இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டின் பொதுக்காலம் பத்தாம் ஞாயிறு (ஆ)

முதல் வாசகம்: தொடக்க நூல் 3,9-15
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 130
இண்டாம் வாசகம்: 2கொரிந்தியர் 4,13-5,1
நற்செய்தி: மாற்கு 3,20-35


முதல் வாசகம்
தொடக்க நூல் 3,9-15

9ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, 'நீ எங்கே இருக்கின்றாய்?' என்று கேட்டார். 10'உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்' என்றான் மனிதன். 11'நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?' என்று கேட்டார். 12அப்பொழுது அவன், 'என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்' என்றான். 13ஆண்டவராகிய கடவுள், 'நீ ஏன் இவ்வாறு செய்தாய்?' என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், 'பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்' என்றாள். கடவுளின் தீர்ப்பும் வாக்குறுதியும் 14ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், 'நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டுவிலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். 15உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்' என்றார்.

ஆண்டவர் நேசித்து உருவாக்கிய மனிதர்கள், தங்களை கடவுளைவிட முதன்மைப் படுத்த முயன்றபோது, பாவம் உள்நுழைகிறது. மனிதரின் கீழ்படியாமைதான் பாவத்திற்கான காரணம், அல்லது அதுதான பாவம் என்பதை இந்த பகுதி காட்டுகிறது எனலாம். தொடக்க நூலின் முதல் பதினொரு அதிகாரங்களை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என அழைக்கின்றோம். அதாவது, இதில் உள்ள நிகழ்வுகளை எங்கே நடந்தன என்பதை நோக்குவதைவிடுத்து, இந்த கதைகள் சொல்கின்ற இறையியல் சிந்தனைகள் மற்றும் விசுவாச உண்மைகளைத்தான் நோக்க வேண்டும்.

வ.9: ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு அவன் எங்கே இருக்கிறான் என்று கேட்கிறார். ஆண்டவருக்கு தெரியாதா? ஏன் கடவுள் இந்த கேள்வியை மனிதரிடம் கேட்கிறார்? இந்த கேள்வி மூலம், கடவுள் மனிதனுக்கு தன்னுடைய உணர்வை வெளிப்படுத்த முயல்கிறார் எனலாம். இதனை ஒரு இலக்கிய வகை கேள்வி என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள், அதாவது சில கேள்விகள் விடையை எதிர்பார்த்து கேட்கப்படுவது இல்லை. கடவுள் மனிதனை அழைப்பதும், அவனிடம் கேள்வி கேட்பதும் ஒத்த கருத்தில் நோக்கப்பட வேண்டும். וַיִּקְרָא יְהוָה אֱלֹהִים אֶל־הָאָדָ֑ם வாய்யிக்ரா' அதோனாய் 'எலோஹிம் 'எல் ஹா'ஆதாம்- கடவுளாகிய ஆண்டவர் மனிதனைக் கூப்பிட்டார். וַיֹּאמֶר לוֹ אַיֶּכָּה׃ வய்யோ'மெர் லோ 'அய்யாகாஹ்- எங்கே என்று அவனைக் கேட்டார்.

வ.10: மனிதன் கடவுளுடைய குரலொளியை பல வேளைகளில் கேட்டிருக்கிறார்கள். இங்கே இந்த குரலொளி அவர்களுக்கு பயத்தை உருவாக்குகின்றது. இந்த பயத்திற்கான காரணத்தை அவன் தான் ஆடையின்றி இருந்ததாகச் சொல்கிறான். இங்கே வார்த்தைகள் அடையாளமாகவே பாவிக்கப்படுகின்றன என்பது தெளிவாகின்றது.

பபிலோனியாவில் ஏற்கனவே பல படைப்புக்கதைகள் மனிதருடைய உருவாக்கம் மற்றும் அவர்களுடைய பாவங்களின் தொடக்கம் பற்றி விவரிக்கின்றன. இந்த இடத்தில் விவிலிய ஆசிரியர் சற்று வித்தியாசம் காட்ட முயல்கிறார். முதலில் இவர்கள் கடவுளின் குரலொளியைக் கேட்கிறார்கள் (אֶת־קֹלְךָ שָׁמַעְתִּי 'எர்-கோல்கா ஷாம'தி- உம்முடைய குரலைக் கேட்டேன்).

அவர்களுக்கு அச்சமாக இருக்கிறது (וָאִירָא வா'யிரா' - நான் பயந்தேன்.). அவர்கள் ஆடையின்றி இருந்ததை உணர்ந்தார்கள் (כִּי־עֵירֹם אָנֹכִי கி-'எரோம் 'அநோகி). ஆகவே ஒளிந்து கொண்டார்கள் (וָאֵחָבֵא׃ வா'எஹாவெ'- ஒளிந்துகொண்டேன்). வ.11: மனிதனின் பிதற்றல் ஆண்டவரை கேள்வி கேட்க வைக்கிறது. ஆடையின்றி தான் இருப்பதாக மனிதன் சொன்னது, கடவுளுக்கு ஆச்சரியமாக இருப்பதாக ஆசிரியர் எழுதுகிறார். இந்த இடத்தில் ஆடை சாதாரண ஆடையைவிட மேலதிகமாக அர்த்தங்களை கொடுக்க வேண்டும் என எடுக்கலாம்.

சாதாரணமாக ஆதிவாசிகள் ஆடையின்றிதான் இருந்திருப்பார்கள். விவிலிய தொடக்க மனிதர்களை ஆதிவாசிகள் என்ற அர்த்தத்தில் தொடக்க நூல் ஆசிரியர் தரவில்லை என்பது தெரிகிறது. இவர்கள் ஆடையின்றி இருத்தல் (עֵירֹם 'எரோம்) என்பது இவர்கள் ஏதோ மிக முக்கியமானதை இழந்துவிட்டார்கள் என்பது போலத் தோன்றுகிறது. புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் முக்கியமான புனித பவுல் இவர்கள் கடவுளின் பிள்ளைகளுக்குரிய தெய்வீகத்தை அல்லது மாட்சியை இழந்துவிட்டார்கள் என்கிறார்கள். ஆடையின்றி இருத்தல் ஒரு தன்னுடைய அடையாளத்தை இழந்துவிடுதலையும் புதிய ஏற்பாட்டில் குறிக்கிறது. விவிலியத்தில் ஆடைய என்பது ஒருவருடைய குடும்பம் மற்றும் இன அடையாளத்தைக் குறிக்கும். இவர்கள் ஆடையை இழந்துவிடுகிறார்கள் என்றால் அனைத்து அடையாளங்களையும் இழந்துவிடுகிறார்கள் எனலாம்.

இவர்கள் தாங்கள் ஆடையின்றி இருந்ததைச் சொல்ல கடவுள் இன்னொரு கேள்வியைக் கேட்கிறார். உண்ணக்கூடாத மரத்தின் கனியை உண்டாயோ என்று கடவுள் இரண்டாவது கேள்வியை கேட்கிறார். הֲמִן־הָעֵ֗ץ אֲשֶׁר צִוִּיתִיךָ לְבִלְתִּ֥י אֲכָל־מִמֶּנּוּ אָכָלְתָּ׃ ஹமின்-'அஷெர் ட்ஸ்சிவிதிகா லெவித்தி 'அகால்-மிமெனூ 'அகால்தா - நான் உண்ணவேண்டாம் என கட்டளையிட்ட மரத்திலிருந்து உண்டாயோ?

மரம் கனி என்பன மேலோட்டமாக கவனிக்கப்படக்கூடாது. உண்மையில் தொடக்க நூலின் இந்த குறிப்பிட்ட மரத்தின் கனியோ அல்லது அதன் கனியோ பெயரால் குறிப்பிடப்படவில்லை. சில விவிலிய ஆய்வாளர்கள் இந்த மரம் மற்றும் கனியை, பபிலோனிய தெய்வங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முயல்கின்றனர். சிலர் இவறை;றை அடையாள வார்த்தைகளாக பார்க்கின்றனர். கத்தோலிக்க பாரம்பரியம் இதனை கீழ்படியாமையை குறிக்கும் உருவகமாக பார்க்கின்றது.

வ.12: இந்த வரி மிகவும் முக்கியமான வரி. ஆதாம் தன்னுடைய பிழையை தன் மனைவி மீது போடுகிறான். இருப்பினும் தன் மனைவி கடவுள் கொடுத்தவர் என்பதில் தெளிவாக இருக்கிறான். தான் கனியை உண்ணவில்லை மாறாக அது தன்னுடைய மனைவியால் கொடுக்கப்பட்டது என்பது அவருடைய குற்றச்சாட்டு

(וַיֹּאמֶר הָֽאָדָ֑ם வாய்'யோமெர் ஹா'ஆதாம் - ஆதாம் சொன்னான்

הָֽאִשָּׁה֙ אֲשֶׁ֣ר נָתַ֣תָּה עִמָּדִ֔י - ஹா'யிஷாஹ் 'அஷெர் நாதாதாஹ் 'இம்மாதி- என்னோடு இருக்க நீர் கொடுத்த பெண்

הִוא נָתְנָה־לִּי מִן־הָעֵץ וָאֹכֵל׃ ஹு' நாத்நாஹ்-லி மின்-ஹா'எட்ஸ் வா'ஓகெல்- மரத்திலிருந்து அவள் எனக்கு கொடுத்தாள், நானும் உண்டேன்).

தான் உண்ணவில்லை என்று சொல்லவில்லை, மாறாக அதனை கொடுத்தது தான் இல்லை என்கிறார்.

13: பெண்ணும் அதோ வழியை பின்பற்றுகிறார். கடவுள் பெண்ணிடம் கேள்வி கேட்ட அவளும், தான் இல்லை மாறாக பாம்புதான் தன்னை ஏமாற்றிற்று என்கிறார். ஆண்டவரின் கேள்வி, பெண்ணின் பொருப்பை சோதிக்கிறது. அதாவது பெண் தன்னுடைய முடிவுகளில் சரியாக இருந்திருக்க வேண்டாமா என்பது போல தெரிகிறது (מַה־זֹּאת עָשִׂ֑ית மாஹ்-ட்சோ'த் 'ஆசித்- என்ன இது நீ செய்தது).

பெண் பாம்பு தன்னை ஏமாற்றியது என்பது பாம்பின் சூழ்ச்சியை வாசகர்களுக்கு நினைவூட்டும் (הַנָּחָשׁ הִשִּׁיאַנִי ஹநாஹாஷ் ஹிஷி'அனி- அந்த பாம்பு எனக்கு சூழ்ச்சி செய்தது). பாம்பு இயற்கையாக பொல்லாத விலங்கு அல்ல. பாம்பும் கடவுளின் படைப்பே. இந்த இடத்தில் ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட பாம்பைத்தான் குறிப்பிடுகிறார். பாம்பு அக்காலதிலேயும், அதனுடைய நழுவிச் செல்லும் பண்பாலும், உருவ அமைப்பாலும், அது கொண்டிருந்த நஞ்சாலும், மிகவும் ஆபத்தான விலங்காக கருதப்பட்டிருக்க வேண்டும். கானானியர் மத்தியில் இருந்த பாம்பு வழிபாட்டை இஸ்ராயேலர்களின் பெரியவர்கள் வெறுத்ததும், இதற்கான காரணமாக இருந்திருக்கலாம். பெண் தான் உண்ணவில்லை என்று சொல்லவில்லை. தானும் உண்டதாகச் சொல்கிறார்.

ஆணும் பெண்ணும் தாங்கள் உண்டதை ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால் அதற்கு தாங்கள் காரணம் இல்லை என்பதுதான் அவர்களின் குற்றச்சாட்டு.

வ.14: பாம்புகளுக்கு கால்கள் இல்லை. அவை தம்முடைய தோலால் அசைவு உண்டாக்கி நகர்ந்து செல்கின்றன. பாம்புகள் ஏறக்குறைய 167 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானத்தால் கருதப்படுகிறது. பாம்புகள் முதலில் கடல் வாழ் உயிரினங்களாக இருந்திருக்க வேண்டும். பாம்புகள் ஒருவகை கடல் பல்லிகளில் இருந்து கூர்ப்படைந்து உருவாகியிருக்க வேண்டும் என அறிவியல் நம்புகின்றது. பாம்புகளுக்கு இருபதுக்கும் மேலான குடும்பங்களும், 520 மேலான வகைகளும், 3600 இனங்களும் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. நான்கு கண்டங்களில் வாழ்கின்ற இந்த பாம்பு இனங்களில் அனைத்து பாம்புகளும் நஞ்சுடையவை அல்ல. நஞ்சுள்ள பாம்புகளும், இரைக்காகவே தமது நஞ்சுகளை பாவிக்கின்றன.

பாம்புகளைப் பற்றி அச்சங்களும், கதைகளும், புராணங்களும் அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன. பல மதங்களில் பாம்புகளின் தீமையின் அடையாளங்களாகவே காட்டப்படுகின்றன. சில மதங்களில் பாம்புகள் நல்ல விலங்குகளாகவும் காட்டப்படுகின்றன. பபிலோனிய நம்பிக்கைகளும், கானானிய கதைகளும் விவிலிய ஆசிரியரின் பாம்பைப் பற்றிய சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

ஆண்டவர் பாம்பை சபிப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. மனிதரை ஏமாற்றியதால், கால்நடைகள் மற்றும் விலங்குகளில் பாம்பு சபிக்கப்படுகிறது. பாம்பு ஊர்ந்து பயணம் செய்வதற்கான காரணம் கடவுளின் சாபம் எனவும் இந்த வரி காட்டுகிறது. பாம்பு புழுதியை தின்னும் என்பது புரியவில்லை. சாதாரணமாக பாம்புகள் மாமிச உண்ணிகள். இங்கே இவை புழுதியை தின்னும் என்பது, அவை உணவிற்காக மிகவும் துன்பப்படும் எனப்தைக் குறிக்கலாம். (עָפָר תֹּאכַל 'ஆபார் தோ'கால்-புழுதியை தின்பாய்).

வ.15: விவிலியத்தில் இந்த வரி பலவிதமான வாத பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பாரம்பரிய கத்தோலிக்கர் இந்த வரியை அன்னை மரியா மற்றும் இயேசுவோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றனர்.

இந்த இடத்தில் கடவுள் பாம்பின் வித்திற்கும் பெண்ணின் வித்திற்கும் இடையில் பகைமை வளரும் என்பதைக் காட்டுகிறார் וְאֵיבָ֣ה ׀ אָשִׁ֗ית בֵּֽינְךָ֙ וּבֵ֣ין הָֽאִשָּׁ֔ה וּבֵין זַרְעֲךָ வெ'எவாஹ், 'ஆஷித் பென்கா வுபென் ஹா'இஷ்ஷாஹ் வுபென் ட்சர்'அகா- உன் பிள்ளைக்கும் அவள் பிள்ளைக்கும் இடையில் பகைமையை வைப்பேன்.

பாம்பை காண்கின்ற மனிதர்கள் அதனை கொலை செய்ய முயல்வார்கள், அதுவும் அதன் தலையை துண்டிக்க முயல்வார்கள். பாம்பு ஊர்ந்து செல்வதனால் மனிதர்களின் காலைத்தான் அது தீண்ட முயற்சிக்கும். தற்காலத்தில் பாம்புகள் நேரடியாக மனிதர்களுடன் மோதாவிட்டாலும், விவிலிய காலத்தில் பாம்புகளுக்கும் மனிதர்களும் இடையில் பல மோதல்கள் நடந்திருக்கலாம்.



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 130

1ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்;

2ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பக் குரலை உம்முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும்.

3ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்?

4நீரோ மன்னிப்பு அளிப்பவர்; மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.

5ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்; என் நெஞ்சம் காத்திருக்கின்றது அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

6விடியலுக்காய்; காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது.

7இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு.

8எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!



திருப்பாடல்கள் 129-131 நான்காவது முக்குழு பாடல்கள் என அறியப்படுகிறன. பாவங்கள் சுமையாகி மனிதரை வாட்டும்போது, கடவுள் என்ன செய்வார், என்பதைப் பற்றி இந்த பாடல்கள் பாடுகின்றன. இந்த 130வது திருப்பாடலை தனிமனித புலம்பல் பாடல் என்றும் வகைப்படுத்தலாம். இந்த பாடலின் முன்னுரை, மலையேறும் போது பாடப்படும் பாடல் என அறிமுகம் செய்கிறது (שִׁיר הַֽמַּעֲלוֹת ஷிர் ஹம்மா'லோத்). இந்த மலையை சீயோன் மலை என்று எடுக்கலாம், ஏனெனில் சீயோன் மலையிலேதான் எருசலேம் தேவாலயம் இருந்தது, அந்த மலையை நோக்கி ஆண்டுதோறும் பல வெளிநாடுகளில் வாழ்ந்த யூதர்கள் திருப்பயணம் மேற்கொண்டார்கள், அப்படி அவர்கள் பயணம் மேற்கொண்ட போது பாடப்பட்ட பாடல்களில் ஒன்றாக இது இருக்கலாம். இந்த பாடல் ஒரு புலம்பலுடன் ஆரம்பிக்கின்றது, பின்னர் அது இரக்கத்தை கேட்கிறது, இறுதியாக கடவுளோடுதான் உண்மையான மன்னிப்பு உள்ளது என்பதைக் காட்டுகிறது.

வ.1: ஆழ்ந்த துயரம் என்று தமிழில் அழகாக மொழிபெயர்கப்பட்டுள்ளது, 'ஆழத்திலிருந்து' என்று எபிரேய மொழியில் உள்ளது (מִמַּעֲמַקִּים மிம்மா'மாகிம்). ஆழத்திலிருந்த ஆசிரியர், தான் கடவுளை கூச்சலிட்டு அழைத்ததாக இந்த புல்பல் பாடல் தொடங்குகின்றது. ஆழ் துயரம் என்று ஆசிரியர் குறிப்பிடுவது புலப்டவில்லை. இதன் ஆசிரியர் யார் என்று தெரிந்திருந்தால் ஒருவேளை அதனை கண்டுபிடித்திருக்கலாம். இதனை அழமான நீர் நிலைகள் என்றும் சில விவிலியங்கள் மொழி பெயர்க்கின்றன.

வ.2: திருப்பிக்கூறல் என்ற எபிரேய கவி நடையில் இந்த வரி அமைக்கப்பட்டுள்ளது. மன்றாட்டு மற்றும் விண்ணப்பக் குரல் என்பன ஒத்த கருத்துச்சொற்கள். இதற்கு எபிரேய விவிலியம் 'குரல்' என்ற வார்த்தையையே பாவித்திருக்கின்றது (קוֹלִ֥ கோல்- குரல், சத்தம்). இதனை ஆசிரியர் ஒரு கட்டளையாக கடவுளுக்கு வைக்கவில்லை மாறாக ஒரு வேண்டுதலாக கடவுளை இரஞ்சுகிறார். இதனை தமிழில் விருப்பு அல்லது வேண்டுதல் வாக்கியங்கள் என எடுக்கலாம். மண்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும், மற்றும் விண்ணப்பக் குரலை கவனத்துடன் கேட்டருளும் என்பவை ஒத்த கருத்துச் சொற்களாக பாவிக்கப்படுகின்றன,

வ.3: இந்த வரி எபிரேய மெய்யறிவு வாதத்தை முன்வைக்கிறது. இது 'ஆல்' வகை வாக்கியத்தை சார்ந்தது. கடவுள் நம்முடைய குற்றங்களை நினைவில் வைத்தால், யார்தான் நிலைநிற்க முடியும், அதாவது யாரும் புனிதர்கள் இல்லை, அத்தோடு கடவுள் மனிதரின் குற்றங்களை மறந்து அவர்களை மன்னிக்க எப்போதுமே பின் நிற்பதில்லை என்ற வாதம் இதன் மூலம் முன்வைக்கப்படுகிறது.

வ.4: இந்த வசனம் செயற்பாட்டு வினையில், எபிரேய விவிலியத்தில் அமைந்துள்ளது. இதன் நேரடி மொழி பெயர்ப்பாக இதனைக் இப்படிக் கொள்ளலாம். כִּי־עִמְּךָ הַסְּלִיחָה ஏனெனில் உம்மோடு மன்னிப்பு- கி-'இம்மெகா ஹஸ்லிஹாஹ். לְמַ֗עַן תִּוָּרֵא லெம'அன் திவ்வாரெ'- இதனால் நீர் வணங்கப்படுகிறீர். கடவுளுக்கு அச்சம் கொள்ளுதல் அதாவது தெய்வ பயம் என்பது, வழிபாடு மற்றும் வணக்கம் போன்றவற்றின் மிக முக்கியமான படிப்பினை. இதனைத்தான் இந்த அசிரியர் அழகாகக் காட்டுகிறார்.

வ.5: ஆண்டவருக்காக ஆவலுடன் காத்திருத்தல் என்பதை ஆண்டவரில் நம்பிக்கை வைத்தல் என்றும் மொழிபெயர்க்கலாம். இதனை ஆசிரியர் தன்னுடைய முழு ஆள் தன்மையே செய்கிறது என்கிறார்.

ஆண்டவருக்காக நான் காத்திருக்கிறேன், என் ஆன்மா காத்திருக்கிறது என்று ஒத்த கருத்துச் சொற்களில் வினைச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வ.6: காவலர்கள் விடியலுக்காக காத்திருத்தல் என்பது ஒரு அழகான உருவகம். போர், தாக்குதல்கள், நோய்கள், இரவு ஆபத்துக்கள் என்பன நிறைந்திருந்த அந்த காலத்தில், பல ஆபத்துக்கள் இரவிலேயே நடந்தன. இதனால்தான் இரவை தீயவனின் நேரம் என சில விவிலிய ஆசிரியர்கள் காட்டுகின்றனர். இந்த இரவிலே காவலர்கள் முழித்திருந்து காவல் செய்தனர். அவர்களுடைய முகத்திலே விடியல் ஒன்றுதான் புன்முறுவலைக் கொண்டுவர முடிந்தது. விடியல் בֹּ֗קֶר பொகெர் என்பது வெளிச்த்தையும், குறைவான ஆபத்தையும் குறிக்கிறது. இந்த விடியலுக்கான காத்திருத்லை விட, ஆண்டவருக்காக காத்திருத்தல் என்பது மேன்மையானது என்கிறார் ஆசிரியர். விடியல் போகும், மீண்டும் இரவு வரும் என நினைக்கிறார் போல.

வ.7: இந்த வரியில் ஆசிரியர் வித்தியாசம் காட்டுகிறார். இவ்வளவு நேரமும் தனக்கு தானே வியாகுலம் செய்த இவர், இந்த வரியில் முழு இஸ்ராயேலுக்கும் கட்டளை கொடுக்கிறார். இஸ்ராயேலை காத்திருக்கச் சொல்கிறார், יַחֵל יִשְׂרָאֵ֗ל אֶל־יְהוָה யாஹெல் யிஸ்ரா'எல் 'எல்-அதோனாய்- இஸ்ராயேலே கடவுளில் காத்திரு. எனெனில் கடவுளிடம்தான் அன்பிரக்கமும் (חֶסֶד ஹெசெத்), மீட்பும் உள்ளது (פְדֽוּת பெதூத்), என்பது இவர் நம்பிக்கை.

வ.8: எல்லா தீவினையினின்றும் இஸ்ராயேலைக் காக்கிறவர் யார், அவர் கடவுள். இதனால்தான் அவரிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பது ஆசிரியரின் படிப்பினை. செல்வம், அரசர்கள், போர்த் தளபாடங்கள் போன்றவை எல்லா தீவினையினின்றும் இஸ்ராயேலைக் காக்காது, இதனால் இவற்றை நம்பியிருப்பது வீணானது என்பதும் இங்கே புலப்படுகிறது.



இரண்டாம் வாசகம்
2கொரிந்தியர் 4,13-5,1

13'நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்; ஆகவே பேசினேன்' என்று மறைநூலில் எழுதியுள்ளது. அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்; ஆகவே பேசுகிறோம். 14ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்; உங்களையும் அவ்வாறே நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும். 15இவையனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன. இறையருள் பெறுவோரின் தொகை பெருகப்பெருக அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும். இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார்.

நம்பிக்கையோடு வாழ்தல்

16எங்கள் உடல் அழிந்து கொண்டிருந்தாலும் எங்கள் உள்ளார்ந்த இயல்பு நாளுக்கு நாள் புதுப்பிக்கப் பெற்று வருகிறது. எனவே நாங்கள் மனந்தளருவதில்லை. 17நாம் அடையும் இன்னல்கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை. அவை சிறிது காலம்தான் நீடிக்கும். ஆனால் அவை ஈடு இணையற்ற மாட்சியை விளைவிக்கின்றன. அம்மாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும். 18நாங்கள் காண்பவற்றையல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை; காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை. 1நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனிதக் கையால் கட்டப்படாதது, நிலையானது என்பது நமக்குத் தெரியும் அல்லவா!



கொரிந்தியருக்கு எழுதப்பட்ட இரண்டாவது திருமுகத்தில் நான்காவது அதிகாரம் மிக அழகான உருவகங்களைக் கொண்டுள்ளது. 'மட்பாண்டத்தில் செல்வம்' என்ற இந்த பகுதி மிக ஆழமான இறையியலைக் கொண்டுள்ளது. நற்செய்தி சொல்பவர்களின் பணிவாழ்வும் அவர்களின் செய்தியும் இங்கே விவரிக்கப்படுகிறது. ஆண்டவர் இயேசுதான் ஒப்பற்ற செல்வம், அதனை தாங்கியிருப்பவர்கள் மட்பாண்டங்கள் போன்ற உடையக்கூடிய மனிதர்கள் என்பதைக் காட்டுகிறார். பவுலுடைய இதமான வரிகளில் இந்த வரியும் மிக முக்கியமானது. இந்த உலகின் துன்பங்கள் எவ்வளவு கொடுமையாக இருந்தாலும் நற்செய்திப் பணிக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்கிறார்.

வ.13: தங்களுடைய நம்பிக்கையின் பலத்திற்கு மறைநூல் வரியொன்றை உதாரணமாகக் காட்டுகிறார். இந்த வரியை பவுல் திருப்பாடல் 116,10 வசனத்திலிருந்து எடுத்திருக்க வேண்டும். 'கடவுளோடு நம்பிக்கை கொண்டிருந்ததால் பேசினேன்' என்ற அந்த வரி நினைவுகூரப்படுகிறது. ஆக நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் பேசுவார்கள் அல்லது பேசவேண்டும் என்ற தன்னுடைய இறையியல் வாதத்தை அவர் முன்வைக்கிறார். பவுல் இந்த இடத்தில் பன்மையில் பேசுகிறார். ἡμεῖς πιστεύομεν, διὸ καὶ λαλοῦμεν, ஹெமெய்ஸ் பிஸ்டெயுயொமென், தியொ காய் லாலூமென்- நம்புகின்றோம் அதனால் பேசுகின்றோம்.

வ.14: எதிர்கால நம்பிக்கை ஒன்றை முன்னிறுத்துகிறார். ஆண்டவர் இயேசுவை கடவுள் உயிர்த்தெழச்செய்தவர், இந்த கடவுள் அவரைப் பறைசாற்றுகின்ற தங்களையும் இயேசுவோடு உயிர்த்தெழச்செய்வார் என்றும், அதனைப்போலவே தங்களுடைய விசுவாசிகளையும் உயிர்த்தெழச்செய்வார் என்றும் நம்பிக்கை வெளியிடுகிறார்.

இயேசுவை கடவுள்தான் உயிர்தெழச்செய்தார் என்ற சிந்தனையை வார்த்தைக்கு வார்த்தை அவதானித்தால், அது இயேசு கடவுளைவிட குறைந்தவரோ என்ற எண்ணத்தை தரலாம். ஆனால் பவுல் இந்த இடத்தில், இந்த சிந்தனையை எழுவாய்ப் பொருளாக எடுக்கவில்லை மாறாக அனைவருக்கும் உயிர்ப்பு உண்டு என்பதையே அவர் எழுவாய்ப் பொருளாக கொள்கிறார். ὁ ἐγείρας τὸν κύριον Ἰησοῦν ஹொ எகெய்ராஸ் டொன் கூரியோன் ஈயேசூன் - அவர் இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்தவர்.

வ.15: கடவுளின் இந்த உயிர்ப்புக் கொடை, மக்களின் நன்மைக்காக நடைபெறுகின்றன. இறையருள் பெருக பெருக அதனைப் பெருகின்ற மக்களின் நன்றியும் பெருகுகின்றது, இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார்கள் என்கிறார்.

நன்றி செலுத்துதல் கடவுளின் புகழ்ச்சிக்கு வாய்ப்பளிக்கிறது என்ற இறையியல் சிந்தனை இந்த வரியில் காட்டப்படுகிறது.

வவ.16-18: இந்த மூன்று வரிகளும் 'நம்பிக்கையோடு வாழ்தல்' என்ற சிந்தனையில் அமைந்துள்ளது. கொரிந்தியர் சமூகத்தில் நிலவிய அல்லது அவர்களுக்கு பல சந்தேகங்களைக் கொடுத்த, சில கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்க பவுல் முயல்கிறார் எனலாம்.

வ.16: உடல் அழிந்துகொண்டிருக்கிறது என்ற ஒரு சிந்தனையை பவுல் முன்வைக்கிறார் (ὁ ἔξω ἡμῶν ἄνθρωπος διαφθείρεται, ஹொ எக்ட்ஸோ ஹேமோன் அந்த்ரோபொஸ் தியாப்பெய்ரெடாய் - வெளிமனித சாயல் அழிந்தாலும்). ஒவ்வொரு நாளும் மனித உடல் (கலங்கள்) அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை தற்போதைய அறிவியல் ஆய்வுகள் காட்டுகின்றன. பவுல் இந்த இடத்தில் கலங்களைப் பற்றி பேசுவது போல தெரியவில்லை மாறாக அவர், மரணத்தைப் பற்றியே பேசுகிறார் என எடுக்கலாம்.

உள்ளார்ந்த இயல்பு, நாளுக்கு நாள் புதுப்பிக்கப்படுகிறது என்கிறார். ἔσω ἡμῶν ἀνακαινοῦται ἡμέρᾳ καὶ ἡμέρᾳ. எசோ ஹேமோன் அனாகாய்நூடாய் ஹெமெரா காய் ஹெமெரா- எங்களுடைய உள்ளார்ந்த இயல்பு நாளுக்கு நாள் புதுப்பிக்கப்படுகிறது. இந்த இடத்தில் பவுல் நம்பிக்கை மற்றும் ஆனம்hவை பற்றி பேசுகிறார் என தோன்றுகிறது.

வ.17: இன்னல்களை விவரிக்கின்றார். கிறிஸ்தவர்களுக்கு ஆரம்ப கால திருச்சபையில் பல விதமான இன்னல்கள் இருந்திருக்கின்றன. இவை எளிதில் தாங்கக்கூடியவை என்கிறார். பவுலுடைய மற்றும் ஆரம் காலதிருச்சபையின் பார்வையில் இவை எளிதானவையாக தோன்றுகிறது. துன்புறுத்தப்படுதல், அவமானப் படுத்தப்படுதல், நாடுகடத்தப்படுதல், மற்றும் கொலை செய்யப்படுதல் போன்றவை இவற்றுள் அடங்கும்.

παραυτίκα ἐλαφρὸν τῆς θλίψεως பாராவுடிகா எலாப்ரொன் டேஸ் திலிப்செயோஸ் - சிறதுகாலமே நிலைக்கக்கூடிய துன்பம். இந்த துன்பம் ஈடு இனையற்ற மாட்சியைக் கொடுக்கிறது என்கிறார். கிறிஸ்தவம் நம்புகின்ற விசுவாசம், ஈடு இணையற்றது என்பதை பவுல் நன்கு அறிந்திருக்கிறார். அத்தோடு அவை என்றென்றைக்கும் நிலைக்கும் என்றும் சொல்கிறார்.

வ.18: காண்பவை மற்றும் காணாதவை பற்றி கருத்துச் சொல்;கிறார். βλεπόμενα பிலெபொமெனா, காண்பவை: μὴ βλεπόμενα· மே பிலெபொமெனா- காணாதவை. காணாதவை என்பவை நம்பிக்கையோடு சம்மந்தப்பட்டதாக இருக்கலாம். காண்பவை இக்கால நிகழ்வுகளாக இருக்கலாம். காணாதவை நிலையற்றவை என்கிறார் (αἰώνια அய்யோனியா- எக்காலத்திற்குமுரியவை).


நற்செய்தி வாசகம்
மாற்கு 3,20-35

இயேசுவும் பெயல்செபூலும்

(மத் 12:22-32; லூக் 11:14-23; 12:10)

20அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை. 21அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர். 22மேலும், எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர், 'இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது' என்றும் 'பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்' என்றும் சொல்லிக் கொண்டிருந்தனர். 23ஆகவே அவர் அவர்களைத் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு உவமைகள் வாயிலாகக் கூறியது: 'சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்? 24தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. 25தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது. 26சாத்தான் தன்னையே எதிர்த்து நின்று பிளவுபட்டுப் போனால் அவன் நிலைத்து நிற்க முடியாது. அதுவே அவனது அழிவு. 27முதலில் வலியவரைக் கட்டினாலன்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது; அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும். 28-29உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார். ஆனால் மக்களுடைய மற்றப் பாவங்கள், அவர்கள் கூறும் பழிப்புரைகள் அனைத்தும் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.' 30'இவனைத் தீய ஆவி பிடித்திருக்கிறது' என்று தம்மைப் பற்றி அவர்கள் சொல்லி வந்ததால் இயேசு இவ்வாறு கூறினார்.

இயேசுவின் உண்மையான உறவினர்

(மத் 12:45-50; லூக் 8:19-21) 31அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். 32அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. 'அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்' என்று அவரிடம் சொன்னார்கள். 33அவர் அவர்களைப் பார்த்து, 'என்தாயும் என் சகோதரர்களும் யார்?' என்று கேட்டு, 34தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, 'இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. 35கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்' என்றார்.



இயேசுவும் பெயல்செபூலும்

வ.20: இந்த பகுதிக்கு முன்னர்தான் இயேசு தன்னுடைய சீடர்களை அழைத்திருந்தார். சீடர்களை அழைத்தவரை மக்கள் உற்று நோக்கினர்.

இயேசு ஒரு வீட்டிற்குள் செல்கிறார். இது யாருடைய வீடு என்று தெளிவாக இந்த வரியில் சொல்லப்படவில்லை. சீடர்கள் அல்லது அவருடைய திருத்தூதர்கள் ஒருவருடைய வீடாக இருந்திருக்கலாம். இயேசு இருந்த வீடு, மக்கட் கூட்டத்திற்கு தெரிந்திருக்கிறது, இதனால் அவர்கள் இயேசுவை நெருக்குகிறார்கள். சீடர்களுக்கு உணவருந்;தவே நேரம் கிடைக்கவில்லை. இயேசு மிகவும் பிரசித்தி பெற்றவராக இருந்திருக்கிறார் என்பது மிக தெளிவாக தெரிகிறது.

வ.21: மாற்கு நற்செய்தியில் இந்த வரி மிக முக்கியமான பிரதிவாதங்களை ஏற்படுத்துகிறது. இயேசுவின் உறவினர்கள் யாவர்? அவர்கள் இயேசுவிற்கு உதவியாக இருந்தார்களா? அல்லது இயேசுவை அவர்கள் சந்தேகித்தார்களா? இவற்றைப் பற்றி பலவிதமான ஆய்வுகள் முன்னெடுக்கப் படுகின்றன. மாற்கு இவர்களை உறவினர்கள் என்று சொல்கிறார், அத்தோடு இவர்கள் இயேசுவை புரிந்துகொள்ளவில்லை என்கிறார். இவர்கள் இயேசு மதிமயங்கி இருக்கிறார் என்று நினைத்ததாக பதிவிடுகிறார். καὶ ⸂ἀκούσαντες οἱ παρ᾿ αὐτοῦ⸃ ἐξῆλθον κρατῆσαι αὐτόν· ἔλεγον γὰρ ὅτι ἐξέστη. - காய் அகூசான்டெஸ் ஹொய் பார் அவுடூ எக்ஸ்ஸேல்தொன் கிராடேசாய் அவுடொன். எலெகொன் கார் ஹொடி எக்சேஸ்டே- அவருக்குரிய அனைவரும் இதனைக் கேள்விப்பட்டு அவரை பிடிக்கச் சென்றார்கள், அவர் மதியற்றவரானார் என்று சொல்லிக்கொண்டார்கள்.

மாற்கு இவர்களை இயேசுவின் தாய் என்றோ அல்லது சகோதரர்கள் என்றோ சொல்லவில்லை என்பதை அவதானமாக நோக்க வேண்டும். இவர்கள் நசரேத்தூர் யோசேப்பு மற்றும் மரியாவின் உறவினர்களாக இருந்திருக்கலாம். ஆரம்ப கால திருச்சபை முதலில் வீட்டிலே துன்புறுத்தப்பட்டதை வரலாறு சொல்கிறது. பல வேளைகளில் கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த உறவினர்களால் வதைக்கப்பட்டார்கள் அல்லது காட்டிக்கொடுக்கப்பட்டார்கள். இந்த வரி இப்படியாக துன்பத்தை தங்கள் சொந்த உறவுகளால் சந்தித்தவர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.

வ.22: மறைநூல் அறிஞர்களின் குற்றச்சாட்டை மாற்கு பதிகிறார். மறைநூல் அறிஞர்கள் நற்செய்தியாளர்களால் மிகவும் நோக்கப்பட்டார்கள். இந்த மறைநூல் அறிஞர்கள்தான் இயேசுவுடைய மரணத்திற்கு மிக முக்கியமானவர்களாக இருந்தவர்கள். இவர்கள் எருசலேமில் இருந்து வந்திருந்தார்கள், ஆக இந்த நிகழ்வு எருசலேமிற்கு வெளியே நடைபெறுகிறது எனலாம்.

இவர்கள் இயேசுவிற்கு தீய ஆவிகள் மேல் இருந்த அதிகாரத்தை பெயல்செபூலுடன் ஒப்பிடுகிறார்கள். Βεελζεβοὺλ பீல்ட்செபூல்: இது பால் செபூப் என்ற கானானிய தெய்வத்தின் பிழையான உச்சரிப்பு, பிற்காலத்தில் பீல்செபூலாக மாறியது என்கிறன்றனர் ஆய்வாளர்கள். இந்த தெய்வம் பேய்களின் தலைவராக நம்பப்பட்டிருக்க வேண்டும். யூதர்களுக்கு இந்த தெய்வத்தைப் பற்றிய நல்ல அறிவு இருந்திருக்கிறது. யூதர்களும் பேய்யோட்டும் வேலைகளையும் செய்திருந்திருக்கிறார்கள்.

இயேசுவை பெயல்செபூலுடன் ஒப்பிடுவதன் மூலம், அவரை அவமானப்படுத்த முயல்கின்றனர் என்றும் எடுக்கலாம்.

வ.23: இயேசு யாரை அழைக்கிறார் என்பது தெளிவாக இல்லை. நிச்சயமாக மறைநூல் அறிஞர்களை அழைத்திருக்க வாய்பில்லை என்பது தெரிகிறது. பின்னர் இயேசு அவர்களுக்கு உவமைகள் வாயிலாக போதிக்கிறார். இயேசு உவமைகள் வாயிலாக போதிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இயேசு கேள்வியொன்றை முன்வைக்கிறார். சாத்தான் எப்படி சாத்தானை ஓட்ட முடியும் என்பது அந்தக் கேள்வி πῶς δύναται σατανᾶς σατανᾶν ἐκβάλλειν; போஸ் துனாடாய் சாடானாஸ் சாடானான் எக்பல்லெய்ன்- சாத்தான் என்படி சாத்தனை விரட்ட முடியும்? இந்த கேள்வி மூலம் மறைநூல் அறிஞர்கள் உண்மையில் அறிஞர்களே கிடையாது என்பதை இயேசு காட்டுகிறார்.

வவ.24-25: உள்நாட்டு கலவரங்கள் நாட்டுக்கு உகந்தல்ல என்ற சித்தாந்தம் ஆண்டவரின் வாயிலிருந்தும் வருகிறது. எந்த அரசும் தனக்கெதிராக தானே கிளர்ச்சி செய்வதில்லை, அப்படிச் செய்தால் அது அழிந்துபோகும் என்பது காட்டப்படுகிறது.

பெயல்சபூலைக் கொண்டு சாத்தானை ஓட்டுவது, சாத்தானின் அரசை சாத்தானைக் கொண்டே விரட்டுவதற்கு சமன். இந்த வேலையை சாத்தான் செய்ய முன்வரமாட்டான். (மனிதர்கள் பல வேளையில் இப்படியான வேலைக்கு முன்வரலாம்).

வ.27: கொள்ளையடித்தல் இயேசுவின் காலத்தில் இடத்திற்கு இடம் வேறுபட்டிருக்கிறது. போரில் கொள்ளையடித்தல் சாதாரண மனித வழக்கில் இருந்திருக்கிறது. சில இடங்களில் வீடுகளில் கொள்ளையடிப்பதும், ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

கொள்ளையர்கள் முதலில் வீட்டில் தங்களுக்கு சவாலாக இருப்பவர்களை கைது செய்வார்கள். பின்னர்தான் பொருட்களை கொள்ளையிடுவதில் கவனம் செலுத்துவார்கள். அதனை இயேசு ஆதரிக்கிறார் என்று பொருள் அல்ல, மாறாக அவர் அதனை உவமைக்காக பயன்படுத்துகிறார்.

மற்றவர்களுடைய உடமைகளை கவருவது இஸ்ராயேல் மரபுப்படி ஒரு குற்றம், பத்துக் கட்டளைக்கும் எதிரான பாவம். இயேசு நல்ல யூதனா இதனை அனுமதித்திருக்க மாட்டார். இருப்பினும் அவருடைய படிப்பினைக்கு இது உதாரணமாகிறது.

வவ.28-29: தூய ஆவியாரைப் பற்றிய மாற்குவின் நம்பிக்கை (πνεῦμα ἅγιον புனுமா ஹகியோன்) இங்கே காட்டப்படுகிறது. மாற்கு நற்செய்தி காலத்தால் மிகவும் முந்தியது, ஆக மிக முற்பட்ட காலத்திலேயே தூய ஆவியார் பற்றிய படிப்பினைகள் நன்கு வளர்ந்திருந்தது என்பதை இது காட்டுகிறது.

மக்களுடைய பாவத்திற்கு மன்னிப்புண்டு என்பது இங்கே சொல்லப்படுகிறது. ஆனால் தூய ஆவிக்கெதிரான பாவங்கள் உண்மையில் ஒருவர் தனக்கு எதிராக செய்யும் பாவங்களாகும். இதனால் இந்த பாவங்கள் அவருக்கு மிக ஆபத்தானவைகயாக மாறும். இதனால்தான் இதனை செய்ய வேண்டாம் என்கிறார் இயேசு.

ஆரம்ப காலத்தில் பலவேளைகளில் பலர் இயேசுவை மறுதலித்தார்கள். அவர்களில் பலரை திருச்சபையும் ஏற்றுக்கொண்டது. ஆனால் தூய ஆவிக்கெதிரான பாவம் என்பது வேறு அர்த்தத்தில் பார்க்கப்படுகிறது. மறைநூல் அறிஞர்கள் தூய ஆவியாரைப் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டியவர்கள். அவர்களே தூய ஆவியாரை புரியாமல் இருப்பது, அது அவர்களுடைய அறிவிற்கு ஒவ்வாதது என்பதை இயேசு காட்டுகிறார்.

வ.30: இயேசுவின் ஆதங்கத்தை இந்த வரி காட்டுகிறது. இயேசுவை பார்த்து 'தீய ஆவி பிடித்தவர்' என்பது உண்மையில் தூய ஆவிக்கு எதிரான பாவமாக கருதப்படுகிறது.

இயேசுவின் உண்மையான உறவினர்

வ.31: இந்த வரியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இயேசுவை பிடிக்க வந்தவர்கள் இவர்கள் தான் என்பது போல தெரிகிறது. இருப்பினும் மற்றைய நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, மரியா இயேசுவிற்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடைஞ்சலாக இருந்ததில்லை, மாறாக உதவியாகத்தான் இருந்திருக்கிறார். மாற்கு இந்த வரியை ஏன் பதிகிறார் என்பதில் பல கேள்விகள் எழுவததை தவிர்க்க முடியாது.

ஆரம்ப கால திருச்சபை சந்தித்த சவால்கள்தான் இந்த வரிக்கு காரணம் என்பது ஒரு ஏற்றகு;கொள்ளப்படக்கூடிய வாதம். இயேசுவின் உறவினர்கள் அவரை பிடிக்க தேடினார்கள், இங்கே அவரின் தாயும் சாகோதரர்களும் அவருக்கு ஆழ் அனுப்புகிறார்கள், இவர்கள் அந்த உறவினர்களாக இருந்திருக்க வேண்டிய தேவையில்லை (ἡ μήτηρ αὐτοῦ καὶ οἱ ἀδελφοὶ αὐτοῦ ஹே மேடேர் அவுடூ காய் ஹொய் அதெல்பொய் அவுடூ- அவருடைய தாயும் அவர் சகோதரர்களும்). இயேசுவுடைய சகோதரர்கள் என்பவர்கள் உடன் பிறந்தவர்களாக இருக்க வேண்டிய தேவையும் இல்லை.

வ.32: மக்களுக்கு இயேசுவின் தாயையும் சகோதரர்களையும் நன்கு தெரிந்திருந்தது. இதனால்தான் அவர்களை இயேசுவிற்கு நினைவூட்டுகிறார்கள்.

வ.33: இயேசு தன் வாழ்வில் மிக முக்கியமான கேள்வியைக் கேட்கிறார். யார் தன்னுடைய தாயும் சகோதரர்களும் என்ற புதிய உறவை உருவாக்குகிறார் (τίς ἐστιν ἡ μήτηρ μου ⸀καὶ οἱ ἀδελφοί °μου டிஸ் எஸ்டின் ஹே மேடேர் மூ காய் ஹொய் அதெல்பொய், மூ- யார் என்னுடைய தாயும் சகோதரர்களும் தாயயும்). இயேசு இந்த கேள்விக்கு விடையை எதிர்பார்க்க வில்லை.

வவ.34-35: மக்களுக்கு தன் கேள்வியின் விடையை தானே சொல்கிறார். தன் வார்த்தையே கேட்கிறவர்களே தாயும் சகோதரர்களும் ஆகின்றனர். இவர்கள் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுகிறவர்களாகவும் மாறுகிறார்கள்.

இயேசுவை அவர் தாயும், சகோதரர்களும் பிடிக்க வந்திருந்தால், இயேசு இந்த மரியாதையான இடத்தை தாய்க்கும், சகோதரர்களுக்கும் கொடுத்திருக்க மாட்டார்.

அன்பு ஆண்டவரே உம் சட்டங்களையும் வார்த்தைகளையும் நான் கடைப்பிடித்து,

உம் உறவினனாக மாற வரம் தாரும், ஆமென்.