இத் திருப்பலி வாசக விளக்கவுரையை வழங்குபவர்

அருட்.பணி. மி.ஜெகன்குமார் அமதி



ஞாயிறு மறையுரைகள்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, உங்கள் ஞாயிறு மறையுரைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். உங்கள் மறையுரைகள் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் சென்றடையும்.



இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின் போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு.
(இணைச்சட்டம் 6:7)




திருப்பலி வாசக விளக்கவுரை






பாஸ்காக் காலம் இரண்டாம் ஞாயிறு

முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள்: 4,32-35
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 118
இரண்டாம் வாசகம்: 1யோவான் 5,1-6
நற்செய்தி: யோவான் 20,19-31


முதல் வாசகம்
திருத்தூதர் பணிகள்: 4,32-35

32நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. 33திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர். 34தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலன்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டு வந்து 35திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.

இந்த பகுதி நம்பிக்கைகொண்டவர்கள், அதாவது ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் வாழ்க்கை முறையை விவரிப்பதாக உள்ளது. ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் நம்பிக்கைகொண்டோர் என்ற பதத்தில் அழைக்கப்படுகின்றனர் (τῶν πιστευσάντων டோன் பிஸ்டெயுசான் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்). சிலர் இந்த சொல்லை ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் பெயர் என்று அடையாளப்படுத்துகின்றனர். கிறிஸ்தவர்கள் என்ற பெயர் வழக்கிற்கு வருமுன்னர் இந்தப் பெயர் இவர்களின் பெயராக இருந்திருக்கலாம். இந்த குழுவைப் பற்றி பிற்காலத்தில் பல கேள்விகள் இருந்திருந்திருக்கலாம், அல்லது இந்த குழுவை பாராட்ட வேண்டிய தேவை திருத்தூதர் ஆசிரியருக்கு இருந்திருக்கலாம். வ.32: நம்பிக்கைகொண்டோரின் வாழ்க்கை முறையை ஒரே வரியில் அழகாக காட்டுகிறார், மாண்பு மிகு வைத்தியர் லூக்கா (லூக்கா இந்த புத்தகத்தின் ஆசிரியர் என எடுத்தால்). நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்திருக்கின்றனர் (καρδία καὶ ψυχὴ μία கார்தியா காய் ப்ஸ்சியுகே மியா மியா). இது அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றாக இருந்ததைக் காட்டுகிறது. அனைத்து உடைமைகளும் பொதுவாய் இருந்ததாகவும், எவரும் தம்முடையது என்று எதையும் கருதவில்லை என்ற அழகான பொதுவுடைமை வாதத்தை முன்வைக்கிறார், லூக்கா (ἅπαντα κοινά ஹபான்டா கொய்னா). உடைமைகளை பொதுவாக கருதுகின்ற பழக்கம் யூதர்கள் மத்தியில் இருந்திருக்கிறது. கும்ரான் குழுக்களும் மற்றும் எசேனியர் போன்றோர் இப்படியான வாழ்க்கை முறையை வாழந்திருக்கின்றனர். ஆரம்ப கால திருச்சபையில் வழக்கிலிருந்த இந்த முறை வெகு சீக்கிரமாக மறைந்து போனது, அதனை உற்சாக படுத்த ஆசிரியர் இந்த வாழ்க்கை முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்கின்றனர் ஆய்வாளர்கள். அனைத்தையும் பொதுவாக வைக்கும் வாழ்க்கை முறை ஒரு சட்டமாக ஆரம்ப கால திருச்சபையில் இருந்ததா என்பது ஒரு கேள்வியாகவே இருக்கிறது. 18ம் நூற்றான்டின் இறுதிக்காலத்தில் வளர்ந்த பொதுவுடைமை கொள்கைக்கு இந்த விவிலிய பகுதி ஒரு உந்துதலாக இருந்திருக்கிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வ.33: கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை அறிவிப்பது, திருத்தூதர்கள் அனைவரதும் முக்கிய கடமையாக இருந்தது. இதற்கு அனைத்து திருத்தூதர்களும் பிரமாணிக்கமாக இருந்தார்கள் என்பதை இந்த வரி காட்டுகிறது (τῆς ἀναστάσεως τοῦ κυρίου Ἰησοῦ டேஸ் அனாஸ்டாசெஓஸ் டூ கூரியூ ஈயேசூ- கிறிஸ்துவின் உயிர்ப்பு). அதே வேளை அவர்கள் அனைவரும் மக்கள் அனைவரினதும் நல்லெண்ணத்தை பெற்றிருந்தார்கள் (χάρις τε μεγάλη காரிஸ் டெ மெகாலே- பெரும் நல்லெண்ணம்). கிறிஸ்தவர்கள் மற்றைய மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை பெறவில்லை என்பது, ஆரம்ப கால குற்றச்சாட்டாக இருந்தது. இதனை ஆசிரியர் மாற்றுவதாக இன்னொரு கருத்தை முன்வைக்கிறார். வ.34: தேவையில் உழல்வோர் யாரும் இருக்கவில்லை என்பது மிக ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வரி ஆரம்ப கால திருச்சபையின் ஆன்மீக ஆழத்தைக் காட்டுகிறது. பொதுவுடமைக்காக, விசுவாசிகள், தங்கள் சொத்தான வீடுகள் மற்றும் நிலபுலன்களை விற்றிருக்கின்றனர் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. உரோமையர் காலத்தில் இந்த சொத்துக்கள் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக இருந்தது. இதனை விற்கும் அளவிற்கு அவர்கள் முன்மாதிரிகையான வாழ்க்கை முறையை பின்பற்றியிருந்திருக்கிறார்கள். வ.35: சொத்துக்களை விற்ற பணத்தை திருத்தூதர்களின் காலடியில் வைக்கின்றனர், அதனை திருத்தூதர்கள் மக்;களின் தேவைக்கு ஏற்றபடி பயன்படுத்தியிருக்கின்றனர். திருத்தூதர்கள் ஆரம்ப காலத்திலேயே, ஆனமீக தலைவர்கள் என்பதையும் தாண்டி, உலகர தேவைகளையும் நிர்ணயிக்கிறவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. தேவைகளுக்குத்தான் பொருட்கள், பொருட்களுடைய பாவனைக்காக மனிதர்கள் இல்லை என்பதை அக்கால திருச்சபை நன்றாக அறிந்திருக்கிறது (இக்கால மக்களும், இதனை அறிந்திருந்தல் நன்றாக அமையும்).



பதிலுரைப் பாடல்
திருப்பாடல்: 118

திருப்பாடல்: 118 நன்றிப் புகழ் மாலை
1ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

2'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!

3'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!

4'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக!

5நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்; ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார்.

6ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்?

7எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்; என்னை வெறுப்போர்க்கு நேர்வதைக் கண்ணாரக் காண்பேன்.

8மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!

9உயர்குடியினர் மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்!

10வேற்றினத்தார் அனைவரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்; ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.

11எப்பக்கமும் அவர்கள் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டனர்; ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்து விட்டேன்.

12தேனீக்களைப்போல் அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர்; நெருப்பிலிட்ட முட்களைப்போல் அவர்கள் சாம்பலாயினர்; ஆண்டவரின் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.

13அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.

14ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே.

15நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.

16ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.

17நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்;

18கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.

19நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்து விடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.

20ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.

21என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.

22கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!

23ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!

24ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.

25ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்!

26ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.

27ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்; கிளைகளைக் கையிலேந்தி விழாவினைத் தொடங்குங்கள்; பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள்.

28என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.

29ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.



ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும் என்ற ஆழமான விசுவாசத்தை மையப்பொருளாக வைத்து இந்த 118வது புகழ்சித்திருப்பாடல் வருகின்றது.

இந்த திருப்பாடலை இவ்வாறு பிரிக்கலாம்:

அ). வவ.1-4: ஒரு குழு புகழ்ச்சிக்கான அழைப்பு.

இந்த வரிகள் ஊடாக ஆசிரியர் மக்களை புகழ்சிக்கு அழைக்கிறார். முதலில் மக்களையும் பின்னர் குருக்களையும் அழைப்பது, கடவுளை புகழ்வது அனைவரின் கடமையென அழகாகவும் ஆழமாகவும் காட்டுகிறார். ஆண்டவரின் பேரன்பு என்பது உண்மையில் எபிரேயத்தில் ஆண்டவரின் இரக்கத்தையே குறிக்கிறது (חַסְדּוֹ ,חֶסֶד ஹெசட்- இரக்கம்). ஆண்டவருக்கு அஞ்சுவோர் என்று எபிரேய கோட்பாடுகளை பின்பற்றுவோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வ.1: ஆண்டவர் நல்லவர், அவரது இரக்கம் என்றென்றும் உள்ளது என்பது ஒரு ஆழமான எபிரேய நம்பிக்கை (לְעוֹלָם חַסְדּֽוֹ׃ லா'ஓலாம் ஹஸ்தோ). ஆண்டவருடைய நன்மைத்தனத்திற்கு முன்னால் மற்றவர்களுடைய நன்மைத்தனங்கள் வெறுமையானவை என்பதை இந்த வரி காட்டுகிறது.

வ.2: இந்த என்றென்றும் உள்ள நன்மைத்தனத்தை இஸ்ராயேல் மக்கள் சாற்றக் கேட்கப்படுகிறார்கள். இதுதான் இஸ்ராயேல் மக்களுடைய படைப்பின் நோக்கம். இதனை ஆசிரியர் ஒரு கட்டளை போல கொடுக்கிறார் (יֹאמַר־נָא יִשְׂרָאֵל யோ'மர்-நா' யிஸ்ரா'ஏல்- செல்வார்களாக இஸ்ராயேலர்).

வ.3: இஸ்ராயேலருக்கு பொதுவாக கொடுக்கப்பட்ட கட்டளை இப்போது ஆரோன் குடும்பத்தாருக்கு கொடுக்கப்படுகிறது, அதாவாது ஆண்டவரின் குருக்களுக்கு கொடுக்கப்படுகிறது. குருக்கள் ஆண்டவரின் புகழைச் சாற்றுவதை தங்களது தலையாய கடைமையாக செய்ய வேண்டும் என்ற செய்தி வலியுறுத்தப்படுகிறது (יֹאמְרוּ־נָא בֵֽית־אַהֲרֹן யோ'ம்ரூ-நா' வெத்-'அஹரோன்- ஆரோனின் குடும்பத்தார் சாற்றவார்களாக).

வ.4: இறுதியான இந்த நம்பிக்கையை அனைத்து ஆண்டவருக்கும் அஞ்சுவோரையும் சாற்றக் கேட்கிறார் ஆசிரியர். இப்படியாக அனைத்து மக்களும் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள் எனலாம். அதேவேளை இங்கே பாவிக்கப்பட்டிருக்கின்ற சொற்பிரயோகங்கள் இஸ்ராயேல் மக்களுக்கான ஒத்த கருத்துச் சொற்கள் எனவும் சிலரால் நோக்கப்படுகின்றன (יִרְאֵי יְהוָה யிர்'எ அதோனாய்- ஆண்டவருக்கு அஞ்சுவோர்).

ஆ). வவ.5-13: அரசரின் சாட்சியம்.

இங்கே இன்னொரு புதிய குரல் ஒலிக்கிறது அது அரசரின் குரல். அரசர் தன்னுடைய இராணுவ துன்பங்களின் போது, எவ்வாறு கடவுள் கைகொடுத்தார் என்பதை சாட்சிசொல்கிறார். இதனை மக்கள் தங்களுக்கும் படிப்பினையாக எடுக்க வேண்டுமென்பதே அரசரின் விருப்பம். மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பதே மேல் என்று அரசர் தன்னுடைய நேச படைகளைவிட ஆண்டவர் தரும் பாதுகாப்பே உன்னதமானது என்கிறார்.

வ.5: தான் ஒரு நெருக்கடியான வேளையில் ஆண்டவரை நம்பியதாகவும், ஆண்டவர் அதனைக் கேட்டதாகவும் சொல்கிறார். இந்த வரியுடன் காட்சி மாறுகிறது, இங்கே பேசுகிறவர் அரசராக மாறுகிறார். ஆசிரியர் அரசர் போல பேசுகிறார், அல்லது அரசரை பேசவைக்கிறார் எனலாம். பின்வரும் வரிகள் அவை அரசர்க்குரியவை என்பதை என்பதைக் காட்டுகின்றன.

வ.6: ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்சவேண்டும் (יְהוָה לִי לֹא אִירָא அதோநாய் லி லோ' 'இரா') என்ற ஆழமான நம்பிக்கை, வரியாக தரப்படுகிறது. இந்த வரி தாவீதின் காட்சியை நினைவுபடுத்துவது போல உள்ளது. ஆண்டவர் தன் பக்கம் உள்ளதால் யாருக்கும் அஞ்ச வேண்டிய தேவை தனக்கு இல்லை என்பதை ஆசிரியர் காட்டுகிறார்.

வ.7: தன்னுடைய ஆண்டவருக்கு புதுப்பெயர் ஒன்றை வைக்கிறார். ஆண்டவரை தனக்கு துணைசெய்யும் ஆண்டவர் என்கிறார் (יְהוָה לִי בְּעֹזְרָי அதோனாய் லி பெ'ட்ஸ்ராய்- கடவுள் எனக்கு என் உதவியாக).

வ.8: மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தல் நலம் என்கிறார் ஆசிரியர். இதுவும் தாவீதின் அனுபவத்தை ஒத்திருக்கிறது எனலாம். நம்பிக்கை வைத்தலை, அடைக்கலம் புகுதல் என்ற வார்த்தையில் காட்டுகிறார் ஆசிரியர் (לַחֲסוֹת லாஹசோத்- அடைக்கலம் புக).

வ.9: உயர்குடி மக்களிடம் நம்பிக்கை வைத்தல் ஒரு சாதாரண வழக்கமாக இருந்திருக்கிறது. உயர்குடி மக்களுக்கு எபிரேய மூல விவிலியம் நெதிவிம் (בִּנְדִיבִים׃ பின்திவிம்- உயர்குடிமக்களில்) எனக்காட்டுகிறது. இவர்கள் அரச மைந்தர்களாக இருக்கவேண்டிய தேவையில்லை.

வவ.10-11: வேற்றினத்தார்களை ஆண்டவர் பெயரால் அழித்ததாக ஆசிரியர் காட்டுகிறார். ஆண்டவர் பெயரால் எப்படி போர் செய்ய முடியும். இங்கே இவர் வேற்றினத்தார் என்று சொல்பவர்களை சூழலியலில் இவருடைய சொந்த எதிரிகளாகவே பார்க்க வேண்டும். இவர்களை எபிரேய விவிலியம் גּוֹיִם (கோயிம்- வேற்று நாட்டு மக்கள்) என்று காட்டுகிறது. இவர்கள் பல திசைகளில் ஆசிரியரை சூழ்ந்துகொண்டார்கள் என்று சொல்லப்படுகிறார்கள். இது போரில் எதிரிகள் அரசரை சூழ்ந்து தாக்குவதற்கு சமன்.

வ.12: இந்த எதிரிகளுடைய படைகள் பெரிதாக இருந்திருக்க வேண்டும் அல்லது, அவர்களின் தாக்குதல்கள் துல்லியமாக இருந்திருக்க வேண்டும். இதனால்தான் தன் எதிரிகளை தேனீக்களுக்கு ஒப்பிடுகிறார் ஆசிரியர் (דְבוֹרִ֗ים தெவோரிம்- தேனீக்கள்). எதிரிகள் தேனீக்களை போல சுறுசுறுப்பாக இருந்தாலும், தான் அவர்களை நெருப்பைப் போல் சுட்டெரிப்பேன் என்கிறார். முட்கள், நெருப்பில் விரைவாக சாம்பலாகும், இதனைப்போலவே ஆண்டவரின் துணையால் எதிரிகள், முட்களைப்போல அழிக்கப்படுவார்கள் என்கிறார் ஆசிரியர்.

வ.13: ஆண்டவரின் துணையை இன்னொருமுறை காட்டுகிறார். ஏதிரிகளின் தள்ளுதல் பலமாக இருந்தாலும், ஆண்டவரின் துணை அதனைவிட பலமாக இருக்கிறது என்பது சொல்லப்படுகிறது.

இ). வ.14-19: புதுப்பிக்கப்பட்ட அரச சாட்சியம். வ.14: ஆண்டவரே என் ஆற்றலும் பாடலும் என்று மொழி பெயர்க்ப்பட்டுள்ளது. பாடல், என்பதை பலம் என்றும் மொழிபெயர்கலாம் (זִמְרָה ட்சிம்ராஹ்- இசை, பாடல், பலம்). ஆண்டவர் தன்னை கண்டித்தார் என்று சொல்லி கடவுளின் கண்டிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்கிறார் அரசர்.

வ.15: நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கிறது என்கிறார் (קוֹל רִנָּה கோல் ரின்னாஹ்- மகிழ்ச்சிக் குரல்), இதனை அவர் ஆண்டவரின் வலக்கரத்தின் பலம் என்று காட்டுகிறார் (אָהֳלֵי צַדִּיקִים 'அஹாலே ட்சதிகிம்- நீதிமான்களின் கூடாரங்கள்).

வ.16: விவிலியத்தில் மிக முக்கியமான ஒரு அடையாளம். இது பலம், உரிமை, வாரிசு போன்ற பல அர்த்தங்களைக் கொடுக்கிறது. அதிகமானவர்கள் வலக்கை பழக்கமுடையவர்களாக இருந்ததால் வலக்கை பலத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது (יָמִין யாமின்-வலக்கை). இடக்கை பழக்கம் அதிகமான வேளையில் நல்ல அடையாளமாக பார்க்கப்படவில்லை. இருப்பினும் இதற்கும் விதிவிலக்கு இருந்தது. இஸ்ராயேலின் நீதிமான்களில் ஒருவர் இடக்கை பழக்கமுடையவராக இருந்தார், அதனை கடவுள் நல்ல விதமான பாவித்தார் என்று நீதிமொழிகள் புத்தகம் காட்டுகிறது (காண்க நீதி.3,12-30: אֵהוּד בֶּן־גֵּרָא 'எஹுத் பென்-கெரா').

வ.17: ஆண்டவர் வலப்பக்கத்தில் இருப்பதனால் தனக்கு அழிவில்லை என்கிறார். தான் இறக்கமாட்டேன் என்கிறார். அத்தோடு இவர் இறக்காமல் இருப்பதன் நோக்கம், ஆண்டவரின் செயல்களை எடுத்துரைப்பதே என்கிறார் (לֹא אָמוּת லோ' 'ஆமுhத்- இறவேன்: וַאֲסַפֵּ֗ר வா'அசாபெர்- எடுத்துரைப்பேன்).

வ.18: ஆண்டவர் இவரை கண்டித்ததையும் மறைக்காமல் தன் பாடலில் காட்டுகிறார். ஆண்டவரின் கண்டிப்பிற்கு காரணம் இருக்கிறது என்பதும், இந்த கண்டிப்பால் தான் அழியவில்லை என்பதையும் நேர்மையாக அறிக்கையிடுகிறார்.

வ.19: தான் பாவியாக இருந்தாலும், ஆண்டவரின் கண்டிப்பை சந்தித்தாலும், தன்னை நீதிமான் என்று காட்டுகிறார். இதனால் நீதிமான்கள் செல்லும் வாயில்களில் தானும் செல்ல முடியும் என்பது இவர் நம்பிக்கை. இந்த வாயில்களில் தான் நுழைவது, ஆண்டவருக்கு நன்றி செலுத்தவாகும் என்பதையும் அறிக்கையிடுகிறார் (שַׁעֲרֵי־צֶדֶק ஷ'அரெ-ட்சாதெக்- நீதியின் வாயில்கள்).

உ). வவ.20-28: ஓரு நன்றி வழிபாடு.

இந்த வரிகள் பாடலாக மட்டுமன்றி நன்றி வழிபாடாகவும் உருவகப் படுத்தப்பட்டுள்ளது. இது ஆண்டவரின் வாயில் இவ்வழியாக நீதிமான்கள் நுழைவர் என்பது இந்த வழிபாட்டைக் குறிக்கிறது. 22வது வசனத்தை புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அதிகமாக இயேசுவிற்கு பாவிக்கின்றனர்- கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்து. 26வது வசனம், ஆண்டவரின் பெயரால் வருகிறவர் ஆசிர்வாதங்களைக் கொண்டுவருகிறார் என்பது, பின்நாளில் குறிப்பிட்ட நபர்களை குறித்து வாசிக்கப்பட்டது, நமக்கு இது இயேசுவைக் குறிக்கிறது. 27வது வசனம், கிளைகளை கையிலேந்தி ஆண்டவரை புகழக் கேட்கிறது, இது ஒருவகை ஆர்ப்பரிப்பைக் குறிக்கலாம். இயேசு எருசலேமுள் நுழைந்தபோது இவ்வகையான ஒரு செயலை கூட்டம் செய்தமை நினைவுக்கு வரலாம்.

வ.20: இந்த வாயில் அதிகமாக எருசலேமின் நுழைவாயில்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இங்கே நீதிமான்கள் (צַדִּיקִ֗ים ட்சாதிக்கிம்) என்பவர்கள், ஆண்டவரின் மக்கள் அனைவரையும் குறிக்கலாம். ஆண்டவரின் மக்கள் நீதிமான்களாக வாழ அழைக்கப்பட்டவர்கள் என்பது இங்கணம் சொல்லப்படுகிறது.

வ.21: கடவுளிக்கு நன்றி செலுத்தவே இவர் எருசலேமிற்குள் நுழைகிறார் போல. ஆண்டவர் இவருக்கு செவிசாய்த்ததை, அவர் தன் வேண்டுதல் கேட்கப்பட்டதற்கு ஒப்பிடுகிறார்.

வ.22: கட்டுவோர் புறக்கணித்த கல் முலைக்கல் ஆகிற்று என்ற தமிழ் மொழி பெயர்ப்பு, எபிரேய விவிலியத்தில் (אֶבֶן מָאֲסוּ הַבּוֹנִ֑ים הָיְתָ֗ה לְרֹאשׁ פִּנָּה׃ 'எவென் மா'அசூ ஹபோனிம், ஹாய்தாஹ் லெரோ'ஷ் பின்னாஹ்) என்று உள்ளது. இது ஒரு பழிமொழியாக இருந்திருக்க வேண்டும். இதற்கான சரியான காரணம் சரியாக தெரியவில்லை. பல அர்த்தங்கள் இந்த 'மூலைக்கல்லுக்கு' கொடுக்கப்படுகிறது. சிலர் இதனை 'தலைக்கல்' என்கின்றனர். சாதாரணமாக மூலைக்கற்கள் அல்லது தலைக்கற்கள் நிலத்தினுள் மறைந்துவிடும், இருப்பினும் இவை முக்கியமான கற்களாக இருக்கின்றன. இந்த கற்களின் உறுதியில்தான் கட்டடம் நிலைத்துநிற்கிறது. இதனைவிட வேறு பல அர்த்தங்களும் இந்த கல்லுக்கு கொடுக்கப்படுகிறது. சிலர் சுவரில் இருக்கும் பெயரைக்கொண்ட கல்லை இந்தக் கல்லாக பார்க்கின்றனர், இன்னும் சிலர், இதனை அழகாக செதுக்கப்பட்டு, உயரத்தில் இருக்கும், இணைக்கும் கல்லாகவும் இதனை பார்க்கின்றனர். எது எப்படியாயினும் இது, முக்கியமான கல் என்பது மட்டும் மிக தெளிவாக தெரிகிறது.

புதிய ஏற்பாட்டு ஆசிரியர் இந்த 'மூலைக்கல்' அடையாளத்தை இயேசுவிற்கு பாவிக்கின்றனர் (காண்க லூக் 20,17: தி.பணி 4,11: 1பேதுரு 2,7). முதல் ஏற்பாட்டில் பல இடங்களில் இந்த உதாரணம் காணக்கிடைக்கிறது (எசாயா 8,14: 28,16-7). அனைத்து இடங்களிலும் இது ஆண்டவரின் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

வ.23: சாதாரண கல் முலைக்கல் ஆவது நிச்சயமாக மனிதர்களின் கண்களுக்கு வியப்பே, இதனைத்தான் இந்த வரி காட்டி அதனை ஆண்டவரின் அதிசயமாக பார்க்கிறது.

வ.24: இந்த பாடல் ஒரு முக்கியமான விழா அல்லது வரலாற்று நிகழ்வு நாளில் பாடப்பட்டிருக்க வேண்டும். இந்த வரியின் வார்த்தைகள் அதனை குறிப்பது போல உள்ளது. இந்த குறிப்பிட்ட நாளை ஆண்டவரின் வெற்றியின் நாள் என்கிறார் ஆசிரியர் அத்தோடு, அந்த நாளில் ஆர்ப்பரிக்கவும் அகமகிழவும் கேட்கிறார் (נָגִילָה וְנִשְׂמְחָה நாகிலாஹ் வெநிஷ்மெஹாஹ்- நாம் மகிழ்வோம், நாம் களிப்படைவோம்).

வ.25: இந்த வரி இன்னொரு வேண்டுதல் போல காட்டப்படுகிறது. இதனை பாடலுக்கான பதிலுரையாகவும் எடுக்கலாம். ஆண்டவரே மீட்டருளும் மற்றும் ஆண்டவரே வெற்றிதாரும் என்ற வரிகள் ஒரே அர்த்தத்தையும் கொடுக்கலாம். போரில் பாவிக்கப்படக்கூடிய வார்த்தைகள் போலவும் இவை உள்ளன. הוֹשִׁיעָה נָּא ஹோஷி'ஆஹ் நா' - மீட்டருளும், הַצְלִיחָה נָּא ஹட்சிஹாஹ் நா'- வெற்றி தாரும்.

வ.26: இந்த வரி இன்னொருவர் சொல்வதைப்போல உள்ளது. அனேகமாக இந்த வரியை குருக்கள் அல்லது இந்த குறிப்பிட்ட நிகழ்வில் அரசரை போற்றுகிறவர்கள் சொல்லியிருக்கலாம். இந்த பாடல் பலர் படிக்கும் பாடல் என்பதை இந்த வரியும் நன்றாக காட்டுகிறது.

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர் (בָּרוּךְ הַבָּא בְּשֵׁם יְהוָה பாரூக் ஹபா' பெஷெம் அதேனாய்) என்பது, இந்த பாடலின் கதாநாயகரைக் குறிக்கலாம். பிற்காலத்தில் இந்த பகுதி, புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசு ஆண்டவருக்கு கொடுக்கப்பட்டது. இந்த வரியின் இறுதிப் பகுதி மக்களுக்கு கொடுக்கப்படும் ஆசீர் போல வார்த்தைப் படுத்தப்பட்டுள்ளது (בֵּרַכְנוּכֶם מִבֵּית יְהוָה׃ பெராக்னூகெம் மிபெத் அதேனாய் - கடவுளின் இல்லத்திலிருந்து உங்களை ஆசீக்கின்றோம்).

வ.27: அனைத்து திருப்பாடல்களினதும் முதன்மையான கதாநாயகர் இறைவன் என்பது இங்கே நன்றாக புலப்படுகிறது. ஆண்டவரே இறைவன் என்பது இஸ்ராயேலரின் முதன்மையான விசுவாச பிரகடணம் (אֵל ׀ יְהוָה֮ 'ஏல் அதேனாய்- ஆண்டவரே இறைவன்). அதோனாய் அல்லது யாவே என்பது, இஸ்ராயேலர் கடவுளை குறிக்க பயன்படுத்திய தனித்துவப் பெயர்ச்சொல். யாவே என்பது அதி பரிசுத்தமான சொல்லாக இருப்பதனால், அதனை எழுதியவர், வாசிக்கும் போது 'அதோனாய்;' என்றனர். பெயரும் ஆளும் எபிரேயர்களுக்கு ஒரே அர்த்தத்தைக் கொடுத்ததும் இதற்கான காரணமாக இருந்திருக்கலாம்.

ஆண்டவரை ஒளியாக கருதுவதால், அவரை ஒளிர்ந்தார் என்கிறார் ஆசிரியர். கிளைகளை கையிலேந்து விழாவை தொடங்கக் கேட்கிறார் ஆசிரியர். முதல் ஏற்பாட்டுக் காலத்தில், இஸ்ராயேல் நாட்டில் ஒலிவ இலைகள் வெற்றியைக் குறிக்க பயன்பட்டன. கிரேக்க நாட்டில் வேறு கிளைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இலைகளைப் போலவே மாட்டுக்கொம்புகளும் வெற்றிப் பவனிக்கு பாவிக்கப்ட்டன. இந்த கொம்புகளுக்குள் நறுமண தைலங்களும் இடப்பட்டன. பிற்கால பந்தங்கள் மற்றும் எக்காள வாத்தியங்கள் போன்றவை இந்த கொம்பிலிருந்து வந்தவையே.

வ.28: மீண்டும் ஒருமுறை நம்பிக்கை சொல்லப்படுகிறது. இதுதான் திருப்பாடல்களின் நோக்கம். ஆசிரியர் கடவுளை தன் இறைவன் என்கிறார் (אֵלִי אַתָּה 'எலி 'அத்தாஹ் - என் இறைவன் நீரே). இந்த இறைவனுக்கு அவர் நன்றியும் செலுத்தி, அவரை புகழ்ந்துரைக்கவும் செய்கிறார் (אוֹדֶךָּ 'ஓதெஹா நன்றி சொல்வேன், אֲרוֹמְמֶךָּ 'அரோம்மெகா- புகழ்ந்தேற்றுவேன்).

ஊ). வ.29: குழு புகழ்ச்சிக்கான இறுதி அழைப்பு.

இங்கே குருவின் குரல் மீண்டும் ஒலிக்கிறது. அரசரைப் போல மக்கள் கூட்டம் அனைவரையும் நன்றி செலுத்தி ஆண்டவரைப் புகழக் கேட்கிறார். ஆண்டவர் நல்லவர் மற்றும் என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு என்பது, அதிகமாக பாவிக்கப்படும் விவிலிய வரி (ט֑וֹב כִּ֖י לְעוֹלָ֣ם חַסְדּֽוֹ தோவ் கி லெ'ஓலாம் ஹஸ்தோ- நல்லவர், அதாவது அவரது பேரன்பு என்றும் உள்ளது).



இரண்டாம் வாசகம்
1யோவான் 5,1-6

நம்பிக்கை

1இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர். 2நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போதுஇ கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும். 3ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்தான் கடவுள் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. 4ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும்; உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே. 5இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்? 6நீராலும் இரத்தத்தாலும் வந்தவர் இயேசு கிறிஸ்து. அவர் நீரால் மட்டும் அல்ல. நீராலும் இரத்தத்தாலும் வந்தவரென தூய ஆவியார் சான்று பகர்கிறார். தூய ஆவியாரே உண்மை.


யோவான் நற்செய்தியைப் போலவே, யோவானின் திருமுகங்களும், மிக ஆழமானவை அத்தோடு அடையாள மொழிகளைக் கொண்டவை. இன்றைய இரண்டாம் வாசகம், திருத்தூதர் யோவான் எழுதியதாக கருதப்படும் முதலாவது திருமுகத்திலிருந்து எடுக்கப்படுகிறது.

வ.1: கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் என்ற பதம், யூத சிந்தனையில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது (θεοῦ γεγέννηται தியூ கெகென்னேடாய்). இது கடவுளால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என்ற அர்த்தத்தையும் கொடுக்கும். இதனைத்தான் யூதர்கள் அடிக்கடி பாவித்தனர், மற்றவர்கள் கடவுளால் பிறக்காதவர்கள் என்ற வாதத்தையும் சில யூத தலைவர்கள் முன்வைத்தனர் (இன்று சில மத அடிப்படைவாதிகள், தங்களை முதன்மையானவர்களாகவும், மற்றவர்களை இரண்டாம் தரத்தினராகவும் அறிவீனமானவர்களாகவும் கருதுவதைப்போல).

இந்த பழைய நம்பிக்கையை சிதைக்கிறார் யோவான். கடவுளிடமிருந்து யாரும் பிறக்க முடியும், அதற்கு தேவை, ஒரு இனம் அல்ல மாறாக இயேசுவில் நம்பிக்கை என்கிறார். ஆக இயேசுவை மெசியாவாக நம்புகிறவர் புதிய இஸ்ராயேலர் ஆகிறார் அல்லது கடவுளின் பிள்ளையாகிறார் (ὁ πιστεύων ὅτι Ἰησοῦς ἐστιν ὁ Χριστὸς ஹொ பிஸ்டெயூஓன் ஹொடி இயேசூஸ் எஸ்டின் ஹொ கிறிஸ்டொஸ்- இயேசு மெசியாவாக இருக்கிறார் என நம்புகிறவர்). கடவுளை அன்புசெய்கிறவர் அவர் மக்களையும் அன்பு செலுத்துவது இயற்கையானது என்பதும் இந்த வரியில் காட்டப்படுகிறது.

வ.2: கடவுளை அன்புசெய்கிறவர் அவர் கட்டளைகளை கடைப்பிடிக்கிறார் என்பது யோவான் நற்செய்தியில் காட்டப்படும் ஒரு செய்தி. (ἐντολὰς αὐτοῦ என்டொலாஸ் அவுடூ- அவரின் கட்டளைகள்) அதனை இந்த திருமுகத்திலும் காணலாம். கடவுளை அன்புசெய்கிறவர் அந்த அன்பை அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் வாயிலாக காட்டுகிறார். இப்படியாக கடவுளின் கட்டளைகளை கடைப்பிடிக்கிறவர், செயல்ரீதியாக கடவுளின் பிள்ளைகளாக மாறுகிறார் என்பதை அழகாகக் காட்டுகிறார் யோவான்.

இந்த வரியில் கடவுளின் பிள்ளைகள் என்ற எழுவாய்பொருளை வித்தியாசமாகக் காட்டுகிறார். யார் இந்த கடவுளின் பிள்ளைகள் என்ற கேள்வி எழுகிறது. சில இடங்களில் இது கிறிஸ்தவர்களைக் குறிக்கிறது, சில இடங்களில் இது யூதர்களையும் குறிக்கிறது. இந்த இடத்தில் இது கிறிஸ்துவின் நம்பிக்கை கொண்ட யாவரையும் குறிக்கும் என எடுக்கலாம்.

வ.3: கடவுளின் கட்டளைகள் அவரை அன்பு செய்வோருக்கு சுமையாக இருப்பதில்லை என்பதை மிக அழகான கிரேக்க வார்த்தைகளில் காட்டுகிறார் யோவான் (αἱ ἐντολαὶ αὐτοῦ βαρεῖαι οὐκ εἰσίν. ஹாய் என்டொலாய் அவுடூ பாரெய்யாய் ஹுக் எஸ்டின்- அவருடைய கட்டளைகள் சுமையானவையாக இல்லை).

வ.4: கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும் என்கிறார், இந்த உலகை வெல்வது நம்பிக்கை என்கிறார். ஆக கடவுளிடமிருந்து பிறக்கிறவர்கள் என்ற அடையாளத்தையும் தாண்டி, இங்கே ஒரு பொருள், அதாவது நம்பிக்கை கடவுளிடமிருந்து பிறப்பதாக காட்டப்படுகிறது (πίστις பிஸ்டிஸ்- நம்பிக்கை). உலகு என்ற சொல்லொன்றும் இங்கே பாவிக்கப்பட்டுள்ளது. இதுவும் யோவான் நற்செயதியைப்போல சாதாரண உலகத்தைக் குறிக்கவில்லை என எடுக்கலாம் யோவான் நற்செய்தியாளருக்கு 'உலகம்' (κόσμος கொஸ்மொஸ்) இயேசுவை நம்பாதவர்களைக் குறிக்கும். வ.5: உலகை ஒரு சக்தியாக பார்த்து, இதனை வெல்வது அவ்வளவு இலகல்ல என்கிறார். இந்த முயற்சிக்கு 'இயேசுவை இறைமகன்' என அறிக்கையிட்டால் போதும் என்கிறார் (ὁ πιστεύων ὅτι Ἰησοῦς ἐστιν ὁ υἱὸς τοῦ θεοῦ; ஹொ பிஸ்டெயூயோன் ஹொடி இயேசூஸ் எஸ்டின் ஹொ ஹுய்யோஸ் டூ தியூ?). இதனை அவர் ஒரு கேள்வியாக முன்வைக்கிறார்.


நற்செய்தி வாசகம்
யோவான் 20,19-31

19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்று வாழ்த்தினார். 20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்' என்றார். 22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, 'தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா' என்றார். 24பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. 25மற்றச் சீடர்கள் அவரிடம், 'ஆண்டவரைக் கண்டோம்' என்றார்கள். தோமா அவர்களிடம், 'அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்' என்றார். 26எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்று வாழ்த்தினார். 27பின்னர் அவர் தோமாவிடம், 'இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்' என்றார். 28தோமா அவரைப் பார்த்து, 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!' என்றார். 29இயேசு அவரிடம், 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' என்றார். 30வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. 31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

இந்தப் பகுதியில் பயத்திலிருந்து நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சிக்கான ஒரு மாற்றத்தை சீடர்கள் பெற்றதை அவதானிக்கலாம். இந்த பகுதிக்கு முன்னர் இயேசு ஏற்கனவே மகதலா மரியாவிற்க்கு தோன்றியிருந்தார் அத்தோடு தனது திருத்தூதர்களுக்கும் தனது உயிர்ப்பைப் பற்றி அறிவிக்க சொல்லியருந்தார். மரியா ஆண்டவரின் உயிர்ப்பை விட அவர் தன்னை சந்தித்ததை பற்றியே மகிழ்ந்திருந்தார். எனவே யோவான் இங்கே இன்னொரு முக்கியமான செய்தியை பதிவு செய்கிறார்.

வ.19: மாலை நேரம் கதவுகள் மூடியிருப்பது சீடர்களின் பய உணர்வையும் மனச் சிக்கல்ளையும் அழகாக படம்பிடிக்கிறது, இது யோவானுக்கே உரிய காட்சியமைப்பு. ஆண்டவர் இவர்களின் நடுவில் நிற்பதும், அமைதி உண்டாகுக என்று சொல்வதும், கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான செய்தி. யோவானின் வாசகர்களுக்கும் இது முக்கியமாக தேவைப்பட்டது. அமைதியை தரக்கூடியது ஆண்டவரின் பிரசன்னம் மட்டுமே, அத்தோடு கதவுகள் மூடியிருந்தாலும், மாலையானாலும், ஆண்டவரின் சக்தியை தடுக்க முடியாது என்கிறார். ஆண்டவரின் காட்சி வாரத்தின் முதலாவது நாளிலே (நம்முடைய ஞாயிறு) தினத்திலே நடைபெறுகிறது என்பதை அனைத்து நற்செய்தியாளர்களும் ஒற்றுமையாக காட்டுகின்றனர்).

அமைதியை கிரேக்க விவிலியம் (εἰρήνη) எய்ரேனே என்ற சொல்லில் காட்டுகிறது. இதனை எபிரேய விவிலியம் ஷாலோம் (שָׁלוֹם ஷாலோம்) என்ற சொல்லில் முதல் ஏற்பாட்டில் காட்டுகிறது. கிரேக்க அகராதி இந்த 'அமைதி' எய்ரேனேவிற்கு பல அர்த்தங்களைக் கொடுக்கிறது:

அ. நாட்டில் போர் மற்றும் கலவரம் இல்லாத நிலை,

ஆ. இரண்டு நபர்கள் அல்லது ஆட்களுக்கிடையிலான சிக்கலற்ற நிலை,

இ. எபிரேய அர்த்தத்தைப்போன்ற, நிறைவு, பாதுகாப்பு, முழுமை, வளமான நிலை,

ஈ. மெசியாவின் காலம் கொண்டுவரும் நிலை,

உ. கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவில் கண்டுகொண்ட ஒரு உணர்வு,

ஊ. இறப்பிற்கு பின்னர் ஆண்டவரில் கிடைக்கும் ஒரு நிலை.

இந்த அனைத்து அர்த்தங்களும் யோவானின் வரியில் காட்டப்படுகிறது. இன்று அரசியல் தலைவர்கள் இந்த அமைதி என்ற வார்த்தையைத்தான் அதிகமான துஸ்பிரயோகம் செய்கிறார்கள். அமைதிக்கான போர் என்ற சில அரசியல் தலைவர்களின் அடாவடித்தனம் இதில் மிக முக்கியமான ஒன்று. ஆண்டவர் இயேசுவின் அமைதிக்கும், அரசியல் தலைவர்கள் முன்வைக்கும் அமைதிக்கும் தூரம் வெகு தெலைவு.

தமிழ் உரோhமன் கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலிப் புத்தகம், 'சமாதானம்' என்ற சொல்லை இந்த ஆண்டிலிருந்த முழுமையாக 'அமைதி' என்று மாற்றியிருக்கிறது. இதற்கு சமாதானம் ஒரு வேற்றுமொழி சொல்லாகவும் அல்லது அது எபிரேய ஷாலோமை பிரதிபலிக்காமை போன்றவை காரணங்களாக இருக்கலாம். தமிழ் கத்தோலிக்க வழிபாட்டில், அமைதி என்ற சொல், தன் உண்மையான அர்த்தத்தைக் கண்டுகொள்ள பல காலங்கள் எடுக்கலாம்.

வவ.20-21: ஆண்டவர் தனது உடலை காட்டுவதன் மூலமாக தான் ஒரு மாய ஆவி இல்லை என்பதையும், இது ஒரு வகை மனம் சம்பந்தமான அனுபவம் இல்லை என்பதையும் வாசகர்கள் புரிந்துகொள்வர். இங்கே இயேசுவின் அதே பணி, மாற்றங்கள் இன்றி திருத்தூதர்கள் வாயிலாக மீண்டும் தொடர்வதைக் காட்டுகிறது. இது ஏற்கனவே ஆண்டவர் தான் வாழ்ந்தபோது சொன்ன வார்த்தைகளை நிறைவுசெய்கிறது (காண். யோவான் 14,27: 16,33). இரண்டு முறை அமைதி தருவதாகச் சொல்வது, அக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு அமைதி எவ்வளவு தேவையாக இருந்தது என்பதை கோடிடுகிறது.

இயேசு தன்னுடைய விலாவையும் கைகளையும் காட்டுவதிலிருந்து, அவருடைய துன்புற்ற உடலோடுதான் அவர் உயிர்த்தெழுந்தார் என்பதை யோவான் காட்டுகிறார் எனலாம் (χεῖρας καὶ τὴν πλευρὰν αὐτοῖς அவருடைய கைகளையும் விலாவையும்). இயேசு சீடர்களை தந்தை தன்னை அனுப்பியது போல அனுப்புகிறார். அதாவது தன்னுடைய பணி இன்னமும் நிறைவடையாமல் தொடர்கிறது என்பதைக் காட்டுகிறார் (ἀπέσταλκέν με ὁ πατήρ, κἀγὼ πέμπω ὑμᾶς. அபெஸ்டால்கென் மெ ஹொ பாடெர், காகோ பெம்போ ஹுமாஸ்).

வவ.22-23: இங்கே பல செய்திகள் பரிமாறப்படுகின்றன. உண்மையில் திருத்தூதர்கள் ஆவியை நிறைவாக ஆண்டவரின் விண்ணேற்றத்தின் பின்னரே பெற்றுக்கொண்டனர், இந்தப் பகுதி திருத்தூதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுதலை காட்டுகிறது என எடுக்கலாம். அத்தோடு தொடக்கநூலில் ஆண்டவர் மனிதனை படைத்து தனது ஆவியை ஊதியே உயிரைக் கொடுத்தார், இங்கே தனது ஆவியை ஊதி மீண்டும் புது பிறப்பு கொடுக்கிறார், என எடுக்கலாம். பாவங்களை மன்னித்து, ஒப்புரவு அருட்சாதனம் ஏற்றபடுத்தப்பட்ட நிகழ்வாகவும் ஆய்வாளர்கள் இந்நிகழ்வைக் காண்கின்றனர்.

அ. இவர்கள் புது ஆதாம்களாக ஆண்டவரின் ஆவியைப் பெற்றுக்கொள்கிறார்கள் - ἐνεφύσησεν καὶ λέγει αὐτοῖς· λάβετε πνεῦμα ἅγιον· எனெபுசேசென் காய் லெகெய் அவ்டொய்ஸ் லாபேடெ புனூமா ஹகியோன்- ஊதி, என் ஆவியை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

ஆ. திருச்சபை சார்பாக மன்னிக்கும் அதிகாரம் கொடுக்கப்படுகிறது. கத்தோலிக்கர் இந்த வரியை ஒப்புரவு அருட்சாதனத்தின் தொடக்கமாகவும், அந்த திருவருட்சாதனமாகவும் காண்கின்ற அதேவேளை, சீர்திருத்த கிறிஸ்தவர்கள் இந்த பாவ மன்னிப்பு அதிகாரத்தை, மெசியாவின் பாவ மன்னிப்பு செய்தி என்று எடுக்கிறார்கள். அதாவது இயேசுவின் வருகை, கடவுளின் மன்னிப்பு செய்தியை தருகிறது, அதனைத்தான் இயேசு இன்னொருமுறை அறிவுறுத்துகிறார் என்கின்றனர். தனி நபருக்கான பாவமன்னிப்பு இங்கே சொல்லப்படவில்லை என்பது கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவர்களின் வாதம்.

வவ.24-25: தோமாவின் பேச்சும் அவரது செயல்களும் ஆரம்ப கால திருச்சபையின் விசுவாச பிறழ்வுகளைக் காட்டுகிறது. தோமா ஆண்டவரின் உயிர்ப்பை நம்பவில்லை என்பதைவிட ஆண்டவரின் தரிசனத்தை நம்பவில்லை என்றே தோன்றுகிறது. தோமா மற்றவர்களைவிட விசுவாசத்தில் குறைந்தவர் என்று சொல்வது யோவானின் செய்தியல்ல. இவருடைய பெயர் அரமெயிக்க மொழியில் இருவர் (Θωμᾶς λεγόμενος Δίδυμος தோமாஸ் லெகொமெனொஸ் திதுமொஸ்- திமிம் என்றும் தோமையப்பர்) என்ற அர்தத்தைக் கொடுக்கிறது. தோமாதான் ஆண்டவருடன் இறக்கவும் முதன் முதலில் ஆயத்தமாக இருந்தவர் (காண்க யோவான் 11,16). அதே வேளை தன்னுடைய வினாக்களை அஞ்சாது ஆண்டவரிடம் கேட்கவும் தயாராக இருந்தவர் (காண்க யோவான் 14,5).

தோமா நம்பிக்கையின்மையின் அடையாளம் என்பதைவிட ஆரம்பகால திருச்சபையின் மனித முகம், என்றே எடுக்கவேண்டும். ஆண்டவரின் காயங்கள், அவரின் சிலுவை மரணத்தை மீண்டும் நினைவூட்டுகின்றன. தோமா ஒரு நேர்மையாளர் அதனால்தான் தன்கேள்விகளை வெளிப்படுத்துகிறார். ஆண்டவரின் விலாவிலும் கைகளிலும் காயங்கள் இருந்தன என்பதற்கு தோமா ஒரு நல்ல சாட்சியம், அதனால்தான் அதனை மீண்டும் காண விரும்புகிறார்.

வவ.26-27: எட்டு நாட்கள் என்பது கிரேக்கர்களின் ஒரு வார அளவைக் குறிக்கும். அதாவது இந்த நிகழ்வுகள் உண்மையான நடந்த நிகழ்வு என்பது காட்டப்படுகிறது. இது ஒரு தனிமனித உள்ளார்ந்த அனுபவம் அல்ல என்பது சொல்லப்படுகிறது (ἡμέρας ὀκτὼ ஹேமெராஸ் ஒக்டோ- எட்டு நாட்கள்) கதவுகள் மூடியிருந்ததும், இயேசு உள்ளே வந்ததும், சீடர்கள் இன்னும் பயத்திலே இருந்ததையும் குறிக்கிறது.

ஆண்டவர் இரண்டு முறை அவர்களுக்கு அமைதி கொடுத்தும் அவர்கள் பயத்திலே இருக்கிறார்கள் (εἰρήνη ὑμῖν எய்ரேனே ஹுமின்- அமைதி உங்களுக்கு). ஆக மற்ற சீடர்களுக்கும் தோமாவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆண்டவர் தோமாவிற்கு சொல்லும் செய்தி அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உரியது, அது, அச்சம் விலக்கி நம்பிக்கை கொள்ளுங்கள் என்பதாகும். யோவான் நற்செய்தியின் நோக்கமும் இதுவே.

தோமா ஆண்டவரின் திருக்காயங்களை காணும் பாக்கியம் பெறுகிறார். தோமா இந்த காயங்களுள் தன் கைகளை விட்டாரா இல்லையா என்று யோவான் சொல்லவில்லை. அநேகமாக தோமா அப்படி செய்திருக்கமாட்டார் என எடுக்கலாம்.

வ.28: கிறிஸ்தவ நாகரீகத்தினதும், விசுவாசத்தினதும் முக்கியமான கோட்பாடு இது. இயேசுதான் ஆண்டவர், அவரேதான் கடவுள் (ὁ κύριός μου καὶ ὁ θεός μου - ஹொ கூரியொஸ் மூ காய் ஹொ தியூஸ் மூ, என் ஆண்டவரே மற்றும் என் கடவுளே!). நற்செ;யதியாளர் யோவான், தோமா மூலம், அவர் வாசகர்களுக்கு இந்த செய்தியை ஆழமாக கொடுக்கிறார் என்பது தெரிகிறது.

வவ.29-31: யோவான் இவ்வாறு தன் நற்செய்தியின் நோக்கத்தை உறுதிப்படுத்துகிறார். இயேசுவைக் காணாமல் அவரை நம்புதலே இரண்டாம் தலைமுறை கிறிஸ்தவர்களின் விசுவாச வாழ்க்கைக்கு தேவையாக இருந்தது (μακάριοι οἱ μὴ ἰδόντες καὶ πιστεύσαντες. மாகாரியொய் ஹொய் மே இதொன்டெஸ் காய் பிஸ்டெயுசான்டெஸ்- காணாமல் நம்புகிறவர்கள் பேறுபெற்றவர்கள்). ஆக இரண்டாம் தலைமுறைக்கு பின்னர் வந்த அனைத்து கிறிஸ்தவர்களும், நம்பிக்கையின் வழியாக பேறுபெற்றவர்கள் ஆகிறார்கள்.

யோவான நற்செய்தி;, இயேசுவின் அனைத்து செய்ற்பாடுகளையும் உள்வாங்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறார். இங்கணம், நற்செய்திகள் சில குறிப்பிட்ட தேவைகளுக்காவே எழுதப்பட்டது என்பது புலனாகிறது. நற்செய்திகள் உண்மையில் இயேசுவின் அனைத்து வாழ்க்கை நிகழ்வுகளையும் உள்ளடக்கவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இயேசு நற்செய்திகளால் மட்டும், உள்ளவாங்கப்படகூடிய இறைவன் அல்ல அவரைக் கொள்ள இந்த உலகத்தின் புத்தகங்கள் போதாது.

ταῦτα δὲ γέγραπται καὶ ἵνα πιστεύοντες ζωὴν ἔχητε ἐν τῷ ὀνόματι αὐτοῦ. டௌடா தெ கெக்ராப்டாய் காய் ஹினா பிஸ்டெயுசான்டெஸ் ட்சோஏன் எகேடெ என் டோ ஒனொமாடி அவுடூ- அவர் பெயரில் நம்பி நிலைவாழ்வடைய இவை எழுதப்பட்டுள்ளன.

நம்பிக்கை என்பது ஒரு கொடை,

அது அறிவிலும் புரிதலிலும் மட்டும் தங்கியிருக்க முடியாது.

நம்பிக்கைக்கு அடித்தளம் தாழ்ச்சியும் நன்றியுணர்வுமாகும் என்பதே

நற்செய்தியாளர்களின் படிப்பினைகள்.

புரிந்தால்தான் நம்பிக்கை, என்பதை விட,

நம்பிக்கையில் புரிதல் ஆசி பெற்றது.

அமைதி, இயேசு ஆண்டவர் தரும் ஒரு உன்னத கொடை,

உலகம் போதிக்கும் அமைதி ஒரு பக்கச்சார்பானது.

ஆண்டவரே எங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தும்,

நம்பிக்கை மூலமாக எங்கள் வாழ்வை ஆழப்படுத்தும்.

உம் அமைதியின் கருவிகளாகவும் எம்மை மாற்றும்,

ஆமென்.