இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






ஆண்டவரின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா (ஆ)

முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 24,3-8
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 116
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 9,11-15
நற்செய்தி: மாற்கு 14,12-16.22-26


(Corpus Cristi)
கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்த பெருவிழாவின் வரலாறு:
இலத்தீன் திருச்சபையில் இந்த பெருவிழா திரித்துவ பெருவிழாவிற்கு அடுத்த வியாழன் கொண்டாடப்படுகிறது. இந்த வியாழன் பெரிய வியாழனை நினைவுபடுத்துகிறது. இதனை (Natalis Calicis) நடாலிஸ் காலிசிஸ் அதாவது கிண்ணத்தின் பிறப்பு என்றும் அழைப்பர். பெல்ஜிய புனிதையான தூய யூலியானாதான் இந்த பெருநாளின் ஆரம்பத்திற்கு காரணமானவர் என வரலாறு நம்புகிறது. சிறுவயதிலிருந்தே நற்கருணை ஆண்டவரில் அதிக ஆர்வம் கொண்டிருந்த இந்த புனிதை, ஒரு நாள், ஒரு காட்சியில், கரும் புள்ளியுடன் கூடிய முழு நிலவுக்கு கீழ் திருச்சபையை கண்டார். இந்த கரும் புள்ளி நற்கருணைக்கு ஒரு விழா இல்லாதனை தனக்கு உணர்த்தியதாக எண்ணினார். இதனை நெதர்லாந்து ஆயர்களுக்கும் தனது சொந்த மறைமாவட்ட ஆயர்க்கும் அறிவித்த அவர், இறுதியாக இந்த எண்ணம் திருத்தந்தையை சென்றடைய காரணமானார். நெதர்லாந்திய ஆயர்கள் அக்கால முறைப்படி 1246ம் ஆண்டு இவ்விழாவை தொடங்க முடிவு செய்தனர், ஆனால் சில சிக்கல்களின் காரணமாக 1261ம் ஆண்டே முதன் முதலில் இப்பெருவிழா கொண்டாடப்பட்டது. இந்த மறைமாவட்ட பெருவிழாவில், தன் மனம் நிறைவடையாத தூய யூலியானா, படிப்படியாக திருத் தந்தை நான்காம் உர்பானுடைய கட்டளையால் அனைத்து திருச்சபையின் பெருவிழாவாக அது உருவெடுக்க தொடர்ந்தும் முயற்சி செய்தார்.

நற்கருணையில் அதிகம் விசுவாசம் கொண்டிருந்த இந்த திருந்தந்தை, இந்த விழாவை வருடாந்திர விழாவாக கொண்டாடும்படி தன்னுடைய திருத்தந்தை சுற்று மடல் (Bull Transiturus) புல் டிரான்ஸிடுருஸ் மூலமாக அனுமதியளித்தார். வரலாற்றில் திரித்துவ ஞாயிறுக்கு அடுத்த வியாழனே இந்த விழா இவ்வாறு உருவெடுத்தது. இந்த விழாவில் பங்கேற்றால் பல பாவங்களுக்கு பரிகாரம் ஆகும் வாய்ப்பினையும் திருத்தந்தை அறிவித்தார். தூய அக்குவினா தோமா திருத்தந்தையின் பணிப்புரையின் பேரில் இந்த பெருவிழாவிற்கு திருச்சபையின் பாரம்பரிய செபங்களை, திருப்புகழ்மாலை புத்தகத்திற்கு உருவாக்கினார். இந்த செபமும் அங்கே காணப்படும் பாடல்களும் இன்றளவும் மெச்சப்படுகிறது. இந்த திருத்தந்தையின் மரணம், இவ்விழாவின் உத்வேகத்தை சற்று பாதித்தது. திருத்தந்தை ஐந்தாம் கிளமந்து, இந்த முயற்சியை மீண்டும் வியான்னா பொதுச்சங்கத்தில் (1311ல்) மேற்கொண்டார். சில மாற்றங்கள் புதுமைகளோடு அன்றிலிருந்து திருச்சபை இந்த விழாவை பெருவிழாவாக கொண்டாடுகிறது.

இன்றைய விழா-முறையான பாரம்பரிய ஊர்வலத்தை பற்றி திருத்தந்தையர்கள் பேசவில்லை, ஏனெனில் இப்படியான ஊர்வலங்கள் ஏற்கனவே, இந்த விழா அதிகாரமாக ஏற்படுத்தப்படும் முன்பே வழக்கிலிருந்தன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே, உரோமைய-மேற்கத்தேய திருச்சபையின் முக்கிய விழாவாக இது உருவெடுத்தது. கிரேக்க திருச்சபையிலும் இந்த திருவிழா சிரிய, ஆர்மேனிய, கொப்திக்க, மெல்கித்த, மற்றும் ருத்தேனிய திருச்சபைகளின் கால அட்டவணையில் காணப்பட்டு, பல இடங்களில் கொண்டாடப்படுகிறது.

முதல் வாசகம்
விடுதலைப் பயணம் 24,3-8

3எனவே, மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக் 'ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்' என்று விடையளித்தனர். 4மோசே ஆண்டவரின் வாக்குகள் அனைத்தையும் எழுதி வைத்தார். அதிகாலையில் அவர் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும், இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்காகப் பன்னிரண்டு தூண்களையும் எழுப்பினார். 5அவர் இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க, அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர். 6மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துக் கலங்களில் விட்டு வைத்தார். மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளித்தார். 7அவர் உடன்படிக்கையின் ஏட்டைஎடுத்து மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசித்தார். அவர்கள், 'ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்' என்றனர். 8அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து, 'இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ' என்றார்.

தோறா அல்லது சட்ட நூல்கள் என அழைக்கப்டும் முதல் ஐந்து நூல்களில் விடுதலைப் பயண நூல் மிக மிக்கிய இடத்தைப் பிடிக்கிறது. மோசேயுடைய வாழ்க்கையையும், எகிப்தில் மோசேயின் அரும் அடையாளங்கள், செங்கடலைக் கடத்தல், விடுதலைப் பயணம், சீனாய் மலை உடன்படிக்கை, மற்றும் புதிய வாழ்க்கைக்கான கட்டளைகள் போன்றவற்றின் காரணமாக, விடுதலைப் பயண நூல் விவிலியத்தில் தனக்கென்று ஓர் இடத்தை பிடித்துவிட்டது எனலாம்.

விடுதலைப் பயண நூலின் கதாநாயகர் கடவுள், அவருக்கு அடுத்த இடத்தில் மோசே இருக்கிறார். மோசேயுடைய வாழ்க்கை முறையும், அவருக்கும் கடவுளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் மற்றும் உறவு முறைகள் வாசகர்களுக்கு நல்ல உதாரணங்களாக மாறுகின்றன. விடுதலைப் பயண நூல் எப்போது எழுதப்பட்டது என்பதற்கு இன்னமும் மிகச் சரியான விடை கிடைக்காதபோதும், பபிலோனிய இடப்பெயர்வு வாழ்விற்கு பின்னர், நினைவுகள் மறக்கப்படாமல் இருக்கவேண்டும் என்ற உயரிய நோக்கிற்காக, இந்த புத்தகமும் இணைச்சட்ட வரலாற்று ஆசிரியர் குழுவால் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும்.

விடுதலைப் பயண நூல் கிரேக்க மொழியில் 'எக்ட்சொதொஸ்' ἔξοδος எனவும், וְאֵלֶּה שְׁמוֹת, வெ'எல்லேத் ஷெமோத் என எபிரேய மொழியிலும் அழைக்கப்படுகிறது. தொடக்க நூலின் இறுதி யாக்கோபு எப்படி எகிப்திற்கு இடம்பெயர்ந்தார் என்பதைப் பற்றி சொல்லி நிறைவடைய, விடுதலைப்பயண நூல், யாக்கோபின் புதல்வர்களின் வளர்ச்சியைப் பற்றியும், அவர்களுக்கு எகிப்தில் நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது.

விடுதலைப் பயணநூலின் 24ம் அதிகாரம், உடன்படிக்கை பற்றியும், சீனாய் மலையில் மோசே ஏறியதைப் பற்றியும் விபரிக்கின்றது. இந்த நிகழ்வு, இரண்டு தரப்பினருக்கு இடையில் நடக்கும் உடன்படிக்கை என்ற அமைப்பை சார்ந்திருக்கிறது. இப்படியான உடன்படிக்கைகள் அரசர்கள் மற்றும் தெய்வங்களுக்கு இடையில் நடந்திருந்ததாக பபிலோனிய மற்றும் வேறு இலக்கியங்களில் காணலாம். சாதாரணமாக உடன்படிக்கையில் ஒருவருடைய பலமே அல்லது அதிகாரமே மேலோங்கி இருக்கும். இதற்கு மாறாக கடவுள்-இஸ்ராயேல் உடன்படிக்கையில் இருவருமே சமமாக மதிக்கப்படுவது போல அழகாக காட்டப்பட்டுள்ளது.

வவ.1-2: முதலாவது உடன்படிக்கை செய்துகொள்ளும் முகமாக கடவுள் மோசேயையும் அவரோடு சிலரையும் மலைக்கு அழைக்கிறார். கடவுள்தான் இந்த செயற்பாட்டையும் முன்னெடுக்கிறார். மக்கள் முதலில் முன்வரவில்லை, இந்த இடத்திலும் கடவுள்தான் முன்வருகிறார். கடவுள் மோசேயோடு சேர்த்து ஆரோன், நாதாபு, அபிகூ ஆகியோரையும் கடவுள் அழைக்கிறார். இவர்களோடு சேர்த்து ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட எழுபதுபேரும் அழைக்கப்படுகிறார்கள். குழுவிற்கு கடவுள் முக்கியத்துவம் கொடுப்பது தெரிகிறது.

கடவுள் இவர்களை அழைத்தாலும், இவர்களில் மோசே மட்டும்தான் முதலிடம் பெறுகிறார். பணிகள் குழுவாக செய்யப்பட்டாலும், அதிலும் சிலர் சில வேலைகளைச் செய்யவேண்டும் என்பது தெரிகிறது. இதனை பாகுபாடு என்று சொல்வதற்கில்லை, கடவுளின் விசேட அழைப்பு என்று சொல்லலாம். மோசேயோடு வந்தவர்களை தொலைவில் நிறுத்தி தொழக் கேட்கப்படுகிறார்கள், மக்கள் மலைமேல் ஏறக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள். கடவுளுக்கும் மக்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அல்லது கடவுள் தூயவர் என்பது காட்டப்படுகிறது. וְהָעָם לֹא יַעֲלוּ עִמּוֹ வெஹா'யாம் லோ' ய'அலூ 'இம்மோ- மக்கள் அவரோடு மேலே ஏறக்கூடாது.

வ.3: விடுதலைப் பயணநூல் ஆசிரியர் தன் வாசகர்களுக்கு, தங்களுடைய மூதாதையர்களின் முன்னூதாரணத்தை காட்டுகிறார். மோசே ஆண்டவருடைய வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அறிவிக்கிறார் (יְסַפֵּר לָעָם֙ אֵ֚ת כָּל־דִּבְרֵי יְהוָ֔ה וְאֵת כָּל־הַמִּשְׁפָּטִ֑ים யெசபெர் லா'ஆம் 'எத் கோல்-திவ்ரே அதோனாய், வெ'எத் கோல் ஹம்ஷெபாதிம்- மக்களுக்கு அவர் கடவுளுடைய வார்த்தைகளையும், நியமங்களையும் சொன்னார்).

மக்கள் அனைவரும் ஒரே குரலாக அனைத்தையும் செயல்படுத்துவோம் என உறுதி அளிக்கின்றனர், இது வாசகர்களுக்கு முக்கியமான செய்தியை சொல்கிறது. அதாவது, கடவுளின் மக்கள் அனைவரும் ஒரே குரலாக அவருடைய வார்த்தைகளுக்கும், நியமங்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்பதை ஆசிரியர் எதிர்பார்க்கிறார் எனலாம். כָּל־הַדְּבָרִים אֲשֶׁר־דִּבֶּר יְהוָה נַעֲשֶׂה கோல்-ஹதெவாரிம் 'அஷெர்-திபெர் அதோனாய் ந'அசெஹ் - கடவுள் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் நாம் செய்வோம்.

வ.4: மோசே ஆண்டவருடைய வார்த்தைகளை எழுதி வைக்கிறார். மோசே இங்கே ஒரு செயலாளர் போல செயற்படுகிறார். கடவுளுடன் மக்களுக்கு நேரடி தொடர்பு இல்லை என்பதால் அதனை அவர் நிறைவு செய்ய, எழுத்தில் வைக்க முயல்கிறார் எனலாம். וַיִּכְתֹּב מֹשֶׁ֗ה אֵת כָּל־דִּבְרֵי יְהוָ֔ה வய்யிக்தோவ் மேஷெஹ் 'எத் கோல்-திவ்ரே அதேனாய்- கடவுள் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் மோசே எழுதினார்.

இந்த நிகழ்வு ஓரு நாள் முழுவதும் நடந்தது போல தோன்றுகிறது. மறுநாளே மோசே மலையடிவாரத்தில் பன்னிரண்டு தூண்களை எழுப்புகிறார். இந்த பன்னிரண்டு தூண்களும் பன்னிரண்டு கோத்திரங்களை பிரதிபலிக்கின்றன. அக்காலத்தில் தூண்கள் அடையாளமாக, எல்லைகளாக, நினைவிடங்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மோசே வேலைப்பாடுகள் நிறைந்த தூண்களை நிறுவுயிருப்பார் என எடுப்பது கடடினமாக இருக்கும். இவர் சாதாரண கற்களை அல்லது நீளமான கற்களை தூண்களாக பயன்படுத்தியிருப்பார் என எடுக்கலாம். சிலவேளைகளில் இது ஒரு அடிநீளமான கற்களாக கூட இருந்திருக்கலாம்.

தூண் என்ற தமிழ் சொல் விவிலிய பதத்திற்கு מַצֵּבָ֔ה (மட்செவாஹ்) என்ற சொல் பயன்படுகிறது. இது கற்களையே குறிப்பது போல உள்ளது. சமாரியர்களின் விவிலியம் மற்றும் கிரேக்க செப்துவாஜிந்து விவிலியத்தில் கற்களைக் குறிக்கும் சொல்லே இந்த இடத்தில் பயன்படுத்தப்படுகிறது (⅏? אֲבָנִים அவானிம்-கற்கள்).

வ.5: மோசே அனைத்து தரப்பு மக்களையும் பயன்படுத்துகிறார். இளைஞர்களை அனுப்பி பலி ஒப்புக்கொடுக்கிறார். இதுவும் மலையடிவாரத்தில்தான் நடந்திருக்க வேண்டும். மலையில் இளைஞர்கள் ஏறியிருக்க மாட்டார்கள் என்பதனால், மலையடிவாரத்தில் ஒரு பீடத்தை அமைத்து அங்கே பலி ஒப்புக்கொடுத்திருப்பார்கள் எனலாம். இந்த இளைஞர்கள் எரிபலிகளையும், நல்லுறவு பலிகளையும் ஒப்புக்கொடுக்கிறார்கள் (עֹלֹת 'ஓலோத்-எரிபலிகள், זְבָחִים שְׁלָמִים ட்செவாஹிம் ஷெலாமிம்- சமாதானப் பலிகள்).

மிகவும் ஆரம்ப காலத்திலேயே மோசே இந்த இரண்டு வகையான பலிகளை நடைமுறையில் எடுத்தாரா என்ற கேள்வி எழுகிறது. எடுத்திருக்கக்கூடாது என்பதற்கில்லை. இப்படியான வ்வேறு பலிகள் பிற்காலத்திலேயே வழக்கில் இருந்திருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது. இருப்பினும் மோசே பலி ஒப்புக்கொடுத்தார் என்பதில் சந்தேகமில்லை.

வ.6: மோசே இரத்தத்தை பயன்படுத்துகிறார். மிருக இரத்தத்தை கலங்களில் எடுத்துவைத்துவிட்டு இன்னொரு பகுதியை மக்கள் மேல் தெளிக்கிறார். இரத்தத்தினால் சபதம் எடுப்பது, அல்லது சத்தியம் செய்வது தமிழர் வரலாற்றிலும் பதியப்பட்டுள்ளது.

மோசே இரத்தத்தை தெளிப்பது வாயிலாக தன்னை இணைப்பாளராக காட்டுகிறாரோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இந்த இரத்தத்தின் வாயிலாக மோசே மக்களையும் பலிப்பீடத்தையும் புனிதப்படுத்துகிறார், அல்லது அடையாளப்படுத்துகிறார் எனலாம்.

வ.7: இந்த வரி, ஓர் அரசவை காட்சிபோல தோன்றுகிறது. இரண்டு அரசர்கள் உடன்படிக்கை செய்யும் போது, மத்தியம் வகிப்பவர், உடன்படிக்கையை வாசிப்பார், அதனை இருவரும் ஏற்றுக்கொள்ள ஆம் என ஆமோதிப்பர், பின்னர் அந்த உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். அதனைப் போலவே இங்கும் வாசிக்கப்டுகிறது.

மோசே உடன்படிக்கை ஏட்டை மக்களின் காதுகளுக்கு கேட்கும் படி வாசிக்கிறார். உடன்படிக்கை ஏட்டிற்கு סֵפֶר הַבְּרִית (செபெர் ஹவ்ரித்- உடன்படிக்கை புத்தகம்) என்ற சொல் பயன்படுகிறது. இது ஒரு சுருளாக இருந்திருக்க வேண்டும். அந்த நாட்களில் புத்தகங்கள் இருந்திருக்கவில்லை. மக்கள் அதனை ஆமோதிக்கின்றனர்- וַיֹּאמְרוּ כֹּל אֲשֶׁר־דִּבֶּר יְהוָה נַעֲשֶׂה וְנִשְׁמָע׃ வய்யோ'ம்ரூ 'அஷேர்-திவெர் அதோனாய் ந'அசெஹ் வெநிஷ்மா' - ஆண்டவர் சொன்ன எல்லாவற்றையும் நாங்கள் கேட்போம், பின்பற்றுவோம் என்று அனைத்து மக்களும் சொன்னார்கள்.

வ.8: மோசே இரத்தத்தால் மக்களை அடையாளப்படுத்துகிறார். இரத்தத்தை மக்கள் மேல் தெளித்தல் மத்திய கிழக்கு உலகில், ஒரு சடங்காகவே பார்க்கப்படவேண்டும். இரத்தம் உயிரின் அடையாளமாகவும், அதன் நிறம் பலத்தின் அடையாளமாகவும் இருப்பதனால், இதனை தெளிப்பது ஒரு குறியீடாக அமைகிறது.

இங்கே குறிப்பிடப்படுகின்றன மாட்டு இரத்தத்தை ஏற்கனவே மோசே, பீடத்தின் மீது தெளித்திருக்கிறார். பீடம் கடவுளை அடையாளப்படுத்துவதால், அந்த இரத்தம் கடவுள் மேல் தெளிக்கப்பட்டிருக்கிறது எனவும் எடுக்கலாம் (אֶת־הַדָּם וַיִּזְרֹק עַל־הָעָם 'எத்-ஹதாம் வய்யிட்செரொக் 'அல்-ஹா'ஆம்- இரத்தத்தை மக்கள் மேல் தெளித்தார்). மக்கள் ஏற்கனவே ஆண்டவர் சொல்வதை செய்வதாக சம்மதித்திருப்பதால், இந்த இரத்தம் உடன்படிக்கையின் இரத்தமாக மாறுகிறது. அக்காலத்தில் பல உடன்படிக்கைகள் இரத்தத்தினால் செய்யப்பட்டிருக்கின்றன. இதனை ஒட்டியே இந்த சீனாய் மலை உடன்படிக்கையும் இரத்தத்தினால் செய்யப்படுகிறது எனலாம். דַם־הַבְּרִית אֲשֶׁר כָּרַת יְהוָה தாம்-ஹவ்ரித் 'அஷேர் காரத் அதோனாய்- உடன்படிக்கையின் இரத்தம் அதனை கடவுளே செய்தார்.

வவ.9-10: இன்னொருமுறை இஸ்ராயேலின் பெரியவர்கள் மேலேறிச் செல்கின்றனர். உடன்படிக்கை மலையடிவாரத்தில் நடைபெறுகிறது. உடன்படிக்கை செய்யப்பட்டதன் பின்னர், மோசே, ஆரோன், நாதாபு, அபிகூ, மற்றும் இஸ்ராயேல் எழுபது பெரியோர்கள் மேலேறிச் செல்கின்றனர்.

முதல் முதலாக கடவுளை மனிதர்கள் கண்டது போன்ற காட்சி சொல்லப்படுகிறது. ஏற்கனவே இதனை மோசேயும் உணர்ந்திருக்கிறார். கடவுளின் பாதங்களின் கீழ்தளத்தைக் காண்கிறார்கள், அது நீல மணிக்கல் வேலைப்பாட்டை ஒத்திருக்கிறது, அல்லது தௌ;ளிய வான்வெளி போன்று இருக்கிறது.

உண்மையில் இவர்கள் கடவுளைக் கண்டது போல தெரியவில்லை, மாறாக அவரின் சுவடுகளை அல்லது ஒளிப் பிரசன்னத்தை காண்டது போலவே தெரிகிறது. விடுதலைப் பயணநூல் ஆசிரியர், இக்குழுவில் இருந்ததற்கான வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும் என நினைக்கின்றேன். ஆசிரியர் தான் பாரம்பரியமாக கேட்டதையும், மற்றய மூல பிரதிகளில் வாசித்ததையும்தான் எழுதியிருக்க வேண்டும். இவர் இந்த வரியை 'விவரிப்பு வரியாகவே' (indirect sentence) எழுதுகிறார் என்பதையும் அவதானிக்க வேண்டும். இஸ்ராயேலர்கள் கடவுளுக்கு உருவம் கிடையாது என நம்பினார்கள், ஆனால் அவரின் செயற்பாடுகளைக் கொண்டு அவரை அதிகமான வேளைகளில் தந்தையாகவும், சிலவேளைகளில் தாயாகவும் வர்ணித்தார்கள். இதனைவிட பல உருவகங்களை அவரின் செயற்பாடுகளின் முன்னிட்டு கொடுத்தார்கள். ஆண்டவரை பாறையாக, அரணாக, கோட்டையாக வர்ணிப்பதும் இப்படியான முயற்சியே.

இந்த அழகான வரியை எபிரேய மூல பாடம் இப்படி வரிக்கின்றது: וַיִּרְאוּ אֵת אֱלֹהֵי יִשְׂרָאֵל வய்யிர்'ஊ 'எத் 'எலோஹெ யிஸ்ரா'ஏல்- இஸ்ராயேலின் கடவுளைக் கண்டார்கள்.

וְתַחַת רַגְלָיו כְּמַעֲשֵׂה לִבְנַת הַסַּפִּ֔יר வெதாஹத் ரக்லாயிவ் கெம'அஸெஹ் லிவ்நாத் ஹஸபிர்- அவருடைய பாதங்களுக்கு கீழ்பகுதி செபீர் (மணிக்கல்) கல் வேலைப்பாடுகள் போல இருந்தது. וּכְעֶצֶם הַשָּׁמַיִם לָטֹהַר׃ - வுகெ'எட்செம் ஹஷாமாயிம் லாதோஹர்- தௌளிய வானங்கள் போல இருந்தது.

இந்த வரிகளைக் கொண்டு இவர்கள் எதனைக் கண்டார்கள் என்பதை அறிவது அவ்வளவு இலகுவாக இருக்காது என்பது ஆய்வியல் அனுபவம். விவிலியத்தில் உள்ள பல கடினமாக வரிகளில் இதுவும் ஒன்று.

வ.11: கடவுளை முகமுகமாய் கண்ட எவரும் இந்த உலகில் வாழமுடியாது என்பது எபிரேய மற்றும் சில சமயங்களின் நம்பிக்கை. இதனைத்தான் கடவுள் மோசேக்கு சொன்னதாக விடுதலைப் பயண நூல் காட்டுகிறது (காண்க வி.ப 33,20). இருப்பினும் பல வேளைகளில் அவர் கடவுளை மிக அருகில் அனுபவித்திருக்கிறார், இதனை கண்டார் என்றும் எடுக்கலாம். கண்களால் கண்டாரா என்பதற்கு சரியான பதில் கிடைக்காது என நினைக்கின்றேன். இந்த தேடலுக்கு பாரம்பரியங்கள் வித்தியாசமான விடைகளைத்தான் தரும்.

இந்த வரியில், மேலேறிச் சென்றவர்கள் ஆண்டவரைக் கண்டனர் (וַיֶּחֱזוּ אֶת־הָאֱלֹהִים வய்யெஹெட்சூ 'எத்-ஹா'ஏலோஹிம் - அவர்கள் கடவுளை கண்டார்கள்), இங்கே חָזָה ஹாட்சாஹ் என்ற வினைச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இது காணுதல், உணர்தல், புரிதல் போன்ற அர்த்தத்தைக் கொடுக்கவல்லது. கடவுளைக் கண்டால் மனிதர்கள் வாழமாட்டார்கள் என்ற நியதி இங்கே பொய்த்துப்போகிறது. இவர்கள் மரணிக்கவில்லை. இதனை ஆசிரியர், 'கடவுள் அவர்கள் மேல் கைவைக்கவில்லை' என்கிறார் (לֹא שָׁלַח יָד֑וֹ லோ' ஷாலஹ் யாதோ- அவர் தன் கையை நீட்டவில்லை).

உடன்படிக்கையின் அடையாளமாக அவர்கள் உண்டு குடிக்கிறார்கள். இந்த நிகழ்வு மலையடிவாரத்தில்தான் நடந்திருக்க வேண்டும். மலையுச்சியில் உணவுகளை கொண்டு சென்றிருப்பார்களா? என்று எண்ணத்தோன்றுகிறது. மக்கள் உண்டு குடிப்பது, உடன்படிக்கை நல்ல விதத்தில் செய்யப்பட்டிருக்கிறது, என்பதைக் காட்டுகிறது. அதாவது அவர்கள் கடவுளோடு சமாதானத்தில் உள்ளார்கள். அரசர்கள் உடன்படிக்கை செய்கின்றபோதும் மகிழ்வின் அடையாளமாக உண்டு குடித்தார்கள். இஸ்ராயேல் மக்களின் உண்டு-குடித்தல், என்பதை அவர்களின் கலாச்சார-மத செயற்பாடகவும் எடுக்கலாம் (וַיֹּאכְלוּ וַיִּשְׁתּוּ׃ ס வாய்யோ'க்லூ வாய்யிஷ்தோ: உண்டனர் குடித்தனர்).



பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 115

1அல்லேலூயா! ஆண்டவர்மீது அன்புகூர்கின்றேன்; ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார்.

2அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார்.

3சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன் பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக் கொண்டன் துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன.

4நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; ‛ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்' என்று கெஞ்சினேன்.

5ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.

6எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்; நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார்.

7‛என் நெஞ்சே! நீ மீண்டும் அமைதிகொள்; ஏனெனில், ஆண்டவர் உனக்கு நன்மை செய்தார்'.

8என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்; என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார்.

9உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

10‛மிகவும் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன்.

11‛எந்த மனிதரையும் நம்பலாகாது' என்று என் மனக்கலக்கத்தில் நான் சொன்னேன்.

12ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?

13மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.

14இதோ! ஆண்டவருடைய மக்கள் அனைவரின் முன்னிலையில் அவருக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.

15ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.

16ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.

17நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;

18இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;

19உமது இல்லத்தில் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.

அல்லேலூயா!



இந்த 116வது திருப்பாடல் ஐந்தாவது புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தனி மனித புகழ்சிப் பாடல் என சில ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். மிகவும் ஆபத்தான சூழ்நிலை ஒன்றை பின்புலமாக காட்டுகிறார் ஆசிரியர். இதற்கு காரணமாக மனிதர்களின் ஏமாற்றுத்தனத்தையும், தன்னுடைய வெகுளிதனத்தையும் அவர் சாடுகிறார். இப்படியான சூழ்நிலையில் செபம் உதவிக்கு வருகிறது, கடவுள் அவர் குரலைக் கேட்கிறார், இந்த கடவுள் அருள் மிக்கவர், இரக்கமும், உண்மையுமுள்ளவர் என்று பாடல் தொடர்ந்து முன்னேருகிறது. எபிரேய கவிநடையான 'படி அடுக்கு' முறையில் இந்த பாடல், அமைக்கப்பட்டுள்ளது.

அ1. துன்ப நாளின் கடவுளை கூவி அழைத்தல் (வவ.1-2)

ஆ1. செபத்தினால் துன்பங்களை சந்தித்தல் (வவ.3-4)

இ1. கடவுளில் முழுமையாக தங்கியிருத்தல் (வவ. 5-7)

ஈ1. நம்பிக்கை அனைத்தையும் புதியதாக்கிறது (வவ. 8-11)

இ2. கடவுள் துன்பங்களுக்கு விடையளிக்கிறார். (வவ.12-14)

ஆ2. கடவுள் துன்பங்களை அகற்றுகிறார் (வவ.15-16)

அ2. மீட்பு நாளின் கடவுளை கூவி அழைத்தல் (வவ. 17-19)

வ.1: அல்லேலூயா என்ற புகழ்ச்சி வார்த்தையில் இந்த திருப்பாடல் தொடங்குகிறது (הַלְלוּ־יָהּ ஹல்லூ-யாஹ்). இந்த புகழ்ச்சி சொல் எபிரேய விவிலியத்தில் 115வது திருப்பாடலின் இறுதியான சொல்லாக இருக்கிறது. 116வது திருப்பாடலின் முதலாவது சொல்லாக இல்லை.

ஆசிரியர், தான் ஏன் கடவுள் மீது அன்புகூருகிறார் (אָהַבְתִּי 'ஆஹவ்தி- அன்புகூறுகிறேன்) என்பதற்க்கு, ஆண்டவர் தன் குரலைக் கேட்டதை காரணமாகச் சொல்கிறார். ஆண்டவர் ஒருவரின் குரலைக் கேட்கிறார் என்பது, ஒருவருக்கு துன்பத்திலும் மன ஆறுதலைக் கொடுக்கிறது. இதனை ஆசிரியர் அழகாக வெளிப்படுத்துகிறார்.

வ.2: முதலாவது வரியில் சொன்ன அதே அர்த்தம் வேறு சொற்பிரயோகங்களில் இந்த வரியிலும் திருப்பிக்கூறப்படுகிறது. மன்றாடிய நாளில் ஆண்டவர் தனக்கு செவிசாய்த்ததாகச் சொல்கிறார். בְיָמַי אֶקרָֽא׃ வெயாமய் 'எக்ரா- நான் கூப்பிடும் நாட்களில். இந்த வரியின் இரண்டாவது பிரிவை, 'நான் வாழுகின்ற வரை, தேவையில் ஆண்டவரை உதவிக்காக கூப்பிடுவேன்' என்று சில ஆங்கில விவிலியங்கள் மொழிபெயர்க்கின்றன.

வ.3: தன்னுடை துன்பத்தின் நிலையை அடையாளங்களில் அவர் உருவகிக்கின்றார். சாவின் கயிறுகள் தன்னை பிணித்துக்கொண்டன என்கிறார். இதனை சாவின் கண்ணிகள் என்னை சூழ்ந்து கொண்டன என்று எபிரேய பாடம் தருகிறது אֲפָפ֤וּנִי ׀ חֶבְלֵי־מָ֗וֶת 'அபாபூனி ஹெவ்லே மோவெத். மேலும் இதனை வேறு சொற்களில், பாதாளத்தின் துன்பங்கள் தன்னை பற்றிக்கொண்டன என்கிறார். பாதாளம் (שְׁאוֹל ஷெ'ஓல்), இங்கே இவருக்கு மரண அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.

இப்படியான அனுபவங்கள் தனக்கு துன்பத்தையும் துயரத்தையுமே தருகிறது என்கிறார். צָרָה וְיָגוֹן אֶמְצָא׃ ட்சாராஹ் வெயாகோன் 'எம்ட்சா'- துன்பத்தையும் துயரத்தையும் நான் கண்டுகொள்கிறேன்.

வ.4: ஆசிரியர் தான் ஆண்டவரை தொழுததாகச் சொல்கிறார், இதனை எபிரேய விவிலியம், בְשֵׁם־יְהוָה אֶקְרָא (பெஷெம்-அதோனாய் 'எக்ரா'), நான் ஆண்டவரின் பெயரில் அழைத்தேன் என்று வாசிக்கிறது.

இதனை அந்த வரியின் இரண்டாவது பிரிவு, 'என் உயிரைக் காக்குமாறு கெஞ்சினேன்' என்று மீள சொல்கிறது.

வ.5: ஆண்டவரிடம் கெஞ்சி மன்றாடுவதற்கான காரணத்தை அவர் விளக்குகிறார். கடவுள் அருளும் இரக்கமும் உள்ளவராக இருப்பதுதான் அதற்கான காரணம் என்கிறார். חַנּוּן יְהוָֹ֣ה וְצַדִּ֑יק ஹனூன் அதோனாய் வெட்சாதிக். ஆண்டவருடைய அருளும் நீதியும் இன்னொரு சொல்லில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது ஆண்டவர் இரக்கம் உள்ளவராக பாடப்படுகிறார்.

வ.6: ஆண்டவர் எளிய மனத்தோரை பாதுக்கிறவர் (פְּתָאיִם பெதா'யிம்- எளியோர்), தன்னையும், தான் தாழ்த்தப்பட்ட போது (דַּלּוֹתִי தல்லோதி- நான் தாழ்த்தப்பட்டேன்) பாதுகாக்கிறார் என்கிறார். அதாவது தான் எளியமனத்தவர் இதனால்தான் ஆண்டவரின் பாதுகாப்பு தனக்கு கிடைக்கிறது என்கிறார். வாசகர்களும் எளிய மனத்தோராய் ஆண்டவரின் பாதுகாப்பை பெறமுடியும் என்பது இவர் வாதம்.

வ.7: தன் நெஞ்சை அமைதி கொள்ளச் சொல்கிறார். இந்த இடத்தில் தன் நெஞ்சை இரண்டாவது ஆளாக வர்ணித்து அதற்கு தான் முதலாவது ஆளாக கட்டளை கொடுக்கிறார். பல மொழிகளின் இலக்கியங்கள் இப்படியான வழிமுறையை பின்பற்றுகின்றன. எபிரேய மொழி இதனை (שׁוּבִי נַפְשִׁי) ஷுவி நப்ஷி - என் ஆன்மாவே திரும்பு என்று காட்டுகிறது.

அதாவது தன் ஆன்மா, இதனை உயிர் அல்லது சுயம் என்றும் மொழி பெயர்க்கலாம்: அலையும் ஆன்மாவை மீண்டும் அமைதிக்கு திருப்ப கட்டளை கொடுக்கிறார் போல. இதற்கு காரணமாக, ஆண்டவர் அதற்கு நன்மை செய்தார் என்று பாடுகிறார். நன்மை செய்ததை, ஆசிரியர் இறந்த காலத்தில் குறிப்பிடுகிறார், ஆக ஆண்டவரின் நன்மைத்தனம் வெறும் எதிர்காலம் அல்ல என்பது புலப்படுகிறது.

வ.8: மூன்று விதமான ஆண்டவரின் நன்மைத்தனங்கள் நினைவுகூறப்படுகின்றன, அதாவது: அ. அவர் உயிர் சாவினின்று விடுவிக்கப்படுகிறது (חִלַּצְתָּ נַפְשִׁי ஹில்லாட்ஸ்தா நப்ஷி)

ஆ. அவர் கண் கலங்காமல் பாதுகாக்கப்படுகிறது (אֶת־עֵינִי מִן־דִּמְעָה 'எத்-'எனே மின்-திம்'அஹ்).

இ. அவர் கால் இடறாதபடி காக்கப்படுகிறது (אֶת־רַגְלִי מִדֶּֽחִי 'எத்-ரக்லி மித்தெஹி).

வ.9: இந்த வசனம் மிகவும் இனிமையான வசனம். இஸ்ராயேலர்கள் தங்கள் நாட்டை உயிர்வாழ்வோர் நாடு என்று அழைப்பார்கள் (בְּאַרְצ֗וֹת הַחַיִּים பெ'அர்டஸொத் ஹஹய்யிம்). இவர்கள் இரண்டாவது வாழ்வு அல்லது மரணத்தின் பின் வாழ்வு என்ற சிந்தனையை கொண்டிருக்காத படியால், வாழ்வோரின் நாடே இவர்களின் இலக்காக இருக்கிறதை இந்த வரியில் காணலாம்.

அதுவும் இந்த வாழ்வோர் நாட்டில், தான் ஆண்டவரின் திருமுன் வாழ்ந்திடுவதாகச் சொல்கிறார். இதனை ஆண்டவர் முன் நடந்திடுவேன் என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது. இரண்டும் ஒரே அர்த்தத்தைத்தான் கொடுக்கிறது (אֶתְהַלֵּךְ לִפְנֵי יְהוָ֑ה 'எத்ஹல்லெக் லிப்னே அதோனாய்).

வ.10: இஸ்ராயேல் புலம்பல் பாடல்கள் கூட நம்பிக்கையை மையமாக கொண்ட பாடல்களே. தமிழ்க் கலாச்சாரத்தைப் போல, இஸ்ராயேல் கலாச்சாரத்திலும், புலம்பல் என்பது உண்மையில் நீதிக்கான ஒரு வேண்டலே.

இந்த வரியில் தான் மிகவும் துன்புறுகிறதாக சொன்னாலும் (אֲנִ֗י עָנִיתִי 'அனி 'அநிதி- நான் துன்புற்றாலும்), அவர் நம்பிக்கையோடு இருந்ததாகச் சொல்கிறார்.

வ.11: இந்த வரியில் எந்த மனிதரையும் நம்பலாகாது என்று தன்னுடைய ஆதங்கத்தைப் பாடுகிறார். இது அவர் மனிதர்களால் வெறுக்கப்பட்டு அல்லது ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்ற பின்புலத்தைக் காட்டுகிறது எனவும் எடுக்கலாம்.

இங்கே இவர் மனிதர்களை சபிக்கிறார் என்பதைவிட, மனிதர்களிலும் கடவுளை அதிகமான நம்புகிறார் என்ற சிந்தனைதான் மேலோங்கி இருக்கிறது எனலாம். இங்கே எழுவாய்ப் பொருள், மனிதர் மீதான கோபமல்ல, மாறாக கடவுள் மீதான ஆழமான விசுவாசம். எந்த மனிதரையும், என்று சொல்லி அனைத்து மனிதர்களையும் உள்வாங்குகிறார் போல தோன்றுகிறது. எபிரேய மூல பாடம் அனைத்து மனிதர்களையும், பொய்யர்கள் என்கிறது (כָּל־הָאָדָם כֹּזֵב கோல்-ஹா'ஆதாம் கோட்செவ்).

வ.12: முக்கியமான ஒரு கேள்வியை அனைத்து வாசகர்களிடமும் கேட்கிறார். ஆனால் கேள்வியை அவர் தன்னிடமே கேட்பது போல அமைக்கிறார். ஆண்டவர் செய்த அனைத்து நன்மைகளுக்கும், எப்படி ஒருவரினால், பிரதிபலன் செய்ய முடியும் என்பது அவர் கேள்வி. இதற்கு விடையாக, மனிதர்களினால் எந்த விதமான கைமாறையும் கடவுளுக்கு செய்ய முடியாது என்பது விடையாக வரும்.

வ.13: மீட்பின் கிண்ணம் என்ற சொல் இங்கே எழுவாய்ப் பொருளாக வருகிறது, כּוֹס־יְשׁוּעוֹת אֶשָּׂ֑א கோஸ்-யெஷு'ஓத் 'எஸ்ஸெ' (மீட்பின் கிண்ணத்தை உயர்த்துவேன்). இந்த மீட்பின் கிண்ணத்தைக் கொண்டு ஆண்டவரின் திருப்பெயரை தொழுவதாகச் சொல்கிறார்.

இந்த வரி புதிய ஏற்பாட்டில், நற்கருணைக் கிண்ணத்திற்கு ஒப்பிட்படுகிறது. இருப்பினும் இந்த இடத்தில் இது திரவ பலிக்கான கிண்ணத்தையே குறிக்கிறது எனலாம். முதல் ஏற்பாட்டுக் காலத்தில், ஆண்டவருக்கு மிருக பலி, தானிய பலி, மற்றும் திரவப் பலிகள் காணிக்கையாக கொடுக்கப்பட்டன. திரவ பலி என்பது எண்ணெய் மற்றும் இரசத்தைக் குறிக்கும்.

வ.14: இந்த வரியுடன் ஒப்பிடுகின்றபோது, முதல் வரி காணிக்கையை குறிப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆண்டவருக்கு பொருத்தனைகளை தான் நிறைவேற்றுவதாகச் சொல்கிறார் (נְדָרַי לַיהוָה நெதாரய் லஅதோனாய் - ஆண்டவருக்கு பொருத்தனைகள்). பல விதமான பொருத்தனைகள் வழக்கிலிருந்திருக்கின்றன. உழைப்பில் பத்தில் ஒன்றைக் கொடுத்தல், நகர்களை கடவுளுக்கு அர்ப்பணித்தல், தலைச்சான் உயிரினங்களை கடவுளுக்கு கொடுத்தல், செபங்களை பொருத்தனையாக் கொடுத்தல், அத்தோடு தலைமுடியையும் பொருத்தனையாகக் கொடுத்தலும் பிற்காலத்தில் வழக்கிலிருந்திருக்கின்றன.

இவர் என்ன பொருத்தனை செய்வார் என்பது இந்த வரியில் சொல்லப்படவில்லை, ஆனால் அதனை அவர் ஆண்டவர் மக்கள் முன்னிலையில் செய்வதாகச் சொல்கிறார் (כָל־עַמּֽוֹ கோல்-'அம்மோ, அனைத்து அவர் மக்கள்).

வ.15: இந்த வரியும் இன்னும் சற்று வித்தியாசமாக இருக்கிறது. வழக்கமாக மரணத்தை இஸ்ராயேலர்கள் போற்றுவது கிடையாது, முக்கியமாக முதல் தேவாலயத்தின் காலத்தில். மரணத்தை அவர்கள் கடவுளின தண்டனை அல்லது ஒருவகையான துன்பமாகவே பார்த்தார்கள். அதுவும் சிறு பாராயத்தில் மரணம், அல்லது நல்லவர்களின் மரணம் போன்றவை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. அவர்கள் மரணத்தின் பின் வாழ்வையும் முதல் தேவாலயத்தின் காலத்தில் நம்பவில்லை.

இந்த வரியில், ஆண்டவருடய அன்பர்களின் மரணம் அவர் பார்வையில் மதிப்புக்குரியது என்கிறார் ஆசிரியர். יָקָר בְּעֵינֵי יְהוָ֑ה הַמָּ֗וְתָה לַחֲסִידָיו׃ யாகார் பெ'எனே அதோனாய், ஹம்மாவெதாஹ் லஹசிதாய்வ். கடவுளுடைய கண்களில் ஒப்பற்றது, அவர் அன்பர்களின் சாவு.

வ.16: தன்னுடைய அடையாளத்தை பல ஒத்த கருத்து வரிகள் தெளிவு படுத்துகிறார். தன்னை ஆண்டவரின் ஊழியன் என்கிறார் (אֲנִי־עַבְדְּךָ 'அனி-'அவ்தேகா- நான் உம் ஊழியன்). இந்த வரி மீண்டும் இன்னொருமுறை அதே வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. தமிழ் விவிலியம் ஊழியன், பணியாளன் என்ற ஒத்த கருத்துச் சொற்களைப் பாவித்தாலும். எபிரேயம் ஒரே சொல்லை இரண்டு முறை பாவிக்கிறது (עַבְדְּךָ 'அவ்தேகா), இப்படியாக எபிரேயத்தில் முக்கியமான வரிகள் அமைக்கப்படுகின்றன. இறுதியாக தன்னை ஆண்டவரின் அடியாளின் மகன் என்றும் சொல்கிறார் (בֶּן־אֲמָתֶךָ பென்- 'அமாதெகா- உம் அடியாளின் மகன்). இதுவும் ஆண்டவரின் பணியாளனை குறிக்கும் மிக முக்கியமான வார்த்தை பிரயோகம்.

வவ.17-18: இறுதியாக தான் கடவுளுக்கு என்னனென்ன செய்யப்போகிறார் என்பதை தெளிவாக விளங்கப்படுத்துகிறார். ஆண்டவருக்கு நன்றிப் பலி செலுத்தி (זֶבַח תּוֹדָה ட்செவாஹ் தோதாஹ்- நன்றிப் பலி), அவர் பெயரைத் தொழுவதாகச் சொல்கிறார். நன்றிப்பலி, பலி வகைகளில் ஒன்று. அத்தோடு மக்கள் முன்னிலையில் ஆண்டவருக்கு பொருத்தனைகள் நிறைவேற்றுவதாகச் சொல்கிறார். இந்த வாக்குறுதியை அவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். மக்கள் முன்னிலையில் பொருத்தனைகள் செய்தல், ஒரு வகையான சாட்சியமாக அமைகிறது.

வ.19: ஆண்டவருக்கு அவர் செய்யவிருக்கின்ற பொருத்தனைகளை எங்கே செய்யப்போகிறார் என்பது விவரிக்கப்படுகிறது. அதனை அவர் ஆண்டவரின் இல்லத்தின் முற்றத்தில் செய்யவிருக்கிறார். அது எருசலேம் தேவாலயம் என்ற அடுத்த வரி விளங்கப்படுத்துகிறது. இந்த வரி மூலமாக இந்த திருப்பாடல் இரண்டாம் தேவாலயத்தின் காலப் பாடல் என எடுக்கலாம், போல தோன்றுகிறது.

இறுதியாக இந்த திருப்பாடல் அல்லேலூயா என்ற புகழ்சசி சொல்லுடன் நிறைவேறுகிறது (הַלְלוּ־יָהּ ஹல்லூ-யாஹ், ஆண்டவரை புகழுங்கள்).



இரண்டாம் வாசகம்
எபிரேயர் 9,11-15

11ஆனால், இப்போது கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதை விட மேலானது, நிறைவு மிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல் அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல. 12அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒருமுறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கும்படி செய்தார். 13வெள்ளாட்டுக்கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள். 14ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது! ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே. 15இவ்வாறு அவர் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராயிருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட என்றும் நிலைக்கும் உரிமைப்பேற்றைப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது. இது ஒரு சாவின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சாவு முந்திய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பளிக்கிறது.

இயேசுவை தலைமைக் குருவாக் காட்டுவதில் எபிரேயர் புத்தகம் தனி இடத்தைப் பெறுகிறது. எருசலேம் தேவாலயத்தின் அழிவு, யூதக் குருக்களின் முக்கியத்துவம், குருத்துவம் பற்றிய யூத கிறிஸ்தவர்களின் அறிவு போன்றவற்றின் காரணமாக, இந்த ஆசிரியர் இயேசுவின் இன்னொரு முகத்தை வித்தியாசமாக காட்ட முயல்கிறார். எபிரேயர் புத்தகத்தை பாரம்பரிய நம்பிக்கையில், கடிதம் என்று கருதினாலும், இது கடிதத்தை விட வித்தியாசமானதாகவே காணப்படுகிறது. கடிதத்திற்குரிய முக்கியமான சில வரைபுகளையும் இந்த புத்தகம் கொண்டிருக்கவில்லை.

இதனை பவுல்தான் எழுதினார் என்று பாரம்பரியம் நம்பினாலும், பல வகையில் இந்த புத்தகத்தின் இறையியல் நடை மற்றும் மொழி நடை என்பன வேறு ஒருவரையே ஆசிரியராக காட்ட முயல்கிறது எனலாம்.

இந்த புத்தகத்தை ஆய்வாளர்கள் மறையுரை அல்லது தொகுப்பு-மறையுரை என்ற இலக்கிய வகையினுள் உள்ளடக்கின்றனர். அதற்கான வாதங்களும் பலமாகவே உள்ளன. இப்படியான மறையுரைகள் கிரேக்க காலத்து, செபக்கூடங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இயேசுவை உண்மையான தலைமைக்குருவாக விளக்கிய ஆசிரியர், மண்ணுலகிலும் விண்ணுலகிலும் நடக்கும் இறைவழிபாட்டை இந்த பகுதியில் விளக்க முயல்கிறார்.

வ.11: இயேசுவை தலைமைக்குருவாக அடையாளம் காட்டுகிறது இந்த வரி, அத்தோடு அவருடைய நன்மைத்தனங்கள் கிடைக்கப்பட்டுள்ளன என்றும் நம்பிக்கை வெளியிடுகிறார் (ἀρχιερεὺς ஆர்கெயுரெயூஸ்- தலைமைக்கரு).

தலைமைக்குருக்கள் கிரேக்க-உரோமையர் காலத்தில் மிக முக்கியமான உள்நாட்டு அதிகாரிகளாக மாறியிருந்தார்கள். உரோமையர்கள் கூட தலைமைக் குருக்களை தங்கள் பக்கம் வைத்திருக்க முயன்றார்கள் எனலாம். இவர்கள் மத தலைவர்களாக இருந்தாலும், இவர்களுக்கு அரசியல் ஆதிக்கமும் நிறைவாகவே இருந்தது. தலைமைக் குருக்கள்தான் கூடாரத்தில் பலி ஒப்புக்கொடுத்தார்கள். கூடாரம் என்பது, இந்த புத்தக காலத்தில் ஆலயத்தின் அதி பரிசுத்தமான உள்ளிடத்தையே குறித்திருக்க வேண்டும். இங்கே கூடாரம் எனப்படுவது, முதல் ஏற்பாட்டு சந்திப்புக்கூடாரத்தை நினைவூட்டுகிறது எனலாம், σκηνῆς (ஸ்கேனேஸ்- கூடாரம்).

இந்த கூடாரத்தின் தன்மைகள் விளங்கப்படுத்தப்படுகின்றன. இது முன்னையதைவிட மேலானது, நிறைவு மிக்கது, மனிதர் கையால் அமைக்கப்படாதது, அது படைப்புகளில் ஒன்றல்ல. இதன் மூலமாக யூதர்கள் பெருமையாக நினைக்கும் சந்திப்புக்கூடாரம், இயேசுவின் முன்னால், ஒன்றுமில்லை என்பதைக் காட்டுகிறார் ஆசிரியர். இந்த ஒப்பீடுகளை ஆய்வுசெய்கின்றபோது, இயேசுவின் கூடாரம் விண்ணகத்தையே குறிப்பது தெரிகிறது.

வ.12: கூடாரத்தில் பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதா? என்பதில் கேள்விகள் பல இருக்கின்றன. ஆனால் சந்திப்புக்கூடாரத்தை நினைவு படுத்திய எருசலேம் தேவாலயத்தில் பல மிருகப் பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. இந்த பலிகளில் மிருகப் பலிகள், மிக முக்கியமானவை.

இப்படியான மிருகப் பலிகள் இயேசுவிற்கு முன்னால சிறுமையடைகின்றன என்பதைக் காட்டுகிறார். மிருகங்களின் இரத்தத்திற்கும் இயேசுவின் இரத்தத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் காட்டுகிறார். இந்த தலைமைக் குரு, சாதாரண தலைமைக் குருவைப் போல, மிருக இரத்தத்தைக் ஒப்புக்கொடுக்கவில்லை, மாறாக அவர் தன்னுடைய இரத்தத்தையே ஒப்புக்கொடுக்கிறார் என அழகான இறையியல் செய்கிறார் (ἰδίου αἵματος இதூ ஹய்மாடொஸ்- சொந்த இரத்தம்).

இன்னொரு விடயம் சொல்லப்படுகிறது. தலைமைக் குருக்கள் வருடத்தில் பாவப் பரிகார பலி ஒப்புக்கொடுக்க ஆலயத்தின் அதி தூயகத்தினுள் நுழைவார்கள். இது ஒவ்வொரு வருடமும் நடைபெறும். இந்த பரிகாரப் பலியை அவர்கள் தமக்காவும், மக்களுக்காகவும் ஒப்புக்கொடுப்பார்கள்.

இயேசு இதற்கு மாறாக தூயகத்தினுள் ஒரே ஒரு முறைமட்டும்தான் சென்றார். இங்கே தூயகம் வானகத்தைக் குறிக்கிறது (εἰσῆλθεν ἐφάπαξ εἰς τὰ ἅγια எய்சேல்தென் எபாபாஸ் எய்ஸ் டா ஹகியா- ஒரேமுறை தூயகத்தினுள் சென்றார்).

இவர் ஒரே ஒருமுறைதான் சென்றார், இதனால் எக்காலத்திற்கும், மீட்பு கிடைக்கும் படி செய்திருக்கிறார். இதன் மூலமான மனித தலைமைக் குருக்களின் செயற்பாடுகள் நகைப்புக்கு உள்ளாகின்றன.

வ.13: பரிகாரப் பலியின் போது தலைமைக் குரு என்ன செய்வார் என்பது காட்டப்படுகிறது. வெள்ளாட்டுக் கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தம் தெளிக்கப்படுகிறது, அத்தோடு கிடாரியின் சாம்பலும் தீட்டுள்ளவர்கள் மீது தெளிக்கப்படுகிறது. இதனால் இவர்கள் சடங்கு ரீதியாக தூய்மையடைகிறார்கள்.

மிருகங்களின் பலியினால் மக்கள் தூய்மையாகவில்லை என்று குற்றச்சாட்டை ஆசிரியர் முன்வைப்பது போல தெரியவில்லை. இருப்பினும் அவர்களின் தூய்மையடைதலை சடங்கு ரீதியான தூய்மை என வகைப்படுத்துகிறார் ஆசிரியர் (ἁγιάζει πρὸς τὴν τῆς σαρκὸς καθαρότητα, ஹகியாட்செய் புரொஸ் டேன் சர்கொஸ் காதாரொடேடா, உடல் ரீதியான தூய்மைப்படுத்தலை அது செய்யம்). சடங்கு ரீதியான தூய்மையாக்கலுக்கு, உடல் ரீதியான தூய்மையாக்கல் என கிரேக்க விவிலியம் காட்டுகிறது.

வ.14: இது இப்படியிருக்க கிறிஸ்துவின் இரத்தத்தின் மகிமை காட்டப்படுகிறது. கிறிஸ்துவின் இரத்தம் (αἷμα τοῦ Χριστοῦ ஹய்மா டூ கிறிஸ்டூ), வாழும் கடவுளுக்கு வழிபாடு செய்யுமாறு (λατρεύειν θεῷ ζῶντι லட்ரெயுயின் தியூ ட்சோன்டி- வாழுகின்றவர்களின் கடவுளுக்கு வழிபாடு செய்யுமாறு), சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து (ἀπὸ νεκρῶν ἔργων அபொ நெக்ரோன் எர்கோன்- சாவின் வேலைகளிலிருந்து), மனச்சான்றை மிகுதியாய் தூய்மைப் படுத்துகிறது (καθαριεῖ τὴν συνείδησιν காதாரியெய் டேன் சுனெய்தேசின்- மனட்சான்றை தூய்மைப் படுத்தும்).

இதற்கான காரணமாக தூய ஆவியார் சொல்லப்படுகிறார். இந்த தூய ஆவியார் மூலமாகத்தான், இயேசு தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாக கொடுத்திருக்கிறார். அத்தோடு இந்த தூய ஆவியாரை, என்றுமுள்ள தூய ஆவி என்று காட்டுகிறார் (πνεύματος αἰωνίου புனுமாடொஸ் அய்யோனியூ - என்றுமுள்ள தூய ஆவி).

வ.15: இயேசுவிற்கு இன்னொரு புதிய பெயர் கொடுக்கப்படுகிறது. அவர் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராக காட்டப்படுகிறார். இந்த வார்த்தைப் பிரயோகங்கள், எபிரேயர் திருமுகத்தின் ஆழமான இறையியலைக் காட்டுகின்றன (διαθήκης καινῆς μεσίτης ἐστίν, தியாதேகேஸ் காய்னேஸ் மெசிடேஸ் எஸ்டின்- புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராக இருக்கிறார்).

இந்த உடன்படிக்கை ஏன் ஏற்படுத்தப்பட்டது என்பது விளங்கப்படுத்தப்படுகிறது. கடவுளால் அழைக்கப்பட்டவர்கள், அவர் கொடுத்த, நித்திய, உரிமைப்பேற்றை பெறவே இந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்படுகிறது. இந்த இடத்தில் ஏற்கனவே உண்டாக்கப்பட்ட உடன்படிக்கைகள் மறைமுகமாக சாடப்படுகின்றன. எபிரேய ஆசிரியர் பார்த்துப் பார்த்து, பலமான வார்த்தைகளால், இந்த வரிகளை அமைத்துள்ளார் என்பது தெளிவாகிறது.

இந்த புதிய உடன்படிக்கை ஒரு சாவின் மூலமாக உருவாக்கப்பட்டது (θανάτου γενομένου தானாடூ கெனொமெநூ- சாவினால் செய்யப்பட்டது) எனப்படுகிறது. இங்கே இயேசுவின் சாவு, உடன்படிக்கைக்கான வாயிலாக காட்டப்படுகிறது. இயேசுவின் சாவின் மூலமாக செய்யப்பட்ட உடன்படிக்கை, முந்தின உடன்படிக்கையை மீறிச் செய்யப்பட்ட குற்றங்களிலிருந்து மீட்பளிக்கிறது.


நற்செய்தி வாசகம்
மாற்கு 14,12-16.22-26

பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தல்

(மத் 26:17-19 லூக் 22:7-14, 21-23)

12புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், 'நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?' என்று கேட்டார்கள். 13அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்; 'நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். 14அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், ''நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?' என்று போதகர் கேட்கச் சொன்னார்' எனக் கூறுங்கள். 15அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.' 16சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

ஆண்டவரின் திருவிருந்து

(மத் 26:26-30; லூக் 22:15-20; 1கொரி 11:23-25)

22அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, 'இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்' என்றார். 23பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். 24அப்பொழுது அவர் அவர்களிடம், 'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். 25இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்.✠ 26அவர்கள் புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள்.


மாற்கு நற்செய்தியின் பாடுகளின் வரலாற்றின் மகி முக்கியமான இரண்டு நிகழ்வுகள் இன்றைய வாசகத்தை அலங்கரிக்கின்றன. இந்த நிகழ்வுகள் லூக்கா நற்செய்திலும், மத்தேயு நற்செய்தியிலும், சற்று நீளமாகவும், விபரனமாகவும் காட்டப்படுகின்றன. மாற்கு தனக்கே உரிய பாணியில் சுருக்கமாக தந்துள்ளார். மாற்குவின் பகுதிகள்தான் காலத்தால் முந்தியவை அத்தோடு மற்றைய நற்செய்திகளுக்கு மூலமானவை என்ற வாதமும் பலமாக முன்வைக்கப்படுகிறது.

பாஸ்கா விருந்திற்கு ஏற்பாடு செய்தல் வவ. 12-16:

வ.12: புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள், பொதுவாக புளிப்பற்ற அப்ப திருவிழா நிசான் மாதாம் 15ம் நாளைக் குறிக்கும். பாஸ்கா திருவிழாவுடன் தொடங்கி புளிப்பற்ற அப்பத்திருவிழா எட்டு நாட்களுக்கு கொண்டாடப் பட்டிருக்கிறது. இந்த இரண்டு விழாக்களும் மிக நெருக்கமாக கொண்டாடப்பட்டமையினால் சிலவேளைகளில் ஒன்றின் பெயர் மற்றொன்றிக்காக பாவிக்கப்பட்டிருக்கிறது.

பாஸ்கா விழா எப்படிக் கொண்டாடப்பட வேண்டும் என்பதை விடுதலைப் பயண நூல் 12ம் அதிகாரம் மிக தெளிவாகக் காட்டுகிறது. இதன் மிக முக்கியமான அம்சம், ஒரு வயதான நிறைவான ஆட்டுக்குட்டி பலியிடப்படுவதாகும். இயேசுவுடைய காலத்தில் புளிப்பற்ற அப்ப விழாவும், பாஸ்கா விழாவும், நன்கு வளர்ந்திருந்தன. முக்கியமாக வீட்டுத்தலைவர்கள்தான் பாஸ்கா விழாவை கொண்டாடும் இடத்தையும், நபர்களையும் தெரிவு செய்தனர். இதனால்தான் இந்த குழு தங்கள் குழுத் தலைவரை அனுமதி கேட்கிறது.

சீடர்களின் கேள்வி: ποῦ θέλεις ἀπελθόντες ἑτοιμάσωμεν ἵνα φάγῃς τὸ πάσχα - பூ தெலெய்ஸ் அபெல்தொன்டெஸ் ஹெடொய்மாசோமென் ஹினா பாகெய்ஸ் டொ பாஸ்கா? நாங்கள் எங்கே போய் பாஸ்கா உண்ண இடத்தை தயார் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்? இந்த கேள்வி வாயிலாக, சீடர்கள் இயேசுவிற்கு கொடுத்த முக்கியத்துவம் தெரிகிறது.

வ.13: இயேசு சீடர்கள் இருவரை அனுப்பவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். குழுவாழ்விற்கு இயேசு முக்கியத்துவம் கொடுக்கிறார் என இதனை எடுக்கலாம். அல்லது ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும் என விரும்பியிருக்கலாம்.

இந்த இருவரையும் நகருக்குள் செல்லச் சொல்கிறார் ὑπάγετε εἰς τὴν πόλιν, ஹுபாகெடெ எய்ஸ் டேன் பொலின்- நகருக்குள் புறப்பட்டுச் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் கொண்டுவரும் நபருக்கு பின்னால் செல்லச் சொல்கிறார்: ἄνθρωπος κεράμιον ὕδατος βαστάζων· ἀκολουθήσατε αὐτῷ அந்த்ரோபொஸ் கெராமியோன் ஹுதாடொஸ் பஸ்டாஸ்சோன். அகொலூதேசாடெ அவுடோ- தண்ணீர் குடம் கொண்டுவரும் ஒருவரை பின்பற்றி செல்லுங்கள். தொலை தொடர்பு சாதனங்கள் முற்று முழுதாக இல்லாத அக்காலத்தில் எப்படி இயேசுவால் இந்த மனிதரை ஊகிக்க முடிந்தது? இந்த இடத்தில் இயேசு தன்னுடைய இறையியல்பை பயன்படுத்துகிறார் என எடுக்கலாம். அல்லது இந்த மனிதரிடம் அவர் ஏற்கனவே சொல்லி வைத்திருக்க வேண்டும். அதற்கான எந்த வாய்ப்பையும் இந்த பகுதிகள் தருவது போல இல்லை. அல்லது, இந்த மனிதருடைய நாளாந்த பயண முறையை இயேசு அறிந்துவைத்திருக்க வேண்டும்.

இயேசுவுடைய காலத்தில் பெண்கள்தான் மண்குடத்தில் தண்ணீர் சுமந்து வருவார்கள். இங்கே ஆண் ஒருவர் சுமக்கிறார். ஆக இயேசு-மாற்கு அடையாள மொழியை பாவிக்கிறாரோ? என எண்ணத்தோன்றுகிறது. ஆண் ஒருவர் இந்த குடத்தை சுமப்பதனால் அவரைக் கண்டு கொள்வது, சீடர்களுக்கு இலவாக இருக்கும்.

வ.14: தண்ணீர் குடத்தை சுமந்து செல்கிறவர், ஒரு வீட்டை அடைந்ததும். அந்த வீட்டு உரிமையாளரிடம், இயேசு, தான் பாஸ்கா விழா கொண்டாடும் அறை எங்கே என்று கேட்கச் சொல்கிறார். இதிலிருந்து இந்த வீட்டு உரிமையாளர் ஏற்கனவே இயேசுவிற்கு தெரிந்தவராக இருந்திருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இயேசு பிரசித்திபெற்ற மக்கள் போதகராக இருந்த படியால், அவரை சில வசதி படைத்த நல்ல மனிதர்களுக்கு தெரிந்திருந்தது. இந்த உரிமையாளர் அப்படியானவர்களில் ஒருவராக இருந்திருக்கலாம். அல்லது இயேசுவின் தெய்வீக வல்லமை பாவிக்கப்பட்டிருந்திருக்கலாம். இயேசு இந்த சிறிய விடயத்திற்கு தன்னுடைய தெய்வீக வல்லமையை பாவிப்பதாக தெரியவில்லை. இயேசு பல இடங்களில் தன்னுடைய பணிக்கு தேவையானவற்றை மற்றவர்களிடம் வாங்குவதும் இங்கே அவதானிக்கப்பட வேண்டும்.

பாஸ்கா விழா குழுவாக கொண்டாடப்பட வேண்டியது, ஆகவே தன்னுடைய சீடர்களுக்கும் ஆண்டவர், அறை கேட்கிறார். κατάλυμά μου ὅπου τὸ πάσχα μετὰ τῶν μαθητῶν μου φάγω காடாலூமா மூ ஹொபூ டொ பாஸ்கா மெடா டோன் மாதேடோன் மூ பாகோ: என் சீடர்களோடு பாஸ்கா உணவுண்ணும் அறை எங்கே?. வ.15: வீட்டு உரிமையாளர் மேல்மாடியில் அறையொன்றைக் காட்டுவார், அந்த அறை தேவையான வசதிகளோடு இருக்கும் என்பதையும் இயேசு அறிந்திருக்கிறார். அங்கேயே ஏற்பாடு செய்யச் சொல்கிறார். இயேசுவிற்கு இந்த வீட்டைப் பற்றியும் நல்ல அறிவு இருந்திருக்கிறது.

வ.16: சீடர்கள் தங்களுக்கு சொன்ன படியே அனைத்தையும் செய்கிறார்கள். பல வேளைகளில் இயேசுவிடம் கேள்வி கேட்கும் சீடர்கள் இந்த இடத்தில் எந்த கேள்வியையும் கேட்கமாமல் விட்டுவிடுகிறார்க்ள. ஆக இந்த வீட்டைப் பற்றி இவர்களுக்கும் தெரிந்திருக்க வாய்புள்ளது போல தோன்றுகிறது. பாஸ்கா விருந்து தயார் ஆகிறது (ἡτοίμασαν τὸ πάσχα. ஹெடொய்மாசான் டொ பாஸ்கா- பாஸ்கா விருந்தை தயார் செய்தார்கள்).

வவ.17-21: யூதாசின் சூழ்ச்சி வெளியாகிறது. மாலை வேளையில் இவை நடைபெறுகிறது என மாற்கு காட்டுகிறார் (ὀψίας ஒப்சியாஸ்- மாலை). விவிலியத்தில் மாலை இடர் நிறைந்த நேரத்தை குறிக்கிறது. இருப்பினும் பாஸ்கா மாலையில்தான் கொண்டாடப்பட்டது. பந்தியில் உணவருந்தும் போது, இயேசு தன்னை ஒருவன் காட்டிக்கொடுப்பான் என்கிறார். உணவருந்துகின்ற வேளை, உறவின் உச்சமாக பார்க்கப்படுகிறது. இந்த இனிமையான நேரத்தில் நேரத்தில் இயேசு இதனைச் சொல்வது, அவருடைய துன்பத்தைக் காட்டுகிறது.

சீடர்களும் வருத்தம் அடைகிறார்கள் (ἤρξαντο λυπεῖσθαι ஏர்ஸ்சான்டொ லுபெய்ஸ்தாய்- வருத்தமடைய தொடங்கினார்கள்). அவர்கள் 'நானோ நானோ' என கேள்வி கேட்கிறார்கள். கிரேக்க விவிலியம், இதனை μήτι ἐγώ மேடி எகோ (நான் இல்லைதானே) என்று காட்டுகிறது. விவிலியத்தில் மிகவும் கடுமையான வசனத்தில் ஒன்றை ஆண்டவர் இங்கே உரைக்கிறார். இந்த காட்டிக்கொடுக்கும் மனிதன் பிறவாதிருந்திருந்தால் அவனுக்கு அது நலம் என்கிறார். காட்டிக் கொடுத்தலுக்கு கிரேக்கம் (παραδίδωμι பாராதிதோமி) என்ற சொல்லை பயன்படுத்துகிறது. இது கையளித்தல் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும்.

யூதாசுடைய இந்த செயலுக்கு யார் முழுப் பொறுப்பு, யூதாசா அல்லது அதற்குள் கடவுளுக்கும் பொறுப்புள்ளதா? கடவுள் ஏன் யூதாசை படைத்தார்? ஏன் கடவுள் யூதாசை இந்த பாவத்தை செய்ய அனுமதித்தார்? அல்லது யூதாசுதான் இந்த பாவத்தின் முழு பொறுப்பாளியா? அப்படியானால் முழு மனித சுதந்திரத்தில் கடவுள் கைவைப்பதில்லை என தெரிகிறது. இந்த கேள்விகள் விவிலியத்தில் தோன்றுகின்ற ஆழமான கேள்விகள்.

வவ.22-26: ஆண்டவரின் திருவிருந்து:

வ.22: அவர்கள் உண்டுகொண்டிருக்கின்றபோது இயேசு அப்பத்தை எடுக்கிறார். ஆக அவர்கள் வேறு அப்பங்களை உண்டுகொண்டிருந்தார்கள் எனவும் எடுக்கலாம். இந்த இடத்தில் நான்கு முக்கியமான வினைச்சொற்கள் பாவிக்கப்படுகின்றன. அவர் அப்பத்தை எடுத்தார், கடவுளைப் போற்றினார், பிட்டார் அவர்களுக்கு கொடுத்தார். λαβὼν ἄρτον εὐλογήσας ἔκλασεν καὶ ἔδωκεν αὐτοῖς லாபோன் அர்டொன் எவுலொகேசாஸ் அக்லாசென் காய் எதோகென் அவ்டொய்ஸ். யூதர்கள் உணவிற்கு முன்னரும் பின்னரும் கடவுளுக்கு வாழ்த்து சொல்வார்கள். இது பர்கொத் (ברכת) என அழைக்கப்படுகிறது. இதனை நாம் சாப்பாட்டிற்கு முன் பின் செபம் என்கிறோம். யூதர்களுடைய வாழ்த்துக்களும் ஒருவகையான செபம்.

பாஸ்கா விழாவிற்கு பயன்படும் அப்பம் இதிலிருந்து ஆண்டவருடைய திருவுடலாக மாறுகிறது. விவிலியத்தில் மிக முக்கியமான வரியாகவும் இது மாறுகிறது. ஒவ்வொரு திருப்பலியிலும் இந்த வார்த்தைதான் வசீகர வார்த்தையாக சொல்லப்படுகிறது. λάβετε, τοῦτό ἐστιν τὸ σῶμά μου. லாபெடெ, டூடொ எஸ்டின் டொ சோமா மூ- இதை எடுங்கள், இது என் உடலாக இருக்கிறது.

வ.33: அதனைப் போலவே அவர் கிண்ணத்தையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்கு கொடுக்கிறார். அனைவரும் ஒரே கிண்ணத்திலிருந்து பருகியிருக்க வேண்டும். பாஸ்கா விழாவில் வீட்டார் அனைவரும் ஒரே கிண்ணத்திலிருந்து பருகினார்களா என்பதில் பல கேள்விகள் இருக்கின்றன. பல கிண்ணங்கள் பாவிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புக்களும் உண்டு. அப்படியாயின் இயேசுதான் இங்கே ஒரே கிண்ண முறையை அறிமுகப்படுத்துகிறார் என எடுக்கலாம். ἔπιον ἐξ αὐτοῦ πάντες. எபியோன் எக்ஸ் அவ்டூ பான்டெஸ்- அனைவரும் அதிலிருந்து பருகினர்.

வ.24: புதிய உடன்படிக்கையின் வரி சொல்லப்படுகிறது. தமிழ் விவிலியம் இதனை 'இது எனது உடன்படிக்கையின் இரத்தம், பலருக்காக சிந்தப்படும் இரத்தம்;' என்கிறது. இந்த 'பலருக்காக' என்கின்ற சொற்பிரயோகம் சற்று மயக்கமான இறையியலை வெளிப்படுத்தலாம். பலர் என்கின்ற போது, அதில் அனைவரும் உள்ளடங்கவில்லை என்ற பொருள் வருகிறது. ஆக இயேசுவின் உடன்படிக்கை அனைவரையும் உள்ளடக்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.

இந்த வரியை கிரேக்க மொழி τοῦτό ἐστιν τὸ αἷμά μου ⸂τῆς διαθήκης⸃ τὸ ⸄ἐκχυννόμενον ὑπὲρ πολλῶν டூடொ எஸ்டின் டொ அய்மா மூ டேஸ் தியாதேகேஸ் டொ எக்குன்னொமெனொன் ஹுபெர் பொல்லோன் - இது என்னுடைய உடன்படிக்கையின் இரத்தம், பலருக்காக சிந்தப்படுகிறது. கிரேக்க விவிலியம் 'பலருக்காக' என்று சொல்வதை 'அனைவருக்காக' என்றும் மொழிபெயர்க்கலாம் என்ற வாதமும் இருக்கிறது.

வ.25: இயேசு இனி இறையாட்சி வரும் வரை திராட்சை பழ இரசத்தை குடிக்கமாட்டேன் என்கிறார். இதற்கான அர்த்தம் பெரிது. ஒவ்வொருவரும் இதற்கு ஒவ்வொரு அர்த்தத்தைக் கொடுக்கிறார்கள். சாதாரண திராட்சை பழ இரசம், அண்டவரின் உடன்படிக்கை இரத்தத்தைக் குறிக்கவில்லை, இந்த இரசம் அவர் இரத்தம். ஒருமுறை செய்யப்படுவதால் இனி தேவையில்லை என்பதைக் குறிக்க அவர் அப்படிச் சொல்லியிருக்கலாம்.

இறையரசு, பாஸ்கா, உடன்படிக்கையின் இரத்தம் இவற்றிக்கிடையிலான வேறுபாடுகள் காட்டப்படுகின்றன. ἀμὴν λέγω ὑμῖν ஆமேன் லெகோ ஹுமின்- உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

வ.26: அவர்கள் புகழ்பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்கு சென்றார்கள்: ஒலிவ மலைகள் எருசலேமிற்கு கிழக்காக மிக அருகிலேயே இருந்தது. அங்கே பல ஒலிவ மரங்கள் இருந்ததால், அதனை ஒலிவ மலை என அழைத்தார்கள். கெஸ்தமெனி இந்த ஒலிவ மலையில்தான் இருந்திருக்க வேண்டும்.

இயேசு ஆண்டவர் கொடுத்த நற்கருணை என்பது அவரது உடல்,

ஆண்டவரே ஏறபடுத்திய புதிய உடன்படிக்கை,

நாம் உண்ணும் நற்கருணை, வாழ்வின் உணவு,

இது சாகா வரம் தரும் சகா உணவு.

இது நம்மில் வேலை செய்யாவிடில்,

அது பல கேள்விகளை நம் விசுவாசத்திலுல் வாழ்விலும் எழுப்பும்.

அன்பு ஆண்டவரே நற்கருணை என் வாழ்வாக

வரம் தாரும், ஆமென்.