இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






திருப்பாடுகளின் வெள்ளி

எசா 52: 13 - 53: 12
எபிரே 4: 14-16, 5: 7-9
லூக்கா 22:14 - 23:56


பெரிய வெள்ளி என்று தமிழில் அழகாக அழைக்கப்படும் இந்த தூய்மையான வெள்ளி பலவாறு பல மொழிகளில் அழைக்கப்படுகிறது. Good Friday என்று ஆங்கிலத்தில் அழைக்ப்படும் இத்தினம் God Friday என்பதிலிருந்து வந்ததென்கின்றனர் சிலர். இதனை விட இன்னும் சில நாடுகளில் இது தூய வெள்ளி, பெரிய வெள்ளி, கறுப்பு வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. ஜேர்மானியத்தில் இவ்வெள்ளி Karfreitag (வியாகுல வெள்ளி) என்று அழைக்கப்படுகிறது. ஆண்டவரின் தெய்வீகத்தை வெளிப்படுத்தியது உயிர்ப்பு ஞாயிறு என்றால், அவரின் அளவுகடந்த அன்பையும் இந்த மனித குலத்தின் பெறுமதியையும் உறுதிப்படுத்தியது இந்த வெள்ளியாகும், துன்பாமான வெள்ளியாக இருந்தாலும், மனித குலத்தை விடுவித்ததால் இதனை பெரிய-வெள்ளி என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

முதல் வாசகம்
எசாயா: 52,13-53,12
துன்புறும் ஊழியர்

13இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார். 14அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை. 15அவ்வாறே, அவர் பல பிற இனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்; அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர். 1நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது? 2இளந்தளிர் போலும் வறண்ட நில வேர் போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்; நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை; நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை; 3அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை. 4மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். 5அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். 6ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்; ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். 7அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். 8அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்; அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்; என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார். 9வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை; ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்; செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார். 10அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். 11அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார். 12ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்; அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்; ஏனெனில், அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.

நான்காவது ஊழியர் பாடல் என்று அறியப்படும் இந்த இரண்டாவது எசாயா புத்தகப்பாடல், யூத மற்றும் கிறிஸ்தவ வழிபாடுகளில் மிகவும் முக்கியமான பாவனையை கொண்டுள்ளது. யார் இந்த துன்புறும் ஊழியர் என்பதில் கிறிஸ்தவ மற்றும் யூத வல்லுனர்களிடையே பல வேறுபட்ட கருத்தியல்களை காணலாம். யூத அல்லது எபிரேய ஆய்வாளர்க்ள், இந்த துன்புறும் ஊழியரை இறைவாக்கினர் எசாயா, அல்லது தாவீதின் ஒரு வாரிசு, அல்லது புலம் பெயர்ந்த இஸ்ராயேல் இனம் என்று காண்கின்றனர். கிறிஸ்தவ பாரம்பரியம் மாற்றுக் கருத்துக்கள் இன்றி இந்த துன்புறும் ஊழியரை ஆண்டவர் இயேசுவாகவே காண்கின்றனர்.

வவ. 13-15: இந்த வரிகள் கடவுளின் நேரடி சொற்களாக உள்ளன. தாழ்தப்பட்ட கீழ்மையிலிருந்து ஊழியர் எவ்வாறு உயர்த்ப்பட்டு மேன்மையடைவார் என்பதை இவ்வரிகள் விவரிக்கின்றன. பிற இனத்தார், அரசர்கள் என்று கூறப்படுவதால் இந்த ஊழியர் துன்புறும் இஸ்ராயேல் இனம் என்றே எண்ணத்தோன்றுகிறது.

வவ. 1-3: இங்கே பேசுகிறவர் இன்னொருவர். ஊழியர் எவ்வாறு பரிகாசம் செய்யப்பட்டார் என்று இறைவாக்கினர் விவரிக்கின்றார். இங்கே சொல்லப்படுகின்ற விவரணங்கள் அதிகமான அடையாளங்களை கொண்டதாய் அமைந்துள்ளன. இயேசு கைது செய்யப்படுவதற்கு முன், அவருடைய தோற்றமும், மக்கள் அவரிலே வைத்திருந்த மரியாதையும் இந்த இறைவாக்குடன் ஒத்துப்போகாது. கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட இயேசுவின் சாயல் இந்த விவரணங்களுடன் ஒத்து போவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

வவ. 4-6: இந்த வரிகள் நச்சென்று இயேசு ஆண்டவருக்கு பொருந்துகின்றன. இது இந்தப்பாடலின் மையப்பொருள் என்று சொன்னால் மிகையில்லை. அவரும் நாங்களும் என்று ஒப்பிட்டு ஊழியரின் செயல்கள் விவரிக்கப்பட்டு மெச்சப்படுகின்றன. மக்களின் பாவங்களை ஓர் ஆட்டில் மீது ஏற்றி அந்த ஆட்டை சமூகத்திற்கு வெளியே அனுப்பி, அதனை கழுவாயாக்கும் மரபு இருந்தது. அந்த மரபில் இங்கே இந்த ஊழியர் கழுவாயாகிறார்.

வவ. 7-9: இயேசுவை பலவேளைகளில் செம்மறி ஆட்டுக்குட்டிக்கு ஒப்பிடுவது வழக்கம், அதற்கான காரணத்தை விவிலிய வல்லுனர்கள் இந்த இந்த பகுதியிலிருந்து பெற்றிருப்பார்கள் எனலாம். இயல்பிலே மிகவும் சாதுவான செம்மறி, தான் கொலையுற போகிறதையும் அறியாதிருக்கிறது, ஆனால் இந்த ஊழியர் அறிந்திருந்தும், கடவுளுக்கு பணிந்து அமைதியாயிருக்கிறார் என்கிறார் ஆசிரியர். ஒன்பதாவது வசனம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட மிகவும் கடினமானது. இறந்தபோது செல்வந்தராய் இருந்தார் என்பதற்கு பல அர்தங்கள் உள்ளன, செல்வரின் கல்லரையில் அடக்கம்செய்யப்பட்டார் என்றும் சிலர் கருதுகின்றனர்.

வவ. 10-12: முதலில் அவரை கழுவாயாக்குவதும், பின்னர் அவருக்கு நீடூழி வாழ்வு அருளுவதும் கடவுளின் திருவுளம் என்கிறார் இரண்டாம் எசாயா. பாவங்களை சுமத்தலும், பலருக்காக பரிந்து பேசுதலும் என்ற இந்த வாசகத்தின் செய்தி, இஸ்ராயேல் இனம் என்பதனையும் தாண்டி, யாரே ஒரு நபரைக் குறிப்பது போலவே காணப்படுகிறது. யார் இந்த துன்புறும் ஊழியர், எசாயாவா, சைரஸ் மன்னனா, இஸ்ராயேலா, தாவிதின் ஒரு வாரிசா, அல்லது இயேசு ஆண்டவரா? விசுவாச அல்லது திருச்சபையின் வரலாற்று கண்ணோட்டத்தில் இவை இயேசு ஆண்டவரைத் தவிர வேறு எவருக்கும் கச்சிதமாக பொருந்த வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.



இரண்டாம் வாசகம்
எபிரேயர் 4,14-16: 5,7-9
இயேசு கிறிஸ்துவின் குருத்துவத்தின் மேன்மை

14எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! 15ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல் மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். 16எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

7அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார். 8அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். 9அவர் நிறைவுள்ளவராகி, 'தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார். 10'மெல்கிசதேக்கின் முறைப்படி வந்த தலைமைக் குரு' என்று கடவுள் அவருக்குப் பெயர் சூட்டினார்.

இந்த புத்தகம் திருமுகமா அல்லது வரிவுரையா என்பதில் இன்னமும் கருத்தொற்றுமையில்லை. கிறிஸ்தியலை மையமாக கொண்டு அழகான இறையியல் வாதங்களை அக்கால தேவைகளுக்கு ஏற்றபடி கொடுத்த இந்த புத்தகம், இன்றும் எமக்கும் பல சிந்தனைகளை தந்துகொண்டே இருக்கிறது. எபிரேயர் புத்தகம் நான்காம் அதிகாரம், இயேசுவை இரக்கம் நிறைந்த நம்பத்தகுந்த தலைமைக் குரு என்று வர்ணிக்கிறது. இன்றைய வாசகம் இரண்டு கருத்துக்களை முக்கியமாக முன்வைக்கிறது. அ. இயேசு மாபெரும் தலைமைக்குரு: ஆ. அவர் துன்புற்ற தலைமைக் குரு.

வவ. 14-16: எந்த ஒரு தலைமைக் குருவும் தன்னுடைய மனிதத்தன்மை மற்றும் சுய பாவ நிலை என்று பலவீனங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளார், எனவே வானங்களைக் கடக்கட இயலாதவர். ஆனால் இயேசுவிற்கு இந்த சிக்கல்கள் இல்லையென்பதால், அவர்தான் உன்மையான தலைமைக் குருவாகிறார். இயேசுவினுடைய இரக்க குணத்தை விவரிக்க συμπαθέω சும்பதேயோ என்ற கிரேக்க மூலச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது ஒருவர் தன்னுடையவர்களுக்காக சேர்ந்து துன்பப்படுதலைக் குறிக்கும். ஆக இயேசுவின் இரக்கம், அனுதாபம் அல்ல, அதையும் தாண்டிய அன்புகடந்த உடன்-இருப்பு என்கிறார் ஆசிரியர். வழமையாக அரியணைகள் ஆட்சியாளர்களின் அதிகாரங்களையும், செல்வங்களையும் குறிக்கும், இங்கே இயேசுவின் அரியணை இரக்கத்தின் அரியனை என் விவரிக்கப்படுகிறது.

வ. 7-: தலைமைக் குருக்களின் வேண்டுதல்கள் உன்னத தலைமைக் குருவான இயேசுவிற்கு முன்னால் இரண்டாம் தரமானவை என்கிறார், ஆசிரியர். εὐλάβεια எவுலாபெய்யா என்பது இறைபற்று கலந்த அச்சம் என்று அழகாக மொழிபெயர்கப்பட்டுள்ளது. இவர்களை பேறுபெற்றோர் என்று முதல் ஏற்றபாடும் குறிப்பிடுகிறது. இறையச்சமே மெய்யறிவின் தொடக்கம் எனவும் சொல்லப்படுகிறது. இதுவே கடவுள் இயேசுவிற்கு செவிசாய்க்க காரணம் என்கிறார், ஆசிரியர்.

வவ. 8-9: துன்பங்கள் வழியே கீழ்படிதல் என்று, மூல மொழியில் சிலேடை பாவிக்கப்பட்டுள்ளது. துன்பப்பட்டு கற்றுக்கொண்டார், அல்லது கீழ்படிதலை துன்புற்று கற்றுக்கொண்டார் என்றும் மொழிபெயர்கலாம். கீழ்படிதல் ஒரு விழுமியம் என்று இவ்வாறு காண்பிக்கப்படுகிறது. இதனால் இப்போது தனக்கு கீழ்படுவோர்க்கு அதே ஆசீரை வழங்குவார் என்று விவாதிக்கிறார். மெல்கிசதேக் என்னும் குரு, சாலமின் அரசர் என்று தொடக்கநூலில் வருகிறார். இவரின் பின்புலங்களைப் பற்றிய அதிகமான புரிதல்கள் விவிலிய பதிவுகளில் இல்லை. (காண் தொ.நூ 14: தி.பா 110,4). தொடக்கமும் முடிவும் இல்லாமையாலும், ஆபிரகாமே இவருக்கு காணிக்கை செலுத்தியதாலும், முதல் ஏற்பாட்டில் இவர்தான் கடவுளின் முதல் குரு என அறியப்படுகிறார். நீதியின் அரசர் என்றும் இவருடைய பெயருக்கு பொருளுண்டு. ஆக முதல் ஏற்பாட்டு குருக்களோ அரசர்களோ அல்ல, மாறாக இயேசுவே இவர் வழி வந்த உன்மையான தலைமைக்குரு என்பது ஆசிரியரின் வாதம்.


நற்செய்தி வாசகம்
நற்செய்தி
யோவான் 18,1 - 19,42



யோவான் எழுதிய படி ஆண்டவரின் பாடுகளை தியானிப்பதற்கு முன், யோவானை பற்றிய சிறு விளக்கம் நல்லதென நனைக்கிறேன்.

அ. திருச்சபை காலம் காலமாக நான்காம் நற்செய்தியின் ஆசிரியர், ஆண்டவர் இதயத்திற்கு நெருக்கமான திருத்தூதர் யோவான் என நம்புகிறாள்.

ஆ. கலிலேயரான இந்த யோவான், ஆழமான அரேமேயிக்க மற்றும் கிரேக்க மொழி புலமைத்துவத்தை எப்படி பெற்றிருப்பார் என்பது, பலரின் வாதமும், கேள்வியுமாகும்.

இ. அதிகாமான நிகழ்சி பற்றிய தரவுகள், யாரோ இயேசுவிற்கு அருகில் இருந்து அவதானித்தவர் போல, பல நிகழ்வுகள் பதியப்பட்டுள்ளன.

ஈ. கொய்னே (சாதாரண) கிரேக்க மெய்யியல் தழுவல்களையும், இராபினிக்க யூத கற்கை நடைமுறைகளையும் கொண்டமைந்துள்ளதும் இந்நற்செய்தியின் சிறப்பம்சமாகும்.

உ. இயேசுவை மெசியாவாகவோ, அல்லது தாவிதின் வழிமரபாகவோ, அல்லது உன்னதமான மனிதராகவோ காட்டுவதை விடுத்து, யோவான் நற்செய்தி இயேசுவை அதிவல்லமை வாய்ந்த கடவுள், அல்லது கடவுளின் வார்த்தையாகக் காட்டுகிறது.

ஊ. யோவான் நற்செய்தியில், இயேசு தான் செய்யும் எல்லா காரியங்களையும், முழு அறிவுடனும், விருப்பத்துடனுமே செய்வார். இயேசுவின் திட்டபடியே அனைத்தும் நடக்கின்றன என்பதையும் யோவான் அழகாக காட்டுவார். சுருக்கக் கூறின், முதல் ஏற்பாட்டில் தோன்றிய அதோனாய் எலோகிம் இறைவன் தான் இந்த இயேசு ஆண்டவர் என்று யோவான் வார்த்தைக்கு வார்த்தை நிறுவிப்பார்.

இதனையே இந்த பாடுகளின் வரலாற்றிலும் யோவான் காட்சிபடுத்துகிறார். இந்த பாடுகளின் வரலாற்றை இவ்வாறு பிரிப்போம்:

அ. 18,1-11: ஆண்டவர் முன்வந்து கைதாகிறார்
ஆ. 18,12-27: அன்னாவினதும் கயபாவினதும் முன்னால் ஆண்டவர்
இ. 18,28-19,16: பிலாத்துவினால் தீர்ப்பிடப்படுகிறார்
ஈ. 19,16-22: சிலுவையில் அறையப்படுகிறார்
உ. 19,23-24: ஆடைகள் களையப்படுதல்
ஊ. 19,25-27: தாயும் அன்புச் சீடரும்
எ. 19,28-30: மரணம்
ஏ. 19,31-37: விலா குத்தப்படுகிறது.
ஐ. 19,38-42: நல்லடக்கம்

அ.18,1-11: ஆண்டவர் முன்வந்து கைதாகிறார்
(கடவுளை யாரும் கைது செய்ய முடியாது: ஒளியை சிறைபடுத்த முயலும் தீப்பந்தங்கள்!!!) யோவான் இந்த இடத்தை பெயர் சொல்லாவிட்டாலும், புவியியல் அடையாளங்களை வைத்தும் சமநோக்கு நற்செய்தியாளர்களின் தரவுகளை வைத்தும் இதனை கெத்சமெனி எனக் கணிக்கலாம். இயேசு அடிக்கடி எருசலேமிற்கு சென்றுவந்தார் என்பது யோவான் நற்செய்தியின் ஒரு படிப்பினை இதனையும் இஙகு காணலாம். யூதாசு நெருப்புக்களோடும் தீப்பந்தங்களோடும் வந்தது, இவை நடந்தது இரவில் என்ற காட்டுகிறது. யோவான் நற்செய்தியில் இருள் தீமையின் ஆதிக்கத்தை காட்டுகிறது. சமநோக்கு நற்செய்திகளைப் போலல்லாது யோவான் இயேசுவின் மனிதத்தை அதிகமாக காட்ட மாட்டார். இங்கே இயேசுவே முன்வந்து யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்கிறார். இது அவருடைய அதிகாரத்தை காட்டுகிறது. நான் தான் (ἐγώ εἰμι எகோ எய்மி) என்ற இயேசு கூறும் வார்த்தைகள் முதல் ஏற்பாட்டில் கடவுள் தன்னை வெளிப்படுத்தும் போது கூறுகின்ற வார்த்தைகள். கடவுள் தன்னை வெளிப்படுத்தும் போது தீய சக்திகள் தரையில் விழுவது போல படைவீரர்களும், தலைமைக் குருக்கள் மற்றும் பரிசேயரின் காவலர்களும் தரையில் விழுகின்றனர். இயேசு தன்னோடு இருந்தவர்களையும் தனது அதிகாரத்தால் பாதுகாக்கிறார். கடவுள் தன் பணியாளர் மீது துன்பங்களை திணிக்கிறார் என்பது சரியான வாதமாகாது. யோவான் நற்செய்திப்படி படைவீரரின் காதை துண்டித்தவர் பேதுரு. இயேசு அவ்வீரரை குணப்படுத்தியன் மூலம் வன்முறைக்கு முடிவுகட்டுகிறார்.

ஆ. 18,12-27: அன்னாவினதும் கயபாவினதும் முன்னால் ஆண்டவர் (கடவுள், குருக்களால் சோதிக்கப்படுகிறார்!!!)
படைபிரிவினர், ஆயிரத்தலைவர், யூத காவலர், என அதிகமானவர்கள் ஆண்டவரை கைது செய்ய ஒன்றாக சேர்ந்துள்ளனர். இது ஒரு போர்க் காட்சி போல இருக்கிறது. நன்பர்களைவிட பகைவர்கள் சுயநலத்திற்காக ஒனறாக சேர்வது இலகுவான காரியம் போல. இது ஈழ தமிழருக்கு நன்கு தெரிந்த அனுபவம். அன்னா எற்கனவே இயேசுவைப்பற்றி வாக்குரைத்திருந்தவர் (11,50). இவர் முன்னால் தலைமைக் குரு, கி.பி 7-14 ஆண்டுகளில் சேவையிலிருந்தார். இவரின் ஐந்து புதல்வர்களும் இறுதியாக மருமகனான கயபா தற்போது சேவையிலிருந்தார்.

!. பேதுரு மறுதலித்தல்: முதலாவது தடைவையாக பேதுரு மறுதலிக்கிறார். பேதுருவுடன் சென்ற இந்த மற்ற சீடர் யார் என்று தெளிவாக சொல்லப்படவில்லை. இந்நற்செய்தியின் ஆசிரியராய் இருக்கலாம். இந்த சீடர் பேதுருவைவிட தலைவர்களிடம் பரீட்சாத்தியமாய் இருக்கிறார். முதலாவது தடவையாக ஒரு பெண்ணிடம் தன் ஆண்டவரை மறுதலிக்கிறார் பேதுரு. மறுதலித்தாலும் ஆண்டவரை விட்டு அகலாமல் அந்த வளாகத்திலுள்ளே சுற்றி வரும் பேதுருவை, ஒரு பலவீனன் ஆனாலும் புனிதன் என காட்டுகிறார் யோவான்.

!. அன்னா, யோவானில் இயேசுவை விசாரிக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும். இங்கே இயேசுவே அதிகம் பேசுகிறார். இயேசுவை கன்னத்தில் அறைந்தவர்கும் இயேசு பதிலளிக்கிறார். இயேசு அனைவருக்கும் சவால் விடுகிறார்.

!. பேதுரு இரண்டாம் முறையாகவும் மூன்றாம் முறையாகவும் மறுதலிக்கிறார், பின்னர் சேவல் கூவுகிறது. இந்த நிகழ்வுகள் சமநோக்கு நற்செய்திகளைப்போல் நாள் சாமத்தில் நடந்ததைப்போல் உள்ளன.

இ. 18,28-19,16: பிலாத்துவினால் தீர்ப்பிடப்படுகிறார் (கடவுளை வைத்து புறவினத்தவரிடம் அரசியல் லாபம்)

!. பிலாத்து, வரலாற்றில் நன்கு அறியப்பட்ட உரோமைய பதிலாளி. யோவான் பிலாத்துவை காட்டும் விதமும் தனித்துவமானது. பிலாத்துவை தந்திரக்காரனாகவும், உண்மையென்றால் என்வென்று அறியாதவர்களில் ஒருவனாகவும் காட்டுகிறார்.

!. பத்து வருடங்களாக உரேமைய, யூதேய-கருவூல முகவராயிருந்த இவன், பல இரத்த களரிக்கு காரணமாக இருந்தான். ஆலயத்திற்குள் உரோமைய இராணுவ உருவங்களை கொணர்ந்தமை, ஆலய பணத்தை சுரண்டியமை போன்ற பல கேவலமான செயல்களை யூதருக்கெதிராக செய்தான். யூதர்கள் எவ்வளவு கடினவாதிகளாக தங்களை உரோமையருக்கு காட்டினரோ அதனையே இவன் யூதர்களுக்கு பதிலுக்கு பதில் செய்தான். சமாரியருக்கு இவன் செய்த கொடுமையின் காரணமாக திபேரியஸ் சீசர் உரோமைக்கு இவனை திரும்பும்படி அழைத்தார். இறுதியாக இவன் தற்கொலை செய்து கொண்டான் என்று எவுசோபியசு கூறுகிறார். உரோமைய ஆட்சியின் பல ஆளுமையற்ற தலைவர்கள் தற்கொலை செய்து கொண்டே மாண்டனர். மற்ற நாடுகளை சுரண்டியவர், தங்கள் இதயங்களை கையாளாமல் மாண்டுபோகிறார்கள், இதற்கு இவன் நல்ல உதாரணம். இவன் இயேசுவை விசாரித்தான் என்பதைவிட, இயேசு முன்னால் இவன் தோன்றிய காரணத்தால் மட்டுமே வரலாற்றில் இன்றும் அறியப்படுகிறான், அசிங்கமாக.

!. யோவான், பிலாத்து இயேசுவை விசாரித்த விதத்தை, இரட்டை அரங்கு விதத்தில் விவரிக்கிறார். இயேசு மாளிகைக்குள் இருக்கிறார், யூத தலைவர்கள் மாளிகைக்கு வெளியில் இருக்கின்றனர். பாஸ்கா காலமாகியதால் அவர்கள் உரோமைய இராணுவ மாளிகைக்குள் நுழையவில்லையாம். ஆனால் பாஸ்காவின் கடவுளும், பாஸ்கா செம்மறியும் உள்ளே இருக்கிறார். பிலாத்துவினதும், தலைவர்களினதும் கேள்விகளும் விடைகளும், இவர்களுக்கிடையில் எரிந்துகொண்டிருந்த பகைமையை நேரடியாகவே காட்டுகிறது.

!. பிலாத்து இயேசுவை, நீ யூதரின் அரசனா என்று ஆச்சரியமில்லாமலே கேட்கிறான். உரோமைய பேரரசில் கபபம்கட்டும் அரசர்களாக இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்தான். பிலாத்துவின் கேள்விக்கு ஆண்டவரின் பதில் இன்னொரு கேள்வி. யார் யாரிடம் கேள்வி கேட்பது. இயேசு இரண்டு விடயங்களை பிலாத்துவிற்கு சொல்வது போல அனைத்து போலி தலைவாக்களுக்கும் சொல்கிறார். கடவுளுடைய அரசும் ஆட்சியும், உண்மையும் இவ்வுலக போலித் தலைவர்களுக்கும் அவர்களின் பங்காளிகளுக்கும் தெரியவே தெரியாது என்பது அது.

!. உண்மை, ἀλήθεια அலேதெய்யா, என்பது ஒரு முக்கியமான கிரேக்க மெய்யறிவு வாதம், இது பிலாத்துவிற்கு மட்டுமல்ல, அதிமானவர்களுக்கு புரியாது.

!. பாஸ்கா விழாவிற்கு ஒரு கைதியை விடுதலை செய்வது, நற்செய்திகளில் மட்டுமே காணப்படுகிறது, அதுவும் கொலைகாரர்களை விடுதலை செய்வதும் புதுமையாய் உள்ளது. உரோமையர்களும் கொலைகாரர்களே.

!. படைவீரர்கள் செய்யும் பரிகாசங்கள், போரிலே தோற்றும் சரணடையாத அரசனுக்கு செய்யும் அவமரியாதையை ஒத்திருக்கிறது. முள் முடி, செம்போர்வைகள் மறைமுகமாக அரச அணிகலன்களையே காட்டுகின்றன. இதோ மனிதன் (Ecce Homo) என்று பிலாத்து அன்று சொன்னது, இன்று பல முக்கிய வாக்காகிறது. நேரடியாக மொழிபெயர்த்தால் இதோ அப்பாவி என்றும் பொருள் படும். (காண் செக்கரியா 6,12)

!. பிலாத்து தன்னுடைய அதிகாரத்தைப் பற்றி சொல்ல, இயேசு தன்மேல் எவருக்கும் அதிகாரம் இல்லை என்கிறார். அதேவேளை காட்டிக்கொடுபபவர்கள் பாவப்பட்டவர்கள் என்கிறார்.

!. கல்தளம், கபதா என்பது விசாரனை செய்யும் இருக்கை, இதன் எச்சங்களை வடக்கு எருசலேமில் இன்னும் காணலாம். இயேசு தன்னை கடவுள் என்று சொல்லி தேவ தூசனம் சொல்கிறார் என்று பொய் சொல்லியவர்கள், உரோமைய சீசரை தங்கள் கடவுளுக்கு நிகராக வைத்து அரசனாக்கி யூத தலைவர்கள் தேவ தூசனம் சொல்கிறார்கள் என்று அன்புச் சீடர் கோபத்தோடு சரியாகச் சொல்கிறார். இத்தோடு இயேசுவின் கொலைப் பொறுப்பை யூதத் தலைவர்களே ஏற்றுக்கொள்கின்றனர்.

ஈ. 19,16-22: சிலுவையில் அறையப்படுகிறார் (சிலுவை சுமக்கும் கடவுள்)
யோவான் நற்செய்தியில் இயெசு தன்சிலுவையை தானே சுமப்பார். கொல்கொதா என்கிற எபிரேய சொல் லத்தின் மொழியில் கல்வாரியா என்று பொருள்படும். சிலுவையின் உச்சியில் வைக்கப்பட்ட பெயர் பலகை நான்கு நற்செய்திகளிலும் நான்கு விதமாக உள்ளது. மூன்று மொழியில் எழுதப்பட்டது, இயேசுவின் முழு உலக அரசாட்சியைக் காட்டுகிறது. எழுதியது எழுதியதே என்பது, கலகக் காரர்களின் கூக்குரல் எப்போதும் எடுபடாது என்பதைக் குறிக்கலாம். பிலாத்து இயேசுவை வைத்து யூத தலைவர்களை ஏளனப்படுத்துகிறான்.

உ. 19,23-24: ஆடைகள் களையப்படுதல் (தைக்கப்படாத தையல்)
சிலுவையில் அறையப்படும் கைதிகளின் உடைமைகளை படைவீரர்கள், தங்களுடையாக்;கிக் கொண்டது வழமை. (போரின் போதும், இடப்பெயர்வின் போதும், எமது உடமைகளை சாதாரன சிப்பாய்களே தங்களுடையதாக்கினது நினைவுக்கு வரும். இன்னும் போரில் கொள்ளையடித்து அதற்கு அர்தமும் கொடுக்கும் அழிவின் கலாச்சாரம் நின்றபாடில்லை!!! கொள்ளைக்காரர்கள்.) இங்கே இயேசுவின் தையலே இல்லாமல் இருந்த ஆடை, அவரின் தலைமை குருத்துவத்தை அடையாளப்படுத்துகிறது என்கின்றனர் சிலர். ஆனால் யோவான் இயேசுவை தலைமைக் குரு என்பதைவிட அரசராகவே காட்ட முயற்சிக்கிறார்.

ஊ. 19,25-27: தாயும் அன்புச் சீடரும் (திருச்சபையும் தாயும்)
யோவான் நற்செய்திப்படி இதனை சாதாரன நிகழ்வாக எடுக்க முடியாது. பெயரிடப்படாத மரியாவும், யோவானும் அவர்களின் அடையாள உருவகங்களை வெளிப்படுத்துகின்றனர். இந்த நிகழ்வு பல படிப்பினைகளை தாங்கி வருகிறது.

!. இந்த பெண் திருச்சபையையும், அன்புச் சீடர் கீழ்படிதலையையும் குறிக்கலாம், அன்னை மரியாளையும் திருச்சபையையும் குறிக்கலாம்.
!. தொடக்க நூலில் வந்த முதல் பெண்ணும், மரக்கனியையும் போன்று, இங்கே புதிய பெண்ணும், புதிய கனியும் என்றும் நோக்கலாம்.
!. ஏன் யோவான் மட்டும் மரியாவை சிலுவையடியில் நிறுத்துகிறார்:
- திருச்சபையின் பெண் தன்மையை காட்ட இருக்கலாம்.
- மீட்பின் வரலாற்றில் பெண்மையின் தன்மையை காட்டவும் இருக்கலாம்
- மரியாவின் நல் உதாரணத்தை காட்டவும் எணலாம்.
- இனி மரியா இயேசுவிற்கல்ல மாறாக நமக்கும் தாய் என காட்டவும் எனலாம்.

எ. 19,28-30: மரணம் (கடவுளின் தூக்கம்)
யோவான் நற்செய்தியில் இயேசு ஆண்டவராக தனது மரண நேரத்தை தானே முடிவு செய்கிறார். அனைத்தும் நிறைவேறிவிட்டதென்பது என்பதையும் நன்கு அறிந்திருக்கிறார். தாகமாய் இருக்கிறது என்பது திருப்பாடல் 69,21ஐ அல்லது 22,15ஐ நினைவூட்டலாம். ஈசோப்புத் தண்டில் திராட்சை இரசம், எகிப்தில் வாயிற் கதவுகளில் பூசப்பட்ட இரத்தத்தை நினைவூட்டலாம், இப்படியாக இவரது மரணம் பலருக்கு உயிர்ப்பு கொடுக்க் இவ்வாறு நிகழ்ந்தது என்றும் கூறலாம். இறுதியாக இயேசு வலியால் மரணமடையவில்லை மாறாக தனது ஆவியை தானே ஒப்படைக்கிறார், παραδίδωμι பராதிதோமி- கையளி என்று பொருள். இவ்வாறு அவர் முடிவையும் இங்கே அவரே முடிவுசெய்கிறார்.

ஏ. 19,31-37: விலா குத்தப்படுகிறது. (எலும்பு முறிபடாத பாஸ்கா செம்மறி)
யோவான் நற்செய்திப்படி இயேசு சிலுவையில் உயிர்விட்டது, வெள்ளி மதியம் எனவே, இது பாஸ்காவிற்கு முதல் நாள். எனவே பலருடைய மரணம் விரைவுபடுத்தப்படுகிறது. எனெனில் சனிக்கழமையில் (பாஸ்காவில்) உடல்கள் தொங்கப்படக்கூடாதாம். (உயிரைவிட சடங்குகள் முக்கியமாகிறது! ஆண்டவரை கொலை செய்து அவரின் பாஸ்கா கொண்டாடப்படுகிறது! ஆண்டவரை வெளியில் விட்டுவிட்டு ஞாயிறு திருப்பலி ஒப்புக்கொடுப்பது போல). யோவான் இந்த பாடுகளின் வரலாற்றில் பல இறைவாக்குகள் நிறைவேறுவதை ஆரம்பம் முதல் குறிப்பிடுகிறார். விலாவில் இருந்துவந்த இரத்தத்தையும் நீரையையும், திருச்சபை தந்தையர்கள் நற்கருணைக்கும், திருமுழுக்கிற்கும் ஒப்பிடுகின்றனர். இயேசு புதிய ஆதாமாகவும், சிலுவை புதிய மரமாகவும், திருச்சபைக்கு அருட்சாதனங்கள் இங்கே வழங்கப்படுகிறது. யோவான் இடையில் ஆண்டவரின் விலாவை குத்திய உரோமையரின் சாட்சியை பதிவு செய்கிறார் போல தோன்றுகிறது. ஆண்டவரின் எலும்புகள் முறிபடாதது, பாஸ்கா செம்மறியின் சட்டங்களை நினைவூட்டுகிறது (காண் வி.ப 12,46). குத்தியவரை ஊடுருவி பார்ப்பதன் மூலம் இயேசு நேர்மையாளர் என்று மீண்டும் நினைவூட்டப்படுகிறது (காண் செக் 12,10).

ஐ. 19,38-42: நல்லடக்கம் (உயிரின் உறக்கம்)
நான்கு நற்செய்தியாளர்களும் அரிமத்தியா யோசேப்பு இயேசுவின் நல்லடக்கத்திற்கு உதவியதை பதிவு செய்திருக்கின்றனர். மத்தேயு நற்செய்திப்படி இந்த கல்லறைத் தோட்டம் அரிமத்தியா யோசேப்புடையது. நிக்கோதேம் இங்கே வந்து அரிமத்தியா யோசேப்புடன் ஆண்டவரை அடக்கம் செய்தது யோவான் நற்செய்தியில் மட்டுமே உள்ளது. யோவான் இவர்கள் இருவரையும் நல்லவர்களாக இருந்தாலும், பயந்தவர்களாகவும், இருட்டில் பணிசெய்கிறவர்களாகவும் காட்டுகிறார். இயேசுவின் சீடர்கள் இன்னும் வெளிப்படையாக பகலில் பணிசெய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று என்கிறார் போல. இயேசுவின் அடக்கத்திற்கு பயன்படுகின்ற நறுமண பொருட்கள் முப்பது கிலோக்களாக இருப்பது, ஆச்சரியமளிக்கிறது. இவ்வாறு யோவான் இறுதியாக ஓரு அரச நல்லடக்கத்தை காண்பிக்கிறார். புதிய கல்லரையும் இதனைத்தான் குறிக்கிறது. இயேசு இவ்வாறு கன்னியின் வயிற்றில் உருவானவர், புதிய கல்லறையில் விதைக்கப்படுகிறார், உயிர்ப்பதற்காக. கடவுளுக்கே அடக்கச் சடங்கு!!!

கல்லறையில் உயிர்கள் தூங்குகின்றன என்பது கிரேக்க சிந்தனை, அங்கே உடல்கள் கடவுளின் வருகைக்காக காத்திருக்கின்றன என்பது கிறிஸ்தவ சிந்தனை, துயிலும் இல்லத்தில் உடலும் உயிரும் விதைக்கப்படுகின்றன என்பது ஈழ தமிழ் சிந்தனைகளின் ஒன்று. உயிரை அழிக்கலாம், உடலை சிதைக்கலாம், உயிர்ப்பையும் உண்மையையும் எவராலும் ஒன்றும் செய்ய முடியாது.

ஆண்டவரே, இயேசுவே, பாடுகளைத் தாங்கி, மரணத்தை தழுவி உயிர்ப்பைக் காட்டிய நீர், தொடர்;ந்து துன்புறுத்தப்பட்டுக்கொண்டும், அப்பாவிகளைக் காக்க விரைந்து வாரும். துன்பமின்றி தூய்மையில்லை என்பதை கற்றுத்தாரும். ஆமென்.