ.16-20: செபக்கூட தலைவரின் பேச்சை சாதகமாக்கி பவுல் பேசத் தொடங்குகிறார். திருத்தூதர் பணிகள் நூல் ஆசிரியர் லூக்காவின் வரிகளைப் பார்க்கின்றபோது, இது சாதாரண பேச்சு போலத் தெரியவில்லை, மாறாக தெளிவாக ஒழுங்கமைக்கப்பட்ட மறையுரை போலத் தோன்றுகின்றது.

பவுல் இஸ்ராயேல் மக்களை ஒருபோதும் இகழ்ந்ததில்லை, அவர்களை மிகவும் நெருக்கமாக நேசித்தார். இந்த பகுதியில் அவர்களை கடவுளுக்கு அஞ்சுவோர் என மிக மரியாதையாக அழைக்கிறார் (οἱ φοβούμενοι τὸν θεόν ஹொய் பொபூமெனொய் டொன் தியோன்). தன்னையும் அவர்களோடு அடையாளப்படுத்தி, இந்த மக்களின் மூதாதையர்கள் கடவுளால் தேர்வு செய்யப்பட்டவர்கள் எனவும், அவர்கள் ஏன் எகிப்திற்கு சென்றார்கள், பின்னர் எப்படி வெளியே வந்தார்கள் என்பதையும் விவரிக்கின்றார்.

பாலைவனத்தில் அவர்கள் நாற்பது ஆண்டுகள் பயணம் செய்தார்கள் என்பதையும், கானான் நாட்டை உரிமையாக்கியதையும், பின்னர் இறைவாக்கினர்கள் காலம் வரையும் அரசர்கள் காலம் வரையும் அவர்களின் வேண்டுதலுக்கெல்லாம் கடவுள் செவிசாய்த்தார் என்பதையும் காட்டுகிறார். இவர்களுக்கு முதல் அரசராக கீசுவின் மகன் சவுல் கொடுக்கப்பட்டார் என்கிறார்.

வ.22: அரசர்களை உருவகிறவர்கள் இல்லை மாறாக அவர்கள் தெரிவுசெய்யப்படுகிறார்கள். கடவுள் கீசுவின் மகன் சவுலை நீக்கிவிடுகிறார் என்பதையும் அவர் தாவீதை தேர்ந்தெடுத்தார் என்பதையும் பவுல் நினைவூட்டி மறையுரையாற்றுகிறார்.

தாவீதிற்கு கடவுள் மிகவும் நெருக்கமான இடத்தை கொடுத்ததை அரசர்கள் புத்தகத்திலும், குறிப்பேடு புத்தகத்திலும் வாசிக்கின்றோம். இந்த வரலாறு பவுலுக்கு நன்கு தெரிந்திருக்கிறது தெளிவக்கிறது. ஈசாயின் மகன் 'ἄνδρα κατὰ τὴν καρδίαν μουஇ ὃς ποιήσει πάντα τὰ θελήματά μου' (என் இதயத்திற்கு ஏற்ற மனிதன், நான் விரும்புவதெல்லாம் அவன் செய்வான்).

வ.23: பவுல் தாவீதை தன்னுடைய முக்கியமான சிந்தனைப் பொருளாக எடுப்பது அவர் வாரிசைப் பற்றி முடிவரை கொடுக்க என்பது இந்த வரியில் தெளிவாக தெரிகிறது. இந்த உரையில் கிரேக்க புலமைத்துவத்தை அழகாக பயன்படுத்துகிறார். கிரேக்க உரையியலில், பேசுகிறவர் தன்னுடைய சிந்தனையை மையப்படுத்த, கேட்போரின் பில்புலத்தில் இருந்து மெதுவாக தன்னுடைய சிந்தனைக்கு வருவார்.

மீட்பர் வருவார் என்பதும், அவர் தாவீதின் வழிமரபில் வருவார் என்பதும் இஸ்ராயேலருக்கு நன்கு தெரிந்த விடயம். அதனை பவுல் நினைவூட்டுகிறார். இந்த மீட்பர் வந்துவிட்டார் என்வும் அவர் இயேசு எனவும் வாதாடுகிறார் (ἤγαγεν τῷ Ἰσραὴλ ⸄σωτῆρα Ἰησοῦν ஏகாகென் டோ ஈஸ்ராயேல் சோடேரா ஈயேசுன்- இஸ்ராயேலுக்கு மீட்பராகிய இயேசுவை கொணர்ந்தார்).

வ.24: யோவானைப் பற்றிய செய்தியையும் வெளிநாட்டில் வாழ்ந்த யூதர்கள் நன்கு அறிந்திருந்தனர். சில யூதர்கள் யோவானை மெசியாவாகவும் எற்றுக்கொண்டிருந்தனர். இவர்களுக்கு யோவான் யார் என்பதை தெளிவு படுத்துகிறார். யோவான், மெசியா அல்ல அவர் மாறாக மெசியாவிற்காக வழியை ஆயத்தப்படுத்தியவர் என்பதைக் காட்டுகிறார். யோவானின் செய்தி என்ன என்பதை காட்டுகிறார் பவுல்: προκηρύξαντος βάπτισμα μετανοίας παντὶ τῷ λαῷ Ἰσραήλ. புரொகேருட்சான்டொஸ் பப்டிஸ்மா மெடானொய்யாஸ் பான்டி டோ லாவோ ஈஸ்ராயேல்- மனமாற்ற திருமுழுக்கை அவர் இஸ்ராயேல் மக்களுக்கு பறைசாற்றினார்.

வ.25: யோவான் தான் மெசியாவல்ல மாறாக அவருடைய பணியாளர் என்பதையும், அவருடைய மதியடிகளை தான் அவிழ்கவும் தகுதியில்லாதவர் எனவும், உண்மையான மெசியா தனக்கு பின்னர் வருகிறார் என்பதையும் சொல்லிவிட்டார் என பவுல் காட்டுகிறார். பவுல் இங்கு சில முக்கியமான விடயங்களை முன்வைப்பதை அவதானிக்கலாம்:

அ. திருமுழுக்கு யோவான் தான் இறக்கும் தருவாயில்தான் இந்த விடயத்தை சொல்கிறார், ஆக இது உண்மையான சான்று - ὡς δὲ ἐπλήρου Ἰωάννης τὸν δρόμον ἔλεγεν - ஹோஸ் தெ எபெலூரூ ஈயோஅன்னேஸ் டொன் துரொமொன் எலெகென்- தன்னுடைய (வாழ்க்கை) ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் யோவான் சொன்னார்.

ஆ. தான் யாரென மக்கள் நினைப்பவர் தான் அல்ல என்கிறார்- τί ἐμὲ ὑπονοεῖτε εἶναι; οὐκ εἰμὶ ἐγώ· டி எமெ ஹுமெ ஹுபொன்னொஎய்டெ எய்னாய் ஊக் எய்மி எகோ- யார் யாராக இருக்கிறேன் என நீங்கள் நினைக்கிறீர்களோ, அவர் நான் அல்ல.

இ. தனக்கு பின் ஒருவர் உடனடியாக வருகிறார் என்கிறார் - ἀλλ᾿ ἰδοὺ ἔρχεται μετ᾿ ἐμὲ அல்ல் ஈதூ எர்கெடாய் மெட் எமெ- ஆனால் எனக்கு பின் ஒருவர் வருகிறார்.

ஈ. அவருடைய மிதியடிகளை அவிழ்க்க தனக்கு தகுதியில்லை என்கிறார் யோவான்- οὗ οὐκ εἰμὶ ἄξιος τὸ ὑπόδημα τῶν ποδῶν λῦσαι ஹு ஊக் எய்மி எட்சியோஸ் டொ ஹுபொதேமா டோன் பொதோன் லூசாய்- அவருடைய காலின் காலணி வாரை அவிழ்க்க எனக்கு தகுதியில்லை.

காலணிகளை அவிழ்த்தல் என்ற செயலை, விவிலிய ஆய்வாளர்கள் பல விதமாக பார்க்கின்றனர். இஸ்ராயேல் பாரம்பரியத்தில் காலணிகளை அவிழ்த்தல் என்பது ஒருவர் தனக்கு இந்த செயலோடு தொடர்புண்டு என்பதைக் காட்டுகிறது. காலணிகளை அவிழ்த்துத்தான் போவாசு ரூத்தை தன் மனைவியாக்கினார் (காண்க ரூத்து 4,7-9). ஆக யோவானின் இயேசுவின் காலணிகளை வைத்திருக்க விரும்பவில்லை, அந்த பணி அவருடையது அல்ல, என எடுக்கலாம். அதேவேளை உரோமையர் காலத்தில் அடிமைகள்தான் உரிமையாளர்களின் காலணிகளை அவிழ்த்தார்கள். இதனைத்தான் யோவான் உதாரணமாக எடுக்கிறார் என்றால், அவர் தன்னை இயேசுவின் முன்னால் அடிமையின் நிலையையும் விட தாழ்த்துகிறார் என எடுக்கலாம். யோவான் மெசியா அல்ல, மெசியா இயேசுதான் என்பதை பவுல் நிறுவிக்க, யோவானின் சொற்களையே பாவிக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.